எங்கே போய்விட்டது வேதப்பிரசங்கம்

இன்று நம்மினத்தில் கிறிஸ்தவம் இருக்கும் நிலைபற்றி இவ்விதழில் பல தடவை எழுதியிருக்கிறேன். அது தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எண்ணிலடங்காத அத்தாட்சிகள் இருக்கின்றன. கிறிஸ்துவைவைத்து வாழ்க்கை நடத்துகிறவர்களே பெரும்பாலான ஊழியக்காரர்கள். மித்தம் மீதமிருக்கிறவர்களுக்கு சரியான வழிநடத்தலும், போதனையும், அழைப்பும், பயிற்சியும் கிடைக்காததால் தங்களுக்குத் தெரிந்ததை, சரியெனப்பட்டதை தன்தன் வழியில்போய் செய்துவருகிறார்கள். அதனால், தலைநிமிர முடியாத நிலையில் கிறிஸ்தவ ஊழியங்கள் இருப்பதோடு, ஆத்துமாக்கள் சத்தியம் கிடைக்க வழியில்லாமல் தல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆத்தும ஆதாயத்துக்கும், ஆத்தும விருத்திக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது வேதப்பிரசங்கமும், வேதபோதனையும். இதன் மூலம் மட்டுமே கர்த்தர் பாவிகளுக்கு இரட்சிப்பை அளித்து, விசுவாசிகள் ஆவிக்குரிய வளர்ச்சியடைய வழிசெய்து வருகிறார். அதனால் வேதப்பிரசங்கமும், வேதபோதனையும் வேதபூர்வமாக இருப்பது மிகவும் அவசியம். வேதப்பிரசங்கத்தையும் வேதபோதனையும் தவிர்த்து வேறுசில கிருபையின் நியமனங்களையும், அதாவது ஜெபம், ஆராதனை போன்றவற்றையும் கர்த்தர் ஆத்தும விருத்திக்காகப் பயன்படுத்தி வந்தபோதும் வேதப்பிரசங்கத்தையும், வேதபோதனையையும் இந்த விஷயத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறார். ஆத்தும ஆதாயத்துக்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் இதில் அக்கறை காட்டாமல் வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தி வருகிறவர்களே இன்று ஏராளம். அநேகர் ஊழியங்களில் பயன்படுத்தி வரும் வேறு எந்தக் காரியத்தையும் கர்த்தர் ஆத்தும ஆதாயத்துக்காகப் பயன்படுத்துவதில்லை. பாடல்களுக்கும், இசைக்கும் ஆராதனையில் ஓரளவுக்கு இடமிருந்தபோதும் அவை ஆத்தும ஆதாயத்துக்கு உதவாதவை. ஜெபத்திற்கும் ஆராதனையில் இடமிருந்தபோதும் ஆத்தும ஆதாயத்துக்கு கர்த்தர் அதை நேரடியாகப் பயன்படுத்துவதில்லை. அதாவது ஆத்தும ஆதாயத்துக்கு நேரடியாகக் கர்த்தர் பயன்படுத்தும் கருவியை ஒதுக்கிவைத்துவிட்டு ஜெபத்தை மட்டும் செய்துகொண்டிருப்பதால் எந்த ஆத்துமாவும் இரட்சிப்படையப் போவதில்லை; ஆத்துமாக்கள் ஆத்தும வளர்ச்சியடையப் போவதில்லை. கர்த்தர் ஆத்தும ஆதாயத்துக்குப் பயன்படுத்துகின்ற ஒரே கருவி வேதவார்த்தைகள் மட்டுமே. அதுவும் அது பிரசங்கத்தின் மூலமும் போதனை மூலமும் கொடுக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அநேகர் ஊழியத்தைச் சுயநலத்துக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதை இனங்கண்டு கொள்வது அப்படியொன்றும் கடினமான காரியமல்ல. எந்த ஊழியத்தில் காணிக்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட்டு அதைக்கேட்டுப் பெற்றுக்கொள்வதில் தீவிர நாட்டம் காட்டப்படுகிறதோ அது நிச்சயம் கர்த்தரின் ஊழியமல்ல; அது கள்ளப்போதகர்கள் திட்டமிட்டு நடத்திவரும் சுயநல ஆத்துமப் பணவசூல் மட்டுமே. இதை அவர்கள் எந்தவிதத்திலும் மறைக்காமல் வெளிப்படையாக செய்துவருவதற்குக் காரணம் நம்மினத்தவர்கள் மிக இலகுவாக ஏமாறிவிடுகின்ற தன்மையைக் கொண்டிருப்பதால்தான். நான்கு வருடங்களுக்கு ஒருதடவை அரசியல்வாதி எத்தனையோ வாக்குறுதிகளை அள்ளித் தெறிக்கின்றபோது, அவர்கள் கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை எந்தவிதத்திலும் நிறைவேற்றாமல் போயிருந்தபோதும் மறுபடியும் அவர்களுக்கு நாம் வாக்களித்துவிடுகிறோம் இல்லையா? அதைப்போலத்தான் போலிகளை இனங்கண்டுகொள்கின்ற பக்குவமும் நிதானமும் இல்லாமல், ஊழியக்காரர்கள் என்ற போர்வையில் திரிகிறவர்கள் கையில் நாம் விழுந்து ஏமாந்து போகிறோம்.

