பத்தாண்டுகால பத்திரிகை உலக அனுபவம்

தனிப்பட்ட முறையில் என்னைப்பற்றியும் என்னுடைய அனுபவங்களைப் பற்றியும் எழுதுவது எனக்குப் பிடித்தமில்லாத காரியம். இந்தப் பத்தாண்டுகளில் என்னைப்பற்றி அப்படி எதையும் நீங்கள் இந்தப் பத்திரிகையில் வாசித்திருக்கமாட்டீர்கள். கடந்த பத்தாண்டுகளை நினைவுகூருகிறபடியால் இந்தக் காலப்பகுதி காட்டித் தந்திருக்கின்ற உண்மைகளைப் பற்றி பேசுகிறபோது அதில் என் அனுபவங்களைக் குறிப்பிடுவது தவிர்க்க முடியாததாய் இருக்கிறது. இருந்தாலும் அவசியமானவற்றை மட்டும் பகிர்ந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.

தமிழினம் வாழ்கிற தேசங்களையெல்லாம் தள்ளி உலகத்தின் மறு கோடியில் இருக்கும் நியூசிலாந்து நாட்டில் ஒரு ஆங்கில சபைக்கு போதகனாக இருக்கும் என்னைத் தமிழில் ஒரு காலாண்டுப் பத்திரிகை நடத்தும்படி கர்த்தர் அழைத்த வரலாற்றை இன்றும் நினைத்துப் பார்த்தால் ஆச்சரிய மாகத்தான் இருக்கிறது. என்றாவது கிறிஸ்தவ இலக்கியப் பத்திரிகை யொன்றை தமிழில் வெளியிட வேண்டும் என்ற வாஞ்சையோ, வைராக் கியமோ, கனவோ, தரிசனமோ ஒருபோதும் எனக்கிருந்ததில்லை. தகுதியே இல்லாதவர்களும், தமிழெழுதத் தெரியாதவர்களும், இறையியலறிவு அறவே இல்லாதவர்களும் அத்தகைய காரியத்தில் மாம்சத்தின் துணிச்சலுடன் ஈடுபட்டு வருவது நாமறிந்ததே. வெறும் குருட்டார்வத்துடன் பெயர் வாங்கு வதற்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் செய்கிற காரியமல்ல பத்திரிகை வெளியிடுவது என்பதும் எனக்குத் தெரிந்திருந்தது. எதையும் சட்டென்று செய்துவிடுகிற, செய்யத் துணிகின்ற போக்கும் எனக்கென்றும் இருந்ததில்லை. அப்படியானால் திருமறைத்தீபம் பிறந்ததெப்படி? என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதல்லவா.

நானறிந்த நேசிக்கின்ற தமிழ்ப் போதகர்கள் சிலரின் வற்புறுத்தலின் விளைவே இந்தப் பத்திரிகை. “நாங்கள் அடிக்கடி படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவும், ஆத்துமாக்களுக்கு சபைகளில் போதிக்கவும் வசதியாக எங்க ளுக்கு எழுத்தில் இறையியல் போதனை தர முடியுமா?” என்று அடிக்கடி கேட்டு வந்த, நான் அன்பு செலுத்துகிற, என்மீது அன்பு வைத்திருக்கிற சில போதக உள்ளங்கள்தான் இந்தப் பணியில் என்னை ஈடுபட வைத்தன. இவர் கள் கேட்டதை எப்படிச் செய்வது என்று புரியாமல் குழம்பி என்னுடைய அருமை நண்பர்கள் இருவரிடம் ஒருநாள் இதைப் பகிர்ந்து கொண்டேன். அந்த இருவரும் எனக்குப் பலவருடங்கள் பரிச்சயமான உற்ற நண்பர்கள்; கர்த்தரின் பணியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறவர்கள்.

