வியாக்கியானப் பிரசங்கத்தைப்பற்றி கடந்த இதழோடு எழுதி முடித்துவிடுவதே எனது நோக்கமாக இருந்தது. ஆனால் பல போதகர்களோடு அவர்களுடைய பிரசங்க முறைகள் பற்றி நான் சமீபத்தில் பேசி அறிந்து கொண்ட அனுபவங்கள் இதைப்பற்றி மேலும் ஒரு முறை எழுத வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை வியாக்கியானப் பிரசங்கம் என்றால் என்ன? அதன் வரலாறு, இன்றைய சூழ்நிலையில் இப்பிரசங்க முறையின் அவசியம், இப்பிரசங்க முறையைப் பயன்படுத்தத் தேவையான சாதனங்கள் ஆகியவை குறித்து விளக்கமாகப் பார்த்து வந்துள்ளோம். இவ்விதழில் நான் அனுபவரீதியாக அறிந்து கொண்ட, போதகர்கள், பிரசங்கிகள் மத்தியில் இன்று நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளை மனதில் கொண்டு சில முக்கியமான, எல்லாவகைப் பிரசங்கத்திற்கும் தேவையான, அதேவேளை வியாக்கியானப் பிரசங்கத்திற்கு அதிமுக்கியமாகத் தேவையான சில பொதுவான காரியங்களை ஆலோசனையாக பிரசங்க ஊழியத்திலிருப்பவர்களுக்குப் பயன்படும்படியாகக் கூற விரும்புகிறேன். கடந்த பதினெட்டு வருடங்களாக இவ்வூழியத்தில் நான் பெற்றுக் கொண்ட, தொடர்ந்து பெற்று வருகின்ற அனுபவங்களும் இங்கே இதற்குத் துணை புரியும் என்று நம்புகிறேன்.
1. போதகர்கள் எப்பொழுதுமே முதலில் விசுவாசமுள்ள நல்ல மாணவர்களாக இருக்க வேண்டும் – வேதத்தை பிரசங்கம் செய்வதற்காக மட்டும் படிக்கும் போதகர்கள் பெரும் தீமை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய தவறான முறையினாலேயே இன்று பல போதகர்களால் வேதத்தை சரியாகப் போதிக்க முடிவதில்லை. வேதத்தை பிரசங்கம் செய்வதற்காக மட்டும் அணுகக்கூடாது. வேதத்தைத் திறக்கும்போது அதில் கர்த்தர் சொல்லியிருப்பதை நல்லவிதமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டுமே நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். பிரசங்கப் பொருளுக்காக வேதத்தைப் படிக்கும்போது கூட பிரசங்கம் செய்வதற்காகப் படிக்கிறோம் என்ற எண்ணமே மனதில் வராமல் இருப்பது நல்லது. அவ்வாறு படித்து சரியாக வேதப்பகுதியில் தெளிவு பெற்ற பின்பு தான் பிரசங்கம் என்ற எண்ணமே தோன்ற வேண்டும். ஒரு நல்ல மாணவனாக தெளிவாக கர்த்தரின் வார்த்தையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற பயபக்தியோடு படிக்க வேண்டும். ஹேர்மன் விட்சியஸ் என்ற ஒல்லாந்து நாட்டு வேதவல்லுனர், “முதலில் நன்றாகக் கற்றுக் கொண்ட ஒருவராலேயே பின்பு நன்றாகப் போதிக்க முடியும்” என்று கூறியுள்ளார். ஒரு நல்ல மாணவனால் மட்டுமே வேதத்தில் தெளிவான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு நல்ல மாணவனால் மட்டுமே ஆணவமற்ற, விசுவாசமுள்ள போதகனாக இருக்க முடியும்.
