வேதம் மட்டுமே! என்ற பல்லவியைப் பாடுகிறவர்களை நீங்கள் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள். மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது இந்தப் பல்லவி ஆபத்தில்லாததாக, நேர்மையானதாகத் தெரியும். ஆனால், இந்தப் பல்லவியைப் பாடுகிறவர்களுடைய உள்நோக்கமே வேறு. வேதத்தை மட்டுமே பயன்படுத்துவோம் என்று மார் தட்டுகிற இவர்கள் மனித எழுத்துக்களை ஒதுக்கித் தள்ளுகிறார்கள்; அவற்றைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அவற்றால் பயனில்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய இந்த அறிவீனத்தால் வேதத்திலும் தேவையான ஞானமில்லாமல் தங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையிலும் ஊழியப்பணிகளிலும் வளர முடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீர்போல எவருக்கும் பயனற்றவர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.
வேதம் மட்டுமே! என்ற வாசகம் 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத காலத்தில் சீர்திருத்தவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. அதற்குக் காரணம் கத்தோலிக்க மதத்திற்கு எதிராகப் போர்க்கொடி தொடுத்த சீர்திருத்தவாதிகள் வேதத்தின் அடிப்படையில் திருச்சபை நிறுவி வேதத்தின் அடிப்படையில் கிறிஸ்தவத்திற்கு மறுபடியும் சமுதாயத்தில் புத்துயிர் கொடுக்கப் பாடுபட்டதுதான். கத்தோலிக்க மதம் வேதத்தை உதறித்தள்ளி மனித சிந்தனைகளின் அடிப்படையில் மட்டும் தன் மதத்தை அன்று பரப்பி வந்தது. கர்த்தரின் வேதம் முழுமையாக ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த காலம் அது. சீர்திருத்தவாதிகள் கர்த்தரின் துணையோடு வேதத்தை மனிதர்கள் வாசித்துப் பயன்பெறும் விதத்தில் உலக மொழிகளில் மொழிபெயர்த்து ஆத்துமாக்களின் உயிர்மீட்புக்கு வழிஏற்படுத்தினார்கள்.
சீர்திருத்தவாதிகள், வேதம் மட்டுமே! என்று அதிரடியாகப் போதித்துப் பிரசங்கித்தபோது, மனித எழுத்துக்களுக்கு மதிப்புக்கொடுக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் அதைப் பயன்படுத்தவில்லை. மனித எழுத்துக்களால் அநேக பயன்கள் இருந்தபோதும், அவை வாழ்க்கைக்கு அவசியமாக இருந்தபோதும் வேதத்தின் அடிப்படையில், வேதத்தைப் பின்பற்றி விசுவாசத்தோடு எழுதப்பட்டவைகள் மட்டுமே ஆத்துமாக்களுக்குப் பயன்தருபவை என்று நம்பினார்கள். வேதம் எப்போதும் மனித எழுத்துக்களுக்கெல்லாம் மேலான இடத்தில் இருக்கவேண்டும் என்று அவர்கள் விசுவாசித்தார்கள். வேதத்தை அந்தளவுக்கு நம்பி உயர்வான இடத்தில் வைத்திருந்த சீர்திருத்தவாதிகள் வேதத்தை விளக்கி ஆத்துமாக்களுக்குத் துணைசெய்வதற்காக அநேக நூல்களை எழுதினார்கள். அவை இன்றும் அச்சிலிருந்து நமக்குப் பேருதவி புரிந்து வருகின்றன.
இன்றைக்கு நம்மத்தியில் மனித எழுத்துக்களுக்கு மதிப்புக்கொடுக்காமலும் அவற்றைப் பயன்படுத்தாமலும் இருக்கிறவர்களே கிறிஸ்தவ விசுவாசத்திற்கு பேராபத்தாக முளைத்திருக்கிறார்கள். இவர்கள் அறைகுறை ஞானத்தோடு, வேதத்தைப் போதிக்கவும் விளக்கவும் திறமை இல்லாமல் ஆத்துமாக்களுக்கு உப்புச்சப்பற்ற கதைகளையும், சொந்த அனுபவங்களையும் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள். இத்தகையவர்கள் உருவாகி வளர்ந்ததாலேயே 19ம் நூற்றாண்டிலிருந்து விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் திருச்சபைகளில் பயன்படுத்தும் வழக்கம் குறைவடைந்து போலித்தனமான ஊழியங்கள் எங்கும் பெருக ஆரம்பித்தன. சத்தியத்தில் உறுதியாக இருந்து எதிர்கால சந்ததி அதில் நிலைத்திருக்க உதவுகின்ற வினாவிடைப் போதனைகளை இன்று அநேக திருச்சபைகள் நம்மத்தியில் பயன்படுத்தாமல் இருந்துவருவதற்கு இதுவே காரணம்.
