கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூழல் – 2

(பக்தி வைராக்கியம் – 4)

– டேவிட் மெரெக் –

[பக்தி வைராக்கியம் என்ற தலைப்பில் வந்துகொண்டிருக்கும் இந்தத் தொடர், போதகர்களுக்காக நடத்தப்பட்ட இறையியல் போதனை வகுப்புகளில் போதகர் டேவிட் மெரெக்கினால் கொடுக்கப்பட்டது. இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் M. ஜேம்ஸ்.] 

வைராக்கியத்தைப் பற்றி ஒரு கிறிஸ்தவ எழுத்தாளர் சொல்லிய சில வரிகளைக் குறிப்பிட்டு இந்த ஆக்கத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன்.

வைராக்கியமான கிறிஸ்தவன் என்பவன் தேவபக்திக்குரிய காரியங்களில் அக்கறையுடனும்,  ஆர்வத்துடனும் அதை அடைய வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியும் கொண்டவனாக இருப்பான். அவனுடைய நடவடிக்கையிலும் வாழ்க்கையிலும் ஒரு வேகம் இருப்பதைப் பார்க்கலாம். அவன் ஒரு மந்தமான, தளர்வான கிறிஸ்தவன் அல்ல. அவன் விழிப்புடன் கூடிய மனதோடு முன்னேறுகிறவனாக இருப்பவன். அவன் தன் கொள்கைகளில் உறுதியாக நிற்கிறவன். எந்தவித பயமுமின்றி கடவுளுக்காகவும் சத்தியத்திற்காகவும் போராடுகிறவன். மதரீதியான காரியங்களுக்கு வலிமையாக கட்டுப்பட்டவன். அவன் கிறிஸ்துவின் ராஜ்யத்திற்காக தொடர்ந்து செயல்படுகிறவனாகவும் முன்னோக்கி செல்லுவதில் ஆர்வம் கொண்டவனாகவும் இருப்பான். அவனுடைய இந்த ஆர்வம் வெற்றியை அவனுக்கு சொந்தமாக்கும்.

இந்த மேற்கோள் வரிகள் குறைந்தது இரண்டு விஷயங்களை நமக்கு அடிக்கோடிட்டு காட்டுகிறது. முதலாவது, நம்முடைய சுவிசேஷ பணிகளில் நமக்கு வேதபூர்வமான வெற்றி கிடைக்கவேண்டுமானால், நாம் பக்தியுள்ள, கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியமானது. கடவுள் தம்முடைய இரக்கத்தினால், சில வேளைகளில், பழுதடைந்த கருவிகளையும் பயன்படுத்தி மனிதர்களுக்கு நன்மை செய்தும், தம்முடைய பெயருக்கு மகிமையும் கொண்டுவரக் கூடியவராக இருக்கிறார் என்பது உண்மைதான். எனினும், பக்தி வைராக்கியமாகிய கிருபை இல்லாமல், சுவிசேஷ வெற்றியை எதிர்பார்ப்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை.

ஆனால் இந்த மேற்கோள் வரிகள் வேறு சிலவற்றையும் சுட்டுகின்றன. பக்தியுள்ள, கிறிஸ்தவ ஆர்வம் அல்லது வைராக்கியம் என்பது ஒரு கிறிஸ்தவனின் முழு வாழ்க்கையையும் உள்ளடக்கியது என்பதை இது காட்டுகிறது. இது நம் முழு மனதோடும், கொள்கைகளோடும், ஆத்துமாவோடும் கொண்டிருக்கவேண்டியது. இது கிறிஸ்துவையும் அவருடைய ராஜ்யத்தையும் நோக்கமாகக் கொண்டு தன்னை ஜீவனுள்ளதும் பரிசுத்தமானதுமான பலியாக ஒப்புக்கொடுத்த ஒருவனில் வெளிப்படும் கனியாகும்.

