கிறிஸ்து போதிக்கும் திருச்சபை ஊழியத்தை வேதத்திலிருந்து ஆராய்ந்து வருகிறோம். இதில் மூன்றாவது தலைப்பான சுவிசேஷ ஊழியத்தில் திருச்சபையே அதிமுக்கியமானதும், அடிப்படையானதுமான இடத்தை வகிக்கிறது. சுவிசேஷ ஊழியங்கள் எப்போ தும் திருச்சபையில் ஆரம்பித்து திருச்சபை அமைப்பதிலேயே போய் முடிய வேண்டும் என்பதை ஏப்ரல்-ஜூன் 2006 காலாண்டு இதழில் விளக்க ஆரம்பித்தோம். அவ்விதழில் கர்த்தருடைய திருச்சபையின் மகிமை புதிய ஏற்பாட்டில் விளக்கப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்தோம். கர்த்தருடைய ஊழியங்கள் அனைத்தும் அவருடைய திருச்சபையினூடாக நடைபெற வேண்டியது எந்தளவுக்கு முக்கியமென்பதை உணர்வதற்கு அவருடைய திருச்சபையின் மகிமையைப் பற்றிய வேத அறிவு அவசியம். நாம் வாழ்கிற இக்காலப்பகுதியில் கர்த்தருடைய திருச்சபை பற்றிய அறிவு விசுவாசிகள் மத்தியில் அருகிக் காணப்படுகின்றது. திருச்சபை பற்றிய அறிவில்லாததால் அதில் வாஞ்சையின்றி கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். திருச்சபை பற்றிய உணர்வில்லாமல் புற்றீசல்போல் அதிகரித்து கிறிஸ்தவ ஊழியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் தொகை நம்மத்தியில் எண்ணிமாளாது. திருச்சபைக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற எண் ணப்போக்கில் அநேகர் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். தமிழ் மக்கள் மத்தியில் கிறிஸ்தவம் இன்றைக்கு திருச்சபையில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இதன் காரண மாகவே கடந்த இதழில் வேதம் திருச்சபையின் மகிமையைப் பற்றி எந்தள வுக்கு ஆணித்தரமாக விளக்குகிறது என்று பார்த்தோம்
இனித் திருச்சபையைப் பற்றி அந்த ஆக்கத்தோடு தொடர்புடைய வேதம் போதிக்கும் சில முக்கியமான உண்மைகளை இந்த இதழில் பார்ப்போம்.
இயேசு திருச்சபையைக் கட்ட இந்த உலகத்துக்கு வந்தார்
மத்தேயு 16:18 வசனத்தில் இயேசு “என் சபையைக் கட்டுவேன்” என்று ஆணித்தரமாகக் கூறியிருக்கிறார். இந்த வார்த்தைகளின் மூலம் இயேசு தரும் விளக்கத்தை விளங்கிக்கொள்ளுவது அவசியம். இங்கே அவர் “சபை” (Ekklesia) என்று பயன்படுத்திய வார்த்தையே மத்தேயு 18:17 வசனத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே வார்த்தையைப் புதிய ஏற்பாட்டின் ஏனைய நூல்களிலும் காணலாம். இந்த வார்த்தை புதிய ஏற்பாட்டில் 117 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உள்ளூர் சபைகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்தேயு 16:18; 18:17 ஆகிய வசனங்களில் இந்த வார்த்தை உள்ளூர் சபைகளை மட்டும் கருத்தில்கொள்ளாமல் உலக முழுவதுமுள்ள உலகளாவிய சபையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இயேசு இந்த உலகத்தில் ஓர் இடத்தில் மட்டும் சபையைக் கட்டி எழுப்புவதற்காக வராமல் உலக முழுவதும் எல்லாப் பகுதிகளிலும் ஜாதி, இன வேறுபாடின்றி ஆத்துமாக் களைக்கூட்டி தன்னுடைய சபையைக் கட்ட வந்தார் என்பது இதற்குப் பொருள்.
சிலர் உலகளாவிய சபையை (Universal Church) வெறும் ஆத்துமாக்களின் கூட்டமாக மட்டும் விளக்கி அது ஏதோ கண்களுக்குப் புலப்படாத (Invisible) சபை என்பது போல் கருதி வருகிறார்கள். இது மிகவும் தவறான எண்ணம். ஆத்துமாக்களை நாம் எப்போதுமே உலகத்தில் கண்களால் காணமுடியும். உள்ளூர் சபையை ஓரிடத்தில் காணமுடிவதுபோல், உலகளாவிய சபையையும் நாம் உலகெங்கும் கண்களால் பார்க்க முடியும். பவுல், “தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தினேன்” என்று (கலா. 1:13, பிலிப். 3:16) கூறியபோது ஒரு சபையை மட்டும் மனதில் வைத்து பவுல் அதைச் சொல்லவில்லை. கண்களால் காணமுடியாத ஆத்துமாக்களை பவுல் துன்பப்படுத்தியிருக்க முடியாது. உலகளாவிய சபைகள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்ப்பது முடியாத காரியம் என்றாலும், அவற்றை நாம் உலகில் ஒவ்வொரிடத்திலும் பார்க்க முடியும். உலகெங்கும் அது கூடி இயேசுவின் பிரசன்னத்தை அறிந்து ஆராதிக்கிறது. அந்த உலகளாவிய சபைக்கு அதிகாரம் இருக்கிறது; அதற்கு சபைத் தலைவர்கள் இருக்கிறார்கள்; அதற்கு அமைப்பிருக்கிறது; நிர்வாகமும் இருக்கிறது. அது வெளிப்படையாக நாம் கண்களால் பார்க்கக்கூடிய சபை. கண்களால் காண முடியாத சபை என்று ஒன்றில்லை. (There is no such a thing as an invisible church). கர்த்தருடைய ஆவியின் இரட்சிப்புக்குரிய கிரியைகளின் அடிப்படையில் கண்களால் பார்க்கமுடியாத சில ஆவியின் கிரியைகள் ஆத்துமாக்களில் நிகழ்கின்றபோதும் (அழைப்பு, மறுபிறப்பு ஆகியவை), திருச்சபையைப் பற்றி விளக்கும்போதும் அதில் கண்களால் காணமுடியாத அம்சங்கள் எதுவும் இல்லை என்பதை உணர்வது அவசியம். “சபை” என்ற புதிய ஏற்பாட்டுப் பதம், “கர்த்தரால் அழைக்கப்பட்டு கூடிவருகிறவர்கள்” என்ற தெளிவான அர்த்தத்தைக் கொண்டிருப்பதால் உலகளாவிய சபை எப்போதும் நாம் கண்களால் பார்க்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
இவ்வாறாக இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் விசுவாசிகளைக் கூட்டி சபை அமைப்பும், நிர்வாகமும், சபைத்தலைவர்களுமுள்ள தன்னுடைய திருச்சபையைக்கட்ட வந்தார். “சபை” (Church-Ekklesia) என்ற வார்த்தையே தெளிவாக புதிய ஏற்பாடெங்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஓரிரு வசதி மிக்க தலைவர்களைக் கொண்டுள்ள IEM, BYM, FMPF, விஸ்வவானி போன்ற ஸ்தாபனங்களையோ (para-church organizations), பிரசிடென்ட், வைஸ்பிரசிடென்ட் என்று பெயர் சூட்டிக்கொண்டு இயங்கும் தனிநபர் ஊழியங்களையோ, கணவன், மனைவி, மகன், மருமகள் ஆகியோரை மட்டும் கொண்டு நடத்தப்படும் குடும்ப ஊழிய வியாபாரத்தையோ, சமய சமரச பைபிள் காலேஜுகளையோ, சபையால் அனுப்பப்படாமல் தன்னிச்சையாக தனக்குத்தானே இராஜாவாக ஊர் ஊராகப் போய்க் கூட்டங்களில் பேசி பணம் வாங்கிவரும் நபர்களை உருவாக்கவோ இயேசு கிறிஸ்து இந்த உலகத்துக்கு வரவில்லை. இயேசு நேசிப்பது இவற்றையல்ல, தன்னுடைய சபையை; அவர் தன்னுடைய இரத்தத்தைப் பலியாகச் செலுத்தி சம்பாதித்தது இவற்றையல்ல, தான் நேசிக்கும் தன்னுடைய சபையை. இயேசு தன் மனைவியாகிய சபையைக் கட்டவந்தார் (எபேசி. 5:25); தேவனின் குடியிருப்பாகிய வீட்டைக் கட்டவந்தார் (1 தீமோ. 3:15); தன் சரீரமாகிய சபையைக் கட்டவந்தார் (1 கொரி. 12): பரிசுத்த ஆவியின் ஆலயமாகிய சபையைக் கட்டவந்தார் (2 கொரி. 6:16) என்கிறது வேதம்.
