– பலவீனமானதும் ஆபத்தானதுமான இறையியல் நூல் –
என்னுடைய இறையியல் மாணவர்களில் சிலர், நாங்கள் வாசிக்கக்கூடிய அளவுக்கு எளிமையான ஆங்கிலத்தில் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூல் ஏதாவது இருக்கிறதா, என்று அடிக்கடி கேட்டிருக்கிறார்கள். அதனால் எப்போதுமே நம்மவர்கள் எளிதாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இறையியல் நூல்கள் இருக்கின்றனவா என்று புதிதாக வெளிவரும் நூல்களின் மீது ஒரு கண் வைத்திருப்பது என் வழக்கம். அப்போதுதான் வெயின் குரூடமின் முறைப்படுத்தப்பட்ட இறையியல் நூலைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அது 1000 பக்கங்களுக்கு மேலுள்ள பெரிய நூல். அதன் முதல் பதிப்பு வெளிவந்தபோது அது பற்றிப் பெரியளவில் பேசப்பட்டது; பாராட்டுக்களும் குவிந்தன. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி அத்தகைய நூல்களில் முதல் இடத்தையும் பெற்றிருந்தது. அத்தோடு பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது.