கர்த்தரின் ஆசியையும், பிரசன்னத்தையும் உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து அநுபவித்து வருகிறீர்கள் என்று நம்புகிறேன். கர்த்தரின் சத்திய வேதத்தை அறிகின்ற அறிவிலும் வளர்ச்சியடைந்து வர பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார் என்றும் நம்புகிறேன். உங்கள் கையில் இருக்கும் இந்த இதழ் நல்ல பல ஆக்கங்களோடு உங்களை நாடி வந்திருக்கின்றது. இவற்றின் மூலம் கர்த்தர் தாமே உங்களை வழிநடத்துவாராக.
ஜோர்ஜ் முல்லரைப்பற்றிய ஆக்கத்தைப் போதகர் ஸ்டீபன் ரீஸ் எழுதியிருக்கிறார். இது ஏற்கனவே ‘பேனர் ஆப் டுருத்’ இதழில் ஒருசில மாற்றங்களோடு வெளிவந்திருக்கிறது. நண்பரான ஸ்டீபன் ரீஸ் மாற்றங்கள் செய்யப்படாத முழு ஆக்கத்தையும் எனக்கு அனுப்பினார். அதை உங்களுக்கு தமிழில் வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆக்கத்தின் மூலம் ஸ்டீபன் ரீஸ் நம்மை சிந்திக்க வைத்திருக்கிறார்.
ரோமன் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவத்தோடு தொடர்பில்லாத போலிச் சமயம் என்பதை இருபதுக்கும் மேற்பட்ட காரணங்களோடு விளக்கி இந்த இதழில் ஓரு ஆக்கம் வந்திருக்கிறது. அது உங்களை சிந்திக்கவைக்கும். அதைத் தவிர திருச்சபை வரலாற்றில் பிரான்ஸ் நாட்டின் சீர்திருத்தவாதிகளான ஹியூகனோக் களைப் பற்றியும் இந்த இதழில் வாசிக்கலாம். ரோமன் கத்தோலிக்க மதம் எத்தனை ஆயிரம் மக்களின் உயிரைக் குடித்திருக்கிறது என்பதையும் அதையும் மீறிக் கர்த்தரின் சத்தியம் எத்தனை பேருக்கு ஜீவனை அளித்திருக்கிறது என்பதையும் அதில் நீங்கள் வாசிக்கலாம். திருச்சபையை அநேகர் நம்மினத்தில் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருகிறார்கள். கிறிஸ்தவம் எங்கு உயர்ந்த நிலையிலிருக்கிறதோ அங்கே திருச்சபை உன்னத நிலையிலிருக்கும் என்பதை வேதமும், சபை வரலாறும் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய நிலைமையை நம்மினத்தில் நாம் காண்பதில்லை. இந்த இதழில் முறையான திருச்சபை வாழ்க்கையின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு ஆக்கத்தையும் நீங்கள் வாசிக்கலாம். ஆவியானவர் உங்களோடு தொடர்ந்து பேசட்டும்; வழிநடத்தட்டும்.
– ஆசிரியர்.