கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்
(The Death of Death in the Death of Christ by John Owen)
ஜெரமி வோக்கர் (Jeremy Walker)
“வாசகர்களே! நீங்கள் தொடர்ந்து இந்நூலை வாசிக்கும் எண்ணத் தைக் கொண்டிருந்தால், சிறிது நேரத்தைக் கொடுத்து இதை வாசிக்கும்படி தயவாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். ஒரு நாடக அரங்கில் நுழைந்துவிட்டு உடனே வெளியேறிவிடுகிறவரைப் போல இந்நூலின் தலைப்பை மட்டும் வேகமாய் வாசித்துவிட்டுப் போகிறவராக இருந்தால், இதை நீங்கள் வாசிப்பதில் பயனில்லை. போய் வாருங்கள்! இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் மிகமுக்கிய மான போதனைகளில் ஆர்வமுடையவர்களுக்கும், கிறிஸ்தவ சிந்தனைகளின் மூலம் ஆத்மீகத் தேவைகளைத் தீர்த்துக்கொள்ள வும், இந்நூலில் விளக்கப்பட்டிருக்கும் அரும் போதனைகளின் மூலம் பயனடையவும் விரும்புகிறவர்களுக்கு நான் ஒரு சில வார்த்தைகளை ஆரம்பத்திலேயே முன்வைக்க விரும்புகிறேன்.”
“கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” எனும் நூலில் ஜோண் ஓவன் மேல்வரும் வார்த்தைகளையே வாசகர்களுக்கு ஆரம்ப உரையாக அளித்து நூலை எழுத்தியிருக்கிறார். அசட்டையாக நூலை வாசிக்க முற்படும் வாசகனை இந்த வார்த்தைகள் சுண்டி இழுக்காது. அவ்வாறு அவனை சுண்டி இழுப்பதற்காக ஓவன் இந்த வார்த்தைகளை அவன் முன் வைக்கவில்லை. தான் வாசகனுக்கு முன் படைக்கும் விஷயத்தின் முக்கியத்துவத்தை நன்றாக உணர்ந்திருந்த ஓவன் உடனடியாகவே விஷயத்துக்கு வந்துவிடுகிறார். தன்னுடைய நூலில் கையாளப்பட்டிருக்கும் விஷயம் அதிமுக்கியமானது என்பதால் அவர் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது நூலை வாசிக்கும் வாசகனும் அந்த நோக்கத்தோடேயே நூலை அணுக வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். கவனத்தோடு சிந்தனையைப் பயன்படுத்தி வாசிக்கிறவர்கள் ஓவனின் நூலின் மூலம் பெரும் பயனடைவார்கள்.
தோமஸ் மூர் என்ற மனிதர் 1643ம் ஆண்டு The Universality of God’s Free Grace in Christ to Mankind என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூலுக்கு பதிலளிக்குமுகமாகவே ஜோண் ஓவன் “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” எனும் நூலை எழுதினார். தோமஸ் மூரின் நூலினால் அப்படியொன்றும் பெரிய பயனில்லை என்று ஜிம் பெக்கர் கருத்து வெளியிட்டிருக்கிறார். இருந்தபோதும் ஓவனின் காலத்தில் அந்த நூல் மட்டுமே கிறிஸ்து யாருக்காக மரித்தார்? என்ற வினாவுக்கான முழு விளக்கத்தை எதிர்ப்பாளர்களின் கண்ணோட்டத்தில் மூலம் விளக்க முற்பட்டது. அதேவேளை இந்த விஷயத்தைப் பற்றிய முழுப் போதனை யையும் அளிக்க தான் ஏழு வருடங்களுக்கு மேலாகக் கடினமாக உழைக்க நேரிட்டிருந்தது என்பதையும் ஓவன் குறிப்பிட மறக்கவில்லை.
தோமஸ் மூரின் நூலின் தலைப்பு அவருடைய நூலின் உள்ளடக்கத்தை விளக்குவதாக இருந்தது. அவரது நூல், உலகத்திலுள்ள சகல மக்களையும் இரட்சிப்பதற்காக கிறிஸ்து மரித்தார் என்றும், அவர்கள் அனைவருமே இரட்சிப்பை அடைவார்கள் என்றும் விளக்கியது. இந்த நூலுக்கு எதிரான வாதத்தை முன்வைக்கும்போது இதே விளக்கத்தை அளித்த ஆர்மீனிய னிசத்தையும், அமிரெல்டியன் (Amyraldian) போதனையையும் ஓவன் கவனிக்காமல் இருக்கவில்லை. ஆர்மீனியனிசம் மனித சித்தத்தின் தீர்மானத்தின் மூலம் இரட்சிப்பு ஒருவரில் நிகழ்கிறது என்று போதித்தது. இதன் பிரகாரம் இரட்சிப்பை அடைவதும் அடையாததும் மனிதனுடைய சித்தத்தின் செயல்பாட்டிலேயே தங்கியிருந்தது. அமிரேல்டியன் போதனையோ, கிறிஸ்துவின் சிலுவைப்பலி சகல மக்களுக்குமாக நிறைவேற்றப்பட்டிருந்த போதும், கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மட்டுமே விசுவாச மாகிய நிபந்தனையின் மூலம் இரட்சிப்பை அடைகிறார்கள் என்று விளக்கியது. குறிப்பிட்டவர்களுக்காக மட்டுமே கிறிஸ்து மரித்தார் (Particular redemption) என்ற ஓவனின் தைரியமான விளக்கம் இந்தப் போதனைகளை மட்டும் கருத்தில் கொண்டு கொடுக்கப்படவில்லை. ஆர்மீனியனிசமும், அமிரெல்டியன் போதனையும் கிறிஸ்துவின் சிலுவைப் பலியை நோக்கிய விதத்தைவிட முற்றிலும் வேறுபட்டவிதமாக, தெளிவான நோக்கத்தோடு ஓவன் அதை அணுகினார். தனக்குப் பின்னால் வந்த ஸ்பர்ஜனைப் போலவே, ஓவனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப் பதை உணர்ந்தார். கீழ்வரும் ஸ்பர்ஜனின் வார்த்தைகளைக் கவனியுங்கள்:
“என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், கல்வினி சத்தைப் பிரசங்கிக்காவிடில் கிறிஸ்துவைப் பற்றிய பிரசங்கத்திற்கே இடமில்லை என்பதுதான். கல்வினிசமே சுவிசேஷம்; சுவிசேஷத்திற்குக் கொடுக்கப்பட்ட இன்னொரு பெயரே கல்வினிசம். கிரியைகளின்றி விசுவாசத்தினால் நீதிமானாகுதலையோ அல்லது கிருபையை அளிப்பதில் கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்பதையோ அல்லது என்றும் மாறாத, நித்தியமான, தெரிந்து கொள்ளும் கர்த்தருடைய அன்பையோ பிரசங்கிக்காவிடில் சுவிசேஷத்தை சுவிசேஷமாக நம்மால் ஒருபோதும் பிரசங்கிக்க முடியாது. தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட குறிப்பிட்ட மக்களுக்காக கிறிஸ்து மரித்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டமைந்த சுவிசேஷத் தைப் பிரசங்கிக்காவிடில் நமது பிரசங்கம் சுவிசேஷப் பிரசங்கமாக இருக்காது. கர்த்தரால் அழைக்கப்பட்ட பின்பு பரிசுத்தவான்கள் ஆத்மீகத்தை இழந்து போகும்படிச் செய்து, கர்த்தரின் குழந்தைகள் கிறிஸ்துவை விசுவாசித்த பிறகு நித்திய தண்டனைக்கான நெருப்பில் எரியும்படிச் செய்யும் சுவிசேஷத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அத்தகைய சுவிசேஷத்தை நான் அறவே வெறுக்கிறேன்.”
