ஒரு சில கண்டனக் குரல்களுக்கான பதில்
மெல் கிப்சனுடைய ‘கிறிஸ்துவின் பாடுகள்’ படத்தை வேத போத னைகளின் அடிப்படையில் கடந்த இதழில் விமர்சனம் செய் திருந்தோம். அதைக் கைப்பிரதியாக பல ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் வெளியிட்டு பல நகரங்களில் விநியோகித்தோம். மெல் கிப்சன் கிறிஸ்துவை அறியாதவர். அவர் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர். படமும் அந்த மதத்தை மகிமைப்படுத்தி அதனு டைய போதனைகளின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டிருந்தது என்பதை, அதாவது மெல் கிப்சனே தன்னுடைய பேட்டிகளில் விபரித் திருந்தையும் சுட்டிக் காட்டியிருந்தோம். இந்தப் படம் கிறிஸ்தவ சுவிசேஷ த்தை விளக்குவதற்கு உதவாது என்றும், இதைப் பார்த்து பாவி மனந் திரும்ப வழி இல்லை என்றும் எழுதியிருந்தோம். அந்த விமர்சனம் பல இடங்களிலும் பலவிதமான வரவேற்பைப் பெற்றது. “கத்தோலிக்க மதத்தைப் பற்றிய உண்மைகளை வெளியிட்டு எங்களுடைய கண்களைத் திறந்ததற்காக நன்றி” என்று எழுதியவர்கள் பலர். அவர்களுடைய கண்கள் திறக்க இந்த ஆக்கம் உதவியிருப்பதற்காக கர்த்தருக்கு நன்றி. அதேநேரம் சுவிசேஷம் சொல்லுவதற்குக் கிடைத்திருக்கும் அருமையான சந்தர்ப் பத்தை இப்படிக் குறைகூறி எழுதுவதா? என்று ஆத்திரப்பட்டிருக் கிறார்கள் ஒரு சிலர். எப்படியாவது கிறிஸ்துவை அறியாதவன் மூலமாக வும் கிறிஸ்துவைப் பற்றி பாவிகள் தெரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைத் ததே என்று சொன்னவர்களும் உண்டு. முக்கியமாக படம், காட்சி என்று கண்களுக்கு விருந்தளித்து சுவிசேஷத்தை சொல்வதை நாம் கண்டித் திருப்பது சிலருக்கு பிடிக்காமலும் போயிருக்கிறது. இருந்தாலும் இதை யெல்லாம் நாம் எதிர்பார்த்ததுதான். எந்தளவுக்கு ரோமன் கத்தோலிக்க மதத்தின் ஆட்சி தமிழ் கிறிஸ்தவர்களின் மத்தியில் இருக்கிறது என்பதை இந்தவிதமான எதிர்மறையான ‘வரவேற்புகள்’ எங்களுக்கு தெளிவாக வெளிப்படுத்தின. அது எங்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை.
தமிழகத்தில் நாம் இந்தக் கைப்பிரதியை வெளியிட்ட உடனேயே மெல் கிப்சனின் படத்தைப் பார்ப்பதை ஆதரித்து ஒரிரு கைப்பிரதிகளும் வெளி வந்திருந்தன. படத்தை ஆதரித்து எங்களுக்கு தனிப்பட்ட முறையில் இரண்டு விமர்சனக் கடிதங்கள் வந்தன. ஒன்றை எழுதியவர் என்ன காரணத்தாலோ தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. இரண்டாவது கடிதத்தில் கொடுக்கப்பட்டிருந்த விளக்கங்களில் குறிப்பிடும்படியான எந்தவிதமான புதிய அம்சங்களும் இருக்கவில்லை. அத்தோடு மெல் கிப்சனின் படத்தில் கத்தோலிக்க போதனை இல்லை என்பதை நிரூபிக்க உருப்படியான எந்த விளக்கத்தையும் எவரும் முன் வைக்கவில்லை. படத்தில் இருக்கும் கத்தோலிக்க அம்சங்கள் இவர் களுடைய கண்களில் படாமல் போனதற்கான காரணம் நமக்குத் தெரி யாததல்ல. கத்தோலிக்க மதம் என்றால் என்னவென்று தெரியாமல் அதைக் கிறிஸ்தவத்தின் ஒருபகுதியாகப் பார்த்துப் பழகிப்போனவர்களு க்கு அந்த மதத்தின் வேதவிரோதப் போதனைகளை எப்படி இனங்கண்டு கொள்ள முடியும்? என் கைக்கு வந்த விமர்சனங்களில் பொதுவான மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்களை பார்க்க முடிந்தது. அவற்றிற்கு பதில ளிப்பது அவசியம்.
