கேள்வி 90: கிறிஸ்துவை விசுவாசித்தல் என்றால் என்ன?
பதில்: தங்களுடைய இரட்சிப்பிற்காக பாவிகள் சுவிசேஷத்தின் மூலம் தமக்கு முன்வைக்கப்படுகிற கிறிஸ்துவைப் பெற்று அவரில் மட்டுமே தங்கியிருக்கும் இரட்சிப் பிற்குரிய கிருபையே கிறிஸ்துவை விசுவாசித்தலாகும்.
(எபேசியர் 2:8-10; யோவான் 1:12)
கேள்வி 91: ஜீவனுக்குரிய மனந்திரும்புதல் என்றால் என்ன?
பதில்: பாவி தன்னுடைய பாவத்தைக்குறித்த மெய்யான உணர்வோடும், கிறிஸ்துவில் கர்த்தர் தனக்களித்துள்ள கிருபையின் புரிந்துகொள்ளுதலோடும், துக்கத்தோடு தன்னு டைய பாவத்தை வெறுத்து, கீழ்ப்படிதலைத் தன்னுடைய முழுநோக்கமாகக் கொண்டு அதற்காக உழைக்கும்படி கர்த்தரை நாடும் இரட்சிக்கும் கிருபையே ஜீவனுக்குரிய மனந்திரும்புதலாகும்.
(அப்போஸ்தலர் 11:18; 2:37, 38; யோவேல் 2:12-13; எரேமியா 31:18-19; எசேக்கியல் 36:31; சங்கீதம் 119:59.)
விளக்கவுரை: மேல்வரும் இரு வினாவிடைகளும் கிறிஸ்துவின் மீட்பு எந்த வகையில் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் நிறைவேறுகிறது என்பதைப் பற்றியதாகும். மனந்திரும்புதல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு முதலில் பதிலைப் பார்ப்போம். ஒரு பாவியினுடைய இருதயத்திலும், ஆவியிலும் முழுமையான ஒரு மாற்றம் ஏற்பட்டு அவன் தன்னுடைய சுயநம்பிக்கை, சுயமதிப்பு எல்லாவற்றையும் துறந்து இரட்சிப்புக்காக கிறிஸ்துவை மட்டும் நாடி அவரை விசுவாசிப்பதே மனந்திரும்புதலாகும்.
ஒரு மனிதனில் இது எவ்வாறு நிகழ்கிறதென்பதை பின்வருமாறு விளக்கலாம்.
1. சுவிசேஷத்தை ஒரு மனிதன் கேட்டு ஆவியின் மூலம் மறு பிறப்பை அடையும்போதே அவனால் கர்த்தருடைய சத்தியத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது. மறுபிறப்பு மனிதனுடைய உள்ளத்தின் ஆழத்தில் ஏற்படுகிற ஆவியின் கிரியை. அதை அடையாதவனுக்கு சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும் வல்லமை கிடையாது. சுவிசேஷத்தின் மூலம் இயேசு அவனுக்கு தீர்க்கதரிசியாக அவனுடைய பாவத்தைப் பற்றியும், அதிலிருந்து விடுபட தன்னை அவன் விசுவாசிக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி தன்னைப் பற்றிய அறிவைத் தருகிறார். தன்னுடைய பாவத்தை உணர்வதும், கிறிஸ்துவைப் பற்றிய அறிவை அடைவதுமே மனிதனுடைய மனந்திரும்புதலின் முதலாவது அம்சம்.
2. மறுபிறப்பின் மூலமாக சத்திய வெளிச்சத்தை அடைந்த மனிதன் இப்போது உணர்வுபூர்வமாக தனிப்பட்ட முறையில் தன்னுடைய பாவத்துக்காக வருந்தி அதிலிருந்து விடுபடும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இது எல்லோரிலும் ஒரேவிதமாக நடந்துவிடாது. நபருக்கு நபர் வித்தியாசமாக இருந்தாலும் பாவ உணர்தலும், அதற்காக வருந்துதலும் இல்லாமல் எந்தவொரு மனிதனும் மனந் திரும்ப முடியாது.
3. ஒரு மனிதன் சுவிசேஷத்தைக் கேட்டு மறுபிறப்பை ஆவியின் மூலம் அடைந்து தன் பாவத்தை உணர்ந்து அதற்காக வருந்தி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தால் மட்டும் மனந்திரும்புதல் நிகழ்ந்துவிடாது. அவன் மனந்திரும்ப வேண்டும் என்கிறது சுவிசே ஷம். அவன் அதன்படி தன்னுடைய பழைய வழிகளைவிட்டு விலகி கிறிஸ்துவைத் தன்னுடைய பாவநிராவணத்துக்காக நம்பி விசுவாசிக்க வேண்டும். இதைச் செய்தபிறகே அவன் மனந்திரும்பியிருக்கிறான் என்று நம்மால் உறுதியாகக் கூறமுடியும்.
இதுவரை பார்த்ததிலிருந்து இரண்டு உண்மைகளை நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். (1) மறுபிறப்பு ஆவியானவர் ஒருவனில் செய்கிற கிரியை. (2) மனந்திரும்புதல் மனிதன் செய்ய வேண்டியது. கர்த்தர் மனிதனுக்காக மனந்திரும்ப முடியாது. அதனால்தான் ஒவ்வொரு பிரசங்கியும் மனிதன் மனந்திரும்ப வேண்டிய அவசியத்தை பிரசங்கத்தில் வலியுறுத்துவது அவசியம். இரட்சிப்பை ஒருவன் அடைய வேண்டுமானால் மனந்திரும்பாமல் அவனால் அதை அடைய முடியாது.
