ரோமன் கத்தோலிக்கர்களே! உங்களுக்கு ஓர் நல்ல செய்தி!

எனக்கு ரோமன் கத்தோலிக்கர்கள் மத்தியில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். உண்மையில், சிறு வயதில் நான் ரோமன் கத்தோலிக்க மதத்தவர்களால் நடத்தப்பட்ட கல்லூரியில் படித்திருக்கிறேன். அங்குதான் வாழ்க்கையில் நேரத்தோடு காரியங்களை செய்வதையும், எதையும் ஒழுங்கு முறையோடு செய்துமுடிக்கும் வழக்கத்தையும் நான் கற்றுக்கொண்டேன். ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள் நடத்துகின்ற ஒரு சமூகசேவை நிலையத்தில்தான் நான் இன்றும் சபைத் தலைவர்களுக்கான கிறிஸ்தவ போதனை வகுப்புகளை நடத்துகிறேன். உண்மையில் ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களை மனிதநேயத்தோடு நான் நேசிக்கிறேன். அவர்களிடம் வேறுபாடு காட்டி நான் ஒருபோதும் பழகுவதில்லை. ரோமன் கத்தோலிக்கர்கள் சமூக சேவை செய்வதில் அதிகம் ஈடுபட்டிருக்கிறார்கள். அது பாராட்ட வேண்டிய செயல். ரோமன் கத்தோலிக்க மதத்தவரான அன்னை தெரேசாவின் சமூக சேவைப் பணி யாருக்குத் தெரியாமல் இருக்கும்? அந்தளவுக்கு மனித நேயத்தோடு நான் அன்பு காட்டுகின்ற ரோமன் கத்தோலிக்கர்களுக்கு ஓர் நல்ல செய்தியை விளக்க விரும்புகிறேன்.

1. உங்கள் பாவங்களை மன்னிக்க இயேசு கிறிஸ்து என்றும் தயாராக இருக்கிறார்.

உலகத்தில் பிறந்திருக்கும் அனைத்து மதத்தாரும் பாவிகளாகவே பிறந்திருக்கிறார்கள். இதில் எவருக்கும் விதிவிலக்கில்லை. யூதர்களிடம் பழைய ஏற்பாடு இருந்தும், ஆபிரகாம் போன்ற அருமைப் பெரியவர்கள் அவர்கள் மத்தியில் பிறந்திருந்தும் யூத இனம் பாவத்தில் பிறந்ததாக மட்டுமல்லாமல், இயேசு கிறிஸ்துவிடம் இருந்து பாவமன்னிப்பைப் பெறாமல் இருந்து வருகிறது. நிக்கொதேமு போன்ற யூதர்கள் இதை உணர்ந்ததாலேயே இயேசு கிறிஸ்துவிடம் ஓடி வந்து பாவ மன்னிப்பைப் பெற்றுக்கொண்டார்கள் (யோவான் 3). யூத மதத்தில் பாவத்தைப் பற்றிய போதனை இருந்தும், சடங்குகளால் மட்டும் அந்தப் பாவங்களைப் போக்கிக்கொள்ள அது முயல்கிறது. அதைப் போலவே ரோமன் கத்தோலிக்க மதத்திலும் அந்தச் சபையில் சேர்வதாலும், அதன் சடங்குகளைப் பின்பற்றுவதாலும் மட்டுமே பாவம் போகும் என்ற போதனை இருந்து வருகிறது. இறப்பதற்கு முன் பாவத்திற்கு முழு விடுதலை தரக்கூடிய விதத்தில் ரோமன் கத்தோலிக்க மதப் போதனைகள் காணப்படவில்லை. இறக்கின்ற ஒவ்வொரு ரோமன் கத்தோலிக்கரும் முழப் பாவமும் போகாமல் ‘பெர்க்கட்டரி’ என்று அழைக்கப்பட்டும் ஆத்தும திருத்த இடத்தை அடைந்து அங்கே தங்களுடைய பாவங்களுக்கான தண்டனையைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது? ரோமன் கத்தோலிக்கரான நீங்கள் உங்களுடைய பாவத்துக்கு மன்னிப்பு அடைய முடியாமலும், பரலோக நிச்சயமில்லாமலுமே இறக்கிறீர்கள் என்பது தெரிகிறதல்லவா.

