அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்

Christmas

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் கிறிஸ்மஸ் பற்றி மீடியாவில் கேள்வி எழுப்பினார்கள். அதாவது கிறிஸ்மஸ் மரத்தை (Christmas tree) இனி அந்தப் பெயரால் அழைக்காமல் அதை ‘விடுமுறை மரம்’ என்று அழைக்கவேண்டும் என்று விவாதித்தார்கள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா? கிறிஸ்மஸ் தொடர்ந்து நாட்டில் விடுமுறைக் காலமாகவும், கொண்டாட்டக் காலமாகவும் இருந்துவருவதால் அதைக் கிறிஸ்துவோடு சம்பந்தப்படுத்திப் பேசுவதும், கிறிஸ்துவின் பிறப்பை நினைப்பூட்டுவதும் அவர்கள் காதுக்கு நாரசமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியர்கள் இப்படி நினைக்காவிட்டாலும் பின்நவீன சமுதாயம், வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளிலெல்லாம் இந்தமாதிரியான சிந்தனைகளோடுதான் இன்று வளர்ந்து வருகின்றது. நியூசிலாந்து நாட்டில் இப்போது நாட்டின் கொடியை மாற்ற வேண்டும் என்ற ஒரு சிந்தனை பிரதமரின் எண்ணத்தில் உருவாகி, நியூசிலாந்து சமுதாயத்தை அடையாளப்படுத்தும் கொடியொன்று தேவையென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பழமை மற்றும் வரலாற்று அடையாளம் என்பதெல்லாம் பின்நவீன சமுதாயத்துக்கு ஒரு பொருட்டே அல்ல. அது புதிய சிந்தனைகளை நாடி, நிகழ்கால சிந்தனையை மட்டுமே நிதர்சனமாகக் கருதி அதற்காக மட்டுமே வாழ்ந்து வருகிறது. அந்தச் சமுதாயம் கிறிஸ்மஸ் மரத்தை வேறு பெயரில் அழைக்கவேண்டும் என்று குரலெழுப்புவதில் ஆச்சரியமில்லை.

கிறிஸ்மஸ் தினம் அநாவசியத்துக்கு கொண்டாட்ட தினமாகவும், வர்த்தக லாபமீட்டும் நாட்களாகவும், ஒருவருக்கொருவர் பரிசளித்து மகிழ்ச்சியடையும் காலமாகவும் எப்போதோ மாறிவிட்டது. மேலைநாடுகளில் எதாவது கலைநிகழ்ச்சியோ, இசை நிகழ்ச்சியோ வைத்தால் மட்டுமே மக்கள் அந்த நாளில் சபைக்குத் தலைகாட்டுமளவுக்கு கிறிஸ்மஸ் தன்னுடைய முக்கியத்துவத்தை இழந்து நிற்கிறது. வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமே சமுதாயத்துக்குத் தெரியும் கிறிஸ்மஸ் தினம் வேதத்தில் இல்லாதது என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். அது உண்மைதான். தற்கால சீர்திருத்த இறையியல் வல்லுனரும் போதகருமான சின்கிளெயர் பேர்கசன் (Sinclair Ferguson) இதுபற்றி எழுதும்போது, ‘கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாட வேண்டும் என்ற வேதக் கட்டாயம் அவர்களுக்கில்லை’ என்று தெரிவித்திருக்கிறார். அதாவது வெளிப்படையாகவோ உள்ளடக்கமாகவோ வேதத்தில் அத்தகைய நாள்பற்றிய போதனை இல்லை. இருந்தபோதும் சின்கிளெயர் பேர்கசன் இன்னுமொரு விஷயத்தையும் சேர்த்தே சொல்லியிருக்கிறார். அவர், ‘வரலாற்றில் கிறிஸ்தவ திருச்சபை பின்பற்றி வந்திருக்கும், கிறிஸ்துவின் அசாதாரணப் பிறப்பை வருடத்தின் ஒரு பகுதியில் சிறப்பாக நினைத்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டால் அதை அவர்கள் எப்போதுமே நினைத்துப் பார்க்காமலும், மறந்தேபோய்விடக்கூடிய நிலையும் ஏற்படும்’ என்கிறார். பேர்கசனின் வார்த்தைகளை மறுபடியும் கவனித்துப் பாருங்கள். கிறிஸ்துவின் அசாதாரண பிறப்பை ஆவிக்குரியவிதத்தில் நினைத்துப்பார்த்து ஆண்டவரை மகிமைப்படுத்துவதையே அவர் குறிப்பிட்டிருக்கிறார்; அதைக் கொண்டாடுவதையோ, கேளிக்கை நிகழ்ச்சியாக்குவதையோ அல்ல.