கிறிஸ்தவ “ஊழியங்களை” எல்லாம் சபைகளாகக் கருத முடியாது; அவற்றில் சபையில் மட்டுமே நாம் பார்க்கக்கூடிய சபைக்குரிய இலக்கணங்கள் இல்லை. குரங்கை நாம் ஒருபோதும் மனிதனாக நினைப்பதில்லை, அதற்கு ஒருவித மனித தோற்றம் இருக்கிறதே என்பதற்காக அதை நாம் மனிதன் என்று அழைப்பதில்லை; மனிதனாக நடத்துவதுமில்லை. அதேபோல்தான் ஊழியங்களும். இன்று திருச்சபை பற்றிய சத்திய வேதத்தின் அடிப்படைப் போதனைகளை நமது இனம் அறியாமல் இருப்பதால் திருச்சபை மேல் இயேசுவுக்கு இருக்கும் வாஞ்சையும், வைராக்கியமும் இல்லாமல் மனம் போனபோக்கில் ஊழியம் என்ற பெயரில் எதையெதையோ செய்து கொண்டிருக்கிறது. சபையை மனதில் கொண்டு, சபைக்காக இந்த உலகத் திற்கு வந்து மரித்து அதை உருவாக்கியிருக்கும் இயேசு திரும்பவும் வருகிறபோது சபையை மட்டும் தன்னோடு கொண்டுபோகவே வரப்போகிறார் (எபேசி. 1:15-23; வெளி. 22:16; வெளி. 21). அந்த நேரத்தில் சபைத்தொடர்பில்லாமல் வாழ்கிறவர்களும், சபையை உதாசீனம் செய்து வேறு ஊழியங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடித்து சுயத்தை மட்டும் திருப்தி செய்துகொண்டிருப்பவர்களும் அவரைப் பார்த்து என்ன சொல்லப்போகிறார்களோ?
