‘பிரசங்கிகளின் இளவரசன்’ சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்

‘பிரசங்கிகளின் இளவரசன்’ சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன்

ஜெரமி வோக்கர் – Jeremy Walker

“பிரசங்கிகளின் இளவரசன்” என்று அழைக்கப்படும் சார்ள்ஸ் ஹெடன் ஸ்பர்ஜன் தன்னுடைய வாழ்க்கையில் அநேக தாலந்துகளையும், கிருபைகளையும் கொண்டு கர்த்தருக்காகப் பணி புரிந்தார். அவருடைய வாழ்க்கையையும், ஊழியப் பணிகளையும் விளக்கும் எண்ணிலடங்காத நூல்கள் ஆங்கிலத்தில் எழுத்தில் வடிக்கப்பட் டிருக்கின்றன. அவருடைய வாழ்க்கையை நாம் ஆராய்ந்து எழுத முனைகிறபோது, அவரைப் பற்றிய சகல சுவாரஸ்யமான செய்திகளையும் இந்த ஆக்கத்தில் சேர்க்க முடியாமல் போகிறது.

ஆரம்பகால வாழ்க்கையும், மனந்திரும்புதலும்

இங்கிலாந்தில், எசெக்ஸ் மாநிலத்தில் (Essex), கெல்வடன் (Kelvedan) என்ற கிராமத்தில் 1824ம் வருடம் ஜூன் மாதம் 19ம் திகதி பிறந்தார் ஸ்பர்ஜன். தனது வாழ்க்கையின் ஆரம்ப வருடங்களில் சிலவற்றை அவர் ஸ்டெம்போர்ன் (Stambourne) எனும் நகரத்தில் வாழ்ந்த தன்னுடைய தாத்தாவின் வீட்டில் கழித்தார். அவருடைய தாத்தா ஜோண், கொங்கிரிகேஷனல் சபையொன்றின் போதகராக இருந்து வந்தார். ஸ்பர்ஜ னுடைய தந்தையின் பெயரும் ஜோணாக இருந்ததோடு அவரும் ஓர் கொங்கிரிகேஷனல் சபைப் போதகராக இருந்தார். தன்னுடைய ஐந்தாம் வயதில் தாத்தாவின் வீட்டிலிருந்து பெற்றோரிடம் திரும்பினார் ஸ்பர்ஜன். இளம் வயதிலேயே ஸ்பர்ஜன் புத்திசாலியாகவும், திறமைசாலியாகவும், தைரியமுள்ளவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே ஸ்பர்ஜன் தன்னுடைய தாத்தாவின் நூலகத்திலிருந்த பியூரிட்டன்களின் நூல்களையெல்லாம் அவற்றிலிருந்த படங்களைப் பார்த்து மகிழ்வதற்காக திறந்து பார்ப்பார். முக்கியமாக ஜோண் பனியனின் மோட்ச பயண நூலையும், ஃபொக்ஸின் கிறிஸ்துவுக்காக இரத்தஞ்சிந்தி மரித்தோரின் நூலையும் (Foxe’s Book of Martyrs) ஆர்வத்துடன் திறந்து பார்ப்பார். அப்போது வாசிக்கும் பயிற்சியில் அவர் ஈடுபட்டு அந்நூல்களை இளம் வயதிலேயே அவர் வாசிக்கவும் தவறவில்லை. காலஞ் செல்லச்செல்ல அவருடைய புத்திசாலித்தனமும், பேச்சு வன்மையும் சிறிது சிறிதாக வெளிப்பட ஆரம்பித்தது.

பதினைந்து வயதாக இருக்கும்போது ஸ்பர்ஜன், நியூமார்கெட் (New-market) என்ற நகரில் ஒரு பாடசாலையில் மாணவனாகவும், சிறு குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பவராகவும் சேர்ந்தார். அவர் தங்கியிருந்த போர்டிங் வீட்டிலேயே அவருடைய பாடசாலையில் இறையியல் போதித்த ஆசிரியரும் சமையற்காரராக இருந்தார். அந்த ஆசிரியர் கல்வினிசப் போதனைகளில் மிகுந்த தீவிர நாட்டங்கொண்டிருந்து அதன்படி வாழ்ந்தவராயிருந்தபடியால் ஸ்பர்ஜனுக்கிருந்த தாக்கின. இதற்கு முன்பு ஸ்பர்ஜன் தன் வாழ்க்கையில் எத்தனையோ நல்ல வல்லமையான பிரசங்கங்களையெல்லாம் கேட்டிருந்தார். ஆனால், இப்போது தேவனுடைய வார்த்தை ஆவியின் வல்லமையோடு, இரட்சிப்பளிக்கும் உறுதியோடு ஸ்பர்ஜனின் செவிமடல்களைத் தாக்கி இதயத்தில் நுழைந்தது. ஸ்பர்ஜன், அந்தப் பிரசங்கி சொன்னதுபோல் கிறிஸ்துவை நோக்கிப் பார்த்தார், ஜீவனை அடைந்தார். தன்னுடைய பாவமன்னிப்புக்காகவும், மரணத்தி லிருந்தும் நித்திய நரகத்திலிருந்தும் விடுபடுவதற்காகவும் அவர் கிறிஸ்துவை முழு இருதயத்தோடு விசுவாசித்தபோது இரட்சிப்பின் ஆனந்தப் பிரவாகம் அவருடைய இருதயத்தை நிரப்பியது. ஸ்பர்ஜனின் வாழ்க்கையில் இது 1850ம் ஆண்டு ஜனவரி 6ம் நாள் நிகழ்ந்தது. அன்றிலிருந்து கிறிஸ்துவின் மகிமையும், பெருமைகளும் ஸ்பர்ஜனின் வாழ்க்கையிலும், பின்னால் அவர் செய்த அத்தனைப் பணிகளிலும் படிந்தன.

ஸ்பர்ஜனை சோதிப்பதற்கு சாத்தான் அதிக காலம் எடுத்துக்கொள்ள வில்லை. இனித் தன் வாழ்க்கையில் எந்தவிதமான சாத்தானின் சந்தேகங் களுக்கோ, நிந்தனைகளுக்கோ அல்லது கேடான எண்ணங்களுக்கோ இடமிருக்காது என்று இளம் ஸ்பர்ஜன் எண்ணி மகிழ்ந்தார். ஆனால், சாத்தான் அவரைச் சோதிக்காமல் விட்டுவிடவில்லை. இந்தக் கசப்பான சோதனைகள் அவருடைய வாழ்க்கையில் சிறிது காலத்துக்கே இருந்தன. பாவ இருதயத்திலிருந்து எழும் கேடான எண்ணங்களுக்கெதிராகப் போராடி வெற்றிபெற கிறிஸ்து ஸ்பர்ஜனுக்கு உதவினார். இந்த அநுபவம், கிறிஸ்தவ வாழ்க்கை ரோஜாப்பூக்கள் நிறைந்த கட்டிலில் உறங்குவதால் அடையும் சுகமல்ல, போர்முனையில் எதிரியோடு போராடுவதைப் போன்ற அநுபவம் என்பதை ஸ்பர்ஜனுக்குக் கற்றுத் தந்தது. இந்தப் போராட்டத்தில் ஓர் போர்வீரனுக்குரிய ஊக்கத்துடன் அவர் பங்கு பெற்றார்.

மனந்திரும்பிக் கிறிஸ்துவை விசுவாசித்த அந்த வருட ஏப்பிரல் மாதமே ஸ்பர்ஜன் கொங்கிரிகேஷனல் திருச்சபையில் அங்கத்தவராக சேர்ந்தார். அதற்குள் ஸ்பர்ஜன் வேத அறிவில் வளர்ந்து, அனைத்தைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்து, விசுவாசிகள் மட்டுமே ஞானஸ்நானம் பெற வேண்டும் என்பதில் தெளிவடைந்தார். அதனால் ஊரில் இருந்த பாப்திஸ்து போதகர் ஒருவரிடம் ஞானஸ்நானம் பெறத்தீர்மானித்தார். 1850ம் ஆண்டு மே மாதம் 3ம் நாள் ஸ்லெகெம் (Isleham) என்ற ஊருக்கு எட்டுமைல்கள் நடந்து சென்று அங்கிருந்த லார்க் (Lark) என்ற ஆற்றில் திரு. கென்ட்லோ (Kantlow) என்பவரிடம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இந்த இடத்தை நினைவுகூறுமுகமாக அங்கே இப்போதும் ஒரு அடையாளக் கல் நாட்டப்பட்டிருக்கிறது. ஞானஸ்நானம் எடுக்கும்வரை திருவிருந்தைப் பெற்றுக் கொள்வதில்லை என்று ஸ்பர்ஜன் தீர்மானித்திருந்தபடியால் ஞானஸ் நானத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு 1850ம் ஆண்டு மே மாதம் 5ம் நாள் திருவிருந்தில் கலந்துகொண்டார். அதே நாள் திருச்சபையின் ஞாயிறு பாடசாலையில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவும் ஆரம்பித்தார். அன்று முதல் சிறுவர்களும், பெரியவர்களும்கூட ஸ்பர்ஜன் மீது அதிக மரியாதை செலுத்த ஆரம்பித்தனர்.