அதற்கு ஒரே வழி காலாண்டு பத்திரிகை ஒன்றை ஆரம்பித்து இருளிலிருக்கும் தமிழ் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு விடுதலை தருவதுதான் என்று அந்த இரண்டு நண்பர்களும் என்னை வற்புறுத்த ஆரம்பித்தார்கள். எவ்வளவு பெரிய காரியத்தை இத்தனை சுலபமாக சொல்லிவிட்டார்களே என்று நான் அதைப் பல மாதங்கள் அசட்டை செய்து வந்தேன். கல்லூரியில் படித்த காலத்தில் நான் இலக்கிய ஆர்வம் கொண்டு இலக்கியங்களைக் கற்றிருக்கிறேன்; எழுதியுமிருக்கிறேன். அது திருறைத்தீபம் ஆரம்பிப்பதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பு. தமிழிலேயே அதிகம் பேசாமல் வாழ்ந்து வருகிற நியூசிலாந்தில் இருந்து தமிழில் எழுதுவது எப்படி? அதற்கு எங்கிருந்து நேரம் கிடைக்கப்போகிறது? அதற்குப் பணச்செலவு, கொடுக்க வேண்டிய நேரம், புதிது புதிதாக எழுத வேண்டிய ஆக்கங்கள், எழுதியதைத் திருத்து வதற்கு நேரம், டைப் செய்து பிரின்டுக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் என்ற பத்திரிகை சம்பந்தமான வேலைகள் எல்லாம் பூதாகாரமாக உருவெடு த்து பயமுறுத்தியதோடு என்னைப் பின்வாங்கவும் செய்தது என்று சொன் னால் அது மிகையாகாது. என் நண்பர்களும் தொடர்ந்து பல மாதங்களாக ஒற்றைக் காலில் நின்று வற்புறுத்தி இறுதியில் சம்மதிக்க வைத்தார்கள். அவர்களுடைய ஜெபமும், ஊக்குவிப்பும், ஆதரவும்தான் 1995ல் திருமறைத்தீபத்தை எட்டுப் பக்கங்களோடு ஆரம்பித்து வைத்தது. அது பல்கிப் பெருகி இன்று 52 பக்கங்கள் கொண்ட காலாண்டுப் பத்திரிகையாக பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது.

இந்தப் பத்தாண்டு காலத்தையும் திரும்பிப் பார்க்கின்றபோது இதையெல்லாம் எப்படிச் செய்தோம் என்று மலைப்புத் தட்டுகிறது. கர்த்தரின் துணையும், சீர்திருத்த சத்தியத்தில் நண்பர்களும், வாசகர்களும் கொண்டிருக்கும் வாஞ்சையும், அவர்களுடைய ஊக்குவிப்பும்தான் இவ்வளவு தூரம் பத்திரிகையையும் என்னையும் அழைத்து வந்திருக்கிறது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். அது நீண்ட பாதை. பல ஆசீர்வாதங் களையும், உற்சாகத்தையும் அந்தப் பாதை தந்திருந்தாலும், சில வேளைகளில் ஏமாற்றத்திற்கும் இடம் கொடுத்திருக்கிறது. ஆரம்பத்தில் சத்தியத்தில் ஆர்வம் காட்டி இடையில் விழுந்துவிட்டவர்களையும் அந்தப் பாதையில் நான் சந்தித்திருக்கிறேன். இடையில் வந்து இணைந்துகொண்ட போதும் சத்திய வாஞ்சையோடு நம்மேல் பாசம் வைத்துப் பழகுகிறவர்களையும் அந்தப் பாதை எங்களுக்கு இனங்காட்டித் தந்திருக்கிறது. எப்படியிருந்த போதும் இருளில் இருக்கும் தமிழ் கிறிஸ்தவ உலகில் பலரின் கண்களைத் திறக்க பத்திரிகை தொடர்ந்து துணைபுரிந்து வருவது நெஞ்சைத் தொடு கின்றது. அந்த ஒரு காரியத்துக்காக மட்டுமே தொடர்ந்து பத்திரிகையை வெளியிட்டு வருகிறோம். கண்கள் திறக்கப்பட்டவர்களைக் கர்த்தர் பயன்படுத்தி தமிழினத்தில் போலித்தனமற்ற, தரமான கிறிஸ்தவ சபைகளைத் தம்முடைய மகிமைக்காக உருவாக்க வேண்டுமென்பதே எங்கள் விருப்பமும், ஜெபமுமாகும்.

இந்தப் பத்தாண்டுகாலப் பத்திரிகை அனுபவத்தில் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் அநேகம்.

1. சத்தியத்தில் வைராக்கியத்தை என்னில் அதிகரித்திருக்கிறது.