தன்னுடைய நூலில் ஜோண் ஓவன் சந்திக்கும் முக்கியமான கேள்வி, கிறிஸ்துவின் சிலுவை மரணம் அதன் நோக்கத்தை முற்றாக நிறைவேற்றியதா? அல்லது அதில் தோல்வியை சந்தித்ததா? என்பதுதான். இதிலிருந்து ஓவன் இந்த விஷயத்தை வேத அடிப்படையிலும், இரட்சிப்பின் அடிப்படையிலும் நோக்குவதைப் பார்க்க முடிகிறது. இந்தக் கேள்விக்கான பதில் சுவிசேஷத்தின் அடிப்படையைக் குறித்ததாக இருக்கிறது. அத்தோடு கர்த்தரின் சுயதன்மையையும், நமது இரட்சிப்புக்காக திரித்துவ தேவன் எடுத்த நடவடிக்கைகளையும் குறித்ததாகவும் இருக்கிறது. நம்முடைய கர்த்தர் தம்முடைய திட்டத்தில் தோல்வியைச் சந்தித்தாரா? என்ற கேள்விக்கான ஓவனின் பதில் பின்வருமாறு இருந்தது:
“ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நோக்கங்களை நிறைவேற்று வதற்காக இயேசு கிறிஸ்து தன்னுடைய பிதாவின் திட்டத்தின்படியும், சித்தத்தின்படியும் தன்னை சிலுவையில் பலியாகச் செலுத்தினார். அத்தோடு, தன்னுடைய மரணத்தின் மூலம் திட்ப உறுதியாக நிறைவேற்றப்பட்ட அத்தனைப் பலன்களையும் எவரெவருக்காக அவர் மரித்தாரோ அத்தனை பேரும் கர்த்தருடைய திட்டத்தின்படியும், சித்தத்தின்படியும் பெற்றனுபவிக்க பரலோகத்திலிருந்து தொடர்ந்து பரிந்துரை செய்து வருகிறார்.”
வேதமளிக்கும் மேல்வரும் போதனையை ஓவன் மறுபடியும் தனது நூலில் இன்னோரிடத்தில் பின்வருமாறு விளக்குகிறார்:
“உலகத்தோற்றத்துக்கு முன்பே தானளித்த வாக்குத்தத்தத்தின்படி, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மேல் தான்வைத்திருக்கும் நித்திய அன்பின் பிரகாரம் சகலதும் பூரணமாக நிறைவேறி வரும் காலத்தில் கர்த்தர் தன்னுடைய குமாரனை அனுப்பிவைத்தார். தன்னுடைய வாக்குத்தத்தம் நிறைவேறி நித்திய ஜீவனுக்காக நியமிக்கப்பட்ட அனைவரும் தன்னிடத்தில் வரும்படியாகவும், தன்னுடைய மகிமை பிரகாசிக்கும்படியும் நித்திய மீட்பைக் கிறிஸ்து தன்னுடைய சிலுவைப்பலி மூலம் அழிவற்றதும், மகிமையுள்ளது மான விலையைக் கொடுத்துப் பெறும்படிச் செய்தார்.”
மேலே நாம் வாசித்த ஓவனின் வார்த்தைகளை இலகுவாக விளக்குவ தானால் கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பியதில் கர்த்தருக்கு உறுதியான ஒரு பெரு நோக்கம் இருந்தது எனலாம். அத்தோடு கர்த்தருடைய குமாரன் உறுதியான ஒரு நோக்கத்தோடு தன்னை சிலுவையில் பலி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் அவர் இப்போது உறுதியானதும், தீர்க்கமானதுமான ஒரு நோக்கத்தோடு பரிந்துரை செய்து வருகிறார். கிறிஸ்துவின் மரணபலியின் பலன்களை பரிசுத்த ஆவியானவர் உறுதியான நோக்கத்தோடு பாவிகள் அநுபவிக்கும்படிச் செய்து வருகிறார். இந்த உறுதியான தெய்வீக நோக்கம் எந்தவிதத்திலும் தோல்வியடைய முடியாது. தான் நிறைவேற்றுவதற்காக வந்த நோக்கங்கள் அனைத்தையும் இரட்சக ரான இயேசு கிறிஸ்து நிச்சயமாக நிறைவேற்றினார்.
தன்னுடைய நூலின் மூலம் ஓவன் போலிப்போதனையைத் தகர்த்தெறிவதோடு இருந்துவிடாமல் உறுதியாக ஒரு சத்தியத்தையும் நிலைநாட்டுகிறார் என்பதை நாம் உணருவது அவசியம். திரித்துவ தேவனைவிட அன்பு செலுத்துவதில் தாம் பெரியவர்கள் என்றும், வல்லமையுள்ளவர்கள் என்றும், ஞானவான்களென்றும் காட்டிக்கொள்ள விரும்பும் அகங்காரம் பிடித்தவர்களின் முட்டாள்தனத்தை சுட்டிக்காட்டுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிராமல் ஓவன் இரட்சிப்பின் மூலம் கர்த்தரின் மகிமை வெளிப்படுவதை விளக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறார். “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” எனும் தன்னுடைய நூலின் நான்கு பாகங்களில் வேதம் போதிக்கும் இந்த சத்தியத்தை ஆணித்தரமாக விளக்குகிறார் ஓவன்.
ஒவன் தன்னுடைய நூலின் முதலிரண்டு பாகங்களிலும், கிறிஸ்துவின் மரணம் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இரட்சிப்பை வழங்குகிறது என்ற தெளிவான வேதத்தின் போதனையை முன்வைக்கிறார்.
நூலின் முதலாவது பாகம் கிறிஸ்துவின் சிலுவைப் பலியை விளக்குகிறது. இப்பகுதியில் அப்பலிக்குக் காரணமான அம்சங்களையும், அதன் நோக்கத்தையும் ஓவன் ஆதாரபூர்வமாக விளக்குகிறார். அதை நாம் கடந்து போவோமானால் அடுத்தகட்டமாக ஓவன் திரித்துவ தேவனே கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக இப்பலி நிறைவேறக் காரணமாக இருந்தார் என்றும், அதில் பிதா, குமாரன், ஆவியானவர் ஆகியோர் எவ் வாறு இணைந்து இயங்கி அப்பணி நிறைவேறக் காரணமாக இருந்தார்கள் என்பதையும் விளக்குகிறார். மீட்பு நிறைவேறுவதற்கு கிறிஸ்துவின் பலியும் கர்த்தருக்கும் மனிதருக்கும் இடையிலான அவருடைய மத்தியஸ்துவமுமே காரணமாக அமைந்தது. கிறிஸ்துவின் இத்தகைய மீட்புப்பணிக்கு எதிரான வாதங்களை ஓவன் தன் நூலில் விளக்கி அவற்றிற்கு வேதபூர்வமான பதில்களை இப்பகுதியில் தந்திருக்கிறார்.