பிரசங்க ஊழியத்துக்கான அழைப்பும், திருச்சபைப் பணியும்

1850ம் ஆண்டு கோடை காலத்தில் பல்கலைக்கழக நகரான கேம்பிரிட் ஜில் (Cambridge) ஸ்பர்ஜன் குடியேறினார். இந்நகரில் ஒரு ஆசிரியராகவும், மாணவராகவும் தொடர்ந்து ஸ்பர்ஜன் பணிபுரிய ஆரம்பித்ததோடு அங்கிருந்த பாப்திஸ்து சபையொன்றிலும் இணைந்தார். அந்த சபையோடு ஐக்கியப்பட்டு வேத அறிவிலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும் வளர வளர கர்த்தருக்குப் பணிபுரிவதற்கு ஸ்பர்ஜனுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதில் ஒரு வாய்ப்பு எந்தவிதமான சபை சடங்குகளும் இல்லாமல் அவர் மீது திணிக்கப்பட்டது. அவருடைய சபையைச் சார்ந்த ஜேம்ஸ் வின்டர் (James Winter) என்ற மனிதர் பக்கத்தில் இருந்த ஊர்களில் சுவிசேஷப் பிரசங்கம் செய்வதற்கானவர்களைத் தெரிவு செய்து அனுப்பும் பணியைச் செய்து வந்தார். ஒரு நாள் அவர் ஸ்பர்ஜனைத் தன்னை வந்து பார்க்கும்படி அழைத்திருந்தார். வின்டர் ஸ்பர்ஜனைப் பார்த்து, ஒரு வாலிபன் பக்கத்திலிருக்கும் டிரெவர்சம் (Teversham) என்ற ஊரில் பிரசங்கம் செய்யப் போகிறான், அவனுக்கு ஆராதனை நடத்துவதில் அநுபவம் இல்லாததால் எவராவது தன்னோடு வந்தால் துணையிருக்கும் என்று விரும்புகிறான் என்று கூறினார். ஸ்பர்ஜன் தன்னோடு வயதில்கூடிய இன்னொரு வாலிபனையும் துணைக்கு அழைத்துக்கொள்ள, மூவரும் ஒரு ஞாயிறு பகல் வேளையில் அந்த ஊரை நோக்கிப் போக ஆரம்பித்தார்கள். போகிற வழியில், பிரசங்கம் செய்யவிருந்த வாலிபன் தன்னைத்தான் அன்று பிரசங்கம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்த்து வந்திருக்கிறான் என்பதை ஸ்பர்ஜன் அறிந்துகொண்டார். ஸ்பர்ஜனோடு வந்த மற்ற வாலிபனும் அதில் உறுதியாக இருந்தான். இந்தப் புதிய பொறுப்பு ஆழமாக இதயத்தில் பதிய, ஸ்பர்ஜன் அன்று 1 பேதுரு 2:7ல் தன்னுடைய கன்னிப் பிரசங்கத்தை அளிக்கத் தீர்மானித்தார். அந்தக் கிராமத்து கட்டிடமொன்றில் அன்று கூடியிருந்த ஒரு சிறு கூட்டம் அந்தப் பிரசங்கத்தின் மூலம் ஆதிக ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து ஸ்பர்ஜனுக்கு பிரசங்கம் செய்யும் வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன. அவருடைய பிரசங்கங்களைக் கர்த்தர் ஆசீர்வதித்தார். அவருக்குப் பதினேழு வயதாயிருக்கையில் கேம்பிரிட்ஜுக்கு அருகில் இருந்த வோட்டர்பீச் (Waterbeach) என்ற தேவபத்தியே இல்லாத ஒரு ஊரிலிருந்த ஒரு சபையின் போதகராக வரும்படி அழைப்பு வந்தது. அவருடைய ஆர்வத்தொண்டும், மனிதர்களின் பாவத்தைப் பற்றி அவருக்கிருந்த கூரிய அறிவும், கர்த்தரின் கிருபையும் அவ்வூரில் அவருடைய ஊழியத்தை ஆசீர்வதித்து முழு ஊரையும் வெகுவிரைவில் மாற்றியமைத்தது. ஸ்பர்ஜனின் வாழ்க்கையின் இந்த ஆரம்ப காலத்தில் அவரில் அதிக வளர்ச்சியும், முதிர்ச்சியும் காணப்பட்டபோதும், அவரளவுக்கு அந்த வயதில் பிரசங்க ஊழியத்துக்குத் தேவையான சகல தகுதிகளையும் கொண்டிருந்து கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட பிரசங்கிகள் மிகச் சிலரே இருந்தனர். வோட்டர் பீச்சில் இரண்டு வருடம் ஊழியம் செய்தபிறகு, பத்தொன்பது வயதாயிருக் கும்போது இலண்டனில் இருந்த நியூ பார்க்ரோடு சபையில் (New Park Street Chapel) வந்து பிரசங்கிக்கும்படி அவருக்கு அழைப்பு வந்தது. அந்த சபை ஒருவிதத்தில் பெயர் பெற்றதாயிருந்தது; பென்ஜமின் கீச் (Benjamin Keach), ஜோண் கில் (John Gill), ஜோண் ரிப்பன் (John Rippon) போன்ற கர்த்தரால் வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த போதகர்கள் அச்சபைப் போதகர்களாக இருந்திருந்தனர். வெறும் பெயரும், பழம் பெருமையும் மட்டும் ஒரு சபைக்குப் போதாது. அக்காலத்து இங்கிலாந்தின் ஆத்மீக நிலைமையை ஒரு வரலாற்று அறிஞர் பின்வருமாறு விளக்குகிறார்: “புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவமே அக்காலத்தில் தேசத்தின் ஆத்மீக மார்க்க மாயிருந்தது . . . சபைகளில் செல்வந்தர்களுக்கும், மனிதர்களுக்கும், முக்கியஸ்தர்களுக்கும் குறைவில்லாதபடி இருந்தாலும், அங்கே ஆத்மீக வல்லமையையும், ஆவியின் ஆசீர்வாதத்தையும் காணமுடியாதிருந்தது. அது மட்டுமல்லாமல் உலகப் படிப்புக்கும், பரிசுத்த ஆவியானவர் கர்த்தரின் வேதத்தில் வெளிப்படுத்தும் சத்தியங்களுக்கும் இடையில் இருக்கும் வேறு பாட்டைப் பொதுவாகவே எவரும் உணராதிருந்தார்கள். பேச்சுத் திறமைக்கும், பிரசங்க மேடைப் பண்பாட்டுக்கும் குறைவில்லாமல் இருந்தாலும், மனிதர்களின் இருதயத்தைப் பிளக்கக்கூடிய பிரசங்கங்களைக் காணமுடியாதிருந்தது. இவையெல்லாவற்றையும்விட மோசமான அடையாளமென்னவென்றால் வெகு சிலரே இதை உணர்ந்தவர்களாயிருந்தனர்.” (Ian Murray, Forgotten Spurgeon, p21.) இந்த வரலாற்றுப் பின்னணியில் ஸ்பர்ஜன் இலண்டனுக்குப்போய் கர்த்தருடைய வார்த்தையைப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்.

நியூ பார்க் ரோடு சபையில் 1200 பேர் அமரக்கூடியளவுக்கு இருக்கைகள் இருந்தன. முதல் நாள் ஸ்பர்ஜன் அங்கே பிரசங்கம் செய்தபோது நூறு அல்லது இருநூறு பேர்வரைக்கூடி அவருடைய பிரசங்கத்தைக் கேட்டார்கள். அன்று அவருடைய பிரசங்கத்தைக் கர்த்தர் ஆசீர்வதித்ததால், பிரசங்கத்தைக் கேட்க வந்திருந்தவர்கள் அதனால் பாதிக்கப்பட்டு தங்களு டைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அதைப் பற்றிச் சொல்ல, மாலை ஆராதனைக்குக் கூட்டம் காலையில் இருந்ததைவிட அதிகமாக வந்தது. மீண்டும் வந்து சபையில் பிரசங்கிப்பதற்கு ஸ்பர்ஜன் உடன் பட்டார். ஆனால், சில வாரங்களிலேயே சபை அவரைப் போதகராக வரும்படி அழைப்பு விடுத்தது. தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு வந்து பிரசங்கம் செய்வதாகவும், அக்காலத்தில் அவர்கள் அதிகமாக ஊக்கத்துடன் ஜெபிக்க வேண்டுமென்றும் ஸ்பர்ஜன் கேட்டுக்கொண்டார். அந்த மூன்று மாதங்களில் சபையில் கூட்டம் வாராவாரம் அதிகரித்து முழுச்சபையும் நிரம்பி வழிய ஆரம்பித்தது. ஸ்பர்ஜனும், இயேசு கிறிஸ்து வுக்குள் கர்த்தரின் இறையாண்மையுள்ள கிருபையைப் பிரசங்கித்ததோடு, ஆத்துமாக்களோடு இணைந்து ஜெபித்து, கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெருமளவில் அவர்களோடு சேர்ந்து அநுபவித்தார். வெகு விரைவிலேயே சபை அவரை முழுநேரப் போதகராக வரும்படிக் கேட்டுக் கொண்டது. சபை மக்கள் ஊக்கத்தோடும், தீவிரமாகவும் ஜெபிப்பது தொடர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் சபையின் போதகராக இணை வதற்கு ஸ்பர்ஜன் உடன்பட்டார்.

சுவிசேஷம் வெகுவேகமாக பரவ ஆரம்பித்தது. வழமைக்கு மாறான விதத்தில் பிரசங்கித்த, கல்லூரிக்குப் போய்ப் படித்திராத ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்க கூட்டம் அலைமோதியது. (இறையியல் கல்லூரியில் ஸ்பர்ஜன் படித்திராதபோதும் தன்னுடைய வாழ்நாள்பூராவும் தேவையான அத்தனை இறையியல் அறிவையும் அவர் கொண்டிருந்தார்.) கிராமத்துப் பையனாகத் தன்னுடைய பெற்றோர்களிடமும், தாத்தா பாட்டியிடமும் இருந்தும், பியூரிட்டன் பெரியவர்களின் நூல்களைக் கொண்டிருந்த நூலகங்களில் இருந்தும், தானிருந்த போர்டிங் வீட்டின் சமையல்காரரிடம் இருந்தும் பூரணமான சுவிசேஷக் கல்வினிசத்தைக் கற்றுக்கொண்டார் ஸ்பர்ஜன்.

அவருடைய பிரசங்க ஊழியத்தின் மூலம் பெருந்தொகையாவனர்கள்  மனந்திரும்புதலை அடைந்தார்கள்; அவருடைய பெயரும் எல்லா இடங் களிலும் பரவ ஆரம்பித்தது. ‘கல்வினிசம் என்பது இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு இன்னொரு பெயர்’ என்று ஸ்பர்ஜன் அடிக்கடி சொல்லுவார். அவர் அதைப் பிரசங்கித்தபோது அந்த சுவிசேஷம் வல்லமையாகக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்டது. அவருடைய அறிவுத் திறமையும், கர்த்தருக்காக அர்ப்பணத்தோடு உழைக்கும் தன்மையும், கர்த்தரின் கிருபை யிலேயே எப்போதும் தங்கியிருந்ததும் அவருடைய ஊழியம் எப்போதும் ஆத்மீக வல்லமையும், ஜீவனுமுள்ளதாக இருக்கச் செய்தன. அதிகரித்து வரும் கூட்டத்தை சபைக்கட்டிடத்தால் தொடர்ந்து தாங்க முடியவில்லை; கட்டிடத்தை விஸ்தரித்தும், தற்காலிகமாக வேறு பெரிய கட்டிடங்களில் கூட்டங்களை நடத்தியும் இந்தப் பிரச்சனை தீர்வதாக இருக்கவில்லை. தன்னுடைய ஊழியத்தின் ஆத்மீகப் பொறுப்புகளை உணர்ந்து பணிபுரிந்த ஸ்பர்ஜனின் சரீரமும், உணர்வுகளும் ஊழியத்தின் பெரும் பொறுப்புகளால் பாதிக்கப்பட்டன. இலண்டனில் ஊழியப் பணிபுரிந்த இந்த ஆரம்ப காலங்களிலேயே ஸ்பர்ஜன் சுசானா தொம்சன் (Susannah Thomson) என்ற பெண்ணை சந்தித்து அவரோடு நட்புக்கொண்டு அன்பு பாராட்டவும் ஆரம்பித்தார். அவருடைய ஊழியப் பொறுப்புகள், அவர் சுசானாவை அடிக்கடி சந்திப்பேசி அன்பு பாராட்ட அனுமதியளிக்கவில்லை. ஆனால், அவர்களிருவருக்குமிடையில் இருந்த ஆழமான அன்பும், சுசானாவின் ஆத்மீக முதிர்ச்சியும் அவர்களிருவரையும் 1856ம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் திருமணத்தில் இணைத்தது.