ஆத்தும ஆதாயத்திற்கும், ஆத்தும வளர்ச்சிக்கும் அவசியமான, வேதவசனங்களில் தேர்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ளுவதில் போலிப்போதகர்களும், சோம்பேறி ஊழியக்காரர்களும் அக்கறைகாட்ட மாட்டார்கள். சமீபத்தில் நான் செய்திகள் அளித்த ஒரு போதகர்களுக்கான கூட்டத்தில் ஒரு போதகர் சரியாக சாப்பாட்டு நேரத்திற்கு வந்து சேர்ந்தார். கூட்டம் நடப்பதுபற்றி அவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்தபோதும் அதிலெல்லாம் அவருக்கு அக்கறையில்லை. இருந்தும், கிடைக்கும் சாப்பாட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவருக்கு அதிக அக்கறை இருந்தது. நிச்சயம் அந்த மனிதர் ஆத்துமாக்களைக் கரிசனையோடு வழிநடத்துகிற கர்த்தருக்கு விசுவாசமான போதகராக இருக்கமாட்டார்.

மெய்யாகவே கர்த்தரின் ஊழியத்துக்கு அழைக்கப்பட்டிருப்பவர்கள் வேத வசனங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எப்படி ஒரு டாக்டர் வைத்தியம் செய்வதில் தேர்ச்சிபெற்றிருப்பது அவசியமோ அதுபோலத்தான் பிரசங்கத்தில் ஈடுபடுகிற ஒரு போதகனும் வேதஅறிவில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். போலி வைத்தியன் எந்தவிதத்தில் நோயாளிக்கு ஆபத்தானவனாக இருந்துவிடுவானோ அதுபோலத்தான் ஒரு போலிப் போதகனும் ஆத்துமாக்களுக்கு ஆபத்தானவன். வேதவசனங்களில் தேர்ச்சி அடைந்திராத ஒருவனால் வேதவசனங்கள் தெரிந்திருப்பதுபோல் நடிக்கமட்டுமே முடியும்; எதாவது உண்மைக்குமாறான விளக்கங்களைக் கொடுத்து ஆத்துமாக்களை ஏமாற்ற மட்டுமே முடியும். வேதவசனங்களில் நல்லறிவு பெற்றிராத அந்த நபர் ஆத்துமாக்களை திசைதிருப்பி வேறுகாரியங்களில் கவனம் செலுத்தச் செய்வான். இது இன்று அநேக இடங்களில் அநியாயத்துக்கு சர்வசாதாரணமாகவே நடந்து வருகிறது.

இன்றைக்கு சபை சபையாகப் போலிக்கூட்டமொன்று கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் அதீத உணர்ச்சிக்கு மட்டும் இடங்கொடுத்து ஆராதனைவேளையில் கைகளைத்தட்டிக் கூப்பாடு போட்டு, சரீரசுகத்திற்கும், வாழ்க்கை வசதிக்காகவும் மட்டும் கர்த்தரைத் தேடி அலைந்துகொண்டிருப்பதற்குக் காரணம் வேதவசனங்களைக் கேட்டு மனந்திரும்புதலையும் மறுபிறப்பையும் அவர்கள் அடைந்திராததே. அத்தகைய இடங்களில் வேதவசனப்படி ஆணித்தரமான பிரசங்கங்களும், போதனையும் இல்லாததால் மெய்யான மறுபிறப்புக்கு வழியே இல்லை. இதை வாசிக்கிறபோது சிலர் அப்படியானால் அவர்கள் எல்லோருமே கிறிஸ்தவர்கள் இல்லையா, என்று எகத்தாளத்தோடு கேட்பார்கள்? அவர்களுக்கு நானளிக்கும் பதில்: “வேதவசனங்களை சத்தியமாகப் பிரசங்கிக்காமல் வேறுவழிகளில் மறுபிறப்பு கிடைக்க வழியிருக்கிறதா என்று வேதத்தில் இருந்து காட்டுங்கள்” என்பதுதான். என் பதிலுக்குக் காரணம் என்ன தெரியுமா? வேதவசனங்கள் சத்தியமாகப் பிரசங்கிக்கப்படாமல், அதைப் பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தாமல் வேறுவழிகளில் இரட்சிப்புக்கு வழியிருப்பதாக வேதம் காட்டாததால்தான். கர்த்தர் எதை நினைத்தாலும் அவரால் செய்ய முடியும் என்பது உண்மைதான்; அவரால் முடியாதது ஒன்றுமே இல்லை என்பதும் உண்மைதான்; இருந்தபோதும் மறுபிறப்பை அடைந்து முழு இரட்சிப்பை பாவி அனுபவிக்க பரிசுத்த ஆவியானவர் பயன்படுத்தும்படி, கர்த்தர் வேதப்பிரசங்கத்தை மட்டுமே கருவியாக ஏற்படுத்தியிருக்கிறார். அதை அலட்சியப்படுத்தி அல்லது வெறுமனே போக்குக்குப் பயன்படுத்தி சாட்சிகளையும், வேதஆதாரமற்ற கலப்பட செய்திகளையும் கொடுத்து வருகிறபோது பரிசுத்த ஆவியானவர் அந்த இடங்களுக்கு துப்புரவாக வருவதில்லை. வேதம் அதிகாரத்தோடும், தேவபயத்தோடும், பரிசுத்தத்தோடும், உண்மையோடும், பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் சத்தியமாகப் பிரசங்கிக்கப்படாத இடங்களில் பாவிகளின் மனந்திரும்புதலுக்கும் இரட்சிப்புக்கும் வழியே இல்லை. இந்தக் காரணத்தால்தான் இரட்சிப்படைந்திருக்கிறேன் என்று ஞானஸ்நானம் கேட்டுவருகிற எவரிடமும் மெய்ப்போதகர்களும், மெய்யான சபைகளும், இயேசுவைப் பற்றி உன்னால் என்ன சொல்லமுடியும் என்றும், இயேசு உன்னில் என்ன செய்திருக்கிறார் என்றும் தெளிவாக அதேவேளை சுருக்கமாக விளக்கும்படிக் கேட்பார்கள். அப்படிக் கேட்பதன் மூலம் மெய்ப்போதகர்கள் அந்த நபரில் மெய்யான மறுபிறப்பு நிகழ்ந்திருக்கிறதா என்பதை அவர்கள் விளக்கத்தின் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுகிறார்கள். அந்த நபரால் வேத அடிப்படையில் விளக்கங்கொடுக்க முடியாவிட்டால் அவருடைய மனந்திரும்புதலை நம்புவது கடினம். எந்த நபரால் தனக்குள் நேர்திருக்கும் அசாதாரண மாற்றத்தை வேதபூர்வமாக விளக்கமுடியவில்லையோ அந்த நபருக்கு ஞானஸ்நானம் கொடுப்பது தவறு.

