ஒருவரில் மூவர்; மூவரும் ஒருவரே!

கிறிஸ்தவ வேதத்தில் கடவுளைப்பற்றியும், கிறிஸ்தவ வாழ்க்கையைப்பற்றியும் தெளிவான போதனைகளைக் கர்த்தர் நமக்குத் தந்திருக்கிறார். அந்தப் போதனைகளில் அடிப்படைப் போதனைகள் அநேகம் இருக்கின்றன. அதாவது, ஒரு கிறிஸ்தவன் நிச்சயம் அறிந்து விசுவாசிக்க வேண்டியதும், அவைபற்றிய எந்தத் தவறான எண்ணங்களைக் கொண்டிராமலும் இருக்கவேண்டியதுமான அநேக போதனைகள் இருக்கின்றன. இந்தப் போதனைகள்பற்றிய குளறுபடியான எண்ணங்களைக் கொண்டிருந்தாலோ அல்லது அவற்றை விசுவாசிக்காமல் இருந்தாலோ அல்லது இந்தப் போதனைகளை எதிர்த்தாலோ ஒரு மனிதன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது. அந்தளவுக்கு இந்தப் போதனைகள் கிறிஸ்தவத்தின் அடித்தளமாக இருக்கின்றன. இந்தப் போதனைகள் இல்லாமல் கிறிஸ்தவம் இருக்கமுடியாது. இவை கிறிஸ்தவத்தின் உயிர்நாடி.

டேர்டூலியன்

இத்தகைய போதனைகளில் ஒன்றுதான் திரித்துவம் (Trinity) பற்றியது. திரித்துவம் அல்லது மிகவும் பழமையான வார்த்தையான திரியேகத்துவம் என்பது வேதத்தில் எங்கும் காணமுடியாத வார்த்தை. அதை வேதத்தில் காணமுடியவில்லை என்பதற்காக அதைப் பயன்படுத்தக்கூடாது என்பது அறிவின்மையின் அறிகுறி. இந்தப் பதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் திருச்சபை வரலாற்றில் முக்கியமானவரான டேர்டூலியன் (Tertullian, 155-240 AD) என்ற சபைப்பிதா. இவர் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இந்த ஆங்கில வார்த்தையான Trinity இலத்தீன் மொழிவார்த்தையான trinitas என்பதில் இருந்து உருவானது. இதற்கு அர்த்தம் மூவர் என்பதாகும்.

திரித்துவம் என்ற பதம் கடவுளின் இயல்பான தன்மைபற்றிய முக்கியமான போதனையை விளக்குவதற்காக உருவானது. வார்த்தைகள் மிகவும் அவசியமானவை. புரிந்துகொள்ளக் கஷ்டமான சில சத்தியங்களை விளக்குவதற்கு இறையியல் பதங்கள் அவசியமாகின்றன. வேதத்தில் காணப்படும் அனைத்துப் போதனைகளையும் விளக்குவதற்கு அவசியமான எல்லாப் பதங்களையும் வேதம் தருவதில்லை. ஆகவே, அந்தச் சத்தியங்களைச் சுலபமாக விளங்கிக்கொள்ளுவதற்காக இறையியல் அறிஞர்கள் கவனத்தோடு பல பதங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சபை அங்கத்துவம்பற்றி வேதம் போதித்தபோதும் அங்கத்துவம் என்ற பதம் வேதத்தில் இல்லை. அதற்காக சபை அங்கத்துவம் இல்லாமல் இருந்தால் அது சபையே அல்ல. அங்கத்துவம் என்ற பதத்தை அவசியத்தின் காரணமாக இறையியல் அறிஞர்கள் பயன்படுத்துகிறார்கள். அதேபோல்தான் திரித்துவம் என்ற பதமும். இந்தப் பதம் கடவுள் ஒருவராக இருக்கிறார்; அந்த ஒரே கடவுளில் மூன்று ஆள்தத்துவங்கள் காணப்படுகிறார்கள் என்ற முக்கியமான சத்தியத்தை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

கிறிஸ்தவத்தில் கடவுளைப்பற்றிய போதனை மிகவும் விசேஷமானது; அவசியமானது. வேதம் போதிக்கும் கடவுளின் தன்மையை தத்துவரீதியில் விளங்கிக்கொள்ளுவது கொஞ்சம் கஷ்டந்தான். அதாவது, ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது தத்துவரீதியில் புரிந்துகொள்ளுவதற்கு இலகுவானது. ஆனால், கடவுளின் தன்மையை இந்தவிதமாக தத்துவரீதியில் கிறிஸ்தவத்தில் விளக்கமுடியாது. இருந்தாலும் அது ஒன்றும் அரவே புரிந்துகொள்ள முடியாததொன்றல்ல. கிறிஸ்தவ நம்பிக்கைக்கு விசுவாசம் அவசியம். உலகப்படிப்பைப்போன்றதல்ல அது. உலகத்தின் போதனைகளை விளங்கிக்கொள்ள விசுவாசம் அவசியமில்லை. கிறிஸ்தவ விசுவாசமில்லாதவர்களுக்குக் கிறிஸ்தவ நம்பிக்கை இருக்க வழியில்லை. கடவுளின் தன்மைபற்றிய கிறிஸ்தவ போதனையை விசுவாசத்தின் மூலமே கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். கிறிஸ்தவ விசுவாசம் பரிசுத்த ஆவியினால் ஏற்படுவது. கிறிஸ்தவ நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறவர்கள் பரிசுத்த ஆவியின் மூலமாக கிறிஸ்தவ போதனைகளை விளங்கிக்கொண்டு அவற்றை வைராக்கியத்துடன் பின்பற்றுகிறார்கள். இதேமுறையில் கடவுளின் தன்மையைப்பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கையைப் பரிசுத்த ஆவியின் மூலமே கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். இதுவரை நான் விளக்கியது திரித்துவம் பற்றிய போதனைகளுக்கு மிக நெருக்கமானது.

கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனையாக திரித்துவம் இருப்பதால் அதைக் கிறிஸ்தவர்கள் எல்லோரும் நன்றாக அறிந்திருந்து வைராக்கியத்தோடு விசுவாசிப்பார்கள் என்றுதான் நினைப்பீர்கள். ஆனால், இந்த அடிப்படை சத்தியத்துக்கு பல ஆபத்துக்கள் வந்திருக்கின்றன. தற்காலத்தில்கூட இந்த அடிப்படை போதனையில் ஞானமில்லாத அநேக கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அத்தோடு இந்தப் போதனைக்கு எதிரான போலிப்போதனைகளும் கிறிஸ்தவர்கள் மத்தியில் உலவிக்கொண்டிருக்கின்றன. திருச்சபை வரலாற்றில் இந்தப் போதனைக்கே ஆரம்பகாலத்திலிருந்து பெரும் ஆபத்துக்கள் வந்திருக்கின்றன. அவ்வாறு வந்திருக்கும் ஆபத்துக்களையும், போலிப்போதனைகளையும் கொஞ்சம் ஆராய்வோம்.

திருச்சபை வரலாற்றில் மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அலெக்சாந்திரியாவில் வாழ்ந்த ஒரு மனிதன் பெயர் ஏரியஸ் (Arius, 256-336). இவன் திரித்துவத்தைப்பற்றிய தவறான போதனையை அறிமுகப்படுத்தினான். வேதம், பிதாவும், குமாரனும், பரிசுத்தஆவியானவரும் ஒரே தன்மைகளையும் சமமான அதிகாரத்தையும், மகிமையையும் கொண்டவர்களாக ஒரே தேவனாக இருப்பதாக விளக்க, ஏரியஸ் குமாரன் பிதாவைவிடத் தன் தன்மையில் மாறுபட்டவராக அவரைவிடத் தகுதியில் குறைந்தவராக இருப்பதாக விளக்கினான். அத்தோடு இன்னுமொருபடி மேலேபோய் குமாரன் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் விளக்கினான். இதன் மூலம் குமாரன், பிதா, பரிசுத்தஆவியானவர்போல நித்தியத்தில் இருந்து இருக்கவில்லை என்று ஏரியஸ் விளக்கினான். இந்த விளக்கங்களின் அடிப்படையில் குமாரன் கடவுள் அல்ல என்ற முடிவுக்கு ஏரியன் வந்தான். ஏரியஸின் திரித்துவம் பற்றிய ஆபத்தான போதனைகள் அக்காலத்தில் ஏரியனிசம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது.

அத்தநேசியஸ்

ஏரியஸின் போதனைகளால் திருச்சபை குழம்பிப்போயிருந்த நிலையில் அன்று திருச்சபை தலைவராக இருந்த இன்னொரு மனிதர் அத்தநேசியஸ் (Athanasius, 296-373). (அத்தநேசியஸ் பற்றி ஏற்கனவே திருமறைத்தீபத்தில் ஆக்கங்கள் வந்திருக்கின்றன, 2018 இதழ் 4 மற்றும் 2019 இதழ் 1). அத்தநேசியஸ் ஏரியஸின் போலிப்போதனைகளை இனங்கண்டு அவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அன்று பேரரசனாக இருந்த நான்காம் கான்ஸ்டன்டைனிடம் இதுபற்றி முறையிட்டார். கான்ஸ்டன்டைன் திருச்சபை குழுவொன்றை நியமித்து ஏரியஸின் போதனைகளை ஆராய்ந்து, அவை ஆபத்தானவை என்று உணர்ந்து அவற்றிற்கெதிராக வேதம் திரித்துவம் பற்றிப் போதிக்கும் விளக்கங்களை அறிக்கையாக வெளியிட்டார். அத்தநேஸியன் சத்திய அறிக்கை, நைசீன் சத்திய அறிக்கை (325), அதற்குப் பின் வந்த கான்ஸ்டான்டிநோப்பிள் அறிக்கைகள் (381) இந்த ஏரியனிசப் போலிப்போதனையைத் தோலுரித்துக்காட்டி அவற்றிற்கெதிரான வேதபோதனைகளைத் தந்து திருச்சபைக்கு பாதுகாப்பளித்தன.