ஊழிய வளர்ச்சியும், சத்தியப் போராட்டமும்

இதேவேளை அதிகரித்து வரும் ஆசீர்வாதமான ஊழியங்களினால் ஸ்பர்ஜனுக்கு உலகத்திலிருந்து எதிர்ப்பும் அதோடு அடிக்கடி உலகத்தோடு போராட்டமும் உருவானது. அதைவிட கிறிஸ்தவர்களிடமிருந்து அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதும், சில சமயங்களில் தவிர்க்கமுடியாத போராட்டத்தில் அவர் ஈடுபட நேரிட்டதும் மிகவும் துயரமளிப்பதாகும். கிருபையின் போதனகளை அவர் வெட்கப்படாமல் தைரியத்தோடு பிரசங்கித்தது ஆர்மீனியக் கோட்பாட்டாளருக்கும் (சுருக்கமாக விளக்குவதானால் இந்தப் போதனை, மறுபிறப்படைவதற்கு முன் மனிதன் தன்னுடைய இரட்சிப்புக்குத் தேவையான பங்கை அளிக்கிறான் என்று விளக்குகிறது), ஹைபர்-கல்வினிசக் கோட்பாட்டாளருக்கும் (சுருக்கமாக விளக்குவதா னால் இந்தப் போதனை, கர்த்தர் இறையாண்மையுள்ளவராக இருந்து மனிதர்களை இரட்சிப்பதால், மனிதர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண் டும் என்று நாம் அவர்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறது). அவர் மீது மனவெறுப்பை ஏற்படுத்தியது. அவருடைய ஆத்மீக வாஞ்சையும், பரிசுத்தமான தைரியமும், தன்னுடைய மனதுக்குப்பட்டதை மறைக்காமல் பேசும் மனப்பாங்கும் அவருடைய கருத்துகளுடன் முரண்பட்டவர்களுக்கு அவர் மீது ஆத்திரத்தை எழுப்பியது. தன்மீது அநாவசியமாகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கும், நிந்தனைகளுக்கும் பதிலளிக்கு முகமாகவும், 1855ல் தான் விசுவாசிக்கும் சத்தியங்களை வெளிப்படையாக எல்லோரும் அறிந்துகொள்ளும்படியாக ஸ்பர்ஜன் 1689 விசுவாச அறிக்கையை (1689 Baptist Confession of Faith) மீண்டும் வெளியிட்டார். தான் ஊழியம் செய்து வளர்த்து வரும் மக்களைக் கர்த்தருடைய சத்தியத்தில் வளர்ப்பதற்காகவும் ஸ்பர்ஜன் இதைச் செய்தார். பார்டிகுளர் பாப்திஸ்து (Particular Baptist) மூதாதையர்கள் விசுவாசித்த அதே சத்தியங்களை விசுவாசித்த ஸ்பர்ஜன் அந்தப் பரம்பரையோடு இதன் மூலம் தன்னை இனங்காட்டிக் கொண்டார். (குறிப்பிட்ட மக்களுக்காக கிறிஸ்து மரித்தார் (Particular Redemption or Particular Atonement) என்ற கிருபையின் போதனைகளைப் பின்பற்றிய பாப்திஸ்துகளுக்கு பார்டிகுளர் பாப்திஸ்து என்று அக்காலத்தில் பெயர் இருந்தது. இன்றைக்கு அந்த சத்தியங்களைப் பின்பற்றுபவர்களை சீர்திருத்த பாப்திஸ்து என்று அழைப்பார்கள்). 1689 பாப்திஸ்து விசுவாச அறிக்கையை வெளியிட்டு வைத்த ஸ்பர்ஜன் அதற்கு அறிமுகமாக பின்வரும் குறிப்பை எழுதினார்: “நாம் முழு இருதயத்தோடு விசுவாசிக்கின்ற சத்தியங்களை இந்த அறிக்கை கொண்டிருக்கிறது. கர்த்தருடைய பராமரிப்பின் துணையால் சுவிசேஷத்தின் முக்கிய கோட்பாடுகளை நாம் விசுவாசத்துடன் பின்பற்றி வருகிறோம். அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கி றோம். உங்கள் மேல் அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சிறு கைநூலை நாம் வெளியிடவில்லை; ஆனால், சத்தியமுரண்பாடு ஏற்படும் காலங்களில் உங்களுக்கு துணை செய்யவும், நீங்கள் விசுவா சிப்பதை உறுதி செய்யவும், நீதியின் பாதையில் உங்களை வழிநடத்தவும் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் நம்முடைய சபையின் இளம் சந்ததிக்கு ஒரு இறையியல் கைநூல் கிடைக்கிறது; இதில் காணப்படும் வேத வசனங்களைப் பயன்படுத்தி அவர்கள் தங்களுடைய விசுவாசத்தின் நம்பிக்கைக்கான காரணங்களை எடுத்துரைக்க முடியும். . . உங்கள் விசுவாசத்தைக் குறித்து வெட்கப்படாதீர்கள். சத்தியத்தின் காரணமாக நமக்கு ஒரு கொள்கைச் சின்னம் தேவைப்படுகிறது. மகத்தான நற்செய்தியின் நோக்கம் நிறைவேறத் துணைபுரிய அதன் முக்கிய கோட்பாடுகளுக்கு இச்சிறு நூல் தெளிவான சாட்சியாக விளங்கும்.” அதே வருடம் அவருடைய பிரசங்கங்கள் அச்சில் வெளிவர ஆரம்பித்தன. அவையெல்லாம் தொகுக்கப்பட்டு 63 வால்யூம்களாக இன்றும் நாம் வாசித்தனுபவிக்கும்படியாக அச்சில் இருந்து வருகின்றன.

ஸ்பர்ஜன் தன் வாழ்க்கையில் வேறு பல தொல்லைகளையும் சந்திக்க நேர்ந்தது. பிரசங்கம் கேட்க வருகிறவர்களின் கூட்டம் அதிகரித்தபடியால் நியூ பார்க் ரோடு சபையில் கூட்டங்களை நடத்த முடியாமல் ஸ்பர்ஜன் எக்செட்டர் மண்டபம் (Exeter Hall) என்னும் பெரிய மண்டபத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி வந்தார். அங்கே கூட்டங்களைத் தொடர்ந்து வைக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் சரே கார்டன்ஸ் மியூசிக் ஹாலில் (Surrey Gardens Music Hall) கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். இம்மண்டபத்தில் பத்தாயிரம் பேர்வரை இருந்து பிரசங்கம் கேட்க முடியும். இக்காலத்தில் ஸ்பர்ஜன் புது வீடொன்றுக்கு குடியேறியிருந்தார். அத்தோடு அவருக்கு இரட்டையர்களாக சார்ள்ஸ், தொமஸ் என்று இரு பையன்களும் பிறந்திருந்தனர். சரே கார்டன்ஸ் மியூசிக் ஹாலில் 1856ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் முதல் கூட்டம் நடக்க ஏற்பாடாயிருந்தது. கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மண்டபத்தில் பெரும் இரைச்சல் ஏற்பட்டது. நெருப்பு! நெருப்பு! என்று அலறல் கேட்க மண்டபத்தின் மாடி கெலரிகள் இடிந்துவிழ ஆரம்பித்தன. முழு மண்டபமே இடிந்துவிடுமோ என்ற நிலை உருவானது. மக்கள் கூட்டம் அலைமோதி மண்டபத்தில் இருந்து வெளியேறும் வழிகளை நாடி ஓடத் தொடங்கியது. அதில் ஏழு பேர் உயிரிழந்ததுடன் முப்பது பேர்வரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தனர். இதன் காரணமாக பலர் ஸ்பர்ஜனைக் கேளிபேசி குற்றஞ்சாட்டினர். சபையின் உதவிக்காரர்கள் மனமிடிந்து போயிருந்த தங்களுடைய போதகரான ஸ்பர்ஜனுக்கு அதிக ஆறுதல்கூறி அவரை அன்போடு பாதுகாத்தனர். இருந்தபோதும் இந்நிகழ்ச்சியால் மனமிடிந்து சரீர சுகமும், உள்ளமும் குன்றிப்போன ஸ்பர்ஜன் மறுபடியும் சரீர சுகத்தையும் பெலத்தையும் அடைந்து கர்த்தரின் ஆனந்தத்தையும் அன்பையும் ருசி பார்க்க சிறிது காலம் சென்றது.

இருதயத்தைக் கலக்கிய இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்பர்ஜன் மறுபடியும் சரே கார்டன்ஸுக்குப் போய் ஞாயிறு தினம் காலை வேளைகளில் பிரசங்கிக்க ஆரம்பித்தார். கர்த்தர் கருணையுடன் அவருடைய பிரசங்க ஊழியத்தை ஆசீர்வதித்தார். அநேகர் மனந்திரும்பிக் கர்த்தரை விசுவா சித்தார்கள். நியூ பார்க் தெருவின் சபை மேலும் மேலும் எண்ணிக்கையில் வளர்ந்து சபை மக்கள் ஆவியிலும் தேவனின் அறிவிலும் மேலும் வளர்ச்சியடைந்தனர். ஸ்பர்ஜனின் ஊழியத்தின் மூலம் ஏனைய சபைகளும் ஆசீர்வாதத்தைப் பெற்று எழுப்புதலின் பலனை அடைந்தன. இதே காலப் பகுதியில் சபை மக்களையும், ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்க வருகிற வர்கள் தொகையையும் மனதில் கொண்டு அவர்களனைவரும் வசதியோடு கர்த்தரை ஆராதிக்கக் கூடியவிதத்தில் ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டும் திட்டமும் தீட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடமே மெட்ரொ பொலிட்டன் டெபர்னேக்கள் (Metropolitan Tarbernacle). ஒவ்வொரு ஞாயிறு தினமும் அதில் ஆறாயிரம் பேர் கூடிவந்து ஆராதித்தனர். உண்மையில், அத்தனைபேர் இருந்து ஆராதிக்க இக்கட்டி டம் கட்டப்படவில்லை. இக்கட்டிடம் பூரணமாகக் கட்டி முடிக்கப்படாத நிலையில் முதலாவது கூட்டம் 1860ம் ஆண்டு ஆகஸ்டு 21ம் நாள் நடந்தது. இதில் ஆராதனை நடந்த முதலாவது ஞாயிறு, 1861ம் ஆண்டு மார்சு மாதம் 31ம் நாளாகும். அப்போது இரு வாரங்களுக்கு கர்த்தரின் கிருபைக்கும் கருணைக்கும் நன்றி கூறுமுகமாக விசேஷ ஆராதனைக் கூட்டங்கள் நிகழ்ந்தன. இந்தக் கட்டிடத்திறப்பு விழா விசேஷ கூட்டங்களின் ஒரு பகுதியாக “கல்வினின் ஐங்கோட்பாடுகள்” (Five Points of Calvinism) என்ற தலைப்பில் ஸ்பர்ஜன் பிரசங்கம் செய்தார். கட்டிடத்திறப்பு விழா நிகழ்ந்த அந்தக் காலப்பகுதியில் அநேகர் தங்களுடைய விசுவாசத்தை ஞானஸ்நானத்தின் மூலம் அறிக்கையிட்டு சபை அங்கத்தவர்களாக இணைந்தனர். இவ்வாறாக கர்த்தர் தொடர்ந்து தன்னுடைய ஊழியக்காரனை ஆசீர்வதித்து வந்தார். புதிய கட்டிடத்தில் கூடியபோது ஸ்பர்ஜன் பின்வரும் வார்த்தைகளை ஆரம்ப வார்த்தைகளாகக் கூறினார்: “இந்தக் கட்டிடம் நிலைத்து நிற்கும் நாள்வரையும், இதற்குள் ஆராதனைக்கு மக்கள் கூட்டம் கூடிவரும்வரையும், இங்கு பிரசங்கிக்கப்படும் செய்தி இயேசு கிறிஸ்துவாக மட்டுந்தான் இருக்கும். என்னைக் கல்வினின் போதனைகளைப் பின்பற்று கிறவன் என்று அழைத்துக்கொள்வதில் நான் என்றுமே வெட்கப்பட்டதில்லை; பாப்திஸ்து என்ற பெயரைச் சூட்டிக்கொள்வதற்கும் நான் தயங்கவில்லை; ஆனால், நீங்கள் எதை விசுவாசிக்கிறீர்கள் என்று என்னை யாராவது கேட்டால் அதற்கு என்னுடைய பதில், ‘இயேசு கிறிஸ்து என்ப தாகத்தான் இருக்கும்.” எனக்கு முன் இங்கு ஊழியம் செய்த டாக்டர் கில் (Dr. Gill) ஓர் அருமையான இறையியல் நூலை நமக்களித்துவிட்டு சென்றார்; ஆனால், என்னோடு இணைத்துக்கொண்டு நான் கட்டுப்பட்டு நடக்கப் போகிற இறையியல் மனிதனால் எழுதப்பட்டதொன்றல்ல; அது சுவிசேஷத் தின் உள்ளடக்கமாக இருக்கின்ற, அனைத்து இறையியலுக்கும் மூலமாக இருக்கின்ற, அருமையான அனைத்து சத்தியங்களின் மொத்த உருவமாக இருக்கின்ற இயேசு கிறிஸ்துவே. அவரே வழியும், சத்தியமும், ஜீவனு மாயிருக்கிறார்” என்றார் ஸ்பர்ஜன்.

