இச்சஞ்சிகை ஆசிரியரிடம் பொதுவாகக் கூட்டங்களில் பலர் கேட்ட முக்கியமான கேள்விகளையும் பதிலையும் ஏனையோரது பயன்கருதி இப்பகுதியில் வெளியிடுகிறோம்.
திராவிட சமயங்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? கிறிஸ்தவமும் சைவமும் ஒன்றுதான் என்ற முறையில் சிலர் போதித்து வருகிறார்களே, திருமறையில் இதற்கு என்ன ஆதாரம் உண்டு?
இப்போதனை இன்று தமிழகம், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளில் தமிழ்க் கிறிஸ்தவர்கள் மத்தியில் பரவியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. சிலர், இப்போதனை இந்துக்களைக் கவர ஓர் அருமையான வழி என்று நினைத்து பயன்படுத்தி வருகிறார்கள். இதுபற்றி சிறிது விளக்கமான பதில்கூற வேண்டியது அவசியம்.
அ. இவர்கள் போதிப்பதென்ன?
டாக்டர் மு. தெய்வநாயகம் (விவிலியம், திருக்குறள், சைவசித்தாந்தம் ஒப்பாய்வு), ஞானசிகாமணி (அகத்தியர் ஞானம்) போன்றோர் வடவராகிய ஆரியர்களின் செல்வாக்கற்ற, கலப்பில்லாத திராவிட சமயங்கள், தமிழகத்திற்கு வருகை தந்த அப்போஸ்தலனாகிய தோமாவின் (தோமா தமிழகத்திற்கு வருகை தந்தார் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்படாத ஆதாரபூர்வமற்ற ஓர் ஊகம் மட்டுமே) கிறிஸ்தவப் போதனைகளின் செல்வாக்கினால், தனித்துவமுள்ள உருவவழிபாடற்ற, ஒரே தேவனைக் கொண்ட தமிழர்களின் சமயமாக இருந்தது என்றும், சைவசித்தாந்தமும், திருக்குறளும் சித்தர்களின் பாடல்களும் கிறிஸ்தவ செல்வாக்கினால் வளர்ந்த இவ்வாதி திராவிட சமயங்களைப் பற்றித்தான் போதிக்கின்றன என்றும் எழுதியுள்ளார்கள். இப்போதனைகளை இன்னும் பெரிதுபடுத்தி சாது செல்லப்பா போன்றோர் இந்துக்களைக் கவரும் நோக்கில் கிறிஸ்தவப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது, கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் இவ்வளவு தொடர்பு இருக்கும்போது நான் ஏன் அவர்களோடு சமமானமுறையில் ஒரே மேடையில் அமர்ந்து இருபகுதியுமே பயனடையும் விதத்தில் அமைதியான கலந்துரையாடல்களை (Dialogue) நடந்தக்கூடாது? என்ற முறையிலும் தயானந்தன் பிரான்ஸிஸ் (தமிழ்ச் சைவம்) போன்றோர் எழுதி வருகிறார்கள். இப்போதனைகள் இன்று தமிழகத்தின் வேதாகமக் கல்லூரிகள்வரை போயிருக்கின்றன. இவர்களுடைய கூற்றுகளுக்கும் போதனைகளுக்கும் வேதத்தில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
ஆ. இவர்களுடைய போதனை ஏன் தவறானது?
தோமா தமிழகத்திற்கு வந்தாரா? என்ற ஆராய்ச்சியை எல்லாம் உங்கள் கரத்தில் வைத்துவிட்டு இவர்களுடைய கருத்துக்களின் மூலமும், எழுத்துக்கள் மூலமும் எவ்வளவு தூரம் திருமறை தவறான முறையில் உண்மைக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுவதுதான் எனது முக்கிய நோக்கம். அதை வைத்தே நீங்கள் உண்மை எங்கிருக்கிறது என்று கண்டு கொள்ள முடியும்.
தோமா தமிழகம் வந்தாரா?
தோமா இந்தியாவிக்கு வந்தார் என்று இன்றுவரை வரலாற்றினால் நிரூபிக்கப்படவில்லை. இது வழிவழி வந்த நம்பிக்கையே தவிர அதற்கான ஆதாரங்கள் மிகக்குறைவு. தோமாவின் வழியில் வந்ததெனக் கருதப்படும் சீரியக்கிறிஸ்தவம் திருமறையின் போதனைகளுக்கு முரணான காரியங்களைக் கொண்டிருப்பதால் அதைக் கிறிஸ்தவத்தோடு தொடர்புபடுத்திப் பேசுவது தவறானது. இது கத்தோலிக்க மதமும் கிறிஸ்தவமும் ஒன்று என்று கூறுவது போலாகும். மயிலாப்பூரிலும், கேரளத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலை வழிபாட்டிற்கான பல அறிகுறிகள் காணப்படுவதால் அதற்கும் திருமறை சார்ந்த கிறிஸ்தவத்திற்கும் தொடர்பிருக்க முடியாது. ஏனெனில் திருமறை சிலை வழிபாட்டை வற்புறுத்திக் கண்டிக்கின்றது (யாத்திராகமம் 20:1-7). அதேநேரம், வரலாற்றை வைத்து திருமறையை நிரூபிக்க முற்படுவதும் தவறான காரியம். வரலாற்றின் கண்டுபிடிப்புகளோடு திருமறையின் போதனைகளும் ஒத்துப்போகுமானால் அதை ஏற்றுக்கொள்ளலாம். வரலாறும் பாவத்தினால் கறைபடிந்து காணப்படுவதால் அதைக்கொண்டு பரிசுத்த வேதத்தை நிரூபிக்க முற்படுவது தவறு.
