வரலாற்று கிறிஸ்தவத்தின் பாதையில் . . .

அற்புதங்களையும், அடையாளங்களையும் நாடி ஓடும் கூட்டம் இன்று குறைந்தபாடில்லை. இயேசு கிறிஸ்துவும் கொடுக்கப்பட்டுள்ள அற்புதங்களையும், அடையாளங்களையும் விட வேறு எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லியும்கூட அவற்றைத் தொடர்ந்து அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று அவை எங்கு நடக்கின்றன என்று தேடியலையும் மனிதர்கள் கூட்டம் உலகெங்கும் தொடர்ந்து காணப்படுகின்றது. பங்கு பங்காகவும், வகைவகையாகவும் ஆதியில் பேசிய தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலம் இறுதியாகப்பேசித் தனது தெளிவானதும், முடிவானதுமான வார்த்தையை நமக்குத் தந்துள்ள போதும் அது போதாது, அதற்கு மேலும் வேண்டும், அவர் நம்மோடு நேரடியாகப் பேசினால்தான் உண்டு என்று முரட்டுப் பிடிவாதத்துடன் முரண்டு பிடிக்கும் கூட்டத்திற்கும் குறைவில்லை.

கிறிஸ்துவுக்குள் நமக்குள்ள விசுவாசம் மட்டும் போதாது, அபிஷேகம் அடைந்தால்தான் உண்டு என்று கிறிஸ்தவத்தைக் குழப்பிக்கொண்டிருக்கும் கூட்டத்தாருக்கும் குறைவில்லை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் என்று எப்போதும் மாற்றத்தில் இன்பம் காணும் சில மனிதர்களைப்போல் கிறிஸ்தவத்தின் பெயரில் விதவிதமான அனுபவங்களையும், இன்பங்களையும் நாடி அலைந்து இன்று பலரும் சிரிக்கும் நிலைக்கு கிறிஸ்தவத்தைக் கொண்டு வந்திருப்பவர்களும் ஆல்போல் தழைத்தே வருகிறார்கள். எனது சமீபத்திய மலேசிய விஜயத்தின்போது அங்குள்ள சில நல்ல போதகர்கள் என்னிடம் சில வியப்பான நடவடிக்கைகளைப் பற்றி விபரித்தனர். அதாவது சபையில் வாந்தி எடுக்கும் ஒரு புதிய முறையையும் சில பரவசக்குழுவைச் சார்ந்த சபைகள் கையாளுகின்றன என்று தெரிவித்தனர். இதைச் செய்பவர்கள் இதற்குக் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், தமது சரீர அழுக்குகளுடன் ஆராதனைக்கு வருவது சரியல்ல, ஆகவே அவ்வழுக்குகள் அகல வாந்தி எடுப்பதன் மூலம் சரீர, உளசுத்தத்துடன் கர்த்தரை ஆராதிக்கலாம் என்பதாகும். இத்தகைய முட்டாள்தனமான நடவடிக்கைகளால் அந்நியரும் பார்த்துச் சிரிக்கும் நிலைக்கு இவர்கள் கிறிஸ்தவத்தை இழுத்துச் செல்லப் பார்க்கின்றனர்.

இத்தனைக்கும் மத்தியில் வரலாறு கண்டுள்ள, நம் முன்னோர்கள் விசுவாசித்த, வேத அடிப்படையில் அமைந்த மெய்க்கிறிஸ்தவத்தைப் பிரதிபலிக்கும் திருச்சபைகளை அமைக்க வேண்டும். அத்திருச்சபைகளில் அங்கம் வகித்து, கர்த்தரை ஆராதித்து, அவரது ஊழியத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்று வெறும் வீறாப்புடன் அல்ல, இருதய சுத்தத்துடனும், தாழ்மையுடனும் பாடுபட்டு வரும் கிறிஸ்துவின் அன்புக்குப் பாத்திரமான நல்மனம் படைத்தவர்களும் பெருகி வருவது நமக்குப் பேரானந்தத்தை அளிக்கிறது. இந்த நூற்றாண்டிலே இவ்வாறு திருச்சபை சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்டு தாம் வாழ்ந்த காலங்களிலே வேதபூர்வமான சபைகளை அமைத்து கிறிஸ்தவத்தைத் தழைக்கச் செய்த சீர்திருத்தவாதிகள், பியூரிட்டன்களைப் போல உழைத்து சபைகள் அமைப்பவர்கள் தமிழர்கள் மத்தியில் ஆயிரக்கணக்கில் இல்லாவிட்டாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிருவர் தோன்றி, தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சீர்திருத்த தீபத்தை ஏற்றிவைத்து அதற்கு எண்ணையிட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது.