ஸ்பர்ஜன் தன் இறுதிக் காலம்வரை போதகராக இருந்த இலண்டன் மெட்ரொபொலிட்டன் டெபர்னேக்கள்.

ஸ்பர்ஜனின் நற்பணிகள்

இத்தனை மகத்தான செயல்களோடு மட்டும் ஸ்பர்ஜனின் ஊழியம் நின்றுவிடவில்லை. அவருடைய பிரசங்க ஊழியத்தோடும், போதக ஊழியத்தோடும் இணைந்த வேறு பல ஊழியங்களும் ஆரம்பமாயின. இவற்றில் மிகவும் முக்கியமானதொன்று போதகர்களைத் தயார் செய்யும் கல்லூரியாகும் (Pastors College). இந்தத் ‘தீர்க்கதரிசிகளின் கல்லூரி’ ஸ்பர்ஜனின் இருதயத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஸ்பர்ஜனின் ஊழியத்தின் மூலம் கர்த்தரை விசுவாசித்த ஒரு இளம் வாலிபன் ஒவ்வொரு வாரமும் அவரோடு சில மணி நேரங்களைச் செலவிட்டு ஊழியத்திற்காகத் தன்னைத் தயார் செய்துகொண்டிருந்தான். அவனை ஆரம்ப மாணவனாகக்கொண்டு இந்தப் போதகர்களுக்கான கல்லூரி 1855ம் ஆண்டளவில் ஆரம்பித்தது. கல்லூரியின் ஆரம்ப காலப்பகுதியில் ஸ்பர்ஜனுக்குப் பரிச்சயமான சில ஆர்வமிக்க இளம் வாலிபர்கள் அவரிடம் இறையியல் கற்க வந்து, ஸ்பர்ஜனின் கண்காணிப்பு, போதனை ஆகியவற்றின் மூலம் பலனடைந்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கச் சென்றனர். இந்தப் போதகர் களுக்கான கல்லூரியில் ஸ்பர்ஜன் அளித்த வியாக்கியானங்களில் சிலவே Lectures to My Students என்ற நூலாக வெளிவந்தது. போதகர்களுக்கான ஊழியப்பயிற்சிக்கு அத்தியாவசியமான அருமையான நூலிது. அத்தோடு 1856ல் Sword and Trowel: A record of combat with sin and labour for the Lord என்ற பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது. இவற்றோடு ஸ்பர்ஜன் அநேக நூல்களையும் வெளியிட்டார். தன்னுடைய சபையில் பயன்படுத்து வதற்காக ஒரு சங்கீத நூலையும், Trasury of David என்ற தலைப்பில் சங்கீதப் புத்தகத்துக்கான ஒரு பெரும் விளக்கவுரை நூலையும் வெளியிட்டார். இக்காலத்தில் நல்ல நூல்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தையும் அவர் ஆரம்பித்தார். பிரசங்கத்தின் மூலமும், நூல்களின் மூலமும் சுவிசேஷத்தை நாடு பூராவும் சொல்லும் வகையில் ஸ்பர்ஜனுக்கு பயிற்சிபெற்ற அநேக ஊழியக்காரர்கள் இருந்தார்கள். விதவைகளுக்கு துணைபுரிய விதவைக் கவனிப்பு நிலையங்கள் உருவாயின; பெற்றோரற்ற ஆண்பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான ஒரு நிலையமும் ஆரம்பமானது; சிறிது காலத்தில் பெண்களுக்கும் அத்தகைய நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவரதும் ஆத்துமாவுக்கும், சரீரத்திற்கும் தேவையானதை அளிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு ஸ்பர்ஜன் உழைத்தபோதும், ஆத்துமாக்களைக் கிறிஸ்துவிடம் அழைத்துவரும் அதிமுக்கிய பணியை அவர் ஒருபோதும் மறந்துவிடவில்லை. மெட்ரொ பொலிட்டன் டெபர்னேக்கள் அநேக நல்லூழியங்களில் ஈடுபட்டு அன்றா டம் எல்லோருக்கும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இலண்டனில் இருபத்தைந்து வருடங்கள் ஊழியம் செய்தபிறகு, ஸ்பர்ஜனின் தலைமையில் அறுபத்தியாறு நிறுவனங்கள் செயல்பட்டுவந்ததாக அவருடைய செயலாளர் குறிப்பு எழுதி வைத்திருந்தார். இவை அத்தனையும் அன்போடும் கருணையோடும் விசுவாசத்தோடும் அள்ளிக்கொடுத்த அன்புள்ளங்களாலும், கர்த்தருக்காகத் தம்மை அர்ப்பணித்துழைத்த அநேகராலும் கொண்டுநடத்தப்பட்டு வந்தன.

சபையும் ஊழியங்களும் பெருமளவுக்கு வளர்ச்சியடைந்து வந்து கொண்டிருந்த இந்தக் காலப்பகுதியில் ஸ்பர்ஜனின் மனைவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அதே வேளை ஸ்பர்ஜனின் உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அவர் அடிக்கடி கடும் சோகத்துக்குள்ளானதுடன் (Depression), கவுட் (Gout) என்ற வாத நோயும் அவரை வாட்டியது. சரீரத்திற்கு ஓய்வளித்து சுகமடைவதற்காக அவர் ஐரோப்பாவிற்கு பயணமானார். தன்னுடைய நூல்களை வெளியிட்ட உற்ற நண்பரான ஜோசப் பாஸ்மோர் (Joseph Passmore) என்பவருடன் தென் பிரான்ஸில் மென்டோன் (Mentone) என்ற இடத்திற்கு ஓய்வு பெறச் சென்றார் ஸ்பர்ஜன். இந்த இடத்திற்கு அவர் பின்னால் அடிக்கடி வந்து ஓய்வுபெற்றார். காலஞ்செல்லச் செல்ல ஸ்பர்ஜன் பிரசங்க ஊழியத்தில் அதிகம் முதிர்ச்சியடைந்தார். அவருடைய சபையில் ஐயாயிரம் அங்கத்தவர்கள் இருந்தனர். தன்னுடய உடல் நலம் அனுமதித்த காலம் பூராவும் வாராவாரம் இலண்டனில் தன்னுடைய சபையிலும், ஏனைய சபைகளிலும் பிரசங்கித்ததோடு வேறு பல ஊழியங்களையும் ஸ்பர்ஜன் தவறாமல் செய்து வந்தார். ஒரு கிறிஸ்தவனுக்கு இந்த உலகில் சாதாரணமாகவே ஏற்படும் பல தொல்லைகளுக்கு மத்தியிலும், கர்த்தர் தனக்களித்திருந்த தாலந்துகளினாலும், அழைப்பின் காரணமாகவும் ஏற்பட்ட பல இடர்களுக்கும் பொறுப்புக்களுக்கும் மத்தியிலும் ஸ்பர்ஜன் கர்த்தரின் அநேக ஆசீர்வாதங்களைத் தன்னுடைய ஊழியத்தில் பெற்றுக்கொண்டதோடு அநேக விசுவாசிகளோடு நல்ல ஐக்கியத்தையும் அநுபவித்தார்.

சத்தியத்தில் வைராக்கியம்

எல்லோரும் தன்னை நல்லவர் என்று பாராட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்பர்ஜன், பிரசங்கம் செய்தார் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. நாம் ஏற்கனவே கவனித்ததுபோல், அவர் கல்வினிச பாப்திஸ்து என்பதை வெளிப்படையாக அறிவித்த அவருடைய பிரசங்கங்களும் செயல்களும் அவருக்குப் பல எதிரிகளை உருவாக்கியிருந்தன. இருந்த போதும் ஸ்பர்ஜன் எந்தவித எதிர்ப்புக்கும் அஞ்சாமல் தான் விசுவாசித்த சத்தியத்தை உறுதியோடு பின்பற்றினார். அதன் காரணமாக அவர் சத்தியத்திற்கு உறுதுணையாக இருப்பதற்குத் தேவையானதைச் செய்யவும், சத்தியத்திற்கு ஆபத்து ஏற்பட்டவேளையில் அதைப் பாதுகாப்பதற்காகப் போலிப்போதனைகளை எதிர்த்துப் போராடவும் வேண்டியிருந்தது. அவர் மனந்திரும்பாத நிலையில் இளம் வாலிபனாக இருந்தபோதே ரோமன் கத்தோலிக்கப் போப்பை எதிர்த்து ஒரு நூலை Antichrist and her Brood; or Popery Unmasked என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். அவருடைய பத்திரிகையான Sword and Trowel வெளிவருவதற்கு முன்பே அவர் இலண்டனில் சத்தியத்திற்குத் துணை நிற்பதற்காக பல கட்டுரைகளை எழுதிவந்திருந்தார். ஸ்பர்ஜன், நியூ பார்க் தெரு சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்களுக்கான ஆராதனைப் பாடல்கள் என்ற பெயரில் ஒரு நூல் (The Rivulet) வெளிவந்தது. இப்பாடல் புத்தகத்தைப் பற்றிய தன்னுடைய கருத்தை ஸ்பர்ஜன் வெளியிடத் தவறவில்லை. அதில், இந்தப் பாடல் புத்தகத்தைக் கிறிஸ்தவ ஆராதனைப் பாடல் நூலாகக் கருதமுடியாதென்றும், கர்த்தரை இயற்கையில் மட்டும் காண்கிறவிதமாகப் பாடல்கள் இருப்பதாகவும், இதில் வேத இறையியலையே காணமுடியவில்லை என்றும் ஸ்பர்ஜன் கருத்து வெளியிட்டார். அந்த விமர்சனத்தின் இறுதியில் ஸ்பர்ஜன் பின்வருமாறு எச்சரித்திருந்தார்: “வெகுவிரைவில் நாம் சத்தியத்திற்காக துணை நிற்க நேரிடும்: குழந்தைகளின் கையுறைகளுடனல்ல, துப்பாக்கிக் குண்டுகளுடன்; அதாவது, துப்பாக்கிக் குண்டுகள் போன்ற பரிசுத்தமான தைரியத்துடனும், நேர்மையுடனும் சத்தியத்திற்காகத் துணை நிற்க வேண்டும். போய்வாருங்கள்! சிலுவை வீரர்களே, நம் இராஜா நமக்கு முன்னாலிருந்து வழிநடத்துகிறார்.” (Spurgeon’s Autobiography,, 2:268.)

