கர்த்தர் கட்டியெழுப்பும் திருச்சபை

திருச்சபை அமைய வேண்டிய முறை பற்றிய முக்கிய அம்சங்களைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். கடந்த இதழ் திருச்சபைகள் கொண்டிருக்க வேண்டிய விசுவாச அறிக்கை பற்றி விளக்கியது. இவ்விதழில் இன்று சிலரால் பிரச்சனைக்குரியதாகக் கருதப்படும் ஒரு அம்சத்தை ஆராயவிருக்கிறோம். அதாவது திருச்சபையில் பெண்களின் பங்கு என்ன? அதுகுறித்து திருமறை என்ன கூறுகிறது என்பதை இவ்விதழில் பார்க்கப் போகிறோம். கடந்த வருடத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கன் சமயக் கிளை பெண்கள் திருச்சபையில் போதகர்களாகப் பணி புரிய அனுமதியளித்தன. இதை எதிர்த்த நூற்றுக்கணக்கான சபைத்தலைவர்கள் அச்சமயக்கிளையை விட்டு விலகினார்கள். ஆனால் அவர்கள் போய்ச் சேர்ந்த இடமோ ரோமன் கத்தோலிக்க சபை. கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போல் ரோமன் கத்தோலிக்க சபை இச்சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது. ஆங்கிலிக்கன் சபை இன்று எந்நிலைமையில் உள்ளது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இத்தகைய குழப்ப சூழ்நிலை ஆங்கிலிக்கன் சபையை மட்டுமல்லாது அனைத்து சமயக்கிளைகளையுமே (Mainline Churches) சூழ்ந்திருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

திருச்சபையில் பெண்களின் பங்கு என்ன என்று ஆராய முற்படும்போதே சிலர் ஏன் இந்தப் பிரச்சனை, வேறு காரியத்தைக் குறித்து எழுதக் கூடாதா என்று எண்ணலாம். ஆனால் பவுல் அப்போஸ்தலன் திருச்சபையில் பெண்களின் பங்கைக்குறித்து எழுதும்போது இவ்வாறு எண்ணவில்லை. பவுல் இதை வெறுமனே பெண்கள் பற்றிய காரியமாகக் கருதாது கர்த்தரின் படைப்பு சம்பந்தப்பட்ட காரியமாகக் கருதினார். அதாவது பெண்கள் சம்பந்தமான திருமறைக்கு எதிரான எந்தவித நடவடிக்கையும் கர்த்தரின் வார்த்தைக்கும், அவரது அதிகாரத்திற்கும், படைப்பிற்கும் முரணான காரியமாகக் கருதினார். பவுலைப் பொறுத்தவரையில் கர்த்தர் இதைக்குறித்து வேதத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். அதைப்புரிந்து கொள்ளாத நாம்தான் நமது இனம், பண்பாடு, நாட்டு நடப்பு என்றெல்லாம் சிந்தித்து உலகப்பிரகாரமாக நடந்துவருகிறோம். ஆகவே திருச்சபையில் பெண்களின் பங்கைக்குறித்து வேதம் தெளிவாகப் போதிப்பதால் அதை நாம் பிரச்சனைக்குரியதாகக் கருதாது திருமறை அதைக்குறித்து என்ன சொல்கிறது என்று ஆராய வேண்டும்.

நவீன பெண் உரிமை சார்பான இறையியலாளர்கள் (Modern Feminist Theologians) திருச்சபைகளில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பினாலும், கலாச்சாரப் பாரம்பரியத்தால் பெண்களை அடிமைத்தனத்தோடு நடத்துபவர்களாலும் இன்று இது ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆகவே, ஆரம்பத்திலேயே நாம் பெண்களைக்குறித்து நிலவிவரும் சில தப்பான அபிப்பிராயங்களைக் களைந்துவிடுவது நல்லது.