இந்த ஆக்கத்தில் நான், வினாவிடைப் போதனைகளைத் திருச்சபைகளிலும், சொந்த வாழ்க்கையிலும் பயன்படுத்துவது பாரம்பரியத்துக்கு தூபம் போடும் செயல் மட்டுமே, அது வேதபூர்வமான வழிமுறை அல்ல என்று கூறுகிறவர்களுக்கு பதிலளிக்க விரும்புகிறேன். வினாவிடைப் போதனைகளைப் பயன்படுத்துவதை எதிர்க்கும் இவர்கள், பாப்திஸ்துகள் ஏன் வினாவிடைப் போதனையைப் பயன்படுத்தவேண்டும், அது ரோமன் கத்தோலிக்க முறையல்லவா, லூத்தரன் பிரிவைச் சார்ந்தவர்களும், சீர்திருத்த கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்களுந்தான் அவற்றைப் பயன்படுத்துவார்கள்; பாப்திஸ்துகள் வேதவிரும்பிகள், வேதத்தை மட்டுமே பயன்படுத்துவார்கள் என்று கூக்குரலிட்டு வினாவிடைப் போதனைகளின் பயன்பாட்டிற்கு எதிர்ப்புக் காட்டுகிறார்கள். இவர்களுக்கு பதிலளிக்க வேண்டியது அவசியம்.
1. வினாவிடைப் போதனைகளை வேதம் நிராகரிக்கவில்லை.
உண்மையில் அத்தகைய போதனையளிக்கும் முறையை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் காண்கிறோம். அத்தகைய போதனையளிக்கும் முறையின் அவசியத்தை நாம் வேதத்தின் அடிப்படையிலேயே வலியுறுத்துகிறோம். தேவாலயத்தில் போதகர்களோடு (மாற்கு 2) பாலகனான இயேசு கேள்விகள் கேட்டும், கேள்விகளுக்கு பதிலளித்தும் போதித்திருப்பதை வேதத்தில் நாம் காண்கிறோம். பழைய ஏற்பாட்டில் இத்தகைய முறை பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பரவலாகக் காண்கிறோம். வினாவிடைப் போதனை சத்தியத்தைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் விளக்குகின்ற போதனை முறை. அது மனதிலிருத்திக் கொள்ளுவதற்கு இலகுவானதும் பயனுள்ளதுமான முறை. கர்த்தருடைய பத்துக்கட்டளைகள் அந்தவிதமாகவே சுருக்கமாகவும் தெளிவாகவும் (யாத்திராகமம் 20) தரப்பட்டுள்ளன. இந்த முறையில் எளிதாக மனதிலிருத்திக் கொள்ளும் வகையில் இயேசு, மாதிரி ஜெபத்தைப் புதிய ஏற்பாட்டில் நமக்குத் தந்திருக்கிறார். பவுல் அப்போஸ்தலனும் தன்னுடைய நிருபங்களில் வேத சத்தியங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் பல இடங்களில் தந்திருக்கிறார். வினாவிடைப் போதனையளிக்கும் முறையில் பல்வேறு உதாரணங்களை வேதத்தில் நாம் காண்கிறோம். வெளிப்படையாகவும், உள்ளடக்கமாகவும் இம்முறைக்கான ஆதாரத்தை வேதம் நமக்குத் தருகிறது. வேதம் இதைப் போதித்திருப்பதனாலேயே சீர்திருத்தவாதிகள் இந்த முறையில் ஆர்வம்காட்டி 16ம் நூற்றாண்டில் வினாவிடைப் போதனைகளை எழுதிப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்தப் போதனை முறையை வேதத்தில் காணமுடியாது என்கிற வாதம் மிகவும் முட்டாள்தனமானது.