(1) மெல் கிப்சனின் படம் கத்தோலிக்க மதத்தைப் பரப்பவில்லை. உண்மையில் அதில் கத்தோலிக்க போதனையே இல்லை. அதை எப்படிக் குறைகூற முடியும்?
இப்படி எழுதப்பட்டிருந்தது ஒரு விமர்சனத்தில். ஆனால், படத்தை ஆதரித்த எல்லோருமே இப்படித்தான் சொன்னார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விட்டது என்று அர்த்தமல்ல. உலகத் தரம் வாய்ந்த செய்தி ஊடகங்களான சீ. என். என்னுக்கும், டைம்ஸ் பத்திரிகைக்கும் பேட்டியளித்து மெல் கிப்சனே தான் ஒரு கத்தோலிக்கர் என்றும், தனது மத நம்பிக்கைகளையே படத்தில் விளக்கி யிருக்கிறேன் என்றும், வேதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படத்தைத் தான் எடுக்கவில்லை என்றும், கத்தோலிக்க குருமார் குழு படத்தை எடுத்த தனக்கு ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள் என்றும் வெளிப்படையாக உலகமறிய சொன்ன பிறகும், இது கத்தோலிக்க படமே இல்லை என்று இவர்கள் சாதிப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது போலிருக்கிறது. படத்தைத் தயாரித்த மெல் கிப்சனின் வார்த்தைகள் போதும் படத்தைப் பற்றி அறிந்துகொள்ள. திரைப்பட மோகத்தால், அதுவும் இயேசு படம் வந்திருக்கிறதே என்ற தீவிரமான குருட்டார்வத்தால் சிந்திக்கவே மறுத்து இவர்கள் பேசுவதால் படம் கத்தோலிக்க படமில்லாமல் போய்விடாது. எதையும் சிந்தித்து ஆராய முடியாதளவுக்கு தமிழ் கிறிஸ்தவர்கள் இருக்கும்வரை தமிழ் கிறிஸ்தவ உலகத்திற்கு என்றுமே தலைகுனிவுதான்.
இந்தப் படத்தில் கத்தோலிக்க மார்ஸ் பற்றிய போதனையே இல்லை என்று ஒருவர் எழுதியிருந்தார். அந்த முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்பது தெரியவில்லை. மார்ஸில் பங்குபற்றும் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சரீரத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தைக் குடிப்பதாக கத்தோலிக்க மதம் கூறுகிறது. மார்ஸ் நிகழும்போதெல்லாம் கிறிஸ்து பலியிடப்படுகிறார். இது கத்தோலிக்க மதத்தின் உயிர்நாடிப் போதனை. இதனால் தான் கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடு த்து, அதை மட்டும் படத்தில் இரத்தம் சொட்டச் சொட்ட தத்ரூப மாகக் காட்டியிருக்கிறார்கள். படத்தைப் பார்ப்பவர்கள் மனதில் அதைப் பதிய வைப்பதே படத்தின் முக்கிய நோக்கம். அதைத்தானே கத்தோலிக்கர்கள் மார்ஸில் பங்குபெறும்போதெல்லாம் நினைத்துப் பார்க்கும்படி அந்த மதம் எதிர்பார்க்கிறது. கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை கத்தோலிக்க மதம் அணுகுகின்ற முறையில் இருந்து முற்றாக வேறுபட்டது கிறிஸ்தவ வேதம் அதுபற்றித் தருகின்ற போதனை. இதுகூட கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளுகிற பலருக்குத் தெரியாமலிருப்பது வருந்தவேண்டிய விஷயமே.
(2) கடவுளை அறியாத மனிதனைக்கொண்டு சுவிசேஷம் சொல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. அதை ஏன் குறைகூற வேண்டும்?