சத்திய வசனத்தால் மட்டும் வரும் இரட்சிப்பு

இதுவரை நான் விளக்கியதிலிருந்து எந்தளவுக்கு மெய்யான வேதப்பிரசங்கமும், போதனையும் சுவிசேஷத்தை அறிவிக்கவும், ஆத்துமாக்களுக்கு போதிக்கவும் அவசியம் என்பதை ஓரளவுக்கு உணர்ந்திருப்பீர்கள். கர்த்தர் மெய்யான வேதப்பிரசங்கத்தையே மனிதன் இரட்சிப்படையப் பயன்படுத்துகிறார் என்பதை விளக்கும் ஒரு சில வசனங்களைக் கவனிப்போம்.

கொலோசெயர் 1:3-8

3. கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, 4. பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், 5. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். 6. அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; 7. அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; 8. ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான்.

இந்த வசனங்களில் பவுல் கொலோசெயரின் கிறிஸ்தவ விசுவாசத்தை (வசனம் 3) விளக்குகிறார். அது எப்படிப்பட்ட விசுவாசம்? 6வது வசனத்தில் பவுல் அதற்குப் பதிலளிக்கிறார். அந்த விசுவாசத்தை அவர்கள் அடைவதற்கு சத்திய வசனமாகிய சுவிசேஷத்தைக் கேட்க வேண்டியிருந்தது. அந்த சத்தியத்தின் மூலம் அவர்கள் தேவகிருபையைப் பற்றி அறிந்துகொண்டார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த சத்தியம் அவர்களில் பலன்தருகிறதாயிருந்தது. ஆங்கில வேதத்தில் இந்த வார்த்தைகள் பின்வரும்வகையில் இருக்கின்றன – the word of truth of the gospel which has come to you . . . and is bringing forth fruit and growing as it is also among you since the day you heard and knew the truth.

பவுல் இந்த வசனங்களில் மிகத் தெளிவாக கொலோசெயரின் விசுவாசத்திற்கான காரணி கிறிஸ்துவின் சத்தியமாகிய சுவிசேஷம் என்பதை விளக்குகிறார். அந்த சுவிசேஷ சத்தியம் அவர்களில் கிரியை செய்து ஆவிக்குரிய பலனளிப்பதாக இருந்திருக்கிறது. அந்த சத்தியத்தைத் தவிர வேறெதுவும் அவர்களுக்கு தேவகிருபையை அறிந்து பலனளிக்க உதவியதாகப் பவுல் கூறவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆத்துமவிருத்திக்காக அவர்கள் இரட்சிப்படைவதற்குக் கருவியாக இருந்த அந்த சத்தியத்தில் நிரம்பி வளரவேண்டும் என்றும் 9ம் வசனத்தில் பவுல் தான் கர்த்தரிடம் ஜெபிப்பதாகச் சொல்லுகிறார். இரட்சிப்புக்கும், ஆத்தும விருத்திக்கும் இங்கே அவசியமாகக் காட்டப்பட்டிருப்பது கர்த்தரின் சத்தியவசனங்கள் மட்டுமே.

