பதினாறாம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதம் ஜேர்மனியில் ஆரம்பித்து காட்டாறுபோல் சீரிப்பாய்ந்து பரவுவதற்கு முன்னர் அதற்கான வித்தை விதைக்க கர்த்தர் பயன்படுத்திய பல நல்ல மனிதர்களை சபை வரலாற்றில் சந்திக்கிறோம். இந்தவகையில் சீர்திரத்தவாதத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்பட்ட மனிதர்தான் இங்கிலாந்தின் ஜோன் விக்ளிப் (John Wycliffe). விக்ளிப்பின் ஆரம்பகால வாழ்க்கைபற்றிய விபரங்கள் அதிகம் இல்லை. அவருடைய பெற்றோரைப் பற்றிய தகவல்களோ அல்லது அவர் கர்த்தரை அறிந்து கொண்டவிதம் பற்றிய விபரங்களோ கிடைக்கவில்லை. இங்கிலாந்தின் யோர்க்ஷயர் பகுதியில் அவர் பிறந்ததாக மட்டும் வரலாறு சொல்கிறது.
1356 இல் ஆக்ஸ்பர்டின் மேர்டான் கல்லூரியின் பட்டதாரி மாணவராக முதலில் ஜோன் விக்ளிப்பை நாம் சந்திக்கிறோம். அதன்பின் 1360 அவர் முதுநிலை பட்டத்தை பேலியல் என்ற இடத்தில் பெற்றார். இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது விக்ளிப் தனது கல்லூரி வாழ்க்கையை பதினான்காம் வயதில் ஆரம்பித்திருக்க வேண்டும். 1372 ஆம் ஆண்டில் விக்ளிப் இறையியலில் அறிவர் பட்டத்தைப் பெற்றார். இக்காலத்தில் விக்ளிப் ரோமன் கத்தோலிக்க போதனைகளில் அதிக ஞானத்தைப் பெற்றிருந்தார். வாதத்திறத்தையும் கொண்டிருந்தார். ஐரோப்பா முழுவதிலும் சிறந்த அறிஞர் என்றும் அறியப்பட்டிருந்தார். கர்த்தர் தன்னுடைய ஊழியத்திற்கு ஒரு திறமைசாலியைத் தெரிவு செய்திருந்தபோதும், விக்ளிப் இக்காலங்களில் ரோமன் கத்தோலிக்கப் போதனைகளிலேயே மூழ்கிப்போயிருந்தார்.
இருந்தபோதும், விக்ளிப் தத்துவ ரீதியில் எதையும் ஆராய்ந்து வாதப்பிரதாபம் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டினார். இத்தகைய வாதப்பிரதாபங்கள் கற்றரிந்தவர்கள் மத்தியில் அக்காலத்தில் நடந்தது. இது பொதுமக்களையும் தனது நிலையையும் பாதிக்காததால் ரோமன் கத்தோலிக்க மம் இதற்கு அனுமதியளித்திரந்தது. வழமையான பாரம்பரிய செயல் முறைகளில் ஆர்வம் காட்டாத விக்ளிப் அவற்றின் தவறுகளை எடுத்துக்காட்டி வாதம் செய்ய ஆரம்பித்தார். இதற்கு முன் இருந்தவர்கள் இவ்விதமாகப் பேசியிருந்தபோதும், ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகளுக்கும், அதன் அதிகாரத்திற்கும் எதிரான விக்ளிப்பின் பேச்சு சீர்திருத்தவாதத்திற்கு அடித்தளம் இட்டது. ஆரம்பத்தில் எந்தவித ஆத்மீகத் தொடர்பு இல்லாமலும், உலகப்பிரமானமானதுமாக இருந்த போதனையில் ஈடுபட்டிருந்த விக்ளிப் பின்னால் ரோமன் கத்தோலிக்க மதத்தின் அடித்தளத்தை அது இருந்த இடத்திலேயே தகர்க்கக்கூடிய ஆங்கி அறிவாளிகளில் சிறந்ததொரு மனிதராக உருவானார்.
கத்தோலிக்க மதத்திற்கு எதிர்ப்பு
1374 ல் விக்ளிப் தனது நாட்டின் சார்பாக போப்பின் அதிகாரரிகளை ஒரு கூட்டத்தில் சந்தித்தார். அரசருக்கு அது பெருந்திருப்தி அளித்தது. அரசரின் அபிமானத்தை விக்ளிப் பெற்றிருந்தபோதும் குருமார்களும், சக ஊழியர்களும் அவரை மிகவும் வெறுத்தனர். அவரைத் தொலைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். விக்ளிப் குருமார்கள் பிச்சை எடுப்பதையும், அவர்களுடைய வழிபாட்டு முறைகளையும் கடுமையாகத் தாக்கினார். சிலைகளை வணங்குவதை அவர் முட்டாள்தனம் என்று வர்ணித்தார். பாவமன்னிப்பு பத்திரம் விற்பதைக் கண்டித்தார். இறந்தவர்களுக்காக மாஸ் வைப்பதையும், யாத்திரை போவதையும் சாடினார். போப்பை அகங்காரம் பிடித்த அந்திக் கிறிஸ்து என்று வர்ணித்தார்.