1. வேதம் ஆன்மீக வாழ்க்கையைப் பொறுத்தவரையில் கர்த்தருக்கு முன் ஆணும் பெண்ணும் சமமானவர்கள் என்று போதிக்கின்றது. இரட்சிப்பை அடைவதற்கு ஆணுக்கு ஒரு வழி, பெண்ணுக்கு ஒரு வழி என்று வேதம் போதிப்பதில்லை. ஆணும் பெண்ணும் ஒரேவிதத்தில்தான் தேவனை அறிந்து கொள்ள முடியும். வேதம் பெண்களை இரண்டாந்தரப் பிரஜைகளாகக் கருதவில்லை. அது மட்டுமல்லாது எவ்வித பாகுபாடுமில்லாது தேவ ஆசீர்வாதங்களையும் இருவரும் சரிசமமாகப் பெற்றுக் கொள்கிறார்கள். பரிசுத்த வாழ்க்கையை வாழ்வதற்காக அழைக்கப்படுகிறார்கள். அதற்குரிய அனைத்துத் தகுதிகளையும் இருசாராருமே பெற்றுக் கொள்கிறார்கள். கலாத்தியர் நிருபத்தில் இதைத்தான் பவுல் வலியுறுத்துகிறார் (கலா. 3:28) சிலர் இவ்வேதப்பகுதியைத் தவறாகப்புரிந்து கொண்டு கடவுளுக்கு முன் ஆண், பெண் என்ற பேதம் இல்லை என்று போதிக்கிறார்கள். ஆனால் பவுலோ இரட்சிப்பைப் பொறுத்தவரையில் கடவுளுக்கு முன் ஆண், பெண் என்ற பாகுபாடோ அல்லது படைப்பின்போது கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த பொறுப்புகளோ அகற்றப்பட்டு விட்டது என்று போதிக்கவில்லை.

2. வேதம் பெண்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தோடு பலவிதத்தில் பணிபுரிந்ததையும் எடுத்துக் காட்டுகிறது. பழைய ஏற்பாட்டில் பெண்களின் அற்புதமான சாட்சியுள்ள வாழ்க்கையைக் குறித்த பல உதாரணங்களைப் பார்க்கிறோம். புதிய ஏற்பாட்டிலும் இதே வகையில் பெண்களின் சாட்சியுள்ள வாழ்க்கையைக் குறித்து வாசிக்கிறோம் (2 தீமோ. 1:5; மாற்கு 12: 7, 13; லூக்கா 8:3; அப். 18:24-26). அத்தோடு பழைய, புதிய ஏற்பாடுகளில் பெண்கள் கர்த்தரால் பலவிதமான பணிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் காணலாம்.

ஆகவே ஆணும், பெண்ணும் வேதத்தில் ஆன்மீக வாழ்க்கையைப் பொறுத்தவரையில் சமமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இப்படிச் சொல்லிவிடுவதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது. நாம் கேட்க வேண்டிய கேள்வி ஆணையும், பெண்ணையும் கடவுள் ஒரே விதமாகப் படைத்தாரா? ஆன்மீக வாழ்வில் சரிசமமான அனுபவங்களைப் பெற்றபோதும், அவர்கள் எந்தவித வேறுபாடுமில்லாமல் எங்கும் எல்லாப் பணிகளையும் சரிசமமாகச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தாரா? என்பதுதான். இக்கேள்விகளை வேதத்தின் அடிப்படையில் ஆராயும்போது ஆண், பெண் இருவரையும் கடவுள் எவ்வாறு படைத்தார், எத்தகைய பொறுப்புக்களை ஏற்கப் படைத்தார் என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். அதைப்புரிந்து கொண்டால் மட்டுமே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதோடு நடைமுறையிலும் திருமறை பூர்வமான வழக்கத்தை ஏற்படுத்த முடியும்.

