பத்திரிகையின் 20 வருட நிறைவு விழா கர்த்தரின் ஆசீர்வாதத்தோடு நல்லபடியாக பெங்களூரில் நடந்தது. அதை வெகுவிரைவில் தொலைக்காட்சியிலும் காட்டவிருக்கிறார்கள். என்னோடு ஓர் உரையாடலையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் பின்னால் தொலைக்காட்சியில் வரும். நல்ல பல காரியங்களைச் செய்து அருமையான வேதசத்தியங்களை, பலரும் அறியாமல் இருக்கும் சீர்திருத்தப் போதனைகளை நம்மினத்தவர்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதற்காகத்தான் இத்தனையும் என்பதை மறந்துவிடாதீர்கள். சீர்திருத்த இலக்கியங்கள், அதுவும் உண்மையாக, தெளிவாக, எளிமையாக, நல்ல தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இன்றைக்குத் தேவை. நம் மக்கள் வாசிப்பின்மையால் வேதசிந்தனைகளை வளர்த்துக்கொள்ளாமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை இருட்டில் வைத்திருந்து தங்களை வளர்த்துக்கொள்ளும் ஊழியர்கள் தொகை அரசியல்வாதிகளின் எண்ணிக்கையைவிட இன்று அதிகமாக இருக்கிறது. இயேசுவின் சுவிசேஷம் சுயநல நோக்கங் களுக்காகப் பயன்படுத்தப்பட்டு கிறிஸ்தவம் நம்மினத்தில் தொடர்ந்து கொச்சைப்படுத்தப்பட்டு வருகிறது. நம்மினத்து மக்கள் வாசிக்க ஆரம்பித்தாலே அவர்களுடைய கண்கள் திறந்துவிடும். ஜனவரியில் ஒரு புத்தக விற்பனையகத்தின் முகாமையாளர் என்னிடம் சொன்னார், ‘ஐயா சென்னையில் ஒரு இலட்சம் பேர் வாசிக்க ஆரம்பித்தாலே அரசு மாறிவிடும்’ என்று. எத்தனை உண்மையான பேச்சு.
நம்மினத்துக் கிறிஸ்தவம் வாசிப்பின்மையால் நலிந்து கிடப்பதற்கு சபைப்போதகர்கள் முக்கிய காரணம். அவர்கள் அக்கறையோடும், கருத்தோடும் வாசிப்பதில்லை; சிந்திக்கவும் தெரிவதில்லை. போதனைகளும், பிரசங்கங்களும் ஊட்டச்சத்தில்லாத உணவைப்போல உணர்ச்சிப் பசியை மட்டுந்தான் தீர்க்கிறது. அறிவுக்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் அவற்றில் கிஞ்சித்தும் இடமில்லை. வாசிப்பின்மையால் வதங்கிக்கொண்டிருப்பவர்கள் எப்படி ஆத்துமவளர்ச்சி அடைய முடியும்? அதுவும் சீர்திருத்தப் போதனைகளை விசுவாசிக்கிறோம் என்று பறைசாற்றிக் கொள்ளுகிறவர்கள் வாசிக்காமல் இருப்பது வரலாற்றிலேயே காணாததொன்று, நம்மினத்தில் தவிர. இந்த வருடத்திலாவது இந்நிலை மாற கர்த்தர் தன் ஆவியின் மூலம் பெரும் மனந்திரும்புதலை அநேகருக்கு இந்த விஷயத்தில் தரும்படி அனைவரும் ஜெபிப்போம். மெய்யாக வாசிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களை வாசிக்க வையுங்கள். நம்மினம் திருந்தட்டும்; சுவிசேஷப்பணி சிறக்கட்டும். – ஆசிரியர்.