சுனாமி 2004ல் இலட்சக்கணக்கான மக்களை ஆசியாக் கண்டத்தின் பல நாடுகளில் சின்னாப்பின்னமாக்கியது. கடந்த வருடம் வருடம் அமெரிக்காவின் தென்பகுதியில் கட்ரீனா சூறாவளி ஒரு நகரத்தையே அழிவுக்குக் கொண்டுவந்து உலகத்தின் செல்வமிக்க நாட்டை நிலைகுழைய வைத்தது. அதே நாட்டின் புளோரிடா மாநிலத்தை இருபது தடவைகளுக்கு மேலாக சூறாவளிகள் இந்த வருடம் மட்டும் தாக்கியிருக்கின்றன. சமீபத்தில் “வில்மார்” சூறாவளி மறுபடியும் புளோரிடாவைத் தாக்கி சேதமேற்படுத்தியது. இதெல்லாம் போதாதென்று பாகிஸ்தானைச் சேர்ந்த காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு என்பதினாயிரம் பேர்வரை மாண்டனர். பனிக்குளிரால் பரிதவித்து அங்கே இன்றும் இறந்து கொண்டிருப்பவர்கள் அநேகர். கடந்த ஒரு வருடத்துக்குள்ளாக இந்த உலகத்தில் இத்தனையும் நிகழ்ந்து நாலு இலட்சம் மக்கள் வரையில் இந்தப் பேரழிவுகளால் மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள். அன்றாடம் இறந்து கொண்டிருப்பவர்களைத் தவிர சடுதியாக எதிர்பாராத விதத்தில் இத்தனைப் பெருந்தொகையினர் இந்த உலகத்தைவிட்டே போய்விட்டார்கள். இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் உலகத்து மனிதன் கடவுள் இருக்கிறாரா? அவருக்கு உண்மையிலேயே கண்களிருக்கின்றனவா என்று அலறித் துடித்துக் கேட்கிறான். அவனால் இதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.
வேதமறிந்தவர்களாகிய, கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டிருக்கிற நாம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. உலகத்து மனிதனைப் போல, அறிவற்று அநாவசியமான சிந்தனைகளை நாம் வளர்த்துக்கொள்வதில்லை. இவையெல்லாம் உலகத்தில் நிகழும் என்று இயேசு சொல்லியிருப்பதை நாம் ஏற்கனவே வேதத்தில் இருந்து வாசித்து அறிந்துகொண்டிருக்கிறோம் (மத். 24). அதுவும், இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபிக்கும்போது இவையெல்லாம் உலகத்தில் அதிகரிக்கும் என்றும் வேதம் சொல்லுகிறதை நாமறிவோம். பவுல் அப்போஸ்தலர் ரோமர் 8ல், பாவத்திலிருந்து விடுதலை அடையத் தவிக்கும் உலகத்தின் பிரசவ வேதனையின் அடையாளமாக இவற்றை வர்ணித்திருக்கிறார். பயங்கரமான அழிவுகளான இவை ஏன் நிகழுகின்றன என்பதை விசுவாசத்தின் அடிப்படையில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
இந்த அழிவுகளின் மத்தியில் துன்பப்படுகிறவர்களுக்கு உதவ வேண்டியதும் நமது கடமை. உலகத்தில் விசுவாசி மட்டுமே பிரதிபலன் எதிர்பார்க்காது எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய இருதயத்தைக் கொண்டிருக்கிறான். பல நாடுகளில் திருச்சபைகள் ஒன்றினைந்து, சுனாமியால் துன்பப்படுகிறவர்களுக்கும், கட்ரீனாவால் கஷ்டப்படுகிறவர்களுக்கும், பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உதவி வருவது கிறிஸ்துவின் அன்பை விசுவாசிகள் வெளிப்படுத்துவதன் அடையாளமாக இருக்கின்றன. இதை நான் எழுதிக்கொண்டிருக்கிறபோதே சீர்திருத்த போதகரான எனது பாகிஸ்தான் நண்பரொருவர் நிலநடுக்கத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களுக்கு, அந்த உயர்ந்த மலைப்பகுதியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து முடிந்த உதவிகளை செய்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்கிறேன். விசுவாசிகள் இல்லாத