ஒருபுறம் சமுதாயம் கிறிஸ்துமஸ் தினத்தை வெறும் களியாட்ட நாளாக மட்டும் பயன்படுத்திவருகின்ற வேளை, சபையைத் தோரணங்கள் கட்டி அழகுபடுத்தி, மேடைகளில் இயேசுவின் பிறப்பை நடித்துக்காட்டி, குழந்தை இயேசு பற்றிய பாடல்களைப்பாடி, கிறிஸ்மஸ் தாத்தா கைநிறைய பரிசுப்பொருட்களைச் சுமந்து குழந்தைகளைப் குசிப்படுத்தும் நாளாக கிறிஸ்தவ சமுதாயம் ஆக்கி வைத்திருக்கிறது. கிறிஸ்துமஸ் தினம் திருச்சபை வரலாற்றில் இருந்து வந்திருப்பதை நாம் மறுக்க முடியாவிட்டாலும், அது எதற்காக, எதை நினைவுபடுத்துவதற்காக, எதைச் செய்வதற்காக இருந்து வந்திருக்கிறது என்பதையாவது நினைத்துப் பார்க்கலாமல்லவா?

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு என்பது அவருடைய மீட்பின் செயல்கள் பற்றிய இறையியல் போதனைகளில் இருந்து பிரிக்க முடியாததொன்று. அவர் பிறக்கவே கூடாது என்று கங்கணம் கட்டி ஏரோது ஒருபுறம் போராடியிருக்க, இன்னொருபுறம், அவர் மரித்து உயிர்த்தெழவேயில்லை என்று நிரூபிக்க யூத ஆலயத்தலைவர்களும், ரோமர்களும் வரலாற்றில் போராடியிருக்கிறார்கள். இத்தனைக்கும் மத்தியில் வேதவார்த்தைகளின்படி மனித குமாரன் ராஜாவாக இந்த உலகத்தில் பிறந்து, மரித்து, உயிர்த்தெழுந்திருக்கிறார். இயேசு வரலாற்றில் பிறக்காமல் அவருடைய மீட்பின் செயல்கள் நிகழ்ந்திருக்க வழியில்லை. அவருடைய பிறப்பு அதியற்புதமான பிறப்பு. அவரைப்போல இந்த உலகத்தில் பிறந்த ஒரு மதத்தலைவரைக் காணமுடியாது. அவருக்கு முன்னும் பின்னும் அப்படிப் பிறந்தவர்களில்லை. ‘மனிதர்களில் ஒருவனும் இவனைப்போல சிறப்பாகப் பிறக்கவில்லை’ என்று இயேசு சொன்ன யோவான் ஸ்நானனுங்கூட இயேசுவைப்போலப் பிறக்கவில்லை.

