உலகத்தில் அன்புகூராமலிருங்கள் என்ற வேத போதனையை கடந்த இரண்டு இதழ்களிலும் ஆராய்ந்து வந்திருக்கிறோம். அப்படி உலகத்தின் மீது அன்புகூராதிருக்க நாம் உலகவழிப்படி சிந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று கடந்த இதழில் பார்த்தோம். உலக ஆசை முதலில் நமது மனதைத் தாக்கி அதன்பின்பே நமது நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. நம்முடைய சிந்தனை வேதபூர்வமாக இருக்குமானால் நமது நடவடிக்கைகளும் வேதபூர்வமாக அமைவதற்கு இலகுவாக இருக்கும். சிந்தனைப்போக்கு உலக ஆசைக்கு இடங்கொடுக்குமானால் நடவடிக்கைகள் அனைத்தும் உலகத்தைச் சார்ந்தே இருக்கும். சிந்தனைக் கோளாறினாலேயே பலர் இன்று விசுவாச வாழ்க்கையில் தடம் மாறி வீழ்ந்து போகிறார்கள்.
உதாரணத்திற்கு இன்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் வேலை செய்கின்ற கிறிஸ்தவர்கள் அதிகம். வேறு நாடுகளுக்குப் போய் வேலை செய்வதிலும், வாழ்வதிலும் எந்தத் தவறும் இல்லை. அது தனிப்பட்டவர்களின் விருப்பம். ஆனால், திருமணமானவர் களும், திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறவர்களும் குடும்பத்தை சொந்த நாட்டில் விட்டுவிட்டு வருடக்கணக்கில் அவர்களைப் பிரிந்து வெளி நாடுகளில் வேலை செய்கிறார்கள். இதைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றன அனேக சபைகள். அத்தோடு சபைகளுக்கு இவர்கள் மூலம் நல்ல வருமானம் வரும் என்ற ஆசையில் இத்தகையோருக்கு புத்தி சொல்லா மல் ஊக்குவிக்கின்ற போதகர்களும், சபைகளும்கூட இருக்கின்றன.
இந்தப்போக்கிற்கு சிந்தனைக் கோளாறைத் தவிர வேறு காரணம் இல்லை. எப்படியென்று கேட்கிறீர்களா? இவர்கள் வேதபோதனையில் தங்களுடைய சிந்தனையை வளர்த்துக் கொள்ளாததால் விசுவாசக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்ற வேதபோதனைகளை அறியாமல் இருக்கின்றார்கள். திருமணம் செய்து கொள்கிறபோது மட்டும் இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் துணையிருப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வாழ்க்கையில் பணம் வேண்டும் என்றதும் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு விமானம் ஏறிவிடுகிறார்கள். கிறிஸ்தவ கணவன் தன் மனைவியை விட்டுப்பிரிந்து வருடக்கணக்கில் வெளிநாட்டில் வாழ்வது அவளை விவாகரத்து செய்ததற்கு சமம். வெறும் தாலியை மட்டும் கழுத்தில் கட்டிவிட்டால் திருமணமாகி விடாது. அன்றாடம் தாம்பத்ய உறவுக்கு இடம் இல்லாத இருவரின் வாழ்க்கையில் திருமண பந்தத்திற்கு இடமில்லை. பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபத்தில் கணவனும், மனைவியும் ஆத்மீக காரியத்திற்கு மட்டுமே ஒருமனப்பட்டு ஒருவரை ஒருவர் பிரிந்து தாம்பத்திய உறவில் சில காலம் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லு கிறார் (1 கொரிந்தியர் 7:3-5) அதுவும்கூட இருவரும் ஒருமனப்பட்டு, குறுகிய காலத்துக்கு மட்டும்தான் அப்படி வாழ வேண்டும். ஏனெனில், நீண்ட காலத்துக்குப் பிரிந்திருந்து தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்தால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடுவான் என்று பவுல் எச்சரிக்கிறார் (7:5). அதற்கு இடங்கொடாதபடி உடனடியாகக் கூடி வாழுங்கள் என்கிறார் பவுல் (7:5). தற்காலிகமாக தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பதையும் ஆத்மீக வளர்ச்சிக்காக மட்டுந்தான் செய்ய வேண்டும் என்கிறார் பவுல். வேதம் இதன்மூலம் கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவிற்கு