சபை ஒழுங்கு; திருத்தும் ஆத்தும கவனிப்பு – உன் சகோதரன் எங்கே? – ஜோய் செல்வதாசன், கிருபை சுவிசேஷ சபை வெளியீடு, ஜேர்மனி
திருச்சபையில் ஒழுங்குக் கட்டுப்பாடு (Church Discipline) இருக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்கமுடியாதபடி புதிய ஏற்பாடு அதுபற்றி பல இடங்களில் விளக்குகிறது. ஆனால், உலக சுகத்திற்கு ஆசைப்பட்டும், சுயநலத்தாலும் போதகர்கள் இன்று அதுபற்றி கவலைப்படாமல் இருக்கிறவர்கள் இருக்கட்டும், போகிறவர்கள் போகட்டும் என்ற மனப்பாங்கோடு ஊழியம் செய்து வருகிறார்கள். சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றி விளக்கும் நூல்களைத் தமிழில் காண்பதென்பது அரிது. திருமறைத்தீபத்தில் அதுபற்றி அதிகம் நான் எழுதிவந்திருக்கிறேன். ஜேர்மனியில் இருந்து பணிபுரிந்து வரும் ஜோய் செல்வதாசன் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றித் தான் எழுதியுள்ள நூலை எனக்கு அனுப்பிவைத்து அதுபற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதும்படிக் கேட்டிருந்தார். அவருடைய முயற்சியை நான் பாராட்டுகிறேன். ஒழுங்குக் கட்டுப்பாட்டிற்கான அவசியத்தை சுட்டி, அதை அநேகர் செய்யாமலிருப்பதற்கான காரணங்களை விளக்கி, எது ஒழுங்குக் கட்டுப்பாடு, எது ஒழுங்குக் கட்டுபாடு இல்லை என்பவற்றை முன்வைத்து, ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் திருச்சபை தவிர்க்க முடியாது என்று உணர்த்துவது ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது என்பதை நூல் உணர்த்துகிறது.
இது பற்றிய ஒரு முக்கிய அம்சத்தை ஆசிரியர் தொட்டிருந்திருக்கலாம். நம்முடைய இனத்தில் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு இல்லாமலிருப்பதற்கு முக்கிய காரணம், என்னுடைய அனுபவத்தைப் பொறுத்தவரையில், திருச்சபை வேத இலக்கணங்களோடு அமைக்கப்படாமல் இருப்பதுதான். இதுபற்றி சமீபத்தில்கூட நம்முடைய வலைதளத்திலும், திருமறைத்தீபத்திலும் எழுதியிருக்கிறேன். திருச்சபையில் ஒழுங்குக்கட்டுப்பாட்டை நடைமுறையில் வைத்திருக்கவேண்டிய பணி போதகர்களுடையது (மூப்பர்கள்). முழுச்சபைக்கும் அதில் பங்கிருந்தாலும் சபை நடத்தும் போதகர்களே அதற்கான நடவடிக்கைகளை வேதபூர்வமாக எடுக்கவேண்டும். போதகர்கள் அதை முறையாகச் செய்வதற்கு உள்ளூர் திருச்சபை மறுபிறப்படைந்தவர்களை மட்டும் கொண்ட அங்கத்துவ அமைப்பையும், சபை சட்ட அமைப்பையும், விசுவாச அறிக்கையையும் கொண்டு அமைய வேண்டும். திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு சபையாருக்கு மட்டுமே உரியது என்று நூலாசிரியர் ஓரிடத்தில் விளக்கியிருக்கிறார். அது மிகவும் சரியானது. ஆனால், உள்ளூர் சபையின் கோட்பாடுகளை அறிந்து உணர்ந்து அதற்குத் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அங்கத்தவர்களாக இருக்கக்கூடியவர்களையும், அவர்களைப் போஷித்து வளர்க்கக்கூடிய வேததகுதிகளைக் கொண்டிருந்து, ஒழுங்குக் கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர்ந்திருக்கும் ஆத்துமதாகமுள்ள போதகர்களையும் உள்ளூர்சபை கொண்டிராதபோது ஒழுங்குக் கட்டுப்பாடு நடைமுறையில் எப்படி இருக்க முடியும்? சபை என்ற பெயரில் ஏனோதானோவென்று ஊழியங்கள் அமைந்திருப்பதாலேயே ஆத்துமாக்களுக்கு ஒழுங்குக் கட்டுப்பாட்டைப் பற்றிய உணர்வே இல்லை. திருச்சபை வேதபூர்வமாக அதற்குரிய இலக்கணங்களைக் கொண்டு அமைந்து இயங்காதபோது ஒழுங்குக் கட்டுப்பாட்டை முறையாகக் கையாளுவதற்கு ஒரு வழியும் இல்லை. பிரசங்கம், திருநியமங்கள், ஒழுங்குக் கட்டுப்பாடு ஆகிய மூன்றை மட்டுமே திருச்சபையின் தவிர்க்க முடியாத அடிப்படை அடையாளங்களாக வலியுறுத்தி எழுதியிருக்கிறார் சீர்திருத்தவாதியான ஜோன் கல்வின். கல்வின் அளவுக்கு திருச்சபைபற்றி விளக்கி எழுதியிருப்பவர்கள் இல்லை எனலாம். சீர்திருத்தவாத கிறிஸ்தவ பெரியோர்கள் மற்றும் பியூரிட்டன் தலைவர்கள் அனைவரும் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தி எழுதியிருக்கிறார்கள். அது இல்லாமல், திருச்சபை திருச்சபையாக இருக்கமுடியாது.