2. முழு வேதத்தின் உள்ளடக்கம் பற்றிய பொதுவான அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் – வேதத்தை போதகர்கள் அன்றாடம் படிக்க வேண்டும். அதனை முழுமையாகப் படிக்க வேண்டும். வேதத்தின் ஒவ்வொரு நூலும் என்ன போதிக்கின்றது என்பதைத் தெளிவாக அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நூலுக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன என்பதில் தெளிவிருக்க வேண்டும். ஒவ்வொரு நூலும் முழு வேதத்தில் வகிக்கும் பங்கு என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும். இவற்றில் பூரண அறிவு இருந்தால் மட்டுமே வேதத்தின் எப்பகுதியையும் முறையாகப்படித்து முழு வேதத்தின் அடிப்படையில் அதில் கூறப்பட்டிருக்கும் செய்தி என்ன என்று புரிந்து கொள்ள முடியும். இதைச் செய்ய போதகர்கள், அவர்கள் கிராமத்தில் ஊழியம் செய்பவர்களாக இருந்தாலும் சரி, நகர்புறத்தில் ஊழியம் செய்பவர்களாக இருந்தாலும் சரி அதிக நேரத்தை வேதம் படிப்பதில் செலவிட வேண்டும். வேதத்தைப் படிப்பதில் நேரம் செலுத்தாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் வியாக்கியானப் பிரசங்கம் செய்வதை மறந்துவிட வேண்டியதுதான். சமீபத்தில் எட்வர்ட் டொனலி என்ற அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு சீர்திருத்தவாத போதகர் இதுபற்றிக் கூறும்போது, “சிலர் என்னிடம், படிப்பறையில் போதக ஊழியத்திற்கு தயார் செய்வது மிகக் கடினமான காரியமல்லவா? என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நானளிக்கும் பதில், வாரம் முழுவதும் படிப்பறையில் இருந்து விட்டு இரண்டு மணி நேரம் மட்டும் ஞாயிறு தினங்களில் ஆலயத்திற்கு செல்வதையே நான் மேலானதாகக் கருதுகிறேன். இதுவே எனக்கு ஆனந்தத்தைத் தருவதாகும். படிப்பறையில் நடக்கும் கடுமையான வேலைக்கான பரீட்சையே ஞாயிறு தினத்தில் ஆலயத்தில் நடக்கின்றது” என்கிறார். போதகர் டொனலி இதன் மூலம் வேதத்தில் கவனம் செலுத்திப் படிப்பதன் அவசியத்தைத் தெளிவாக வலியுறுத்துகிறார்.
3. வேதப்பகுதிகளை அதில் உள்ளபடியே படிக்க வேண்டும் – இன்று பொதுவாகவே நாம் அநேக போதகர்களிடம் வேதம் படிப்பதற்கே உதவாத ஒரு போக்கினைப் பார்க்க முடிகின்றது. எவ்வேதப்பகுதியை எடுத்துக் கொண்டாலும் அது தனது சாதாரண மொழி நடையில் எதைக் கூறுகிறதோ அதை ஏற்றுக் கொள்ளாமல் அதற்குள் ஏதோ ஒரு மறைபொருள் இருக்கத்தான் வேண்டும்; இது நமது கண்களுக்குத்தான் சதாரணமாகத் தென்படுகிறதே ஒழிய கர்த்தர் இதன் மூலம் வேறெதையோ கூறுகிறார் என்ற எண்ணத்தில் அதற்கு விளக்கம் தேடி அலையும் போக்கு பெரும்பாலும் அநேகரிடம் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் பலருக்கு வேதத்தின் தன்மை (The nature of the Bible) புரியாததுதான். வேதத்தை ஜாலவித்தை புரியும் ஒரு மந்திரக் கோலாக பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் வேதத்தை அவ்வாறு கொடுக்கவில்லை. நமது மொழியில், நாம் புரிந்து கொள்ளும் விதத்திலேயே அதைத் தந்துள்ளார். ஆகவே, வேதத்தை நாம் மற்ற நூல்களைப் படிக்கும் போது எப்படிப் படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறோமோ அதேவிதத்தில் படிக்க வேண்டும். இதில் பயிற்சி பெறுவதற்கு “உள்ளதை உள்ளபடியே படிக்க வேண்டும்” என்ற வாசகத்தை நமது படிப்பறையில் கண்ணில் தெரியும்படி எழுதி வைத்தாலும் கூடத்தப்பில்லை. வேதம் புரியாதவர்கள்தான் கேட்போரைக் கவர புதிது புதிதாக எதையாவது சொல்ல வேண்டும் என்று வேதத்தைத் திரித்துப் போதிக்கிறார்கள். வேதம் தெரிந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகவே, வேதத்தில் தெளிவு ஏற்பட வேதம் கொடுக்கப்பட்டுள்ளபடி அதைப் படிக்க வேண்டும்.