ஓவனின் நூலின் இரண்டாம் பாகம், எந்த நோக்கத்திற்காக கர்த்தரின் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பதை விளக்குகிறது. ஓவன் இதில், கர்த்தரின் மகிமைக்காகவே நமது இரட்சிப்பு நிறை வேறியது என்பதை விளக்குகிறார். நமது இரட்சிப்பின் உடனடி நோக்கம் கர்த்தரிடத்தில் நம்மைக் கொண்டு வருவதுதான். இந்த இடத்தில் ஓவன், கிறிஸ்துவின் மீட்பு அதோடு தொடர்புடைய அத்தனைக் கிருபைகளையும் உள்ளடக்கிக் காணப்படுகிறது என்பதை வேதத்தில் இருந்து தெளிவாக விளக்குகிறார். ஓவனைப் பொறுத்தவரையில் தன்னுடைய இரட்சிப்பிற்காக மனிதன் அளிக்கும் பங்காக விசுவாசம் காணப்படவில்லை. அது தேவ ஆட்டுக்குட்டி தன்னை விலையாகக் கொடுத்து பெற்றுத்தந்திருக்கும் ஈவு என்று ஓவன் வேத ஆதாரத்தோடு விளக்குகிறார். இதற்கு மாறான கருத்துகளுக்கெல்லாம் இப்பகுதியில் ஓவன் தகுந்த பதில்களை அளித்திருக்கிறார். ஓவன் ஒரு வலிமையான வேத விளக்கத்தை இங்கே நம்முன் வைக்கிறார். அதாவது, கிறிஸ்து தன்னுடைய மீட்புப்பணியை நிறைவேற்றும் வரைக்கும் இறையாண்மையுள்ள கர்த்தர் கட்டிவைக்கப்பட்டிராமல், தன்னுடைய வல்லமையின் மூலம் கிறிஸ்து சிலுவையில் மரிக்கும்படிச் செய்து அவருடைய மரணத்தின் மூலம் நம்மை மீட்டிருக்கிறார் என்பதை ஆணித்தரமாக விளக்கியிருக்கிறார்.
தன்னுடைய விளக்கங்களுக்கு ஆதாரமான வேதவசனங்களைத் தொகுத்து மூன்று குழுக்களாக நம்முன் வைக்கிறார் ஓவன்.
(1) முதலாவது குழுவிலுள்ள வேத வசனங்கள் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் குறிப்பிட்ட மக்களை இரட்சிப்பதே கர்த்தருடைய ஆலோசனையும் நோக்கமுமாக இருந்தது என்பதை விளக்குகின் றன.
(2) இரண்டாம் குழுவிலுள்ள வேத வசனங்கள் கிறிஸ்துவின் சிலுவைப்பலி நிறைவேற்றுதலின் காரணமாக குறிப்பிட்ட மக்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டுகின்றன.
(3) மூன்றாம் குழுவிலுள்ள வசனங்கள் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் இரட்சிக்கப்பட்டவர்கள் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை விளக்குகின்றன.
ஓவன் இப்பகுதியில் கிறிஸ்து விலை கொடுத்துப் பெற்றுக்கொண்ட மீட்புப்பலன்களுக்கும், அப்பலன்களை நாம் அநுபவபூர்வமாக அடைவ தற்கும் இடையிலுள்ள வேறுபாட்டையும் விளக்குகிறார். இந்த வேறுபாட்டை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதையும், இதை ஆர்மீனியனிசப் போதனை எவ்வாறு திரித்துப் போதிக்கிறது என்பதையும் ஓவன் விளக்குகிறார். ஆர்மீனியனிசம் இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை என்கின்றது. ஆனால், இவை இரண்டும் ஒன்றே என்று ஓவன் விளக்குவதோடு கால அளவைப் பொறுத்தவரையில் மீட்புப் பலன்களுக்கான கிறிஸ்துவின் பலி இவை இரண்டில் முதலாவதாக நிகழ்கிறது என்கிறார்.
தன் நூலின் மூன்றாவது பாகத்தில் உலகளாவிய மீட்புக்கெதிரான (Universal redemption) பதினாறு வாதங்களை வேதத்தில் இருந்து நம்முன் வைக்கிறார் ஜோண் ஓவன். ஜிம் பெக்கர் இவற்றைப் பற்றி விளக்கும்போது, “இவற்றில் மூன்றாவதைத் தவிர ஏனைய அனைத்தும் தெளிவான வெளிப்படையான ஆதாரங்களாக இருக்கின்றன. இவையனைத்தும் வேதம் போதிக்கும் கிறிஸ்துவின் மீட்புப்பணிக்கெதிரான உலகளாவிய மீட்புப் போதனை எந்தளவுக்கு வேதத்தோடு பொருந்தியதாக இல்லை என்பதைக் காட்டுகின்றன.” என்று கூறுகிறார். ஓவன் வேதம் முழுவதிலும் வார்த்தை வார்த்தையாக, வசனம் வசனமாக கிறிஸ்துவின் இரட்சிக்கும் பணிபற்றியும் அதன் நோக்கம் பற்றியும் போதிக்கும் விளக்கங்களைத் தேடித்தேடி அவற்றை சாட்சிக்கு மேல் சாட்சியாக நம்முன் வைக்கிறார். இந்தப் பகுதி பற்றி ஜிம் பெக்கர் சொல்லியிருப்பதைக் குறிப்பிட்டேயாக வேண்டும்.
“ஓவனுடைய விளக்கங்கள் சுவிசேஷத்தின் அடிப்படை மையத்தை விளக்கும் பரந்த வேதவிளக்கமாகும். இவற்றை நாம் அவசியம் கவனித்துப் படிக்க வேண்டும். பாரம்பரியப் போதனையொன்றுக்கு வக்காலத்து வாங்கும் ஒரு விளக்கமாகக் கருதி இவற்றை நாம் நிராகரித்துவிடக்கூடாது. உலகளாவிய மீட்பு வேதம் முழுவதிலும் வசனம் வசனமாகப் போதிக்கப் பட்டிருக்கிறது என்று எடுத்துக் காட்டி ஜோன் ஓவனின் வாதங்களைத் தகர்த்தால் தவிர, மீட்பு குறிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற கல்வினிசப் போதனையை ஒரு பூதமாகக் கருதி நிராகரிக்க எவருக்கும் உரிமை கிடையாது. இதுவரை எவராலுமே ஒவனின் போதனையை நிராகரிக்க முடியவில்லை.” என்கிறார் ஜிம் பெக்கர்.
ஓவனின் வாதங்கள் இரண்டு முடிவுகளை முன்வைக்கின்றன. முதலாவதாக, கிறிஸ்துவின் மீட்புப்பணி வெற்றிகரமாக நிகழ்ந்து தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றியிருப்பதால் முடிவாக அழிந்து போகிறவர்களை இரட்சிப்பதற்காக அது திட்டமிடப்பட்டதாக இருக்க முடியாது. இரண் டாவது, எல்லா மனிதர்களையும் இரட்சிப்பது கர்த்தரின் நோக்கமாக இருந்திருந்திருந்தால் கர்த்தர் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்திருக்க வேண்டும் (அது கர்த்தரை அவமதிக்கும் செயல்) அல்லது எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டும் (ஆனால், கர்த்தர் ஒருபோதும் தன்னுடைய நோக்கத்தில் தவற முடியாது).