திருமறைத்தீபம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே எழுத வேண்டும் என்பதற்காகவும், எல்லோரும் வாசிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் எழுதாமல் சத்தியத்தைப் பகுத்து விளக்கவும், அதை சத்தியமாகப் போதிக்க வும் வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் உறுதியாக இருந்தேன். நம்மினத்தில் ‘கிறிஸ்தவம்’ என்று அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிற அத்தனைப் பிரிவுகளோடும் ஒத்துப்போய் சமய சமரச வியாபாரம் செய்யும் நோக்கம் எனக்கு என்றும் அறவே இருந்ததில்லை. பத்திரிகை ஆரம்பித்த சில வருடங்களிலேயே “எல்லோரோடும் ஒத்துப்போய் நீங்கள் ஏன் எழுதக் கூடாது? அது எல்லோரும் பத்திரிகையை வாசிக்க உதவுமே” என்று ஆலோசனை சொன்னவர்கள் அநேகம். சத்தியமாக இல்லாததை இனங் கண்டு அதை (வேத அடிப்படையில்) வெளிச்சம் போட்டுக் காட்டியபோது, “இதையெல்லாம் செய்யாமல் வெறும் சத்தியத்தை மட்டும் எழுதினால் போதுமே” என்று சொன்னவர்களும் உண்டு. சிப்பியை உடைத்துத்தான் முத்தைப் பெற்றுக்கொள்ளுகிறோம். அது வேறு வழியில் கிடைக்காது என்பது இந்த நண்பர்களுக்கு புரியவில்லையே என்று அப்போதெல்லாம் எண்ணியிருக்கிறேன். நம்மக்கள் சத்தியத்தின் அருமையை உணர்ந்து பின்பற்ற முதலில் அவர்களுடைய ஆத்மீக சரீரத்தில் ஏற்பட்டிருக்கிற புண் ணின் விளைவை அவர்களுக்கு உணர்த்தாமல் அதைச் செய்ய முடியாது என்பதால்தான் அவசியமான வேளைகளில் அசத்தியத்தை இனங்காட்ட நேரிடுகிறது. அதைச் செய்யும்போது அசத்தியத்துக்கு அடிபணிந்து அதைப் பரப்புகின்ற தனிபர்களை (தனிப்பட்ட முறையில் அவமதிக்காமல்) இனங் காட்ட வேண்டியிருக்கிறது. இதையெல்லாம் எதிர்மறையான இடை யூறுகளாகக் கருதாமல் சத்தியத்தில் எனக்கு வைராக்கியத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்களாகவே எப்போதும் கருதியிருக்கிறேன். நான் ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறவனாக மாறிவிடாமல் சத்தியத்தில் வைராக்கியத் தோடிருக்க கர்த்தரின் கிருபை எனக்கு இன்றும் உதவிக்கொண்டிருக்கிறது.

2. என்னை சத்தியத்தில் வாஞ்சையோடு வளர வைத்திருக்கிறது.

இருபத்தேழு வருட காலமாக நான் விசுவாசித்து வருகின்ற சீர்திருத்த போதனைகளில் தீவிரமான வாஞ்சையோடு தொடர்ந்து வளர திருறைத் தீபம் உதவி வருகின்றது. விசுவாசிக்கும் சத்தியத்தை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறபோதும், அந்த சத்தியம் பலரின் கண்களைத் திறக்கின்ற அற்புதத்தைக் காண்கிறபோதும், சத்தியத்தின் மகிமையை உணர்ந்து அதை மேலும் தீவிரத்தோடு பின்பற்ற முடிகின்றது; வளர முடிகின்றது. சத்தியத்தை விற்றுப் பிழைப்பவர்கள் மத்தியில் சத்திய வாஞ்சையுள்ளவர்களோடு இணைந்து வளர, பாடுபட உதவி வருகிறது திருமறைத்தீபம்.

3. இப்பத்திரிகைப் பணி கடந்த பத்தாண்டுகாலமாக நேரத்தை மீதப்படுத்தி என்னை அதிகம் உழைக்க வைத்திருக்கிறது

விடிவதற்கு முன்னும், இருள் படர்ந்து எல்லோரும் தூங்கியபின்னும் வாசிக்கவும், எழுதவும், எழுதியவற்றை சரிபார்க்கவும் வைத்திருக்கிறது. இருபத்திநாலு மணி நேரங்கள் போதாது என்று எண்ணிக் கொண்டிருந்த என்னை நேரத்தை மீதப்படுத்தி உழைக்க வைத்திருக்கிறது. முன்பு ஒவ்வொரு நாளும் எத்தனை மணி நேரங்களை வீணாக்கியிருந்திருக்கிறோம் என்பதை உணர்த்தியிருக்கிறது. நேரமில்லை, நேரமில்லை என்று சொல்லுகிறவர்கள் இருக்கும் நேரத்தில் அநாவசியமாக கழிக்கும் நேரத்தை மீதப்படுத்தி உழைத்தால் கர்த்தருக்கு மகிமை சேரும். அவருடைய பணிகளையும் செவ்வையாய் செய்யலாம் என்பதை இந்தப் பத்தாண்டு காலம் உணர்த்தியிருக்கிறது.