திருச்சபை ஆத்மீக அதிகாரம் கொண்ட அமைப்பு
றிஸ்தவர்கள் மீது ஆத்மீக அதிகாரமுள்ள நிறுவனமாக இருப்பது திருச்சபை மட்டுமே. இதை வேதம் தெளிவாக விளக்குகிறது. மத்தேயு 16ஆம் அதிகாரமும், 18ஆம் அதிகாரமும் திருச்சபை பற்றிய போதனைகளைக் கொண்டுள்ளன. மத்தேயு 16 ஆம் அதிகாரத்தில் இயேசு தன்னை தேவ குமாரன் என்று சரியாக அங்கீகரித்த பேதுருவைப் பார்த்து, “நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளுவதில்லை” என்றார். இதில் இயேசு திருச்சபையின் தலைவன் தானே என்றும், இறையாண்மையுடைய தானே திருச்சபையைக் கட்டுவேன் என்றும் உறுதியாகக் கூறியிருக்கிறார் (மத்தேயு 16:18). அதுமட்டுமல்லாது, தொடர்ந்து இப்பகுதியில் அவர் பேதுரு சொன்ன வார்த்தைகளின் அடிப்படையில் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களைக் கொண்டு அச்சபை கட்டப்படுமென்றும், அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளவும், ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதற்குமான ஆத்மீக அதிகாரத்தை அச்சபைக்குத் தான் வழங்குவதாகவும் கூறியிருக்கிறார் (மத்தேயு 16:19). உலகத்தில் வேறு எந்த நிறுவனமும் இத்தகைய ஆத்மீக அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. சமுதாயத்தில் மக்களை ஆளும் அதிகாரத்தோடு அரசாங்கத்தையும், குடும்பத்தை ஆளும் அதிகாரத்தோடு கணவனையும், பிள்ளைகளை ஆளும் அதிகாரத்தோடு பெற்றோர்களையும் நியமித்திருக்கும் கர்த்தர் விசுவாசிகள் மீது ஆத்மீக அதிகாரமுள்ளதாக தமது சபையை நியமித்திருக்கிறார். சபைக்குரிய இந்த ஆத்மீக அதிகாரத்தை அரசாங்கமோ வேறு எந்த அதிகாரமோ கட்டுப்படுத்தவும் கர்த்தர் உத்தரவு கொடுக்க வில்லை. நாட்டின் அதிகாரத்துக்குட்பட்டதாக திருச்சபை இருந்தபோதும் திருச்சபையின் ஆத்மீக அதிகாரத்தில் தலையிட அரசுக்கு உரிமையில்லை.
இந்த அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தது ரோமன் கத்தோலிக்க மதம். வேதம் போதிக்கும் இந்த ஆத்மீக அதிகாரத்தை விளங்கிக்கொள்ளாமல் விசுவாசிகளை உருவாக்குகின்ற நிறுவனமாகவும், மக்களை அடிமைப்படுத்தி ஆளும் நிறுவனமாகவும், அவர்களுடைய தனி மனித சுதந்திரத்தை நிராகரிக்கும் நிறுவனமாகவும் அது இந்த உலகில் செயல்பட ஆரம்பித்தது. விசுவாசிகளை கர்த்தரே பரிசுத்த ஆவியின் மூலம் உருவாக்குகிறார். மனிதர்களோ, எந்தவொரு நிறுவனமோ அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது. வேத அதிகாரத்துக்கு இடங்கொடுக்காததும், கிறிஸ்துவை அறியாததுமான கத்தோலிக்க மதம் கிறிஸ்துவின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டு பிசாசின் கையாளாக செயல்பட்டது; தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது.
ஆனால், வேத அடிப்படையில் இந்த உலகத்தில் நிறுவப்படும் கர்த்தரின் திருச்சபை மெய்யான ஆத்மீக அதிகாரத்தைக் கொண்டது. ஆத்துமாக்களின் விசுவாசத்தின் அடிப்படையில் அது அவர்களை சபையில் இணைத் துக்கொள்ளவும், அவர்களைப் பரிசுத்த வாழ்க்கையில் வழிநடத்தவும், அவர்கள் வழிதவறுகிறபோதும், வேதபோதனைகளுக்கு இணங்கி நடக்காதபோது திருத்தவும், அவசியமேற்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அதற்கு கர்த்தரே அதிகாரத்தைத் தந்திருக்கிறார். இந்த அதிகாரத்தின்படி திருநியமங்களை சரிவர கடைப்பிடித்து விசுவாசிகள் அவற்றை முறையாகக் கைக்கொள்ளவும், அவர்கள் தவறுகிறபோது அத்திரு நியமங்களைக் கைக்கொள்ள அவர்களைத் தடைசெய்யவும் திருச்சபைக்கு உரிமை உண்டு. மோசமான பாவங்களைச் செய்கிறவர்கள் திருந்த மறுக் கிறபோது அவர்களை திருச்சபையில் இருந்து விலக்கி வைக்கவும் அதற்கு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தைக் குறித்துத்தான் இயேசு கிறிஸ்து மத்தேயு 16:18-19 வசனங்களிலும், பின்பு மத்தேயு 18:14-20 வசனங்களிலும் விளக்குகிறார்.