அதனால், நான் நேசிக்கின்ற ரோமன் கத்தோலிக்கர்களுக்கு அன்போடு சொல்லுகிறேன், ‘உங்கள் மத நம்பிக்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உங்களுடைய பாவங்களில் இருந்து முழு நிவாரணத்தை இறப்பதற்கு முன்பு அடைய இயேசு கிறிஸ்துவில் மட்டும் உங்கள் நம்பிக்கையை வையுங்கள்.’ இயேசு கிறிஸ்து மட்டுமே பாவமில்லாதவராக இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்ட பாவநிவாரகர். மனிதனுடைய பாவங்களுக்கு விடுதலை கொடுக்க அவரால் மட்டுமே முடியும். அந்தப் பணிக்கு கடவுள் வேறு எவரையுமோ, எந்த சபையையோ ஏற்படுத்தவில்லை. அப்போஸ்தலர் 4:12, ‘அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷருக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறெரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.’

மனிதனுக்கு பாவ நிவாரணம் தந்து அவன் இறப்பதற்கு முன்பே இரட்சிப்பை வழங்குவதற்காக பாவமில்லாதவராகிய இயேசு கல்வாரி சிலுவையில் தன்னை ஒரே தடவை பலியாகக் கொடுத்தார். இயேசு கிறிஸ்துவின் அந்த ஒரே பலியை மட்டுமே கடவுள் ஏற்று மனிதனுடைய பாவங்களை கிறிஸ்துவுக்குள் மன்னிக்கத் தயாராக இருக்கிறார். வேதம் சொல்லுகிறது, ‘இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் என்று (மாற்கு 2:5). அத்தோடு இயேசு சொன்னார், “பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறிய வேண்டும்” என்று (மாற்கு 2:10). இதிலிருந்து தேவகுமாரனான இயேசுவுக்கு உங்கள் பாவங்களை மன்னித்து நீங்கள் இறக்கும்போது அதே நிமிடம் உங்களைப் பரலோகம் அனுப்பும் வல்லமை இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். என் அருமை நண்பர்களே! கத்தோலிக்க மத நம்பிக்கைகள் உங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்பையோ, இரட்சிப்பையோ கொடுக்க முடியாது. மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவிடம் வந்து உங்கள் பாவங்களை அவரிடம் அறிக்கை செய்து அவர் இலவசமாக இன்றே தரக்கூடிய பாவ மன்னிப்பை, அதுவும் நிரந்தரமான பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த உலகத்தில் தொடர்ந்து பலிகளைச் செய்ய எந்த அவசியமுமில்லாமல் இயேசு கிறிஸ்துவிடம் மட்டும் வந்து அவர் நிறைவேற்றிய சிலுவைப் பலியில் நம்பிக்கை வைத்து அவரை மட்டும் விசுவாசியுங்கள். ரோமன் கத்தோலிக்கர்களாகிய உங்களுக்காகவும் இயேசு இந்த உலகத்துக்கு வந்தார். நீங்கள் மனந்திரும்ப வேண்டும் என்பது அவருடைய இருதயபூர்வமான ஆவலாக இருக்கிறது. இது நல்ல செய்தி அல்லவா?

2. உங்களுடைய பாவங்களைப் போக்கி நிரந்தர ஆத்மீக விடுதலையளிக்கக்கூடிய பூரணமான ஆசாரியரொருவர் இருக்கிறார்.