படைப்பில் ஆணும் பெண்ணும்

கடவுள் ஆண், பெண் இருவரையும் படைத்தபோது ஒரே விதமாகப் படைக்கவில்லை என்று வேதத்தில் பார்க்கிறோம். ஆணையும், பெண்ணையும் அவர் தம் சாயலில் படைத்தபோதும் ஒரேவிதமாகத் தோற்றமளிக்கும்படிப் படைக்கவில்லை. இன்று ஒருபாற்கூறு (unisex) என்ற வார்த்தை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஆண், பெண் இருவருக்குமிடையில் இருக்கும் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட பேதங்களை அகற்ற முனையும் செயல். ஆனால் கடவுள் ஆணையும், பெண்ணையும் தோற்றத்திலேயே வித்தியாசமாகத்தான் படைத்தார். இது சொல்லிப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமற்ற உண்மை. ஏனெனில் சேலை கட்டித்திரியும் ஆண்களையும், வேட்டியுடன் திரியும் பெண்களையும் நாம் இன்று பார்ப்பதில்லை. ஆதியாகமத்தில் கடவுள் மனிதனை முதலில் படைத்து பின் ஏவாளை அவனில் இருந்து படைத்தார் என்று வாசிக்கிறோம் (ஆதி. 2; 1 கொரி. 11:8; 1 தீமோ. 2:13). அதுமட்டுமல்லாது அவர்கள் இருவரையும் இணைத்து வைத்த கடவுள் ஆதாமே குடும்பத் தலைவனாக இருக்க வேண்டும் என்றும் பணித்தார் (1 கொரி. 11:3; 14:34, 35; 1 தீமோ. 2:12; எபேசி. 5:22-24; கொலோ. 3:18, 19).

கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் (1 கொரிந்தியர் 11:1-16 வசனங்களில்), பொது இடங்களில் (அதாவது ஆண்களும், பெண்களும் கூடிவரும் இடங்களில்) ஆணும், பெண்ணும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கும் பவுல், அவ்விடங்களிலும் பெண் ஆணுக்குக் கர்த்தர் கொடுத்திருக்கும் தலைமைத்துவத்திற்கு மதிப்பளிக்கும் விதத்திலேயே பெண் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். இப்பகுதியின் மூன்றாம் வசனத்தில் ‘புருஷன்’ என்ற வார்த்தை மூலமொழியில் ஆணைக் குறிக்கின்றதே தவிர கணவனையல்ல. ஆகவே இப்பகுதி கணவன் மனைவியைப் பற்றியதாக அல்லாமல் பொதுவாக ஆண், பெண் ஆகிய இருபாலாரையும் குறித்த போதனைகளாக உள்ளது. சில வேத விளக்கவுரையாளர்கள், இப்பகுதியில் சபையில் ஆணும், பெண்ணும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பவுல் போதிப்பதாகத் தவறாக விளக்கமளிக்கிறார்கள். பவுல் இப்பகுதியின் பதினேழாம் வசனத்தில் இருந்தே சபைக்காரியங்களைப் பற்றிப் போதிக்கிறார். 1 கொரி. 11:17 முதல் 14:40 வரையும் பவுல் சபை கூடிவரும்போது கிறிஸ்தவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிப் போதிக்கிறார். எனவே இது ஒரு புதிய பகுதியாகக் கருதப்பட வேண்டும். ஆகவேதான் பதினேழாம் வசனத்தில் ‘நீங்கள் கூடி வரும்போது’ என்று பவுல் சபை கூடிவருதலைப் பற்றிக் குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். இதையே பதினெட்டாம், இருபதாம் வசனங்களிலும் பார்க்கலாம். ஆனால் முதல் பதினாறு வசனங்களிலும் ஒருமுறையாவது சபை கூடிவருதலைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இவ்வசனங்கள் ஆணும் பெண்ணும் பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றிப் போதிப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பவுல் இப்பகுதியில் ஆரம்பத்திலிருந்தே கிறிஸ்துவின் தலைமைத்துவத்தைப் பற்றியும், ஆணின் தலைமைத்துவத்தைப் பற்றியும் அடிக்கடிப் பேசுகிறார்.

