இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு – Order of Salvation

வேத இறையியல் போதனைகளில் பரிச்சயமில்லாதவர்களுக்கு இது என்ன, இதுவரை கேள்விப்படாததொன்றாக இருக் கிறதே? என்ற சிந்தனை எழும். தமிழ் கிறிஸ்தவர்களின் ஆத் மீக வளர்ச்சிக்கு அவசியமான, திருச்சபைகளிலும், இறையியல் கல்லூரி களிலும் இன்று கேட்க முடியாததாக இருக்கின்ற சத்தான இறையியல் போதனைகளை எளிதான மொழியில் எல்லோரும் விளங்கிக்கொள்ளும் வகையில் தருவது நமது பத்திரிகையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அந்த அடிப்படையில் “இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு” பற்றி இந்த இதழில் முதல் தொடராக விளக்க முனைகிறேன்.

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை ஆங்கிலத்தில் Order of Salvation என்று அழைப்பார்கள். இதை இலத்தீனில் Ordo Salutis என்று அழைப் பார்கள். இரட்சிப்பில் படிமுறையாக ஒரு ஒழுங்கிருக்கிறதா? என்று எவராது கேள்வி எழுப்பலாம். ஆம்! அப்படி ஒரு ஒழுங்கை நாம் வேதத்தைக் கவனமாகப் படிக்கும்போது காணமுடிகிறது. அது என்ன? என்பது அடுத்த கேள்வியாக இருக்கும். நம்முடைய பாவத்திலிருந்து நம்மை விடுவித்து இரட்சிப்பை இலவசமாக நமக்கு வழங்கும் கர்த்தர் அந்தச் செயலை நம்மில் எப்படி ஆரம்பித்து நடத்தி இறுதியில் நம்மைப் பரலோகத்தில் கொண்டு சேர்க்கிறார் என்பது பற்றிய தெளிவான படிமுறையான விளக்கத்தையே “இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு” என்ற பதங்களின் மூலம் குறிப்பிடுகிறோம்.

இரட்சிப்பின் இந்தப் படிமுறையான ஒழுங்கை குறிப்பிட்டுக் காட்டுகின்ற முக்கிய வசனம் ரோமர் 8:29-30 ஆகிய வசனங்கள். இந்த வசனங்களில் அப்போஸ்தலன் பவுல், தேவன் மனிதகுலத்தில் தாம் முன்குறித்துள்ள மக்களை எந்தவிதமாக கிறிஸ்துவுக்குள் இரட்சித்து இறுதியில் மகிமைப்படுத்துகிறார் என்பதை சுருக்கமாக விளக்குகிறார். அப்படி விளக்கும்போது, கர்த்தரின் கிருபையின் கிரியையில் ஒரு ஒழுங்கை நாம் பார்க்க முடிகின்றது. தேவன் தாம் முன்குறித்த மக்களை முதலில் அழைக்கிறார் (Call); அப்படி அழைக்கப்பட்டவர்கள் அவ ரால் நீதிமான்களாக அறிக்கையிடப்படுகிறார்கள் (Justified); இறுதியில் அவர்களை அவர் மகிமைப்படுத்துகிறார் (Glorified) என்று பவுல் விளக்குவதைக் கவனிக்கிறோம். இந்தப் படிமுறை விளக்கம் சுருக்க மானதே. இந்த வசனங்கள் படிமுறையாக மூன்று முக்கிய கிருபைகளை மட்டும் குறிப்பிடுகின்றது – அழைப்பு, நீதிமானாக்குதல், மகிமைப் படுத்துதல். இதில் குறிப்பிடப்படாத வேறு சில முக்கிய கிருபைகளும் இருக்கின்றன. இந்தப் பகுதியில் அவை குறிப்பிடப்படாவிட்டாலும் அவற்றைப் பற்றி புதிய ஏற்பாட்டின் ஏனைய பகுதிகள் விளக்குகின்றன. அதாவது, கர்த்தர் தாம் முன்குறித்து தெரிந்துகொண்டிருக்கிற மக்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கும் கிரியை முதலில் அழைப்பாகிய கிருபையில் ஆரம்பித்து மறுபிறப்பு, நீதிமானாக்குதல், மகவேட்பு, பரிசுத்தமாக்குதல், மகிமையடைதல் ஆகிய கிருபைகளை உள்ளடக்கி யதாக அமைந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்கிறோம். சீர்திருத்த இறையியல் வல்லுனரான ஜோன் மரே (John Murray) இதைக்குறித்து பின்வருமாறு விளக்குகிறார், “இரட்சிப்பின் அனுபவம் நம்மில் நிகழ்ந்து விடுகிற சாதாரணமான ஒரு தனி நிகழ்வு மட்டுமே என்று நாம் எண்ணி விடக்கூடாது. அதில் படிமுறையாக பல நிகழ்வுகள் உள்ளடங்கியிருக் கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை. ஒன்றின் அடிப் படையில் இன்னொன்றை நாம் விளக்க முடியாது. ஒவ்வொன்றும் கர்த்தருடைய மீட்பின் கிரியையில் தனித்தனியான அர்த்தத்தையும், திட்டத்தையும் கொண்டு விளங்குகின்றன” என்கிறார்.