இதனை வாசிக்கும் அன்பர்கள், அப்படியானால் மற்ற சமயக்கிளைகளும், சபைகளும் மெய்க்கிறிஸ்தவத்தைப் பிரதிபலிக்கவில்லையா? என்று கேட்கலாம். நாம் இப்படிக் கூறிவிட்டதால் மற்ற சமயக்கிளைகளையும், சபைகளையும் வெறுமனே குறைகூறுவதாக எண்ணிவிடக்கூடாது. ஏனெனில் நமது நோக்கம் குறைகளை எடுத்துக் காட்டுவது மட்டுமல்ல, அத்தோடு வரலாற்று கிறிஸ்தவத்தைப் பின்பற்றி, நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு எழுத்தில் வடித்துத் தந்துள்ள விசுவாச அறிக்கையை சபையாக ஏற்று, சமய சமரசக் கோட்பாடு, பரவசக்குழுக்களின் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளரும் போதனைகள், உள்ளூர் திருச்சபை அமைப்பை உதாசீனம் செய்து சபைகளென்ற பெயரில் சபை நடத்த முயலும் பிலிமத்திஸம், திருச்சபைகளை கைப்பொம்மையாக தங்கள் ஊழியத்திற்கு பயன்படுத்த முனையும் கிறிஸ்தவ நிறுவனங்கள் ஆகியவற்றினை நிராகரித்து, நற்செய்தியை நாடெங்கும் எடுத்துரைத்து நற்சபைகளை நிறுவ முனையும் திருச்சபைகள் தோன்ற வேண்டும், வளர வேண்டும் என்பதும்தான்.