ரோமன் கத்தோலிக்க நண்பர்களே! உங்கள் மத நம்பிக்கைகள் அனைத்தும் உங்கள் மதத்தின் ஆசாரியப் பணியிலேயே தங்கியிருக்கிறன என்பது உங்ளுக்குத் தெரியுமா? ஆனால், கடவுள் உங்களுக்கு ஏற்கனவே பூரணமான, நிரந்தரமான ஆசாரியரொருவரை தந்திருப்பதை நீங்கள் நினைத்துப் பார்க்காமல் இருக்கிறீர்களே. பழைய ஏற்பாட்டு உயர் ஆசாரியனாக ஆரோன் இருந்து மக்களின் பாவங்களுக்காக கடவுளிடம் மன்றாடினான் என்று பழைய ஏற்பாட்டில் வாசிக்கிறோம். ஆரோன் மட்டுமே ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலத்துக்கு போகமுடிந்தது. இருந்தபோதும் வெறும் மனிதனான ஆரோனால் மக்களுக்காக ஜெபித்துப் பலி கொடுக்க மட்டுமே முடிந்தது. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ஆத்மீக உறவை ஏற்படுத்தக்கூடிய மத்தியஸ்தனாக அவனால் இருக்க முடியவில்லை. அதேபோல் உலகத்தில் பிறந்திருக்கும் எந்த ஆசாரியனாலும், எந்த மனிதனாலும் மானுட அளவில் இன்னொருவருக்காக ஜெபிக்க மட்டுமே முடியும், மனிதர்களுடைய பாவங்களைப் போக்க முடியாது. மனிதர்களைப் பரலோகத்துக்கு அனுப்பக்கூடிய வல்லமை அவர்களுக்கு இல்லை. கடவுள் இதற்கெல்லாம் அவசியமில்லாதபடி உங்கள் பாவங்களை உடனடியாகப் போக்குவதற்காக பூரணமான, என்றைக்கும் நிலைத்திருக்கும் ஜீவனுள்ள ஆசாரியரொருவரைத் தந்திருக்கிறார்.

மனிதனுடைய பாவத்தைப் போக்கக்கூடிய ஆசாரியராக இருக்கக்கூடிய ஒருவர் சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அவர் தெய்வீகமானவராக இருக்க வேண்டும். அதுவும் மனிதனைப் போலப் பாவியாக இருக்க முடியாது; பாவமற்றவராக பூரணமான பரிசுத்தமுள்ளவராக இருக்க வேண்டும். அந்தவிதத்தில் இந்த உலகத்தில் அது படைக்கப்பட்ட காலத்தில் இருந்து இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எவரும் அப்படிப் பிறக்கவில்லை. இதை வேதப் புத்தகம் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்திருக்கும் ஏனைய ஆசாரியர்களைப் போல வெறும் மனிதனாகப் பிறக்கவில்லை. தேவ குமாரனாக தெய்வீகத்தோடு பிறந்தார். வெறும் மனிதனாகப் பிறந்தவர்கள் பிறந்தபின் தெய்வீகத்தை அடைந்ததில்லை; அப்படி அடையவும் வழியில்லை. ‘எல்லோரும் (மனித ஆசாரியர்கள் உட்பட) பாவம் செய்தவர்களாகி தேவமகிமையற்று . . .’ காணப்படுகிறார்கள் என்கிறது வேதம் (ரோமர் 3:23). அதனால்தான் வெறும் மனிதர்களாகப் பாவத்தோடு பிறந்திருக்கும் எந்த ஆசாரியனும், போப் உட்பட தெய்வீகத்தோடு பிறக்கவில்லை; இந்த உலகத்தில் அதை அடையவும் வழியில்லை. பாவத்தில் இருக்கும் அவர்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்கும் தகுதியோ, வல்லமையோ இல்லாதவர்கள். ஆனால், இயேசு தேவகுமாரனும், மனித குமாரனுமான கடவுளின் ஒரே குமாரன். அதனால்தான் அவர் மட்டுமே பரிசுத்த ஆசாரியராக நம் பாவங்களை மன்னிக்கக்கூடியவராக இருக்கிறார்.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் உறவை ஏற்படுத்தும் மத்தியஸ்தராக, பூரண ஆசாரியராக இயேசு கிறிஸ்து மட்டுமே அனுப்பப்பட்டார் (1 தீமோ. 2:1-6). மத்தியஸ்தராக இருப்பவர் பாவமில்லாதவராக இருப்பது மட்டுமல்ல அவர் பாவிகளுக்காக ஒரே தடவை (only once) மரிக்க வேண்டும். உலகத்து ஆசாரியர்களால் அப்படி ஒரே தடவை பாவிகளுக்காக பலிகொடுக்க முடியாது. அதனால்தான் தேவ குமாரனும், பாவமில்லாத பூரணமான ஆசாரியருமான இயேசு கிறிஸ்து ‘அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தடவை பலியிடப்பட்டார்’ என்கிறது வேதம் (எபிரெயர் 9:26-28, 10:11-14). கத்தோலிக்க நண்பர்களே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், நீங்கள் தேவாலயத்துக்குப் போய் தொடர்ந்து ‘மாஸில்’ கலந்துகொண்டு ஆசாரியர் மூலம் பலிகொடுத்து வருகிறீர்கள். அதற்குப் பிறகும் உங்கள் பாவங்கள் தொடர்கின்றன. மாஸ் எனும் திருப்பலியாலும், அதைக் கொடுக்கும் ஆசாரியனாலும் உங்கள் பாவங்களைப் போக்க முடியவில்லை. வீடு திரும்பும் நீங்கள் கடவுள் சந்நிதியில் பாவிகளாகவே வீடு திரும்புகிறீர்கள். ஆனால், இயேசு நம் பாவங்கள் நிரந்தரமாகப் போக்கப்பட ஒரே தடவை தன்னை சிலுவையில் பலியாகக் கொடுத்தார். அதாவது, அடிக்கடி தொடர்ந்து எவரும் பலிகள் கொடுப்பதற்கு அவசியமில்லாதபடி தன்னை விசுவாசிக்கின்ற எவருடைய சகல பாவங்களும் போக்கப்பட ஒரு முறை மட்டும் பலியானார். இது எத்தனை பெரிய அற்புதம் தெரியுமா?