ஓவனின் நூலின் நான்காவது பாகம் உலகளாவிய மீட்பாகிய போதனைக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு எதிரானது. இந்தப் போதனைக்கு சார்பாக இருப்பதாகக் கருதப்படும் ஒவ்வொரு வேத வசனத்தையும் ஓவன் தன்னுடைய இறையியல் திறமையைப் பயன்படுத்தி அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்ந்து விளக்கியிருக்கிறார். இந்த வசனங்களை விளங்கிக் கொள்ள முடியாமல திணறியிருக்கும் பிரசங்கிகளும், கிறிஸ்தவர்களும் ஓவன் தந்துள்ள தெளிவான விளங்களைக் கவனமாகப் படிப்பார்களானால் அவர்களுக்குப் பெரும் பயன் உண்டாகும். ஓவனுக்குப் பின் வந்தவர்களில் பலர் இந்த வசனங்களுக்கு விளக்கங்கொடுத்திருந்த போதும், ஓவனின் திறமையான தெளிவான விளக்கங்கள் அவர்கள் அனைவருடைய விளக்கங்களுக்கும் முன்னோடியாக இருக்கின்றன. வேத வசனங்களை அவை அமைந்திருக்கும் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, வசனங்களை வசனங்க ளோடு ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்கந்தரும் அருமையான நூலாக இருக்கிறது ஓவனின் படைப்பு. தோமஸ் மூரின் வாதங்களை ஓவன் மிகத் திறமையாக வாதாடித் தன்னூலில் தகர்த்தெறிந்திருக்கிறார்.
இந்தப் பாகத்தின் கடைசி அதிகாரத்தில் ஓவன், உலகளாவிய மீட்பாகிய போதனைக்கு சார்பான இறையியல் விளக்கத்தை நிராகரித்து, குறிப்பிட்டவர்களுக்கான கிறிஸ்துவின் மீட்பை வலியுறுத்தியுள்ளார். இருந்தபோதும் குறிப்பிட்டவர்களுக்கான மீட்பு கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டிய தனி மனிதனின் பொறுப்பை நிராகரிக்கவில்லை என்றும், அது விசுவாசத்திற்கு எதிரானதல்லவென்றும், கிறிஸ்துவின் பணியையும், கர்த்தரின் இலவசமான கிருபையையும் அது மகிமைப்படுத்துகிறது என்றும், அது மட்டுமே மெய்யான சுவிசேஷத்தின் சகல ஆறுதல்களுக்கும், நிச்சயத்துவத்துக்கும் அடிப்படையானது என்றும் விளக்கியிருக்கிறார். அதேவேளை உலகளாவிய மீட்பாகிய போதனைக்கு சார்பானவர்கள் மனிதனின் கடமைப் பொறுப்பைத் தவறாக விளங்கிக் கொண்டிருப்பதோடு, விசுவாசத்தை அசிங்கப்படுத்தி அதையே கிறிஸ்தவ நிச்சயமாக தவறாகக் கணக்குப்போட்டு, கிறிஸ்துவின் இலவசமான கிருபையை சாதாரணமானதாக்கி கிறிஸ்துவின் மீட்புப்பணியையும் களங்கப்படுத்துகிறார்கள். அத்தோடு நிலைதடுமாறும், மாறுபாடுள்ள, தெளிவற்ற ஆறுதல்களையும், நிச்சயத்தை யும் ஆத்துமாக்களுக்கு வழங்குகிறார்கள்.
உண்மையில் கிறிஸ்துவின் சிலுவை மரணம் பெற்றுத் தந்துள்ள சகல நல்ல பலன்களும் கர்த்தரின் சித்தத்தின்படியும், திட்டத்தின்படியும் கிறிஸ்து மரித்த அத்தனை ஆத்துமாக்களுக்கும் எந்தவிதமான வேறுபாடுமின்றி வழங்கப்படுகின்றது. இதுவே நற்செய்தியாகும். உலகத்தோற்றத்திற்கு முன்பாக தான் அன்புகூர்ந்து நேசித்த மக்களுக்காக திட்டமிட்டு நிறைவேற்றிய இரட்சிப்பைத் திட்ப உறுதியோடு அவர்களுக்கு வழங்கும் இறையாண்மை யுள்ள கர்த்தரின் நற்செய்தியே இது. இதுவே முழுமையானதும், இலவசமானதுமான இரட்சிப்பு. இதுபற்றி ஜிம் பெக்கர் ஓவனின் நூலுக்கான தன்னுடைய முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்:
“கல்வினிசத்தின் இரட்சிப்புப் பற்றிய போதனையை விளக்க வேண்டுமானால் அதை ஒரே வார்த்தையில் விளக்கிவிடலாம். அதாவது, கர்த்தர் பாவிகளை இரட்சிக்கிறார் என்பதே அப்போதனை. இதில் கர்த்தரைப் பற்றி கல்வினிசம் போதிப்பதென்ன? பிதா, குமாரன், ஆவியானவராக இருக்கின்ற கர்த்தர் இறை யாண்மையுடனும், ஞானத்துடனும், அன்புடனும் தெரிந்துகொள் ளப்பட்ட மக்களின் இரட்சிப்புக்காக உழைக்கிறார். இதில் பிதா தெரிந்துகொள்கிறார்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் மீட்புக்கான பணியைக் குமாரன் செய்கிறார்; பிதாவினதும், குமாரனதும் நோக்கங்களின்படி ஆவியானவர் ஆத்துமாக்களைப் புதுரூபமாக்குகிறார். இதுவே கல்வினிசத்தின் கர்த்தத்துவம். இரட்சிப்பைப் பற்றி கல்வினிசம் போதிப்பதென்ன? பாவிகளை மரணத்திலிருந்து விடுவித்து மகிமைக்குக்கொண்டுவருவதற்கான அனைத்தையும் ஆரம்பம் முதல் முடிவுவரையும் கர்த்தரே செய்கிறார். அவரே இரட்சிப் புக்கான திட்டமிடுகிறார்; மீட்பை நிறைவேற்றி அதை பாவிகளுக்கு அளிக்கிறார்; அவர்களை அழைத்துப் பாதுகாக்கிறார்; நீதிமான் களாக்குகிறார்; பரிசுத்தமாக்குகிறார்; மகிமைப்படுத்துகிறார். இதுவே இரட்சிப்புப் பற்றிய அதன் போதனை. பாவிகளைப் பற்றிய அதன் போதனை என்ன? கர்த்தரின் பார்வையில் அவர்கள் குற்றவாளிகளாகவும், உதவியற்றவர்களாகவும், வல்லமையற்றவர்களாகவும், குருடர்களாகவும், கர்த்தருடைய சித்தத்தை எந்த விதத்திலும் நிறைவேற்றும் தகுதியற்றவர்களாகவும், தங்களுடைய இருளான ஆத்மீக வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள வழியற்ற வர்களாகவும் இருக்கின்றனர். கர்த்தர் பாவிகளை இரட்சிக்கிறார் என்ற இந்தப் போதனையை எந்தவிதத்திலும் நாம் பலவீனப் படுத்திவிடக்கூடாது. இது தொடர்பான திரித்துவ தேவனின் பணி யைக் குறைவுபடுத்தியோ அல்லது இரட்சிப்பின் நிறைவேற்றத்துக் கான பணியைக் கர்த்தருக்கும் மனிதனுக்கும் இடையில் பங்கு போட்டு அதில் மனிதனின் பங்கை உயர்த்தியோ அல்லது மனித னின் இயலாத்தன்மையைக் குறைத்துக்காட்டி அவன் தன்னுடைய இரட்சிப்பின் பெருமையை இரட்சகரான இயேசுவுடன் பகிர்ந்து கொள்ளும்படிச் செய்வதோ பெருந்தவறு. பாவிகள் தங்களை ஒரு போதும் எந்தவிதத்திலும் இரட்சித்துக்கொள்ள முடியாது, இரட்சிப் பின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அத்தனையும் ஆரம்பம் முதல் முடிவுவரை பூரணமாக கர்த்தருக்கே சொந்தமானது. அதில் அவருக்கே சகல மகிமையும் சேர வேண்டும். ஆமேன்! நாம் இது வரை விளக்கிய சத்தியத்தையே கல்வினிசம் தன்னுடைய ஐம் போதனைகளின் மூலம் ஆணித்தரமாக நிறுவ முயல்கிறது. அதே வேளை இதையே ஆர்மீனியனிசம் தகர்க்க முயல்கிறது. (J. I. Packer, Intriduction to the Death of Death, 6).
