சூனேமியப் பெண்ணின் சுயநலமில்லாத சேவை

2 இராஜாக்கள் 4:8-16

இந்த ஆக்கத்தில் 2 இராஜாக்கள் 4:8-16 வரையுள்ள வசனங்களை ஆராய்வோம். கடந்த ஆக்கத்தில் இந்த அதிகாரத்தின் ஆரம்பப் பகுதிகளைப் பார்த்தோம். அதில் ஆண்டவருக்கு பயந்து வாழ்ந்த ஒரு விதவையை எலிசா சந்திப்பதையும், அவளுக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து அவர் அவளுக்கு விடுதலையைக் கொடுப்பதையும் நாம் கவனித்தோம். இந்த ஆக்கத்தில் இன்னொரு பெண்ணைப் பற்றி ஆராயப்போகிறோம். இந்தப் பெண் சூனேம் என்ற இடத்தில் வாழ்ந்து வந்தவள். இந்தப் பெண்ணும்கூட அந்த விதவையைப்போல தேவனுக்கு பயந்து வாழ்ந்து வந்தாள். அந்நாட்களில் இஸ்ரவேல் பகுதிகளில் தேவனுடைய மக்கள் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பல காரணங்கள் இருந்தன. அங்கு நிறைய பஞ்சம் நிலவியது, நாட்டிற்கு எதிரிகளின் தொல்லைகள் இருந்தன, உணவுப் பொருட்கள் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. அதுமட்டுமல்ல ஆண்டவரைவிட்டு விலகிப் போய் வாழ்ந்த மக்கள் அதிகமாக இஸ்ரவேல் நாட்டில் காணப்பட்டார்கள். தேவனையும் அவருடைய வார்த்தையையும் அதிகமாக உதாசீனம் செய்து அந்நிய தேவர்களையும், புறஜாதி மக்களின் பழக்கங்களையும் பின்பற்றி வாழ்ந்து வந்தவர்கள் அதிகமானோர் இருந்தார்கள். அதுபோன்ற சூழலில் தேவனுடைய மக்கள் மீதமானவர்களாகக் குறைந்தளவே இருந்தார்கள். தேவனுடைய மக்களுக்கு, புறஜாதி தெய்வங்களை வணங்கி வந்த இஸ்ரவேல் மக்கள் மற்றும் மற்றவர்களிடத்திலிருந்து வந்த பலவிதமான எதிர்ப்புகளையும் தாங்க வேண்டியது மட்டுமல்லாமல் நாட்டில் பஞ்சத்தையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இருந்தபோதும் தேவன் அவர்களைக் கைவிட்டுவிடவில்லை.

Continue reading