கடந்த இதழில் வந்த ஆக்கத்தில், நாம் ரோமர் 12 வது அதிகாரத்தின் ஆரம்பத்திலிருந்து நமக்காக வடிவமைத்துத் தந்துள்ள ஆரோக்கியமான, பக்தியுள்ள கிறிஸ்தவனைப் பற்றிய வரைபடத்தைப் பார்த்தோம். அந்த வரைபடத்தில் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளவைகளுக்கும் பக்தி வைராக்கியத்திலிருக்கும் அம்சங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பை எடுத்துக்காட்டுவதுதான் இந்த ஆக்கத்தின் மைய நோக்கமாகும். இவைகளைத் தன்னில் கொண்டிராத ஒருவன் பக்தி வைராக்கியத்தைத் தன்னில் கொண்டிருக்க முடியாது என்பதையே இது காட்டுகிறது. இவைகள் ஒருவனில் காணப்படுகின்றபோது அங்கே பக்தி வைராக்கியமும், வேறுவிதமாக சொல்லுவதானால் கிறிஸ்தவ வைராக்கியமும், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அம்சங்களும் பிரிக்க முடியாதபடி இணைந்திருக்கும்.

கடந்த ஆக்கத்தில், நாம் குறிப்பாக, வைராக்கியம் தொடர்பான முக்கிய வசனமாகிய ரோமர் 12:11க்கு முன் இருக்கிற வசனங்களில் நம்முடைய கவனத்தை செலுத்தினோம். ரோமர் 12:1-10 வசனங்களைப் படித்தோம். ஆரோக்கியமான கிறிஸ்தவனாக, பக்தி வைராக்கியத்தின் கனிகளை வெளிப்படுத்துகிறவனாக ஒருவன் இருந்தால், அவன்:

  • கடவுளின் இரக்கங்களால் ஊக்குவிக்கப்பட்டவன்
  • ஜீவனுள்ள, பரிசுத்த பலியாக தன்னையே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவன்
  • மனம் புதிதாகிறதினாலே, சிந்தனையில் மறுரூபமாகிறவன்
  • தன்னையும் தன் தாலந்துகளையும் ஒழுங்காக மதிப்பீடு செய்கிறவன்
  • கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கங்களாக அவரது சரீரத்தோடு தனக்கிருக்கும் உறவை அறிந்திருப்பவன்
  • கடவுளின் உக்கிராணக்காரனாக தனது தாலந்துகளை சரீரத்தின் நலனுக்காக பயன்படுத்துகிறவன்
  • விவேகத்தோடும் தாழ்மையோடும் நம்முடைய சகோதர சகோதரிகளிடம் மெய்யான அன்பை காட்டுகிறவன் என்று படித்தோம்

இப்போது இந்த ஆக்கத்தில், பவுல் தொடர்ந்து நம் கண்கள் காணும்படியாக ஆரோக்கியமான பக்தியுள்ள கிறிஸ்தவனின் ஓவியத்தைத் தீட்டுகிறார். அவனிடத்தில் ரோமர் 12:11ல் குறிப்பிட்டுள்ள கிறிஸ்தவ வைராக்கியத்தைப் பார்க்கிறோம். சென்ற ஆக்கத்தில் நாம் செய்தது போல்,  தேவபக்தியுள்ள மனிதனின் மேலதிக தன்மைகளை ஓவியமாகத் தீட்டுகிறபோது, இந்த தன்மைகள் யாவும் கிறிஸ்தவ வைராக்கியத்தோடு எப்படி ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கப் போகிறோம். இப்போது, நாம் மீண்டும் அந்த வேதப்பகுதியை அதைத் தொடர்ந்து வரும் சில வசனங்களோடு சேர்த்து வாசிப்போம், ரோமர் 12:9-16.

12-16வரையுள்ள வசனங்களில், பவுல் கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டிருப்பதற்கு பிரிக்க முடியாத ஒரு ஆரோக்கியமான பக்தியுள்ள கிறிஸ்தவ வாழ்க்கையில் இருக்கும் மேலும் ஐந்து அம்சங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறார். முதல் மூன்றை அதிவேகமாக 12வது வசனத்தில் நேரடியாகக் கொடுக்கிறார்.