இதனை எழுத்துப்படியான விளக்கவிதி (Literal Interpretation) என்றும் கூறுவார்கள். வேதத்தை எழுத்துப்படி விளக்க வேண்டும் என்ற விதியைத் தவறாகப் பயன்படுத்துபவர்களும் உண்டு. டிஸ்பென்சேஷனலிஸக் (Dispensationalism) கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் இவ்விதியைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். அதாவது வேதத்தில் காணப்படும் மொழிநடை, வரலாறு என்பவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காது அனைத்தையும் எழுத்துப்படி, Literal ஆக விளக்க வேண்டும் என்பது அவர்களுடைய வாதம். இங்கேயே அவர்கள் பெரும் தவறு செய்கிறார்கள். வெளிப்படுத்தல் ஆகமத்தில் சாத்தான் சங்கிலியால் பிணைக்கப்படுவான் என்று எழுதியிருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் இங்கே அடையாள மொழி நடை (Symbolical language) பயன்படுத்தப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்ளல் அவசியம். இல்லாவிட்டால் கர்த்தர் சாத்தானை உண்மையிலேயே சங்கிலியால் பிணைக்கத்தான் போகிறார் என்று பொருள் கொள்ள நேரிடும். ஆனால், உண்மையில் இங்கு அடையாள மொழியின் மூலம் போதிக்கப்படுவதென்னவெனில் கர்த்தர் சாத்தானின் அதிகாரங்களுக்கெல்லாம் முடிவுகட்டி அவனது ஆட்சி, அட்டகாசங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்போகிறார் என்பதுதான். அதேபோல், ஒரு உவமையை நாம் உவமையாகத்தான் எடுத்துக் கொண்டு விளக்க வேண்டுமே தவிர அதனை வேறு விதமாக விளக்க முனையக்கூடாது. உண்மையில் எழுத்துப்படியான விளக்க விதி என்றால், வரலாற்றுச் சம்பவங்களை வரலாற்றுச் சம்பவங்களாகவும், கட்டளைகளைக் கட்டளைகளாகவும், உவமைகளை உவமைகளாகவும் அவை எவ்வாறு தரப்பட்டுள்ளதோ அதேவிதமாக கவனித்துப் படிக்க வேண்டும் என்றுதான் பொருள். இன்று போதகர்கள் உறுதியுடன் செய்ய வேண்டிய முதல் கடமையாக இது அமைகின்றது.
