கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்
சீர்திருத்தக் கிறிஸ்தவத்தைப் பற்றியும், அதன் பெரும் பிரசங்கிகளையும், இலக்கியங்களையும் கடந்த இரண்டு சமீபகாலமாகத்தான் தமிழினம் ஆர்வத்தோடு அறிந்து பயின்று வருகின்றது. 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் திருச்சபை வரலாற்றில் எழுந்த சீர்திருத்தத்திற்குப் பின்பு அதற்கு அடுத்த நூற்றாண்டில் பரிசுத்தவான்களின் (பியூரிட்டன்) திருச்சபை சீர்திருத்தத்திற்கான உழைப்பைப் பற்றி சபை வரலாற்றில் வாசிக்க முடிகிறது. 16ம் நூற்றாண்டில் மார்டின் லூதருக்கும், ஜோண் கல்வினுக்கும் பிறகு 17ம் நூற்றாண்டில் ஜோண் பனியன், ஜோண் ஓவன் போன்றோர் தோன்றி திருச்சபை சீர்திருத்தம் தொடரும்படிப் பார்த்துக்கொண்டனர். சீர்திருத்தவாதிகளும், பரிசுத்தவான்களும் (பியூரிட்டன்) திருச்சபை வரலாற்றில் அழிவற்ற இடத்தைப் பிடித்திருக்கின்றார்கள். இன்று வேதம் நம் கரத்தில் இருப்பதற்கும், கர்த்தரின் திருச்சபை இந்த உலகில் தலைதூக்கி நிற்பதற்கும், வேதபூர்வமான கிருபையின் போதனைகளையும், சீர்திருத்த போதனைகளையும் உலகறிந்திருப்பதற்கும் இவர்கள் ஆற்றியுள்ள பணி மகத்தானது.
இவர்களின் பணிகளில் மேலானது, இரத்தினக் கற்களைப்போன்ற விலைமதிப்பில்லாத அநேக கிறிஸ்தவ இலக்கியங்களை எழுத்தில் வடித்து நமக்களித்துச் சென்றிருப்பதுதான். இவையனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. சிறந்த கல்விமானான ஜோண் ஓவன் விலைமதிப்பற்ற பல முத்துக்களை நமக்களித்துச் சென்றிருக்கிறார். அவருடைய எழுத்துக்கள் அனைத்தும் பதினேழு வால்யூம்களாக இன்றும் பதிப்பில் இருந்து வருகின் றன. அவற்றில் ஒன்றுதான், அவர் எழுதிய “கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தின் மரணம்” (The Death of Death in the Death of Christ) என்ற நூலாகும். இந்நூலுக்கு ஜிம் பெக்கர் (Jim Packer) என்ற தற்கால இறையியல் அறிஞர் ஆங்கிலத்தில் ஒரு அருமையான முன்னுரையை இருபத்தி ஐந்து பக்கங்களில் வழங்கியிருக்கிறார். ஆய்வு செய்து நீண்டதொரு முன்னுரை வழங்க வேண்டிய அளவுக்கு ஜோண் ஓவனின் வேத ஆய்வுத் திறமை இந்நூலில் அமைந்திருந்தது.
ஜோண் ஓவனின் இந்நூல் “கிறிஸ்து யாருக்காக மரித்தார்?” என்ற வினாவுக்கு பதிலளிக்கிறது. இந்நூலில், கிறிஸ்து உலகில் பிறந்த, பிறந்திருக்கும், பிறக்கப் போகும் அனைவருக்குமாகவும் சிலுவையில் தன்னைப் பலியாக ஒப்புக்கொடுக்கவில்லை என்பதை வேத வசனங்களின் அடிப்படையில் நிலைநாட்டி, கிறிஸ்து தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட குறிப்பிட்ட மக்களுக்காக மட்டுமே கல்வாரி சிலுவையில் மரித்தார் என்பதை வேதம் முழுவதிலும் இருந்து படிப்படியாக விளக்கி, சாட்சிகளுக்கு மேல் சாட்சியாக வேத வசனங்களை வாரி வழங்கி ஒரு மிகச்சிறந்த வக்கீலைப் போல வாதாடியிருக்கிறார் ஓவன். ஓவனின் வாதத்திறமையையும், வேத அறிவையும் நாம் இதில் கவனிக்க முடிகின்றது. அதையெல்லாம்விட உலக ஞானத்தின் அடிப்படையில் தனது போதனைகளுக்கு விளக்கந்தராமலும், தனது சொந்த எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமலும் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை வேதவசனங்களாக அள்ளி வழங்கி போதனைகளை விளக்கியிருப்பதே ஓவனின் நூலின் மதிப்பை உயர்த்துகின்றது.