இன்னுமொரு வசனத்தையும் கவனிப்போம். எபேசியர் 1:13:

நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.

ஏற்கனவே கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் விளக்கிய அதே உண்மையை பவுல் இங்கே சுருக்கமாகத் தந்திருக்கிறார். எபேசியர் விசுவாசிகளாக மாறுவதற்குக் காரணியாக இருந்தது சுவிசேஷமாகிய சத்திய வசனம் என்கிறார் பவுல். இந்த வசனத்திலும் இந்த வசனம் காணப்படும் பகுதியிலும் வேறெந்தக் காரணியும் அவர்கள் விசுவாசத்தை அடையப் பயன்பட்டதாக பவுல் விளக்கவில்லை என்பதைக் கவனியுங்கள்.

இந்தளவுக்கு வேதம், சத்திய வசனத்தைப் பாவியான மனிதன் இரட்சிப்பு அடையக் கர்த்தர் பயன்படுத்துவதாகக் கூறுவதால்தான் சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தர் ஒருமுறை, ‘நான் செய்ததெல்லாம் வசனத்தை அவர்களுக்குப் பிரசங்கித்ததுதான், அதற்கு மேல் நான் ஒன்றையுமே செய்யவில்லை’ என்றார். அது எத்தனை உண்மை. லூத்தர் கர்த்தரின் வசனத்தில் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார். வேதம் சொல்லுவதுபோல், அதுவே ‘மனிதனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு தேவபலனாக இருக்கிறது’ (ரோமர் 1:16). பவுல் இன்னொரு இடத்தில் தெசலோனிக்கேயர் கர்த்தரை விசுவாசித்தவிதத்தைப் பற்றி விளக்கும்போது, 1 தெசலோனிக்கேயர் 1:5-7,

5. எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள் நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 6. நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 7. இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.

இங்கே பவுல் சுவிசேஷம் வசனத்தின் மூலமாக வந்தபோதும், அது பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், முழு நிச்சயத்தோடும் வந்து தெசலோனிக்கேயர் வசனத்தை விசுவாசித்து ஏற்றுக்கொண்டு கர்த்தரைப் பின்பற்றத் துணைபுரிந்தது என்கிறார்.

இத்தனையும் இரட்சிப்புக்கான வார்த்தையின் இன்றியமையாத அவசியத்தைப் பற்றிய உண்மையாக இருப்பதால்தான் பவுல் ரோமர் 10ம் அதிகாரத்தில் சந்தேகமில்லாதவகையில் ஆணித்தரமாக பின்வருமாறு விளக்குகிறார்.

8. இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. 9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 11. அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 12. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13. ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்.

இந்தப் பகுதியில் விசுவாசத்திற்கு அடித்தளமாக இருந்ததாக பவுல் காட்டுவது கர்த்தரின் வார்த்தை என்பதை 8ம் வசனத்தில் கவனியுங்கள். வார்த்தையின் மூலமாகவே விசுவாசத்திற்கான வழியேற்பட்டது. வார்த்தையைத் (வேதவசனங்களை) தவிர வேறு எதையும் விசுவாசத்திற்கான வழியாகப் பவுல் காட்டவில்லை. இம்முறையில் வார்த்தையின் அவசியத்தை விளக்கிய பவுல் தொடர்ந்து அதை இன்னொருவிதத்தில் தனக்கேயுரிய எழுத்துநடையில் அழகாக விளக்குகிறார்.

14. அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15. அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.

வேதமறிந்த கிறிஸ்தவர்கள் எல்லோருக்கும் இந்த வசனங்கள் பரீட்சயமானவை. எத்தனை அழகாகப் பழைய ஏற்பாட்டு வசனமொன்றை நினைவுறுத்தி வேதவார்த்தைப் பிரசங்கத்தின் அவசியத்தையும், அதன் இன்றியமையாத தன்மையையும் பவுல் இங்கே விளக்கியிருக்கிறார்.

இந்தளவுக்கு வேதம் மனிதன் இரட்சிப்படையவும், ஆத்துமவிருத்தியடையவும் சத்தியவசனமே வல்லமையான கருவியாக இருப்பதாக விளக்குகிறபோது அந்த வேதவசனத்தைப் பயன்படுத்தி சுவிசேஷத்தையும் போதனையையும் அளிக்கின்ற பிரசங்கத்தைச் செய்வதில் சொதப்பல் மன்னர்களாக நம்மினத்துப் பிரசங்கிகள் இருப்பது வெட்கப்பட வேண்டியது மட்டுமல்ல, அது எத்தனைப் பெரிய பாவமான காரியம்.

வேதவசனங்களை விளங்கிப் பயன்படுத்த வேண்டிய முறை

வேத வசனமே மனிதனின் இரட்சிப்பிற்காகக் கர்த்தர் பயன்படுத்துகின்ற கருவி என்பது இப்போது தெளிவாகப் புரிகிறதல்லவா? அப்படியானால் அதை எப்படிப் பிரசங்கத்திலும் போதனையளிப்பதிலும் பயன்படுத்தவேண்டும்? அதன் மூலம் எப்படி நாம் கர்த்தரை மகிமைப்படுத்த வேண்டும் என்பதை இனிக் கவனிப்போம்.

