என்ன இப்படியொரு தலைப்பு என்று நினைக்கிறீர்களா? அதை அவசியத்தோடுதான் கொடுத்திருக்கிறேன். கடந்த ஐம்பது வருட காலமாக நம்மினத்தில் சுவிசேஷப் பணியைப் பொறுத்தவரையில் மனிதன் பாவத்தில் இருந்து தன்னை மீட்டுக்கொள்ளவும், பரலோகத்துக்குப் போகவும்கூடிய ஆத்மீக வல்லமையைக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில்தான் பெரும்பாலும் சுவிசேஷப் பணிகள் நடந்து வருகின்றன. அது தவறு என்று நாம் சுட்டிக் காட்டினால், மனிதனுக்கு இதில் பங்கில்லையென்றால் சுவிசேஷம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே என்று நம்மைப் பார்த்து எகத்தாளமாகக் கேட்பார்கள். மனிதன் தன்னை இரட்சித்துக் கொள்ளக்கூடிய வல்லமையைக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் பெரும்பாலானவர்கள் ‘உன்னால் முடியும் தம்பி’ என்று சுவிசேஷம் சொல்லி வருவதால்தான் இந்தத் தலைப்பில் மிகவும் முக்கியமானதொரு வேதபோதனையை அறிமுகப்படுத்தப் போகிறேன். அந்த வேதபோதனை மனிதனுடைய சித்தத்தின் (The Will of Man) தன்மை பற்றியது. மனிதனுடைய சித்தம் என்பதைக் கொஞ்சம் விளக்க முடியுமா? என்று சிலர் கேட்கலாம். அந்தக் கேள்வி அவசியம் தான். ஒரு காரியத்தை மனிதன் செய்வதற்கு அவனைத் தீர்மானிக்க வைக்கும் அவனுடைய இருதயத்தின் பகுதியையே சித்தம் என்று அழைக்கிறோம். இந்த சித்தமே மனிதன் எந்தக் காரியத்தையும் செய்ய வைக்கிறது. இது மனிதனின் இருதயத்தின் ஓர் அங்கம். நம்மிலிருக்கும், பல காரியங்களையும் நாம் சிந்திக்கும் அங்கத்துக்கு மனம் அல்லது இருதயம் என்று பெயர். நாம் ஒரு விஷயத்தை இந்த இருதயத்தின் மூலம் சிந்தித்துப் பார்த்து அந்த விஷயத்தை செய்யத் தீர்மானிக்கும் அங்கத்திற்குத் தான் ‘சித்தம்’ என்று பெயர்.
இந்த சித்தம், மனிதனில் எத்தகைய தன்மையில் இருக்கிறது, செயல்படுகிறது என்பதைத்தான் நாம் இந்த இதழில் வந்திருக்கின்ற இன்னும் மூன்று ஆக்கங்களில் அலசி ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆய்வு மனிதவியலில் ஒரு பகுதி பற்றிய வேத ஆய்வாக இருக்கிறது. இந்த ஆய்வு அத்தனை அவசியமா? என்று நீங்கள் கேட்கலாம். ஏற்கனவே மேலே நான் சொல்லியிருப்பதுபோல் ‘உன்னால் முடியும் தம்பி’ என்று சிலர் ஆணித்தரமாக சொல்லுவதற்கு காரணம் அவர்கள் ஆவிக்குரிய எந்தக் காரியத்தையும் பாவியான மனிதனால் செய்ய முடியும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பதால்தான். இந்த நம்பிக்கை வேத அடிப்படையில் அமைந்ததா என்பதைத்தான் நான் விளக்கப்போகிறேன்.