இதற்கு நான்கு வருடங்களுக்குப் பின்பு 1860ல், ஜே. பி, பிரவுன் (J. B. Brown) என்ற ஒரு போதகர், The Divine Life in Man என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார். அந்த நூலுக்கெதிராக கருத்துத் தெரிவித்து, “அது ஆபத்தான போலிப்போதனை . . . சுவிசேஷத்திற்கு எதிரானது” என்று எழுதிய ஏழு போதகர்களில் ஸ்பர்ஜனும் ஒருவராக இருந்தார். இளம் வாலிபர்களுக்கு அவர், “புத்திசாலித்தனம் என்ற பெயரில், இறையியல் பூர்வமான வரலாற்றில் எழுந்த கிருபையின் போதனைகளை எதிர்த்துப் பேசும் எந்தப் பிரசங்கத்திற்கும் நீங்கள் செவிகொடுக்கக்கூடாது” என்று அறிவுரை கூறினார். ஸ்பர்ஜன் தன்னுடைய பிரசங்க மேடையிலிருந்தும், எழுத்தின் மூலமும் சத்தியத்திற்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துப் போராடினார்.

1864ல் ஸ்பர்ஜன் மறுபடியும் சிம்மமாய்க் கர்ஜித்தார். இம்முறை Baptist Regeneration என்ற தலைப்பில் அவருடைய பிரசங்கம் அமைந்திருந்தது. அந்தப் பிரசங்கத்தை அச்சிடுமுன் அவர் தன்னுடைய வெளியீட்டாளர்களை எச்சரித்தார். அதை வெளியிடுவதன் மூலம் அவருடைய நூல்களின் விற்பனை பாதிப்படையும் என்று தான் நினைப்பதாக ஸ்பர்ஜன் தெரிவித்தார். சுவிசேஷக் கோட்பாடுகளை விசுவாசிக்கும் ஆங்கிலிக்கன் சபைப் போதகர்களை அவர் மதித்து அவர்களோடு நட்புக்கொண்டிருந்தபோதும், அவர்களுடைய போதனையும், வழக்கமுமான குழந்தைகளுக்கு ஞானஸ்நானமளிப்பதை ஸ்பர்ஜன் தவறானதாகக் கருதினார். குழந்தைகளுக்கு ஞானஸ்நானமளித்து அதன்மூலம் அவர்கள் மறுபிறப்படைகிறார்கள் என்று கூறுவது வேதபோதனையான நீதிமானாக்குதலுக்கு நேரெதிரான நடைமுறையாக இருப்பதாகவும் எண்ணினார். எந்தவிதமான உள்நோக்கமும் கொண்டிராமல், அவர்கள் மீது எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், இந்தப் போதனையைப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் கர்த்தருடைய வேதத்திற்கு விசுவாசமாக நடந்துகொள்ளவில்லை என்று ஸ்பர்ஜன் கருத்துத் தெரிவித்தார். ஸ்பர்ஜன் தன்னுடைய விசுவாசத்தின் அடிப்படையில் தான் இந்தக் கருத்துகளை வெளியிட்டிருக்கிறார் என்பதை உணர்ந்திருந்த போதும், அவருடைய நண்பர்களில் பலர் அவரைவிட்டு விலகிச் சென்றனர். இருந்தபோதும், அவருடைய பிரசங்கங்களினதும், நூல்களினதும் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்தது.

பாப்திஸ்து யூனியனுடனான போராட்டம் (Down-Grade Controversy)

இதுவரை ஸ்பர்ஜனின் வாழ்க்கையில் நாம் பார்த்த பிரச்சனைகளே பாப்திஸ்து யூனியனுடனான அவருடைய நீண்டகாலப் போராட்டத்திற்கு ஆரம்பமாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய உயியையும் குடித்தது என்று கூறலாம். 1860களில் பாப்திஸ்து சபைகளுக்கு பெரும் எதிர்கால மிருப்பதாக ஸ்பர்ஜன் பேசி வந்திருக்கிறார். அதேசமயம் பல இடங்களில் வேதத்தைப் படிப்பதிலும், ஆராய்வதிலும் ஒரு புதிய அனுகுமுறை கையாளப்படுவதும் ஆரம்பமாயிருந்தது. இதை Higher Criticism அல்லது New Theology என்று அழைப்பார்கள். இந்தப் புதிய அனுகுமுறை வேதசத்தியங்களை பரிசுத்த ஆவியானவர் தந்துள்ளபடி ஏற்றுக்கொள்ள மறுத்து, நவீன விஞ்ஞான அனுகுமுறையின்படியும், வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் மூலமும் ஆராய்ந்து விளக்கமளிக்க முற்பட்டது. இறுதியில் அது சுவிசேஷத்தின் அடிப்படைப் போதனைகளை மறுதளிப்பதிலும், நடை முறைக் கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையின் வல்லமைக்கு பெரும் தீங்கு செய்வதிலும் போய் முடிவதாக இருந்தது.

இந்தப் புதிய இறையியல் அனுகுமுறை இங்கிலாந்திலுள்ள பாப்திஸ்து சபைகளில் பரவ ஆரம்பித்ததோடு, பாப்திஸ்து சபைப் போதகர்களினாலும் வரவேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இக்காலத்தில் ஸ்பர்ஜன் போதகராக இருந்த மெட்ரபொலிட்டன் டெபர்னேக்கள் சபையும், நூற்றுக்கு மேற்பட்ட ஏனைய பாப்திஸ்து சபைகளும் இணைந்து பாப்திஸ்து யூனியன் என்ற அமைப்பில் அங்கம் வகித்து வந்தன. இந்தப் புதிய தவறான இறையியல் அனுகுமுறையைப் பற்றி ஸ்பர்ஜன் பாப்திஸ்து யூனியன் அதிகாரிகளுடன் கடிதத் தொடர்பு கொண்டது மட்டுமன்றி அவர்களைச் சந்தித்துப் பேசி இதற்கு ஒரு தீர்வு காணவும் முயன்றார். பாப்திஸ்து யூனியன் சுவிசேஷக் கோட்பாடுகளை அப்பழுக்கில்லாமல் விளக்கும் உறுதியானதொரு விசுவாச அறிக்கையை வெளியிட்டு அந்த விசுவாச அறிக்கைக்கு யூனியனில் அங்கம் வகிக்கும் அத்தனை சபைகளும் உடன்பட்டு நடக்க வேண்டும் என்றும், அப்படியில்லாவிட்டால் அவர்கள் தொடர்ந்து யூனியனில் இருக்க முடியாது என்று தீர்மானித்தால் இந்தப் புதிய இறையியல் அனுகுமுறையை மட்டுமல்ல அது போன்று பின்னால் தலைதூக்கக்கூடிய எந்தப் போலித்தனத்தையும் எதிர்த்து நிற்க முடியும் என்றுணர்ந்த ஸ்பர்ஜன், யூனியன் அதை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஸ்பர்ஜனின் இந்தக் கோரிக்கை பாப்திஸ்து யூனியனின் கூட்டத்தில் பலராலும் நிராகரிக்கப்பட்டது. அது எந்தளவுக்கு பாப்திஸ்து யூனியனில் புதிய போலிப்போதனை பரவி நின்றது என்பதைத் தெளிவாக உணர்த்தியது. தங்களுடைய மனச்சாட்சியின் சுதந்திரத்தைக் காக்கிறோம் என்ற பெயரில் அநேக நல்ல மனிதர்களும்கூட யூனியனில் ஸ்பர்ஜனுடைய தீர்க்கதரிசனம் போன்ற எச்சரிக்கைகளை உணராமல் அவருடைய கோரிக்கைக்கு எதிராக வாக்களித்தனர். முழுக்கு ஞானஸ்நானத்தை மட்டும் உறுதியாகப் பின்பற்றினால் போதும் என்றும் வேறு போதனை களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சபையும் தன்னுடைய மனச்சாட்சி அனுமதிக்கும் வழியில் போகலாம் என்ற எண்ணத்தை பாப்திஸ்து யூனியனில் உள்ள அநேக சபைகள் பின்பற்றின. இதனால் வரப்போகும் பெரும் போராட்டத்திற்கான அடையாளங்கள் அதிகரிக்க ஆரம்பித்து 1887ல் சத்தியப் போராட்டத்திற்கான பெரும் புயல் வீச ஆரம்பித்தது.

இந்த வருடத்தில் ஸ்பர்ஜன் பாப்திஸ்து போதகரும் தன்னுடைய நெருங்கிய நண்பருமாயிருந்த ரொபட் சின்ட்லர் (Robert Shindler) என்பவர் Down-Grade என்ற தலைப்பில் எழுதிய இரண்டு ஆக்கங்களைத் தன்னுடைய பத்திரிகையான The Sword and the Trowelல் வெளியிட்டார். Down-Grade Controversy என்றழைக்கப்பட்ட போராட்டம் அன்றிலிருந்து ஆரம்பமாயிற்று. ஆகஸ்டு மாதம் 1887ல், ஸ்பர்ஜனும் ஒரு ஆக்கத்தை Another Word concerning the Down-Grade என்ற தலைப்பில் வெளியிட்டார். அதில் “இதற்குப் பிறகு, எந்தளவுக்கு பரிசுத்தவான்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட சத்தியத்தை மட்டும் பின்பற்றி வாழ்ந்து வருகிறவர்கள் அதை நிராகரித்து வேறொரு சுவிசேஷத்தைப் பின்பற்றுகிறவர்களோடு இணைந்து பணி செய்ய முடியும் என்ற அவசியமான கேள்வி எழுகிறது. கிறிஸ்தவ அன்பு அவசியமானதுதான்; பிரிவினைகள் மோசமானவைதான்; ஆனால், நாம் எந்தளவுக்கு சுவிசேஷத்தை நிர்மூலமாக்கி சத்தியத்தைவிட்டு விலகிப் போகிறவர்களோடு சகோதர உறவு வைத்திருக்க முடியும்? கர்த்தருக்குரிய நம்முடைய கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமானால் இந்தச் சிக்கலான கேள்விக்கு எம்மால் பதிலளிக்காமல் இருக்க முடியாது.” என்று எழுதியிருந்தார் ஸ்பர்ஜன்.