இயேசு, சாதாரண மனித ஆசாரியர்களைப் போல அல்லாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவராக இருக்கிறபடியால் மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராக இருக்கிறார் (எபிரெயர் 7:23).  சாதாரண மனித ஆசாரியர்கள் மரணத்தைச் சந்தித்து இல்லாமல் போய்விடுகிறார்கள். அதனால் அநேக ஆசாரியர்களை ஒருவர் மாறி ஒருவராக இந்த உலக்த்தில் தொடர்ந்து நியமிக்க வேண்டியிருக்கிறது (எபிரெயர் 7:23). ஆனால், இயேசு அப்படியில்லாமல் என்றும் நிலைத்திருக்கும் ஜீவனுள்ள தேவனாக, மெல்கிசேதேக்குக்கு ஒப்பானவர் போல தோற்றமும், இறப்பும் இல்லாதவராக பிரதான ஆசாரியராக இருக்கிறார்.

நண்பர்களே! என்றும் நிலைத்திருக்கும் மெய்யான ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவை ஆசாரியராக ஏற்று அவர் இலவசமாக அளிக்கக்கூடிய மனதிரும்புதலையும், பாவமன்னிப்பையும் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முன் வராமல் ரோமன் கத்தோலிக்க மத நம்பிக்கைகளை நம்பி வாழ்ந்து ஏன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? ரோமன் கத்தோலிக்க ஆசாரியர்கள், போப்பு உட்பட எத்தனை நல்ல மனிதர்களாக இருந்தாலும் இந்த உலகத்தில் பாவத்தில் தொடர்ந்திருந்து இறக்கப்போகிற மனிதர்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியாமலிருக்கிறது? எந்தவித தெய்வீகத்தையும் தங்களில் கொண்டிராத, பாவத்தில் தொடர்ந்திருக்கும் மனித ஆசாரியர்கள் உங்களுக்கு பாவவிடுதலையையும், பரலோக வாழ்க்கையையும் கொடுக்க முடியாது என்பதை ஏன் நீங்கள் எண்ணிப் பார்க்காமல் இருக்கிறீர்கள்? நிரந்தரமான, மெய்யான தெய்வீக ஆசாரியரான இயேசு கிறிஸ்துவை இன்றே நீங்கள் விசுவாசிப்பீர்களானால் உங்கள் பாவம் எக்காலத்துக்கும் போக்கப்படும். நீங்கள் எந்தவித பலியையும் இயேசு கிறிஸ்துவுக்கு அளிக்காமல் அவரே உங்களுடைய பாவத்தைப் போக்க ஒரே தடவை பலியானார் என்பதை மெய்யாக நம்பி இன்றே, இப்போதே அவரை விசுவாசிப்பீர்களானால் இயேசு உங்களுடைய பாவத்தைப் போக்கி பரலோக வாசத்துக்குரிய உரிமையைக் கொடுப்பார்.

3. இறந்த பிறகு பரலோகத்தை உடனே அடைய இயேசு கிறிஸ்து மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்.