மனித சித்தத்தின் தன்மை பற்றி திருச்சபை ஆரம்பித்த காலத்தில் இருந்தே விவாதங்கள் இருந்து வந்திருக்கின்றன. இந்த விவாதம் சபை ஆரம்பித்து 5ம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்து விட்டது. மனித சித்தத்தின் தன்மை பற்றிய விவாதத்துக்கு மூல காரணம் மனிதனைப் பாவம் எந்தவகையில் ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகு பாதித்தது என்பதில் மாறுபாடான எண்ணங்கள் தோன்றியதுதான். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெலேஜியஸ் (Pelagius) என்ற மனிதன் பாவம் எந்த வகையில் மனிதனைப் பாதித்தது என்பதில் வேதத்திற்கு மாறுபாடான கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்தான். பாவம் மனிதனை முழுமையாக, அவனுடைய சகல பாகங்களையும் பாதித்ததா? இல்லையா? என்பதே கேள்வியாக இருந்தது. பெலேஜியஸ், நல்லது கெட்டதை செய்யும்படி சுயமாக செயல்படும் சித்ததை வீழ்ச்சிக்குப் பிறகும் மனிதன் தொடர்ந்து தன்னில் கொண்டிருக்கிறான் என்று விளக்கினான். ஆகவே, வீழ்ச்சியும் (Fall), மூல பாவமும் (Original Sin) மனிதனை முழுமையாகப் பாதிக்கவில்லை என்பது பெலேஜியஸின் முடிவாக இருந்தது. இந்தவகையில் சிந்திக்க ஆரம்பித்த பெலேஜியஸ் இறுதியில் மனிதன் பாவியல்ல என்ற முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான்.
பெலேஜியனின் இந்தக் கருத்துக்களை அன்று எல்லோரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பெலேஜியஸின் பாவத்தைப் பற்றிய போதனைகள் வேத போதனைகளுக்கு அடியோடு எதிராக இருந்தன. அதே காலத்தில் வாழ்ந்த இறையியல் அறிஞராக இருந்த ஆகஸ்தீன் (Augustine) இந்த விஷயம் பற்றி பெலேஜியஸோடு அநேக தர்க்கங்களில் ஈடுபட்டார். பெலேஜியனின் போதனை தவறு என்று சுட்டிக்காட்டி, மனிதனைப் பாவம் முழுமையாகப் பாதித்திருப்பது மட்டுமல்ல அவனுடைய சித்தம் ஆவிக்குரிய காரியங்களை செய்ய முடியாதபடி வலிமையிழந்த நிலையில் இருக்கிறது என்றும் விளக்கினார். திருச்சபை அன்று ஆகஸ்தீனின் போதனையையே ஏற்றுக்கொண்டது. இந்தளவுக்கு இந்த விஷயம் ஏன் பெரிதுபடுத்தப்பட்டது என்று நீங்கள் கேட்கலாம். இந்த விஷயம் சுவிசேஷத்தின் அடித்தளமாக இருப்பதால் தான் ஆகஸ்தீன் இதுபற்றி பெலேஜியஸோடு தர்க்கங்களில் ஈடுபட்டார். மனிதனுடைய சித்தம் பாவத்தால் பாதிக்கப்படாமல் ஆவிக்குரிய தீர்மானங்களை அவன் நினைத்தபடி எடுக்கக்கூடிய நிலையில் இருக்குமானால் கிறிஸ்தவ சுவிசேஷத்துக்கு அவசியமில்லாமல் போய்விடும் என்பதை ஆகஸ்தீன் உணர்ந்திருந்தார். வீழ்ச்சிக்குப் பிறகு ஆவிக்குரிய நிலையை முற்றாக மனிதன் இழந்துபோயிருந்ததாலேயே அவனுடைய ஆவிக்குரிய விடுதலைக்கு சுவிசேஷம் தேவைப்படுகிறது. ஆவிக்குரிய மாற்றத்தை அளிக்கக்கூடிய பெலனுள்ளதாக சுவிசேஷம் மட்டுமே இருக்கிறது. ஆவிக்குரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் நிலை மனிதனுக்கு இருந்தால் சுவிசேஷம் வலிமை குறைந்ததாக, இறையாண்மையற்றதாக மாறிவிடும். இதைத் தெளிவாக உணர்ந்தபடியால்தான் ஆகஸ்தீன் பெலேஜியஸினுடைய போதனைக்கு மறுப்புத் தெரிவித்து வேதபோதனையை நிலைநிறுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டது.