ஆனால், நாம் இப்போது ஒரு பிரச்சினையை சந்திக்கிறோம். சுவிசேஷக் கிறிஸ்தவர்களான நாம் சந்திக்கும் இந்தப் பிரச்சினை நற்செய்தியைப் பற்றியது. அதாவது, இதுவரை நாம் பார்த்த சத்தியத்தின் அடிப்படையிலான நற்செய்தியைத்தான் நாம் பிரசங்கித்து வருகிறோமா? என்பதை அந்தப் பிரச்சினை. முதலில், இரண்டு கேள்விகளுக்கு நாம் நிச்சயம் பதிலளித்தாக வேண்டும். (1) நாம் இதுவரை பார்த்திருப்பவைகள் மெய்யானவையாக இருக்குமானால் அவற்றின்படி சுவிசேஷத்தை நான் பிரசங்கிக்கிறேனா? (2) இதுவரை நாம் பார்த்தவை சத்தியங்களானால், சுவிசேஷத்தை நான் எந்த முறையில் பிரசங்கிக்க வேண்டும்?
ஜோன் ஓவனின் நூலை வாசிக்கிறபோது சுவிசேஷத்தைப் பற்றிய நம்முடைய அறிவு குறைபாடுள்ளதாக இருப்பதை நாம் உணரும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதை நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ அதை உணரும்படி அவருடைய வார்த்தைகள் நம்மை உந்துவனவாக இருக்கின்றன. அடுத்தபடியாக, சுவிசேஷத்தைப் பற்றிய நமது அறிவு வேதபூர்வ மானதாக இருந்தாலும், அதை நாம் பிரசங்கிக்கும் முறை வேதபூர்வ மான தாக இல்லை என்பதை உணரும் நிலைக்கும் தள்ளப்படுகிறோம். “நீங்கள் மறுபிறப்படைய வேண்டும்” என்று பிரசங்கிப்பது சுவிசேஷப் பிரசங்கமாகாது. ஒருவன் மறுபிறப்படைந்தேயாக வேண்டும் என்று பிரசங்கிப்பதும் கிறிஸ்துவின் நற்செய்தியல்ல. மறுபிறப்பு அல்ல நற்செய்தி; நற்செய்தியின் விளைவே மறுபிறப்பு. நற்செய்தியாகிய மரத்தில் முளைக்கும்கனியே மறுபிறப்பு. பவுல் 2 கொரி. 5:19ல் பின்வறுமாறு நற்செய்தியை விளக்குகிறார், “கிறிஸ்துவின் மூலம் கர்த்தர் உலகத்தைத் தமக்கு ஒப்புற வாக்கிக்கொள்ளுகிறார்.” இரட்சிப்பைப் பெறுவதற்காக கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய மீட்பின் விளைவே நற்செய்தியாகும். இதைப் பற்றிவிளக்கும் சின்கிளேயர் பேர்கசன் (Sinclair Firguson), “கிறிஸ்து நமக்குள் இருப்பதோ அல்லது நாம் மறுப்பிறப்படைந்திருப்பதோ நமது நீதிமான்களாகுதலுக்கான அடிப்படை அல்ல”. கிறிஸ்து நமக்காக மரித்திருப்பதே நீதிமானாக்குதலின் அடித்தளமாகும். மார்டின் லூதர் இதுபற்றிக் கூறும்போது, “பூரணமாக நமக்கு வெளியில் இருந்து வருவதே நற்செய்தி” என்கிறார். இதை மேலும் விளக்கும் பேர்கசன்,
“நமது பிரசங்கத்தில் நாம் ஒருபோதும் கிறிஸ்துவின் மீட்புப் பணியை கிறிஸ்துவில் இருந்து வேறுபடுத்திக்காட்டக் கூடாது. மீட்பு, நீதிமானாக்குதல், இரட்சிப்பு என்று நாம் பிரசங்கிப்பதை விட “மரித்திருக்கும் கிறிஸ்துவை” பிரசங்கிப்பது மேலானது. இரட்சிப் பின் பலன்களைக் கிறிஸ்துவே நிறைவேற்றித் தந்திருப்பதோடு அவர் மூலம் மட்டுமே அவற்றை நாம் அடையவும் முடியும். அவரில் இருந்து அவரைப் பிரிக்க முடியாது. கிறிஸ்துவால் நாமடையும் பலன்களை மட்டும் பிரசங்கித்துவிட்டு நற்செய்தியின் நாயகனான கிறிஸ்துவைப் பிரசங்கிப்பதைத் தவிர்த்துவிடும் நவீன பிரசங்க வியாதியைவிட்டு நாம் விலகியோட வேண்டும். நாம் கிறிஸ்து மைய மாகக்கொண்டு அவர் செய்திருக்கும் பணியைப் பிரசங்கிக்கிறோம்; கிறிஸ்துவை விட்டுவிட்டு அவருடைய பணியை மட்டும் பிரசங் கிப்பதில்லை.”