4. என் வாசிப்பின் பலனையும், உழைப்பின் பலனையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள வைத்திருக்கிறது.

இந்தப் பத்தாண்டு காலத்தில் பத்திரிகை ஆசிரியன் என்ற முறையில் நான் கற்றுக்கொண்டவைகள் அநேகம். தரமான ஆக்கங்களை வேத அடிப்படையில் தயாரித்து வழங்க வேண்டும் என்ற உந்துதல் என்னை அதிகம் வாசிக்க வைத்திருக்கிறது. இதற்கு முன்பு வாசித்ததைவிட வாசிப்பில் அதிக கவனம் செலுத்த உதவிசெய்திருக்கும் திருமறைத்தீபத்துக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் பத்தாண்டுகளில் பத்திரிகை ஊழியத்துக்காக சிரமத்துடன் வாசித்திருக்கும் நூல்கள், சஞ்சிகைகள், கட்டுரைகளின் பட்டியலை எண்ணிப் பார்க்கிறேன். அவை கிறிஸ்தவ உலகின் தற்கால சிந்தனைப் போக்கை எனக்கு புலப்படுத்தியிருக்கின்றன. புதுரூபம் எடுத்து உலவி வரும் போலிப் போதனைகளை அடையாளங்காண உதவியிருக்கின்றன. என் சிந்தனை வளர்ச்சியடைய உதவியிருக்கின்றன.

வாசிப்பது போதகனுக்கு அவசியமான பணி. வாசிப்பு நம்மை சிந்திக்க வைக்கிறது; வேத அறிவில் வளர உதவுகிறது; வேத சத்தியங்களைத் துல்லியமாக விளக்க உதவுகின்றது. அசத்தியத்தைத் தோலுரித்துப் பார்க்கவும் உதவுகிறது. காலத்தைப் புரிந்துகொண்டு ஆத்துமாக்களுக்கு ஆத்மீக வழிகாட்ட வாசிப்பும், சிந்தனையும் அவசியம். என் வாசிப்பின், சிந்தனையின் பலன்களை வாசகர்களோடு பகிர்ந்துகொள்வது எனக்குக் கிடைத்துள்ள பெரிய ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். அதற்கு வாய்க்காலாக இருந்து வருகிறது பத்திரிகை.

5. தமிழினத்தில் கிறிஸ்தவத்தின் நிலையை உணர வைத்திருக்கிறது.

பத்திரிகையை ஆரம்பிக்கு முன் தமிழினத்தைவிட்டு விலகி தூர தேசத்தில் சபைப்பணி புரிந்துகொண்டிருந்த நான் நம்மினத்தின் ஆத்மீக அவல நிலை பற்றி ஓரளவே அறிந்து வைத்திருந்தேன். வேதபூர்வமான சீர்திருத்த கிறிஸ்தவம் நம்மினத்தில் வளர்ச்சியுறாமலிருந்தது ஏற்கனவே எனக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும் ஆத்மீகப் புண் எந்தளவுக்கு சிதலுற்று விஷம் போலப் பரவி சரீரத்தையே பாதிக்குமளவுக்கு பரவியிருக்கிறது என்பதை பத்திரிகைப் பணி மூலமே தெளிவாக அறிந்துகொள்ள முடிந்தது. வாசகர் களிடமிருந்து தொடர்ந்து வரும் கடிதங்களும், போதகர்களோடு நடந்த பல்வேறு பரிமாறல்களும், தமிழினத்து சபைகளோடு இருக்கும் தொடர்பும் நம்மினத்தில் கிறிஸ்தவம் இருண்ட காலத்தில் இருப்பதை தெளிவாக விளக்கின. கிறிஸ்தவம் என்ற பெயரில் புடவைக்கடை பொம்மை போல வெளிப்பார்வைக்கு அழகாக என்னென்னவோ நடந்து வந்தபோதும், சத்தியத்தை வைத்து வியாபார விபச்சாரம் நடந்து வருகின்ற அலங்கோலங்களை அறிந்துகொள்ள முடிந்தது. அது எனக்கு வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தவில்லை; அந்த நிலைமாற எதையாவது செய்தே ஆக வேண்டும் என்ற ஆதங்கத்தையும், ஊந்துதலையும் என் உள்ளத்தில் ஏற்படுத்தியது. அதற்காகப் பத்திரிகைக்கும் அதை ஆரம்பிக்கக் காரணமாக இருந்த கர்த்தருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும்.