1. நம்பிக்கையில் சந்தோஷமாயிருத்தல். என்ன நம்பிக்கை? இது பொய்யுரையாத உண்மையுள்ள ஆண்டவர் தருவதாக வாக்களித்துள்ள எதிர்கால ஆசீர்வாதங்களை மகிழ்ச்சியோடு எதிர்நோக்குவதாகும்.

இத்தகைய எதிர்பார்ப்பு இல்லாவிட்டால், பக்தி வைராக்கியத்திற்கு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஆண்டவருடைய பணிகைளைச் செய்வது நமக்குக் கடினமானதாகத் தெரிகிறபோது, நாம் செய்வதெல்லாம் பயனற்றதும் வீணானதும் என்ற முடிவுக்கு நாம் வருவோமானால், நம்முடைய இருதயம் தொடர்ந்து அந்த வேலைகளைச் செய்வதில் முன்னோக்கிப் போகாது. நாம் எதையும் அடையப் போவதில்லை, நாமும் நாம் ஊழியம் செய்கிறவர்களும் மரித்து, கல்லறைக்குப் போவதோடு நம்முடைய வாழ்க்கை முடிவடைந்துவிடப் போகிறது என்றால் நம்முடைய இருதயம் செய்யவேண்டிய பணிகளைத் தொடர்ந்து செய்யாது. ஒருபோதும் திருப்தியடையாதவரும், முகஞ்சுழிக்கிறவரும், நியாயத்தீர்ப்பின்போது நம்மைத் தண்டிக்கிறவருமாகிய கடவுளாகவே நாம் கர்த்தரைக் கண்டால், நம்முடைய இருதயம் தொடர்ந்து தன் வேலையைச் செய்வதில் முன்னோக்கிப் போகாது. இத்தகைய சிந்தனைகள் நரக குழியில் இருக்கவேண்டியவை.

கர்த்தருக்குள்ளான நம்முடைய உழைப்பு ஒருபோதும் வீண் போகாது. ஓய்வுக்கும் உயிர்த்தெழுதலுக்குமான நாள் வந்துகொண்டிருக்கிறது. கண்ணீரில்லாத, நோயில்லாத, துன்பமில்லாத, பாவமும் மரணமும் இல்லாத புதிய வானமும் புதிய பூமியும் உருவாக்கப்படும். ஒரு நாள் நம்முடைய இரட்சகர், சந்தோஷத்தோடு தம்முடைய உண்மையுள்ள பரிசுத்தவான்களைப் பார்த்து இப்படிச் சொல்லுவார், “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே”. உண்மையில், நம்மை சந்தோஷத்தோடு துள்ளிக்குதிக்கச் செய்ய இந்த ஒரு எதிர்பார்ப்பே போதுமானது.  இத்தகைய எதிர்பார்ப்பே நிச்சயமாக நம்முடைய பக்திவைராக்கியத்தைக் கொழுந்துவிட்டு எரியச்செய்யும். கடவுளுடைய கிருபையினால், நம்முடைய வைராக்கியம் எப்படி உண்மையோடு வேலை செய்கிறது என்பதைக் கவனியுங்கள். அதுமட்டுமல்லாமல், இது நம்முடைய எதிர்பார்ப்பிற்கான ஆதாரத்தையும் தருகிறது (2 தெசலோனிக்கேயர் 1:3-5). உண்மையும் வைராக்கியமுமுள்ள ஊழியனே, தன் எஜமானுடைய சந்தோஷத்தில் பிரவேசிக்கிறான். இவை இரண்டும் ஒன்றறக் கலந்திருக்கின்றன.