வரலாற்று கிறிஸ்தவம்

இத்தகைய சபைகள் எழுவதன் மூலமே தமிழ் மக்கள் மத்தியில் வேதபூர்வமானதும், வரலாற்று அடிப்படையிலும் அமைந்த கிறிஸ்தவத்தைக் காண முடியும் என்பது எனது தாழ்மையான எண்ணம். இங்கே வரலாற்றுக் கிறிஸ்தவம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று விளக்க வேண்டியது அவசியம். நான் என்ன கூற வருகிறேன் என்பதை அதன் மூலம் வாசகர்களால் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றிலே, அப்போஸ்தலர்கள் காலத்திற்கு பின் வேதத்தைப் பின்பற்றி வேத அடிப்படையில் சபைகள் அமைத்த இயக்கங்களாக சீர்திருத்தவாத பியூரிட்டன் இயக்கங்களே காணப்படுகின்றன. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளிலே எழுந்த இவ்வியக்கங்களின் முக்கிய தலைவர்களாக மார்டின் லூதர், ஜோன் கல்வின், ஜோன் நொக்ஸ் மற்றும் ஜோன் ஓவன், தொமஸ் குட்வின், தொமஸ் புரூக்ஸ், ஜோன் பனியன் ஆகியோர் காணப்படுகின்றனர். மறுபடியும் திருச்சபை ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடிமைத்தனத்திற்கு உட்பட்டுவிடக்கூடாது என்ற பெரு நோக்குடன் அவர்கள் வரைந்தளித்த விசுவாச அறிக்கைகளே வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கைகள். திருச்சபைகள் போலிப்போதனைகளை நாடி ஓடிவிடாதபடி, தாம் விசுவாசிப்பது என்ன என்பதை தெளிவாக அறிந்து, புரிந்து அதன்படித் தொடர்ந்து நடக்க இவ்விசுவாச அறிக்கைகள் துணைபுரியும் என்று நமது மூதாதையர்கள் நம்பினர். ஏனெனில் சாத்தானும் வேதம் ஓதும் என்ற முதுமொழிக்கிணங்க வேதத்தை விசுவாசிக்கிறோம் என்ற பெயரில் போலிப்போதனைகளும், இயக்கங்களும் எதிர் காலத்தில் எழும் என்பது நம்முன்னோர்கள் அறிந்திருந்த உண்மை. அது மட்டுமல்லாது திருச்சபைகள் தாம் நினைத்தபடி காலத்திற்கு ஏற்றாற்போல் தமது கோட்பாடுகளை மாற்றி அமைத்து கொள்வதையும், சுற்றி உலவும் போதனைகளை இரு கரம் நீட்டி வரவேற்பதையும் இவ்வறிக்கைகளை ஏற்று நடப்பதன் மூலம் சபைகள் தடை செய்ய முடியும் என்றும் விசுவாசித்தனர். இவ்வாறாக இவ்வறிக்கைகளை ஏற்று அதன்படி அமைந்து வளர்ந்த சபைகளையே நாம் வரலாற்றுக் கிறிஸ்தவ சபைகள் என்று அழைக்கிறோம். இதன்படியே ஸ்பர்ஜன் தன் காலத்தில் இவ்வறிக்கையை சபைக்கு அறிமுகப்படுத்தி தன் சபை தவறான போதனைகளால் பாதிப்புறாதிருக்க நடவடிக்கை எடுத்தார். பிலிமத்திஸத்தைப் பின்பற்றுபவர்களோ அல்லது பரவசக்குழுக்களோ இத்தகைய வரலாற்றுப் பின்னணியை ஒரு போதுமே கொண்டிருக்கவில்லை. இவ்வரலாற்றுப் பின்னணியையே அவர்கள் வேம்பாகக் கருதுகிறார்கள்.

அதேவேளை, இவ்வரலாற்று கிறிஸ்தவத்தின் அடிப்படையில் எழுந்த சமயக்கிளைகள் அனைத்தையும் இன்று நாம் வேதபூர்வமான சமயக்கிளைகளாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆரம்பத்தில் விசுவாச அறிக்கைகளைக் கொண்டு எழுந்த ஆங்கிலிக்கன், பிரெஸ்பிடீரியன், பாப்திஸ்து சமயக்கிளைகள் உலகெங்கும் இன்று அவற்றை நிராகரித்துவிட்டு உலகப்பிரகாரமாக நடப்பது வாசகர்கள் அறிந்த உண்மை. இவைகள் இன்று தொடர்ந்து வரலாற்றுக் கிறிஸ்தவ சபைகளாக நடைமுறையில் வேதத்தைப் பின்பற்றாமல் ரோமன் கத்தோலிக்க மதத்தோடு உறவாடுவதையும், பரவசக்குழுப் போதனைகள் தம் சபைகளில் ஊடுருவத் துணை நிற்பதையும், பெண்களைப் போதகர்களாக ஏற்று பணிபுரிய அனுமதிப்பதையும், வேதம் தவறுகளற்றது என்ற கோட்பாட்டை நிராகரிப்பதையும், இச்சமயக்கிளைகள் அனைத்திலும் பொதுவாகக் காண முடிகின்றது. அத்தோடு இவை இரட்சிப்பு பற்றிய வேத போதனைகளிலும் மனித சக்திக்கு முதன்மை தரும் ஆர்மீனியனிஸத்தையே கடைப்பிடிக்கின்றன. இவைகளில் மோசமானவை வேதத்தின் அடிப்படைப் போதனைகளான கிறிஸ்துவின் பிறப்பு, சிலுவை மரணம், உயிர்த்தெழல் ஆகியவற்றையும் நிராகரிக்கின்றன. இச்சமயக்கிளைகளின் மத்தியில் இன்று ஓரிரு சபைகளும், போதகர்களும் இவற்றை எதிர்த்துப் போராடி வந்தாலும் அவர்களது முயற்சி விழலுக்கிறைத்த நீர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. இதனாலேயே இன்று இச்சமயக்கிளைகளைத் துறந்து அவற்றிற்கு வெளியே வேதபூர்வமான திருச்சபைகள் அமைப்பதில் உலகெங்கும் பலர் ஈடுபட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. சத்தியத்தை நிராகரித்துவிட்ட சமயக்கிளைகளைத் தொடர்ந்து கிறிஸ்தவ சபைகளாகக் கருதுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலாகும். சிலர் கடவுள் இவற்றை மறுபடியும் ஒரு எழுப்புதலின் மூலம் ஆவிக்குரிய சமயக்கிளைகளாக மாற்றுவார் என்ற வீண் நம்பிக்கையில் காலந்தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