உலகத்தில் மக்கள் படும் துன்பமும் வேதனையும் சொல்ல முடியாததாய்த்தான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்த நேரத்தில் விசுவாசிகள் போல் பாசாங்கு செய்கின்ற சிலரும் துன்பப்பட்டவர்களுக்கு சேர்க்கப்பட்ட பணத்தையும், பொருளையும் தங்களுடைய சுயநலப்போக்கால் தமதாக்கிக் கொண்டிருக்கிற அவலத்தைப் பற்றிய செய்திகளும் நமது காதுகளை எட்டுகின்றன. இவர்கள் இதயமில்லாதவர்கள்; கிறிஸ்துவின் அன்பை அறியாத கொடுமைக்காரர்கள். சுனாமியால் எந்தப் பாதிப்பும் அடையாமல் சுனாமியைச் சாட்டி தன்னுடைய வீட்டுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொண்ட ஒரு போதகரைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. தேவ பணியை யூதாசின் இடத்தில் இருந்து வயிற்றுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கயவர்கள் கர்த்தரிடம் இருந்து தப்ப முடியாது.
இவற்றையெல்லாம்விட இந்தப் பேரழிவுகள் மூலம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.
(1) இந்தப் பேரழிவுகள் நமது கர்த்தர் பேசுகிற தேவனாக இருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன. பாவத்தையும் அதன் கொடுமைகளையும் சிலைகளால் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். அவற்றால் பேச முடியாது. எதையும் செய்யவும் முடியாது. பணத்தை வாரிக்கொட்டி, நீரால் கழுவிப் பூச்சூடி பிராத்தனைகளைச் செய்தாலும் கல்லுச்சாமி கல்லாய்த்தான் எப்போதும் இருக்கும். நம் கர்த்தர் ஜீவனுள்ளவர். அவர் பரிசுத்தர். நீதியானவர். நம்மைப் படைத்தவர். தன் சித்தப்படி சகலதையும் பார்த்துப் பராமரித்து வருகின்ற கர்த்தர் தன்னுடைய மக்களோடு மட்டுமல்லாமல், தன்னை அறியாத மக்களோடும் தொடர்ந்து பேசி வருகிறார். மனிதன் தன்னை விசுவாசித்து தன்னோடு ஐக்கியத்தில் வர வேண்டும் என்று விரும்பும் கர்த்தர் சுவிசேஷத்தின் மூலம் அவனை அன்றாடம் மனந்திரும்பித் தன்னிடம் வரும்படி அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் பேசுகிற தேவனாக இருக்கிறார் என்கிறது வேதம். மனிதன் கர்த்தரைத் துச்சமாக எண்ணிப் பாவச்செயல்களை அகம்பாவத்தோடு செய்து வருகிறபோது பேசுகிற கர்த்தர் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. தன் சிருஷ்டிகளைப் பாரமரிக்கும் கர்த்தர், தன்னுடைய மகிமையைப் பாதிக்கும் எதையும் உலகத்தில் அனுமதிப்பதில்லை. மனிதனின் அகம்பாவமும், பாவச்செயல்களும் அதிகரிக்கும்போது கர்த்தர் பேரழிவுகளை அனுமதித்து மனிதனை எச்சரிக்கிறார். ஜீவனுள்ள தேவனாக, பேசுகிற தேவனாக, மனிதனைப் படைத்த தேவனாகத்தான் இருக்கிறேன் என்பதை அவர் மனிதனுக்கு புலப்படுத்துகிறார். தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே மக்களுக்கு பாவநிவாரண முண்டு என்பதை உணர்த்துகிறார். என்னை நோக்கிப் பார், நான் இருப்பதை உணர்ந்துகொள், என் மகனை விசுவாசி என்கிறார். கர்த்தரின் பேச்சே பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் மூலம் கேட்டது. கட்ரீனா அழிவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. சுனாமி மூலம் ஆசியா முழுதும் அறிவிக்கப்பட்டது. இந்தப் பேரழிவுகள் ஜீவனுள்ள பேசுகிற கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்பதை உணர்ந்து நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டும். இன்று அவர்கள், நாளை நாமாகக்கூட இருந்துவிடலாம்.