4. வார்த்தைகளின் பொருளறிந்து படித்தல் அவசியம் – வேதப்பகுதிகளைத் தியானித்துப் படிக்கும்போது அவற்றின் வார்த்தைப் பிரயோகங்களையும், வசனங்களில் காணப்படும் வார்த்தைகளுக்கிடையில் உள்ள தொடர்புகளையும் கவனித்துப் படிக்க வேண்டும். வார்த்தைகளையும், வார்த்தைகளைத் தொடர்புபடுத்தும் இடைச்சொற்களையும் ஆவியானவர் தெரிவு செய்து பயன்படுத்தியுள்ளார். ஆகவே, அவற்றை நிதானித்துப் படித்துப் புரிந்து கொள்ளுதல் அவசியம். தேவனுடைய வெளிப்படுத்தலை சரிவரப் புரிந்து கொள்ள வேண்டுமானால் இவ்வாறு அவசரப்படாமல் வேதத்தை அக்கறையோடு படிப்பது அவசியம். இவற்றில் கவனம் செலுத்தாவிட்டால் கர்த்தர் கூறும் செய்தியை நாம் புரிந்து கொள்ள முடியாமல் போய்விடும். உதாரணத்திற்கு யோவான் 4:4லும் லூக்கா 19:5 லும் இயேசு கிறிஸ்து சமாரியப் பெண்ணையும், சகேயுவையும் சந்திப்பதற்காக அவ்வழியில் போக வேண்டியிருந்ததாக வாசிக்கிறோம். மூல மொழியிலே இவ்விரு பகுதிகளிலும் கிரேக்க பாஷையில் dei என்ற சிறு இடைச் சொல் இதைக்குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை இலக்கணத்தின்படி partical of necessity என்று கூறுவார்கள். இவ்வார்த்தை சிறு இடைச்சொல்லாக இருந்தாலும் கிறிஸ்து அங்கே தற்செயலாகப் போகவில்லை, அவர் அங்கே போவதற்கு தெய்வீக வழிநடத்தலே காரணம் என்பதை இச்சொல் எடுத்துரைக்கிறது. தமிழ் வேதத்தில் யோவான் 4:4 இல், “இயேசு சமாரிய நாட்டின் வழியில் போகவேண்டியிருந்தபடியால்” என்று இச்சொல் சரியாகவே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே “போகவேண்டியிருந்தது” என்ற பதத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. போதிப்பவர்கள் இதைக்கவனித்துப் படிக்காவிட்டால் அப்பகுதியின் முழு அர்த்தத்தையும் இழந்துவிட நேரிடும்.
வியாக்கியானப் பிரசங்கம் செய்வதற்கு இவ்விதமாக வேதத்தின் வார்த்தைப் பொருளறிந்து படிப்பது மிக மிக அவசியம். கர்த்தர் வேதத்தை ஆவியின் மூலமாக அருளியபோது தனது போதனைகளை மட்டும் கொடுக்காமல், அப்போதனைகளை வெளிப்படுத்தத் தகுந்த மொழிநடை, வார்த்தைகள் ஆகியவற்றையும் கவனத்தோடு தெரிவு செய்து அருளினார். ஆகவே, வேதத்தின் வார்த்தைப் பிரயோகங்கள், வார்த்தைகள் ஆகியவற்றின் பொருள் அறிந்து போதிக்க வேண்டும். இவ்வாறு போதிப்பதன் மூலம் கர்த்தரின் வெளிப்படுத்தலை முழுமையாகப் புரிந்து கொண்டு போதிக்கலாம். இதனால்தான் வியாக்கியானப் பிரசங்கமே வேதப்பிரசங்க முறைகளில் தலையானது என்று கூறுகிறோம்.
5. தமிழறிவும், இலக்கணத்தேர்ச்சியும் அவசியம் – தமிழில் வேதத்தைப் போதிப்பவர்கள் அம்மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது நல்லது. இவ்வாறு நான் கூறுவது சிலருக்கு வியப்பைத் தரும். ஆனால் இதில் நாம் வியப்படைவதற்கு ஒன்றுமேயில்லை. வேதம் எபிரேய, கிரேக்க மொழிகளிலேயே எழுதப்பட்டுள்ளது. அம்மொழிகளுக்கு இலக்கணம் உண்டு. இலக்கியத்தரம் உண்டு. இவற்றை வேதம் முழுவதும் பார்க்கலாம். உதாரணமாக பவுல் தனது நிருபங்களில் தன்னுடைய மொழி வன்மையையும், புலமையையும் காட்டுவதைப் பார்க்கலாம். தான் கூற வரும் விஷயத்தைத் தெளிவாக்குவதற்காக கிரேக்க மொழிப் புலமையைப் பவுல் பயன்படுத்தியதை ஆவியானவரே அனுமதித்துள்ளார். புதிய ஏற்பாட்டின் அதிகமான பகுதிகளை எழுத கர்த்தர் பவுலையும், லூக்காவையுமே பயன்படுத்தியுள்ளார் (லூக்கா – லூக்கா சுவிசேஷம், அப்போஸ்தலர் நடபடிகள். பவுல் – புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான நிருபங்கள்). இவர்கள் இருவருமே அதிகமாகப் படித்தவர்களாயிருந்ததுடன், மொழிவன்மையுடையவர்களாக இருந்ததையும் கவனிக்க வேண்டும். கர்த்தர் வேதத்தை ஏனோதானோவென்று எழுதி முடிக்கவில்லை. கல்வியிலும் ஞானத்திலும் தேர்ந்தவர்களைக் கொண்டே அவற்றை எழுத வைத்துள்ளார்.
