கேள்வி 25: கிறிஸ்து எவ்வாறு தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்?
பதில்: கிறிஸ்து எமது இரட்சிப்பிற்கான தேவசித்தத்தைத் தனது வார்த்தையாலும், ஆவியாலும் வெளிப்படுத்துவதன் மூலம் தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்.
(யோவான் 1:18; யோவான் 20:31; யோவான் 14:26)
விளக்கக்குறிப்பு:
பவுல் எபேசியர் 2:20 இல் திருச்சபையானது ‘அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டு அதற்குக் கிறிஸ்துவே மூலைக்கல்லாயிருக்கிறார்’ என்று கூறுவதைப்பார்கிறோம். ஏனைய அடிக்கற்கள் மூலைக்கல்லைச் சார்ந்திருப்பதைப் போல், அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவை சார்ந்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கடவுளின் வசனத்தை எடுத்துக் கூறும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னவையும், எழுதியவையும் கடவுளின் வார்த்தைகளேயன்றி வேறில்லை. அவர்கள் தங்களது சுயவல்லமையின் மூலம் பேசாமல் ஆவியின் வல்லமையினால் பேசினார்கள் (1 பேதுரு 1:1).
கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபின் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் மூலம் கொடுக்கப்பட்ட தேவவெளிப்பாடு முடிவுக்கு வந்தது. கிறிஸ்துவே கடவுளால் வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசி. பவுல் கூறுவது போல், ‘அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது’ (கொலோ. 2:3). இதனாலேயே நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் மூலம் தரப்பட்ட வெளிப்£ட்டிலிருந்து புதிய ஏற்பாடு அப்போஸ்தலரின் காலத்துக்கு வருகிறோம். பழைய ஏற்பாடு முழுவதுமே கடவுளின் வாக்குறுதிகளாகும். புதிய ஏற்பாடு அவ்வாக்குறுதிகளின் நிறைவேற்றுதலாக இருக்கின்றது. புதிய ஏற்பாட்டிலும் நாம் தீர்க்கதரிசிகளைக் குறித்து வாசித்தாலும் அவர்கள் புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்படும் வரையிலான இடைவெளியை நிரப்புவதற்காக இருந்தார்கள். அது எழுதி முடிக்கப்படும் வரை நாம் இப்போது வாசிக்கும் வேத சத்தியங்களை ஏவுதலின் மூலம் அவர்களால் எடுத்துக் கூற முடிந்தது. ஆகவே கிறிஸ்துவன் நிறைவு செய்யப்பட்ட கிரியைகளின் அடையாளமாக இன்று தீர்க்கதரிசிகளோ அல்லது அப்போஸ்தலர்களோ நம்மத்தியில் இல்லை. கடவுளின் வார்த்தை அல்லது வெளிப்பாடு, நிறைவு பெறாத வரையுமே அப்போஸ்தலரோ அல்லது தீர்க்கதரிசியோ நம்மத்தியில் இருக்க முடியும் தீர்க்கதரிசிகள் கிறிஸ்து எதைச் செய்யப்போகிறார் என்று வருமுன்னுரைத்தார்கள். அப்போஸ்தலர்கள் கிறிஸ்து செய்தவற்றை எழுதி வைத்தார்கள்.
போலிப்போதனைகள் அனைத்தும் கிறிஸ்து ஆவியினால் தனது வார்த்தையின் மூலம் பேசுவதையும் விட வேறு அதிகாரங்களை நாடி நிற்கின்றன. ரோமன் கத்தோலிக்கர்கள் அப்போஸ்தலர்களின் அதிகாரம் தொடர்ச்சியாகப் பிறருக்கும் கொடுக்கப்படுவதாக (போப்) போதிக்கிறார்கள். இவர்கள் (போப்) கடவுளின் வார்த்தையைப் பேசும் வல்லமை உடையவர்கள் என்பத அவர்களது போதனை. ஆகவே இவர்களைப் பொறுத்தவரையில் போப் பேசுகின்றபோது அது கடவுளே வார்த்தையில் எந்தத் தவறுமே இருக்க முடியாது. இப்போதனையின்படி கிறிஸ்து தனது தெய்வீக வெளிப்பாட்டை இன்னும் நிறைவு முடியாது. தீர்க்கதரிசிகள் அவரோடு முடிவடையவில்லை. இங்கேயே நாம் ரோமன் கத்தோலிக்கப் போதனையின் போலித்தனத்தை உணர்கிறோம்.