அத்தநேசியஸ் தனியொருவராக அந்தக் காலத்தில் ஏரியனிசத்திற்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுதும் போராடியுள்ளார். வேதசத்தியத்திற்கெதிரான ஆபத்தான போதனை திருச்சபையைச் சிதைத்து ஆத்துமாக்களின் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு நஞ்சாக அமைந்துவிடும் என்பதில் அத்தநேசியஸுக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. இதை வாசிக்கின்ற உங்களுக்கு திரித்துவத்தைப்பற்றிய தெளிவான அறிவும் நம்பிக்கையும் இருக்கிறதா? அல்லது இதைப்பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை, இயேசுவை விசுவாசித்தால் மட்டும் போதும் என்ற அலட்சிய மனப்பான்மையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறீர்களா? அப்படி வாழ்ந்துகொண்டிருக்கிற கிறிஸ்தவர்கள் அநேகர் நம்மினத்தில் இருக்கிறார்கள். விஷத்தைப் போன்ற போதனைகளைப் பிரசங்கி என்ற பெயரில் அன்றாடம் கொடுத்துக்கொண்டிருக்கிற அநேகர் இருந்தபோதும், அது விஷம் என்று தெரிந்தும் அவர்கள் அபிஷேகம் பெற்ற ‘ஊழியக்காரர்கள்’ அதனால் அவர்களைக் குறைசொல்லக்கூடாது என்ற மனுஷபயத்தோடு விஷத்தைக் குடித்துக்கொண்டிருக்கிற ஆத்துமாக்கள்தான் எத்தனை. அத்தகைய அலட்சிய மனப்பான்மை இந்த அடிப்படைப் போதனைபற்றி மெய்க்கிறிஸ்தவரான அத்தநேசியஸுக்கு இருந்திருந்தால் திருச்சபை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். திரித்துவத்தைப்பற்றிய போலித்தனமான நம்பிக்கைகளைக் கொண்டிருப்பவர்கள் கிறிஸ்துவுக்கு எதிரிகள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஏரியனிசப் போதனைக்கு எதிரான வேதசத்தியங்களை முழுமையாகத் தந்த இன்னொரு அறிக்கையாக கெல்ஸிடொன் அறிக்கை (Chalcedon, 451) இருந்தது. இந்த அறிக்கை இயேசு உலகத்தில் பிறந்தபோது அவரில் மானுடம், தெய்வீகம் ஆகிய இரண்டு தன்மைகள் (two natures) இணைந்து காணப்பட்டதாக விளக்கியது. இதை இந்த அறிக்கை hypostasis என்ற கிரேக்க பதத்தின் மூலம் விளக்கியது. அதாவது ஒரே மனிதராக இருந்த இயேசு கிறிஸ்துவில் மானுடமும், தெய்வீகமும் இணைந்து பிரிவின்றி காணப்பட்டதாக இந்த அறிக்கை விளக்கியது. அவரில் மானுடம் தனக்குரிய அத்தனை தன்மைகளையும் (பாவத்தைத் தவிர) கொண்டிருந்ததோடு, தெய்வீகமும் அதன் அத்தனைத் தகமைகளையும் கொண்டு இயேசு தேவனாகவும் மனிதராகவும் இருந்தார் என்று இந்த அறிக்கை விளக்கியது.

இந்தக் கெல்ஸிடொன் அறிக்கை ஏரியனிசமாகிய போலிப்போதனைக்கெதிராக மட்டும் விளக்கமளிக்காமல் அதைப்போன்ற திரித்துவத்தை சிதைக்க முயன்ற வேறு சில போதனைகளையும் தோலுரித்துக் காட்டியது. திரித்துவத்திற்கு எதிரான இன்னொரு போலிப்போதனை அப்பொலினேரியனிசம். இதைப் போதித்த மனிதன் பெயர் அப்பொலினேரிஸ் (Apollinaris – died in 390). இந்த மனிதன் இயேசு கிறிஸ்து முழுமையற்ற மானுடத் தன்மையைக் கொண்டிருந்ததாகப் போதித்தான். வேதம், அவர் பூரணமான மானுடத்தைக் (பாவம் தவிர) கொண்டிருந்ததாக விளக்குகிறது. இன்னுமொரு போலிப்போதனையை உருவாக்கியவன் பெயர் யூடிக்கஸ் (Eutyches, 380-456). இவன் இயேசு கிறிஸ்துவில் தெய்வீகமும், மானுடமும் ஒருசேரக் கலந்து ஒரேயொரு தன்மை மட்டுமே காணப்பட்டதாக விளக்கினான். இவனுடைய போதனையும் மிகத்தவறானது. திரித்துவத்திற்கெதிரான இன்னுமொரு போதனையை உருவாக்கியவன் பெயர் நெஸ்டோரியஸ் (Nestorius, 386-450). இது நெஸ்டோரியனிசம் என்று அழைக்கப்படுகிறது. நெஸ்டோரியஸ், இயேசு கிறிஸ்துவில் தெய்வீகமும், மானுடமும் ஒன்றுக்கொன்று எந்தத் தொடர்பும் இல்லாமல், இரண்டு தன்மைகளாக (nature) அல்லாமல் இரண்டு நபர்களாக (persons) இருந்தன என்று விளக்கினான். இதுவும் திரித்துவம்பற்றிய ஆபத்தான தவறான போதனை.