வேதத்தில் நமக்கு நல்லறிவு தேவையானால், அதை நல்லவிதமாகப் போதிக்க வேண்டுமானால் நமக்கு தமிழறிவு அவசியம். தமிழ் இலக்கண அறிவும் அவசியம். சிலர் வேதத்தை படிக்காமல், ஆவியானவர் வல்லமையாக திடீரென செய்திகளை எப்போதும் வாரி வழங்குவார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு போதகர் பல்கலைக் கழகத்திற்குப் போகாதவராக இருந்தாலும், வேதத்தைக் கவனத்தோடு, கடும் முயற்சியெடுத்துப் படித்துப் போதித்தால் நிச்சயம் ஆவியானவரின் ஆசீர்வாதம் அவருக்கு உண்டு. ஆனால் ஒருவர் படித்தவராக இருந்தாலும், வேதத்தை முறையாகப் படிக்காமல் போதித்தால் கர்த்தர் நிச்சயம் அவரையோ, அவர் தரும் செய்தியையோ ஆசீர்வதிப்பார் என்று ஒருபோதுமே எதிர்பார்க்க முடியாது. ஆகவே, வேதத்தைப் படிப்பதற்குத் தேவையான அனைத்திலும் நமக்கு பாண்டித்தியம் ஓரளவு தேவை. தமிழ்ப் போதகர்களுக்கு தமிழறிவும், இலக்கண அறிவும் ஏன் தேவை என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. கிரேக்க, எபிரேய மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள வேதத்தை இலக்கணச் சுத்தமாகத் தமிழில் போதிக்க வேண்டிய பெருங்கடமை போதகர்களுக்கு உண்டு. வேதத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு போதித்தால், அது கர்த்தருடைய வார்த்தையைக் களங்கப்படுத்தும் செயலாகும். உதாரணத்திற்கு, 1 கொரிந்தியர் 14 வது அதிகாரத்தில் 26 ஆம் வசனத்தை எடுத்துக் கொண்டால், அதை மேலெழுந்த வாரியாக வாசிக்கும்போது பவுல் அவ்வசனத்தில் கூறப்பட்ட காரியங்களை சபையில் செய்யும்படிக் கொரிந்தியர்களுக்குக் கூறுவதுபோல் தென்படும். ஆனால், அவ்வசனம் காணப்படும் சந்தர்ப்பப் பொருத்தமும், பவுலின் மொழி நடையும் வேறொரு உண்மையைப் போதிக்கின்றன. இங்கே பவுல் இக்காரியங்களைக் கொரிந்தியர்கள் செய்ய வேண்டுமென்று (priscriptive) வற்புறுத்தாமல், சபை கூடிவரும்போது இவ்வாறாகத்தான் நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று சபையில் நடப்பதை விவரிக்கிறார். ஆங்கிலத்தில் இதனை descriptive language என்று கூறுவார்கள். அதாவது விபரித்துக் கூறும் மொழி நடை என்று பொருள்.