2. உபத்திரவத்தில் பொறுமையாயிருத்தல் (12:12). “பொறுமையாயிருத்தல்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை இங்கே உறுதியாக நிலைத்திருத்தல் அல்லது விடாமுயற்சியைக் காட்டுவதாகும். இயேசு மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார், “இறுதிவரை நிலைத்திருக்கிறவனே இரட்சிக்கப்படுவான்” (மத்தேயு 24:13, 10:22) என்று. உண்மையில் நீடித்திருத்தல் அல்லது தொடர்ந்து நிலைத்திருத்தல் அல்லது விடாமுயற்சியுடன் இருத்தல் என்பதைப் பற்றியெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் இக்கட்டான நேரங்களில் மட்டுமே நாம் சிந்திப்போம். அதனால்தான் உபத்திரவங்களை எதிர்நோக்குகிற சந்தர்ப்பத்தில் பொறுமையாயிருத்தலைப் பற்றி பவுல் இங்கு விளக்குகிறார். இத்தகைய உபத்திரவங்கள் ஏற்படுகிறபோது இருக்கவேண்டிய இத்தகைய நிலைத்திருத்தலைப் பற்றி வேதத்தின் ஏனைய பகுதிகளிலும் காண்கிறோம். கிறிஸ்தவராக இருப்பதினாலும் சுவிசேஷத்திற்காக உழைப்பதினாலும் இத்தகைய உபத்திரவங்கள் மற்றவர்கள் மூலமாக நமக்கு நேரிடலாம். உடல்நலக் குறைவும் அதில் உள்ளடங்கும். பாவத்திற்கான கடுமையான சோதனையும் அதில் அடங்கும்.

“நிலைத்திருத்தல்” அல்லது “விடாமுயற்சி” என்பதை நம்முடைய வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலை வருகிறபோது வைராக்கியத்தோடு நாம் இணைத்துப் பார்ப்பதில்லை. சில குறிப்பிட்ட குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு ஏற்படும் சடுதியான ஊக்க சக்தியையே நாம் வைராக்கியத்தைப் பற்றிப் பேசுகிறபோது சிந்திப்போம். (இத்தகைய சொற்பகாலம் மட்டுமே இருக்கும் அதிக வலிமையான பக்தி வைராக்கியத்தைப் பற்றியும் வேதம் விளக்குகிறது).  எனினும், தொடர்ந்து அனலோடிருக்கிற வைராக்கியத்தை கடவுளுடைய வார்த்தை சுட்டுகிறது. ரோமர் 12:11லுள்ள சொற்றொடர்களான “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருத்தல்” மற்றும் “கர்த்தருக்கு ஊழியம் செய்தல்” என்பவைகள் நம்முடைய ஆத்துமாவில் தொடர்ச்சியான வெடிப்பை ஏற்படுத்தும் அனலுள்ள ஆவியைச் சுட்டுகின்றன. வேறுவிதத்தில் சொல்லுவதானால், பக்தி வைராக்கியம் எப்போதும் விடாமுயற்சியுடன் இருக்கும். அது பாவகரமானதாக பொறுமையிழந்ததாக இருக்காது.

நம்முடைய வாழ்க்கைப் பாதை மிகவும் கடினமானதாக இருக்கிறபோதும், விடாமுயற்சியும் பொறுமையும் கொண்ட வைராக்கியமே நம்மை நிலைத்திருக்கச் செய்யும். நம்முடைய கிருபையுள்ள இரட்சகருக்கு நாம் விசுவாசமாக இருக்கிறபோது, மற்றவர்கள் நம்மைத் தாக்கிக் கேலி செய்கிறபோது, தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு பக்தி வைராக்கியம் நமக்கு அவசியமில்லையா? அத்தகைய உபத்திரவங்களுக்கு மத்தியில் நிலைத்திருப்பதற்கும், பக்தி வைராக்கியத்திற்கும் மிகவும் நெருக்கமான தொடர்பிருக்கிறது.

3. ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்கும் (12:12). கடந்த இதழில் வந்த ஆக்கத்தில் நாம் பார்த்ததுபோல், நமக்கும் நம்மோடு இருப்பவர்களுக்குமான பக்தி வைராக்கியத்தை நாம் ஜெபத்தின் மூலமாகவே நாட வேண்டும். பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்தே வருவதால், அது அதிகரிப்பதற்கும் நீடித்திருப்பதற்கும் கடவுளையே நாம் நாடுகிறவர்களாக இருக்க வேண்டும். எனினும், வேதம் தெளிவாக மேலும் ஒரு உண்மையைப் போதிக்கிறது. என்னவென்றால், பக்தி வைராக்கியத்தின் ஒரு கனியே ஜெபம். நாம் ஜெபிக்க வேண்டியபடி ஜெபிக்க நம்மில் பக்தி வைராக்கியம் இருக்க வேண்டும். ஜெபத்தில் உறுதியாய் தரித்திருக்க நம்மில் பக்தி வைராக்கியம் இருக்க வேண்டும்.