மெல் கிப்சன் விசுவாசி அல்ல என்று இவர்கள் ஒப்புக்கொண்டாலும் அவரை வைத்து கர்த்தரே இயேசு படம் எடுக்க வழி ஏற்படுத்தி இருக் கிறார் என்று இவர்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்கள். இதற்கு சாக்குப்போக்கும் சொல்லும் ஒருவர் பீலேயாமின் கழுதையைக் கூட தன் காரியத்துக்கு கர்த்தர் பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்று கேட்கிறார். உண்மைதான். பீலேயாமின் கழுதை விவகாரம் ஒருதடவை தான் நடந்தது. அது விதிவிலக்கே தவிர வழமையாக நடக்கும் விதிமுறை அல்ல. சுவிசேஷம் எப்படி, யாரால், எந்தவகையில் சொல்லப்பட வேண்டும் என்றெல்லாம் கர்த்தர் தன் வார்த்தையில் எழுதிக் கட்டளையாகத் தராமலிருந்திருந்தால் நாம் கழுதை உதாரணங்களைக் காட்டி வாதாட வழி இருக்கிறது. ஆனால், கர்த்தர் மத்தேயு 28-ல் சுவிசேஷம் சொல்லும் படிக் கட்டளையிட்டபோது அவர் அதை அவிசுவாசிகளுக்கு கொடுக்கவில்லை. அதை அன்று அவருடைய அப்போஸ்தலர்களும் இன்று திருச்சபையும் செய்ய வேண்டிய பணியாக இருக்கின்றது. 1 கொரிந்தியரில் பவுல், தான் சிறையிலிருந்தபோது தவறான எண்ணத்தோடு சுவிசேஷம் சொன்ன சில விசுவாசிகளைக் குறித்துப் பேசும்போது அதற்காக தான் ஆனந்தப்படுவதாக சொல்கிறார். இதற்குக் காரணம் சொன்னவர்கள் விசுவாசிகளாக இருந்ததும், அவர்கள் சொன்னது மெய்யான சுவிசேஷ மாகவும் இருந்ததுதான். அவர்களுடைய நோக்கம் மட்டுமே தவறாக இருந்தது. இந்த உதாரணம் மெல் கிப்சனுக்குப் பொருந்தாது. மெல் கிப்சன் விசுவாசியே அல்ல. மெல் கிப்சன் சொன்னதும் சுவிசேஷமே அல்ல. சுவிசேஷத்தை அறிவிக்க இந்தப் படத்தை எடுத்திருப்பதாக மெல் கிப்சன் ஒரு தடவையாவது சொன்னதும் கிடையாது.
அவிசுவாசிகளை வைத்து சுவிசேஷம் சொல்ல வேண்டிய அளவுக்கு கர்த்தரின் ஊழியம் அத்தனை மோசமாகப் போய்விடவில்லை. இறை ஆண்மையுள்ள கர்த்தர் மெல் கிப்சன் போன்ற கத்தோலிக்க அவிசுவாசி களில் தன்னுடைய சுவிசேஷப் பணிக்காகத் தங்கியிருக்கவில்லை. அத்தோடு, கண்கள் குருடாய்ப்போய் பாவத்தில் சாத்தானுக்குப் பணி செய்து கொண்டிருக்கும் பாவிகளுக்கு சுவிசேஷம் சொல்லும் எண்ணமே ஒருபோதும் ஏற்படாது என்பது இவர்களுக்கு ஏனோ புரியவில்லை. பாவிகள் கர்த்தரையும் அவருடைய வழிகளையும் எதிர்ப்பார்களே தவிர அவற்றை ஆதரித்துப் பேசமாட்டார்கள். பாவத்தின் கோரத்தை அறியாத இருதயங்களே பாவிகளுக்காகப் பரிந்து பேசுவதாக இருக்கும்.
(3) சுவிசேஷம் சொல்லுவதற்கு இந்த நவீன யுகத்தில் திரைப்படம் மிகவும் அவசியம்.
நமது விமர்சனத்தில் எத்தனையோ அதிமுக்கியமான இறையியல் விளக்கங்களை நாம் தந்து அதன் அடிப்படையில் படம் ஏன் கிறிஸ்துவை மகிமைப்படுத்தவில்லை என்று விளக்கியிருந்தோம். இவர்கள் அவற்றை சிறிதும் வாசித்து சிந்தித்துப் பார்க்காமல் படம் காட்டி சுவிசேஷம் சொல்லுவதை நியாயப்படுத்தப் புறப்பட்டிருப்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகவே எனக்குத் தோன்றுகிறது. கடலில் ஓடம் கவிழுகிறதே என்று கவலைப்படாமல் தான் பிடித்த மீன் தண்ணீரோடு போய் விட்டதே என்று வருத்தப்பட்டானாம் ஓடக்காரன். அதுபோல் இந்தப் படத்தின் மூலம் கத்தோலிக்க மதப்பிரச்சாரம் நடப்பதை புரிந்து கொள்ள முடி யாமல், விஷத்தை விஷமாகப் பார்க்கத் தெரியாமல் சுவிசேஷம் சொல்ல இது உதவுமே என்று கவலைப்படுவது சிறுபிள்ளைத்தனமே.