இத்தகைய ஆத்மீக அதிகாரம் கிறிஸ்தவ சுதந்திரத்துக்கு எதிரானதல்ல. கிறிஸ்தவ சுதந்திரத்தை வலியுறுத்தும் கர்த்தரே தன்னுடைய வேதத்தில் திருச்சபைக்குள்ள ஆத்மீக அதிகாரத்தையும் விளக்கியிருக்கிறார். ஆகவே, கிறிஸ்தவ சுதந்திரத்தையும், சபையின் ஆத்மீக அதிகாரத்தையும் ஒன்றுக் கொன்று முரணானதாக தவறாக எண்ணிவிடக்கூடாது. தனி மனிதனுடைய கிறிஸ்தவ சுதந்திரத்தை திருச்சபையின் ஆத்மீக அதிகாரம் உண்மையில் பாதுகாக்கிறது. சபை அங்கத்தவராக இருக்கிற விசுவாசியின் பரிசுத்த வாழ்க்கைக்கு உதவிச்செய்து அவ்விசுவாசி கர்த்தரை மகிமைப்படுத்தும்படி வாழவே திருச்சபையின் அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் விசுவாசி தவறி கர்த்தருக்கும், சுவிசேஷத்திற்கும் இழுக்கேற்படுத்தும்படி நடக்கும்போதே திருச்சபையின் ஆத்மீக அதிகாரம் அவனுடைய வாழ்க்கையில் தலையிட நேரிடுகிறது. இதற்கும் தனிமனித கிறிஸ்தவ சுதந்திரத்துக்கும் தொடர்பில்லை. கர்த்தரே கிறிஸ்து தலைமை வகிக்கும் திருச்சபைக்கு இத்தகைய அதிகாரத்தைக் கொடுத்து வேத அதிகாரத்தை விசுவாசிகள் மத்தியில் நிலைநிறுத்தும் ஆத்மீக அதிகாரமுள்ள நிறுவனமாக அது இந்த உலகத்தில் இயங்க அனுமதித்திருக்கிறார்.
உண்மையில் வேதபூர்வமாக அமைந்து, வேத அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தி கர்த்தரை மகிமைப்படுத்தும் சபைகள் இருக்கும்போதே விசுவாசிகளுக்கு சமுதாயத்தில் பாதுகாப்பு இருக்கிறது. அவர்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கும், வளர்ச்சிக்கும் அவசியமான உறுதுணையாக அவை இருக்கும். வெறும் சபை என்ற பெயரை மட்டும் வைத்துக்கொண்டு சமுதாயத்தில் கல்லறைகளாக இயங்கும் அமைப்புகள் சமுதாயத்துக் கிடைத்த சாபமும், கேடுமாகும்.
திருநியமங்களையும், போதக ஊழியத்தையும் அளிக்கும் அதிகாரம் திருச்சபைக்கு மட்டுமே உண்டு
இயேசு கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்கு மத்தேயு 28:18-20 வசனங்களில் இறுதியாகக் கொடுத்த கட்டளையில் அவர்கள் தன்னுடைய கட்டளையின்படி சுவிசேஷத்தை உலகெங்கும் எந்தவித இனப்பாகுபாடுமின்றி அறிவித்து தம்மை விசுவாசிக்கிறவர்களுக்கு திரித்துவ தேவனின் பெயரில் ஞானஸ்நானம் கொடுத்து அவர்களுக்கு வேதபோதனைகள் அனைத்தையும் இறுதிவரைப் போதிக்கும்படிக் கட்டளையிட்டார். இந்தக்கட்டளை சுவிசேஷத்தை அறிவித்து உலகில் திருச்சபைகளை அமைக்கும்படியாக கிறிஸ்து அவர்களுக்குக் கொடுத்த கட்டளையாக இருக்கிறது. இக்கட்டளையைத் தலைமேல் தாங்கி அப்போஸ்தலர்கள் பெந்தகொஸ்தே தினத்தில் எருசலேமில் கூடிய யூதர்கள் மத்தியில் சுவிசேஷத்தை அறிவித்து திருச்சபையை நிறுவினார்கள் என்பதை அப்போஸ்தலருடைய நடபடிகள் 1, 2 அதிகாரங்கள் தெரிவிக்கின்றன.
