ஊழியத்தைக் குடும்பச் சொத்து போல் பயன்படுத்தும் முறையை தமிழ்கூறும் நல்லுலகில் காணப்படும் கிறிஸ்தவ ஊழியங்களில் பரவலாகக் காணலாம். குலத்தொழில் முறை இருந்து வருகின்ற நமது இனத்தில் கிறிஸ்தவ ஊழியங்களிலும் இந்த முறை பின்பற்றப்பட்டு வருவரு எந்தளவுக்கு உலகப்பிரகாரமான சிந்தனைகளும், எண்ணங்களும் கிறிஸ்தவத்தைப் பாதித்து, சபைகளையும், ஆத்துமாக்களையும் இருட்டில் வைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். கிறிஸ்தவ ஊழியங்களில் குடும்பச்சொத்துபோல் இருந்துவரும் இந்தக் குலத்தொழில் முறையின் ஆபத்தை அலசுகிறது இந்த இதழின் முதலாவது ஆக்கம்.
பத்திரிகை ஆரம்பித்த காலத்தில் ஆன்மீகக் குழப்பம் என்ற பெயரில் ஓர் நூலை வெளியிட்டிருந்தோம். அது இப்போது அச்சில் இல்லை. அது பத்திரிகையில் ஒருபோதும் வராத ஓர் ஆக்கம். எல்லோரும் வாசித்துப் பயன்படும் விதத்தில் அதைப் பலதிருத்தங்களோடு இந்த இதழில் வெளியிட்டிருக்கிறோம். தமிழினத்தின் மத்தியில் காணப்படும் இன்றைய கிறிஸ்தவத்தின் நிலையை அது மறுபடியும் நினைவூட்டும் ஆக்கமாக இருக்கின்றது.
பிரசங்கம் தயாரிப்பதில் பிரசங்கிகள் காட்ட வேண்டிய கவனத்தையும், கவனிக்க வேண்டிய அம்சங்களையும் தொடர்ந்து இந்த இதழிலும் வாசிக்கலாம். இந்த வருடம் நாம் வெளியிட்டுள்ள புதிய நூலான “சீர்திருத்த விசுவாசத்தை” மூன்று நண்பர்கள் ஆராய்ந்து தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றையும் இந்த இதழில் வாசிக்கலாம். வழமையாக வரும் சில ஆக்கங்களை இந்த இதழில் வெளியிட முடியவில்லை. புதிய வருடத்தில் அவை தொடரும்.
இந்த வருடத்தோடு ஒன்பது வருடங்களைக் கண்டிருக்கிறது திருமறைத்தீபம். பல நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களின் இதயத்திலும், வாழ்க்கையிலும் ஓரிடத்தைப் பெற்றிருக்கிற “தீபம்” தொடர்ந்து வரப்போகிற பத்தாவது வருடத்திலும் தடையில்லாது வெளிவரவும், பலருக்கும் ஆசீர்வாதமாக இருக்கவும் வைராக்கியத்தோடு ஜெபியுங்கள். ஆத்துமாக்களை வேத அறிவில் வளர்த்து, அவர்களை மனித ஞானத்தின் பிடியில் இருந்து விடுவிக்கும் சீர்திருத்த ஊழியத்தை செய்யும் பெரு நோக்கத்துடன் ஆசிரியரும், இதழை வெளியிடுபவர்களும் தொடர்ந்துழைக்க தவறாது ஜெபிக்குமாறு உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
– பத்திரிகை குழுவினர்.