இது நம்முடைய இரண்டாவது கேள்விக்கு நம்மை அழைத்துச் செல்லுகிறது. பேர்கசன், “மரித்து உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை நாம் பிரசங்கத்தின் மூலம் அனைவருக்கும் வழங்குகிறோம்” என்கிறார். அப்படியானால் அதை எவ்வாறு பிரசங்கிப்பது? இதை வாசிக்கிறபோது நாம் பிரசங்கித்துள்ள அல்லது நாம் கேட்டிருக்கிற பிரசங்கங்களை நோக்கி நம்முடைய மனம் அசைபோட ஆரம்பிக்கிறதல்லவா? அந்தப் பிரசங்கங்களில் ஆத்து மாக்களை உந்தி இழுப்பதற்கு நாமோ மற்றவர்களோ பயன்படுத்தியிருக்கிற சொற்பிரயோகங்களை சிந்தித்துப் பார்ப்போம். அவ்வாறு சிந்தித்துப் பார்க்கிறபோது, நான் ஒரு ஆர்மீனியனா? அமிரெல்டியனா? என்னைக்குறித்தும் என்னுடைய பிரசங்கததைக் குறித்தும் நான் ஆத்துமாக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறேனா? ஆத்துமாக்களுக்கு கொடுக்க அவசியமில்லாத எதையும் பிரசங்கத்தில் நான் கொடுத்திருக்கிறேனா? கிறிஸ்து தன்னுடைய மக்களுக்காக மரித்திருப்பதால் நான் எப்படி அவரை ஆத்துமாக்களுக்கு வழங்க முடியும்? அவர்கள் அவருடைய மக்களாக இல்லாமல் இருந்துவிட்டால் என்ன செய்வது? கர்த்தரின் இலவசமான கிருபையின் நற்செய்தியை சிதைத்துவிடுகிற ஆபத்தேற்படும் என்பதால் கிறிஸ்துவை ஆத்துமாக்களுக்கு நான் வழங்காமல் இருப்பது என்னை ஹைபர் கல்வினிஸ்டாக (Hyper Clavinist) மாற்றி விடுமா? ஏனைய பிரசங்கிகளும், நானும் “கர்த்தரோடு ஒப்புறவாகுங்கள்” என்று கர்த்தரே நம்மூலம் வருந்தி அழைப்பது போல் ஆத்துமாக்களுக்கு பிரசங்கிப்பது எப்படி? கர்த்தருடைய மக்களின் மீட்பு நடக்கக் கூடிய ஒன்றாக இல்லாமல் நிச்சயமாக நிகழ்ந்து, நிறைவேறி, கொடுக்கப்பட்டு வருகிறதாக இருக்குமானால், கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி ஆத்துமாக்களை நான் அழைப்பதெப்படி?
ஆர்மீனியன்களும் அவர்களுடைய நண்பர்களுமே கிறிஸ்துவை முட மாக்கி நற்செய்தியாகிய மரத்தை சேதப்படுத்திவிட்டிருக்கிறார்கள். அவர்கள் செத்த பிணங்களுக்கு முன் நம்பிக்கையாகிய சட்டியை நீட்டி அதில் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்படி அவர்களை வற்புறுத்துகிறார்கள். கிறிஸ்து தன் பணியை அரைகுறையாக விட்டிருக்கிறார் என்ற எண்ணத்தில் அதைப் பூரணமாக்க செத்த பிணங்களை ஏவிவிடுகிறார்கள். பிணங்களை விசுவாசிக்க வைக்க ஆர்மீனியன் போதனையாளர் செய்யும் செயலே இது. அவர்களுடைய செயல் எந்தமாதிரியான இரட்சிப்பை ஆத்துமாக் களுக்கு வழங்கப்போகிறது?
நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ உலகத்தின் பார்வையில் எந்த நிலைமையிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் கர்த்தருடைய மக்களெல்லோ ரையும் இரட்சிப்பதற்காகவே கிறிஸ்து மரித்தார் என்றும், அவர் தன்னுடைய பணியில் ஒருபோதும் தவறுவதில்லை என்பதிலும் கல்வினிசப் போதனையாளர்கள் உறுதியான வேதநம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையுடனேயே அவர்கள் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். கர்த்தருடைய மகிமையுள்ள குமாரனால் நிறைவேற்றப்பட்ட குறிப்பிட்டவர்களுக்கான மீட்பே நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நமக்குள்ள சுதந்திரத்தின் அடித்தளமாகும்.
முடிவற்ற மகிமையுள்ள கிறிஸ்துவின் சிலுவைப் பலியை அடித்தளமாகக் கொண்டே எல்லா மக்களுக்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பது ஜோண் ஓவனின் அசைக்க முடியாத கருத்து. “இரட்சிப்பிற்காக நற்செய்தி காட்டும் இந்த வழி சகலரும் அதில் நடந்து போவதற்கு வசதியாக இருக்கின்றது” என்கிறார் ஓவன். கர்த்தருக்குரியவைகளை அறிந்திராத பிரசங்கிகள் (அதை அறிந்துகொள்ள முயல்வது அவர்களுடைய பணியல்ல), “கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி சகல மனிதரையும் அழைக்க வேண் டியது அவசியம். ஏனெனில், கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும் கரை சேர்க்கும் வல்லமை கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் அடங்கியிருக்கிறது. யார் யாருக்கு கர்த்தர் விசுவாசத்தைக் கொடுப்பார், எவரெவருக்கு கிறிஸ்து மரித்தார் என்பதுபோன்ற கர்த்தரின் ஆலோசனை களையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு இதைச் செய்வதே பிரசங்கிகளின் பணி” என்கிறார் ஓவன்.
கர்த்தருடைய திட்டத்திற்கும் மனிதனுடைய கடமைக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ளுவது அவசியம். நற்செய்தியைப் பிரசங்கிப்பதே நம்முடைய கடமை. கர்த்தர் தன்னுடைய மகிமையுள்ள நோக்கங்களைத் தான் நியமித்துள்ள கருவிகளைக் கொண்டு தகுந்த நேரத்தில் நிறைவேற்றிக்கொள்ளுவார் என்பதை மனதில் கொண்டு நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். ஜோண் ஓவனின் பின்வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்:
“ஏற்கனவே நாம், கிறிஸ்துவின் பரிகாரப்பலியைப் பற்றிப் பிரசங்கிப்பது கிறிஸ்துவின் மரணத்தைப் பிரசங்கிப்பதாகும் என்று பார்த்திருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அவரே சிலுவையைப் பற்றிய செய்தியாக இருக்கிறார். கல்வின் இதுபற்றி அருமையாக பின்வருமாறு சொல்லுகிறார்: ‘பிதாவினால் அளிக்கப்பட்டு தன் னைப் பற்றிய செய்தியைத் தாங்கி வரும் கிறிஸ்துவை நாம் பிரசங்கிக்கிறோம்’. வெறுமனே கிறிஸ்துவினுடைய பணியை மட்டும் நாம் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அளிப்பதில்லை; எபிரே யர் 7:25 ன்படி ‘தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிற’ இரட்சகரான கிறிஸ்துவை நாம் எல்லோருக்கும் வழங்குகிறோம். கிறிஸ்து தரும் பலன்களை மட்டும் பிரசங்கிக்காமல் கிறிஸ்துவையே இரட்சகராகப் பிரசங்கிப்பதே நற்செய்திப் பிரசங்கம் என்பதை நாம் விளங்கிக்கொள்ளும்போது சுதந்திரமாக நம்மால் சுவிசேஷப் பிரசங்கத்தை செய்யமுடிவதோடு, தெரிந்துகொள்ளப்பட்டவர்களைப் போலவே தெரிந்துகொள்ளப்படாதவர்களும் கிறிஸ்துவை விசுவாசிக்கும் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.
பவுலினுடையதும், அப்போஸ்தலர்களுடையதும், சீர்திருத்தவாதத்தினுடையதும், விசுவாச அறிக்கைகளுடையதுமான பரிகாரப்பலி பற்றிய இந்த விளக்கமே நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. இதன் மூலமே பிதாவினால் உலகத் தோற்றத்துக்கு முன்பாக தெரிந்துகொள்ளப்பட்டு கிறிஸ்துவிடம் ஒப்படைக்கப்பட்டு, தகுந்த காலத்தில் கிறிஸ்துவின் இரத்தப் பலி மூலம் பெறப்பட்ட மீட்புக்கு உரித்தானவர்கள் தேவனுடைய இராஜ்யத்துக்குள்ளாக கொண்டுவரப்படுகிறார்கள்.”