திரித்துவத்திற்கெதிராக ஆதிசபையில் எழுந்த இன்னுமொரு போலிப்போதனைக்குப் பெயர் டொஸடிசம் (Docetism). இதைப் போதித்தவர்கள், கிறிஸ்து உலகில் மரணம் உட்படத் தன் வாழ்வில் அனுபவித்த அத்தனைத் துன்பங்களையும் மனிதனாகத் தோற்றமளித்து மட்டுமே அனுபவித்தார் என்று விளக்கினார்கள். அதாவது பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் தூதர்கள் இந்த உலகத்துக்கு கர்த்தரின் பணியைச் செய்ய மனிதரூபத்தில் வந்ததுபோல (ஆபிரகாமையும் லோத்தையும் சந்தித்துப் பேசி உணவருந்தியதுபோல) இயேசுவும் மனிதரூபத்தில் காட்சி தந்து துன்பங்களை அனுபவித்தார் என்கிறது இந்தப்போதனை. அத்தோடு இயேசு மனித உருவில் காட்சியளித்து அனுபவித்த துன்பங்கள் எந்த மனிதனும் அனுபவிப்பதுபோன்ற துன்பங்கள் மட்டுமே என்றும் இந்தப்போதனை விளக்கியது. இதன் மூலம் இயேசு கிறிஸ்து உண்மையாக பூரண மானுடத்தோடு இந்த உலகத்தில் வாழவில்லை என்று விளக்கியது டொஸடிசம். இந்தப் போலிப்போதனைக்கெதிராக விளக்கங்கொடுத்த திருச்சபை, ‘வெறுமனே காட்சியளிக்கின்ற கிறிஸ்துவால் வெறும் காட்சியாகத் தோன்றும் இரட்சிப்பை மட்டுமே அளிக்க முடியும்’ என்று ஆணித்தரமாக பதிலளித்தது.

நாம் மேலே கவனித்துள்ள கெல்ஸிடொன் அறிக்கை இதுவரை நாம் பார்த்து வந்திருக்கும் போலிப்போதனைகளுக்கெல்லாம் பதிலளித்து அவற்றை நிராகரித்தது. இதற்குப் பிறகு 681ல் இன்னுமொரு அறிக்கை திரித்துவப் போதனைகளுக்கு மேலும் வலிமைதர வெளியிடப்பட்டது. இதை கொன்ஸ்டான்டிநோபிளில் கூடிய மூன்றாவது கவுன்ஸில் வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியிடப்பட்டதற்கு முக்கிய காரணம் இருக்கின்றது. இந்த அறிக்கை இயேசு கிறிஸ்து தனிப்பட்ட இரண்டு தன்மைகளைத் (தெய்வீகமும் மானுடமும்) தன்னில் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவரில் இரண்டு சித்தங்கள் இருந்ததாக விளக்கியது. அதாவது, அவரில் தெய்வீக சித்தமும், மானுட சித்தமும் இருந்ததாக இது விளக்கியது. கிறிஸ்துவில் ஒரு சித்தம் மட்டுமே காணப்பட்டதாக ஒரு போதனை கிளம்பியதாலேயே கொன்ஸ்டான்டிநோபில் கவுன்சில் இந்த அறிக்கையை வெளியிட்டு அவரில் இரண்டு சித்தங்கள் இருந்ததாக விளக்க நேர்ந்தது. இந்த அறிக்கை, ‘கிறிஸ்துவில் இயற்கையாக பிரிக்கமுடியாத, மாற்றமடையாத, ஒன்றுக்கொன்று முரண்படாத, குழப்பமற்ற இரண்டு சித்தங்கள் இருந்தது மட்டுமன்றி அவை தனித்துவத்தோடு அவரில் இயங்கின’ என்று விளக்கியது. அத்தோடு, ‘கிறிஸ்துவின் மானுட சித்தம் அவரது தெய்வீக சித்ததை எதிர்க்காமலும் அதோடு ஒத்துழைக்கத் தயங்காமலும் அதற்கு இணங்கி நடக்கின்ற சித்தமாக இருந்தது’ என்றும் விளக்கியது. இந்த உண்மையை வலியுறுத்திப் பேசி அதற்காக பெருந்துன்பத்தை ஆதிசபைக் காலத்தில் அனுபவித்த ஒரு மனிதனின் பெயர் மெக்ஸிமஸ் (Maximus the Confessor, 550-662). கிறிஸ்துவில் ஒரு சித்தம் மட்டுமே இருந்ததாகப் போதித்த போலிப்போதனையாளர்கள் அதற்கெதிராக நின்ற மெக்ஸிமஸின் நாக்கை அறித்து அவருடைய ஒரு கரத்தையும் துண்டித்தார்கள். இக்காயங்களின் காரணமாக மெக்ஸிமஸ் பின்னால் மரணத்தை சந்தித்தார். மெக்ஸிமஸ் இறந்த பின்னும் கிறிஸ்துவைப்பற்றிய அவருடைய போதனைகள் நெடுங்காலத்துக்கு கொன்ஸ்டாட்டிநோபிளில் நம்பப்பட்டு வந்தன. இயேசு கிறிஸ்து தன்னில் இரண்டு தன்மைகளைக் கொண்டிருந்தார் என்று போதிப்போமானால் அவரில் இரண்டு சித்தங்கள் காணப்பட்டன என்று நம்மால் சொல்லாமல் இருக்கமுடியாது. அவரில் ஒரு சித்தம் மட்டுமே இருந்ததாக சொன்னால் அவருடைய தன்மைகளில் ஒன்று பூரணமற்றதாக இருந்ததாக முடிவெடுக்க நேரும். கிறிஸ்து இரண்டு பூரணமான தன்மைகளைக் கொண்டிருந்ததோடு அந்தத் தன்மைகள் முழுமையான இரண்டு சித்தங்களையும் கொண்டிருந்தன.

புலிஞ்ஞர்

இதுவரை நாம் கவனித்திருக்கும் கவுன்சில் அறிக்கைகளைத் தவிர (அத்தநேசியஸ், நைசீன், கெல்ஸிடொன், கான்ஸ்டான்டிநோபிள் மூன்றாம் கவுன்சில்) அவற்றிற்குப் பின் வெளிவந்துள்ள மேலும் சில குறிப்பிட்ட அறிக்கைகள் திரித்துவப் போதனைகள்பற்றிய தெளிவான போதனைகளைத் தந்து திருச்சபைக்குப் பேருதவி புரிகின்றன. இங்கிலாந்து சபையின் (Church of England) விசுவாச அறிக்கையின் எட்டாவது விளக்கம் திரித்துவ போதனை குறித்தது. புலிஞ்ஞரால் (Bullinger) வெளியிடப்பட்ட இரண்டாம் ஹெல்வெடிக் அறிக்கை (2nd Helvetic creed, 1566) இயேசு கிறிஸ்துவின் இரண்டு தன்மைகள் பற்றிய தெளிவான விளக்கங்களைக் கொண்டிருக்கின்றது. அதற்குப் பின்னால் வரலாற்றில் பதினேழாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட முக்கியமான விசுவாச அறிக்கைகளான வெஸ்ட்மின்ஸ்டர் மற்றும் 1689 இரண்டாம் இலண்டன் பாப்திஸ்து விசுவாச அறிக்கைகள் மிகவும் அவசியமான தெளிவான திரித்துவம்பற்றிய விளக்கங்களைக் கொடுக்கின்றன.

இதுவரை நாம் பார்த்து வந்திருக்கும் திரித்துவம்பற்றிய வரலாற்று உண்மைகளில் இருந்து நாம் முக்கியமான ஒரு விஷயத்தை உணரமுடிகின்றதல்லவா? அதாவது, வேதத்தின் அடிப்படைப் போதனைகளுக்கு ஆபத்து வருகின்றபோது, போலிப்போதனைகள் சபைகளைத் தாக்குகின்றபோது திருச்சபை அமைதியாக வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்ளாமல் அந்தத் தவறான போதனைகளை ஆராய்ந்து அவற்றின் மெய்ரூபத்தை வெளிப்படுத்தி மெய்யான சத்தியத்தை விளக்கி சபைகளுக்கு பாதுகாப்பளித்திருக்கிறது. திருச்சபை அதைச் செய்திருப்பதால்தான் இன்று அருமையான விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப்போதனைகளும் நமக்கு இந்த விஷயத்தில் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்த அறிக்கைள் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைகளைத் துல்லியமாக விளக்குபவை. இந்த அடிப்படைப் போதனைகளில் அவசியமான அளவுக்கு தெளிவான அறிவோ நம்பிக்கைகளோ இல்லாத எத்தனை பேர் ஊழியக்காரர்கள், போதகர்கள் என்ற பெயரில் நம்மினத்தில் சபை நடத்தி வருகிறார்கள் தெரியுமா? இந்த அநியாயத்தை வேறெங்கு காணமுடியும்? இட்டிலிக்கடைக்காரன்கூட இட்லி சுடத்தெரியாமல் கடைவைக்கமாட்டான். எந்தவித அடிப்படை வேதஅறிவும் இல்லாமல் ஊழியம்செய்கிறவர்களை நம்மினத்தில்தான் அதிகம் காண்கிறோம். ஒரு சபையில் எத்தகைய வேதநம்பிக்கைகளைக்கொண்ட மனிதர்கள் போதகர்களாக இருக்கவேண்டும் என்பதிலும், சபை எதை விசுவாசிக்கவேண்டும் என்பதிலும் உதாசீனம் காட்டும் சபைகள் நீண்டநாட்களுக்கு நல்ல சபைகளாக இருக்க வழியில்லை. அவை போலிச்சபைகளாக வேதவிரோதிகளாக வெகுவிரைவில் மாறிவிடும்.

இந்த ஆக்கத்தை நிறைவுக்குக் கொண்டு வரும் இந்த நேரத்தில் இயேசு கிறிஸ்துவின் இரண்டு தன்மைகளைப்பற்றிய சில உண்மைகளை பிலிப்பியர் 2:6-8 வரையுள்ள வசனங்களில் இருந்து சுருக்கமாக விளக்க விரும்புகிறேன்.

பிலிப்பியர் 2:6-8

6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

இந்தப் பகுதியில் இருந்து ஐந்து உண்மைகளைக் கவனியுங்கள்.

1. இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்தபோது அவர் தன்னுடைய தெய்வீகத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மனிதராகப் பிறக்கவில்லை. அவர் மனிதராக இருந்தால் அவரில் தெய்வீகம் இருக்க வழியில்லை என்ற தவறான போதனை திருச்சபையை ஆதியில் தாக்கியிருக்கிறது; இன்றும்கூட அப்படி எண்ணுகிறவர்கள் இருக்கிறார்கள். யேகோவாவின் சாட்சிகள் (Jehovah’s Witnesses) இயேசுவை ஆண்டவராக, பிதா, பரிசுத்தஆவியோடு சமமானவராக பார்க்க மறுக்கிறார்கள். மோர்மன் (Morman) என்கிற போலிமதமும் இதே ஆபத்தைக் கொண்டிருக்கிறது. கிரிஸ்டோடொல்பியன் என்ற பெயரில் உலவிவரும் இன்னுமொரு போலிக்கூட்டமும் இயேசு கிறிஸ்துவை தேவனாக, ஆண்டவராகக் காண மறுக்கிறது. இயேசு கிறிஸ்துவை தேவனாகக் காண மறுக்கிறவர்கள் கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனைக்கு எதிரிகள். பவுல் இந்த வேதபகுதியில் அவர் ‘தேவனுடைய ரூபமாயிருந்தும்’ என்று தெளிவாக எழுதியிருப்பதைக் கவனியுங்கள். அதாவது, அவர் தொடர்ந்து தேவனாக இருந்த நிலையில் என்று இதற்குப் பொருள். அத்தோடு ‘அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி’ என்று சொல்லியிருப்பது அவர் தெய்வீகத்தைத் துறந்ததைக் குறிக்கவில்லை. தெய்வீகத்தோடு தொடர்ந்து இருந்தபோதும் (திரித்துவத்தின் இரண்டாம் நபராக) அதை அவர் முழுமையாகப் பயன்படுத்தி தேவன் என்று தன்னை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாமல் முழு மானுடத்தோடு செயல்பட்டதையே அது குறிக்கிறது. தெய்வீகமும், மானுடமும் இணைந்து காணப்படும் தேவமனிதனாக அவர் பிறந்திருக்காவிட்டால் அவரால் மீட்புப் பணியைப் பூரணமாக நிறைவேற்றியிருக்க முடியாது என்கிறது வேதம். மீட்புப் பணியை நிறைவேற்றவே அவர் தேவனாகவும் மனிதனாகவும் பிறக்கவேண்டியிருந்தது. அப்படி அவர் இல்லாதிருந்திருப்பாரானால் நமக்கு இரட்சிப்பு ஒருபோதும் கிடைத்திராது; இப்போது பரலோகத்தில் அவர் பிரதான ஆசாரியராகவும் இருந்திருக்க வழியில்லை.

2. இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்தபோது தன்னுடைய தெய்வீகத்தை மானுடமாக மாற்றியமைத்துக் கொள்ளவில்லை. அதாவது, அவரில் தெய்வீகம் தன் தன்மையை இழந்து மானுடமாக மாறிவிடவில்லை. அப்படி அவர் செய்ததாக ஏரியன் என்ற போலிப்போதகன் மூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில் விளக்கியிருக்கிறான். கானாவில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியபோது தண்ணீர் தன்னுடைய தன்மையை இழந்து முழுத் திராட்சை இரசமாக மாறியது. அது தண்ணீர் கலந்த திராட்சை இரசமாக இருக்கவில்லை. அதுபோலவே கிறிஸ்து இருந்ததாக ஏரியன் விளக்கினான். அது பெருந்தவறு. இயேசு கிறிஸ்துவில் தெய்வீகம் எந்தத் தன்மையையும் இழக்காமல் பூரணத்துவத்தோடு இருந்த நிலையில் அதோடு இயேசு மானுடத்தை இணைத்துக் கொண்டார் என்கிறது வேதம்.

பாலில் தண்ணீரைக் கலக்கின்றபோது பால் தொடர்ந்து பாலாக இருந்தபோதும் அது தண்ணீர் பாலாக மாறிவிடுகிறது. அதாவது தண்ணீரும் பாலும் கலந்த நிலையில் அது இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் தன்மைகளை இந்த முறையில் விளக்கக்கூடாது. அவரில் தெய்வீகமும், மானுடமும் எந்த மாற்றத்தையும் அடையவில்லை; அவை கலக்கவும் இல்லை. இயேசு முழுப் பூரணமுள்ள தெய்வீகத்தையும், மானுடத்தையும் கொண்டிராதிருந்தால் அவரால் மீட்புப் பணியைப் பூரணமாக நிறைவேற்றியிருக்க முடியாது. அவர் பெண்ணுக்கு (மேரிக்கு) மகனாகப் பிறந்தபோதும் தொடர்ந்தும் ‘வார்த்தையாக’ இருந்தார்.

3. இயேசு கிறிஸ்து தன் தெய்வீகத்திலும் மானுடத்திலும் மாற்றத்தை உண்டாக்கி, இரண்டையும் கலந்து மனிதராகப் பிறக்கவில்லை. இப்படியும் சிலர் ஆதி சபைக்காலத்தில் திரித்து விளக்கியிருக்கிறார்கள். பவுல் இந்த வேதபகுதியில் தெய்வீகத்தோடிருந்து மானுடத்தையும் தன்னில் இணைத்துக்கொண்டார் இயேசு என்றுதான் விளக்கியிருக்கிறார். அவருடைய தெய்வீகத்திலோ மானுடத்திலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருந்தாலோ, அல்லது அவ்விரண்டும் ஒன்றோடொன்று கலந்திருந்தாலோ, அல்லது அவற்றில் ஒன்றில் மட்டும் மாற்றம் ஏற்பட்டிருந்தாலோ இயேசு கிறிஸ்து தேவனும் மனிதனுமாக பூரணமாக இருந்திருக்க முடியாது. அவர் தேவனும் மனிதனுமாகவே தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில்கொண்டு இருந்தார்.

4. இயேசு மனிதராகப் பிறந்தபோது அதை அவர் வெறும் மனிதரூபத்தில் காட்சியளித்ததாக மட்டும் எண்ணக்கூடாது. இந்தவிதமாகவே டொஸடிசம் என்ற போலிப்போதனை விளக்குகிறது. அதாவது, பழைய ஏற்பாட்டில் கர்த்தரின் தூதர்கள் ஆபிரகாமையும், லோத்தையும் சந்தித்தபோது மனித உருவில் வந்து அவர்களைச் சந்தித்தார்கள், உணவருந்தினார்கள். அதுபோல் இயேசு இருந்ததாக டொஸடிசம் விளக்குகிறது. இதுவும் பெருந்தவறான போதனை. இயேசு மனிதராகக் காட்சியளிக்கவில்லை; பூரணமான மானுடத்தைத் தன்னில் கொண்டிருந்து மனிதராக வாழ்ந்து மரித்து உயிர்த்தெழுந்தார். அவர் மானுடத்தில் செய்யவேண்டியிருந்த அனைத்தையும் மனிதராகக் காட்சியளிப்பதன் மூலம் செய்து நிறைவேற்றியிருக்க முடியாது. அவர் செய்யவேண்டியிருந்த அனைத்தையும் பூரணமான மானுடத்தில் செய்யவேண்டியதாக இருந்தது. அதுவே பிதா அவருக்கு அளித்திருந்த மீட்புப் பணி. தெய்வீகமும் மானுடமும் பூரணமாக அவரில் இருந்ததாக வேதம் விளக்குகிறது.

5. இயேசு கிறிஸ்து மனிதராகப் பிறந்தபோது தம்முடைய மகிமையான தெய்வீகத்தைத் தன் மானுடத்தில் மறைத்திருந்தார். அதாவது, திரையைப் போட்டு மற்றவர் கண்களுக்கு அது புலப்படாமல் இருப்பதற்காக மறைப்பதுபோல் அவர் தன் தெய்வீகம் மற்றவர்களுக்கு வெளிப்படாதவிதத்தில் மறைத்திருந்தார். அதனால்தான் அவரைப் பார்த்த எவரும் தேவனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்; விசுவாசம் அடைந்தவர்களைத் தவிர. மானுடர்களுக்கு அவர் மனிதராக மட்டுமே, யோசேப்புவின் மகனாக மட்டுமே தெரிந்தார். எத்தனையோ தடவை அவர் பிதாவோடு தன்னை இணைத்துப் பேசியிருந்தபோதும், பிதாவும் நானும் ஒன்று என்று விளக்கியிருந்தபோதும், உங்கள் பிதாவான ஆபிரகாமுக்கு முன் நானிருந்தேன் என்று யூதர்களைப் பார்த்து சொல்லியிருந்தபோதும் அவர்கள் அவரைத் தேவனாக ஏற்றுக்கொள்ள மறுத்து கொல்லப் பார்த்தார்கள்.

யோவான் 5:17
இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.

யோவான் 8:38
நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார்.

யோவான் 10:15, 18, 30
15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.
18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.

யூதர்களால் அவருடைய தெய்வீகத்தை உணரமுடியாதபடி அது அவரில் மறைந்து காணப்பட்டது. அவரில் தெய்வீகம், அதனுடைய எந்தத் தன்மையையும் இழக்காமல் மறைந்து காணப்பட்டது. இதைத்தான் பவுல் பிலிப்பியர் 2:7ல் அவர் ‘தம்மைத்தாமே வெறுமையாக்கி’ என்ற பதங்களின் மூலம் விளக்கியிருக்கிறார்.

தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

இயேசு பலதடவைகள் தன்னுடைய தெய்வீகத்தில் கிரியைகளைச் செய்திருப்பதை வேதத்தில் வாசிக்கிறோம். அவர் கானாவில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றினார். தண்ணீரில் நடந்தார். அநேகருடைய நோய்களைத் தீர்த்தார். மக்கள் கண்முன் அவரைப் பிடிக்கமுடியாதபடி மறைந்தார். மரித்தவர்களை உயிர்த்தெழச் செய்தார். தானே மரித்து உயிர்த்தெழுந்தார். இதெல்லாம் அவருடைய தெய்வீக நடவடிக்கைகள். இதையெல்லாம் அவர் செய்தபோதும் மக்களின் கண்கள் குருடாகி அவரை தேவனாக ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு தெய்வீகம் அவரில் மறைந்திருந்தது. இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் ஒரு தீர்க்கதரிசியாகவோ, நல்ல போதகராகவோ அல்லது கடவுளால் அனுப்பப்பட்ட மனிதராகவோ மட்டுமே பார்க்க முடிந்தது. அவரைக் கடவுளாக ஏற்றுக்கொள்ள அவர்களுடைய இருதயம் இடங்கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்துவை பெண்ணுக்கு மகனாகப் பிறந்த கர்த்தரின் ஒரே பேரான குமாரனாக, திரித்துவத்தின் இரண்டாம் நபராக, தெய்வீகத்தையும் மானுடத்தையும் தன்னில் கொண்டிருந்த தேவமனிதனாக, அடிமையைப் போன்று தம்மை வெறுமையாக்கிப் பணிசெய்தவராக ஏற்றுக்கொள்ள மறுத்தால் கிறிஸ்தவம் இல்லாமல் போய்விடும். மாம்சத்தின் புலனுக்கு எட்டாத இந்த தேவஇரகசியத்தை நிராகரிப்போமானால் கிறிஸ்தவம் புறஜாதி மதத்தைப் போலாகிவிடும். திரித்துவப் போதனை கிறிஸ்தவ விசுவாசத்தின் அடிப்படைப் போதனை. அதில் குளறுபடியான எண்ணங்களைக் கொண்டிராமல் வேதம் விளக்குகின்றவிதத்தில் அதை விசுவாசியுங்கள்.

1689 விசுவாச அறிக்கை அதுபற்றித் தரும் அருமையான விளக்கத்தைக் கவனியுங்கள்.

கடவுளுடைய குமாரனாகிய பரிசுத்த திரித்துவத்தின் இரண்டாம் நபரே இவ்வுலகத்தை படைத்து, தான் படைத்த அனைத்தையும் தாங்கி ஆளுகை செய்யும் தெய்வீக நபராவார். அவரே மெய்யான, நித்திய தேவனும், பிதாவின் மகிமையின் பிரகாசமானவரும், பிதாவின் அதே சாரத்தைக் கொண்டவரும், அவருக்கு சமமானவருமாவார். இவரே, குறிக்கப்பட்ட காலத்தில் மனித சுபாவத்தை அதன் எல்லா அடிப்படைக் குணாதிசயங்களோடும், அதற்குரிய எல்லா இயலாமைகளோடும், பாவம் நீங்கலாக தன் மீது சுமந்தார். யூதா கோத்திரத்துப் பெண்மணியான மரியாளின் மீது பரிசுத்த ஆவியானவர் வந்தபோது, உன்னதமானவருடைய வல்லமை அவள் மீது நிழலிட்டபோது கன்னிமரியாளின் கர்ப்பத்திலே அவர் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார். மேலும், வேதம் சொல்வதுபோல் அவர் ஸ்திரீயினிடத்தில் பிறந்தவரும் ஆபிரகாம் மற்றும் தாவீதினுடைய சந்ததியுமானார். இவ்விதமாக முழுமையான, பூரணமான, முற்றிலும் வேறுபட்ட தெய்வீக மற்றும் மானிடத்தன்மைகளாகிய இவ்விரண்டும் ஒரே நபரில் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டது. இருந்தபோதும், இவ்விரண்டு தன்மைகளும் ஒரு தன்மை இன்னொரு தன்மையாக மாற்றமடையாமலும், ஒன்றோடொன்று கலந்துவிடாமலும், வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் எந்தவிதக் குழப்பமுமில்லாமல் அவரில் காணப்படுகின்றன. இப்படியாக, கடவுளுடைய குமாரன் இப்போது மெய்யான தேவனாகவும், மெய்யான மனிதனாகவும் இருக்கும் வேளையில் கடவுளுக்கும் மனிதனுக்கு மிடையில் மத்தியஸ்தராகிய ஒரே கிறிஸ்துவாகவும் இருக்கிறார்.

(1689 விசுவாச அறிக்கை, அதிகாரம் 8, பத்தி 2)

யோவான் 1:1-5; 10-11
1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக் கொள்ளவில்லை.

10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s