அன்புள்ள திருமறைத்தீபம் ஆசிரியர் அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த நன்றியினை இயேசுவின் நாமத்தில் தெரிவித்துக்கொள்ளுகிறேன். நான் கிறிஸ்தவ வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் இருந்து வந்தேன். உங்கள் பத்திரிகையை வாசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து என்னுடைய நடைமுறை வாழ்க்கையை கிறிஸ்துவுக்கு ஏற்ற முறையில் மாற்றி அமைத்துக்கொள்ள கர்த்தர் உதவினார். என்னை முதன் முதலில் கவர்ந்த அல்டர்ட் என் மார்டினின் ‘பிரியாவிடை பிரசங்கம்’ ஆக்கங்கள் என்னையே படம்பிடித்துக் காட்டியதுபோல் உணர்ந்தேன். திருச்சபையில் விசுவாசியின் பங்கு என்ன என்பதை அறிந்துகொள்ள அவை துணைசெய்தன. அல்பர்ட் என் மார்டின் அவர்களுக்கு என் நன்றி. ஒவ்வொரு இதழையும் வாசிக்கும்போதும் இறையியல் கற்றுக்கொள்ளுகிற அனுபவம் கிடைத்தது. தெரிந்துகொள்ளுதலின் உபதேசம், முன்குறித்தல், அழைப்பு, மகிமைப்படுத்துதல் ஆகியவற்றைத் தெளிவுபடுத்திய ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றி.
மேலும் நீங்கள் வெளியிட்ட திருச்சபை வரலாறு பற்றிய இரண்டு பாகங்களும் என் வாழ்வில் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரித்தவர்களைப் பற்றிக் கேள்விபட்டிருக் கிறேன். ஆனால் இப்படிக் கொடூரமான முறையில் அவர்கள் நடத்தப் பட்டிருப்பதைப் படிக்கும்போது இப்பொழுது நாம் அனுபவிக்கும் பாடுகள் எம்மாத்திரம் என்பதை உணரச் செய்தார் ஆவியானவர்.
தாம்பத்திய உறவில் நெருக்கம் (அலன் டன்) என்ற நூலில் திருமணத்தில் நெருக்கமான நட்பைப் பெற வழிகாட்டுகின்ற நான்கு நட்சத்திரக் குறிப்புகளான கடவுளைப் பற்றிய சத்தியம், படைப்பின் தத்துவம், வீழ்ச்சியின் சரித்திரம், மீட்பின் கோட்பாடு என்பவைகள் என்னுடைய திருமண வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அத்தியாயம் ஐந்திலுள்ள “ஊடுருவும் மனசாட்சி” மற்றும் “குற்றம் விசாரித்தல்”, அத்தியாயம் ஆறிலுள்ள “சுவிசேஷ அன்பின் எதிரி” என்ற தலைப்பின் கீழுள்ள போதனைகள் அனைத்தும் அற்புதம். அவை என் வாழ்கையைப் படம்பிடித்துக் காட்டும் கண்ணாடி. எளிமையான முறையில் விளக்கிய அலன் டன் அவர்களுக்கும் நன்றி.
மேலும், வேதத்தை எப்படி வாசித்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதைத் திருமறைத்தீபம் வழியாக அதிகம் தெரிந்துகொண்டேன். வேதத்தில் உவமை, உருவகம், உபதேசம், வரலாறு, கவிதை, சங்கீதம், தீர்க்கதரிசனம் என்பவைகளை எப்படி எழுத்துப்பூர்வமாக படிக்க வேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். 16 ஆம் நூற்றாண்டில் சீர்திருத்தம் ஏற்பட்டதைப்போல் எனக்குள்ளும் சீர்திருத்தம் ஏற்பட வழிசெய்த திருமறைத்தீபத்தின் ஆசிரியருக்கும், அவர் குழுவினருக்கும், சவரின் கிரேஸ் திருச்சபைக்கும் எனது மனமார்ந்த நன்றி. ஆசிரியர் பாலா அவர்களை நான் மிகவும் மதிக்கிறேன். அவரை உயர்வாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எனக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் இப்படி என்னைச் சொல்ல வைக்கின்றன. இவற்றை எல்லாம் செய்த தேவனுக்கு கோடானுகோடி நன்றிகள்.
பர்னபாஸ், காவல்துறை
சேலம், தமிழ்நாடு