மேலைத்தேய நாடுகளில் இன்று கிறிஸ்தவம் தலைகீழாக மாறி சத்தியத்துக்கு விரோதமாக நாளாந்தம் போய்க்கொண்டிருப்பதை அந்நாடுகளில் வாழும் வாசகர்கள் அறிவார்கள். கீழைத்தேய நாடுகளில் அந்தளவுக்கு இன்றுவரையில் தீவிரமான பிரச்சனைகளைக் கிளப்பாமல் இருக்கும் தன்னினச் சேர்க்கை (ஓரினச் சேர்க்கை), ஓரினத் திருமண பந்தம், தீவிர பின்நவீனத்துவ சிந்தனைகளும் போக்கும், திருமணம் செய்யாமல் சேர்ந்துவாழும் வாழ்க்கைமுறை, தகப்பனில்லாத பிள்ளைவளர்ப்பு, உடலுறவு விஷயத்தில் திருமணத்துக்கு வெளியில் கட்டுப்பாடற்ற நடைமுறை போன்றவை சமுதாயத்தில் வெறும் சாதாரண விஷயங்களாக அதோடு ஒன்றிப்போய் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு பெருந்தொல்லை தரும் அம்சங்களாக மாறிவிட்டிருக்கின்றன. திருநங்கைகளுக்கான கழிவறை என்று ஆரம்பித்து, ஆணும் பெண்ணும் ஒரே கழிவறையைப் பயன்படுத்த வேண்டும் என்றளவுக்கெல்லாம் பேச்சு இன்று அடிபடுகிறது. Target என்ற விற்பனையகம் அமெரிக்கா முழுவதும் தன்னுடைய விற்பனையகங்களில் இதை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இதனால் இதுவரை ஒரு மில்லியன் பேர் Target விற்பனையகத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். இவையெல்லாம் சமுதாயத்தின் அடித்தளத்தையே அசைத்து கிறிஸ்தவ சமுதாயத்தையும் அதிரவைத்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய ‘சமுதாய அசிங்கங்களை’ (இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது எனக்குத் தவறாகப்படவில்லை. அரசியல் இங்கிதம் (Political correctness) நமக்கு வேதவிஷயங்களில் இருக்கக்கூடாதென்று நான் உறுதியாக நம்புகிறேன்.) கிறிஸ்தவ சமுதாயம் உணர்ந்து அவற்றில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுவதோடு, இத்தகைய சூழ்நிலையில் சுவிசேஷத்தை அறிவிக்கும் அதீததுணிவையும் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இன்றிருக்கிறது.
இவற்றைத் தவிர கிறிஸ்தவர்கள் மத்தியில் திருச்சபைக்கு எந்த மதிப்பும் கொடுக்காத நிலையும் அதிகரித்து வருகிறதை மேலைத்தேய கிறிஸ்தவ சமுதாயத்தில் சாதாரணமாகவே காண்கிறோம். அதாவது, வேதபோதனைகளைப் பின்பற்றி அவற்றின் அடிப்படையில் வேதஒழுங்குகளோடு நடந்து வரும் திருச்சபையை மேலைத்தேய கிறிஸ்தவம் ஒதுக்கிவைத்து வருகிறது. சபை சபையாக இன்று சபை அங்கத்துவம், சபை அமைப்பு, விசுவாச அறிக்கை, சபை ஒழுங்கு, ஓய்வுநாள் அனுசரிப்பு, போதக கண்காணிப்பு, மூப்பர்களின் ஒழுங்காளுகை என்பவற்றையெல்லாம் விரும்பாமல் மட்டுமல்ல, தேவையற்றவை என்று அடியோடு நிராகரித்துவருகின்ற போக்கும் எங்கும் பரவலாக இருந்துவருகிறது. கிறிஸ்தவன் என்று தன்னை அழைத்துக்கொண்டு வேதசிந்தனையின்றி தனக்குப் பிடித்தவிதத்தில் எந்த அதிகாரத்துக்கும் தலைபணிய மறுத்து நடந்துவருபவர்களை எங்கும் சாதாரணமாகக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்தப் போக்கிற்கு 19ம் நூற்றாண்டிலேயே வித்திடப்பட்டிருந்தாலும் இன்று வைரஸ்போல் பரவி கிறிஸ்தவ சமுதாயத்தை இது பெரிதும் பாதித்து வருகிறது.
சமீபத்தில் எங்கள் சபைக்கு வந்த ஒரு நடுத்தரவயதுள்ளவர் இரண்டு மாதங்களாக நமது ஏரியாவிலுள்ள சபைகள் அனைத்திற்கும் போய் அவற்றின் ஆராதனை முறைகள் மற்றும் உலகத்தைப் பின்பற்றும் போக்குகள் பிடிக்காமல் எங்கள் சபையை இணையத்தில் தேடிக்கண்டுபிடித்து வந்ததாகக் கூறினார்; தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கிறார். உண்மையில் இத்தகையவர்கள் இன்று விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நிலையிலேயே இருக்கிறார்கள். இது அசாதாரண சம்பவமாக கணிக்கப்பட வேண்டிய அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது. ஒருகாலத்தில் திருச்சபைக்கு ஒப்புக்கொடுத்து வாழாமல் இருக்கிறோமே என்ற குற்றவுணர்வோடு வாழ்ந்தவர்கள் இருந்த நிலை மாறி அந்த உணர்வு அரவேயில்லாமல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு திருச்சபை அத்தியாவசியமானதல்ல என்ற உணர்வோடு வாழுகிறவர்கள் தொகை பெருகியிருக்கிறது. திருச்சபையில் இணைந்து வாழவேண்டும் என்ற போதனை கிறிஸ்தவர்களின் அடிப்படைப் போதனையாக இருந்த காலம் போய் அது இல்லாமல் வாழ்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தலாம் என்ற ஆணவம் தலைதூக்கியிருக்கிறது.
சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே இன்று இலட்சியமாக இருக்கவேண்டும், வேறு விஷயங்கள் அநாவசியமானவை என்று திமிரோடு சொல்லிக்கொண்டு கிறிஸ்தவப்பணி செய்துவருகிறவர்களை வெளிப்படையாகவே எங்கும் காண்கிறோம். பாகாலுக்குத் தலைகுனிய மறுத்து கடவுளுக்கு விசுவாசமாக வாழ்ந்த 7000 பேரைப்போல, வேதத்தைப் பின்பற்றி திருச்சபைக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து ஓய்வுநாளை அனுசரித்து வாழ்ந்துவருகிற கிறிஸ்தவர்களும், போதகர்களும், திருச்சபைகளும் தொடர்ந்திருந்து வருகிறபோதிலும் திருச்சபை வாழ்க்கைக்கு எதிரான பிசாசின் சிந்தனைகளை இன்றைக்கு வேத அதிகாரத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் முகங்கொடுத்துப் போராடவேண்டியிருக்கிறது. ஒருபுறம் வேதஅடிப்படையில் திருச்சபைக்கு ஒப்புக்கொடுத்து ஆண்டவரை ஆராதித்தும், சுவிசேஷத்தை ஆவியில் நிரம்பி அறிவித்தும் வருகிறவேளை, கிறிஸ்துவின் பெயரில் உலவி வரும் இத்தகைய தீவிர புதுவிதப் போக்கையும் எதிர்த்து வாழவேண்டிய நிலையில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
ஜொனத்தன் லீமன் எழுதிய ‘சபை அங்கத்துவம்’ (Jonathan Leeman, Church Membership, Crossway) மற்றும் ரையன் எம். மெக்ரோவும் ரையன் ஸ்பெக்கும் எழுதிய ‘சபை அங்கத்துவம் வேதபூர்வமானதா’ (Ryan M Mcgraw and Ryan Speck, Is Church Membership biblical, Reformation Heritage Books) ஆகிய புதிய நூல்கள் கிடைக்கப்பெற்று வாசித்தேன். இவை சபை அங்கத்துவம் பற்றி எளிமையாக விளக்கும் வேதபூர்வமான நூல்கள். இந்தத் தலைப்புகளோடெல்லாம் நூல் வெளியிடவும், பிரசங்கம் செய்யவும் தேவையில்லாத காலமொன்றிருந்தது. 16ம் நூற்றாண்டில் ரோமன் கத்தோலிக்க மதத்தையும் உலகத்தையும் அசைத்த சீர்திருத்தம் ‘திருச்சபை சீர்திருத்தம்’; அதற்குப் பெயர் கிறிஸ்தவ சீர்திருத்தமோ, சுவிசேஷ சீர்திருத்தமோ அல்ல. அன்று கிறிஸ்தவ சீர்திருத்தத்தை சபையில் ஆரம்பிக்கவேண்டுமென்று சீர்திருத்தவாதிகளுக்குப் புரிந்திருந்தது. கத்தோலிக்க மதப்போதனையால் இரட்சிப்புக்கான வழியை மக்கள் அறியமுடியாதிருந்த காலத்திலும், சுவிசேஷம் அரவே பிரசங்கிக்கப்படாத சூழ்நிலையிலும், வேதத்தை மக்கள் வாசிக்கக்கூடிய வசதியில்லாதிருந்த நிலையிலும் இதில் எதையாவது ஒன்றை மட்டும் முதன்மைப்படுத்தி, முன்னெடுத்து ஓர் இயக்கத்தை அவர்கள் ஆரம்பிக்கவில்லை. சுவிசேஷப் பணி மட்டுமே அவசியம் வேறெதுவும் முக்கியமில்லை என்ற நிலையை எடுத்து உயிரைக்கொடுத்துப் பாடுபட்டவர்களாக அவர்களை நாம் வரலாற்றில் காணவில்லை. சுவிசேஷம் வெளிப்படையாகப் பிரசங்கிக்கப்பட வேண்டிய அவசியமும், வேதமொழிபெயர்ப்பும் அத்தனை அவசியமாக இருந்தபோதும் இதையெல்லாம் திருச்சபை சீர்திருத்தமில்லாமல் செய்து பலனில்லை என்பதை லூத்தரும், கல்வினும், சுவிங்லியும், நொக்ஸும் உணர்ந்திருந்தனர். அவர்கள் முன்னெடுத்துச் சென்ற திருச்சபை சீர்திருத்தப் பணியினாலேயே நாம் இன்றும் திருச்சபையில் கூடி ஆராதிக்கவும், வாழவும், வேதத்தை நம்மொழியில் வாசிக்கவும், சுவிசேஷத்தைச் சொல்லவும் முடிகிறது. இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்காமல் சுவிசேஷம் சொன்னால் மட்டும் போதுமென்று கிளம்பியிருப்பவர்கள் வரலாற்றையும், வேதத்தையும் சிதைக்கப்பார்க்கிறார்கள்; ஆத்துமாக்களை திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.
சபை அங்கத்துவம் – ஜொனத்தன் லீமென்
ஜொனத்தன் லீமென்னின் நூலில் அருமையான பல நல்ல அம்சங்கள் காணப்படுகின்றன. இதை வாசித்தது எனக்கு குதூகலத்தைத் தந்தது. ஒத்த கருத்துள்ள ஒரு விசுவாச நண்பனோடு கூடிப்பேசுகின்ற ஓர் அனுபவத்தைத் தந்தது. லீமென் ஒரு திருச்சபைப் போதகர். சபை அங்கத்துவத்தின் அவசியத்தைப்பற்றி மட்டுமல்ல தான் அங்கத்துவத்திற்காக விண்ணப்பம் செய்கிறவர்களோடு நடத்துகிற ஆரம்ப விண்ணப்பத்தெரிவு சந்திப்பில் எப்போதுமே அதிக மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் விளக்குகிறார். ‘அங்கத்துவ விண்ணப்பத்தேர்வு’ என்ற வார்த்தைகளே இன்றைக்கு கிறிஸ்தவர்களில் பலருக்கு அலர்ஜியாக இருக்கிறது. புதுவிதப் போக்காளர்களைத் தூக்கிவாரிப்போட வைக்கும் வார்த்தைகள் இவை. அங்கத்துவத் தேர்வை விளக்கும் இந்தப் பகுதிக்கு லீமென் அளித்திருக்கும் தலைப்பே அருமை, ‘யார் உள்ளே நுழையலாம்’ என்பதே அது. யார் வேண்டுமானாலும் திருமுழுக்கு கொடுக்கலாம், எடுக்கலாமென்றும், அப்படித் திருமுழுக்கு எடுப்பதே சபை அங்கத்துவத்தின் அறிகுறி, வேறெதுவும் தேவையில்லை என்றும் தான்தோன்றித்தனமாகப் பேசுகிறவர்களுக்கும், நடந்துகொள்ளுகிறவர்களுக்கும் மத்தியில் நாம் வாழ்கிற சூழ்நிலையில் லீமென்னின் வார்த்தைகள் என் நெஞ்சில் பாலை வார்க்கின்றன. லீமென் சொல்லுகிறார், ‘ஒருவன் சபைக்குள் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்’ என்கிற வார்த்தைகள் மிகவும் தப்பானவை. அப்படி இணைத்துக்கொள்ளுவதற்கு சபை ஒன்றும் வருகிறவர்களுக்கெல்லாம் வளைந்துகொடுத்துவிடுகிற தன்னார்வ நிறுவனமல்ல. சபைக்கு ஒருவன் தன்னை ஒப்புக்கொடுத்து அதற்குக் கட்டுப்பட வேண்டுமென்பதே சரியான வார்த்தைகள்.’
சபை அங்கத்துவத்தைப்பற்றி எத்தனையோ நூல்களை நான் வாசித்திருக்கிறேன். ஏர்ல் பிளெக்பேர்ன் (Jesus Loves The Church And So Should You), டொன் விட்னி (Spiritual Disciplines within the Church) ஆகியோர் தங்களுடைய நூல்களில் இதுபற்றி நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் அவற்றிலும் ஏதோ ஒன்று உதைப்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. அவர்கள் விளக்கியிருப்பவற்றில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை; நூறுவிதம் சம்மதமே. இருந்தாலும் அவர்கள் சொல்லவேண்டிய சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். சபை அங்கத்துவம் அவசியமென்றும், அதற்கான வேத ஆதாரங்கள் இத்தியாதி என்றும், சபையில் அங்கத்தவராக இருக்க வேண்டும் என்றும் ஆணித்தரமாக விளக்கினாலும் நடைமுறையில் அது எப்படி எந்தவிதத்தில் சபையில் இருக்கவேண்டும், ஒருவர் அதை எப்படி, எந்த மனநிலையோடு அணுக வேண்டும் என்பதை ஜொனத்தன் லீமென் அருமையாக, அடித்து விளக்கியிருப்பதுதான் எனக்கு அத்தனை சந்தோஷத்தைக் கொடுத்தது. இதெல்லாம் எழுத்தில் எழுதாவிட்டாலும் பிரசங்கத்தில் விளக்கியிருக்கின்ற, எனக்குத் தெரிந்த ஒரே மனிதர் அல்பர்ட் என். மார்டின் மட்டுமே. ஜொனத்தன் லீமென் அவற்றை எழுத்தில் தந்திருப்பதன் மூலம் அவசியமான ஒரு தேவையைப் பூர்த்தி செய்திருக்கிறார்.
எளிமையான ஆங்கிலத்தில் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் நூலிது. சபை அங்கத்துவத்துக்கான வேத ஆதாரங்களை ஒவ்வொன்றாக முன்னெடுத்து வைக்கிறார் லீமென். வேதத்தை எப்படி வாசித்துப் புரிந்துகொள்ளுவது என்பதை அறியாத அரைகுறையொன்று தூரத்தில் வேதத்தில் ‘அங்கத்துவம்’ என்ற வார்த்தையைப் பார்க்க முடியாது என்று அடிக்குரலில் சத்தமிடுவது கேட்கிறது. அந்த வார்த்தை இருந்துவிட்டால் மட்டும் நீ சபையில் விசுவாசமாக அங்கத்துவனாக இருந்துவிடுவாய் என்று என்னால் நம்பமுடியவில்லை. ஒருநாளும் அதிகப்பிரசங்கிகள் சபை அங்கத்தவர்களாக இருப்பதில்லை. வேதத்தில் அங்கத்துவம் என்ற வார்த்தை இல்லை என்பது அதைத் தந்த ஆவியானவருக்கு நன்றாகத் தெரியும். அதா இப்போது அவசியம்? சபைகள் அங்கத்துவ அமைப்பு இல்லாமல் அமைக்கப்படவில்லை; தொடரவில்லை என்பதற்கு எண்ணிலடங்காத அசைக்கமுடியாத வேத ஆதாரங்கள் இருக்கின்றன என்பதுதான் என் வாதம். அதை லீமென் 13 பக்கங்களில் நன்றாகவே விளக்கியிருக்கிறார். கி.பி. 30ல் இருந்து ஆரம்பித்து உலகத்தையே வலம் வருவதுபோல் நாடுகள் எல்லாவற்றையும் சுற்றிக்கடந்து அங்கிருந்த சபைகள் அமைக்கப்பட்ட விபரங்களை அப்போஸ்தலர் நடபடிகளிலிருந்து புதிய ஏற்பாடுவரை நமக்குச் சுட்டி ‘அங்கத்தவர்களைப் பற்றிப் பேசாமல் ஒருநாளும் நம்மால் உள்ளூர் சபையைப் பற்றிப் பேசமுடியாது’ என்று முடிக்கிறார் லீமென். இதில் இருபத்தைந்து புத்தகங்களையாவது உடனடியாக வாங்கி சபையில் வைக்கலாமென்றிருக்கிறேன். இன்றைய இளம் தலைமுறைக்கு இதையெல்லாம் போதித்து வளர்க்காவிட்டால் வெளியில் அவர்கள் சிந்தையைக் குழப்புவதற்காக ஊழியம் செய்துவரும் ஊதாரிகள் கையில் அகப்பட்டு அவர்கள் சின்னாபின்னமாகிவிடுவார்கள்.
இந்த நூல் கையடக்கமானதாக இருந்தாலும் இதில் விளக்கப்பட்டிருக்கும் உண்மைகளையெல்லாம் நான் சுட்ட ஆரம்பித்தால் இந்த ஆக்கம் நீண்டதாகிவிடும். அதனால் முக்கியமானவற்றை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன். இதில் லீமென் உள்ளூர் சபையைப் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்.
- விசுவாசிகள் மட்டும்
- வழமையாக ஓரிடத்தில் கூடிவரும் கூட்டம்
- கண்காணிகளின் கண்காணிப்புக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் கூட்டம்
- இயேசுவின் அதிகாரத்தை இந்த உலகத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி அவருடைய பெயரில் கூடிவரும் கூட்டம்.
மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பிரசங்கத்தைச் செய்து திருநியமங்களைப் பின்பற்றும் கூட்டம்.
லீமென் சொல்லுகிறார், ‘ஒரு போதகர் திருமண விழாவொன்றின் முடிவில் திருமணம் செய்துகொள்கிறவர்களை கணவனும் மனைவியுமாக அறிவித்து அவர்களைக் குடும்பமாக இணைப்பதுபோல, மேற்குறிப்பிட்ட பட்டியலில் உள்ள கடைசி நான்கு அம்சங்களுமே சாதாரணமாக வேறு இடங்களில் கூடிவருகின்ற (பார்க்கிலோ அல்லது சாப்பாட்டுக்கடையிலோ) கிறிஸ்தவர்களை ஓர் உள்ளூர் சபையாக்குகின்றன.’ அதாவது, இந்த நான்கு அம்சங்களுமே கிறிஸ்தவர்கள் வேறு எந்த இடத்தில் கூடுகிற கூட்டங்களில் இருந்து பிரித்துக்காட்டி அவர்களை ஒரு சபையாக அடையாளங்காட்டுகின்றன. இந்தவிதத்தில் அதிகாரபூர்வமாக கிறிஸ்தவர்கள் சபையாகக் கூடிவருதலையே பவுல் அப்போஸ்தலர் 1 கொரிந்தியர் 11-14 வரையுள்ள அதிகாரங்களில் ‘ஓரிடத்தில் கூடிவருகிறபோது’ என்ற வார்த்தைப்பிரயோகங்களைப் பயன்படுத்தி இனங்காட்டுகிறார். கிறிஸ்தவர்கள் சபையாகக் கூடிவருதற்கும் தனிப்பட்டவிதத்தில் வேறுநோக்கங்களுக்காக வேறிடங்களில் கூடிவருவதற்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறதென்பதை லீமென் உணர்த்துகிறார். சபைகூடிவருகிறபோது அது ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் அவருடைய அதிகாரத்தின் பிரதிநிதியாக அதிகாரபூர்வமாகக் கூடிவருகின்றது.
இதேபோல லீமென் சபை அங்கத்துவத்தையும் விளக்குகிறார், ‘ஒரு கிறிஸ்தவனுக்கும் திருச்சபைக்கும் இடையில் இருக்கும் அதிகாரபூர்வமான உறவே சபை அங்கத்துவம். இந்த உறவை ஏற்படுத்திக்கொள்ளுவதற்காக தன்னுடைய கிறிஸ்தவ சீடத்துவத்தை சபையின் நன்மை கருதி கீழ்ப்படிவோடு அவன் சபையின் மேற்பார்வைக்கு ஒப்புக்கொடுக்கிறபோது உள்ளூர்சபை கூடி அவனை அங்கீகரிக்கிறது.’ இந்த விளக்கத்தை லீமென் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.
- உள்ளூர் சபை ஒருவனின் விசுவாசத்தை நம்பத்தகுந்தது என்று திருமுழுக்கை அவனுக்கு அளிப்பதன் மூலம் அங்கீகரிக்கிறது.
- அவனுடைய சீடத்துவத்திற்கு மேற்பார்வை அளிப்பதை அது வாக்குறுதியாக அளிக்கிறது.
- அந்த விசுவாசி அதிகாரபூர்வமாக சபையினதும், அதன் தலைவர்களினதும் அதிகாரத்திற்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டுத் தன்னுடைய சீடத்துவத்தைப் பின்பற்றுகிறான்.