(2) இந்தப் பேரழிவுகள் கர்த்தரின் பார்வையில் பாவம் எத்தனைக் கோரமானது என்பதை உணர்த்துகின்றன. கட்ரீனா கோரமாகத் தாக்கிய அமெரிக்காவின் தென் பகுதி ஒரு காலத்தில் பைபில் வட்டம் என்று அழைக்கப்பட்டது. அங்கே அநேக நீக்ரோ மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்று அங்கே பாவம் படமெடுத்து ஆடிவருகிறதாகக் கேள்விப்படுகிறேன். குடியும், போதை மருந்தும், கொள்ளையும், கொலையும், தாதாக்களும், வறுமையும் நிறைந்திருக்கும் பகுதியாக அது இருக்கிறது. கட்ரீனா தாக்கு வதற்கு முன்பாக நியூ ஆர்லியன்சில் தன்னினப் புணர்ச்சியில் ஈடுபட்டு வருகிறவர்களின் பெருங் கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கட்ரீனா அது நடக்க முடியாமல் செய்துவிட்டது. மோசமான பாவம் எல்லை கடந்து போகிறபோது கர்த்தர் பேரழிவுகளின் மூலம் பாவத்தின் கோரத்தை மக்களுக்கும், முக்கியமாக நமக்கும் புலப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களும், அவர்களுடைய அரசர்களும் கர்த்தரை விட்டு விலகிப் போய் அந்நிய தேவர்களை வணங்கி பாவச் செயல்களில் ஈடுபட்டு அதில் இன்பம் கண்டுகொண்டிருந்தபோது கர்த்தர் அந்நிய நாடுகளான அசிரியா, சிரியா, பாபிலோனியா போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தாக்கி அழித்திருக்கிறார். அதன் மூலம் பாவத்தின் கோரத்தையும், அதில் ஈடுபடுவதால் வரும் ஆபத்தையும் கர்ததர் சுட்டிக்காட்டுகிறார்.
தெலிபானும், அல்காய்டாவும் வளர்ந்து இன்று உலகைப் பயமுறுத்திக்கொண்டிருப்பதற்கு பாகிஸ்தான் ஒருகாரணம் என்பததை எவரும் மறுக்க முடியாது. அக்கிரமக்காரர்களை அந்நாடு ஒரு காலத்தில் வளர்த்துவிட்டது. இன்றும் அத்தகையவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அபின் வளர்ப்பில் ஈடுபட்டு அதை ஏனைய நாடுகளுக்கு அனுப்பி மக்களைப் போதைப் பொருளால் அழிக்கும் செயலுக்கு பாகிஸ்தானும் ஒரு காலத்தில் பின்பலமாக, இருந்திருக்கிறது. இதையெல்லாம் மனிதர்கள் மறந்து விடுவது சகஜம். நம்மை ஆளுகின்ற கர்த்தர் மறப்பதில்லை. பாவத்தை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுவதில்லை என்பதை உலகில் நிகழும் பேரழிவுகள் உணர்த்தி வருகின்றன. இதை வாசிக்கின்ற சகோதரனே! பாவத்தைப் பற்றிய உன்னுடைய எண்ணங்கள் வேத அடிப்படையில் இருக்கின்றனவா? பாவங்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் கர்த்தர் நீ பாவத்தில் வளருவதை சகிப்பதில்லை என்பதை உணருகிறாயா? விசுவாசியான நீ, பாவத்தோடு அன்றாடம் போராடி அதை உன் சரீரத்தில் அடக்கி ஆளும் பணியில் நீ ஈடுபட்டு வருகிறாயா? பாவம் மோசமானது, அகோரமானது என்பதை அறிந்துகொள். பேரழிவுகளை அனுமதிக்கும் கர்த்தர் பாவத்தின் கோரத்தை நாம் அறிந்து கொள்ளும்படியாக நம்மோடு தொடர்ந்து பேசுகிறார்.