படம் எப்படி இருந்தாலும், ரோமன் கத்தோலிக்கரும், புறஜாதியாரும் இயேசுவை விசுவாசிக்க இதன் மூலம் வாய்ப்புக் கிடைத்திருக்கிறதே என்கிறார் இவர்களில் ஒருவர். அது வெறும் அசட்டு நம்பிக்கையாகத் தான் எனக்குப் படுகிறது. ஆராய்ந்து சொல்லப்படுகிற கருத்தாக அது இல்லை. திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தமான ஒரு கத்தோலிக்கப் படம் எந்தவகையில் சுவிசேஷத்தைக்கூறி கிறிஸ்துவை மகிமைப் படுத்தப் போகிறது என்பது எனக்குப் புரியவில்லை. கோடிக்கணக்கான பணத்தை வாரியிரைத்திருப்பதாலும், புகழ்பெற்ற ஒரு நடிகர் அதைத் தயாரித்திருப்பதாலும், கண்களைக் கவரும் வகையில் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிகளை எடுத்திருப்பதாலும், நூற்றுக் கணக்கான நாடுகளில் ஒரே நேரத்தில் காட்டப்படுவதாலும் மட்டும் இறையியல் குளருபடியுள்ளதும், இரண்டாம் கட்டளையை முழுமுற்றாக நிராகரிக்கின்றதும், கத்தோலிக்கவாடை வீசுவதுமான ஒரு படத்தை பரிசுத்த ஆவியானவர் பாவிகளுக்கு இரட்சிப்பை அளிக்கப் பயன்படுத்து வார் என்று எதிர்பார்ப்பது தேவநிந்தனை செய்வதற்கு ஒப்பானதாகும்.
இருந்தாலும் திரைப்படம் காட்டுவதற்காக இவர்கள் ஏன் இப்படிக் குதிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெளிவாகப் புரிகிறது. எந்தளவுக்கு தமிழகத்தில் பிரசங்கம் அடுப்பங்கறை ஓரத்திற்குத் தள்ளப்பட்டு அதைத் தவிர்ந்த ஏனைய செய்திப்பரவல் முறைகள் தேவ செய்தியை விளக்கப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இந்தவித நியாயப்படுத்தல்களே சான்றுகளாக இருக்கின்றன. பிரசங்கத்தைக் கர்த்தர் எதற்காகக் கொடுத் திருக்கிறார் என்பதையும், அதன் வல்லமையையும், மகிமையையும் அறிந் திருக்கிறவர்கள் படம் காட்டுவதை நியாயப்படுத்திப் பேசத் துளியளவும் எண்ணமாட்டார்கள். தெளிவான வேதக்கோட்பாடுகளை அறியாமலும், பிரசங்கத்தை வேதபூர்வமாகத் தயாரித்து ஆவியின் பலத்தோடு எப்படிப் பிரசங்கிப்பது என்ற நலிவு சுளிவுகள் தெரியாமலும் இருப்பவர்களுக்கு படம் காட்டுவதைவிட வேறு கதியில்லைதான். மலடிக்கு எங்கே தெரியும் பிள்ளையின் வருத்தம்.