6. சத்தியத்தை நேசிக்கிறவர்களுக்காக உழைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை உண்டாக்கியிருக்கிறது

நாம் நேசிக்கின்ற அதே சத்தியத்தை நேசிக்கிறவர்களை சந்திப்பதும், அவர்களோடு இணைந்து வாழ்வதும், உழைப்பதும் தரும் ஆத்ம திருப்தியை சொல்லில் விளக்கிவிட முடியாது. “என்னைப் போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்தில் இல்லை” என்று பவுல் தீமோத்தேயுவைக் குறித்து பிலிப்பியர் 2:20ல் சொல்லுகிறார். தீமோத்தேயு வெறும் விசுவாசியல்ல, பவுல் வாஞ்சித்தவைகளில் நம்பிக்கை வைத்து பவுலைப் போல வைராக்கியமுடைய விசுவாசியாக இருந்தான். அவனோடு உறவாடுவதும், இணைந்துழைப்பதும் பவுலுக்கு எல்லையற்ற திருப்தியை அளித்தது. அதுபோல சத்தியத்தில் வாஞ்சையுள்ளவர்களை இனங்கண்டு அவர்களோடு இணைந்துழைக்க வேண்டும் என்ற வைராக்கியத்தை இந்தப் பணி என்னில் ஏற்படுத்தியிருக்கிறது.

7. தமிழை நேசிக்கச் செய்திருக்கிறது

பத்து வருடங்களுக்கு முன்பு பத்திரிகையை ஆரம்பிக்கும்போது தமிழில் பேசுவதும், எழுதுவதும் அருகிப்போய் தாய்மொழியே அந்நிய மொழி யாகிவிடுகிற நிலையில் இருந்தபோதுதான் அதன் மேன்மையை உணர்த்துவதுபோல் வந்து அமைந்தது தமிழில் என்னுடைய எழுத்துப் பணி. எழுத்தில் போதனை வேண்டும் என்று கேட்ட நண்பர்களின் உந்துதலால் ஆரம்பித்த இந்தப் பணி முலம் மறுபடியும் என் தாய் மொழியை நேசிக்க ஆரம்பித்தேன். அதன் அருமையை உணர ஆரம்பித்தேன். பிறந்ததிலிருந்து பேசி வளர்ந்த மொழியை இழந்துபோகிற நிலையின் கொடுமையை முதல் தடவையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இது எத்தனை பேருக்கு புரிகிறதோ இல்லையோ எனக்குப் புரிந்தது. இதற்காக வேற்றுமொழிகளைக் கற்றுக் கொள்ளக்கூடாது என்பதில்லை. எதை இழந்தாலும் தாய்மொழியை இழக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம் என்று எனக்குப்படுகிறது. காலம் கடந்து நான் கற்றுக்கொண்ட உண்மை இது. நம் நாட்டிற்கு வந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தவர்கள் நம் மொழியைக் கற்றுக்கொள்ள எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள் என்பதையும் உணர முடிந்தது. கர்த்தரின் கிருபையால் நமக்குக் கிடைத்த அருமை மொழி, அது எதுவாக இருந்தா லும் எவரும் அதை இழந்துபோகக் கூடாது என்பதை இப்போது நான் உணர உதவி செய்திருக்கிறது திருறைத்தீபம்.

கடந்த பத்தாண்டுகளாக பத்திரிகை காட்டித் தந்துள்ள பாதையில் வாசகர்களோடு இணைந்து வாஞ்சையோடு தொடர்ந்து பயணம் செய்ய கர்த்தர் இனி வருங்காலத்திலும் உதவுவார் என்ற நம்பிக்கையோடு எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன். விடியும் என்ற நம்பிக்கையோடு இருட்டில் விளக்கேந்தி வெளிச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s