இயேசுவின் பிறப்பை வேதம் ‘கன்னிப் பிறப்பு’ என்று அழைக்கிறது. அதற்குக் காரணம் அவருடைய தாயான மேரி திருமணத்திற்கு முன்பே, தனக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த யோசேப்புவுடன் எந்தத் திருமண வாழ்க்கையும் வாழுமுன்பே, பரிசுத்த ஆவியின் கிரியையால் மட்டும் வயிற்றில் உருவான குழந்தையாக இயேசுவைப் பெற்றெடுத்தார். அந்தவகையில் உலகில் இயேசு மட்டுமே பிறந்தார். அப்படி அவர் பிறந்ததற்கு அருமையான இறையியல் காரணங்கள் உண்டு. ஆண்டவராகிய இயேசு தேவகோபத்தைத் தன்மேல் சுமந்து தன்னுடைய மக்களைப் பாவத்தில் இருந்து விடுவிப்பதற்காகச் செய்யவேண்டிய அனைத்தையும் தன்னில் முழுமையான தெய்வீகத்தையும் மானுடத்தையும் ஒருசேர சுமந்து செய்யவேண்டியிருந்தது. ஆண்டவராகிய தேவகுமாரன் ஒரு தாயின் வயிற்றில் சாதாரணமாக எவரும் பிறப்பதைப்போலப் பிறந்திருக்க முடியாது. அந்தவகையில் பிறக்கிற எவரும் சாதாரண மனிதர்களாக மட்டுமே இருப்பார்கள்; இருக்க முடியும். ஆனால், இயேசு ஆண்டவராக இருப்பதாலும், முழுமானிடத்தோடு பிறக்கவேண்டியிருந்ததாலும், திரித்துவ தேவனின் மூன்றாம் ஆள்தத்துவமாகிய பரிசுத்த ஆவியானவர் அவர் மேரியின் வயிற்றில் அற்புதமாகப் பிறக்கும்படிச் செய்தார். அப்படிப் பிறந்தவர்களும் பிறக்கப்போகிறவர்களும் எவருமில்லை. இது உலக வரலாற்றில் நிகழ்ந்த, அதுவரை நிகழ்ந்திராத அதியற்புதமான தெய்வீக நிகழ்ச்சி. நினைத்துப் பார்க்கிறபோதே கண்களை அகலவைக்கும் அதியற்புதமான தெய்வீகப் பிறப்பு. அதுவும் இதில் பேராச்சரியம் தருவது எது தெரியுமா? சர்வவல்லவரான ஆண்டவர் இயேசு ஒரு பேரரசனைப்போல, நாடே தாரை தப்பட்டைகளோடு ஆர்ப்பரிக்கும் விதத்தில் பிறக்கவில்லை. முரசடிக்கிறவன் அவருடைய பிறப்பை ஊரே கேட்கும்படி அந்நாளில் அறிவிக்கவில்லை. வேதம் சொன்னபடி உலகே அறிந்திராதவேளையில், ஒரு சிலருக்கு மட்டுமே கடவுள் அவருடைய பிறப்பை அறிவித்திருக்க, இயேசு வெறும் சாதாரண மாட்டுக்கொட்டகையில் ஒரு சாமானியனைப்போலப் பிறந்தார்.