ஆசிரியர் நூலில் ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றிய நல்ல பல விஷயங்களை விளக்கியிருக்கிறார். நூலில் எனக்குக் குறைபாடாகத் தெரியும் சில அம்சங்களை அடுத்த பதிப்பில் திருத்திவெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. இவற்றை நூலின் பயன்பாடு கருதியே தந்திருக்கிறேன்.
ஆசிரியரின் எழுத்து நடை ஸ்ரீ லங்கா தமிழில் இருக்கிறது. அதில் தவறில்லைதான். இருந்தாலும் கடினமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்த்து வாசகர்கள் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான தமிழில் எழுதினால் அது பலருக்கும் பயனுள்ளதாக அமையும். சில இடங்களில் தலைப்புகள் தெளிவானதாக, விளங்கிக்கொள்ளும்படியாக இல்லை. நல்ல விஷயமொன்றை விளக்கும் நூல் இந்தக் குறைபாட்டால் வாசகர்களுக்கு ஆர்வக்குறைவை ஏற்படுத்தும்படியாக இருந்துவிடக்கூடாது இல்லையா?
அடிக்குறிப்புகளும், மேற்கோள்களும் ஆய்வுநூல்களுக்கு மிகவும் அவசியமானவைதான். அதிகம் வாசிப்பதை வாழ்க்கையில் வழக்கத்தில் கொண்டிராத நம்மினத்துக்கேற்றவகையில் அடிக்குறிப்புகளைத் தவிர்த்து பொப்யூலர் பாணியில் எழுதி நூலை வெளியிட்டால் நன்மை பயக்கும்.
ஒழுங்குக் கட்டுப்பாட்டில் இறுதி நடவடிக்கையே ஒருவரை சபை நீக்கம் செய்வது. அதுபற்றி ஆசிரியர் அதிகமாக விளக்கியிருக்கிறார். இருந்தபோதும், ஒருவரை சபை நீக்கம் செய்வதற்கு முன்னால் பெரும் ஆத்தும பாரத்தோடு பின்பற்றியிருக்கவேண்டிய, மத்தேயு 18ல் விளக்கப்பட்டிருக்கும் ஒழுங்குக்கட்டுப்பாட்டிற்கான ஆரம்ப நடவடிக்கைகளைப் படிமுறையாக உதாரணங்களோடு ஏனைய வேதப்பகுதிகளைப் பயன்படுத்தி விளக்கியிருந்தால் இந்நூல் பலனுள்ளதாக இருந்திருக்கும்.
இந்நூல் விளக்குகின்ற விஷயம் இன்று மிகவும் அவசியமான, நம்மை சிந்திக்க வைக்கவேண்டிய திருச்சபை பற்றிய வேதசத்தியம். சமீபத்தில் நம்மினத்து சபையொன்றில் அதில் தொடர்ச்சியாகப் பிரசங்கித்து வழிநடத்திக்கொண்டிருந்த ஒருவரை, அவர் தன் மனதில்பட்ட உண்மையொன்றை வெளிப்படையாகப் பேசினார் என்பதற்காகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தி ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறார்கள் என்று ஒருவர் சொல்லக் கேள்விப்பட்டேன். இது எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கவில்லை. திருச்சபை ஊழியம் நம்மினத்தில் பிரேக் இல்லாத டிரெயின் ஒடுவதுபோல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய மிகத்தவறான, பாரதூரமான நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கத்தான் செய்யும். ஒரு சிலரின் சுயநல நோக்கங்களுக்காகவே பெரும்பாலும் எல்லா ஊழியங்களும் நடந்துவரும் நிலையில் நியாயமான வேத நடவடிக்கைகளை இங்கு எப்படி எதிர்பார்க்க முடியும்?
திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு ஆத்துமாக்களுக்குரிய ஆவிக்குரிய பாதுகாப்பு. அந்த நோக்கத்திலேயே கிறிஸ்து தன் சபைக்கு அதைத் தந்திருக்கிறார். அந்தப் பாதுகாப்பை ஆத்துமாக்களுக்குத் தராமல் திருச்சபை என்ற பெயரில் எதைச்செய்து என்ன பயன்? வீட்டில் வளரும் பிள்ளைகளுக்குக்கூட பெற்றோர் பாதுகாப்பு வளையம் போடுகிறார்கள். தேசத்து அரசுகளும் மக்களின் பாதுகாப்புக்கு சட்டங்களை வகுத்து இயங்குகின்றன. மிருகங்களும், பறவைகளுங்கூட தங்களின் பாதுகாப்பிற்காக சில வரையறைகளை வகுத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றன. இதெல்லாவற்றையும்விட உயர்ந்த ஆத்துமாக்களின் ஆத்துமப் பாதுகாப்புக்கு கர்த்தரே தன் வேதத்தில் வகுத்துத் தந்திருக்கும் திருச்சபை பற்றிய போதனைகளையும், திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் உதாசீனம் செய்து வருகிறவர்களை எந்தப் பெயரில் அழைப்பது? இந்நூல் ஒரு நல்ல ஆரம்ப முயற்சி. இதில் அவசியமான மாற்றங்களைச்செய்து எளிமையான தமிழில் வெளியிட்டால் பலருக்கும் உதவும்.
TODAY’S NEED SIR
LikeLike