4. நடைமுறை வழிகளில் அன்புகாட்டுதல் (12:13-15). முதலாவது, அன்பைக் குறிப்பிடும் பிரத்யேகமான வார்த்தை இந்த மூன்று வசனங்களிலும் இல்லை என்பதைக் கவனியுங்கள். எனினும், இந்த ஒவ்வொரு வசனமும் நடைமுறையில் அன்பை எப்படி வெளிப்படுத்துவது என்பதையே விவரிக்கின்றது. ஆகவேதான் இந்த மூன்று வசனங்களையும் நான் ஒன்றாக இணைத்திருக்கிறேன். இவைகளிலுள்ள அன்பின் ஒவ்வொரு நடைமுறை அம்சத்தையும் பார்க்கிறபோது, பக்தி வைராக்கியத்தின் கனிகள் வெளிப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம். இருதயத்திலுள்ள இத்தகைய அன்பு நம்மில் வைராக்கியத்தைத் தூண்டிவிடுகிறதாக மட்டும் இல்லை, பக்தி வைராக்கியத்தின் செயல்பாடுகளே இத்தகைய அன்பின் நடைமுறை வெளிப்பாடுகள். இவை இரண்டும் ஒன்றற இணைந்திருக்கின்றன.

முதலாவதாக, நடைமுறை அன்பு: மற்றவர்களின் நடைமுறைத் தேவைகளை, குறிப்பாக விசுவாசிகளின் தேவைகளில் கவனம் காட்டுதல் (12:13). 9-10 வசனங்களில் பவுல் அறிமுகப்படுத்திய போதனைகளை மேலும் தொடர்ந்து விரிவுபடுத்திக் கொண்டு போகிறார். என்னுடைய சொந்தத் தேவைகளில் மட்டும் பக்தி வைராக்கியம் முழுமை பெற்றுவிடுவதில்லை. பக்தி வைராக்கியம் என்பது கடவுளுடைய மக்களின்மீது அக்கறையும் இரக்கமும் காட்டுவதாகும். பக்தி வைராக்கியம் என்பது உதவியை நாடுகின்ற ஒரு விசுவாசியைப் பார்க்கிறபோது, அவனுக்கு உதவி செய்யும் (1 யோவான் 3:17-18). (எனினும், இத்தகைய அன்புள்ள பக்தி வைராக்கியமென்பது ஒருவருக்கு உண்மையாகவே என்ன தேவை என்பதை ஞானமாகப் பகுத்தறிந்து அதைச் செய்கிறதாக இருக்கும் (2 தெசலோனிக்கேயர் 3:6-15, பிலிப்பியர் 1:9). பக்தி வைராக்கியம் என்பது நம்முடைய சொந்த உடமைகளையும் உணவையும், தேவையோடிருக்கும் ஏனையோரோடு பகிர்ந்து கொள்வதாகும். இத்தகைய பக்தி வைராக்கியம் நம்முடைய சொந்த வீட்டை கடவுளுடைய மக்கள் தேவையோடிருக்கிறபோது அவர்களுக்கான உணவுக்காகவும் தங்குவதற்காகவும் திறந்துவைக்கும். உண்மையில், பக்தி வைராக்கியம் என்பது ஆர்வத்தோடு ஓடி இத்தகைய உபசரிப்பை செய்வதாக இருக்கும்.