இதன் மூலம் அந்த உள்ளூர் சபை அவனைப்பார்த்து, ‘உன்னுடைய விசுவாசம், திருமுழுக்கு, சீடத்துவம் ஆகியவற்றை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆகவே, நீ கிறிஸ்துவுக்கு உரியவன் என்பதையும், எங்களுடைய சபையின் மேற்பார்வைக்கு உட்பட்டவன் என்பதையும் நாங்கள் பகிரங்கமாக அறிவிக்கிறோம்’ என்று சொல்லுகிறது. அதேபோல, அந்த விசுவாசியும் சபையை நோக்கி, ‘நீங்கள் விசுவாசத்தோடு, சுவிசேஷத்தை அறிவிக்கின்ற சபையாக இருக்கின்றவரை நான் தனிப்பட்டவிதத்தில் உங்களோடு இணைந்து வாழ்வதோடு, என்னுடைய சீடத்துவத்தையும் உங்களுடைய அன்பின் அடிப்படையிலான மேற்பார்வைக்கு கீழ்ப்படிவோடு சமர்ப்பிக்கிறேன்’ என்கிறான். இந்த இடத்தில் ‘சுவிசேஷத்தை அறிவிக்கிற சபையாக இருக்கின்றவரை’ எனும் வார்த்தைகளுக்குப் பொருள் வேதத்தை மீறி நடக்கும் சபையாக மாறிவிடாமல், அதாவது ‘லிபரல்’ சபையாக மாறிவிடாமல் இருக்க வேண்டும் என்பதே.
இதுவரை நாம் பார்த்திருப்பது நமக்கு திருமணத்தை நினைவுக்குக் கொண்டுவரவேண்டும். திருமண வைபவத்தில் திருமணத்தில் இணையப்போகிறவர்கள் கடவுளின் முன் வாக்குறுதிகளை எடுத்துக்கொள்ளுவதுபோலத்தான் இதுவும். அந்த உடன்படிக்கையைப்போலத்தான் ஒரு விசுவாசி உடன்படிக்கையை எடுத்து புதிய உடன்படிக்கை சமுதாயமான உள்ளூர் சபையில் சேரவேண்டும். சபை அங்கத்துவம் என்பது சபை உங்களுடைய சீடத்துவத்துக்கான பொறுப்பையும், நீங்கள் சபையின் நலனுக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளுவதுதான். இந்த இடத்தில்தான் சபையின் தலைவர்களான மூப்பர்கள் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.
லீமென் சபை அங்கத்துவத்தை மிக அழகாக விளக்குகிறார். நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கின்ற கடமைப்பாட்டைக் கொண்டிருப்பதுபோல உள்ளூர் சபையில் இணையும் கடமைப்பாட்டையும் கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவை விசுவாசித்தபின் உள்ளூர் சபையில் இணைந்து வாழ்வது நம்முடைய தவிர்க்கமுடியாத கடமையாக இருக்கின்றது என்கிறார் லீமென். அதேவேளை உள்ளூர் சபை அங்கத்துவத்திற்கு விண்ணப்பம் செய்கிறவர்களைச் சந்தித்துப் பேசி தகுந்த வழிமுறைகளின்படி அவர்களை ஆராய்ந்து சபையாருக்கு அவர்களை பரிந்துரை செய்கின்ற பொறுப்பு சபை மூப்பர்களுடையது. உள்ளூர் சபை அங்கத்தவர்களாக இருக்கவேண்டியவர்கள் ஆடுகள்; ஓநாய்களல்ல. ஓநாய்கள் உள்ளூர்சபைக்குள் நுழைவதைத் தாங்களே தவிர்த்துக்கொள்ளாது; சபையின் நன்மை கருதி அதைத் தடுக்கவேண்டியது மூப்பர்கள் பொறுப்பு. அதற்காகத்தான் அங்கத்துவ விண்ணப்பத்தை ஆராய்ந்து ஒருவர் மூப்பர்களின் கண்காணிப்பிற்கும், சீடத்துவத்தை அவர்களுடைய மேற்பார்வையின் கீழ் கொண்டுநடத்தத் தயாராக இருக்கிறாரா என்பதைக் கருத்தோடு கவனிக்க வேண்டிய பணி மூப்பர்களுடையதாக இருக்கிறது. இறுதியில் மூப்பர்களின் பரிந்துரையின்படி சபை அவர்களை அங்கத்துவத்திற்கு அங்கீகாரம் செய்யும். இதையெல்லாம் லீமென் அருமையாகவும், தகுந்த உதாரணங்களுடனும் வேதபூர்வமாக விளக்கியிருக்கிறார். திருச்சபைப் போதகனாக இருக்கும் எனக்கு இந்த நூல் கையில் கிடைத்து வாசிக்க முடிந்தது ஆவிக்குரிய ஆசீர்வாதமாக இருந்தது.