ஸ்பர்ஜன் தன்னுடைய பத்திரிகையில் வெளியிட்ட ஆக்கங்கள் அன்று பரவிக்கொண்டிருந்த இறையியல் போலித்தனத்தையும், அதன் விளைவாக ஏற்படும் ஆத்மீக சோர்வையும், ஆதமீக மரணத்தையும் வெளிப்படையாக சுட்டிக்காட்டின. தொடர்ந்து வேறு ஆக்கங்களும் பத்திரிகையில் வெளிவந்தன. “Reply to Sundry Critics,” The Case Proved, “A fragment on the Down-Grade Controversy.” ஆகிய ஆக்கங்கள் வெளியிடப்பட்டன. சத்தியத்துக்கு எதிராக நடந்து வருகிறவர்களோடு தொடர்ந்தும் பாப்திஸ்து யூனியனில் இருக்க முடியாது என்ற முடிவுக்கு ஸ்பர்ஜன் வந்தார். அக்டோபர் 1887ல் ஸ்பர்ஜன் பின்வருமாறு எழுதினார், “நாம் உயிருக்குயிராக நேசித்துப் பின்பற்றுகிற சத்தியங்களுக்கு நேரெதிரானவற்றைப் பின்பற்றுகிறவர் களோடு நாம் கூட்டுச்சேரவேண்டுமென்று எவரும் எதிர்பார்க்க முடியாது . . . எத்தனையோ விஷயங்களில் நாம் விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும் என்பதை உணர்கிறோம், ஆனால், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து ஐக்கியத்தில் வருவது சத்திய நிந்தனையாகும்.” (Sword and Trowel, October 1887.)

அதே மாதம், சத்தியத்தை நிராகரித்த காரணத்திற்காக பாப்திஸ்து யூனியனைவிட்டு விலகினார் ஸ்பர்ஜன். “தவறு என்று நமக்குத் தெரிகின்ற மோசமான போலிப்போதனையோடு ஐக்கியத்தில் வருவது பாவத்தில் பங்கு கொள்வதாகும்.” என்று எழுதினார் ஸ்பர்ஜன். அப்போது அவருக்கு 53 வயது. ஸ்பர்ஜன் தனிப்பட்ட முறையில் பாப்திஸ்து யூனியனைவிட்டு விலகத் தீர்மானித்தபோதும் அவருடைய சபை தாங்கள் நேசிக்கும் போத கரின் வழியைப் பின்பற்றத் தீர்மானித்தது. யூனியனைவிட்டு விலகிய போதும் ஸ்பர்ஜன் ஒரு யூனியனையோ அசோஷியேசனையோ உருவாக்கு வதற்கு எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அவர் அமைதியாக இருந்தார். தான் பத்திரிகையில் காரண காரியங்களோடு விளக்கி வெளியிட்ட ஆக்கங்களை வாசித்து ஒவ்வொருவரும் நீதியான முடிவை எடுக்கட்டும் என்று காத்திருந்தார் ஸ்பர்ஜன். 1887ல் ஸ்பர்ஜன் எல்லோருமறிந்து கொள்ளும்படியாக பின்வருமாறு சொன்னார்: “நாங்கள் பாப்திஸ்து யூனியனைவிட்டு விலகி அதனோடுள்ள சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறோம். பாப்திஸ்து சபைகள் ஒவ்வொன்றும் எல்லா வசதிகளையும் கொண்டமைந்த தன்னாதிக்கமுள்ள சபைகள். சபைகள் தாமாக விரும்பி இணைந்து கொண்ட அமைப்பே பாப்திஸ்து யூனியனானபடியால் அதிலிருந்து ஒரு தனிமனிதனோ அல்லது சபையோ விலகிக்கொள்வது மிகவும் சாதாரணமான விஷயம். இப்போது இருக்கும் பாப்திஸ்து யூனியன் எவர் மீதும் எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அதிகாரம் கொண்டிருக்கவில்லை. அது எந்தவிதமான உறுதியான விசுவாச அறிக்கையையும் கொண்டிராததால், முழுக்கு ஞானஸ்நானம் மட்டுமே வேதபூர்வமான ஞானஸ்நானம் என்று பரைசாற்றிக்கொள்வதைத்தவிர சத்தியத்திற்கெதிரான எந்தவிதமான போலிபோதனைகளையும் ஏற்றுக் கொள்ளாது என்று நம்புவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மிகவும் மோசமான போலிப்போதனைகளைக்கூட பாப்திஸ்து யூனியன் அனுமதிக் கிறதே என்று அதைக்குறை கூறுவதில் எந்தப் பயனுமில்லை. ஏனெனில், தான் விரும்பினாலுங்கூட தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அதனால் முடியாது. ஆரம்பத்தில் அதை உருவாக்கியவர்கள் ‘ஒழுங்கின்மையும் வெறுமையாகவுமே’ (ஆதி. 1:2) அதை அமைத்தார்கள்; ஆகையால், அது அப்படியேதான் இருந்தாக வேண்டும்.”

பாப்திஸ்து சபைகளுக்கான ஒரு புதிய அமைப்பை உருவாக்கவேண்டும் என்று வற்புறுத்தியவர்களைப் பார்த்து ஸ்பர்ஜன் பின்வருமாறு பதிலளித்தார், “தங்களைத் தாங்களே சரியான வகையில் ஆண்டு, தீர்மானங்களை எடுத்துவருகின்ற சபைகளுக்கு, புறத்தில் இருந்து அவற்றின் தேவைகளைக் கவனிக்க ஒரு அமைப்பு அவசியமில்லை. அத்தகைய சபைகள் எந்தவிதத் தடைகளுமில்லாமல் தாங்கள் உறவுகொள்ள வேண்டிய சபைகளை நிச்சயம் தேடிக்கொள்ளும்; தங்களுடைய எல்லைகளை ஆக்கிரமிக்கிறவர் களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். ஒவ்வொரு கப்பலும் கடலில் செல்லும் வசதிகளைக் கொண்டிருக்கின்றபோது, அதைக் கட்டுப் படுத்துகிற எதையும் அறுத்தெறிய வேண்டும். நமக்கருகில் நம் கொடியோடு நமக்கு நெருக்கமான ஒரு நேசக் கப்பல் போகிறதென்று தெரிகின்றபோது, நாம் விலகிப் போகத் தோவையில்லை. தன்னாதிக்க அமைப்பாகிய தனிக்குடித்தனத்தோடு, கிறிஸ்துவுக்குள் விசுவாசமாயிருக்கின்ற அத்தனை பேரையும் அரவணைக்கின்ற ஆவியின் அன்போடு, இந்த இக்கட்டான சமயத்தில் தமக்கேற்ற பாதுகாப்பை சுவிசேஷத்தை நேசிக்கின்ற அனை வரும் தேடிக்கொள்வார்கள். (இங்கே ஸ்பர்ஜன், நாம் எந்த சபையோடும் சேராமல் தனிமையில் இருக்கவேண்டும் என்று சொல்லவரவில்லை; ஆனால், சில சமயங்களில் அதுவே அவசியமான தற்காலிகமான நல்ல வழியாக இருக்கும் என்கிறார். ஸ்பர்ஜன், ஆழமான, பரந்த கிறிஸ்தவ ஐக்கியத்தை விரும்பினார் என்பதை இதற்குப் பிறகு அவர் பேசிய பேச்சுக்களில் இருந்து அறிந்துகொள்ளலாம். அசோஷியேசன்கள், யூனியன்கள் போன்றவை அவசியமற்றவையாக இருந்தாலும், ஒரே கோட்பாடுகளைப் பின்பற்றும் உள்ளூர் சபைகளோடு நெருக்கமான உறவையும், ஐக்கியத்தையும் அநுபவிப்பதே சிறப்பானது என்பதை ஸ்பர்ஜன் நம்பினார். அதுவே வேதபூர்வமானது என்பது இந்த ஆக்கத்தின் ஆசிரியருடைய கருத்தாகவும் இருக்கிறது.) எந்த அமைப்பும் ஏற்படுத்தித் தரக்கூடிய பரந்த ஐக்கியத்தை அநுபவிக்கும் நாள் வரட்டும்; அந்த நாளில் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக் கின்ற எல்லோரும் இணைந்து தங்களுடைய ஐக்கியத்தை வெளிப்படுத் தட்டும்.” (Sword and Trowel)

எல்லாப் பக்கங்களிலும் இருந்து ஸ்பர்ஜன் தாக்குதலுக்குள்ளானார். கர்த்தரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு பாப்திஸ்து சபைகள் மட்டுமல்லாமல் பலர் மத்தியில் ஆசீர்வதிக்கப்பட்டு வந்த ஸ்பர்ஜன் இப்போது தான் தனிமைப்பட்டிருப்பதை உணர்ந்தார். பாப்திஸ்து யூனியனின் பொதுக்குழு கூடிவந்தபோது ஸ்பர்ஜனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டியிருந்தது. 1888ல் பாப்திஸ்து யூனியன் ஒரு மகாநாட்டுக்கு கூடி வந்தது. அதில் யூனியன் சுவரில் இருந்த வெடிப்புகளைப் பூசிமெழுகும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. பாப்திஸ்து யூனியன் சுவிசேஷ மொழியைப் பயன்படுத்தி அறிக்கைவெளியிட்டபோதும் அது மிகக் கவனமாக அப்போது பரவிக்கொண்டிருந்த போலிப்போதனையான ‘புதிய இறையியல்’ பற்றி எந்தக்குறையும் சொல்லாமல் தவிர்த்தது. ஸ்பர்ஜனின் சொந்தச் சகோதரரும் – என்ன நடக்கின்றதென்பதையே உணராமல் – யூனியனின் அறிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தார். தமது செய்கை சுவிசேஷ ஐக்கியத்தை வலுப்படுத்தும் என்று அவர் தவறாக நம்பினார். வாக்கெடுப்பு நடந்தபோது அதற்கெதிராக வாக்களித்தவர்கள் ஏழுபேர் மட்டுமே; ஆதரவாக வாக்களித்தவர்கள் இரண்டாயிரம் பேர். ஆதரவாக வாக்களித்த சிலர் தாங்கள் ஸ்பர்ஜனுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக தவறாக எண்ணிக் கொண்டு வாக்களித்தனர். இறுதியில் நடந்து முடிந்த வாக்கெடுப்பு பெரும் வெற்றியாகக் கருதப்பட்டதோடு, ஸ்பர்ஜனின் குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த பதிலாகவும் கூறப்பட்டது. பாப்திஸ்து யூனியன் அன்றிலிருந்து தொடர்ந்து சீரழிய ஆரம்பித்தது; அது வெகுவிரைவிலேயே ஆர்மீனியனிசத்தைப் பின்பற்றிய ஜெனரல் பாப்திஸ்து சபைகளோடு இணைந்து தன்னுடைய சுவிசேஷக் கோட்பாட்டு சத்தியங்களையெல்லாம் அடியோடு இழந்தது.

இதெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளை ஸ்பர்ஜனின் சரீர சுகம் தொடர்ந்து குன்றி வந்தது. சத்தியத்துக்கு ஆதரவாக அவர் நடத்தி வந்த போராட்டமும், ஏனைய ஊழியப் பொறுப்புகளும் ஸ்பர்ஜனின் சரீரத்தைப் பெருமளவில் பாதித்தன. இவையெல்லாவற்றுக்கும் மத்தியில் ஸ்பர்ஜனுக்கு அதிக துயரமளித்தது அவருடைய போதகர்களுக்கான கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் அவருக்கெதிராகக் குரலெழுப்பியதே. ஸ்பர்ஜன் தொடர்ந்து போலிப்போதனைகளுக்கெதிராக நடவடிக்கைகள் எடுத்தது அவர்களில் சிலருக்குப் பிடிக்காமல் இருந்தது. ஸ்பர்ஜன் தன்னுடைய கல்லூரியை உடனடியாகக் கலைத்துவிட்டு புதிதாக ஒன்றை ஆரம்பித்தார்.