அத்தோடு நம்மத்தியில் இன்று காணப்படும் பல போலிக்கூட்டங்களும் இத்தகைய புதிய வெளிப்பாடுகளைத் தமது போதனைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மோர்மன்ஸ் கூட்டத்தார் ‘ஜோசப் ஸ்மித்’ என்ற மனிதனே கிறிஸ்துவிற்குப்பின் வந்த மெய்யான தீர்க்கதரிசி என்று போதிக்கிறார்கள். இதேவகையில் செவந்த் டே அட்வென்டிஸ்ட்’, கிறிஸ்தவ விஞ்ஞானம், யெகோவாவின் சாட்சிகள் போன்றோரும் திருமறையோடு வேற ஏதாவதையும் விசுவாசத்தின் அடிப்படை விதியாக அதிகாரபூர்வமாக சேர்த்துக் கொள்வதை அவதானிக்கலாம். இந்தவதையில் பரவசக் தீர்க்கதரிசனம், தனிமனிதர்களின் கனவுகள் போன்றவற்றையும் அதிகாரபூர்வமான தேவ வெளிப்பாடுகளாகக் கருதி வருகிறார்கள்.
கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்து மட்டுமே திருச்சபையின் தீர்க்கதரிசியாக இருந்து திருமறையின் மூலம் தனது சபையோடு பேசுகிறார். இதனால் மற்றவர்கள் அவசியமில்லை என்று பொருளல்ல. ஏனெனில் கிறிஸ்துவே தனது சபைக்கு அப்போஸ்தலரையும், தீர்க்கதரிசிகளையும், சுவிஷேசகர்களையும், போதகர்களையும் அளிக்கிறார் (எபேசியர் 4:8, 11). இவர்களில் சிலர் திருமறை எழுதி முடிக்கப்படும்வரையே தேவைப்பட்டனர் (தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தர்களும்). சுவிஷேசகர்களும் இன்று இல்லை. இவர்களின் பணி போதக ஊழியத்திற்குள் அடக்கப்பட்டுள்ளது.
இன்று போதகர்களையே நிரந்தர ஈவுகளாக கிறிஸ்து சபைக்குத் தந்துள்ளார். அதாவது கிறிஸ்து இன்று தொடர்ந்து இத்தகைய பணிகளுக்கு மனிதர்களை அழைக்கிறார். ஆனால் இவர்கள் புதிதாக எதையும் வெளிப்படுத்தாமல் வெட்கப்படாத ஊழியக்காரராயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களாகவும், தேவனுக்கு முன்பே உத்தமர்களாக நிற்கும்படி ஜாக்கிரதையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும் (2 தீமோ 2:15)
திருமறையே பூரணமான, எழுத்துருவில் உள்ள, தெளிவான, தானே தன்னை விளக்கக்கூடிய கடவுளின் வார்த்தையாக இருப்பதாலும், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதை வாசித்து விளங்கிக் கொள்ளும்படி பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டிருப்பதாலும் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளையும்விட நாம் கிறிஸ்துவின் தீர்க்கதரிசிப் பணியினால் மேலான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். இதையே பேதுருவும், அவர்கள் (அப்போஸ்தலரும் ஏனையோரும்) வானத்திலிருந்து பிறந்த சத்தத்தைக் கேட்டதைவிடவும் ‘அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனம் நமக்கு உண்டு’ (2 பேதுரு 1:19) என்று திருமறையைக் குறித்துச் சுட்டிக் காட்டுகின்றார். ஆகவே கிறிஸ்துவின் சித்தத்தை ஆவியின் மூலமாக திருமறையில் இருந்து அறிந்து கொள்ளக்கூடிய பேற்றினைப் பெற்றிருப்பதால் இயேசு கிறிஸ்து கூறியதைப்போல, இன்று ஒவ்வொரு கிறிஸ்தவனும் யோவான் ஸ்நானன் அறிந்திருந்ததைவிடவும் மேலான அறிவைக் கொண்டு காணப்படுகிறான் (மத்தேயு 11:11).