இயேசுவின் காலத்தில் தேவைப்பட்டதுபோல் இந்த நவீன யுகத்தில் பிரசங்கத்தை நம்பியிராமல் திரைப்படத்தை நாடவேண்டும் என்று யார் சொன்னது? திரைப்படம் இல்லாத குறையாலா இயேசுவும், பவுலும், பேதுருவும் பிரசங்கத்தை நம்பியிருந்தார்கள்? வெறும் வார்த்தையால் உலகத்தைப் படைத்த தேவ குமாரனுக்கு தன் காலத்தில் திரைப்படத்தை உருவாக்கியிருக்க முடியாதா? அவருடைய காலத்தில் இருந்த எந்தக் கலைகளையும்கூட அவரும், அப்போஸ்தலர்களும் சுவிசேஷம் சொல் லவும், சத்தியத்தை விளக்கவும் பயன்படுத்திக்கொள்ளவில்லையே. நாட்டியம், நடனம், நாடகம், தெருக்கூத்து போன்றவை அவர்களுடைய காலத்தில் இல்லாமல் இருக்கவில்லை. இருந்தபோதும் அவர்கள் பிரசங் கத்தையே நம்பினார்கள், அதையே பயன்படுத்தினார்கள். பிரசங்கத்தை நம்பாது, அதைச் செய்யும் திறமையில்லாது, அதைச் செய்வதற்கு எந்த வழிவகைகளையும் நாடாது வேறுவழிகளில் ஊழியம் செய்யப் பலர் புறப்பட்டிருப்பதால்தான் தமிழர் வாழும் நாடுகளிலெல்லாம் பிரசங்க ஆசீர்வாதத்தை அறியாமல் கிறிஸ்தவம் ஆவியின் வலிமையற்று தலை குனிந்து நிற்கிறது.
கடைசியாக ஒன்றை மட்டும் கூறிமுடிக்க விரும்புகிறேன். கர்த்தர் நம்மை மனிதர்களாகப் படைத்து சிந்திக்க மூளையைக் கொடுத்து, பேசவும், கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளவும் மொழியைக் கொடுத் திருக்கிறார். பாவிகளாகிய நாம் அவரை விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள அவர் எழுத்தையும், பேச்சையுமே பயன்படுத்தியிருக் கிறார். தமது சித்தத்தை முழுமையாக எழுதி வார்த்தையாக நமக்குத் தந்திருக்கிறார். அந்த வார்த்தையை நாம் பிரசங்கிக்கும்படியாகக் கட்டளையுமிட்டிருக்கிறார் (ரோமர் 10). ஏன் தெரியுமா? பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், நித்திய ஜீவனை அடையவும் மனிதன் முதலில் சிந்திக்க ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான். பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் வார்த்தைகளைப் பயன்படுத்தி மனிதனை சிந்திக்க வைத்து அவனுடைய பாவத்தை உணர்த்தி இரட்சிப்பை அவன் நாடி அடையும்படிச் செய்கிறார். நித்திய ஜீவனைப் அடைவதற்கு மனிதனுடைய மனம் செய்யவேண்டிய பணிகளைக் கண்கள் செய்ய முடியாது. வார்த்தையைக் கேட்டு சிந்திப்பதற்கு மனிதனுக்கு காதும் மனமும் அவசியம். கண்களல்ல. கண்கள் இல்லாத ஒருவன் காதுகளும், மனமும் இருந்து அவற்றைப் பயன்படுத்தி நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், காது கேட்காமலும், சிந்திக்கும் பக்குவம் இல்லாத அளவுக்கு மூளை இல்லாத ஒருவன் வெறும் கண்களை மட்டும் வைத்துக் கொண்டு பரலோகம் போக முடியாது. கண்கள் அவை எத்தனைக் கூர்மை உள்ளவையாக இருந்தபோதும் இரட்சிப்புக்குரிய செயல்களுக்கு பயன்படாது. காட்சிகள் அதிக நேரம் நீடிக்காது. ஒரு காட்சியை வைத்து மனதால் சிந்திக்க முடியாது. காட்சிகளின் பணி கருத்துக்களை விளக்குவது அல்ல, கண்களுக்கு விருந்து அளிப்பதுதான். ஆனால், மனம் காதால் கேட்ட கருத்துக்களை தொடர்ந்து சிந்திக்கும். அவற்றை அசைபோடும். கேட்ட, சிந்தித்த கருத்துக்களின் அடிப்படையில் ஒரு தீர்மானத்திற்கு வரும். அதனால்தான் படத்தைவிட பிரசங்கம் அவசியம். வாசிப்பதற்கு வார்த்தைகள் அவசியம். கேட்பதற்கு காதுகள் அவசியம். சிந்திப்பதற்கு மனம் அவசியம். இவை தெரியாமலா நம்மைப் படைத்த கர்த்தர் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு, பிரசங்கிக்கிறவனுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் (ரோமர் 10:15) என்று எழுதிவைத்திருக்கிறார்.
very good articles….
LikeLike