அன்புள்ள வாசகர்களே,
புது வருடம் பிறந்து மூன்று மாதங்கள் பறந்தோடி விட்டன, இப்பத்திரிகை பிறப்பதற்கு முன்பாக நாட்கள் இவ்வளவு வேகமாக நகர்ந்ததை நான் உணர்ந்ததில்லை. நகரும் நாட்களுடன் வேகமாகப் பொறுப்புகளும் அதிகரிக்கின்றன. கடந்த இதழுடன் பத்திரிகை ஆயிரம் பிரதிகளைத் தாண்டி நிற்கிறது. மேலும் பிரதிகள் கேட்டு எழுதுவோர் அநேகர். முடிந்த வரை எழுதுவோரின் தேவையை நிறைவு செய்ய நாம் முயற்சிக்கிறோம். தேவனுக்குப் பிரியமானால் மேலும் அச்சிட அவர் வகை செய்வார் என்பது எம் நம்பிக்கை. இத்தேவைகளுக்காகவும் கர்த்தரிடம் ஜெபத்தில் வாருங்கள். பத்திரிகையின் தேவைகளைப் பலவிதங்களில் தொடர்ந்து சந்திக்கும் அன்புள்ளங்களையும் ஜெபத்தில் நினைவு கூறுங்கள்.
நாங்கள் எழுதியனுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பீர்களா? என்று வாசகர்களில் சிலர் கேட்டிருக்கிறார்கள். இவ்விதழிலிருந்து வாசகர்கள் எழுதியனுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தீர்மானித்துள்ளோம். அவற்றில் தெரிவு செய்யப்பட்டவை ஏனையோரும் பயனடைய பத்திரிகையில் பிரசுரமாகும். உங்கள் கேள்விகளை சுருக்கமாகவும், விளக்கமாகவும் எழுதியனுப்பத் தவறாதீர்கள்.
நூல் அறிமுகத்தையும் தொடரத்தான் விருப்பம். ஆனால் தமிழில் அருமையான நூல்கள் குறைவாகவே உள்ளன. பத்திரிகையை வாசிக்கும் போதகர்கள், ஏன் வாசகர்கள்கூட நல்ல கிறிஸ்தவ தமிழ் நூல்களைச் சந்தித்தால் அவற்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தும்படி வேண்டுகிறோம். அவற்றை நாம் மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யலாம். அத்தோடு கிறிஸ்தவர்கள் மத்தியில் பல மோசமான நூல்களும் பிரபலமாகியுள்ளன. அவற்றை அடையாளம் கண்டு மற்றவர்கள் பாதிப்படையாதிருக்க உதவுவதும் அவசியம். அத்தகைய நூல்களையும் முடிந்தால் நீங்கள் அனுப்பி வைக்கலாம். இவ்விதமாக வாசகர்கள் எமக்கு அறியத்தந்த ஒரு நூலின் விளைவே திருமறையா? திராவிட சமயமா? என்ற சிறுநூலும் அதன் தாக்கமும்.
கூடுதலான பக்கங்களுடன் இவ்விதழ் வெளிவருகின்றது, வாசித்துப் பயனடையுங்கள்.
மீண்டும் இப்பகுதியில் சந்திக்கும்வரை,
அன்புடன்,
ஆசிரியர்.