பெலேஜியனுடைய காலத்துக்குப் பிறகு இந்த விஷயம் 16ம் நூற்றாண்டில் திருச்சபை சீர்திருத்தத்தை கர்த்தர் ஆரம்பித்தபோது மறுபடியும் தலைதூக்கியது. ரோமன் கத்தோலிக்க போதனை மனித சித்தம் நடுநிலையில் (Neutral) நன்மை, தீமை இரண்டையும் சமநிலையில் செய்யக்கூடியதாக இருக்கிறது என்று போதித்தது. அதற்கெதிராக மார்டின் லூத்தர் (Martin Luther) ‘சித்தத்தின் அடிமைத்தனம்’ (The Bondage of the Will) என்ற நூலை எழுதி வெளியிட்டு மனித சித்தம் பாவத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டு, மனிதன் ஆத்மீக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கிறான் என்று போதித்தார். இதுவே சீர்திருத்தவாதம் ஆரம்பித்த காலத்தில் அதன் நடுமையமான (Central) போதனையாக இருந்தது. லூத்தரைப் பொறுத்தவரையில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தினதும், கிறிஸ்தவத்தினதும் ஆணிவேராக இந்த விஷயத்தைக் கருதினார். லூத்தர் இந்த விஷயத்தில் இராஸ்மஸோடு (Erasmus) ஈடுபட்ட தர்க்கங்கள் வரலாறறிந்தவை.
சீர்திருத்தவாத காலத்துக்குப் பிறகு 18ம் நூற்றாண்டில் மனித சித்தம் பற்றிய பிரச்சனையை சார்ள்ஸ் பினி (Charles Finney) ஆரம்பித்து வைத்தார். மனித சித்தம் பற்றிய அவருடைய தவறான போதனை ஆத்மீக விடுதலைக்காக ஒரு கிறிஸ்தவன் அவிசுவாசிக்கு உதவி கர்த்தரின் இராஜ்யத்துக்குள் அவன் நுழைய உதவ முடியும் என்று நம்ப வைத்தது. இந்த நம்பிக்கையால் சார்ள்ஸ் பினி ‘கிறிஸ்துவிடம் வருவதற்கு விருப்பப்படுகிறவர்கள்’ என்ற கூட்டத்தை உருவாக்கி அவர்கள் கிறிஸ்துவுக்காக ஆவிக்குரிய தீர்மானம் எடுக்கும் வழிமுறையை (Anxious Bench) முதன் முறையாக சபை வரலாற்றில் ஏற்படுத்தினார். இத்தகைய முறையை திருச்சபை அதற்கு முன் அறிந்திருக்கவில்லை. இதுவே பின்பு 20ம் நூற்றாண்டில் பில்லி கிரெகாமால் (Billy Graham) ‘கிறிஸ்துவுக்காக ஆவிக்குரிய தீர்மானம்’ (Decision for Christ) எடுக்கும் முறையாக சுவிசேஷக் கூட்டங்களில் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் எல்லோருமே பாவம் எந்தளவுக்கு மனிதனைப் பாதித்திருக்கிறது என்பதிலும், அவனுடைய சித்தத்தின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கிறது என்பதிலும் மாறுபாடான எண்ணங்களைக் கொண்டிருந்ததாலேயே இத்தகைய சுவிசேஷ அழைப்பு முறைகளை உருவாக்கியிருந்தார்கள்.
நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த 21ம் நூற்றாண்டின் நிலை என்ன? பொதுவாகவே கிறிஸ்தவர்கள் மத்தியில் பாவத்தின் நிலை பற்றிய வேதபூர்வமான சிந்தனைகள் அதிகமாக இல்லாமல் இருப்பது நம் காலத்தில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிற துர்பாக்கியமான நிலையாக இருக்கிறது. நான்காம் நூற்றாண்டிலும் சரி, பதினாறாம் நூற்றாண்டிலும் சரி, அதற்குப் பிறகு பதினெட்டாம் நூறாண்டிலும் சரி பாவத்தைப் பற்றியும், மனித சித்தத்தின் நிலை பற்றியும் வேதத்துக்கு முரணான போதனைகள் எழுந்தபோது ஆவிக்குரிய மனிதர்கள் அவற்றை இனங்கண்டு தோலுரித்துக் காட்டி திருச்சபைக்கு எதிரான ஆபத்துக்களுக்கு எதிராக நின்று வேதபோதனையளித்தார்கள். பதினாறாம் நூற்றாண்டில் இராஸ்மஸ் எடுத்த அதே நிலையையே இன்றைக்கு பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் காண்கிறோம். இதெல்லாம் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள அவசியமில்லாத விஷயங்கள், தொடர்ந்து எந்தவிதமாகவும் சுவிசேஷத்தை சொல்லி பலரும் தேவ இராஜ்யத்துக்குள் வரும்படிப் பார்த்துக்கொண்டால் மட்டும் போதும் என்ற எண்ணப்பாட்டோடு இறையியல் போதனைகளை முற்றிலும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வேத சத்தியங்களுக்கு பெரிதும் மதிப்பளிக்காத ‘அலட்டிக் கொள்ளாத ஒரு கிறிஸ்தவத்தை’ விரும்பி வாழ்ந்துகொண்டிருப்பதைக் காண்கிறோம். இதை சத்துள்ள, வல்லமையுள்ள, ஆவிக்குரிய அப்போஸ்தலர்கள் கால கிறிஸ்தவமாக என்னால் நினைக்க முடியவில்லை. ஆவியின் வல்லமையோடு வாழ்ந்தவர்கள் வேத சத்தியங்களும், போதனைகளும் அவசியமில்லை என்ற எண்ணத்தோடு வாழ்ந்ததாக வரலாறில்லை. கிறிஸ்தவத்தின் ஆணிவேரே வேத சத்தியங்கள்தான். வேத சத்தியங்களுக்கு மதிப்புக்கொடுக்காமலிருந்த காலங்கள் எல்லாம் சபை வரலாற்றில் ஆத்மீக விருத்தியற்ற காலங்களாகவே வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. ஆவியின் வல்லமைக்கும், வேத சத்தியங்களுக்கும் தொடர்பில்லை என்ற எண்ணத்தோடு, வேத போதனைகளை அலட்சியப்படுத்துகின்ற ஆவிக்குரிய எழுச்சியை நாடிப் போய்க்கொண்டிருக்கிற கிறிஸ்தவத்தையே நாம் எங்கும் பரவலாகப் பார்க்கிறோம்.
பாவம் எத்தகையது, ஆதாமீன் வீழ்ச்சி மனிதனை எந்தளவுக்கு பாதித்து கர்த்தரின் பிரசன்னத்தில் இருந்து அவனை அகற்றி நியாயத்தீர்ப்புக்கு ஆளாக்கியிருக்கிறது, பாவத்தால் எந்தவிதத்தில் ஆத்மீக விடுதலைக்காக எதையும் செய்ய முடியாத, இயலாத நிலையில் மனிதன் இருக்கிறான் என்ற வேதவிளக்கங்களை அறியாமல் இருக்கும் திருச்சபை சுவிசேஷத்தின் மகிமையை அறியாமல் தான் இருந்து வரமுடியும். அந்த நிலை நம்மினத்தில் தொடரக்கூடாது என்ற ஆத்மீக வைராக்கியத்தோடும், எண்ணங்களோடும் மட்டுந்தான் இந்த இதழில் மனித சித்தம் பற்றிய ஆக்கம் ஆரம்பமாகிறது. அது உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்து சுவிசேஷத்தின் அருமையை நீங்கள் உணரச் செய்து ஆத்மீக வாழ்க்கையில் வளரச் செய்யுமானால் அதற்காக கர்த்தருக்கு நான் நன்றி சொல்லுவேன்.