“ஜோண் பனியனின் சரீரத்தில் எங்கு ஊசியால் குத்தினாலும் வேத இரத்தம் சிந்தும்” என்று ஸ்பர்ஜன் அவருடைய வேத ஞானத்தைக் குறித்து சொல்லியிருக்கிறார். பனியனின் காலத்தைச் சேர்ந்த ஜோண் ஓவன் பனியனுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என்பதை அவருடைய நூல் காட்டுகின்றது. வேத போதனைகளைத் தருகிறோம் என்ற பெயரில் வேதத்தில் இருந்து ஒன்றையும் நிலைநாட்டக்கூடிய அறிவோ, திறமையோ இல்லாது எதையெதையோ பேசிக்கொண்டிருக்கும் தமிழின சபைப் போதகர்கள் பெருகி மலிந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் வேத போதனைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது ஜோண் ஓவனின் நூல். ஓவனைப் போலவே சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் இறை போதனைகளை வழங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு சத்தியத்தையும் நிலைநிறுத்த அளவற்ற வேத வசனங்களை அள்ளி வழங்கி, ஒவ்வொன்றையும் வேதத்தில் அவை அமைந்திருக்கும் சந்தர்ப்பத்திற்கேற்ப விளக்கி ஆணித்தரமான வாதங்களை நம்முன் வைத்திருக்கின்றனர்.
கிறிஸ்து சகல மனிதர்களையும் இரட்சிப்பதற்காக மரித்தார் என்று சொல்லும் உலகளாவிய பரிகாரப்பலிக் கோட்பாட்டையும் (Universal Atonement), கிறிஸ்துவின் மரணபலியின் பலன்கள் கிறிஸ்துவுக்காகத் ‘தீர்மானம்’ எடுப்பவர்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என்ற ஆர்மீனியனிசப் போதனையையும் தோலுரித்துக்காட்டி, வேத போதனைகளின் அடிப்படையில் அவற்றை நிராகரிப்பதோடு, கிறிஸ்து தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்காக மட்டுமே மரித்தார் என்ற போதனையை ஆணித்தரமாகத் தன் நூலில் விளக்கியிருக்கிறார் ஓவன். போதகர் ஜெரமி வோக்கர் ஆங்கிலத்திலிருக்கும் இந்நூலின் விசேட அம்சங்களை விளக்கி ஓவனின் போதனைகளின் சுருக்கத்தையும் நமக்களித்திருக்கிறார். அவற்றை இவ்விதழில் நான் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தின் பலன்களைப் பற்றிய மேலான வேத அறிவைப் பெற்றுக்கொள்ள இவ்வாக்கம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். மேலெழுந்த வாரியாக வாசிக்காமல் இந்த ஆக்கத்தை நீங்கள் ஒரு தடவைக்கு மேலாக சிந்தித்து வாசித்தீர்களானால் ஜோண் ஓவனின் போதனைகளைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். கர்த்தரை விசுவாசிப்பதற்கான வல்லமை ஆத்து மாக்களின் கரத்திலேயே இருக்கிறது என்ற தவறான எண்ணத்தின் அடிப்படையில் நடந்துவரும் தமிழினத்தின் பெரும்பாலான சுவிசேஷ ஊழியங்கள் எந்தளவுக்கு வேதத்திற்கு புறம்பானது என்பதை ஜோண் ஓவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் தன் நூலில் விளக்கியிருக்கிறார். கர்த்தர் தாமே இவ்வாக்கத்தின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக.