வாசகர்களே!

இந்த வருடத்தின் இறுதி இதழ் இது. எல்லாம் வல்ல கர்த்தர் இந்த இதழை சரியான முறையில் தயாரித்து வெளியிட துணைபுரிந்திருக்கிறார். பலருடைய உழைப்பின் பயனாக இந்த இதழ் உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கிறது. கர்த்தருக்கே சகல மகிமையும் சேர வேண்டும்.

இவ்விதழில் பல ஆக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. ரோமர் 8:28க்கான விரிவான விளக்கத்தைத் தந்திருக்கிறேன். அத்தோடு ஆதியாகமத்தைப்பற்றி நம்மத்தியில் இருந்துவருகின்ற தவறான எண்ணங்களைச் சுட்டிக்காட்டி படைப்பைப் பற்றியும், ஆதியாகமத்தின் ஆரம்ப அதிகாரங்களைப்பற்றியும் நாம் கொண்டிருக்க வேண்டிய வேத நம்பிக்கைகளை விளக்கி இரண்டு ஆக்கங்களைத் தந்திருக்கிறேன்.

ஓரினச் சேர்க்கையை உலக சமுதாயங்கள் கலாச்சாரப் பிரதிபலிப்பாகக் கருதி கடுவேகத்தோடு அங்கீகரித்து வருகிறபோது, ஓரின ஓரியன்டேஷன் கிறிஸ்தவர்கள் மத்தியில் இருப்பது தவறில்லை; பாவமில்லை என்ற பேச்சு மேலைநாட்டில் பரவ ஆரம்பித்திருக்கிறது. வரலாற்றுக் கிறிஸ்தவத்திற்கு இன்று எங்கும் ஏற்பட்டிருக்கும் ஆபத்து பெரும் ஆபத்துத்தான். அதை உணருகின்ற நிலையில் கிறிஸ்தவர்கள் இல்லாமலிருப்பதுதான் பெரும் கவலை தரும் காரியமாகும். அதுபற்றிய ஓர் ஆக்கத்தை இந்த இதழில் நீங்கள் வாசிக்கலாம்.

கோபநிவாரண பலி பற்றிய ஓர் ஆக்கத்தை இதற்கு முன் வெளியிட்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக தேவ கோபத்தைப்பற்றி மேலும் விளக்கமளிக்கும் ஓர் ஆக்கம் இந்த இதழில் வந்திருக்கின்றது. இது இன்னும் தொடரவிருக்கிறது.

இந்த இதழில் வந்திருக்கின்ற எல்லா ஆக்கங்களும் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க கர்த்தர் துணை செய்யட்டும். திருமறைத்தீபத்தை வாசித்து வருகிறவர்கள் அநேகர். ஆரம்பத்தில் இருந்து இதழைப் பெற்று வருகிறவர்கள் தொகை அதிகம். தொடர்ந¢து இதழைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம் என்பதையும், முகவரி சரியானதுதான் என்பதையும் தெரிவித்து எங்களுக்கு இமெயிலோ, கடிதமோ அனுப்பினால் அது பேருதவியாக இருக்கும். அநாவசிய செலவைக் குறைத்துக்கொள்ள அது துணைபுரியும். தொடர்ந்து இந்த இலக்கியப் பணிக்காகவும், எங்களுக்காகவும் ஜெபியுங்கள். நன்றி! – ஆசிரியர்.

One thought on “வாசகர்களே!

Leave a reply to grahamstains . Cancel reply