ஆகவே வரலாற்று ரீதியிலான கிறிஸ்தவ சபைகள் இன்று எழ வேண்டியது தவிர்க்க முடியாத செயலாக இருக்கின்றது. சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும், அனபாப்திஸ்து என்று அழைக்கப்பட்ட பாப்திஸ்து முன்னோர்களும் எவ்வாறு ரோமன் கத்தோலிக்க மார்க்கத்தையும் செத்த சமயக்கிளைகளையும் துறந்து சபைகள் அமைக்க முன்வந்தனரோ அதேபோல் இன்று வேதத்திற்கு மதிப்புக் கொடுக்கும் போதகர்களும், கிறிஸ்தவர்களும் வரலாற்று கிறிஸ்தவத்தின் அடிப்படையில் அமைந்த சபைகள் நிறுவவும், அவ்வாறமைந்த சபைகளோடு ஐக்கியத்தில் வளரவும் முன்வர வேண்டும். சத்தியத்தில் உறுதியும். வைராக்கியமும் கொண்டு இவ்வாறான சபைகள் அமைக்க முற்படும்போது நாம் சில அவசியமான உண்மைகளை மனதில் வைத்திருத்தல் அவசியம்.

1. திருச்சபை வரலாற்றில் நமக்குத் தெளிவிருப்பதோடு, அதன் வழிவரும் சபைகளை அமைக்கவும் நாம் முன்வர வேண்டும்.

பரவசக் குழுக்களோ அல்லது காளான்கள் போல் எங்கெங்கும் தோன்றிக் காணப்படும் இன்றைய நவீன சபைகளோ தம்மை வரலாற்றோடு பிணைத்துக் கொள்வதை மூர்க்கமாக எதிர்க்கின்றன. அதற்குக் காரணம், வரலாறு என்பது பழைய பஞ்சாங்கம், ஆகவே அதனுடன் தொடர்பில்லாது இருப்பதே காலத்திற்கேற்ற வேதபூர்வமான சபைகளாக இருக்க வழி என்று இக்கூட்டத்தார் எண்ணுகின்றனர். வேத அடிப்படையில் அமைந்த சபைகள் என்ற பெயரில் இவை வரலாற்றிற்கும் வேதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற முறையில் நடந்து கொள்கின்றன. ஆனால் உண்மையில் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி வரலாறு கண்டுள்ள வேதபூர்வமான திருச்சபைகளுடன் தம்மை இனங்காண முடியாத சபைகள் வேதபூர்வமான சபைகளாக இருக்க முடியாது. ஏனெனில் நமது தேவன் வரலாற்றின் தேவனாகவும், அவரது சபை வரலாற்றில் எழுந்த சபையாகவுமே காணப்படுகின்றது. ஆகவே, வரலாற்றை நிராகரிப்பது வேதத்தை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும்.