‘கிறிஸ்தவன் எவ்வாறு சபைக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என்ற அதிகாரத்தில் லீமென், ‘கிறிஸ்தவர்கள் சபைக்குள் இணைந்து கொள்வதில்லை, அவர்கள் சபைக்குக் கட்டுப்பட வேண்டும்’ என்கிறார். ‘இயேசு எவரையும் கட்டவும், அவிழ்ப்பதற்குமான அதிகாரத்தை சபைக்குக் கொடுத்திருக்கிறார்’ என்கிறார் லீமென். அதனால் சபையே ஒருவரை உள்ளே அனுமதிக்கும் பொறுப்பையும் அதிகாரத்தையும் கொண்டிருக்கிறது. கட்டுப்படுவது, கீழ்ப்படிவது என்ற வார்த்தைகள் இன்று அநேகரை பயமுறுத்துவதாகவும், விரும்பத்தகாததாகவும் மாறிவிட்டிருக்கின்றன. முக்கியமாக நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் போதகர்களின் மோசமான செயல்களினால் சபைக்குக் கெட்டபெயர் வந்திருப்பது மட்டுமல்ல கிறிஸ்தவர்கள் சபைக்குக் கட்டுப்படவும் தயங்குகிறார்கள். இந்த நடைமுறைத் தவறுகளினால் நாம் வேதத்தை மாற்றியமைத்துவிட முடியாது; வேறு விளக்கங்கள் கொடுக்க முடியாது. கிறிஸ்தவர்கள் சபைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென்பதே சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் தவிர்க்கமுடியாத கட்டளை. சபைக்கு எப்படி கட்டுப்படுவது என்பதை எட்டு அம்சங்கள் மூலமாக லீமென் விளக்குகிறார். (1) முதலாவது, பகிரங்கமாகக் கட்டுப்பட வேண்டும். அதாவது, அதிகாரபூர்வமாக அனைவரும் அறியும்படியாக. (2) பிரதேச ரீதியாக சபையிருக்கும் இடத்தில் வாழ்ந்து சபை வாழ்க்கைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். வெகுதூரம் போய் வாழ்ந்தால் சபை வாழ்க்கையை அனுபவிக்கவோ, அதற்கு உழைக்கவோ முடியாது. பணத்தை மட்டும் காரணமாகக் கொண்டு தூரத்தில் போய் வாழ்வது கிறிஸ்துவில் வைக்கின்ற நம்பிக்கைக்கு அர்த்தமல்ல. (3) நிதர்சனமான சமூகத்தொடர்பை சக அங்கத்தவர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். (4) ஒருவர் மீது ஒருவர் ஆழமான அன்பை நடைமுறையில் காட்டவேண்டும். (5) பணத்தால் சபையின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். (6) தங்களுடைய சரீர உழைப்பை சபைக்குக் கொடுக்கவேண்டும். எல்லோரும் முழுநேர ஊழியராக இருக்கவேண்டுமென்று கிறிஸ்து எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய நேரத்தையும், உழைப்பையும் சபையின் முன்னேற்றத்திற்காகக் கொடுக்க வேண்டும். முக்கியமாக ஓய்வுநாளை சபைக்குக் கொடுக்கவேண்டும். அந்த நாள் ஆண்டவருடையது, அந்நாளிலேயே சபைகூடுகிறது. (7) சபையின் ஒழுக்கப்போதனைகளுக்கு முழுமனதோடு கட்டுப்பட்டு சீடத்துவ ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்குக் கீழ்ப்படிய வேண்டும். (8) ஆவிக்குரியவிதத்தில் சபைக்குக் கட்டுப்பட வேண்டும்.
சபை அங்கத்துவம் இடத்துக்கு இடம் மாறி அமையமுடியாது என்கிறார் லீமென். இயேசு கிறிஸ்துவே சபையையும், அங்கத்துவத்துவ முறையையும் அமைத்து எக்காலத்துக்கும் உரிய முறையில் வேதத்தில் தந்திருப்பதால் அது இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வேறுபட்டிருக்க முடியாது என்கிறார் லீமென். எல்லா நாடுகளுக்கும் எல்லா இடங்களுக்கும் ஒரேவிதமான அம்சங்களையே இந்த விஷயத்தில் பயன்படுத்த இயேசு கொடுத்திருக்கிறார். இருந்தபோதும் இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தைக் குழப்புவதற்கு பிசாசு தன் தந்திரங்களைப் பயன்படுத்துவது நாமறிந்ததே. அந்தத் தந்திரங்களில் ஒன்றுதான் கலாச்சாரத்தின் அடிப்படையில் சபை அமைக்க முயல்வது. மேலைத் தேசங்களிலும், கீழைத்தேய நாடுகளிலும் இதை இன்று பெருமளவிற்குப் பார்க்கிறோம். ஆள் எண்ணிக்கை தேவை என்பதற்காக இனிப்புக்கொடுப்பதுபோல் ஐந்துவயதுள்ள பிள்ளைக்கும் இருபத்தைந்து வயதுள்ளவனுக்கும் ஒரேவிதமான அழைப்பைக் கொடுத்து பரலோக இராஜ்ஜியத்தில் இணைக்கும் வழிமுறைகளை பிசாசு பயன்படுத்தி வருகிறான். அர்ப்பண அழைப்பு போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, இயேசு சபைபற்றிப் போதித்திருக்கும் போதனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கிறிஸ்தவ ஊழியங்கள் நடந்துவருவது ஊரறிந்த காரியமே. சுவிசேஷம் என்னவென்று தெரியாமல், “கிறிஸ்துவிடம் வா உன்னைக் குணப்படுத்துவார்” என்று பொய்சொல்லி ஆள்சேர்க்கும் ஊழியங்கள் மலிந்துபோயிருக்கின்றன. கடவுளின் கிருபையை இந்தளவுக்கு சாதாரண பத்து பைசா மிட்டாயைப்போல ஆளாளுக்கு இலவசமாகக் கொடுத்து அவர்களைத் திருமுழுக்குக்கு உட்படுத்தி அத்தகையவர்களை ஒன்றுகூட்டி ‘சபை’ எனப் பெயர்சூட்டி நடந்துவரும் எத்தனை ஊழியங்களைப் பிசாசு பயன்படுத்தி வருகிறான். இவர்களுக்கு இந்த உலகத்து பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் மட்டும் கையில் இருக்குமே தவிர பரலோக இராஜ்யம் தொடர்ந்து தூரத்தில் அல்லவா இருக்கிறது.