இக்கட்டளையில் கிறிஸ்து முதலில், அப்போஸ்தலர்கள் சுவிசேஷத்தை எல்லோருக்கும் அறிவிக்கும்படி கட்டளையிட்டிருப்பதைப் பார்க்கிறோம். இரண்டாவதாக, சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பி இயேசுவை விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டும் ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படிக் கட்டளையிட்டார். இவ்வாறு ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் சபை அங்கத்தவர்களாக சபைக்குள் இணைக்கப்படுகிறார்கள். மூன்றாவதாக, ஞானஸ்நானம் பெற்ற வர்களுக்கு இறுதிவரை தான் போதித்துள்ள அனைத்தையும் போதித்து வளர்க்கும்படிக் கட்டளையிட்டார். இக்கடைசி நடவடிக்கை திருச்சபையில் ஆத்துமாக்கள் வாழவேண்டிய வாழ்க்கையைப் பற்றியதாகும்.
இந்தக் கட்டளையின்படி உலகத்தில் திருச்சபைகள் நிறுவப்பட வேண்டும். அதை ஆரம்பித்து வைத்தவர்கள் கிறிஸ்துவால் பயிற்சியளிக்கப்பட்ட அப்போஸ்தலர்கள். இப்படியாக கிறிஸ்து அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்த கட்டளை அவர்களுக்குப் பிறகு திருச்சபைக்கு உரியதாயிற்று. இன்று இக்கட்டளையை நிறைவேற்றும் உரிமையும், தகுதியும் திருச்சபைக்கே இருக்கிறது. தனி மனிதர்கள் சுவிசேஷத்தை சொல்ல முடிந்தாலும், இக்கட்டளை யிலுள்ள ஏனைய கடமைகளை திருச்சபை மட்டுமே செய்ய வேண்டும்.
இக்கட்டளையின்படி திருநியமங்களை அதாவது ஞானஸ்நானத்தையும், திருவிருந்தையும் விசுவாசிகளுக்குக் கொடுக்கும் அதிகாரம் திருச்சபைக்கு மட்டுமே உண்டு. உலகில் வேறு எந்த நிறுவனத்திற்கும் அதைச் செய்ய உரிமை இல்லை. அதுவும் திருச்சபைப் போதகர்கள் மட்டுமே இவற்றை விசுவாசிக்குக் கொடுக்கும் தகுதியையும், உரிமையையும் கொண்டிருக்கிறார்கள். வேதத்தைப் பின்பற்றி முறையாக சபை அமையாமல், போதகராக சபை அங்கத்தவர்களால் நியமிக்கப்படாத ஒரு மனிதர் தன் வீட்டில் ஒரு கூட்டத்தைக்கூட்டி அந்தக் கூட்டத்துக்கு இந்தத் திருநியமங்களை அளிப்பதற்கு கர்த்தர் எந்த மனிதனுக்கும் அதிகாரம் தரவில்லை. இயேசு கிறிஸ்துவை மெய்யாக விசுவாசித்து திருச்சபையில் அங்கத்தவர்களாக இணைபவர்களுக்கு மட்டுமே இவை அளிக்கப்பட வேண்டும். ஒரு விசுவாசியின் சீடத்துவ வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாக இவை இருக்கின்றன. வேத விதிகளைப் பின்பற்றி சபை முறையாக அமைந்த பிறகே திருநியமங்கள், அதாவது ஞானஸ்நானமும், திருவிருந்தும் சபையில் கொடுக்கப்பட வேண்டும் (மத்தேயு 28:18-20; அப்போ. 2:40-42; 1 கொரி. 10:16-17; 11:20-34).