இதேவிதமாக இந்நூலில் பவுல் மிகைப்படுத்தலையும் (Retoric language) தனது மொழிநடையில் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். உதாரணமாக 13 ஆவது அதிகாரம் முதல் வசனத்தில் பவுல் தேவபாஷையைப்பற்றிக் குறிப்பிடுகிறார். அநேகர் இதற்குப் பொருள் கொடுக்கும்போது தேவ பாஷை என்று ஒன்றிருப்பதாகப் பொருள் கொள்வார்கள். ஆனால், முழு அதிகாரத்தையும் வாசித்துப்பார்ப்பதோடு, சந்தர்ப்பப் பொருத்தத்தையும் கவனித்தால் பவுல் இங்கே மிகைப்படுத்தும் மொழி நடையைப் பயன்படுத்துவதைக் காணலாம். தேவ பாஷை என்று உண்மையில் ஒன்றில்லை. தேவர்கள் மனிதர்களோடு பேசியபோதெல்லாம் மனிதர்கள் புரிந்து கொள்ளக்கூடிய பாஷையில்தான் பேசியிருக்கிறார்கள். பவுலுக்குத் தேவ பாஷை என்று ஒன்றிருப்பதாகத் தெரியாது. தான் சொல்ல வந்ததை அழுத்தமாகக் கூறுவதற்காக இல்லாமலிருப்பதை இருப்பது போல் எண்ணிப் பேசுவதையே மிகைப்படுத்தும் மொழிநடை என்று கூறுவார்கள். இதைத்தான் பவுல் இங்கு கையாண்டுள்ளார். இதை 1 கொரிந்தியரில் பவுல் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கலாம். ஆகவேதான், இதைப் புரிந்து கொண்டு விளக்கமாகப் போதிக்க தமிழ் அறிவும், இலக்கணமும் நமக்கும் தேவைப்படுகிறது. இலக்கண அறிவில்லாமல் இதை எடுத்து விளக்குவதென்பது இயலாத காரியம். ஆரம்ப காலத்தில் தமிழையும், இலக்கணத்தையும் தெளிவாகப் படிக்க வேண்டியிருந்தது. கேரி இதில் பாண்டித்தியம் பெற்றிருந்தார் ஆனால் தமிழர்களாக இருந்தும் தமிழ்ப் போதகர்களில் பலர் இன்று தமிழ் மொழியிலோ, இலக்கணத்திலோ அதிகம் கவனம் செலுத்துவதில்லை. ஆங்கிலத்திலே நூல்களை வாசித்துப் புரிந்து கொள்பவர்கள்கூட அதைத் தமிழிலே விளக்கிக் கூறுவதற்கு தமிழ் அறிவும், இலக்கண அறிவும் மிகஅவசியம். போதிப்பவனின் போதனை தெளிவாக இருக்க வேண்டுமானால் இதைச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
வியாக்கியானப் பிரசங்கம் செய்வதற்கு அவசியமான பல விஷயங்களைப்பற்றி விபரமாகப் பார்த்துள்ளோம். இன்று நமது மக்களை ஏமாற்றி வரும் அநேக போலிப் போதனைகளில் இருந்து அவர்களை விடுவித்து கர்த்தரின் வழியில் அவர்களை வழி நடத்தும் பெரும் அழைப்பைப் பெற்றுக் கொண்டுள்ள இதை வாசிக்கும் போதகர்கள் இதுவரை நாம் பார்த்து வந்துள்ள காரியங்களைக் குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும். அதேவேளை போதக ஊழியம் செய்வது பெருமையானது என்று எண்ணி, கனவுலக எண்ணங்களோடு அதில் நுழைந்துள்ளவர்கள் இவ்வூழியத்தைத் துறந்து விடுவதும் நன்மையான காரியம். உண்மையான அழைப்பில்லாமலும் பிரசங்கம் செய்வதற்குத் தேவையான ஞானமோ, திறமையோ இல்லாமலும் அவ்வூழியத்தில் ஈடுபட்டு கர்த்தருக்கு சேவை செய்கிறோம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறார்கள். கடுமையாக, அன்றாடம் தாழ்மையுடன் உழைத்து பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், துணையோடும் செய்ய வேண்டிய இவ்வூழியத்தைக் களங்கப்படுத்தி கர்த்தரின் சாபத்தை வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. அதேவேளை மெய்யான ஊழியர்கள் குறைவாக இருக்கும் இக்காலங்களில் கர்த்தர் அத்தகைய ஊழியர்களை எழுப்புமாறு நாம் அன்றாடம் ஜெபத்தில் வரவேண்டியதும் அவசியம்.