ஜோன் ஓவனுடைய இந்த விளக்கத்தை அங்கீகரித்து அவருக்குப் பின்பு வந்த இறையியலறிஞர் ஜோண் மரே பின்வருமாறு விளக்குகிறார்:
“இரட்சிப்பை அடைந்தாலும் அடையலாம், அடையாமலும் போகலாம் என்றில்லாமல் பூரணமான இரட்சிப்பையும் இரட்சகரையும் பாவிகளுக்கு நாம் வழங்குகிறோம். நாம் வழங்குகிற இரட்சிப்பில் குறைபாடுகளோ, அதை அடைவதற்கான எந்தத் தடைகளோ இல்லை. தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற நம்பிக்கையுடனோ அல்லது கர்த்தரின் அன்பை ருசி பார்ப்பதற்கு தகுதியுள்ளவர்கள் என்ற நம்பிக்கையுடனோ நாம் கர்த்தரிடம் ஒரு போதும் வருவதில்லை; பாவிகளாக மட்டுமே அவரிடம் வருகிறோம். அதுவே மெய்யான விசுவாசத்திற்கு அடையாளமாக இருக்கிறது.”
கிறிஸ்துவின் மகிமையைப் பற்றி எழுதியுள்ள ஜோன் ஓவன் அதன் முடிவில் கிறிஸ்துவை அறியாதவர்களை கிறிஸ்துவிடம் வருமாறு பின்வருமாறு அழைக்கிறார்:
“கிருபையையும், நித்திய ஜீவனையும், சமாதானத்தையும், விடுதலை யையும் பெற்றுக்கொள்ள உங்களைத் தன்னிடம் வருமாறு அழைக்கின்ற கிறிஸ்துவின் அழைப்பில் அவருடைய அளவற்ற அன்பை நம்மால் பார்க்க முடிகிறது. இத்தகைய அழைப்புகள் வேதம் முழுவதும் பரவிக்காணப்படுகின்றன. பாவிகள் தற்போது இருக்கும் நிலையில் அவர்களுக்கு தேவையானது என்று கர்த்தர் ஞானத்தோடு கண்டிருக்கும் ஆசீர்வாதமான ஆறுதல்கள் அவருடைய அழைப்பில் நிரம்பிக் காணப்படுகின்றன. அவற்றை எண்ணிப் பார்ப்பதே நமக்கு அதிக ஆசீர்வாதத்தைக் கொடுக்கும். . . . இவற்றைப் பிரசங்கத்தின் மூலம் பாவிகளுக்கு நாம் வழங்கும் போது இயேசு கிறிஸ்துவே பாவிகள் முன் நின்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அழைக்கிறார்.”
ஆகவே, கிறிஸ்துவின் கிருபையையும், அன்பையும் எண்ணிப் பாருங்கள். அவருக்கு உங்கள் உதவி அவசியமாக இருக்கிறதா? நீங்களா அவரை முதலில் நேசித்தீர்கள்? நீங்கள் இல்லாமல் அவரால் அன்போடும், சமாதானத்தோடும் இருக்க முடியாதா என்ன? உங்களை இவ்வளவு தூரம் அவர் வற்புறுத்தி அழைப்பதால் அவருக்கு என்ன நன்மை இருக்கிறது? அருவிபோல் பாய்ந்தோடும் அவருடைய அன்பும், கிருபையும், கருணையுமே அவரை இந்தளவுக்கு உங்களை அழைக்கும்படி செய்கிறது.”
இதுவே மெய்யான அழைப்பு. கிறிஸ்துவிடம் வந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி பாவிகளை அழைக்கும் நேர்மையான, உளமார்ந்த, உணர்ச்சிபூர்வமான அழைப்பு. இன்னொரு விசுவாசமிக்க சேவகனும், பிரசங்கியுமான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் சொல்லுவதைக் கவனியுங்கள்:
“நான் ஆசைப்படுகிற அளவுக்கு என்னால் உங்களை வருந்தி அழைக்க முடியவில்லை. என்னால் முடியுமானால் நான் என் கண்கள் மூலமும், இதழ்கள் மூலமும், இருதயத்தாலும் உங்களைக் கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்வேன். நான் ஒரு ஆர்மீனியனைப் போலப் பேசுகிறேனே என்று நீங்கள் என்னைப் பார்த்துக் கூப்பாடு போட வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய எண்ணங்களைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை; இதுவே வேதத்தில் நான் பார்க்கிற அழைப்பு. கர்த்தரே எங்கள் மூலம் உங்களை அழைப்பது போல், உங்களுக்காக நாங்கள் கிறிஸ்துவின் இடத்தில் இருந்து ஜெபத்தோடு, கிறிஸ்துவோடு ஒப்புறவாகுங்கள் என்று அழைக்கிறோம். நொருங்கின இருதயத்தோடு இருக்கும் பாவியே! கர்த்தரே இந்தக் காலை நேரத்தில் தானே இந்த இடத்தில் இருப்பதுபோல் தன்னோடு ஒப்புறவாகும்படி உன்னோடு பேசுகிறார். குள்ளமான வனும், பார்வைக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியாதவனுமாகிய என் மூலமாக அவர் பேசினாலும், தேவதூதர்களே உன் முன் நின்று பேசுவதுபோல் அவர் பேசுகிறார். கர்த்தரோடு ஒப்புறவாகு! வா! நண்பா, உன்னுடைய கண்களையும், முகத்தையும் என்னை விட்டு திருப்பிக்கொள்ளாதே. உன்னுடைய கரங்களையும் இருதயத்தையும் என்னிடம் கொடு. உன்னுடைய இருதயம் அழிந்து போகாமல் இருப்பதற்காகவும், கர்த்தர் உனக்கு கருணை காட்டும் படியும், நான் ஜெபிக்கிறேன். நீ கிறிஸ்துவுக்கு எதிரியாக இருக்கிறாய் என்று அவர் உனக்கு உணர்த்தி இருப்பதால், கிறிஸ்துவுக்கு உடனடியாக நண்பனாகிவிடு. நினைவில் வைத்துக்கொள், இப் போது நீ பாவத்தை உணர்ந்து மனந்திரும்புவாயானால் உனக்கு தண்டனை கிடைக்காது. உனக்காக அவர் தண்டனையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். நீ இதை நம்புவாயா? இதை நீ விசுவாசித்து கர்த்தரோடு சமாதானத்தை அநுபவிப்பாயா? நீ, இதற்கு மறுப்புக் கூறுவாயானால், உனக்குக் கிடைக்கவிருந்த கிருபையை நீ உதறிப் போட்டுவிட்டாய் என்பதை உனக்கு சொல்ல விரும்புகிறேன். “நான் ஒப்புறவாவதற்கு அவசியமில்லை” என்று நீ சொல்வாயா னால் உனக்கிருந்த ஒரே நம்பிக்கையை நீ தூக்கி எறிந்து விடுகிறாய். உன்னுடைய இரத்தப்பழி எனக்கு வேண்டாம்; உனக்கு நீயே ஆபத்தை விளைவித்துக் கொள்கிறாய். கொஞ்சம் பொறு, கிறிஸ்து உனக்குத் தேவை என்பதை நீ உணர்வாயானால், நரகமாகிய பாதாளத்தில் இருந்து நீ தப்பி பரிசுத்தமானவர்களோடு வாழ்வாய். நியாயத்தீர்ப்பு நாளில் உன்னைக் குற்றஞ்சாட்டப் போகும் அவருடைய பெயரில் நான் மன்றாடுகிறேன், கிறிஸ்துவிடம் ஒப்புறவாகிவிடு. இந்தப் பிரசங்கத்தை முடித்தபிறகு நான் மறுபடியும் கர்த்தரின் கோர்டுக்கு போகப்போகிறேன். அங்கே உன்னைப் பற்றி நான் எதைக் கூறுவது? நீ தொடர்ந்து கர்த்தருக்கு எதிரியாகவே இருக்கத் தீர்மானித்திருக்கிறாய் என்று என் ஆண்டவரிடம் நான் சொல்வதா? அல்லது, “அவர்கள் நான் பேசியதைக் கேட்டார்கள், ஆனால், அதை அசட்டை செய்துவிட்டார்கள் என்றும், அவர்கள் தங்களுடைய இருதயத்தில், இப்படியே இருந்துவிடப்போகிறோம், கர்த்தருக்குப் பயந்து வாழமாட்டோம் என்று சொன்னார்கள் என் றும் சொல்வதா?” கர்த்தரிடம் இதைப் போய் நான் சொல்லவா? இந்த பயங்கரமான செய்தியை நான் கர்த்தரிடம் போய் சொல்ல வேண்டுமென்பதா உங்கள் விருப்பம்? இந்தச் செய்தியோடு என் ஆண்டவரிடம் என்னைத் திரும்ப அனுப்பாதீர்கள், அவர் கோபத்தில், “நான் வாக்குத்தத்தமளித்த நித்திய ஓய்வை நிராகரித்தவர் களுக்கு அது ஒருபோதும் கிடையாது” என்று சொல்லிவிடுவார்.