மேலே நாம் பார்த்த இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை மேலும் விரிவாக ஆராய முடியும். அப்படி அதை விரிவாகப் படிக்கும்போது அது மேலும் சில கிருபைகளையும் தனக்குள் உள்ளடக்கியிருப்பதைக் காணலாம். அதாவது, அழைப்பு, மறுபிறப்பு, மனமாற்றம், விசுவாசம், மனந்திரும்புதல், நீதிமானாக்குதல், மகவேற்பு, பரிசுத்தமாக்குதல், விடாமுயற்சி, மகிமையடைதல் ஆகியவையே அவை. இனி வரப்போகின்ற இதழ்களில் இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்வதோடு, படிமுறை ஒழுங்கில் எது எதற்குப் பிறகு வரவேண்டும் என்பதையும், அந்த ஒழுங்கில் ஒன்றிற்கு மற்றொன்றோடு இருக்கின்ற தொடர்பையும் விளக்கமாக ஆராயப் போகிறோம்.

தத்துவ ரீதியில் விளங்கிக்கொள்ள வேண்டிய படிமுறை ஒழுங்கு

இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் காணப்படும் கிருபைகள் ஒவ்வொன்றும் ஒன்றிற்குப் பின் இன்னொன்றாக கால இடைவெளியைக் கொண்டு நம்மில் நிகழ்வதாக நாம் தப்பாக எண்ணிவிடக் கூடாது. இவற்றைப் படிமுறையாக தத்துவ ரீதியில் (Logical order) மட்டுமே புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இவை ஒவ்வொன்றிற்கும் இடையில் கால இடைவெளி இருப்பதாக எண்ணிவிடாமல் இந்த ஒழுங்குவரிசையில் தத்துவ ரீதியில் எது முதலில் வர வேண்டும், அதற் கடுத்ததாக எது வரவேண்டும் என்று ஆராய்வது அவசியம். சீர்திருத்த இறையியல் வல்லுனர்கள் இந்தப் படிமுறை ஒழுங்கை கால இடை வெளியை மனதில் கொண்டு விளக்கவில்லை. மாறாக, அவர்கள் இரட்சிப்பாகிய கிருபை கர்த்தரின் ஞானத்தினதும், கிரியையினதும் அடிப்படையில் எந்தெந்தக் கிருபைகளை வரிசைக்கிரமமாக உள்ள டக்கியிருக்கிறது என்பதை தத்துவரீதியில் முறைப்படி விளக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். உதாரணமாக, முதலாவ தாக, கர்த்தர் தாம் தெரிந்துகொண்ட மக்களை அழைக்கிறார் என்று பார்த்தோம். இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் இதுவே முதலாவதாக அமைந்திருக்கின்றது. மறுபிறப்பு இதற்கு அடுத்தபடியாகத்தான் இந்த ஒழுங்குமுறையில் இருக்க வேண்டும். ஏனென்றால், அழைக்கப்பட்டவர்களே பரிசுத்த ஆவியின் மூலம் மறுபிறப்பை அடைகிறார்கள். தத்துவ ரீதியில் இந்த ஒழுங்குமுறையில் மறுபிறப்பு முதலாவதாக வர முடியாது. அதேபோல், நீதிமானாக்குதலுக்கு முன்னால் பரிசுத்தமாக்குதல் வர முடியாது. விசுவாசத்தின் மூலம் நீதிமானாகியவனே பரிசுத்தமாக்குதலாகிய கிருபையைத் தன் வாழ்க்கையில் அனுபவிக்கிறான். மணி அடித்த பிறகே கல்லூரி முடிகிறது. அதுவே ஒழுங்கு. அந்த ஒழுங்கை நாம் மாற்றி விளக்குவதில்லை. கார் எஞ்சினை சாவியால் ஆரம்பத்தில் திருப்புகிறபோதே எஞ்சின் ஓட ஆரம்பிக்கிறது. அதைப்போலத்தான் இதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இரட்சிப்பின் நிகழ்வில் கால இடைவெளி