திராவிட எழுச்சி இயக்கம்
இவ்வாய்வுகள் தமிழரையும் அவர்களுடைய பண்பாட்டையும் ஆரியர்களுக்கு எதிராக உயர்த்திக் காட்டும் நோக்கத்தில் எழுந்தனவே தவிர திருமறையையும், கர்த்தரையும் மேன்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்தவையல்ல. இவ்வாய்வுகளின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் காணப்பட்ட திராவிட சமயங்கள் ஆரியக் கலப்பற்ற தளித்தன்மை கொண்ட சமயங்களாக இருந்தன என்று நிரூபிப்பதுதான். சித்தர்களின் பாடல்களும், திருக்குறளும் பல தெய்வ வழிபாட்டை ஆதரிக்காமல் அவற்றைக் குறைகூறுகின்றன என்பதற்காக, அவை கிறிஸ்தவ செல்வாக்குப் பெற்றதால்தான் அப்படிப் போதிக்கின்றன என்ற வாதம் பொருத்தமற்றது. இது அக்காலத்தில் ஆரிய எதிர்ப்பினால் எழுந்த போதனையாகவும் இருக்கலாம். அதுமட்டுமல்லாது சைவசித்தாந்தத்திலும் திருக்குறளிலும் திருமறைக்கு ஒவ்வாத அநேக போதனைகள் உண்டு. திருக்குறளில் காணப்படும் தெய்வத்தைக் குறித்த பொதுவான வார்த்தைகள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத்தான் குறிப்பிட்டுக் கூறுகின்றன என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் இது தமிழ் மரபு என்று சிலர் வாதிட முற்பட்டாலும், திருமறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதத்தில் காணப்படாத வேறு பெயர்களை பயன்படுத்தி கர்த்தரை அழைப்பதை வேதம் அனுமதிப்பதில்லை. அதேநேரம் திருவள்ளுவர் இயேசுவை அறிந்திருந்தார் என்பதற்கும் உறுதியான ஆதாரம் இல்லை. உண்மையிலேயே அவர் கிறிஸ்துவை அறிந்திருந்தாரானால் தெளிவாக கிறிஸ்துவை வெளிப்படையாக அறிக்கையிட்டிருப்பதோடு, திருமறையின் போதனைகளைத்தான் தன்நூலில் விளக்கியிருப்பார், வள்ளுவர் புலால் உண்ணலையும் வன்மையாகக் கண்டிக்கிறார். வேதம் அதைத் தடைசெய்வதில்லை (ரோமர் 14:1-4).
திராவிட சமயங்கள்
திராவிட சமயங்கள் என்று அழைக்கப்படுகின்ற சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் ஆகிய ஆறு சமயங்களும் கிறிஸ்தவ திருமறையின் அடிப்படையில் எழுந்த இந்தியத் திராவிட சமயங்கள் என்பது டாக்டர் மு. தெய்வநாயகத்தின் வாதம். கிறிஸ்தவத்திற்கே உரித்தான திரித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் பிதா, குமாரன், ஆவியாகிய அதே தேவனைத்தான் திராவிட சமயங்களும் வேறு பெயர்களில், தமிழகத்திற்கேற்ற முறையில் பயன்படுத்தின என்று இவர் எழுதியுள்ளார். ஆனால் இது திருமறைக்கே புறம்பான ஒரு விளக்கம். எந்த ஒரு மனிதனும் திருமறையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள கர்த்தரைப்பற்றிய திரித்துவ விளக்கங்களைத் தாம் நினைத்த விதத்தில் எந்தவொரு இனம் அல்லது விளக்கங் கொடுக்க முடியாது. அது நம் பார்வைக்கு எவ்வளவுதான் கவர்ச்சியுள்ளதாகவும் நன்மை அளிக்கும் காரியமாகவும் தென்பட்டாலும் அது திருமறைக்கு விரோதமான காரியம். அதேநேரம் இவர்கள் கூறுவதுபோல் பரிசுத்த ஆவியைப் பெண்ணாக உருவகப்படுத்தி ‘அம்மையாக’ அழைக்க திருமறை எவ்விதத்திலும் இடங்கொடுக்காது. இத்தகைய விளக்கங்கள் திருமறையைத் தம் சுயநலத்திற்காகப் பயன்படுத்தும் காரியங்களே தவிர, கர்த்தருடைய வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து அவரை மேன்மைப்படுத்தும் செயல்களல்ல.