இங்கிலாந்து சபை இதையெல்லாம் பார்த்துத் திகைத்து தங்களை வந்து பார்க்கும்படி விக்ளிப்புக்குக் கட்டளையிட்டனர். அப்போது அவரது எதிரிகள் அவரைக் கடுமையாகத் தாக்கியபோதும், அரசரின் மகன் அவருக்கு ஆதரவாகப் பேசி எதிரிகளிடம் இருந்து அவரைக் காத்தான். அதே ஆண்டில் போப் விக்ளிப்புக்கு எதிராக ஐந்து ஆணைகளைப் பிறப்பித்தார். விக்ளிப்பின் எழுத்துக்களுக்கெதிராக பத்தொன்பது குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தார். ஆனால், விக்ளிப்பின் வாழ்க்கையில் ஏற்பட்ட பெருந்துன்பம் நான்கு வருடங்களுக்கு பின்பு வந்தது. விக்ளிப் ரோமன் கத்தோலிக்க மதத்தின் போதனையான யூகரிஸ்டின்போது ரொட்டியும், இரசமும் கிறிஸ்துவின் சரீரமாகவும், திருஇரத்தமாகவும் உருமாற்றம் பெறுகின்றது என்ற போதனையைக் கடுமையாகத் தாக்கினார். விக்ளிப்பின் எதிரிகள் அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்க, அரசனும் விக்ளிப்பிற்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டான். ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழக பேராசிரியர்களும், ஏனைய கல்லூரிப் பேராசிரியர்களும் விக்ளிப்பிற்கு எதிராகப் புறப்பட்டனர். ஆனால், பொதுமக்களின் பலமான ஆதரவு விக்ளிப்பிற்கு இருந்ததால் அவருக்கு துன்பம் விளைவிக்க அவருடைய எதிரிகள் தயங்கினர்.
விக்ளிப் சிறிது பொறுமையாக இருந்து செயல்பட்டிருந்தால் திருச்சபையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், அவர் ஒரே அடியில் ரோமன் கத்தோலிக்க போதனைகளை ஒழித்துக் கட்டி மெய்சுவிசேஷத்தை நிலை நாட்ட விரும்பினார். காலம் செல்லச் செல்ல சீர்திருத்தத்தை ஒரே நாளிளோ அல்லது பத்து வருடங்களிலோ கொண்டு வந்துவிட முடியாது என்பதையும், அதற்கு நெடுங்கால உழைப்பும் அதிக பொறுமையும் தேவை என்பதை விக்ளிப் உணர்ந்தார். 1381 ல் நிகழ்ந்த விவசாயிகளின் எதிர்ப்பியக்கத்திற்கு விக்ளிப்பும், அவருடைய சீடர்களும்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது விக்ளிப்பின் நிலமையை மேலும் சங்கடத்திற்குள்ளாக்கியது. ஆனால் இதற்கும் விக்ளிப்பிற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. விக்ளிப் தனது சீர்திருத்தப் போக்கைக் கைவிட வேண்டும் என்று அவருக்கு ஆலோசனை கூறப்பட்டது. விக்ளிப் அதற்கு செவிசாய்க்காமல் இன்னுமொரு விசுவாச அறிக்கையை வெளியிட்டார்.
இந்நிலமையில் இங்கிலாந்தின் பாராளுமன்றம் கென்டபரியின் ஆர்ச் பிசப் இதில் தலையிட்டு ஒரு ஆலோசனைக்குழுவை ஏற்படுத்தி விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் காரியங்களை ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. இவ்வாலோசனைக்குழு நடந்து கொண்டிருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இதனை நிலநடுக்க ஆலோசனைக்குழு என்று அழைத்தனர். விக்ளிப்பும் அவருடைய ஆதரவாளர்களும் அந்நிலநடுக்கத்தை தங்களுக்கு ஆதரவான தெய்வீகத் தலையீடாகக் கருதினர். இருந்தபோதும் விக்ளிப்பின் போதனைகள் ஆலோசனைக்குழுவால் நிராகரிக்கப்பட்டது. ரோம சபைத் தலைவரான போப் விக்ளிப் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று கட்டளையிட்டார். ஆனால் விக்ளிப் ரோமுக்கு போக அடியோடு மறுத்துவிட்டார். இக்காலத்தில் இரண்டு போப்புகள் இருந்து ஒருவர் மற்றவரை அந்திக் கிறிஸ்து என்று தாக்கிக் கொண்டனர். விக்ளிப்பின் ஆதரவாளர்கள் அதிக துன்பத்திற்குள்ளானபோதும் இக்காலங்களில் விக்ளிப் எதிரிகள் கைகளில் அகப்படாமல் எப்படியோ தப்பி வாழ்ந்து கொண்டிருந்தார். விக்ளிப் லட்டர்வத் என்ற இடத்தில் போய் தனது இறுதிக் காலம்வரை வாழ்ந்து 1834ல் கர்த்தரடி சேர்ந்தார்.