சீர்திருத்தவாதத்துடனும், பியூரிட்டனிஸத்துடனும் தொடர்பில்லாது, அவை பற்றிய அறிவற்று, அக்கோட்பாடுகளை நிராகரித்து அமையும் எதுவும் சத்தியத்தில் உறுதியாக தொடர்ந்திருப்பதென்பது மணலில் கயிறு திரிக்கும் காரியத்திற்கு ஒப்பானதாகும். ஆவியானவரின் பெயரில் பரவசக்குழுக்கள் இன்று இவற்றை நிராகரித்து வருவதால் வேதமும் அறியாது, கர்த்தரின் வழிகளையும் அறியாது அழிவை நாடிப் போய்க் கொண்டிருக்கின்றன. அத்தோடு திருச்சபை வரலாற்றை சரிவர முறையாக அறிந்திருப்பதும் அவசியம். திருச்சபை வரலாற்றையும் வேத சத்தியங்களையும் அதாவது இறையியலையும் தொடர்புபடுத்திப் படித்தல் அவசியம். அப்போதுதான் வரலாற்றில் வேதத்திற்கு எதிராகவிருந்த மனிதர்களையும், இயக்கங்களையும் சரியாக இனங்கண்டு கொள்ள முடியும். இராஸ்மஸ், பெலேஜியன், ஆர்மீனியஸ், சார்ள்ஸ் பினி, எட்வர்ட் இர்வின் போன்ற தவறான வழிகளைப் பின்பற்றிய மனிதர்களையும், அவரது போதனைகளையும், தவறான வழியில் சென்ற இயக்கங்களையும் இம்முறையிலேயே அடையாளங்காண முடியும். அதேவேளை சத்தியத்தில் உறுதியாகவிருந்த சீர்திருத்தவாத சபைகளையும் அதன் தலைவர்களையும் பற்றி அறிந்து கொள்ள முடியும். இங்கேயே வரலாற்று இறையியல் நமக்குக் கைகொடுக்கின்றது. வரலாற்று இறையியல் நமக்கு வரலாற்றில் எழுந்த தவறான போதனைகள் பற்றிய அறிவினைத் தருகின்றது. இவை பற்றிய அறிவு நமக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இன்று நாம் சந்திக்கும் பெரும்பாலான போலிப்போதனைகள் எல்லாம் வரலாறு சந்தித்துள்ள பழம் கள்ளே தவிர வேறில்லை. இவற்றை அறிந்திருப்பதால் நாம் இன்று எதிர்நோக்கும் ஆபத்துகளிலிருந்து தப்ப முடியும். ஆகவேதான் இறையியல் வல்லுனரான லூயிஸ் பேர்க்கோவ், “வரலாற்றின் அடிப்படையில் படிக்காத எந்த வேத சத்தியமும் அரைகுறை இறையியலுக்கே வழிகோலும்” என்று கூறியுள்ளார். பரிசுத்த ஆவியானவர் வரலாற்றில் தோன்றிய திருச்சபைகள், சான்றோர்கள் மூலம் நமக்கு வழிகாட்டுவதை நாம் மறக்கக்கூடாது என்றும், நமது முன்னோர்களின் எச்சரிக்கைகளையும், அவர்கள் காட்டிய வழிகளையும் நாம் புறக்கணித்தால் பழங்கால போலிப்போதனைகள் அனைத்தும் மறுரூபமெடுத்து புதிய பெயர்களில் நம்மை வாட்டிவதைக்கும் என்றும் அவர் போதித்தார்.

2. ஆரம்பத்திலேயே நம்மை யார் என்று வெளிப்படையாக எடுத்துக் காட்டும் விசுவாச அறிக்கையின் அடிப்படையில் நமது சபைகள் அமைய வேண்டும்.

இன்று எல்லோருமே வேதத்தை நம்புகிறோம் என்றுதான் கூறுகிறார்கள். திருச்சபை சந்தித்துள்ள போலிப்போதனைகள் அனைத்துமே இவ்வாறு அறிவித்துக் கொண்டே சபைக்குள் நுழைந்துள்ளன. வேதத்தை நம்புகிறோம் என்று கூறும் பரவசக்குழுக்கள். புதிய-சுவிசேஷக் கோட்பாட்டாளர், சமயசமரசக்கூட்டத்தார் ஆகியோரிலிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவது எவை? நம்மை யார் என்று தெளிவாக எடுத்து விளக்கக்கூடியவை விசுவாச அறிக்கைகளே. நம்மைப் பிரித்துக் காட்டக்கூடிய தெளிவான போதனைகள் எதுவுமே இல்லாவிட்டால் சபை மக்கள் குழப்பத்திற்குள்ளாவதையோ அல்லது போலியானவர்கள் நமது சபைகளுக்குள் நுழைந்து விடுவதையோ நம்மால் தடுக்க முடியாது. இவ்வாறான தெளிவான கோட்பாடுகளைப் பின்பற்றத் தவறினதாலேயே இன்று சமயக்குழுக்களில் பல, வேதத்தை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளன.

