அடியோபரா என்றால் என்ன? என்ற கேள்வி நிச்சயம் உங்கள் மனதில் உடனடியாக எழுந்திருக்கும். சீர்திருத்தவாதிகளும், தூய்மைவாதிகளும் போதித்த வேதத்தில் காணப்படும் வரையறுக்கப்பட்ட ஆராதனை விதியை நாம் ஏற்கனவே இவ்விதழில் பார்த்திருக்கிறோம். வரையறுக்கப்பட்ட ஆராதனை விதியைப் படிக்கும்போது அதோடு சம்பந்தப்பட்ட “அடியோபராவையும்” (Adiaphora) பற்றி அறிந்து கொள்வது அவசியம். இவ்வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. “இதற்கு முக்கியமானதொன்றல்ல” (Not a thing of importance) என்று பொருள். இவ்வார்த்தையை பதினாறாம் நூற்றாண்டின் சீர்திருத்தவாத காலத்திற்குப் பின்பு சில கிறிஸ்தவ சபைப்பிரிவினர் பயன்படுத்த ஆரம்பித்தனர். இவர்கள் கர்த்தருடைய வார்த்தை கட்டளையிட்டு செய்யாதே என்று நிராகரிக்காத எதையும், அது தடை செய்யாத எதையும் ஆராதனையில் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்று வாதாடினார்கள். உதாரணமாக கர்த்தரின் வார்த்தையில் சிலுவை அணியாதே! என்று எங்கும் நேரடியாகக் கட்டளையிடப்படவில்லை. அதேநேரம், அணியக்கூடாது என்றும் எங்கும் சொல்லவில்லை. ஆகவே, சிலுவையை அணிவதில் தவறில்லை என்பது இவர்களுடைய வாதம். இதே முறையில் வாதாடி பிரசங்கிகளுக்கான விசேஷ அங்கி, சிலைவணக்கம், சடங்குகள் என்று பல காரியங்களை இவர்கள் ஆராதனையில் சேர்த்துக் கொண்டார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் இரட்சப்பிற்காக கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தைத் தவிர வேறு எதுவும் முக்கியமானதாக இருக்கவில்லை. கிறிஸ்துவை விசுவாசித்தால் மட்டும் போதும், ஆராதனையில் எல்லாம் விசேஷ அக்கறை எடுக் வேண்டியதில்லை என்பது இவர்களுடைய எண்ணமாயிருந்தது. முக்கியமாக ஆங்கிலிக்கன் பிரிவைச் சேர்ந்தவர்கள் இம்முறையில் சிந்தித்தார்கள்.
பியூரிட்டன்கள் என்று அழைக்கப்பட்ட தூய்மைவாதிகள் இவ்வடியோபரா வாதத்திற்கு எதிராக கர்த்தருடைய வார்த்தை கட்டளையிட்டு போதிக்கும் அம்சங்களை மட்டுமே ஆராதனையில் சேர்த்துக் கொள்ள வேண்டும், வேறு எதையும் ஆராதனையில் சேர்த்துக் கொள்வது கர்த்தருக்கு விரோதமான காரியம் என்று போதித்தார்கள். இவர்கள் கிறிஸ்துவுக்கு கீழ்ப்படிவதானால் வேதம் போதிக்கும் அத்தனை உண்மைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்று சொன்னார்கள். அடியோபராவை பற்றி இவர்கள் விளக்கியபோது, ஆத்மீகம் அல்லது ஒழுக்கத்துக்கு முரண்படாதவைகளும், வேதபோதனைகளுக்கு முரண்படாமலும், கர்த்தருடைய மகிமைக்கு பங்கம் ஏற்படுத்தாதவைகளும் மட்டுமே அடியோபராவிற்குள் அடங்கும் என்று விளக்கினார்கள். உதாரணமாக, கட்டடம்கட்டுவதற்கு நாம் பயன்படுத்துகிற பொருட்கள், ஆராதனை நடத்துவதற்கான நேரம், சபையில் ஆத்துமாக்கள் அமருவதற்காகப் பயன்படும் சாதனங்கள், சபையில் வாரத்துக்கு எத்தனை கூட்டங்கள் நடத்துவது, ஆராதனையின்போது எத்தனை பாடல்கள் பாடுவது, பிரசங்கம் எவ்வளவு நேரத்திற்கு இருக்க வேண்டும் போன்றவையே அடியோபரா சம்பந்தமான காரியங்களாக இவர்கள் விளக்கினார்கள். ஏனெனில், ஆராதனை நேரத்தில் பாடல்கள் பாடித்துதிக்க வேண்டும் என்று வேதம் தெளிவாகப் போதிக்கின்றது. ஆனால், எத்தனை பாடல்கள் பாட வேண்டும் என்று ஓரிடத்திலும் சொல்லப்படவில்லை. இவைபற்றி நாம் இயற்கைவிதிகளுக்கு அடங்கி எப்போதும் முடிவெடுக்க வேண்டும்.