சபை அங்கத்துவனாவது என்பது ஒரு விசுவாசி புதிய உடன்படிக்கை சமுதாயமான ஒரு குறிப்பிட்ட உள்ளூர்சபையில் இணைந்து அதற்குள் இருந்து விசுவாசத்தோடு வாழத் தன்னை ஒப்புக்கொடுப்பது. அந்த சபையைப் பற்றி அந்த விசுவாசி நன்றாகத் தெரிந்துகொள்ளவும், அந்த சபை அந்த விசுவாசியைப் பற்றியும் அவனுடைய விசுவாசத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொண்டு உள்ளே அனுமதிக்கவும் அங்கத்துவ விண்ணப்பமும், அங்கத்துவ வகுப்புகளும் அவசியமாகின்றன. உலகத்தில் இல்லாததொன்றை இந்த விஷயத்தில் சபை செய்யவில்லை. ஒரு கிளப்பிலோ ஜிம்மிலோ இணைவதற்குக்கூட இதையெல்லாம்விட கட்டுப்பாடுகள் இன்று உண்டு. எவரையும் சும்மா உள்ளே விட்டுவிடமாட்டார்கள். ஒரு மனிதன் உண்மையான விசுவாசியா என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அவன் வேதத்திற்குக் கட்டுப்பட்டு வாழத் தீர்மானித்து அதை வார்த்தையால் வெளிப்படையாக மூப்பர்களுக்குத் தெரிவிப்பதற்கு வசதியாகவே சபைகள் அங்கத்துவ வகுப்புகளை நடத்துகின்றன. அங்கத்துவ வகுப்புகளில் கலந்துகொள்ளும்போது ஒரு விசுவாசி சபை பற்றியும், சபை வாழ்க்கை பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொண்டு அந்தச் சபையில் இணைவதற்கான தீர்மானத்தை அறிவுபூர்வமாக எடுக்க வசதியாக இருக்கும். அங்கத்துவ அமைப்பும், வகுப்புகளும் இல்லாமல் சபை என்ற பெயரில் இருந்துவருகின்ற குழுக்களில் எல்லாம் கர்த்தர் எதிர்பார்க்கின்ற ஒழுங்கைக் காணமுடியாது. ஆவிக்குரியவர்கள் ஒழுங்கில்லாமல் இருக்கவேண்டும் என்று வேதம் எங்கே சொல்லுகிறது? இது தெரிந்திருந்தும் அநேகர் இந்த விஷயத்தில் ஒழுங்கில்லாது நடந்துவருகிறார்கள். சரியான அங்கத்துவ அமைப்பு இல்லாதிருந்தால் போதகக் கண்காணிப்பை மூப்பர்கள் வேதபூர்வமாக செய்வதென்பது முடியாத காரியம். போதகக் கண்காணிப்புக்கு ஒருவன் தன்னை ஒப்புக்கொடுத்தால் மட்டுமே அதை ஒரு மூப்பனால் அவனுக்கு கொடுக்க முடியும். வலியப்போய் வற்புறுத்தி, அடங்கமாட்டேன் என்கிறவனுக்கு போதக கண்காணிப்பை வழங்க முடியாது. அதற்குக் கீழ்ப்படிந்து தங்களை ஒப்புக்கொடுத்திருக்கிறவர்களுக்கே அதன் அருமை தெரியும்; அதன் பலனையும் அவர்கள் நிதர்சனமாக அடைவார்கள்.
சபை அங்கத்துவம் வேதபூர்வமானதா?
ரையன் மெக்ரோவும் ரையன் ஸ்பெக்கும் எழுதியிருக்கும் இந்தக் கையடக்கமான 31 பக்கங்கள் கொண்ட நூல் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை. சபை அங்கத்துவத்திற்கான நியாயங்களை இது வேதபூர்வமாக நம்முன் வைக்கின்றது. சபை அங்கத்துவம் அவசியமில்லை என்று சொல்லுகிறவர்களுடைய வாதத்திலிருக்கும் தவறுகளையும் இது சுட்டுகிறது. இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் எதிலும் எனக்கு எதிர்மறைக் கருத்து இல்லை. இது அவசியமான நூலாக இருந்தாலும் ஜொனத்தன் லீமென்னின் நூலின் பயன் இதைவிட மேலானதாக எனக்குத் தெரிகிறது. உண்மையில் திருச்சபை பற்றியும், திருச்சபை அங்கத்துவம், ஒழுங்கு நடவடிக்கை, மூப்பர்களின் கண்காணிப்பு, சபைக்கூட்டங்கள் நடத்த வேண்டிய முறை, சபை அங்கத்தவர்களின் பொறுப்புக்கள் ஆகியவை பற்றி நடைமுறைக்குத் தகுந்த முறையில், ஏற்கனவே அரைத்த மாவை அரைத்துக்கொண்டிராமல் நூல்கள் வரவேண்டிய அவசியம் இன்றிருக்கிறது. எந்தளவுக்கு தற்கால பின்நவீனத்துவ பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கிறிஸ்தவர்கள் சபையையும், சபை அமைப்பையும், அங்கத்துவத்தையும் நிராகரிக்கிறார்களோ அந்தளவுக்கு அவற்றின் தவிர்க்க முடியாத அவசியம் பற்றிய நல்ல நூல்கள் பெருகவேண்டும்.
நம்மினத்து கிறிஸ்தவத்தையும், அதிலிருக்கும் திருச்சபைகளையும் முப்பத்தாறு வருடங்களாகக் கவனித்து வருகிறேன். கூடில்லாக் குருவிகளாகப் புற்றீசல்போல் மலிந்து காணப்படும் என். ஜி. ஓக்கள் போன்ற ‘இயேசுவுக்காக வாலிபர்கள்’ மற்றும் அதுபோன்ற கிறிஸ்தவ நிறுவனங்கள் எண்பதுகளிலேயே திருச்சபைக்கு பேராபத்தாக இருந்து வாலிபர்களை வளைத்திழுத்துப் பயன்படுத்திக்கொள்ளுகிற போக்கைக் கவனித்திருக்கிறேன். எந்தெந்த திருச்சபை அமைப்பு தங்களுக்குப் பணத்தைக்கொடுத்து ஆதரிக்கின்றனவோ, தங்களைப் பயன்படுத்திக்கொள்ளுகின்றனவோ அவற்றில் இணைந்து ஆராதனை செய்யும்படி இந்த வாலிபர்களை இந்த நிறுவனங்கள் வற்புறுத்துகின்றன. தங்களுடைய சொந்த நோக்கங்களுக்காக சபைகளைப் பயன்படுத்திக்கொள்ளுவதே இந்த நிறுவனங்களின் பொது நோக்கம். இவை இன்றும் சபைக்கு ஆபத்தானவைகளாகவே இருந்துவருகின்றன. இவை ஒருபுறமிருக்க, தனிமனிதனொருவன் தான் ஊழிய அழைப்பைப் பெற்றிருக்கிறேன் என்று தீர்மானித்து, தன்னைப் பாஸ்டராகத் தானே அறிவித்து, சுவிசேஷத்தைப் பத்துப்பேருக்கு சொல்லி எந்த சபைத்தொடர்பும் இல்லாமல் ஒரு சிறுகூட்டத்தை சேர்த்து எந்தவித சபை அமைப்பு, முறையான அங்கத்துவம், சபை சட்டவிதிகள், விசுவாச அறிக்கை என்று ஒன்றுமேயில்லாமல் சபை என்ற பெயரில் அதை நடத்திவருவதே தமிழினம் முழுவதிலும் பரந்து பரவிக் காணப்படுகின்ற கிறிஸ்தவ ஊழியமாக இன்றும் தொடருகின்றது. இதற்கு வெளியில் இருப்பவை வேதத்திற்கு சமாதி கட்டிவிட்டு பாரம்பரியத்திற்கு மகுடி ஊதிக்கொண்டிருக்கும் பாரம்பரிய திருச்சபைகள்.