அதுமட்டுமல்லாமல், இப்பகுதியின் 5 ஆம் வசனத்தில் பெண்கள் ஜெபிக்கவும், தீர்க்கதரிசனம் சொல்லவும் (பேசவும்) அனுமதியுண்டு என்பதைப் பவுல் ஏற்றுக் கொள்கிறார் (‘ஜெபம் செய்கிறபோதாவது, தீர்க்கதரிசனம் சொல்லுகிறபோதாவது தன் தலையை மூடிக் கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் . . .’). இங்கு இதை அனுமதிக்கும் பவுல் இன்னும் சில அதிகாரங்கள் தாண்டி 14 ஆவது அதிகாரத்தில் 33-35 வசனங்களில் பெண்கள் பேசக்கூடாது; அவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்; பேசுவதற்கு அவர்களுக்கு உத்தரவில்லை என்றெல்லாம் கூறுவதேன். பதினோராம் அதிகாரத்தில் ஒருவிதமாகவும், பதினான்காம் அதிகாரத்தில் இன்னொருவிதமாகவும் பவுல் போதிப்பதை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது?

இப்பிரபச்சனையை இலகுவாகத் தீர்க்க முனையும் சிலர் பவுலுக்கு புத்தி சரியில்லை என்று கூறுகிறார்கள். வேறு சிலர், ஏற்கனவே பெண்கள் ஜெபிப்பதையும், பேசுவதையும் ஏற்றுக் கொண்ட பவுல் பதினான்காம் அதிகாரத்தில் சபைக் காரியங்களைப் பற்றி எழுதும்போது மனம்மாறி அதை நிராகரிக்கிறார் என்று விளக்கம் தருகிறார்கள். இவ்வாறான விளக்கங்கள் மூலம் இவர்கள் அப்போஸ்தலனான பவுலை அவமதிக்கிறார்கள். ஆனால் இவ்விரு வேதப் பகுதிகளையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? நிச்சயமாக பவுல் தேவ ஆவியால் வழி நடத்தப்பட்டு சரியானதைத்தான் எழுதியிருக்கிறார் என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அப்படியானால் பவுல் போதிப்பதென்ன?

நாம் ஏற்கனவே விளக்கியதுபோல் பதினோராம் அதிகாரத்தில் பவுல், ஆணும் பெண்ணும் பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகளைப் பற்றியும், பதினான்காம் அதிகாரத்தில் சபையில் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் போதிக்கிறார். ஏனெனில் 11:16-14 அதிகாரம் வரையிலான வேதபகுதிகள் சபை கூடிவருகின்றபோது நடக்க வேண்டிய காரியங்களைப் பற்றிப் போதிக்கின்றன. இவ்விளக்கம் மட்டுமே பவுலை அவமதிக்காமல் அவரது போதனையை நியாயப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆகவே இவ்விரு பகுதிகளும் இருவேறு சந்தர்ப்பங்களில் இருபாலரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் போதிக்கின்றன. சபையாகக் கூடி வராத பொது இடங்களில் பெண்கள் ஜெபிக்கவும், பேசவும் கூடிய பொது இடங்கள் எவை என்பதை நாம் பிறகு பார்ப்போம். ஆனால் இப்போதைக்கு இவ்விரு சந்தர்ப்பங்களிலும் பெண்கள் படைப்பின் மூலம் கடவுள் ஆணுக்கே தலைமைத்துவத்தைத் தந்துள்ளதையும், அதை மதித்தே அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் நடந்து கொள்ள வேண்டியிருப்பதையும் தெளிவாக்குவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சபையில் ஆணும் பெண்ணும்

இன்று சபைகளில் பெண்களைப் போதகர்களாகவும், மூப்பர்களாகவும், உதவிக்காரர்களாகவும் நியமிப்பது வழக்காக இருக்கிறது. நவீன பெண்ணுரிமை இயக்கத்தின் போதனைகளின் பாதிப்பாலும், திருமறையின் அதிகாரத்தை உதாசீனம் செய்வதாலுமே சபைகள், வேதாகமக் கல்லூரிகள், கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகியவை இன்று பெண்களை சமமாக நடத்துவதாகக் கருதி வேதத்திற்குப் புறம்பான வழிகளில் அவர்களை வழி நடத்துகின்றனர்.