திருமறை, திருக்குறள், சைவசித்தாந்தம்
திருக்குறள், சைவசித்தாந்தம் போன்ற சாதாரண மனிதர்களால் எழுதப்பட்ட நூல்களைக் கர்த்தருடைய வார்த்தையோடு ஒப்பிடுவது வேதத்திற்குப்புறம்பான காரியமாகும். திருமறை தேவ ஆவியினால் அருளப்பட்ட திருவசனமாக இருக்கின்றது. அதன் சத்தியங்களிலும், போதனைகளிலும் எந்தவித தவறிற்கும் இடமேயில்லை. அதை உலக நூல்களோடு ஒப்பிட்டு சமப்படுத்திப் பார்க்கக்கூடாது. டாக்டர் மு. தெய்வநாயகமும் மற்றவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள். அதேநேரம், திருக்குறள், சைவசித்தாந்தம் போன்றவற்றில் சில நல்ல கருத்துக்களும், போதனைகளும் காணப்படலாம். அவற்றை மட்டும் வைத்து, திருமறைக்கு சமமாக இப்புத்தகங்களை நாம் மதிப்பிடக்கூடாது. திருமறையைப் பொறுத்தவரையில் அதற்கு சமமான நூல்கள் உலகில் ஒன்றுமேயில்லை. கிறிஸ்துவை அறிந்து கொள்ளவும், கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவும் ஒருவனுக்கு சத்திய வசனமாகிய திருமறை மட்டுமே தேவையே தவிர, வேறு எந்தப்புத்தகத்தின் உதவியும் தேவையில்லை. ஆகவே திருமறையின் விளக்கத்தைத்தான் நாமனைவரும் நாடவேண்டும் வேறு சமயக் கோட்பாடுகளையோ சித்தாந்தங்களையோ அல்ல.
கிறிஸ்தவமும் இனப்பாகுபாடும்
திருமறையில் இனப்பாகுபாட்டிற்கு இடமில்லை. அப்படியிருக்க, திருமறை வழிவந்த சமயங்களாக திராவிட சமயங்கள் இருக்குமானால் அவை ஆரிய, பிரமாண வெறுப்புள்ளவைகளாக இருப்பதெப்படி? திருமறை எல்லா இனமக்களுக்கும் உரித்தானது. அதன் போதனைகளனைத்தையும் எல்லா இனமக்கள் மத்தியிலும், எந்தவிதப் பாகுபாடுமின்றி அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியும். நம் இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் ஏற்றவிதத்தில் நாம் திருமறையை மாற்றமுடியாது. ஆனால், நமது கலாச்சாரத்தில் இருந்து, தேவனுக்கும், திருமறைக்கும் பொருந்தாது காணப்படும் அம்சங்களைக் களைந்தெடுக்க வேண்டியது நமது கடமை. ஆகவே, ஓர் இனத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் அமைந்த திராவிட சமயங்களுக்கும், எல்லா இனங்களுக்கும் சொந்தமானதும் எல்லா இனங்களையும் பாவத்திலிருந்து விடுவிக்கும் வல்லமையுள்ள திருமறையின் அடிப்படையிலான கிறிஸ்தவத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை.
கிறிஸ்தவத்தைத் திராவிட சமயங்களோடு ஒப்பிட்டுக் காட்டும் செயலின் பல்வேறு தவறுகளை நாம் அடையாளம் காணமுடிந்தாலும் முடிவாக சில உண்மைகளை மட்டும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இத்தகைய ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பவர்களும் அதை ஆதரிப்பவர்களும் பரந்த கொள்கையுடையவர்கள் (Liberal). இவர்கள் கர்த்தருடைய வார்த்தையின் பூரணத்துவத்திலும் அதன் போதுமான தன்மையிலும் நம்பிக்கையுள்ளவர்களல்ல. ‘தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளியுள்ளது’ என்ற பேதுருவின் வார்த்தைகளை இவர்கள் விசுவாசிப்பதில்லை. கல்வாரிச் சிலுவையில் சிந்தப்பட்ட கிறிஸ்துவின் இரக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள இரட்சிப்பின் வழிமுறைகளிலும் இவர்களுக்கு ஆர்வமில்லை. புற சமயங்களோடு கிறிஸ்தவத்தை சமப்படுத்தி கிறிஸ்துவின் பெயருக்கே இவர்கள் களங்கம் தேடித்தருகிறார்கள். இவர்களின் வார்த்தையில் மயங்கி, இப்போதனை மற்றவர்களை இலகுவாக கிறிஸ்துவிடம் கொண்டுவர உதவுமே என்று எண்ணிச் செயல்படுவது கர்த்தருடைய வார்த்தையை நம் காலில் போட்டு மிதிப்பதற்கு சமம். எரிச்சலுள்ள தேவன் இப்பேராபத்திலிருந்து நம்மைக் காப்பாராக.