வேதவசனங்களை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது எல்லாக் கிறிஸ்தவர்களினுடைய கடமை. அதைப் புரிந்துகொள்ளாமல் கர்த்தரின் சித்தத்தை அறிந்துகொள்ள முடியாது. சரிவர வேதத்தை வாசித்துப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கும் எவரும் குறைபாடுள்ள வாழ்க்கையையே வாழ்ந்து வருவார்கள். அவர்களால் கர்த்தருக்கு, அவருடைய வார்த்தை எதிர்பார்க்கும்விதத்தில் அனைத்துக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய முடியாது; அவர்களால் ஆவிக்குரியவிதத்தில் பரிசுத்தத்தில் வளர வழியில்லை; தங்களுடைய இரட்சிப்பை நிச்சயப்படுத்திக்கொள்ளும் பக்குவமும் அவர்களுக்கு இருக்காது. இன்று அநேக ஆத்துமாக்களுக்கு வேதம் தெரியாமல் இருப்பதற்குக் காரணம் வேதத்தைப் பகுத்துப் போதித்து விளக்கும் பிரசங்கிகளும், திருச்சபைகளும் நம்மினத்தில் அரிதாக இருப்பதே. ஆத்துமாக்கள் வேதத்தை முறையாகக் கையாளும் அளவுக்கு அவர்களுக்குப் போதித்து வழிநடத்துபவர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் மட்டுமே இருக்கிறார்கள்.

அதேவேளை வேதத்தைக் கையாண்டு ஆத்துமாக்கள் முன் நின்று பிரசங்கித்தும், போதித்தும் அவர்களை வழிநடத்துகிறவர்கள் வேதம் தெரியாமல் இருந்துவிட முடியாது. வேதம் தெரியாமல் பிரசங்கம் செய்து ஒரு சிறுபிள்ளைக்குக்கூட இடறலாக இருக்கிறவன் தன் கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டு கடலின் ஆழத்தில் விழுந்துவிடுவது நலமாக இருக்கும் என்று இயேசு சொல்லியிருக்கிறார் (மத்தேயு 18:6). ஆகவே, பிரசங்கம் செய்கிறவர்களுக்கு வேதத்தில் நல்லறிவு இருக்கவேண்டும்; தவறின்றி அதைக்கற்றுத் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்; அதை ஆத்துமாக்களுக்கு அவசியமானவிதத்தில் நிதானத்தோடும், பக்குவத்தோடும் பகுத்துப்போதிக்கும் ஆற்றலுள்ளவனாக இருக்கவேண்டும். அதை அவன் ஆவியின் வல்லமையோடு செய்கிறவனாக இருக்கவேண்டும்.

ஒரு பிரசங்கி வேதத்தை சரியாக விளங்கிக்கொண்டு பிரசங்கிக்க என்ன செய்யவேண்டும்? இனி நாம் கவனிக்கப்போவது எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் அவசியம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். இருந்தபோதும் பிரசங்கிக்கிறவனுக்கு இது இன்றியமையாதது. இந்தவிஷயத்தோடு தொடர்புடைய எத்தனையோ அவசியமான அம்சங்கள் இருந்தபோதும் ஒரு வசனத்தையோ அல்லது சில வசனங்களையோ எடுத்து அதிலிருந்து பிரசங்கம் தயாரிக்க முற்படும்போது அடிப்படையில் பிரசங்கி செய்யவேண்டிய காரியங்களை மட்டும் இங்கே படிப்படியாக விளக்கவிரும்புகிறேன். இந்த விஷயத்திலேயே பெரும்பாலானோர் தவறுவிடுவது மட்டுமல்லாமல் அதைச் செய்வது எப்படி என்ற விபரமே தெரியாமல் இருக்கிறார்கள்.

(1) எடுத்துக்கொண்டிருக்கும் வசனத்தையோ அல்லது வசனங்களையோ மிகக் கவனத்தோடு ஆராய்ந்து அதன் மூலம் பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்லுகிறார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இது சொல்லுவதற்கு சுலபமாக இருந்தபோதும் இந்த ஆரம்ப விஷயமே மிகவும் நேரத்தை செலவிட்டு ஆராயவேண்டிய விஷயமாக இருக்கின்றது. அந்த வசனத்தையோ வசனங்களையோ ஆராயும்போது அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைப்பிரயோகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு யோவான் 3:3 வசனத்தைப் பயன்படுத்தி ஒரு பிரசங்கத்தைக் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம் என்றால் அந்த வசனத்தை முறையாக ஆராய்ந்து விளங்கிக்கொள்ளுவது அவசியம்.

