2 இராஜாக்கள் 3:4-27
இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 3:4-27 வசனங்களை ஆராய்வோம். கடந்த ஆக்கத்தில் ஆகாபின் மரணத்தின் பின் அவனுடைய இடத்தில் யோராம் இஸ்ரவேலின் அரசனாக வந்ததைக் கவனித்தோம். அது மட்டுமல்லாமல் அந்த யோராம் எப்படிப்பட்டவன் என்பதை முதல் மூன்று வசனங்களிலிருந்து அறிந்துகொண்டோம். ஆகாப் மோசமானவன்தான், அவனைப் போல மோசமானவன் இஸ்ரவேலில் இருந்ததில்லை. உண்மையில் இஸ்ரவேலிருந்த மோசமான அரசர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தாலும் அவர்கள் எல்லோரையும்விட மோசமானவனாக ஆகாப் இருந்திருக்கிறான். அவனுடைய இடத்தில் யோராம் அரசனாக வந்தான். இவனும் கூட ஒரு நல்ல அரசன் என்று சொல்ல முடியாது. இந்தப் பகுதி யோராம் அரசனான பிறகு அவன் ஒரு திட்டத்தை போட்டு, மோவாபியருக்கு எதிராக யுத்தம் செய்யப் புறப்பட்டதைப் பற்றி விளக்குகிறது. இது ஒரு நீண்ட வேதப் பகுதி. ஆகவே இதை வார்த்தைக்கு வார்த்தை விளக்கி எழுதமுடியாது. இருந்தபோதும், நான்கு தலைப்புகளின் அடிப்படையில் இந்தப் பகுதியின் மூலமாக ஆண்டவர் எதை விளக்குகிறார் என்பதைப் பயன்பாடுகளோடு நாம் ஆராயலாம்.