நண்பர்களே! உங்கள் மத நம்பிக்கைகள் உங்களுக்கு பரலோகம் போகக்கூடிய உத்தரவாதத்தை அளிக்க முடியாமல் இருக்கிறது என்பதை நீங்கள் ஏன் சிந்தித்துப் பார்க்கக்கூடாது. நீங்கள் இறப்பதற்கு முன் உங்கள் மத ஆசாரியர்களை நம்பி ஒவ்வொரு நாளும் பாவத்துக்காக நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. அத்தோடு உங்களால் பாவம் செய்வதை விட்டுவிடவும் முடியவில்லை. தொடர்ந்து பாவத்தை செய்கிறீர்கள், ஒரு ஆசாரியரைத் தேடிப்போய் மன்னிப்புக் கேட்கிறீர்கள். இந்தக் கதை தொடர்கதையாகிறது. உங்களுக்கு பரலோகத்தை அடைவோம் என்ற நிச்சயமும் இல்லாமலிருக்கிறது. இறந்த பிறகு ‘பெர்கட்டரி’ எனும் உத்தரிக்கும் தளத்தில் (ஆத்தும திருத்தம் அடையும் இடம்) போயிருந்து உங்கள் பாவங்களுக்கான துன்பங்களைத் தொடர்ந்து அனுபவிக்கத்தான் உங்கள் மத நம்பிக்கை உங்களுக்கு இடம் கொடுக்கிறது. நீங்கள் அங்கிருக்கும்போது இறக்காமல் இருக்கும் உங்கள் உறவினர்கள் உங்கள் பாவம் போக்கப்பட ஆசாரியர்களிடம் போய் தொடர்ந்து ஜெபிக்கவும், பலிகொடுக்கவும் வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான மாஸ் திருப்பலிகளுக்குப் போயும் உங்கள் பாவங்கள் போக்கப்படாமல், மனந்திரும்புதலும், சமாதானமும் இல்லாமல், ஆத்மீக விடுதலையின் நிச்சயம் இல்லாமலேயே நீங்கள் இந்த உலகத்தில் இறந்து போகிறீர்கள். இறந்தபின் எங்கு போகப் போகிறோம் என்ற நிச்சயம் இல்லாமலேயே இந்த உலகத்தில் நீங்கள் இறக்கிறீர்கள். இதில் என்ன ஆத்மீக நன்மை இருக்கிறது? இந்தவித மனக்குழப்பத்தோடும், பாரத்தோடும் நீங்கள் வாழ்வதற்கு அவசியமில்லாதபடி தேவனும், கடவுளும், பூரண, நிரந்தர ஆசாரியருமாகிய இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களை உடனடியாகப் போக்கவும், உங்களுக்கு உடனடியாக பரலோக அந்தஸ்தைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்களா?