பக்திவிருத்தியோ, வேத உணர்வோ, வேத வைராக்கியமோ இல்லாத நம்மினத்து மோசமான கிறிஸ்தவ சூழ்நிலையில் சுவிசேஷத்தை மட்டும் சொல்லுவதோடு நின்றுவிட முடியாது. சுவிசேஷத்தைச் சொல்லி ஒருவன் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவனைத் தொடர்ந்து என்ன செய்வது? விசுவாசி, விசுவாசத்தில் நிலைத்திருந்து கிறிஸ்து கட்டளையிட்டுப் போதித்திருக்கும் கடமைகளை வாழ்க்கையில் பின்பற்றி வளரத்தானே சபை நிறுவியிருக்கிறார். சுவிசேஷ ஊழியங்கள் அனைத்தின் இறுதி இலக்காக சபை இருக்கவேண்டுமே. திருச்சபையை மனதில் கொண்டு செய்யப்படாத சுவிசேஷப்பணி கிறிஸ்துவை ஒருநாளும் மகிமைப்படுத்த முடியாது. மத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் கிறிஸ்து சுவிசேஷத்தை மட்டும் சொல்லுங்கள் என்று அப்போஸ்தலர்களை அனுப்பிவைக்கவில்லை; அவர்கள் சபையை நிறுவவேண்டும் என்பதே அந்தக் கட்டளையின் நோக்கமாக இருந்தது. கால சூழ்நிலை வசதியாக இல்லை என்பதற்காக வேதம் வலியுறுத்திப் போதிக்கும் திருச்சபையின் அவசியத்தைப் பற்றி நாம் பேசாமலும், எழுதாமலும், பிரசங்கிக்காமலும் இருக்கமுடியாது. கிறிஸ்து நேசிக்கும் திருச்சபைக்குக் கட்டுப்பட்டு அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து ஒருவன் வாழவேண்டுமென்பதற்காகத்தான் ஒரு பாவிக்கு நாம் சுவிசேஷத்தை சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த நோக்கத்தைக் கொண்டிருக்காத சுவிசேஷம் எத்தகைய சுவிசேஷமாக இருக்கும்? திருச்சபையில் இருந்து வாழுவதற்குரிய தகுதிகளைக் கொடுக்காத மனந்திரும்புதல் எப்படி மெய்யான மனந்திரும்புதலாக இருக்க முடியும்? கிறிஸ்துவை நேசிக்கின்ற ஒருவனுக்கு திருச்சபையை நேசித்து அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழமுடியவில்லை என்றால் அவனுடைய நேசம் வெறும் சுயநலமும், மாய்மாலமும் மட்டுமே. ஒரு பெண்ணை விரும்புகிறேன், அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறேன் என்கிற ஒருவன் கணவனாக அந்தப் பெண்ணோடு குடும்பம் நடத்தத் தயாரில்லை என்றால் ஒத்துக்கொள்ளுவீர்களா?
சபையை நேசிக்காத, அதற்கு மதிப்புக்கொடுக்காத ஒருவனைத் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்று வைராக்கியத்தோடு இருபது வருடங்களுக்கு முன் பேசியிருக்கிறேன். அது வெறும் வார்த்தை ஜாலமல்ல; ஆணவ வார்த்தைகளும் அல்ல; மற்றவர்கள் மேல் அன்பில்லாததனாலும் சொல்லப்பட்டவையல்ல. திருச்சபையைப் பற்றி நம்மவர்கள் சிந்திக்கவேண்டும், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு தாங்கள் நேசிப்பதாகக் கூறும் கிறிஸ்துவின் அன்பு மனைவியை அலட்சியப்படுத்தி, அவளை ஒருபொருட்டாகக்கூட எண்ணாமல் வாழ்கிறார்களே என்ற ஆதங்கத்தாலும், வைராக்கியத்தாலும் சொல்லப்பட்ட வார்த்தைகள். இன்று அந்த வார்த்தைகளை நான் அடிக்கடி பயன்படுத்தாவிட்டாலும் சபை பற்றிய என் வைராக்கியம் அன்றுபோல் இன்றும் அப்படியேதான் இருக்கிறது. சபையும், சபை அமைப்பும், சபை அங்கத்தவமும் இன்று தவிர்க்கமுடியாத தேவைகளாக இருக்கின்றன. கிறிஸ்து மீண்டும் வரப்போவது தன்னுடைய சபைக்காக. அந்த சபைக்கு ஒப்புக்கொடுத்து வாழாத ஒருவன் அவருடைய வருகையை எப்படி எதிர்பார்த்து வாழமுடியும்?
Bro in Christ, Thank you for the news. Vivek.S
LikeLike