பழைய ஏற்பாட்டில் எஸ்றா நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு முன்பாக வாசித்ததாக நெகேமியா 8:3ல் வாசிக்கிறோம்.
நெகேமியா 8:3
தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமே தொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
வாசித்ததோடு நின்றுவிடாமல் எஸ்றாவோடு இருந்தவர்களும், லேவியரும் நியாயப்பிரமாணத்திற்கு விளக்கங்கொடுத்ததாகவும் 8:7-8ல் வாசிக்கிறோம்.
நெகேமியா 8:7-8
7 யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா, என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். 8 அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
இவர்கள் நியாயப்பிரமாணத்தை வாசித்தது மட்டுமல்லாமல் அதற்கு அர்த்தஞ்சொல்லி விளக்கமளித்தார்கள் என்று வாசிக்கிறோம். வேதத்தை வாசித்ததோடு அதற்கு தங்களுடைய சொந்தநடையில் அவர்கள் விளக்கமளித்திருப்பது எதைக் காட்டுகிறது? வேதத்திற்கு சரியான முறையில் வேதபோதகர்கள் சிந்தித்து தெளிவாக விளக்கமளிப்பதைக் கர்த்தர் எதிர்பார்த்திருப்பதை இந்தப் பகுதி சுட்டுகிறது. இதனால்தான் இன்று பிரசங்கிகள் வேதத்தை சபையில் வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அதை ஆராய்ந்து சிந்தித்து அதற்கு தங்கள் சொந்தநடையில் விளக்கமளித்துப் பிரசங்கமளிக்கிறார்கள். இதைத்தான் வினாவிடைப் போதனை நூல்கள் மூலமும் செய்கிறோம். சத்தியத்தைத் தெளிவாகவும், சுருக்கமாகவும் தொகுத்து விளக்குவதே வினாவிடைப் போதனை.
மேலும் சில உதாரணங்களைக் கவனிப்போம். எபேசியர் 4:4-6ஐக் கவனியுங்கள்.
4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; 5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், 6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.
இந்தப் பகுதியில் பவுல் கர்த்தரைப்பற்றிய சுருக்கமானதும் தெளிவானதுமான விசுவாச அறிக்கையைத் தருவதைக் காண்கிறோம். இதேபோன்ற சுருக்கமான சத்திய விளக்கங்கள் புதிய ஏற்பாட்டில் இன்னும் அநேக பகுதிகளில் காணப்படுகின்றன. இதைத்தான் வினாவிடைப் போதனையும் செய்கிறது. சத்தியத்தை அது தொகுத்து சுருக்கமாக விளக்குகிறது. கிறிஸ்தவ விசுவாசத்தைப்பற்றிய இத்தகைய தெளிவான விளக்கங்கள் அவசியமானவை. அவை நமக்கு சத்தியத்தில் உறுதியாக இருக்கவும், ஆறுதல் அளிக்கவும், அசத்தியத்தின் ஆபத்திலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் உதவுகின்றன.
1 தீமோத்தேயு 1:15-17ல் இன்னுமொரு உதாரணத்தைக் காண்கிறோம்.
15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 16 அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன். 17 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
இந்தப் பகுதியும் முக்கியமான இறையியல் விளக்கத்தை சுருக்கமாகத் தருகிறது. இத்தகைய சத்திய விளக்கங்களைத்தான் விசுவாச அறிக்கைகளும் வினாவிடைப் போதனை நூல்களும் அளிக்கின்றன.
மேலும் சில பகுதிகளையும் உதாரணங்காட்டலாம்.
1 தீமோத்தேயு 3:15-16
15 தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும்ஆதாரமுமாயிருக்கிறது. 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
2 தீமோத்தேயு 1:9-10
9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சியாமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 10 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.
2 தீமோத்தேயு 2:11-13
11 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; 12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; 13 நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.
தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய நிருபங்களில் நாம் காணும் ‘இந்த வார்த்தை உண்மையுள்ளது’ என்ற வார்த்தைப் பிரயோகம் விசுவாச அறிக்கை, வினாவிடைப் போதனை போன்ற உறுதியான விளக்கங்களை அளிக்கும்போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதைப் பவுலின் எழுத்துக்களில் அதிகம் காண்கிறோம். சத்தியத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் வேளையிலும், அதை உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கவேண்டிய சந்தர்ப்பங்களிலும் பவுல் இந்த வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தி சத்தியத்தை விளக்கியிருப்பதைக் காண்கிறோம். அதேபோல் வினாவிடைப் போதனை நூல் அசத்தியத்திற்கெதிரான சத்திய பாதுகாப்பாலனாக நமக்கு உதவுகின்றது. வரலாற்று சீர்திருத்தவாத கிறிஸ்தவம் அதன் காரணமாகவே வினாவிடைப் போதனை நூல்களை எப்போதும் பயன்படுத்தி வந்திருக்கின்றது. இன்று கிறிஸ்தவ உலகில் பரவலாக நாம் காண்கின்ற, தங்களுடைய விசுவாசத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டிருக்கின்ற இறையியல் பச்சோந்திகளின் பிடியில் இருந்து திருச்சபை காப்பாற்றப்பட வினாவிடைப் போதனை நூல் பெரும்பயனளிக்கும். அதை விசுவாசத்தோடு நடைமுறைக்கேற்றவகையில் பயன்படுத்தும் சபை இலகுவாக அசத்தியத்தை நாடாது.
2. வினாவிடைப் போதனை முறையைப் பயன்படுத்துவது வேதத்தோடு எதையும் சேர்க்கின்ற முயற்சியல்ல.
அதையே ரோமன் கத்தோலிக்க மதம் செய்தது; தொடர்ந்தும் செய்துவருகிறது. மாறாக, சீர்திருத்தவாத கிறிஸ்தவர்கள் வேதத்தில் உள்ளதை மட்டுமே தெளிவாக விளக்குவதற்காகவும், மனதிலிருத்திக் கொள்ளுவதற்காகவும் இம்முறையைப் பயன்படுத்தினார்கள். கர்த்தர் மனிதனுக்கு சிந்திப்பதற்காகவும், ஆராய்வதற்காகவும் மூளையைத் தந்திருக்கிறார். நாம் நம்முடைய மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து ஆராய்ந்து உண்மைகளை முறையாக விளங்கிக்கொள்ள வேண்டும். கர்த்தரின் குணாதிசயங்களை நாம் விசுவாசத்தை அடைந்திருப்பதன் மூலம் பிரதிபலிப்பதால் அவரைப்போல சிந்தித்து முடிவெடுக்கிறவர்களாக நாம் இருக்கவேண்டும். நம்முடைய அறிவைப் பயன்படுத்தி சத்தியங்களைப் படித்து ஆராய்ந்து முறையாக விளங்கி விளக்கவேண்டியவர்களாக இருக்கவேண்டும். அந்தவிதத்தில் சத்தியங்கள் வேதத்தில் ஒரே இடத்தில் முறையாக தொகுத்து நமக்குக் கொடுக்கப்படவில்லை. அவற்றை ஆராய்ந்து முறைப்படுத்தி தொகுக்கவேண்டியது நம்முடைய பணி. கர்த்தரின் வேதம் போதிக்கும் இறையியல் அந்தவிதத்தில் தொகுக்கப்பட வேண்டியது இறையியலுக்கு மிக மிக அவசியம். அதன் காரணமாகவே முறைப்படுத்தப்பட்ட இறையியலை நாம் பயன்படுத்துகிறோம். விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனை நூல்களும் இறையியலை முறைப்படுத்தி நமக்குத் தருகின்றன. இவற்றை நிராகரித்து வாழ்கிறவர்கள் சத்தியம் அறியாதவர்களாக, வேதவசனங்களை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பயன்படுத்துகிறவர்களாகவே எப்போதும் இருப்பார்கள். அத்தகைய நிலைமையையே நம் இனத்தில் இப்போது பரவலாகக் காண்கிறோம். இவர்களே அநேகமான வேதத்தொடர்பில்லாத சத்தியமற்ற போதனைகள் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறார்கள்.