உங்கள் மத நம்பிக்கைகளை விட்டுவிட்டு இயேசு கிறிஸ்துவை மட்டும் நீங்கள் உங்களுடைய பாவ மன்னிப்புக்காக விசுவாசிப்பீர்களானால் அவர் உங்களுக்கு பரலோக வாழ்க்கையை உடனடியாக அளிப்பார். நீங்கள் கிறிஸ்துவுக்குள் இந்த உலகத்தில் இறக்கும்போது, கண்ணை மூடுகின்ற அதே நேரம் பரலோகத்தில் இயேசுவோடு இருக்கும் ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும். இதை இயேசு கிறிஸ்துவில் மட்டும் நீங்கள் வைக்கக்கூடிய விசுவாசம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. சிலுவையில் தனக்குப் பக்கத்தில் இருந்த கள்வன் மனந்திரும்பி இயேசுவைப் பார்த்து, ‘ஆண்டவரே, நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். அதற்கு இயேசு அவனை நோக்கி நீ இன்றைக்கு என்னோடு பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.’ (லூக்கா 23:42-43). இங்கே இயேசு ‘பரதீசு’ என்று குறிப்பிட்டிருக்கும் இடம் பரலோகமே. பரலோகத்துக்கு புதிய ஏற்பாடு பரதீசு என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறது. ரோமன் கத்தோலிக்க மத நம்பிக்கைகள் ‘பரதீசை’ ஆத்தும திருத்த தளம் என்று தவறாகக் கருதுகிறது. பாவமில்லாத பூரண ஆசாரியரான இயேசு ஏன் ஆத்தும திருத்த தளத்துக்கு போக வேண்டும்? இயேசு சிலுவையில் மரிக்கும்போது, ‘பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்’ என்று சொல்லி ஆவியைத் துறந்தார். அவருடைய ஆவி அப்போதே பிதாவைச் சேர்ந்தது. ஆத்தும திருத்த தளத்தை அடைய அவருக்கு அவசியமில்லை. யோவான் 20:17ல் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த பிறகு இயேசு மரியாளை சந்தித்து, ‘. . . நான் என் பிதாவிடத்திற்கும் . . . என் தேவனிடத்துக்கும் . . . ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு’ என்று மரியாளைத் தன்னுடைய சீடர்களிடம் போய்ச் சொல்லும்படிச் சொன்னார். சிலுவை மரணத்திற்குப் பிறகு இயேசு பிதா இருக்கும் பரலோகத்தைத் தவிர வேறு எங்கும் போனதாக வேதத்தில் சொல்லப்படவில்லை. இதிலிருந்து தன்னுடைய பாவ மன்னிப்புக்காக இயேசுவை விசுவாசித்து அவரிடம் இருந்து மனந்திரும்புதலைப் பெற்றுக்கொண்ட அந்தக் கள்வனும் தான் இறந்த அந்த நிமிடமே இயேசுவோடு பிதா இருக்குமிடமான பரலோகம் போய்ச் சேர்ந்தான் என்பதை அறிந்துகொள்ளுகிறோம். நண்பர்களே! ரோமன் கத்தோலிக்க மத நம்பிக்கைகளில் தொடர்ந்திருந்து பாவத்தைப் போக்கிக்கொள்ள வழியில்லாமலும், மரணத்திற்குப் பிறகு பரலோகம் போகமுடியாமலும் இருப்பது உங்களுக்கு நல்லதாகப்படுகிறதா? இன்றே மனந்திரும்பி உங்கள் பாவங்கள் போக்கப்பட இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து பரலோக வாழ்க்கைக்குரிய உரிமையைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் ஏற்கனவே சொன்னேனல்லவா, உங்களுக்கு ஓர் நல்ல செய்தி காத்திருக்கின்றதென்று. அது இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் நீங்கள் இறப்பதற்கு முன்பாக உங்களுக்கு நிரந்தர ஆத்மீக விடுதலை கொடுக்கத் தயாராக இப்போதே இருக்கிறார் என்பதுதான்.

இயேசுவின் வார்த்தைகளைக் கவனியுங்கள், சிந்தியுங்கள், உடனடியாக மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவை மட்டும் உங்கள் இரட்சிப்புக்காக விசுவாசியுங்கள் நண்பர்களே:

மத்தேயு 11:28, ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்கிறார் இயேசு. இங்கே இளைப்பாறுதல் என்பதற்கு ஆத்துமாக்களுக்கு பாவத்தில் இருந்து விடுதலையும், அழிவில்லாத பரலோக வாழ்க்கையும், அமைதியும் கிடைக்கும் என்பதுதான் அர்த்தம். அதை இயேசு நான் மட்டுமே உங்களுக்கு கொடுக்க முடியும் என்று சொல்லி மக்களைத் தன்னிடத்தில் (ஆசாரியர்களிடத்தில் அல்ல) நேரடியாக வரும்படி (இடைத்தரகர்களுக்கு அவசியமில்லாமல்) அழைக்கிறார்.

மாற்கு 1:15, ‘தேவனுடைய இராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்.’

அப்போஸ்தலர் 17:30, ‘அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டும் என்று எங்குமுள்ள மனுஷரெல்லோருக்கும் கட்டளையிடுகிறார்.’

அப்போஸ்தலர் 4:12, ‘அவராலேயன்றி வேரொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷருக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை’. இந்த வசனத்தில் ‘மனுஷருக்குள்ளே’ என்பதைக் கவனியுங்கள். இயேசு மூலம் மட்டும் நேரடியாக இரட்சிப்பு எவருக்கும் கிடைக்கும் என்று விளக்கும் இந்த வசனம், இயேசுவை விசுவாசிக்க மனிதத் தரகர்கள் உருவாக்கப்படவில்லை என்பதைத் தெளிவாக விளக்குகிறது.

1 தீமோத்தேயு 2:5-6, ‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே. எல்லோரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசுஅவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கி வருகிறது.’

பிலிப்பியர் 2:9-11, ‘ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.’

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s