திட்ப உறுதியான அழைப்பின் பிறகே ஒரு மனிதனில் மறுபிறப்பு நிகழ்கிறது. அதன் பின்பே மனிதனால் மனந்திரும்ப முடிகிறது. மறுபிறப்பை அடையாதவன் மனந்திரும்புவதற்கு வழியில்லை. மனந்திரும்புகிறவன் இதனால் தன்னைப் பெருமை பாராட்டிக்கொள்ள முடியாது. ஏற்கனவே மறுபிறப்பை அடைந்திருப்பதாலேயே அவனால் மனந்திரும்ப முடிகிறது. அதை அவனே செய்ய வேண்டியிருந்தாலும் அதில் அவன் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. அவன் ஏன் மனந்திரும்ப வேண்டியிருக்கிறது? மறுபிறப்பாகிய ஜீவனைக் கர்த்தர் அவனுக்கு ஆவியின் மூலமாக அளித்திருப்பதால் அவன் மனந்திரும்ப வேண்டுமென்று அவர் கட்டளையிட்டிருக்கிறார். அத்தோடு ஜீவனை அடைந்திருக்கிற அவன் சுவிசேஷ அழைப்பை நிராகரிக்க வழியில்லை. சத்தியத்தை அறிந்து விளங்கிக் கொண்டிருக்கிறவன் அதை எப்படித் தூக்கிஎறிவான்? அவன் செய்யத் துடிக்கிற காரியத்தை அவனால் செய்யாமல் இருக்க முடியாது. இதனால்தான் மனந்திரும்பு தலையும் விசுவாசத்தையும் மனிதன் செய்யவேண்டிய காரியமாக மட்டுமல்லாமல் கர்த்தரின் ஈவாகவும் வேதம் விளக்குகிறது. பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்: “வாழ்வுக்கேதுவான மனந்திரும்புதலை தேவன் வேற்று இனத்தாருக்கும் அருளிச்செய்தார்.” (அப்போ. 11:18). “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவாகும்” (எபேசியர் 2:8). இதன் மூலம் மனந்திரும்புவதும், விசுவாசிப்பதும் நமது கடமை என்று வேதம் விளக்குவதைப் புரிந்துகொள்வது அவசியம். அதேவேளை கர்த்தர் நமக்களித்திருக்கிற ஜீவனுக்காக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருந்து அவரை மகிமைப்படுத்த வேண்டும். அவர் அளித்திருக்கிற மறுபிறப்பின் மூலமாகவே நாம் மனந்திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
போலியான மனந்திரும்புதலுக்கும், மெய்யான மனந்திரும்புதலுக்குமிடையிலுள்ள வேறுபாட்டையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். ஒருவருக்கு வெறும் வேத அறிவு மட்டும் இருந்துவிட்டாலோ அல்லது பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு மட்டும் இருந்துவிட்டாலோ அல்லது இரட்சிப்பைக்குறித்த ஆர்வம் மட்டும் இருந்துவிட்டாலோ அவையெல்லாம் மெய்யான மனந்திரும்புதலாகிவிடாது. அல்லது ஒரு மனிதன் சுவிசேஷக் கூட்டத்தில் எடுக்கும் ‘தீர்மானமும்’ மெய்யான மனந்திரும்புதலுக்கு அடையாளமாகிவிடாது. அது மனித சித்தத்தின் கிரியையே தவிர கர்த்தரின் ஆவியின் காரணமாக உருவான கிரியையாக இருக்காது. மெய்யான மனந்திரும்புதல் மனிதனுடைய உணர்ச்சிகளை மட்டுமோ அல்லது அறிவை மட்டுமோ பாதிக்காது முழுமையாக அவனுடைய இருதயம், உணர்ச்சிகள், ஆவி அனைத்தையும் பாதித்து அவனில் ஆவிக்குரிய பெரும் ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.
விசுவாசமும், மனந்திரும்புதலும் ஒருவனில் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டியவை. அதாவது, மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிற நாளை மட்டும் விசுவாசத்தின் முடிவாக தவறாகக் கருதிவிடக்கூடாது. அது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்ப நாள். அப்படி ஆரம்பித்த வாழ்க்கையில் மனந்திரும்புதலும், விசுவாசமும் தொடர்ந்திருக்க வேண்டும். மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசித்த நாளை மட்டும் பெரிதுபடுத்துவதால் எந்த நன்மையுமில்லை. அது முக்கியமானதாக இருந்தாலும் எல்லோராலும் நாளையும், நேரத்தையும் குறிப்பாக சொல்ல முடியாது. விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து விசுவாசமாக இருப்பதையே கர்த்தர் எதிர்பார்க்கிறார். அதுவே முக்கியம். இறுதிவரை நிலைத்திருப்பவனே கிறிஸ்தவன். “உங்கள் அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் நிச்சயமாக்கிக் கொள்ளும்படி கவனமாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருபோதும் இடறி விழுவ தில்லை.” என்கிறார் பேதுரு (2 பேதுரு 1:10).