இரண்டாவதாக, இந்த நடைமுறை அன்பு: என்னை எதிரியாகக் கணிப்பவர்களின் ஆசீர்வாதத்தையும் நன்மையையும் நோக்குவதாக இருக்கும் (12:14). இயேசு கூட நம் எதிரிகளிடம் அன்புகாட்டும்படி நமக்குக் கட்டளையிட்டுள்ளதை நினைவுகூருங்கள். நம்மை சபிக்கிறவர்களை அவர் ஆசீர்வதிக்கும்படி சொன்னார். நம்மை வெறுக்கிறவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும். நமக்குக் கேடு செய்து உபத்திரவப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் (மத்தேயு 5:43-48). கேடானவர்களுக்கும் இரக்கம் காட்டுகிற பரலோக பிதாவைப்போல் இதைச் செய்யும்படி இயேசு நம்மை வலியுறுத்துகிறார். நம்முடைய எதிரிகளுக்கு இந்த விதத்தில் எப்படி பதிலளிக்க முடியும்? ஆவியில் அனலுள்ளதும், கர்த்தருக்கு ஊழியம் செய்கிறதுமான இருதயம் நம்மில் இருக்கிறபோதே இந்தவிதமான வகையில் நாம் அவர்களுக்கு பதிலளிக்க முடியும். பக்தி வைராக்கியம் கொண்ட இருதயத்திலிருந்தே இத்தகைய அன்பின் செயல்முறை வெளிப்படும்.

மூன்றாவதாக, நடைமுறை அன்பு: கடவுளுடைய மக்களுடன் நெருக்கத்தோடும் மனஉருக்கத்தோடும் சேர்ந்திருக்க விருப்பங் கொண்டதாயிருக்கும் (12:15). அன்புள்ள பக்தி வைராக்கியம் அதன் உணர்வுகளுக்கு ஏற்றளவில் விலை கொடுக்கத் தயாராக இருக்கிறது. நம்முடைய சொந்தத் தேவைகளில் அக்கறைக்காட்டுவதிலும் உணர்வை வெளிப்படுத்துவதுமாகிய ஒரு குறுகிய வட்டத்திலிருந்து அது நம்மை வெளிவரச் செய்கிறது. மற்றவர்களின் வாழ்வில் நுழைந்து அவர்களின் உணர்வுகளுக்கு அக்கறைக்காட்டும்படிச் செய்கிறது. அதன் விளைவாக நான் சந்தோஷப்படுகிறவர்களோடு சேர்ந்து சந்தோஷப்படுவேன். அதேவிதமான ஆசீர்வாதத்தை நான் அனுபவியாமலிருந்தாலும் அப்படி நான் செய்வேன். அதேபோல் அழுகிறவர்களோடு நான் சேர்ந்து அழுவேன். அந்த நேரத்தில் நான் கடவுளின் அருமையான ஆசீர்வாதத்தில் களிகூர்ந்திருந்தாலும் அப்படிச் செய்வேன். கடவுள் கொடுத்த பக்தி வைராக்கியம் மட்டுமே இத்தகைய சுயவெறுப்பின் பதில் நடவடிக்கையை ஒருவரில் ஏற்படுத்த முடியும்.

இந்த மூன்று வழிகளில், பக்தி வைராக்கியம் என்பது நடைமுறையோடு தொடர்புடையதென்றும், சவால்களைத் தன்னில் கொண்டுள்ளது என்பதையும் நாம் பார்த்திருக்கிறோம். இது நம்முடைய இருதயத்தின் இயற்கைத் தன்மைக்கு மாறான அன்பின் வழிமுறையாக இருக்கிறது.

கிறிஸ்தவ வைராக்கியத்தோடு நெருக்கமாக இணைந்திருக்கிற இறுதி அம்சம் ஒன்றைப் பற்றி பவுல் இங்கே குறிப்பிடுகிறார்.