கர்த்தர் நம்மை இரட்சிக்கும் விதத்தைக் கால இடைவெளியின் அடிப்படையில் விளக்குவதானால், அது கர்த்தர் நம்மில் வினாடிப் பொழுதில் (Momentary) செய்யும் கிரியை என்றே கூற முடியும். இரட்சிப்பை நாம் படிப்படியாகக் கர்த்தரிடம் இருந்து பெற்றுக் கொள்வ தில்லை. அதை நாம் முழுமையாகத்தான் அடைகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுவதைப் போலவோ அல்லது வித்து செடியாகிப் பின்னால் மரமாவதைப் போலவோ படிப்படியாக மறுபிறப்பு நம்மில் நிகழ்வதில்லை. கொடுக்கும் மறுபிறப்பைக் கர்த்தர் மொத்தமாக பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலம் நம்மில் ஒரே நேரத்தில் நிகழ்த்துகிறார். அப்படி நிகழ்ந்த மறுபிறப்பின் அனுபவத்தை நாம் முழுமையாக உணர்வதற்கு சில காலம் எடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மறுபிறப்பாகிய ஆவியின் கிரியை நம்மில் நிகழ்ந்து விசுவாசத்தை நாம் அடைகிறபோது அது நிகழ்ந்த வினாடியே அல்லது அந்த நேரத்திலேயே இரட்சிப்பின் நிச்சயம் எல்லோருக்கும் ஏற்பட்டு விடுவதில்லை. பெரும்பாலானோர் ஒரு குறுகிய காலத்துக்குப் பின்பே கிறிஸ்து இயேசுவை நிச்சயமாக நாம் விசுவாசிக்கிறோம் என்ற நம் பிக்கையுடன் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள சபையை நாடுகிறார்கள். இரட்சிப்பின் கிரியை நம்மில் ஆவியில் சடுதியாக நிகழ்ந்தபோதும் அதை முழுமனதோடு அனுபவரீதியில் மனந்திரும்புகிறவர்கள் உணர்வதற்கு நேரம் எடுக்கிறது. நம் சரீரத்தில் அடி விழுந்தால் அடி உடனடியாக விழுந்திருந்தாலும் அதன் வலியை முழுமையாக அதே நிமிடம் நாம் உணர்வதில்லை. ஆ! என்று உடனே அலறினாலும் நேரம் போகப் போகத்தான் வலியின் உக்கிரத்தை உணர ஆரம்பிக்கிறோம். அதைப் போக்கிக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். அதுபோலத்தான் இரட்சிப்பின் அனுபவமும்.