ஆனால், வேதம் தெளிவாகப் போதிக்கும் ஆராதனையில் பயன்படுத்தப்பட வேண்டிய காரியங்களை நாம் உதாசீனப்படுத்துவதோ அல்லது அவற்றோடு வேறு எவற்றையும் சேர்த்துக்கொள்வதோ பெருந்தவறு என்பது சீர்திருத்தவாதிகளான தூய்மைவாதிகளின் போதனை. அடியோபராவை ஆங்கிலிக்கன்கள் தவறாகப் பயன்படுத்தி ஆராதனையைக் கர்த்தருக்கு விரோதமாக நடத்துகிறார்கள் என்று தூய்மைவாதிகள் அவர்களை எதிர்த்தார்கள். தம் காலத்திற்குப் பிறகு வரும் சந்ததியும் இப்படித் தவறிழைத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் விசுவாச அறிக்கைகளை எழுதி ஆராதனைத் தத்துவங்களை எழுதி வைத்தார்கள். 1689 விசுவாச அறிக்கையில் 22ம் அதிகாரம் ஆராதனை சம்பந்தமான வரையறுக்கப்பட்ட விதியை விளக்குவதோடு ஆராதனையில் இருக்க வேண்டிய கர்த்தர் தன்னுடைய வார்த்தையில் அனுமதித்துள்ள அம்சங்களையும் விளக்குகிறது. அதேபோல் இவ்விசுவாச அறிக்கை 21வது அதிகாரத்தில் கிறிஸ்தவ சுதந்திரம் என்ற தலைப்பில் அடியோபரா பற்றியும் விளக்குகிறது. இவ்விரண்டு அதிகாரங்களும் அடுத்தடுத்து இருப்பதில் இருந்து தூய்மைவாதிகள் எத்தனை கவனத்தோடு இக்காரியங்களை ஆராய்ந்து விளக்கியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 21வது அதிகாரத்தின் இரண்டாம் பாரா, கர்த்தருடைய வார்த்தைக்கு அடங்கிவராத எந்த மனித சிந்தனைக்கும், போதனைக்கும், அதிகாரத்திற்கும் கிறிஸ்தவர்கள் இடம் கொடுக்கக்கூடாது என்று சொல்லுகிறது. இதன்படி கர்த்தரின் ஆராதனைக்குள் மனித சிந்தனையை நுழைப்பது எத்தனை தவறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சபையில் பொது ஆராதனை வேளையில் வேத பிரசங்கம் செய்யாமல் இசைக்கச்சேரி வைப்பதும், பெண்களைப் பிரசங்கத் செய்யவும் ஆராதனையை நடத்த விடுவதும், வாத்தியக்கருவிகளுக்கு மட்டுமே பெரு முக்கியத்துவம் கொடுப்பதும் ஆராதனையில் இருக்க வேண்டிய அம்சங்களில் அக்கறை செலுத்தாமல் இருப்பதும் “அடியோபரா” வோடு சம்பந்தப்பட்டது என்று அன்று ஆங்கிலிக்கன் சபை சொன்னது போலவே இன்றும் பல சபைப்பிரிவினர் சொல்லி வருகிறார்கள். இது அடியோபரா சம்பந்தப்பட்ட காரியங்கள் அல்ல. வேதத்தின் தெளிவான ஆராதனை பற்றிய போதனைகளுக்கு முரணானவை. ஆரானையில் இவற்றைச் சேர்த்துக் கொண்டாலும் பரவாயில்லை, சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் தப்பில்லை என்று சொல்லும் மலுப்பல் சாமிகள் தேவ பயம் இல்லாத சந்தர்ப்பவாதிகள். ஆத்துமாக்களைத் திருப்திப்படுத்துவதை மட்டுமே வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டு காலத்தை ஓட்டும் இவர்களுக்கும் சபை சீர்திருத்தத்திற்கும் தொலை தூரம்.