இயேசு அவனுக்கு பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

இந்த வசனத்தின் இலக்கண அமைப்பு, வார்த்தைகளுக்கான அர்த்தம், அவை பயன்படுத்தப்பட்டிருக்கும் முறை, வசனத்தின் மூலம் தரப்பட்டிருக்கும் விளக்கம் அனைத்தையும் கவனத்தோடு ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும். ஒரு பிரசங்கி இந்த இடத்தில் ஒரு கல்லூரி மாணவனைப்போலத் தன்னைக் கருதிக் கவனத்தோடு வசனத்தைப் படிக்கவேண்டும். இந்த வசனத்தில் முக்கியமாக சொல்லப்பட்டிருப்பது, ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைய முடியாது என்பதுதான். இதை இயேசு கிறிஸ்து ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இருந்தபோதும் சொல்லப்பட்டிருக்கும் சத்தியத்தில் பொதிந்து உள்ளடக்கமாகக் காணப்படும் உண்மைகளைத் தெரிந்துகொள்ள வார்த்தைகளினதும், வசனத்தினதும் இலக்கண அமைப்பை ஆராய்வது அவசியம். மேலெழுந்தவாரியாக வசனத்தை வாசித்துவிட்டு இதைத்தான் அது விளக்குகிறது என்று உடனடியாக முடிவெடுத்துவிடக்கூடாது. மேலெழுந்தவாரியாக வசனத்தை வாசிக்கும்போது அது வெளிப்படுத்தும் உண்மை வெளிப்படையாகத் தெரிந்தபோதும், நாம் செய்யவேண்டிய, வசனத்தை ஆராயும் கடமையை நாம் ஒதுக்கிவைத்துவிடக்கூடாது. ஒரு விமானி எத்தனையோ தடவைகள் விமானத்தை இயக்கியிருந்தபோதும், ஒவ்வொருதடவையும் ஒரு செக் லிஸ்டைக் கையில் வைத்திருந்து அதிலிருக்கும் முறையில் செய்யவேண்டிய அனைத்தையும் சரிபார்த்து டிக் செய்த பிறகே விமானத்தை நகர்த்த ஆரம்பிப்பார். நேற்றும் இதைத்தானே செய்திருக்கிறேன் என்று லிஸ்டை சரிபார்க்காமல் ஒரு விமானியும் விமானத்தை நகர்த்துவதில்லை. அப்படியிருக்கும்போது ஆத்துமாக்களின் இருதயத்தைத் தொடவேண்டிய பிரசங்கத்தைத் தயாரிக்கும் பிரசங்கி, வசனத்தை ஆராயும் கடமையில் இருந்து எப்படித் தவறமுடியும்?

வேதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பில் வேதவசனங்களில் அழுத்தம் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கும். அதனால் நல்ல ஆங்கில மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தி (NKJV, NASB, ESV) வசனத்தின் இலக்கண அமைப்பை ஆராய வேண்டும். இந்த வசனத்தை (யோவான் 3:3) ஆராய்கிறபோது தேவனுடைய இராஜ்யம் என்பது கர்த்தருடைய ஆளுகைக்குள் வருவது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்னொருவிதத்தில் சொல்லப்போனால் பரலோக வாழ்க்கையை, நித்திய ஜீவனை அடைவது எனலாம். தேவனுடைய இராஜ்யம் என்ற பதம் வேதத்தின் ஏனைய இடங்களில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஒத்தவாக்கிய அகராதியை வைத்து ஆராய்கிறபோது இதைத் தெரிந்துகொள்ளலாம். இந்த இடத்தில் அந்தப் பதம் அந்த அர்த்தத்தில்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இந்த வசனத்தில் காணப்படும் இன்னொரு வார்த்தைப்பிரயோகம் நமக்கு விளக்குகிறது. அந்த வார்த்தைப்பிரயோகம் ‘மறுபடியும் பிறவாவிட்டால்’ என்பதே. இதன் மூலம் ஒரு பதம் பல அர்த்தங்களில் வேதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதையும், அந்தப் பதம் ஒரு வசனத்தில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அந்த வசனத்தில் காணப்படும் ஏனைய வார்த்தைப்பிரயோகங்களும் வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயமும் தீர்மானிக்கின்றன என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

‘மறுபடியும் பிறவாவிட்டால்’ என்ற வார்த்தைப்பிரயோகம் இந்த வசனத்தில் மிக முக்கியமானது. ஒருவன் மீளவும் பிறப்பது என்பது இதற்கு மேலெழுந்தவாரியாகப் பார்க்கிறபோது அர்த்தமாக இருக்கிறது. இந்த வார்த்தைப்பிரயோகம் எத்தகைய பிறப்பைப் பற்றி விளக்குகிறது என்பதை இதை ஆராய்கிறபோது தெரிந்துகொள்ள முடிகிறது. கிரேக்க மூலத்தில் இந்த வார்த்தைப்பிரயோகம் ஒரே வார்த்தையாக இருக்கிறது. ஆங்கிலத்தில் இது ‘born again’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எழுத்துபூர்வமாகப் பார்த்தால் இதற்கு ‘born from above’ என்று அர்த்தம். இந்த வார்த்தைப்பிரயோகம் புதிய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரால் இரண்டு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மேலும் ஒத்தவாக்கிய அகராதியை வைத்து ஆராய்கிறபோது தெரிந்துகொள்ளுகிறோம். அந்த வசனம் யாக்கோபு 1:18.

அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜநிப்பித்தார்.

இங்கே ‘ஜநிப்பித்தார்’ (brought us forth – NKJV, NASB, ESV) என்ற வார்த்தைப்பிரயோகமே யோவான் 3:3ல் ‘மறுபடியும் பிறக்காவிட்டால்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கிரேக்க மூலத்தில் காணப்படும் ஒரே வார்த்தையே இரண்டு இடங்களிலும் வெவ்வேறு விதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதும் இரண்டு பகுதிகளும் ஒரே விஷயத்தையே விளக்குகின்றன. நல்ல தமிழில் இதை ‘உயிர்ப்பித்தார்’ என்று விளக்கலாம். ஜநிப்பித்தார் என்பது வடமொழி. மேலும் இந்த வார்த்தைப்பிரயோகத்தின் பயன்பாட்டை யோவான் 3:3ல் காணப்படும் பகுதியின் அடிப்படையில் ஆராய்கிறபோது அது ஆண்டவர் ஒருவருக்கு ஆவிக்குரிய ஜீவனைக் கொடுப்பதைக் குறிக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுகிறோம். ஆங்கிலத்தில் இந்த வார்த்தைப்பிரயோகத்திற்கு Regeneration என்று பெயர். தமிழில் இதை மறுபிறப்பு என்று அழைக்கிறோம். இத்தோடு இந்த வசனம் பற்றிய விஷயம் முடிந்துவிடவில்லை.

‘மறுபடியும் பிறக்காவிட்டால்’ என்ற வார்த்தைப்பிரயோகத்தைத் தொடர்ந்து இலக்கண அடிப்படையில் ஆராய்ந்து பார்க்கும்போது அது ஒருவர் தனக்குள் செய்துகொள்ளுகிற அனுபவமாக விளக்கப்படவில்லை. அதை வெளியில் இருந்து வேறொருவர் ஒருவரில் செய்கின்ற கிரியையாக அது விளக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மறுபிறப்பாகிய அனுபவத்தை நாமே நமக்குள் உண்டாக்கிக்கொள்ள முடியாதென்றும், அது நாம் அடைய வேண்டிய அனுபவமாக இருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்கிறோம். அதனால் தான் இயேசு ‘ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால்’ என்று கூறியிருக்கிறார். அதாவது வெளியில் இருந்து அது ஒருவனுக்குள் நிகழவேண்டும் என்ற அர்த்தத்தில் அதைச் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைப்பிரயோகத்தின் இலக்கண அமைப்பு இன்னுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது. அதாவது, இந்த மறுபிறப்பு ஒருவரில் ஒரேதடவை நிகழ்ந்து நிறைவேறுகிறதாக காணப்படுகின்றது. அது பங்கு பங்காக, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவரில் நிகழாமல் ஒரே நேரத்தில் நடந்து முடிகின்றதாக இருக்கின்றது.

மேலும் இந்த வார்த்தைப்பிரயோகத்தின் இலக்கண அமைப்பு இந்த மறுபிறப்பு ஒருவரில் நிச்சயமாக நிகழ வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருக்கிறது. இந்த வசனத்தில் ஆங்கில மொழிபெயர்ப்பில் காணப்படும் ‘unless’ என்ற பதம் இதைத் தெளிவாகச் சுட்டுகிறதாக இருக்கிறது. அதாவது இந்த மறுபிறப்பு நிகழ்ந்தாலொழிய எவரும் நிச்சயமாக தேவ இராஜ்யத்துக்குள் நுழைய முடியாதென்கிறது இந்த வசனம். இது தமிழ் மொழிபெயர்ப்பில் ‘பிறவாவிட்டால்’ என்ற வார்த்தையில் அடங்கியிருக்கிறது. இதையெல்லாம் தமிழ்மொழிபெயர்ப்பை மட்டும் வாசிப்பதால் மட்டும் ஒருவரால் தெளிவாக அறிந்துகொள்ள முடியாது. அதற்கான தகுந்த ஆய்வில் ஒருவர் ஈடுபட்டால் மட்டுமே அது முடியும். இந்த மறுபிறப்பு நிகழ்ந்தேயாக வேண்டும் என்பதை இயேசு மறுபடியும் 7ம் வசனத்தில் விளக்குகிறார்.

நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.