விசுவாச அறிக்கைகளை எதிர்த்து தாம் விசுவாசிப்பது என்ன என்று தெளிவாக எடுத்துக்கூறத் தயங்குபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க முடியாது. இதற்காக விசுவாச அறிக்கைகளைக் கொண்டிராத அனைவருமே நேர்மையற்றவர்கள் என்று நான் கூற வரவில்லை. பலர் அவை இருப்பதையே அறியாதிருப்பதாலும், வரலாற்றுக் கிறிஸ்தவ அறிமுகம் இல்லாததாலும் விசுவாச அறிக்கைகளைக் கொண்டிராதிருக்கின்றனர். ஆனால் இவை பற்றிய அறிவிருந்தும், சுயநலத்தின் காரணமாக சத்தியத்தை வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குபவர்களை வேதம் நேர்மையுள்ளவர்களாகக் கருதவில்லை. இத்தகையோர் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து தமது சொந்த நோக்கங்களுக்காக ஊழியத்தைச் செய்பவர்கள்.

ஆகவே, தெளிவாக வெளிப்படையாக தாம் எதை விசுவாசிக்கிறோம் என்று எடுத்துக்கூறும் சபைகளே இன்று நமக்குத் தேவை. சுவிசேஷக்கோட்பாட்டாளர் என்று கூறிக்கொண்டு சந்தையில் விற்கும் எல்லாச் சரக்கையும் வாங்கிக் கட்டிக் கொள்பவர்கள் சத்தியத்தின் எதிரிகள். மெய்யான, சீர்திருத்த சுவிசேஷக்கோட்பாட்டாளன் தான் யார் என்பதை நெஞ்சை நிமிர்த்தி எல்லோருக்கும் தெரிய வைப்பான். இப்படிச் செய்தால் மற்றவர்கள் என்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள், சபைக்கு ஆள் வராது என்றெல்லாம் அவன் கவலைப்படமாட்டான். அவன் சத்தியத்திற்காக உயிரையும் கொடுக்கத் தயாராகி கர்த்தரைப் பின்பற்றுவான்.

இத்தகைய விசுவாச அறிக்கைகள் நாம் விசுவாசிக்கும் அடிப்படைப் போதனைகள் மட்டுமல்லாது, நமது சபை ஆராதனை எவ்வாறமைய வேண்டும், சபை அமைப்பு எவ்வாறிருக்க வேண்டும் என்றெல்லாம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. இதனால் முழுச் சபையும் ஒரே கோட்பாட்டைப் பின்பற்றி நடக்க முடியும். தமது மனம் போனபடி நடந்து எதை எதையோ பின்பற்றுபவர்களுக்கு இத்தகைய சபைகளில் இடமிருக்க முடியாது. இதனால் சபைக்கே நன்மை. ஏனெனில் தெளிவான கோட்பாடுகளைப் பின்பற்றி நடக்க விரும்பாதவர்கள் நிலையான கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. நிலை தடுமாறுபவர்கள் எப்போதுமே கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருந்ததில்லை. இத்தகைய சபைகளுக்கு பரவசக்குழுக்களாலும், தான்தோன்றித்தனமாக இயங்கும் கிறிஸ்தவ நிறுவனங்களாலும் எந்த ஆபத்தும் ஏற்பட முடியாது. நிலை தடுமாறுபவர்கள் இத்தகைய சபைத் தலைவர்களாக என்றுமே வர முடியாது. ஏனெனில், சபை தான் வெளிப்படையாக அறிக்கையிடும் கோட்பாடுகளுக்கிணங்க நடக்கும்போது தவறான மனிதர்கள் அச்சபைத் தலைவர்களாக வருவது கடினம்.