விக்ளிப் தன்னுடைய கடைசிக் காலங்களில் மக்களுக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காக ஒரு பிரசங்கிகளின் கூட்டத்தை தயார் செய்து அனுப்பினார். இவர்ள் வறிய பிரசங்கிகள் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் விக்ளிப்பின் போதனைகளை மக்களிடம் பரப்பினார்கள். அறியாமையினால் இருண்டு கிடந்த மக்களின் கண்களைத் திறக்க இந்தப் பிரசங்கிகளை விக்ளிப் அனுப்பி வைத்தார். இப்பிரசங்கிள் சிவந்த மாநிறத்திலான நீண்ட அங்கிகளையும் மரக்கட்டைப் பாதணிகளையும் அணிந்து கொண்டு நாடெங்கும் போய் சவிசேஷத்தைப் பிரசங்கித்தனர். மதகுருக்கள் இவர்களை வெறுத்தபோதும் ஒரு பலமுள்ள பிரசங்கிகளின் கூட்டமாகவும் எதிரிகள் கண்டு நடுங்கும் கூட்டமாகவும் இவர்கள் இருந்தனர். இவர்களுடைய பிரசங்கத்தினால் அநேகர் கிறிஸ்துவை விசுவாசித்தனர். விக்ளிப்பின் எதிரிகள் இவர்களை லோலார்ட்ஸ் (Lollards) என்று அழைத்தனர். இவ்வார்த்தை எங்கிருந்து புறப்பட்டது என்பது தெரியவில்லை. சிலர் இவ்வார்த்தை “உதவாக்கரைகள்” என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகவும், வேறு சிலர் இது “கர்த்தருக்காக துதி பாடுகிறவர்கள்” என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதாகவும் கூறுவார்கள்.
விக்ளிப்பின் சாதனைகளில் மிகவும் முக்கியமானது அவர் ஆங்கில மொழியில் வேதத்தை மொழி பெயர்த்ததே. இதனால் எல்லோரும் வேதத்தை தங்கள் மொழியில் வாசித்து கர்த்தருடைய சத்தியத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. ரோமன் கத்தோலிக்க சபை அக்காலத்தில் லத்தீன் மொழியில் மட்டுமே வேதத்தை வைத்திருந்தது. இதை வல்கேட் மொழி பெயர்ப்பு என்று அழைப்பார்கள். ரோமன் கத்தோலிக்க சபை வேதத்தை வேறு மொழிகளில் மொழி பெயர்க்க அனுமதி கொடுக்க மறுத்து வந்தது. இதனால் மக்களால் வேதத்தை தங்களுக்குத் தெரிந்த மொழியில் வாசித்துப் புரிந்து கொள்ள முடியவில்லை. விக்ளிப்புக்கு எபிரேய மொழியோ கிரேக்கமோ தெரிந்திருக்கவில்லை. அதனால், அவர் இலத்தீன் வல்கேட் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியே தனது ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டதால் விக்ளிப்பின் மொழிபெயர்ப்பு பூரணமான மொழிபெயர்ப்பாக இருக்கவில்லை. இருந்தபோதும் வேதத்தை தங்கள் மொழியில் வாசிக்கும் வசதியே இல்லாமலிருந்த மக்களுக்கு அது பெரும் ஆசீர்வாதமாக இருந்தது. அக்காலத்தில் அச்சுக்கூடங்கள் இல்லாதிருந்ததால் விக்ளிப் தன்னுடைய மொழிபெயர்ப்பைக் கையாலேயே எழுத வேண்டியிருந்தது. விக்ளிப்பின் பிரசங்கிகள் இவற்றின் பகுதிகளை நாடெங்கும் கொண்டு போய் மக்களைக்கூட்டி வாசித்துப் பிரசங்கம் செய்தனர். விக்ளிப்பின் மொழி பெயர்ப்பே வேதத்தின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்தது. விக்ளிப்பிற்கு இக்காரியத்தில் வேறு சிலர் துணைசெய்திருக்கக்கூடும். ஆனால், எந்தளவுக்கு அவர்கள் துணை செய்திருப்பார்கள் என்பது தெரியவில்லை.