வரலாற்றில் சீர்திருத்த இறையியல் வல்லுனர்கள் கர்த்தரின் இரட்சிப்பின் கிரியையை இந்த முறையில் முறைப்படுத்தி ஆராய்ந்து விளக்கியிருக்கிறார்கள். இவ்வாறு முறைப்படுத்தி விளக்கும்போது இரட்சிப்பின் மெய்த்தன்மையை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது. சீர்திருத்த இறையியல் வல்லுனர்கள் இந்த விளக்கத்தை வேதத்தை ஆராய்ந்து அதிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள்.

இந்தப் போதனையை அறிந்திருக்க வேண்டிய அவசியமென்ன?

(1) இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கை நாம் அறிந்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? என்ற கேள்வி எழலாம். கர்த்தர் இரட்சிக்கிறார் என்பதோடு நிறுத்திக்கொள்ளக் கூடாதா? அதற்கு மேலே போய் இப்படி விரபமாக ஒரு ஆராய்ச்சி தேவையா? என்று வேதத்தை ஆழமாகப் படிப்பதையே பலர் விலக்கி வைத்திருக்கிறார்கள். இந்தத் தவறான அனுகுமுறையால்தான் தமிழ் கிறிஸ்தவம் வேத அறிவில்லாது தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு மனிதனின் சிந்தனையில் உதித்த செயற்கையான போதனை யல்ல. அது வேதம் விளக்கும் இரட்சிப்பு பற்றிய தெளிவான போதனை. வேதம் விளக்குகின்ற எதையும் நாம் விபரமாக அறிந்து வைத்திருப்பது அவசியம். இறையியல் போதனைகளை அறிந்து வைத்திருக்காமல் இரட்சிப்பின் அருமையை ஒருவன் உணரமுடியாது; கிறிஸ்தவ வாழ்க்கையில் வளர முடியாது; கர்த்தரை மகிமைப்படுத்த முடியாது.

(2) நாம் வாழும் கால கட்டத்தில் சுவிசேஷம் சுவிசேஷமாகப் பிரசங்கிக்கப்படுவதில்லை என்பது சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. “இயேசுவை ஏற்றுக்கொள், ஞானஸ்நானம் எடு” என்று இலவசமாக படியரிசி அளப்பதுபோல் இயேசு கிறிஸ்துவை அறிமுகம் செய்து வைத்து இரட்சிப்பின் அனுபவத்தை வாழ்க்கையில் அறியாத ஒரு கூட்டத்தை இன்றைய நவீன சுவிசேஷகர்கள் உருவாக்கி விட்டிருக் கிறார்கள். அத்தோடு, பரிசுத்த ஆவியானவரின் கிரியையை மகிமைப் படுத்துகிறோமென்று மெய்யான சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதையே கைவிட்டுவிட்டிருக்கிறது பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கம். இத்தகைய குழப்பமான தமிழ் கிறிஸ்தவ உலகில் இரட்சிப்பு என்றால் என்ன? அதை எந்தவிதமாக கர்த்தர் தன்னுடைய மக்களுக்கு அளிக்கிறார்? இரட்சிப்பைப் பெற்று அதை எவ்விதமாக விசுவாசிகள் தங்கள் வாழ்க்கையில் உணர்ந்து, பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்து இரட்சிப்பின் நிச்சயத்தை அடைகிறார்கள்? என்பதுபோன்ற கேள்விகளுக் கெல்லாம் தகுந்த விடையளிக்கிறது இரட்சிப்பின் படிமுறை ஒழுங்காகிய இறையியல் போதனை. இந்த சத்தியத்தைத் தெளிவாக அறிந்து கொள்வதால் கர்த்தரின் கிருபையின் மேன்மையையும், நமது விசுவாச வாழ்க்கையின் மேன்மையையும் நாம் நன்றாக உணர முடியும். அத்தோடு, போதனை செய்கிறவர்கள் அறிவுபூர்வமாக சுவிசேஷத்தைச் சொல்லி ஆத்துமாக் களின் ஆத்மீக வாழ்க்கைக்கு சரியான வழிகாட்ட முடியும். இரட்சிப் பாகிய கிருபையின் மெய்த் தன்மையையே அறிந்திராதவர்கள் எப்படி கர்த்தர் மகிமையடையும்படி சுவிசேஷம் சொல்ல முடியும்? ஆத்துமாக்களுக்கு நல்வழி காட்ட முடியும்?