இயேசு பிறக்கப்போவது தெரிந்து அவர் பிறப்பதைத் தடுக்க ஏரோது முயற்சி செய்ததுபோல், அவருடைய கன்னிப்பிறப்பை மறுதலித்துப் பேசிவருகிற ‘ஏரோதுகள்’ உலகில் இன்றும் இருக்கிறார்கள். லிபரல் இறையியல் அறிஞரான வில்லியம் பார்க்கிளே இயேசுவின் கன்னிப்பிறப்பை மறுதலித்தவர்களில் ஒருவர். 2ம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க புதிய ஏற்பாட்டு இறையியலறிஞன் என்று சொல்லப்பட்ட ரூடோல்ப் புல்ட்மான் இயேசுவின் கன்னிப்பிறப்பையும் அவர் செய்த அற்புதங்களையும் மறுதலித்து அவரை வெறும் சாதாரண போதகராகக் காட்டுவதற்காக வேதத்தில் இயேசுவைப்பற்றிய போதனைகளைக் கற்பனை (Myth) என்று வர்ணித்திருக்கிறார். இயேசுவின் கன்னிப் பிறப்பை மறுதலித்தால் வேதமும் பொய்யாகி, கிறிஸ்தவமும் இல்லை என்றாகிவிடும். ‘இயேசுவின் பிறப்பைப் பற்றி வேதம் போதித்திருப்பவைகளைத் தவறு என்று தீர்மானித்தால் வேதத்தின் அதிகாரம் இல்லாமலாகிவிடும்’ என்று கிரேச்சம் மேச்சன் என்ற சீர்திருத்த இறையியலறிஞர் அதைப்பற்றிய ‘இயேசுவின் கன்னிப் பிறப்பு’ என்ற தன்னுடைய நூலில் விளக்கியிருக்கிறார். இயேசுவின் கன்னிப்பிறப்பு கிறிஸ்தவத்தின் அசைக்க முடியாத அடிப்படைப் போதனைகளில் ஒன்று. அந்தவகையில் இயேசு பிறந்திராவிட்டால் பாவிகளுக்கு பாவமன்னிப்புக்கும், நித்திய வாழ்வுக்கும் வழியே இல்லாமல் போயிருக்கும்; அவர்கள் நித்திய நரகத்தில் என்றும் நிலைத்திருந்திருப்பார்கள். இயேசுவின் கன்னிப்பிறப்பை மறுதலிக்கிறவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. இதை நிராகரிக்கிறவன் கிறிஸ்தவ இறையியல் அறிஞனாக இருக்க முடியாது.

இதுமட்டுமா இயேசுவின் பிறப்பின் அற்புதம்? இன்னும் இருக்கிறது. கிறிஸ்மஸை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நண்பர்களே, இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? போற்றிப் பாடி ஆராதிக்க வேண்டிய இயேசுவின் பிறப்பை வெறும் கிறிஸ்மஸ் மர அலங்காரத்தோடும், கிறிஸ்மஸ் தாத்தாவோடும் சம்பந்தப்படுத்தி சத்தியத்தை அழிக்கின்ற இருதயத்தைக் கொண்டிராமல் வேதத்தை ஆராய்ந்து பாருங்கள். யோவான் தன்னுடைய சுவிசேஷ நூலின் முதலாம் அதிகாரத்தின் முதல் பதினான்கு வசனங்களிலும் அற்புதமாக இயேசுவின் முதலாம் வருகையைப்பற்றி விளக்குகிறார். முதல் அதிகாரம் 1:14ம் வசனத்தில், ‘அந்த வார்த்தை மாம்சமாகி . . . நமக்குள்ளே வாசம் பண்ணினார்’ என்று யோவான் சொல்லுகிறார். இது ஆண்டவராகிய இயேசுவின் மானுடப் பிறப்பை விளக்குகிறது. ‘வாசம் பண்ணினார்’ என்ற வார்த்தைகள் கிரேக்க மொழியில் ‘ஆலயம் நிறுவப்பட்டது’ என்ற எழுத்துபூர்வமான கருத்தைக் கொண்டிருக்கின்றன. இயேசு மானுடத்தோடு பழைய ஏற்பாட்டு ஆலயத்தை நினைவுறுத்தும் விதத்தில் நம் மத்தியில் நாம் ஆராதிக்கும்படி வந்து பிறந்தார் என்கிறார் யோவான். அத்தோடு, தமிழ் (OV) வேதத்தில் இந்த வசனத்தின் மொழிபெயர்ப்பு சரியாக அமையவில்லை. ‘நமக்குள்ளே’ என்பது ‘நம்மத்தியில்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கவேண்டும். இந்த இடத்தில் ‘en’ என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘உள்ளே’ என்ற அர்த்தமும் இருந்தாலும், இந்தவேதப்பகுதியின் சந்தர்ப்பத்தின்படி ‘நம்மத்தியில்’ என்றே இருந்திருக்க வேண்டும். யோவான், இயேசு ஆலயமாக மானுட உருவத்தில் நம்மத்தியில் வாசம் செய்ய வந்ததையும் அவருடைய மகிமையைத் தான் புறக்கண்களால் கண்டதையுமே இந்தப் பகுதியில் யோவான் விளக்குகிறார் (we beheld his glory); அவர் நமக்குள் வாசம் செய்வதை அல்ல. ஆங்கில மொழிபெயர்ப்புகளில் பெரும்பாலானவை ‘நம்மத்தியில்’ என்றே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன (dwelt among us).