இத்தனைக்கும் மத்தியில் ஸ்பர்ஜனின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றும் சரிதான் என்பது நிரூபணமாயிற்று. அவருக்கெதிராக இருந்த போதகர்கள் வேதம் எந்தவிதத் தவறுகளுமில்லாத கர்த்தருடைய வார்த்தை என்பதை விசுவாசிக்கவில்லை, மனிதர்கள் பாவிகள் என்பதை விசுவா சிக்கவில்லை, தேவமனிதனாகிய இயேசு கிறிஸ்து மட்டுமே கர்த்தருக்கும் மனிதனுக்குமிடையிலான மத்தியஸ்தர் என்பதை விசுவாசிக்கவில்லை, கிறிஸ்துவின் பரிகாரப் பலியை விசுவாசிக்கவில்லை, பரிசுத்த ஆவியின் கிரியைகளை விசுவாசிக்கவில்லை, இறுதியில் நரகமிருப்பதையும், பரலோக வாழ்வையும்கூட விசுவாசிக்கவில்லை. சுருக்கமாகக் கூறப்போனால், அவர்கள் பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதர்களுக்கு விடுதலை யளிக்கக்கூடிய ஒரே சத்தியத்தை முற்றாகக் கைவிட்டிருந்தனர். இதன் காரணமாக சபைகள் ஆத்மீக அழிவை நோக்கி வேகமாக நகர்ந்து மோசமான முடிவைச் சந்தித்து மடிந்தன. சபை சபையாக இயேசு கிறிஸ்துவையும், அவருடைய சுவிசேஷத்தையும் காலில் போட்டு மிதித்தன.

இயேசு கிறிஸ்துவின் நாமத்துக்கு ஏற்பட்டிருந்த இழுக்காலும், சத்தியத்துக்கு ஏற்பட்டிருந்த ஆபத்தையும் பார்த்து வருந்திய ஸ்பர்ஜனின் உடல் நிலை மிகவும் பாதிப்புக்குள்ளானது. உணர்ச்சிவசப்பட்ட அவருடைய ஆத்துமா மிகவும் துன்பமடைந்தது. ஸ்பர்ஜன் அநாவசியமான முரண்பாடுகளை விரும்பாதவர். அவற்றை அவர் எப்போதும் வெறுத்தார். கிறிஸ்துவின் நாமத்தின் மகிமைக்கு ஆபத்துவரக்கூடாதென்பதற்காகவே அவர் போராட வேண்டியிருந்தது. அதுவும் அவர் இறக்கும்வரை அந்தப் போராட்டத்தைக் கைவிடவில்லை. பிரசங்கியின் வல்லமையைப் பற்றி அவர் ஒருமுறை தன்னுடைய போதகர்களுக்கான கல்லூரி மாணவர்களுடன் பேசும்போது, “சுவிசேஷத்தின் இறக்கைகளை நாம் இப்போது வெட்ட ஆரம்பித்தாலோ அல்லது சத்தியத்தை வெறுக்க ஆரம்பித்தாலோ அது நமது குழந்தைகளை சந்ததி சந்ததியாகப் பாதிக்கும். இப்போது என்ன நடக்கிறதென்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதெல்லாம் பரலோகத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள். என்னைப் பொறுத்தவரையில் வரப்போகிற ஐம்பது வருடங்களுக்கு நான் நாய்களுக்கு உணவாக இருந்து விட்டுப்போனாலும் பரவாயில்லை; எதிர்காலம் எனக்கு சரியான தீர்ப்பளிக்கும். கர்த்தருக்கு முன்பாக நான் நேர்மையாக இருந்திருக்கிறேன். சகோதரர்களே! அதையே நீங்களும் செய்ய வேண்டும்.” என்றார்.  (C. H. Spurgeon, “The Preacher’s Power, and the Conditions of Obtaining it,” in An All-round Ministry, pp. 361-2.)

ஸ்பர்ஜனின் இறுதிக் காலம்

ஜூலை மாதம் 1888ல் அவருடைய உடல்நலம் மிகவும் மோசமாகி அவரால் எழுதக்கூட முடியாத நிலையேற்பட்டது. அந்த வருடம் டிசம்பர் மாதம்தான் அவர் பிரான்சில் மென்டோனுக்கு ஓய்வெடுப்பதற்காகப் போக முடிந்தது. அந்த வருடத்தின் இறுதியில் மென்டோனில் அவர் கீழே விழுந்ததால் 1889ம் பெப்ரவரி மாதமே அவர் மறுபடியும் இலண்டனுக்கு வர முடிந்தது. அந்த வருடம் அவர் முடிந்தவரை மிகவும் கடுமையாக உழைத்தார். ஆனால், நவம்பரில் தன்னுடைய சரீர வலியைப் போக்கிக்கொள்ள அவர் மறுபடியும் மென்டோனுக்கு போக நேர்ந்தது. 1890 வேனிற்காலப் பகுதியில் அவர் மறுபடியும் இலண்டனுக்கு வந்த போதும் மீண்டும் சத்தியப்போராட்டத்திற்கான எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. இன்னுமொரு பனிக்காலத்தை அவர் மென்டோனில் கழித்தார். 1891 ம் ஆண்டு ஆரம்பத்தில் அவருடைய உடல்நிலை தேறிவருவதுபோல் தோன்றியது. இருந்தாலும் தொடர்ந்து நிகழ்ந்து வந்த சத்தியப்போராட்டம் அவரால் தாங்க முடியாததாயிருந்தது. போராட்டத்தின் தன்மையையும், அதன் விளைவுகளையும் ஸ்பர்ஜன் நன்குணர்ந்திருந்தார். மார்ச் 1891ல் அவருடைய கல்லூரியில் போதகப் பயிற்சிபெற்ற மாணவரான ஈ. எச். எலிஸ் அவுஸ்திரேலியாவுக்கு பயணமானார். அவரைப் பார்த்து ஸ்பர்ஜன் சொன்னார், “போய் வாருங்கள் எலிஸ்; என்னை நீங்கள் மறுபடியும் பார்க்க முடியாது. இந்தச் சத்தியப் போராட்டம் என்னை அழித்துக் கொண் டிருக்கிறது.” (Autobiography, 3:152.) அதற்கு அடுத்த மாதத்தில் அவருடைய உடலநிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் பிரசங்க ஊழியத்திலிருந்து அவர் ஓய்வெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்குப் பிறகும் அவர் மேலும் சில வாரங்களுக்கு பிரசங்கம் செய்தார். தன்னுடைய கடைசிப் பிரசங்கத்தை ஸ்பர்ஜன் 1891ம் ஆண்டு ஜூன் 7ம் நாளில் அளித்தார். அதற்கு அடுத்த தினம் அவர் தன்னுடைய குழந்தைப் பருவகாலத்தைச் செலவிட்ட ஸ்டெம்போர்ன் என்ற ஊருக்குப் போனார். சில நாட்கள் மட்டுமே அங்கு தங்கியிருந்துவிட்டு மறுபடியும் இலண்ட னுக்குத் திரும்பினார். அதன்பின் மூன்று மாதங்களுக்கு அவருடைய உடல் நிலை சீரற்று இருந்தது. அக்டோபர் மாத அளவில் சிறிது குணமடைந்த ஸ்பர்ஜன் 26ம் நாள் மென்டோனுக்குப் போகத் தயாரானார். இம்முறை அவருடைய துணைவியார் சுசானாவும் அவருடன்கூடப் பயணமானர். சுசானாவின் உடல்நிலை இதற்குமுன்னால் இத்தகைய பயணங்களுக்கு உதவவில்லை. ஸ்பர்ஜன் இவ்வுலகைவிட்டுப் போகவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. 1892ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் நாள் ஸ்பர்ஜன் கடைசி தடவையாக ஆராதனையில் கலந்துகொண்டார். அன்று அவர் ஆராதனை முடிவில் ஆராதனைப் பாடலை அறிவித்தார். அந்த மாத இறுதியில் அவரால் பேசவும் முடியாமல் போனது. ஜனவரி 28ம் நாள் அவருடைய உடல்நலம் மிகவும் மோசமாகி நினைவில்லாத நிலையை அடைந்தார். 1892ம் ஆண்டு ஜனவரி 31ம் நாள் மாலை ஸ்பர்ஜன் இறைவ னடி சேர்ந்தார். அவருடைய போராட்டம் அன்று ஒரு முடிவுக்கு வந்து ஆண்டவரின் ஆனந்தத்தை அடைந்தார் ஸ்பர்ஜன்.

ஸ்பர்ஜனின் உடலைத் தாங்கிய வண்டி மெதுவாக இலண்டனை நோக்கிப் புறப்பட்டு பெப்ரவரி 8ம் நாள் திங்கட்கிழமை இலண்டனை அடைந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் அவருக்கு கடைசி மரியாதை செலுத்த வந்தனர். எல்லோருக்கும் இடம் கொடுப்பதற்காக ஐந்து கூட்டங் கள் நடத்தப்பட்டன. பெப்ரவரி 11ம் நாள் வியாழக்கிழமை கடைசிக்கூட்ட ஆராதனை ஸ்பர்ஜனுக்கு மிகவும் பிடித்தமான ஆராதனைப் பாடலுடன் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு நோர்வுடில் இருந்த மயானத்தை நோக்கி ஆயிரக்கணக்கானோரின் கண்ணீரஞ்சலிக்கு மத்தியில் அவருடைய சரீரத்தைத் தாங்கிய வண்டி நகர்ந்தது. ஆயிரக்கணக்கானோர் வழிநெடுக வீதிகளில் கூடிநின்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ஆர்ச்சிபால்டு பிரௌன் தன்னுடைய உற்ற நண்பருக்கு விடைகூறி கடைசி வார்த்தை களை உதிர்த்தபோது, “போய் வாருங்கள்” என்று கூறாமல், “இரவு வணக்கம்” என்று கூறி முடித்தார்.

இத்தகைய குணநலன்களும், சிறப்பும் கொண்ட வரலாற்றுப் புகழ் பெற்ற பிரசங்கியும், மாமனிதருமான ஸ்பர்ஜனின் வாழ்க்கையை எவ்வாறு தொகுத்துச் சொல்வது?

1. ஸ்பர்ஜன் எதிலும், எல்லாவற்றிலும் கிறிஸ்துவையே முதன்மைப் படுத்தினார்.

“நான் கல்வினிசப் போதனைகளைப் பின்பற்றுகிறேன் என்று பறை சாற்றிக்கொள்ளுவதற்கு வெட்கப்படவில்லை; பாப்திஸ்து என்று என்னை அறிவித்துக்கொள்ளுவதற்கும் நான் தயங்கவில்லை; ஆனால், எந்னுடைய விசுவாசம் என்ன, என்று எவராவது கேட்டால், இயேசு கிறிஸ்து என்னும் இறையியல் கோட்பாட்டிற்கே நான் என்னை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். சுவிசேஷத்தின் மொத்த உருவானவரும், எல்லா இறையியலையும் தன்னில் கொண்டிருப்பவரும், சகல இறையியல் போதனைகளுக்கும் மூலகர்த்தாவும், நித்திய வழியாகவும், சத்தியமாகவும், ஜீவனாகவும் இருக்கும் இயேசு கிறிஸ்துவே என்னுடைய விசுவாசத்தின் உயிர்நாடி.”