5. பக்தி வைராக்கியம், கிறிஸ்தவர்களான சகோதர சகோதரிகளுடன் நம்மைத் தாழ்மையாக வாழச் செய்யும் (12:16). பவுல் 3வது வசனத்தில் அறிமுகப்படுத்தி பிறகு 10 வது வசனத்தில் மறுபடியும் விளக்கிக் காட்டியதை இங்கே மீண்டும் சுட்டிக்காட்டுகிறார். அதுதான் பெருமைக்கு பதிலாக இருக்க வேண்டிய தாழ்மை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தாழ்மையின் அம்சங்கள் பக்தி வைராக்கியம் கொண்ட இருதயத்தில் இருக்கும். பக்தி வைராக்கியம் என்பது என்னையே நான் உயர்த்திக்கொள்ளுவதல்ல. என்னுடைய மரியாதை மற்றும் என்னுடைய எண்ணங்களில் மட்டும் அக்கறைகொண்டதல்ல. மாறாக, அது தாழ்மையோடு நம்முடைய எல்லா சகோதர சகோதரிகளோடும் இணைந்திருந்து அவர்களின் எண்ணங்களைக் கவனமாகக் கேட்கச் செய்யும். எல்லாரையும் ஒரேவிதமாக நடத்தும். பக்தி வைராக்கியத்தின் தாழ்மை என்பது சில சகோதர சகோதரிகளை மட்டும் மற்றவர்களைவிட சிறப்பானவர்களாக பார்ப்பதையோ நடத்துவதையோ குறிக்கோளாகக் கொண்டிராது. அது தன்னை நல்லவிதமாக காட்டக்கூடியவர்களோடு, அதாவது உலகத்தில் மதிப்புமிக்கவர்களோடு மட்டும் சேர்ந்திருக்கப் பார்க்காது. என்னுடைய எண்ணமே மற்றவர்களுடையதைவிட சிறப்பானது என்ற மனப்பான்மையை அது கொண்டிருக்காது. நான் பேசுவதை மட்டுமே மற்றவர்கள் கேட்க வேண்டும், என் சகோதர சகோதரிகளின் எண்ணங்களை நான் ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை என்ற ஆணவமும் அதில் இருக்காது. பக்தியுள்ள ஒருவனில் கலந்திருக்கிற இத்தகைய விஷயங்களே பக்தியுள்ள தாழ்மையில் இருக்கும். பக்தி வைராக்கியமுள்ள ஒருவனில் எப்போதும் இருக்கிற இந்த அம்சங்களே பக்தியிலுள்ள தாழ்மையாகும்.

இதுவே ஆரோக்கியமான கிறிஸ்தவனில் காணப்படும் அம்சங்களின் சுருக்கமாகும். இவைகளை பக்தி வைராக்கியமுள்ள ஒருவனில் எப்போதும் ஏதாகிலும் ஓரளவில் பார்க்க முடியும். என்னில் பக்தி வைராக்கியம் இருக்கிறதா என்று நான் அறிய வேண்டுமா? அப்படியானால், பவுல் இங்கு விளக்குகிறவைகளை நான் கொண்டிருக்கிறேனா என்று நான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். என்னில் நான் அதிகமான பக்தி வைராக்கியம் கொண்டிருக்க வேண்டுமா? ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பங்கமானதாக என்னில் என்னவெல்லாம் காணப்படுகிறதோ அவற்றை அடையாளம் கண்டு நீக்கவேண்டும்.

ஆரோக்கியமான பக்தியுள்ள கிறிஸ்தவனின் இந்த வரைபடம் கிறிஸ்தவ வைராக்கியத்தைக் கொண்டுள்ளவன் தொடர்ந்து முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த ஆக்கத்தின் இறுதியாக, நான் குறிப்பாக உங்கள் முன்வைக்க விரும்புகிற ஒரு குறிப்பைக் கவனிப்போம்.

பவுல் இங்கு பக்தியுள்ள ஒருவனை வரைபடமாக நம்முன் வைக்கிறபோது இரண்டு முக்கிய கருப்பொருளுக்கு அவர் திரும்பத் திரும்ப வருவதை நீங்கள் கவனித்தீர்களா? 9-10 மற்றும் 13-15 வரையுள்ள வசனங்களில் அவர் மற்றவர்கள் மீது காட்டப்படும் அன்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.  3, 10 மற்றும் 16 வசனங்களில் தாழ்மை என்ற கருப்பொருளையே சுற்றி வருகிறார். அன்பு மற்றும் தாழ்மையைப் பற்றிய வசனங்களுக்கு இடையில் 11வது வசனத்தில் பக்தி வைராக்கியம் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்பு மற்றும் தாழ்மையாகிய கிருபையை வலியுறுத்தி அவைகளை பக்தி வைராக்கியத்தோடு தொடர்புபடுத்தி பவுல் தெளிவாக விளக்குகிறார். பவுல் மட்டும் இப்படியான தொடர்பைச் சுட்டிக்காட்டவில்லை.