இங்கே ‘வார்த்தை’ என்பது இயேசுவைக் குறிக்கிறது. வார்த்தையாகிய இயேசு மாம்ச உருவத்தை ஏற்றுப் பிறந்தார் என்கிறார் யோவான். இதுவும் வேதம் போதிக்கும் இயேசுவின் பிறப்புபற்றிய மிகப்பெரிய அற்புதம். இதை ஆவிக்குரிய விசுவாசத்தால் புரிந்துகொள்ள முடியுமே தவிர ஆவியினால் பிறக்காதவர்களால் புரிந்துகொள்ள முடியாது. இயேசு பிறந்தபோது அவர் மானுடராகப் பிறந்தார். மக்களுடைய கண்களுக்கு அவர் மானுடராகவே தென்பட்டார். மானுடத்தின் அனைத்துத் தன்மைகளும் அவரில் இருந்தன; பாவத்தைத் தவிர. இருந்தபோது அவரில் தெய்வீகம் பிறப்பதற்கு முன்பிருந்த அத்தனைத் தன்மைகளோடும் இருந்தன. தெய்வீகத்தையும், மானுடத்தையும் தம்மில் சுமந்து இயேசு பிறந்தது அவரின் பிறப்பில் காணப்படும் அற்புதம். இப்படிப் பிறந்தவர்கள் ஒருவருமில்லை. தேவகுமாரனான இயேசு மட்டுமே தேவனாகவும், மானுடனாகவும் நம்மத்தியில் வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்தார். அவரில் தெய்வீகமும், மானுடமும் ஒருசேர இருந்தும், ஒன்றோடொன்று கலக்காமலும், ஒன்று செயல்படும்போது மற்றது வெளியேறாமலும் இருந்திருக்கும் தெய்வீகச் செயலை வார்த்தைகளால் முழுமையாக விபரித்துவிட முடியாது. கடவுளின் தெய்வீகத்தை வேதம் நமக்கு விளக்கியிருக்கும் அளவில் மட்டுமே நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். தேவனும், மனிதனுமாக இயேசு நம்மத்தியில் பிறந்தார் என்பது அவருடைய பிறப்பு பற்றிய மாபெரும் தேவஇரகசியம்.

இயேசு கிறிஸ்து கன்னித்தன்மையுடன் இருந்த மேரியின் வயிற்றில் பிறந்தது மட்டுமல்லாமல், தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில் ஒருசேரக் கொண்டு பரிசுத்த ஆவியால் பிறந்ததே அவருடைய பிறப்பை அற்புதமானதாக்குகிறது. இவ்வாறாக அவர் பிறந்தது உலகத்தோற்றத்துக்கு முன்பாகத் திரித்துவ தேவனால் தீர்மானிக்கப்பட்ட மீட்பின் உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கு அவசியமாகிறது. முழு தெய்வீகத்தைத் தன்னில் கொண்டிருக்கும் ஆண்டவரால் மட்டுமே தேவகோபத்திலிருந்து மனிதனை விடுவிப்பதற்கான வழியை ஏற்படுத்த முடியும். அத்தோடு, முழுமையான மானுடத்தோடு இருக்கும் ஒருவராலேயே நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றி வாழ்ந்து அதை நிறைவேற்றி பாவத்திற்காக மரிக்க முடியும். இதைப் பூரணமாக நிறைவேற்ற இயேசு தெய்வீகத்தோடும் மானுடத்தோடும் பிறக்க வேண்டியிருந்தது. இயேசுவினுடைய பிறப்பில் அவருடைய கன்னிப்பிறப்பு எந்தளவுக்கு முக்கியமானதோ, அந்தளவுக்கு அவரில் தெய்வீகமும் மானுடமும் இணைந்து காணப்படுவதும் முக்கியமானது.