அத்தோடு, சபை மக்களால் முறையாக 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய நிருபங்களில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கணங்களைப் பின்பற்றித் தெரிவு செய்யப்பட்ட போதகர்கள் ஆத்துமாக்களுக்கு கிறிஸ்து போதித்த அனைத்தையும் தவறாமல் போதிப்பதோடு (Regular pastoral preaching and teaching), போதக ஒழுங்கையும் (Pastoral oversight) அவர்களுக்கு வழங்க வேண்டும். இவற்றை ஆத்துமாக்களுக்கு அளிக்க திருச்சபையைத் தவிர வேறு எந்த நிறுவனத்தையும், அமைப்பையும் கிறிஸ்து உருவாக்கவில்லை. திருச்சபையை நிறுவாமல் சுயநல நோக்கத்தோடு வேத அங்கீகாரமில்லாத அமைப்புகளை நிறுவி இந்தக் கிருபையில் திருநியமங்களை செய்துவருகிறவர்கள் கர்த்தருக்கு ஒருநாள் கணக்குக் கொடுப்பதில் இருந்து தப்பவே முடியாது.
சபைக்குரிய ஊழியங்களை செய்யும் அதிகாரம் திருச்சபைக்கு மட்டுமே உண்டு
சுவிசேஷத்தை அறிவிப்பதும், திருநியமங்களை அளிப்பதும், ஊழியத் தகுதியுள்ளவர்களை (போதகர்கள்-மூப்பர்கள், உதவிக்காரர்கள், சபை நிறுவ அனுப்பப்படுகிறவர்கள், பிரசங்கிகள்) தெரிவுசெய்து நியமிப்பதும் திருச்சபைக்குக் கொடுக்கப்பட்டுள்ள கடமைகள். இயேசு கிறிஸ்துவின் இந்தக் கட்டளையை (மத்தேயு 28) அப்போஸ்தலர்கள் நிறைவேற்றி சபையை நிறுவினார்கள். இன்றைக்கு இந்தக் கடமைகளை நிறைவேற்றும் அதிகாரம் திருச்சபைக்கு மட்டுமே உண்டு. அதன்படி அப்போஸ்தலர் களால் நிறுவப்பட்ட திருச்சபையே சுவிசேஷத்தை அறிவிப்பதற்கு பவுலையும், பர்னபாவையும் ஆவியின் வழிநடத்தலின்படி தெரிவுசெய்து அனுப்பியது. அப்போஸ்தலருடைய நடபடிகளில் நாம் வாசிக்கும் ஊழியர்கள் அனைவரும் திருச்சபையின் அங்கீகாரம் பெற்றே ஊழியங்களில் ஈடுபட் டிருந்திருக்கிறார்கள். போதகர்களையும், உதவிக்காரர்களையும் நியமிக்கும் அதிகாரம் திருச்சபைக்கு இருப்பதாலேயே அவர்களுக்குரிய இலக்கணங் களை விளக்கி பவுல் திருச்சபைகள் அவற்றைப் பின்பற்றும்படியாக தீமோத்தேயுவுக்கு 1 தீமோத்தேயு, தீத்து ஆகிய நிருபங்களை அனுப்பினார்.