அடுத்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இரண்டு மோசமான காரியங்களை இங்கிலாந்தின் பாராளுமன்றம் செய்தது. முதலில், 1401ல் அது போலிக் கோட்பாடுகளைப் பரப்புபவர்களைத் தீயில் எரிக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. விக்ளிப்பின் “லோலார்ட்ஸ்” (பிரசங்கிகள்) போலிக்கோட்பாடுகளைப் பரப்புபவர்களாகக் கருதப்பட்டனர். 1417ல் ஜோன் ஓல்ட்காசில் தீயில் எரிக்கப்பட்டார். அடுத்ததாக, விக்ளிப் ஆங்கிலத்தில் வெளியிட்ட வேத மொழி பெயர்ப்பு முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டது.
ரோமன் கத்தோலிக்க சபை விக்ளிப்பை எந்தளவுக்கு கொடூரமாக வெறுத்தது என்பதற்கு விக்ளிப் இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் காட்டலாம். 1415ல் கொன்ஸ்டனின் ஆலோசனை சபையின் கட்டளைபடி விக்ளிப்பின் கல்லறையில் இருந்த அவருடைய எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு மறுபடியும் அவற்றைப் புதைக்க அனுமதி மறுக்கப்பட்டது. அந்தளவுக்கு ரோமன் கத்தோலிக்க சபை கிறிஸ்தவத்தையும், கிறிஸ்தவர்களையும் வெறுத்தது. 1428ல் லிங்கனின் பிசப் விக்ளிப்பின் சரீரத்தின் எஞ்சிய பகுதிகளை எரித்து சாம்பலை லட்டர்வர்த்தில் ஓடிய சுவிப்ட் என்ற ஆற்றில் தூவிவிட்டார்.
இதுபற்றி எழுதும் ஒருவர், விக்ளிப்பின் சாம்பல் சுவிப்ட் ஆற்றிலிருந்து ஏவோன் ஆற்றில் கலந்து, செவன் ஆற்றில் பாய்ந்து, ஒடுக்கமான கடல்களில் பரவி பெருங்கடலைச் சேர்ந்ததுபோல் அவருடைய போதனைகள் இங்கிலாந்தின் எல்லாப்பகுதிகளுக்கும் பரவி அங்கிருந்து தூர தேசங்களுக்கும் போய்ச் சேர்ந்தது என்று சரியாகவே சொன்னார். பதினாறாம் நூற்றாண்டில் எழுந்த சபை சீர்திரத்தத்தின் விடிவெள்ளி ஜோன் விக்ளிப் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
ரோமன் கத்தோலிக்க சபை குறித்து பல தமிழ் கிறிஸ்தவ சபைத்தலைவர்களிடமும், கிறிஸ்தவர்களிடமும் தொடர்ந்து ஒரு தவறான எண்ணம் இருப்பதை நம்மால் அறிய முடிகின்றது. ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவ சபையின் ஒரு பகுதி என்பதுதான் அந்தத் தவறான எண்ணம். சபை வரலாற்றை சரியாக அறிந்து கொள்ளாதவர்கள்தான் இத்தகைய தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளார்கள். இன்று தமிழில் காணப்படும் சபை வரலாற்று நூல்களும் ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகளின் அடிப்படையில் எழுதப்பட்டு கிறிஸ்தவர்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன. ரோமன் கத்தோலிக்க மதத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வேதத்தின் அடிப்படை உண்மைகளை நிராகரிக்கும் மனித சிந்தனையில் இருந்து புறப்பட்ட ஒரு போலி மதம் ரோமன் கத்தோலிக்க மதம். சடங்காச்சாரியங்களையும், குருமார்களையும், நற்கிரியைகளின் மூலம் பரலோகம் போகலாம் என்ற வீண் எண்ணத்தையும் இம்மதம் கொண்டுள்ளதோடு இவை எல்லாவற்றையும் விட மோசமாக பாவத்தில் பிறந்து பாவத்தில் வாழ்ந்து வரும் போப் என்ற ஒரு தனி மனிதனின் ஜெபத்தாலும், ஆசீர்வாதத்தாலும் ஆத்துமாக்கள் கடவுளை விசுவாசிக்க முடியும் என்ற அறிவீனமான போதனையையும் ரோமன் கத்தோலிக்க மதம் தொடர்ந்து போதித்து வருகின்றது. கிறிஸ்தவர்கள் போலிப்போதனைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்வது இன்றும் என்றும் அவசியம்.
– ஆசிரியர்.