(3) இந்தப் பேரழிவுகள் கிறிஸ்துவின் வருகையை உணர்த்தி, சுவிசேஷப் பணியில் நாம் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. நாலு இலட்சத்துக்கு மேலானோர் பன்னிரண்டு மாதங்களில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அவர்களில் கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களின் தொகையே அதிகம். இன்னும் அழியாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் கிறிஸ்துவை அறியாதவர்கள் எண்ணிக்கை பெரிது. அவர்கள் நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். நம் வீட்டுக்கு அருகில் இருக்கிறார்கள். நம் வேலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமில்லை. அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
உலகப் பேரழிவுகள் கிறிஸ்துவின் வருகையின் நாள் சமீபிக்கிறது என்பதை நிச்சயமாகத் தெரிவிக்கின்றன. உலகம் நியாயத்தீர்ப்புக்கு தயாராகிறது என்பதை உணர்த்துகின்றன. உலகத்தின் பிரசவ வேதனை இனி அதிகரிக்கத்தான் செய்யும் என்பதைக் காட்டுகின்றன. கிறிஸ்து வரப்போவதால் அவருடைய சபை அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் விசுவாசிகள் பரிசுத்தத்தில் வளருவதோடு, இயேசுவின் நற்செய்தியை சகலருக்கும் மும்முரமாக எடுத்துச் சொல்லி சபை வளர்ப்புப் பணியில் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டும். இயேசுவின் வருகை சமீபிக்கிறதென்றால் சபை வளர்ப்பில் ஈடுபடுவதில் என்ன பிரயோஜனம் என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் வேதபோதனைகளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. திருச்சபை அமைப்பும், சபை வளர்ப்புப் பணியுமே இந்த உலகத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பணிகள். இயேசு வருகிறபோது தன்னுடைய சபைக்காக வரப்போகிறார். தன் சபையை அரவணைத்து தன்னோடு அழைத்துச் செல்ல வருகிறார். சுவிசேஷத்தை மட்டும் சொல்லிவிட்டு, ஆதாயப்படுத்திக்கொண்ட ஆத்துமாக்களை கர்த்தரின் வழியில் சபையில் இருந்து வளரச் செய்யாதவர்கள் நிலத்தில் விதை விதைத்துவிட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் அக்கறை காட்டாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள்.
இன்று நாம் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டிய ஊழியம், சுவிசேஷப்பணி மூலமான திருச்சபை அமைப்பே. அதுவும், சீர்திருத்த சத்தியங்களின் அடிப்படையில் சபைக்கிருக்க வேண்டிய அத்தனை இலக்கணங்களையும் கொண்ட சபைகளை அமைப்பதே நமது பணியாக இருக்க வேண்டும். நண்பர்களே, சுவிசேஷத்தைத் தவறாது அறிவியுங்கள். மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை சபைக்குள் அழைத்து வந்து வேத போதனைகளின்படி வளரும்படிச் செய்யுங்கள். ஆரோக்கியமான உபதேசங்களை அவர்கள் பின்பற்றும்படிச் செய்யுங்கள். இதை வாசிக்கும் எவராவது இதுவரை கிறிஸ்துவை விசுவாசிக்காதிருந்தால் வரப்போகும் தேவ கோபத்திலிருந்தும், பேரழிவிலிருந்தும் தப்ப இன்றே இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.