இயேசு கிறிஸ்துவை அனைத்திலும் முதன்மைப்படுத்துகிற ஸ்பர்ஜனின் வைராக்கியமான விசுவாசமே அவருடைய விசுவாச அறிக்கைக்கும், சகல போதனைகளுக்கும் மூலகாரணமாக இருந்ததோடு, கிறிஸ்துவை எக்காலத்திலும் முதன்மைப்படுத்துவதையும் நிர்ப்பந்தித்தது. கிறிஸ்துவால் இரட்சிப்பை அடைந்த நாள் முதல் அவருக்கு கிறிஸ்துவே எல்லாமாக இருந்தார். இயேசு கிறிஸ்துவோடு இணைந்திருப்பதும், அவருக்காகப் போராடுவதும் மற்றவர்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தி விலக்கி வைக்குமானால், ஸ்பர்ஜனைப் பொறுத்தவரையில் இரட்சகரும், ஆண்ட வருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முழுமையாகத் தன்னை அர்ப்பணித்து வாழ்வதே இலட்சியமாக இருந்தது. எல்லாத் தலைவர்களிலும் மேலான அவருடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்பர்ஜன் விசுவாசத்தால் கட்டுப்பட்டிருந்ததை நாம் விளங்கிக்கொள்ளாவிட்டால் அவரை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது.

2. ஸ்பர்ஜன் கிறிஸ்துவின் வார்த்தையாகிய வேதத்திற்கு முழுதும் கட்டுப் பட்டிருந்தார்.

கர்த்தர் தனக்குத் துணை செய்தவரையில் ஸ்பர்ஜன் வேதத்தை முழுமையாக விசுவாசித்து, அதற்கு அடிபணிந்து, அதிலிருந்த போதனைகளை மட்டுமே பிரசங்கித்து, அவற்றிற்கு தன் வாழ்வில் கீழ்ப்படிந்து வந்தார். அதுவே அவருடைய ஆயுதமாக இருந்தது. “தாக்குவதற்கு நாம் வாளை உருவினாலும், நம்மைப் பாதுகாத்துக்கொள்ள கவசத்தை ஏந்தி னாலும் அவற்றை வேதத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்¬றை அடைவதற்கு மற்றவர்களுக்கு வேறு இடங்கள் இருக்கு மானால், எனக்கு வேதத்தைத் தவிர வேறு இடமில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வேதம் முழுவதையும் பிரசங்கித்து முடித்துவிட்டேனானால் எனக்கு பிரசங்கிப்பதற்கு வேறு எதுவுமேயில்லை. . . . சகோதரர்களே, நான் தேடிக்கொண்டிருக்கிற ஒரே பொக்கிஷம் கர்த்த ருடைய சத்தியம் மட்டுமே; அதைத்தேடி நாம் தோண்டிக்கொண்டிருக்கிற ஒரே நிலம் வேதம் மட்டுமே.” (C. H. Spurgeon, The Greatest Fight in the World, pp9-10.)

3. அவரிடம் மகத்தான விசுவாசத்தைக் காணமுடிந்தது.

ஜீவனுள்ள வார்த்தையினூடாக விசுவாசத்தை அடைந்த பிறகு, வேதம் மட்டுமே ஜீவனுள்ளது என்பதை விசுவாசித்த பிறகு, விசுவாச வாழ்க்கை யின் பிரதி பலன்களையெல்லாம் வானத்துக்கும், பூமிக்கும் அதிபதியான கர்த்தரிடத்தில் விட்டுவிட்டு, அவர்முன் விசுவாசத்தோடு வாழ்ந்தார் ஸ்பர்ஜன். கர்த்தர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்பதைத் தவிர வேறு மனிதர்களின் பாராட்டுதல்களையோ, திட்டல்களையோ அவை ஆனந்தத்தை அளித்தாலும், வருத்தத்தை அளித்தாலும் ஸ்பர்ஜன் என்றுமே பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. உடனடியாகவோ அல்லது காலந்தாழ்த்தியோ கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்போடு ஸ்பர்ஜன் ஒரு குழந்தைக்கிருக்கும் உறுதியான விசுவாசத்தோடு கர்த்தருக்கு முன் வாழ்ந்தார்.

4. அவர் கிறிஸ்துவின் ஆடுகளை மெய்மேய்ப்பராக இருந்து பாதுகாத்து வளர்த்தார்.

மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போன்றிருந்து அவருடைய பிரசங்கங் களைக் கேட்க வந்தவர்களிடமும் சரி, நியூ பார்க் தெருவிலும், டெபர்னேக்களிலும் இருந்த சபை மக்களின் மத்தியிலும் சரி, இனி வரப்போகிற சந்ததிக்காக சத்தியப்போராட்டத்தில் ஈடுபட்டபோதும் சரி, ஸ்பர்ஜன், ஆத்துமாக்களின் ஆத்தும நலன்களைக் கருத்தில்கொண்டே எப்போதும் பணிபுரிந்தார். சத்தியம் எப்போதும் வாழ்வளித்து ஆசீர்வதிக்கும் என்பதையும், அசத்தியம் எப்போதும் நம்மை சீரழித்து அழிக்கும் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். கிறிஸ்தவன் யார்? என்பதில் ஸ்பர்ஜன் வேதபூர்வமான விளக்கத்தைக் கொண்டிருந்தார். ஆகவே, அவர்களுக்கு வேதபூர்வமாக விசுவாசத்தோடு உழைத்து அவர் பிரசங்கித்தார். ஜோண் பனியனுக்கிருந்த பெரிய இருதயத்தோடு ஸ்பர்ஜன் விசுவாசிகளுக்காக உழைத்தார்.

5. சத்தியத்துக்கான போராட்டவேளையிலும் விசுவாசிகளிடம் மெய்யான ஐக்கியத்தை நாடினார்.

“கிறிஸ்தவ அன்பு மேலானது; சகலவிதமான பிரிவினைகளும் மோசமான கேடாக நிராகரிக்கப்பட வேண்டும்.” என்று கூறிய ஸ்பர்ஜனின் குணநலத்தை, அவர், பிரிவினைவாதி என்று குற்றஞ்சாட்டியவர்கள் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அதேநேரம், கிறிஸ்துவையும், அவருடைய வேத போதனைகளையும் மீறி இந்த ஐக்கியத்தை ஏற்படுத்தவோ, அநுபவிக்கவோ முடியாது என்பதிலும் ஸ்பர்ஜன் உறுதியாக இருந்தார். கிறிஸ்துவையும், அவருடைய வார்த்தையையும் மீறி, கிறிஸ்துவை விசுவாசித்துப் பின்பற்றாதவர்களோடு தவறான எண்ணங்களோடு, வெறும் சாட்டுக்காக ஒரு போலி ஐக்கியத்தை ஏற்படுத்திக் கூடிவருவதற்கு அவர் தயாராக இருக்கவில்லை. கிறிஸ்துவின் பெயரில் காணப்படும் போலியான ஐக்கியத்துக்கும், மெய்யான ஐக்கியத்துக்கும் உள்ள வேறுபாட்டை அவர் முழுமையாக உணர்ந்திருந்தார். அவருடைய வாழ்க்கையைப் பார்த்தும், அவருடைய ஊழியத்தை ஆராய்ந்தும், அநேகருக்கு அவர் எழுதிய கடிதங்களை வாசித்தும் பார்க்கிறவர்களுக்கு உலக எல்லைகளையெல்லாம் கடந்து ஏராளமான மெய்க்கிறிஸ்தவர்களோடு சத்தியத்தின் அடிப்படையில் அவருக்கிருந்த அன்பும், ஐக்கியமும் தெரியவரும். தம்மை கிறிஸ்தவர்கள், விசுவாசிகள் என்று அழைத்துக் கொண்டு இந்தச் சுவர்களைத் தாண்டி ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்த முயல்பவர்களோடு ஸ்பர்ஜனால் சேர்ந்து நடக்கவோ, வாழவோ முடியவில்லை.

எல்லா விசுவாசிகளிடமும் சாதாரணமாகக் காணக்கூடிய பொதுவான தவறுகளையும், குறைகளையும், அவருக்கேயுரிய சிறப்பான பல குணா திசயங்களையும் கொண்டிருந்த ஸ்பர்ஜன் எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்துவைக் கடைசிவரை பின்பற்றினார். பவுலைப் போல கிறிஸ்துவைப் பின்பற்றிய ஸ்பர்ஜன் எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டியவர். தான் வாழ்கிற காலத்தில், “கடைசிப் பியூரிட்டன்” (Last of the Puritans) என்ற பெயரை அவர் பெற்றிருந்தார். நாம் இதுவரை பார்த்த, அவருடைய விசு வாசம், கிறிஸ்துவை மையமாகக் கொண்ட அவருடைய வாழ்க்கை என் பவை மட்டுமே அவருக்கு இந்தப் பெயரைப் பெற்றுத் தந்திருக்கவில்லை. இவை மட்டுமே பியூரிட்டன்களின் விசேஷ குணாதிசயங்களாக இருக்கவில்லை. தன்னுடைய சக போதகர்களைப் பார்த்து ஸ்பர்ஜன் சொல்லுவார், “சகோதரர்களே! நம்முடைய காலத்துக்கு ஏற்றவிதத்தில் நாம் வேதத்தை ஒருபோதும் மாற்றியமைக்கக்கூடாது. வேதத்திற்கேற்ற வகையில் காலத்தை மாற்றியமைக்க வேண்டும்.” (C. H. Spurgeon, “The Preacher’s Power, and the conditions of Obtaining it,” in An All-round Ministry, p.318) திருச்சபைக்குள்ளிருப்பவர்களும் அதற்கு வெளியே இருப்பவர்களும் நம் காலத்தில் சுவிசேஷத்தைப் பாவிகள் ஏற்றுக்கொள்ளுமுகமாக அறிவிப்பதற்கு, வேதத்தைக் காலத்துக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைப்பதற்கு எல்லா வழிகளையும் பயன்படுத்தி சகல முயற்சிகளையும் எடுத்துவருகிறார்கள். நாம் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இருந்தால், நாமும் வேதத்தில் உறுதியாக இருந்து, சத்தியக் கொடியை உறுதியோடு தாங்கிப்பிடித்து, வாழ்ந்தாலும், ஜீவித்தாலும், கிறிஸ்து தரும் கிருபையையும், வல்லமை யையும் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். சத்தியத்துக்கான போராட்டம் நம்மை அழிக்குமானால், கிறிஸ்துவுக்குள் விசுவாசமாக அவருடைய கிருபையின் மூலமாக வாழ்ந்து இனிதே மடிவோம். ஸ்பர்ஜனின் சாட்சியும், அறிவுரையும் தொடர்ந்து நம் செவிகளில் ஒலிக்கட்டும்: “ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நேர்மையுடன் நான் வாழ்ந்து விட்டேன். என் சகோதரரே! அதையே நீங்களும் செய்யுங்கள்.”

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s