இறையாண்மையுள்ள கர்த்தரின் இரட்சிப்புக்குரிய நோக்கங்களில் உறுதியான நம்பிக்கை வைத்த அதேவேளை கிறிஸ்துவிடம் வந்து இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று உணர்ச்சியோடு பிரசங்கித்தார்கள் ஸ்பர்ஜனும், ஓவனும். அவர்களால் எவ்வாறு இப்படிப் பிரசங்கிக்க முடிந்தது? கிறிஸ்து தம்முடைய மக்களுக்காக மரித்தார் என்றும், அவர் தம்முடைய இரத்தத்தின் மூலம் தம்முடைய மக்களின் பாவங்களைக் கழுவி அவர்களைத் தவறாது இரட்சிப்பார் என்றும், அவர்களைத் தன்னுடைய வார்த்தையின் மூலம் அழைத்துக் கொள்ளுவார் என்றும் அவர்கள் ஆணித்தரமாக நம்பியதால்தான் அவர்களால் இப்படிப் பிரசங்கிக்க முடிந்தது.
இவர்கள் பிரசங்கித்த இந்த சுவிசேஷத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோமா? அப்படியானால் அதை நாம் விசுவாசத்தோடு பிரசங்கிக்கிறோமா? பாவிகள் கிறிஸ்துவை விசு£சிக்க கிறிஸ்துவினால் நிறைவேற்றப்பட்ட மரணபலியைவிட வேறு எதுவும் தேவையில்லை. பாவிகளுக்காக தன்னுடைய ஒரே குமாரனைப் பலிகொடுத்ததன் மூலம் கர்த்தர் தன்னுடைய இலவசமான கிருபையின் மகிமையை உலகத்துக்குக் காட்டியிருக் கிறார். அதைவிடப் பெரிது ஒன்றும் இல்லை. உலகத்தோற்றத்துக்கு முன் பாகத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மீது தான் காட்டியிருந்த அன்பைத் தன்னுடைய குமாரனை சிலுவையில் அவர்களுக்காகப் பலிகொடுத்ததன் மூலம் கர்த்தர் காட்டியிருப்பதைப் போன்ற மகிமையான காரியம் வேறொன்றில்லை. நம்முடைய பாவங்கள் கிறிஸ்துவின் மீட்பின் மூலம் மன்னிக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுவதை விடப்பெரிய ஆனந்தம் வேறொன்றில்லை. கர்த்தருடைய வார்த்தையினாலும் பரிசுத்த ஆவியின் மூலமாகவும் உணர்த்தப்பட்டு கிறிஸ்துவிடம் சரணடைந்து விடுகிறவர்களிலேயே மெய்யான நிச்சயம் அதிகமாக வளர்கிறது.
மனிதர்களைக் க¤றிஸ்துவிடம் வரும்படிச் செய்யும் வல்லமை நம்மிடம் இல்லை. இருந்தாலும் மனிதர்கள் கிறிஸ்துவிடம் வரும¢படிச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. “உங்களுடைய இருதயத்தைத் திறந்து வையுங்கள்” என்றோ அல்லது “உங்களுடைய இருதயத்துக்குள் வரும்படி அவரை அழையுங்கள்” என்றோ நாம் மனிதர்களைப் பார்த்து சொல்லக்கூடாது. அப்படிச் செய்வது சுவிசேஷத்தையே குழி தோன்றிப் புதைப்பதுபோலாகும். அதைவிட, நாம் பாவிகளைப் பார்த்து மன்றாட வேண்டும். ஒரு புறம் கர்த்தர் தன்னுடைய வார்த்தையின் மூலமும் பரிசுத்த ஆவியானவரின் மூலமும் கிறிஸ்துவின் செயல்களை அவர்களில் பதியும் படிச் செய்யுமாறு அவர்களுக்காக ஜெபிப்பதோடு மறுபுறம் கிறிஸ்துவின் பூரணமான மீட்புப்பணி அவர்களைக் கரை சேர்க்கப் போதுமானது என்ற தளராத நம்பிக்கையுடன் தங்களுடைய பாவநிவாரணத்துக்காக கிறிஸ்துவிடம் வருமாறு அவர்களைப் பார்த்து நாம் அறைகூவலிட வேண்டும்.
எல்லா மனிதர்களும் தங்களை இரட்சித்துக்கொள்ளுவதற்கான வசதியை மட்டும் செய்து தருவதற்காக கிறிஸ்து கல்வாரியில் மரிக்கவில்லை. கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் இரட்சிப்பை அடைவதற்கான ஒரு வழியை மட்டும் ஏற்படுத்தவும் அவர் சிலுவையில் மரிக்கவில்லை. கர்த்தருடைய மக்கள் அவர்களுடைய பாவங்களில் இருந்து விடுதலை பெறுவதற்காகத் தன்னைப் பலியாகச் செலுத்தி கிறிஸ்து சிலுவையில் மரித்து அவர்களுக்கான இரட்சிப்பைப் பூரணமாக நிறைவேற்றினார். இதுவே வேதம் போதிக்கும் கிறிஸ்துவின் மீட்புப்பணி; இதுவை நாமறிவிக்க வேண்டிய சுவிசேஷம். அவருக்கே சகல மகிமையும் சேரட்டும். ஆமேன்!
Such a rich material!
LikeLike