பேதுரு அன்பையும் பக்தி வைராக்கியத்தையும் இன்னும் நேரடியாக இணைத்துக் காட்டுகிறார். 1 பேதுரு 1:22 வசனத்தை கவனியுங்கள். பேதுரு இவ்விசுவாசிகளை ஊக்கமாக அன்புகாட்டும்படி வற்புறுத்துகிறார். இதை ஒருமுறை வற்புறுத்துவது போதாதென்று, மறுபடியும் 1 பேதுரு 4:8 வசனத்திலும் சுட்டிக்காட்டுகிறார். பேதுரு இதை மேலும் வலியுறுத்தி சொல்லுகிறார், “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமாக அன்புகாட்டுங்கள்”. ஊக்கமாக என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தை இதுவரை நாம் கவனித்து வந்திருக்கிற புதிய ஏற்பாட்டு வார்த்தையைவிட வித்தியாசமானது. இந்த வார்த்தைக் குடும்பத்திற்கு பின்னுள்ள முக்கியமான விஷயம் “நீட்டுதல்” என்பதாகும். இந்த வார்த்தை ஆர்வமாக, ஊக்கமாக, ஆழமான, அதிகமான அக்கறைக்காட்டுதல் மற்றும் விடாமுயற்சியின் உட்கருத்தைக் கொண்டது. இதில் வைராக்கியத்தின் கருத்து உள்ளது. கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய சகோதர சகோதரிகளிடம் ஆர்வமான, ஊக்கமான, ஆழமான அன்புகாட்டுவதில்தான் வைராக்கியம் வெளிப்படும்.

நாம் பக்தி வைராக்கியத்தைக் கொண்டிருக்க வேண்டுமா? அதோடு நெருக்கமான தொடர்புடைய அன்பு மற்றும் தாழ்மையில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அப்படி நாம் செய்யாவிட்டால், நாம் ஒருபோதும் பக்தி வைராக்கியத்தைக் கொண்டிருக்க முடியாது. நமக்காகவும் நம்முடையவைகளுக்காகவும் சுயநல வைராக்கியமுள்ளவர்களாக மட்டுமே நாம் இருப்போம். நம்முடைய மீட்பருக்காகவும் நம்மை சுற்றியிருக்கிறவர்களுக்காகவும் சேவை செய்யும் பக்தி வைராக்கியத்தை ஒருபோதும் கொண்டிருக்க மாட்டோம். சுயநலம் என்றால் என்ன? கிறிஸ்துமீதும் மற்றவர்கள்மீதும் அன்பற்றவர்களாக இருக்கும் அசிங்கத்தின் வெளிப்பாடு. உலகம் முழுவதிலும் தன்னையே முதன்மைப்படுத்தும் மோசமான பெருமையின் செயல். நம்முடைய இருதயத்தில் இன்னும் எவ்வளவு சுயநலம் தங்கியிருக்கிறது? எவ்வளவு குறைந்தளவு அன்பும், எவ்வளவு பெருமையும் தொடர்ந்து என் வாழ்வில் இருக்கிறது? உண்மையில், இதுவரை நாம் பார்த்தது நம்மை மனந்திரும்பும்படி அறைகூவலிடுகிறது. கிருபையின் செயல்களாகிய அன்பையும் தாழ்மையையும் அபிவிருத்தி செய்யும்படி நம்மை அழைக்கிறது. கர்த்தர் தாமே இவற்றைச் செய்ய நமக்கு உதவுவாராக – இக்கிருபைகளில் மேன்மேலும் அதிகரிப்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய பணிகளிலெல்லாம் வெற்றியைத் தரும் பக்தி வைராக்கியத்தையும் கொண்டிருக்கச் செய்வாராக.

One thought on “கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூழல் – 2

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s