கடவுளைப் பற்றிய சகல அறிவையும், கிறிஸ்துவிற்குள்ளான இரட்சிப்பின் வழிமுறைகளையும் கிறிஸ்துவின் ஆவியின் மூலம் திருமறையிலிருந்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்பதை நாம் வலியுறுத்திக் கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். இதனால் வினாவிடைத் திருமறைக்கோட்பாடுகள், விசுவாச அறிக்கைகள் (1689 விசுவாச அறிக்கை) போன்றவை அவசியமற்றவை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. இவை திருமறையை மட்டுமே எடுத்து விளக்குவதால் நமக்கு மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. (திருமறைக் கோட்பாடுகளின் பயன் குறித்து இவ்விதழில் எழுதியுள்ளோம்) சாதாரண மனிதர்களான நமது மூதாதையர்களால் இவை எழுதப்பட்டிருந்த போதும் திருமறையின் போதனைகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கும் இறையியல் நூல்களாக விளங்குகின்றன. திருமறையில் காணப்படும் அனைத்துப் போதனைகளையும் விரைவில் படித்து முடிக்கவும் இவை துணை புரிகின்றன. இக் கோட்பாடுகளைத் திருமறையோடு ஒப்பிட்டு, ஆராய்ந்த ஆவியின் துணையோடு படிக்கும்போதே சத்தியத்தில் நமது அறிவு மேலும் உறுதிபெறுகின்றது.
சிலர் சபை சொல்வதையோ, போதகர்கள் கூறுவதையோ அல்லது வேறு வேத வல்லுனர்கள் கூறவதையோ வேத வாக்காகக் கருதுகிறார்கள். இது ரோமன் கத்தோலிக்க சபையின் வழியிலோ போவதைப் போன்றதாகும். ‘பரவசக்குழுக்களின்’ மத்தியில் இதனை அவதானிக்கலாம். சபைத்தலைவரோ அல்லது யாரோ ஒரு ஊழியக்காரர் சொல்லும் வார்த்தைக்கும், சாதரண மனிதனின் தீர்க்கதரிசனங்களுக்கும், கனவுகளுக்கும் திருமறையைவிட மேலான இடத்தையும், மதிப்பையும் இவர்கள் அளிப்பதைக் காணலாம். ஒருவன் தான் விசுவாசிப்பதைக் கிறிஸ்துவின் மூலம் அவரது வார்த்தையாகிய திருமறையிலிருந்து பெற்றுக் கொண்டிராவிட்டால் அவனது அறிவு உறுதியானதோ, நிலையானதோ அல்ல.
16 ஆம் நூற்றாண்டு சீர்திருத்த காலத்தில் சாதாரண மனிதர்கள் திருமறையை வைத்திருக்கக் கூடாதெனக் கருதப்பட்டது. படிப்பாளிகள் மட்டுமே சபையின் கவனிப்பின் கீழ் அதை வாசிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மார்டின் லூதரும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் இதற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மனிதனும் திருமறையை வைத்திருக்கவும் வாசிக்கவும் வேண்டும் என்பது அவர்களுடைய போதனை. அத்தோடு ஆவியின் துணையோடு சாதாரண படிப்பறிவற்ற மனிதனும் திருமறையின் போதனைகளைப் புரிந்த கொள்ள முடியும் என்று அவர்கள் வாதிட்டனர். இது இன்று மீண்டும் வலியுறுத்திக் கூறப்படவேண்டிய பேருண்மை. படிப்பாளிகள், கற்றறிந்தவர்கள் என்று பெயர் பெற்றவர்களே இன்று திருமறையைப் புறக்கணிப்பதைப் பார்க்கிறோம். சில வேதாகமக் கல்லூரிகளையும், அதிலிருந்து வெளிவரும் இன்றைய மாணவர்களையும் பார்த்தாலே இது புரியும். வரலாறும் இதையே புலப்படுத்துகின்றது. இதற்காக ஆய்வாளர்களையும், புலமையையும், நாம் முற்றாகப் புறக்கணிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் திருமறைக்கு சமமாகவோ அல்லது அதற்கு மேலானதாகவோ வேறெதையுமே கருதக்கூடாதென்பதைத்தான் வலியுறுத்துகிறோம். ஒருவர் எவ்வளவு புலமை வாய்ந்தவராக இருந்தாலும் திருமறையின் நிகரற்ற அதிகாரத்தை விசுவாசிக்காவிட்டால் அவரது புலமையினால் எந்தவித நன்மையும் போதிக்கும் சத்தியங்களுக்கே மேலான மதிப்பளிக்க வேண்டும். அத்தோடு திருமறையை ஜெபத்தோடு ஆவியின் துணையோடு அன்றாடம் வாசிக்க வேண்டும்.
கீழே தரப்பட்டுள்ள படம் இன்றைய நிலைமையை விளக்குவதாக அமைகின்றது.
கிறிஸ்தம்
திருமறை மட்டும்
போலிப்போதனைகள்
திருமறை +
போப்
குரான்
திராவிட சமயம்
சம்பிரதாயங்கள்
மோர்மன் நூல்
வொட்ச் டவர் (யெகோவாவின் சாட்சிகள்)
தனிமனித வெளிப்படுத்தல்
(இன்னும் எத்தனையோ)