இடையூறு ஏற்படும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறது. அப்படியிருக்கும்போது வெறும், வேலைக்காகவும், பணத்துக்காகவும் மனைவியைப் பிரிந்து பல வருடங்களுக்கு வெளிநாட்டில் வாழும் கணவன் தன் மனைவிக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும்? அந்த மனைவிதான் தன் கணவனுக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும்? கர்த்தர் ஒன்று சேர்த்த இருவரை ஒருவருக்கும் பிரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று வேதம் சொல்ல, விசுவாசிகள் என்று தம்மை அழைத்துக் கொள்கிறவர்கள் தாங்களே தங்களை இணைத்த பந்தத்தை அறுத்துக் கொள்வது எப்படி விசுவாச நடவடிக்கையாக இருக்க முடியும்? இது வேத சிந்தனையில்லாதவர்களின் உலக ஆசையினால் ஏற்பட்ட வினையே தவிர வேறில்லை. இது வீணாக தாம்பத்ய உறவில் பிசாசின் சோதனைகளுக்கு இடம்கொடுக்கும் செயலாகும். கர்த்தருடைய வழிகளை நாம் மீறுகிறபோது பிசாசின் செயல்கள் நம் வாழ்க்கையில் அதிகரிக்கும்.
கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்வதே தாம்பத்ய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் இருவரும் அன்றாடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய காரியங்கள் அனேகம் இருக்கின்றன. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தும், பேசியும் சுக துக்கங்களை அன்றாடம் பகிர்ந்துகொண்டும், ஆத்மீக காரியங்களில் இணைந்து செயல்படவும் வேண்டும். கணவன் வீட்டுத் தலைவனாகவும், மனைவி கணவனுக்கு அமைந்து நடப்பவளாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு முன்னும், சபைக்கு முன்னும், ஊராருக்கு முன்னும் வாழ வேண்டும். கணவனும், மனைவியும் தங்களுடைய விசுவாச வாழ்க்கையை கர்த்தருக்கு பிரியமான முறையில் வாழ்வதற்கு இந்தக் கடமைகளில் அவர்கள் தவறக்கூடாது.
அத்தோடு கணவனும், மனைவியும் பிள்ளைகளோடு சபை வாழ்க்கையில், சபை அறிய ஈடுபட வேண்டும். இருவரும் இணைந்து வாழ்ந்தே சுவிசேஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். பிலிப்பீன்ஸ் நாட்டில் இருந்து ஒரு விசுவாசி எனக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். தான் பிலிப்பீன்ஸ் நாட்டில் ஊழியம் செய்வதற்கு தன்னுடைய மனைவியை நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க விரும்புவதாகவும், அவள் அங்கே ஏதாவதொரு வேலையை செய்து தன்னுடைய ஊழியத்துக்கு பணம் அனுப்பி உதவ முடியும் என்றும் அதற்காகத் தனக்கு உதவி செய்யும்படியும் என்னைக் கேட்டு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். ஊழியத்துக்காக தன்னுடைய மனைவியைத் தாரைவார்க்கத் தயாராக இருக்கும் இந்த மனிதனின் சிந்தனையில் வேதம் ஆட்சி செய்யவில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மனைவி உழைத்து ஒருவன் ஊழியம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த மனிதன் ஊழியத்துக்கு முழுக்குப் போடுவது நல்லது. மனைவி, பிள்ளைகளுக்கு சோறூட்டி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே ஊழியக்காரனுடைய முதல் கடமையும், ஊழியமுமாகும். இதற்கு எதிரான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும் இதயங்களில் அறியாமை மட்டுமல்ல பிசாசும் ஆளத்தொடங்கிவிட்டான் என்றுதான் கூற வேண்டும். வேதபூர்வமான குடும்ப வாழ்க்கையை நிராகரித்துவிட்டு வெளிநாடுகளில் போய் பிரமச்சாரிய வாழ்க்கை வாழும் விசுவாசிகள் குடும்பத்தை சீரழித்தும், எந்தவிதமான சாட்சியும் இல்லாத வாழ்க்கையையே வாழமுடியும்.
அதுமட்டுமல்லாமல் அந்தத் தம்பதியினர் தங்களுடைய குழந்தைகளைக் கர்த்தருக்குள் எப்படி வளர்க்க முடியும்? தகப்பன் பக்கத்தில் இல்லாமல் எந்தப் பிள்ளையும் சரியாக வளர முடியுமா? பிள்ளைகளுக்கு கர்த்தர் தாயையும், தகப்பனையும் தந்திருக்கிறார், தாயை மட்டுமல்ல. ஆணும், பெண்ணுமான பிள்ளைகள் சரியாக வளர தாயும், தந்தையும் பக்கத்தில் இருப்பது மட்டுமல் லாமல் கர்த்தரின் அதிகாரமும் வீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் பிரமச்சாரி போலக் காலந்தள்ளும் கிறிஸ்தவ கணவன் தன் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல உதாரணமாக இருக்க முடியும்? தந்தையின் வழிநடத்தலையும், அன்பு கலந்த கண்டிப்பையும், நல்லுதாரணத்தை யும் அருகில் இருந்து அன்றாடம் பார்க்க முடியாத பிள்ளைகள் கர்த்தருக்கு விசுவாசமாக எப்படி வளர முடியும்? பணம் மட்டும்தான் வாழ்க்கையில் பெரிது என்றால் நமக்கு குடும்பம் எதற்கு? கர்த்தருடைய வழியில் வாழ முற்படாமல், கர்த்தரின் மேல் நம்பிக்கை வைக்காமல் குடும்பத்தை சீரழித்து வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நண்பர்களே! வேதம் போதிக்கும் குடும்ப வாழ்க்கையை கர்த்தரை நம்பி நடத்துங்கள். உலக ஆசையினாலும், பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும், ஆசையாலும் குடும்பத்தை பிசாசுக்கு ஒப்புக்கொடுத்து விடாதீர்கள். அந்தப்பிசாசு சில வேளைகளில் போதகர்கள் வடிவத்திலும் வந்து ஆசை காட்டும். துறவியைப் போல வீட்டைத் துறந்துவிட்டு வெளி நாட்டில் சம்பாதிக்கும் பணத்தில் சபைக்கு பணம் கொடுப்பதால் கர்த்தருக்கு எதிராக நாம் சேர்த்து வைத்திருக்கும் பாவத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது. வேத போதனைகளால் தங்களுடைய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டும்தான் இத்தகைய திருமணாகியும் துறவறம் என்ற பாவ வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.
2. வேதத்தின் போதனைகளுக்கு விரோதமான முறையில் சிந்திப்பது மட்டுமல்ல அந்த சிந்தனைகளின்படி நடப்பதும் உலக இச்சையாகும்
பிசாசு நம்முடைய சிந்தனையைப் பாதித்து கர்த்தருக்கு விரோதமான முறையில் நம்மை எப்படிச் சிந்திக்க வைக்கிறான் என்பதையும், உலக ஆசையால் நம்முடைய சிந்தனை எந்தளவுக்கு கர்த்தரின் வார்த்தைக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்டிருக்க முடியும் என்பதையும் பார்த்தோம். இனி வேதத்திற்கு விரோதமான முறையில் சிந்திப்பது மட்டுமல்ல அவ்வாறு நடப்பதும் உலக இச்சையே என்பதைக்குறித்து சிந்திப்போம். பிரபஞ்சத் திற்குரிய வேஷம் தரிக்காதீர்கள் என்று பவுல் ரோமர் 12ல் கூறியிருப்பதைக் கவனியுங்கள். வேதவழிகளைப் பின்பற்றாமல் உலக இச்சைகளைப்பின்பற்றி வாழ்வதை பிரபஞ்சத்திற்குரிய வேஷம் தரித்தல் என்று பவுல் கூறுகிறார்.
உலக இச்சை நம்முடைய சிந்தையை ஆண்டால் நம்முடைய செயல்களும் எப்போதும் அதன்படியே அமையும். 1 யோவான் 2:15ல், “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை” என்று யோவான் கூறியிருக்கிறார். அதற்கான காரணத்தை விளக்கும் யோவான், “ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதனிச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத் திருப்பான்” என்கிறார். 2 தீமோத்தேயு 4:10ல் பவுல், “தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசைவைத்து என்னைவிட்டுப் பிரிந்து . . . போய்விட்டான்” என்கிறார். இதிலிருந்து உலக ஆசை எந்தளவுக்கு நம் மனதைப் பாதித்து நமது செயல்களும் அதன்படி அமைந்து விடுகின்றன என்பதை அறிய முடிகிறது. பிலிப்பியர் 3:17-21 வரையுள்ள வசனங்களையும் வாசித்து உலக ஆசை எத்தனை ஆபத்தானது என்பதை உணருங்கள். உலக ஆசைக்கு தன் மனதில் இடம் கொடுத்ததால்தான் தாவீது பெத்சீபாவுடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டான். அவனுடைய சிந்தனையும், செயல்களும் ஆபத்தில் போய் முடிந்தன. இன்று உலக ஆசைக்கு தங்களுடைய இதயத்தில் இடம் கொடுத்திருக்கும் அனேக ஊழியக்காரர்கள் இந்தவிதத்தில் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகள் மட்டுமல்ல செயல்களும் தூய்மையானவையாக, கர்த்தரை மகிமைப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.
3. உலக இச்சையில் இருந்து விடுபடுவதெப்படி?
கிறிஸ்துவின் துணையோடு மட்டுமே உலக இச்சைக்கு நம் வாழ்வில் இடம் கொடுக்காமல் இருக்க முடியும். “என்னைப் பலப்படுத்தியிருக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்கிறார் பவுல் (பிலிப்பியர் 4:13). நம்மில் அன்புகூருகிறவராலே நாம் முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாக இருக்கிறோம் என்கிறார் பவுல் (ரோமர் 8:37). கிறிஸ்துவின் துணையோடு உலக இச்சைக்கு நாம் வாழ்வில் இடம் கொடாமல் இருக்க முடியும். அதை வெற்றிகொள்ளவும் முடியும். பவுல் கூறுவது போல் உங்களால் வாழ்க்கையில் தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், திருப்தியா யிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் முடியுமா? (பிலிப்பியர் 4:12). அப்படி ஒரு கிறிஸ்தவனால் இருக்க முடியும். அப்படி இருக்க முடிந்தவர்களே தங்கள் வாழ்க்கையில் உலக இச்சையை வென்றவர்கள். ரோமர் 12:1-2 வரையுள்ள வசனங்களில் பவுல் சொன்னபடி நாம் வாழ முயற்சிக்க வேண்டும். நம்முடைய மனதை வேதபோதனைகளின்படி அன்றாடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய பரிசுத்தமான சித்தத்தின்படி அன்றாடம் நடக்கிறவர்களாக இருக்கவேண்டும்.
“உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவை களெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் கூறியிருப்பதை நினைவுகூருங்கள் (பிலிப்பியர் 4:8). அந்தவிதமாக சிந்தித்தால் மட்டுமே செயலிலும் அப்படி வாழமுடியும். சிந்தனையும் செயலும் கிறிஸ்துவின் வேதபோதனைகளின்படி அமையும்போது உலக இச்சைக்கு நம் வாழ்வில் இடம் இருக்காது. இன்டர்நெட் வேசித்தனமோ, பணம், பணம் என்று பணத்திற்காக அலையும் போக்கோ, தவறான பெண்தொடர்போ, நகை மோகமோ, லேட்டஸ்ட் பேசனோ (Fashion) நம்மை ஒனறும் செய்யாது. உலகத்தில் நாம் வாழ்கின்றபோதும் உலக ஆசைக்கு நம் வாழ்வில் இடம்கொடுக்கக் கூடாது. பெரியவர்களே! இளைஞர்களே! உலகத்தில் அன்பு கூராதிருங்கள். பிசாசை எதிர்த்து வெற்றிகொண்டு, கர்த்தருக்கு உண்மையுள்ள வர்களாக வாழ்ந்து, தேவ இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.