இவை இரண்டுமே ஆரம்பப் படிகள். இப்படிகளில் கால் வைத்து சபை அமைக்க முற்படாதவர்கள் சபை சீர்திருத்தத்தை நினைத்தும் பார்க்க முடியாது. இன்று சீர்திருத்தவாதிகளக தம்மை அடையாளங்காட்டிக் கொள்ள முனையும் சிலர் சீர்திருத்தப் பாதையில் ஆழமாக இறங்கப் பயப்படுகின்றனர். “இரட்சிப்பு கர்த்தரிடத்தில் இருந்து வருகின்றது; அதை அடைய மனிதன் சுயமாக எதையும் செய்ய முடியாது” என்று நம்புவது மட்டுமே சீர்திருத்தக் கோட்பாடு என்ற தவறான எண்ணத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுடைய சபைகளில் இதைப் போதிப்பதைவிட வேறு எதையும் செய்யத் தயங்குகின்றனர். ஆனால், லூதரோ, கல்வினோ அல்லது ஸ்பர்ஜனோ இதை மட்டுமே செய்ததாக வரலாறு போதிக்கவில்லை. அவர்கள் முழுச்சபை சீர்திருத்தத்தையும் நாடினார்கள். சபை சீர்திருத்தம் அவர்களுடைய மூச்சாக இருந்தது. அன்றாடம் அதை நாடுவதை வாழ்க்கையின் முக்கிய இலட்சியமாகக் கொண்டு உழைத்துள்ளனர். சீர்திருத்தக் கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் இன்று அதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

3. இறுதியாக சீர்திருத்த சபை அமைப்பதில் நாட்டமுள்ளவர்கள் மனம் தளராத வைராக்கியத்தையும், தாழ்மையையும், பொறுமையையும், நேர்மையையும் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

வெறுமனே சாப்பாட்டிற்காகவும், தொழிலுக்காகவும் போதகர்களாகவும், ஊழியக்காரர்களாகவும் இருப்பவர்களுக்கும் சபை சீர்திருத்தத்திற்கும் தொடர்பில்லை. இத்தகைய சபைகளை அமைக்க முற்படுவோர் மக்கள் கூட்டத்தையும், மற்றவர்களின் பாராட்டையும் எதிர்பார்த்து நிற்க முடியாது. பலரின் தூற்றுதலுக்கும் பலவேளைகளில் தனிமையின் கொடுமையையும் சந்திக்க நேரிடும். கர்த்தராகிய கிறிஸ்து அனுபவித்த பல வாதைகளை அனுபவிக்க நேரிடும். சத்தியத்தை வெறுக்கும் இன்றைய சமுதாயத்தில் சத்தியத்தின் அடிப்படையில் சபை அமைப்பதென்பது இனிப்பு மிட்டாய் சாப்பிடுவதுபோல் சுவையாக இருக்காது. அதானால்தான் பாதியில் விட்டுவிட்டு ஓடிப்போக முயலாத மன வைராக்கியமும், சொந்தக் காரியங்களுக்காக ஊழியத்தைப் பயன்படுத்த முனையாத நேர்மையும் அவசியம். ஒருவருடத்தில் பத்து சபைகள் எழுப்ப வேண்டும், ஆயிரக்கணக்கானவர்கள் மத்தியில் ஊழியம் செய்ய வேண்டும் என்றெல்லாம் கனாக்காணும் அதிகப்பிரசங்கிகளுக்கு, வியர்வை சிந்தி உழைத்துப் பாடுபடவேண்டிய இவ்வூழியம் சரிப்படாது. அங்கும் இங்குமாக இன்று எங்கும் தோன்றிக் கொண்டிருக்கும், சீர்திருத்த நாட்டமுள்ள நல்ல நண்பர்கள் கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்ற நம்பிக்கையோடு சத்தியத்தின் அடிப்படையில் வரலாறு பூர்வமான சபை அமைப்பில் ஊக்கமும் உறுதியும் கொண்டுழைப்பதையே இந்தப் பத்திரிகை வரவேற்கிறது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s