இதிலிருந்து கிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தை உங்களால் உணர முடிகிறதா? வார்த்தைகளால் பூரணமாக வர்ணிக்க முடியாத இத்தனை அற்புதமான இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை வெறும் மரத்தையும், அலங்காரத்தையும், கிறிஸ்மஸ் தாத்தாவையும் வைத்துக் கொச்சைப்படுத்தலாமா? இப்படிக் கொச்சைப்படுத்துவதால்தானே கிறிஸ்மஸ் தினமே வேண்டாம் என்கிறார்கள் சில நல்ல கிறிஸ்தவர்கள். அவர்கள் கிறிஸ்துவின் பிறப்பை நிராகரிக்கவில்லை; கிறிஸ்மஸைக் கொண்டாட்டமாக்குவதைத்தான் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவின் பிறப்பில் நாம் ஆனந்தமடைவது தப்பா என்பீர்கள்? நிச்சயமாக அது தப்பில்லை. ஆனால் அது ஆவிக்குரிய ஆனந்தமாக இருக்கவேண்டும். கிறிஸ்மஸை உலகரீதியிலான கொண்டாட்டமாக்குவது ஆவியற்றவர்கள் செய்யும் அட்டகாசச் செயல். அவர்களுக்கு கிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவம் புரியவில்லை என்பதை அது காட்டுகிறது. கிறிஸ்மஸைப் பண்டிகையாக்கிப் பாவத்தைச் சேர்த்துக்கொள்ளாதீர்கள்.

preacherகிறிஸ்துவின் பிறப்பு நமக்கு எதைத் செய்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள். அது மனிதன் பாவத்தில் இருந்து விடுதலை அடைவதற்கான வழியை உருவாக்கியிருக்கிறது. பாவமாகிய கொடுமை மனிதனைப் பாதித்து அவனைச் சீரழித்து வைத்திருப்பதனாலேயே கிறிஸ்து மனித உருவெடுத்தார்; மரித்து உயிர்த்தெழுந்தார். பாவத்திலிருந்து விடுதலை அடைந்து ஆவிக்குரிய வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழக் கிறிஸ்து வழியேற்படுத்தினார். அதற்கு அவருடைய பிறப்பு முக்கியம். அதிலல்லவா நாம் சந்தோஷப்பட வேண்டும். நாம் பெற்றிருக்கும் இரட்சிப்பு எத்தனை மகத்தானது என்பதை இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், வாழ்வும், சிலுவைப்பலியும், உயிர்த்தெழுதலும் நமக்குக் காட்டுகிறது. பாவத்தின் கோரத்தையும் அதிலிருந்து பெற்றுக்கொண்ட விடுதலையையும் நினைத்து நினைத்து, அதில் திளைத்து ஆண்டவரைப் போற்றுவதில் அல்லவா நாம் ஆனந்தமடையவேண்டும். இதை உங்களுக்குள் ஏற்படுத்தாத கிறிஸ்மஸால் என்ன பயன்?