தங்களைத் தாங்களே ஊழியக்காரர்களாக நியமித்துக்கொண்டு ஊழியங்களில் ஈடுபட்ட மனிதர்களை நாம் வேதத்தில் பார்க்கமுடியாது. இது நம்மினத்தில் பரவியிருக்கும் கருவேலச் செடி. கர்த்தர் தங்களோடு நேரடியாகப் பேசி அழைத்தார் என்றும் அல்லது தங்களுடைய உள்ளத்தில் அத்தகைய ஆழமான உந்துதலை உணர்ந்தோம் என்று கூறுகிறவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மையானால் கர்த்தர் தன்னுடைய வார்த்தையில் ஊழியங்களில் யார் ஈடுபட வேண்டும், அவர்கள் எப்படி நியமிக்கப்பட வேண்டும் என்ற விளக்கங்களையெல்லாம் தந்திருக்கமாட்டார். அவருடைய வார்¢த்தை ஊழியங்களைப் பற்றிய அத்தனை விளக்கங்களையும் தருவதால் இவர்கள் சொல்லுவதில் எந்த உண்மையும் இல்லை என்பதை நாம் உணரவேண்டும்.
வேதபூர்வமாக அமைந்து ஆத்துமாக்களை வழிநடத்தும் திருச்சபைகளும், வேதபூர்வமான பிரசங்கங்களையும், போதனைகளையும் அளிக்கும் தகுதியுள்ள போதகர்களும் நம்மத்தியில் அருகிக் காணப்படுவதால்தான் வேத அனுமதியற்ற போலி ஊழியங்கள் நம்மினத்தில் திருவிழாக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. திருச்சபையில் வாழ்ந்து, திருச்சபையின் அங்கீகாரம் பெற்று திருச்சபை மூலமாகச் செய்யப்பட வேண்டிய ஊழியங்களையெல்லாம் திருச்சபை பற்றிய உணர்வே இல்லாது பலர் இன்று செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் உண்மையில் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோ ஓட்டுகிற ஆட்டோக்காரனைப் போன்றவர்கள். நாட்டுச் சட்டத்தை மீறுகிறபோது போலிஸ் நம்மீது நடவடிக்கை எடுக்கிறது. கர்த்தரின் திருச்சபைக்குரிய நியதிகளை மீறுகிறபோது, சகல சட்டங்களுக்கும் அதிபதியான அவர் மட்டும் நியாயத்தீர்ப்பு நாளில் இவர்களை சும்மாவிட்டு விடுவாரா என்ன?
ஊழியம் செய்வதற்கு சபை அனுமதி தேவை என்று கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. (1) அது கிறிஸ்து விதித்துள்ள கட்டளை. (2) ஊழியம் மிகவும் உயர்ந்ததும், பரிசுத்தமானதுமானதால் அதை செய்யப் போகிறவர்களின் தகுதி சபையாரால் ஆராயப்பட வேண்டும் என்பதும் கர்த்தர் விதித்துள்ள கட்டளை. (3) ஊழியம் செய்யப் போகிறவர்களுக்கான பயிற்சித்தளம் திருச்சபையே. ஊழியப் பயிற்சியை சபையில் வாழ்ந்து, சபையில் அடையாதவன் ஊழியத்தில் சிறக்கமாட்டான். (4) ஊழியம் என்பது ஆணும், பெண்ணுமாகிய ஆத்துமாக்களின் மத்தியில் செய்யப்படுவது. அதற்கு ஒழுக்கம், பொறுப்பு, நிதானம், ஞானம், தன்னடக்கம், உலக ஆசையின்மை போன்ற அனைத்தும் தேவை. இவையெல்லாம் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை கர்த்தர் சபை மூலமே காட்டித் தருவார். இந்த அடையாளங்களில் பணத்துக்காக நடத்தப்படும் பைபிள் காலேஜுகளோ அல்லது ஸ்தாபனங் களோ அக்கறை காட்டாது. (5) ஊழியக்காரர்களுக்கு சபைக் கண்காணிப்பும், ஆத்மீகப் பாதுகாப்பும் தேவை. அதை சபையால் மட்டுமே தரமுடியும். என்றோ செத்துப்போய் அலங்கரிக்கப்பட்ட பிணங்களாக இருக்கும் பாரம்பரிய சபைகளாலும், சமயசமரச பைபிள் காலேஜுகளாலும், போலி ஸ்தாபனங்களாலும் இவற்றைத் தரமுடியுமா என்ன?