திருமறை பெண்கள் சபையில் எவ்வகையில் நடக்க வேண்டும் என்று தெளிவாகப் போதிக்கின்றது. நாம் ஏற்கனவே அவதானித்த 1 கொரி. 11:1-16 வரையிலான வசனங்கள், 1 கொரி. 14:33-35 வரையிலான வசனங்கள், 1 தீமோத்தேயு 2 ஆம் அதிகாரம் ஆகியன இதைப் போதிக்கும் முக்கிய வேதப் பகுதிகள், இம்மூன்று வேதப்பகுதிகளிலும், 1 கொரி. 11:1-16 அடங்கிய வேதப்பகுதி பெண்கள் பொது இடங்களில் எவ்வாறு நடக்க வேண்டும் என்று போதிக்கின்றது. ஏனைய இரண்டும் அவர்கள் சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று போதிக்கின்றன. இவற்றைக் கவனத்தோடு படித்துப் பார்க்கும்போது பெண்கள் அதிகாரபூர்வமாக வேதத்தை எடுத்துச் சொல்லும் பணியில் சபைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று பவுல் கூறுவதைப் பார்க்கிறோம். அதாவது ஆணும், பெண்ணும் சபையாகக் கூடிவரும் இடங்களில் ஆண்களுக்கே அதிகாரபூர்வமாகப் போதிக்கும் பொறுப்பைத் தேவன் அளித்திருக்கிறார். இதற்குக் காரணமாக இவ்வேதப்பகுதிகள் அனைத்திலும் ஆதியில் படைப்பில் கடவுள் ஏற்படுத்தியுள்ள நிரந்தரமான கட்டளைகளைப் பவுல் நினைவுபடுத்துகிறார். 1 கொரி. 24:34 – ‘வேதமும் அப்படியே சொல்லுகிறது’, 14:36 – ‘வேத வசனம்’ உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது?’ ஆகிய வசனங்கள் கடவுளின் படைப்புக் கட்டளைகளை நினைவுபடுத்துகின்றன.

சிலர் பெண்கள் தீர்க்கதரிசிகளாக இருந்துள்ளதாக வாதிடலாம். உண்மைதான்; ஆனால் அவர்கள் சபையில் தீர்க்கதரிசனம் சொன்னதாக வேதம் போதிக்கவில்லை. பவுல் ஏற்கனவே (1 கொரி. 14:33-35) எந்தவிதமான பேச்சையும் (தீர்க்கதரிசனம் உட்பட) சபையில் அனுமதிக்கவில்லை. ஆகவே அவர்கள் சபையில் தீர்க்கதரிசனம் சொன்னதாகக் கருதமுடியாது. பெண்கள் தீர்க்கதரிசனம் சொன்ன இடங்களையெல்லாம் வேதத்தில் ஆராய்ந்து பார்க்கும்போது அவை சபையில் சொல்லப்பட்டதாக நிரூபிக்க முடியாது.

வேறு சிலர் பவுல் பெண்களின் வெறும் கேளிக்கைப் பேச்சையே சபையில் நிராகரிப்பதாகவும், பேசுவதை முற்றாகத் தடை செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள். இக்கூற்றும் பொருந்தாது. ஏனெனில் 22 தடவைகள் 1 கொரி. 14 ஆம் அதிகாரத்தில் காணப்படும் ‘பேச்சு’ (Speak) என்ற வார்த்தை அவ்வதிகாரம் முழுவதும் தெளிவான, பொருள் பொதிந்த அதிகாரமுள்ள பேச்சைத்தான் குறிக்கின்றதே தவிர கேளிக்கைப் பேச்சையல்ல. ஆகவே அவ்வாதமும் பொருந்தாது.

(வளரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s