‘பரிசுத்த வேதாகமம்’
நீங்கள் வெளியிட்டுள்ள பரிசுத்த வேதாகமம் என்ற நூலுக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை விளங்கிக்கொள்ளக் கூடிய இலகுவான வழிகாட்டி நூலாக இதனை எழுதியிருந்தீர்கள். இதில் கையாளப்பட்டுள்ள சொற்பிரயோகம், மொழிநடை என்பன நன்றாக இருந்தன. இதிலும் புத்தகத்தை ஒரு கேள்வியுடன் ஆரம்பித்திருப்பது வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஆவிக்குரிய நூல்கள் நம்மத்தியில் இல்லாதது கவலை தருகிறது. ஏனெனில், இன்று திருச்சபையிலும், தனிப்பட்ட மனித வாழ்க்கையிலும் போலித்தனமான சத்தியங்கள் அலைமோதுவதைக் காண்கிறோம். வேதத்தில் ஒருசில பகுதிகளையும், சத்தியங்களை மட்டும் அறிந்து கொண்டிருந்தால் போதுமானது என்று பல ஊழியர்களும், விசுவாசிகளும் இன்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்நூல் வேதத்தின் ஒவ்வொரு நூலையும், சத்தியத்தையும், வார்த்தையையும் ஆராய்ந்து, உணர்ந்து படிக்கும்படியாக எம்மை உற்சாகப்படுத்துகிறது. மொத்தத்தில் பரிசுத்த வேதாகமத்தை தேவனே எங்களுக்கு ஆவியானவர் ஊடாக அருளினார் என்ற நம்பிக்கையை ஊட்டுவதாக இந்நூல் அமைகிறது.
தற்போதைய சூழ்நிலையில் தனிப்பட்ட விசுவாச வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கை யிலும், சபை வாழ்க்கையிலும் நாம் பின்பற்ற வேண்டிய காரியங்கள் யாவை என்றும், அவற்றை எவ்வாறு நடைமுறையில் செயலாக்க வேண்டுமென்பதையும், வேதாகமத்தில் ஆராய்ந்து பார்க்க பரிசுத்த வேதாகமம் என்ற இந்நூல் அளப்பரிய சேவை செய்கிறது. மேலும் போலியான சத்தியங்கள், போலியான வேதவிளக்கங்கள், தவறான வேதப்புரட்டுக்கள் என்பவற்றை இனங்கண்டு அவற்றிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், ஆவிக்குரிய வாழ்க்கையில் முன்னேறவும் இந்நூல் எம்மை ஊக்குவிக்கிறது.
தேவனுடைய பரிசு¢த வேதாகமத்தை எவ்வாறு படிக்க வேண்டும் என்றும் அதை எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ள எளிய நடைமுறை விளக்கங்கள் திருச்சபை மக்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும். பரிசுத்த வேதாகமத்தின் தன்மை, கர்த்தரின் அதிகாரம், கர்த்தரின் குணாதிசயங்கள், அவருடைய மாறாத்தன்மை, கிருபை, அன்பு, சர்வ வல்லமை, மேலும் மனிதர்களுக்கான நித்திய ஜீவன் ஆகிய சத்தியங்களையும¢ வேதத்தில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ள இந்நூல் துணை செய்கிறது.
இந்நூல் எங்கள் சபை மக்களுக்கு கிடைக்கக்கூடியதாயிருப்பது மிகவும¢ சந்தோஷத்திற் குரிய காரியமாகும். இத்தகைய நூல்கள் எங்களுடைய மக்களின் வேத அறிவை வளர்க்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இத்தகைய ஆவிக்குரிய நூல்களைக் கட்டாயமாகத் தொடர்ந்து வெளியிட்டு நாங்கள் வேத அறிவில் வளர நீங்கள் உழைப்பதற்காக நாம் நிச்சயம் தொடர்ந்து ஜெபிப்போம். வேதத்திற்கு ஒத்த விசுவாச விளக்கங்களைக் கொடுக்கின்ற நூல்களை பெற்றுப்படிப்பதில் நாம் மிகுந்த ஆவலோடு இருக்கிறோம்.
எஸ். ஜெயகாந்த், போதகர், ஸ்ரீ லங்கா
(‘பரிசுத்த வேதாகமம்’ என்ற தலைப்பில் வேதாகமத்தின் மெய்த்தன்மையை விளக்கும் நூல் 2002ல் வெளியிடப்பட்டது.)