(3) அடுத்ததாக, இரட்சிப்பாகிய கிருபை பற்றிய தவறான போதனைகளுக்கு நம்வாழ்க்கையில் இடம்கொடுப்பதை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். தமிழ் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் கர்த்தரின் மீட்பின் கிரியைகள் பற்றிய போதனைகளை தெளிவாக அறிந்து வைத்திருக்கவில்லை. அதனால், இரட்சிப்பு பற்றிய போலிப் போதனைகள் நம் மத்தியில் நிரம்பி வழிகின்றன. நீதிமானாக்குதல் பற்றியும் பரிசுத்தமாக்குதல் பற்றியும் தொடர்ந்தும் தவறான போதனைகள் சபைகள்தோறும், கிறிஸ்தவ குழுக்கள் தோறும் ஆண்டு வருகின்றன. நீதிமானாக்குதல் பற்றிய ரோமன் கத்தோலிக்க மதத்தின் போலிப் போதனைகளை தமிழ் கிறிஸ்தவம் வரவேற்று தாலாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. அது தவறான போதனை என்ற உணர்வே இல்லா மல் அநேகர் அவற்றைத் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். வேதத்தின் பரிசுத்தமாக்குதலாகிய போதனையை பெந்தகொஸ்தே, கெரிஸ்மெடிக் இயக்கங்கள் குழப்பி வைத்திருக்கின்றன. இரட்சிப்பு பற்றிய தெளிவான வேத அறிவில்லாமல் கர்த்தர் மகிமையடையும்படி ஒருவனால் எப்படி வாழ்க்கை நடத்த முடியும்? போலிப் போதனைகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளவும், கர்த்தர் தந்திருக்கும் இரட்சிப்பை அறிவுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் அறிந்திருக்கவும் இரட்சிப்பு பற்றிய தெளிவான வேத அறிவு நமக்கு அவசியம்.

(4) போதக ஊழியத்தை போதகர்கள் வேத அடிப்படையில் செய்வதற்கு இந்தப் போதனை உதவும். சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் கேட்டு வருகிறவர்களை ஆராய்ந்து அவர்கள் மெய்யாக இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்களா என்று அறிந்துகொள்ளவும், விசுவாசிகளாக இருந்து இரட்சிப்பின் நிச்ச யம் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு வழிகாட்டி இரட்சிப்பின் நிச்சயத்தை அவர்கள் அடைந்து களிகூறவும், புதிதாக கிறிஸ்துவை விசுவாசித்திருப்பவர்களுக்கு இரட்சிப்பின் மேன்மையையும் அதன் பல்வேறு அங்கங்களாகிய கிருபைகளையும் விளக்கிப் போதித்து அறிவுபூர்வமாக அவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்ற வழிகாட்டவும் போதக ஊழியத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்தப் போதனை உதவும். வீடு கட்டத் தெரியாத எஞ்ஞினியரை வைத்து ஒருவரும் வீடு கட்ட முயல்வதில்லை. ஆனால், ஆத்துமாக்களை விசுவாசிகளா என்று ஆராய்ந்து அறியும் பக்குவமில்லாத, அவர்களை பரிசுத்த வாழ்க்கையில் அறிவுபூர்வமாகவும், அனுபவபூர்வமாகவும் நடத்திச் செல்லத் தெரியாத நூற்றுக்கணக்கான போதகர்களை மட்டும் நம்மினம் வளர்த்து விட்டிருக்கிறது. இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு பற்றிய வேதபோதனை மெய்ப்போதகர்கள் தங்களுடைய போதகப் பணியை தேவபயத்துடன் கர்த்தரின் மகிமைக்காக நடத்திச் செல்ல உதவும். (மேலும் வரும்)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s