கிறிஸ்துவின் பிறப்பு நாம் எதைச் செய்யவேண்டும் என்பதையும் நினைவுறுத்துகிறது. அவரை விசுவாசித்து நித்தியவாழ்வைப் பெற்றுக்கொண்டிருக்கிறவர்கள் அவருக்காக என்றென்றும் விசுவாசத்தோடு இந்த உலகில் வாழவேண்டும் என்பதை அது உணர்த்தவில்லையா? பாவவிடுதலை அடைந்தவர்கள் தொடர்ந்தும் பாவத்தில் விழுந்துவிடாதபடி தங்களை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும் என்று அது எச்சரிக்கை செய்யவில்லையா? பாவமன்னிப்புப் பெற்றவர்கள் தொடர்ந்து பரிசுத்தமாக வாழ்ந்து ஆவிக்குரிய சந்தோஷத்தோடு கிறிஸ்துவின் வருகையை எதிர்பார்த்து வாழவேண்டும் என்பதை நினைவூட்டவில்லையா? கிறிஸ்துவின் பிறப்பை நினைத்துப்பார்க்கும் மெய்விசுவாசிகள் இதைத்தான் செய்வார்கள். இயேசு கிறிஸ்துவின் மரணத்தின் பலன்களை அடைந்த நாம் திருவிருந்தின்போது அவற்றை நன்றியறிதலோடு நினைத்து அவரைப் போற்றுவதுபோல் அவருடைய பிறப்பையும் நினைவுகூர்ந்து சுத்தமான இருதயத்தோடு அவருக்கு நன்றிகூறவேண்டும்.

இத்தோடு நிறுத்திவிட முடியாது நண்பர்களே. கிறிஸ்துவின் மகத்தான பிறப்பு, மனிதனை ஆட்டிப்படைக்கும் பாவத்திலிருந்து நித்திய விடுதலை இருக்கின்றது என்ற மாபெரும் செய்தியை மனிதனுக்கு அறைகூவலிட்டுச் சொல்லுகிறது. கிறிஸ்மஸ் இருக்கும்வரை இந்தச் செய்தியே அது உலகத்துக்கு அறிவிக்கும் நற்செய்தி. இயேசு கிறிஸ்துவில் வைக்கின்ற விசுவாசம் மட்டுமே அந்த விடுதலையைக் கொடுக்கும் என்பதை உலகுக்கு அறிவிக்க இயேசு பிறந்தார். அவருடைய பிறப்பு பாவநிவாரணத்திற்கான சிலுவைப்பலிக்கு அடித்தளமிட்டது. மறுபடியும் வரவிருக்கும் கிறிஸ்மஸ் தினம், மனிதனே! மனந்திரும்பி நீ இயேசு கிறிஸ்துவை விசுவாசி, உன்னுடைய பாவவிடுதலைக்கான அனைத்தையும் இயேசு பூரணமாகச் செய்து முடித்திருக்கிறார். உன்னால் செய்ய முடியாததை அவர் செய்திருக்கிறார். தன்னுடைய இரத்தத்தைச் சிந்தி உனக்காக உன்னுடைய இடத்தில் தன்னையே பலியாகத் தந்திருக்கிறார். அவரிடம் இன்றே வந்து அவரை விசுவாசித்து உன் பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றுக்கொள், அவரை மட்டுமே ஆண்டவராக நம்பி வாழு, பரலோகத்தில் அவரோடு வாழும் நித்திய வாழ்க்கையைப் பெற்றுக்கொள், காலத்தை வீணாக்காதே, இப்போதே அவரிடம் வா! என்று அறைகூவலிடுகிறது. அவரை விசுவாசிக்கின்றவர்கள் இதையல்லவா ஆணித்தரமாக ஆவியில் நிரம்பி எல்லோருக்கும் கிறிஸ்மஸ் காலத்தில் ஆனந்தத்தோடு சொல்லவேண்டும். இதைச் செய்வீர்களா இந்தக் கிறிஸ்மஸ் காலத்தில்?

______________________________________________________________________________________________________

போதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 28 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

One thought on “அர்த்தமுள்ள கிறிஸ்மஸ்

  1. SIR,  Greetings to you in the name of the lord Jesus Christ, Thank you for the updated timely, useful information. God Bless You With Regards, Vivek.S

    Like

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s