இந்த வசனத்தை இலக்கண அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் கிரேக்க மூலத்தில் Dei என்ற சிறுவார்த்தை இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இது ஆங்கிலத்தில் must என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தையை இணைவார்த்தை என்பார்கள். அதாவது வார்த்தைகளை இணைத்து வசனத்தைப் பூர்த்திசெய்யும் வார்த்தை இது. ஆங்கிலத்தில் இத்தகைய வார்த்தைகளை conjunction என்பார்கள். இந்த வார்த்தைகளை நாம் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது. இவை வசனத்தையே மாற்றிவிடும் தன்மை கொண்டவை. அதுமட்டுமல்லாமல் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுத்து வசனத்தில் அதன் உரிமையாளர் சொல்ல வந்த செய்தியை ஆணித்தரமாகத் தவறின்றிச் சொல்ல உதவுகின்றன. இந்த ஆங்கில வார்த்தையான must தமிழ் வேதத்தில் 3:7ல் ‘மறுபடியும் பிறக்கவேண்டும்’ என்ற வார்த்தைப்பிரயோகத்தின் இறுதியில் மறைந்து காணப்படுகிறது. கிரேக்கத்திலோ, ஆங்கிலத்திலோ இருப்பதுபோல் தனிவார்த்தையாக வசனத்தில் தனித்து நிற்கவில்லை. ஆகவே, தமிழில் வாசிக்கும்போது இது இருப்பதை ஒருவர் கவனிக்கத் தவறிவிடலாம். ஆனால், அந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் உண்மைக்கு இந்த சிறு வார்த்தை அடித்தளமாக இருக்கின்றது. அதாவது, இயேசு ஒருவன் மறுபடியும் பிறந்தே ஆகவேண்டும் அல்லது அவன் மறுபடியும் பிறந்தே ஆகவேண்டியது நிச்சயமாக அவசியமாக இருக்கிறது என்ற உண்மையை இந்த சிறுவார்த்தையின் மூலம் அப்பழுக்கின்றி அழுத்தமாகச் சொல்லுகிறார். 3:7ஐ கிரேக்க மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் எழுத்துபூர்வமாக மொழிபெயர்க்கும்போது அது, It is necessary for you to be born from above என்றிருக்க வேண்டும்.

இதுவரை நாம் எடுத்துக்கொண்டிருக்கும் வசனமாகிய யோவான் 3:3ஐ அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து அதன் மெய்யான அர்த்தத்தை, பரிசுத்த ஆவியானவர் அதன் மூலம் வெளிப்படுத்துகின்ற அர்த்தத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறோம். வேத வார்த்தைகளை விளங்கிக்கொள்ளுவதற்கு இதுதான் நாம் முதலில் செய்ய வேண்டிய பணி. இந்தப் பணியை ஆங்கிலத்தில் exegesis (எக்ஸஜீசிஸ்) என்று அழைப்பார்கள். இது ஒரு விஞ்ஞான நடவடிக்கை. அதாவது, வேதவசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து அவை அந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டு எத்தகைய விளக்கத்தைத் தருகின்றன என்று அறிந்துகொள்ளும் விஞ்ஞானமே இது. இது போதிப்பதற்கும், பிரசங்கம் செய்வதற்கும் அவசியமான முதல் கட்ட நடவடிக்கை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே பிரசங்கம் தயாரித்ததாகிவிடாது. இதை அடுத்து தொடராகச் செய்யவேண்டிய அநேக காரியங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆரம்ப நடவடிக்கையில் ஈடுபடாமல் நாம் மேலே போகக்கூடாது.

இதுவரை பார்த்தவற்றை அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கை, யோவான் 3:3 அமைந்து காணப்படும் சந்தர்ப்பமான 1-21 வரையிலான வசனங்களையும் இதுவரை பார்த்திருக்கும் விதத்தில் இலக்கணபூர்வமாகப் பகுதி பகுதியாக, அக்குவேறாக ஆராய்வது அவசியம். ஏனெனில் அந்த சந்தர்ப்பத்தின் (பகுதியின்) நடுவிலேயே இயேசு இந்த வசனத்தில் மறுபிறப்பின் அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறார். அப்படி 1-21 வரையிலும் உள்ள வசனங்களை முறையாக ஆராய்கிறபோது இந்த வசனத்தின் பின்னணியில் இருக்கும் அநேக அம்சங்களைத் தெரிந்துகொள்ள முடியும். நிக்கோதேமு இயேசுவிடம் வந்த காரணத்தையும், அவனுடைய கேள்விக்கான காரணத்தையும், இயேசு அவனுக்குப் பதிலளித்தவிதத்திற்கான காரணத்தையும், இயேசுவின் விளக்கங்களின் பொருளையும் இந்தப் பகுதியை ஆராய்ந்து பார்க்கும்போது தெரிந்துகொள்ளலாம்.

அதற்கு அடுத்த நடவடிக்கையாக இந்த வசனம் போதிக்கும் இறையியல் போதனையை ஆராய்வது அவசியம். வேதப்பிரசங்கத்தில் இறையியல் இல்லாமல் இருக்கக்கூடாது; இறையியல் தவறுகளும் இருக்கக்கூடாது. இந்த வசனம் இரட்சிப்பின் படிமுறை அம்சங்களில் ஒன்றான மறுபிறப்பாகிய இறையியல் போதனையை விளக்குகிறது. அதுபற்றி பிரசங்கி நன்கு கற்றறிந்திருக்கவேண்டும். மறுபிறப்பே இரட்சிப்பாகிவிடாது; இரட்சிப்பின் ஒரு படிமுறை அம்சமே மறுபிறப்பென்பதை அறிந்துவைத்திருக்கும் பிரசங்கிகள் எத்தனைபேர்? இறையியல் போதனை இல்லாமல் வேதப்பிரசங்கம் செய்யமுயல்கிறவனும், இறையியல் போதனையை அரவே அலட்சியம் செய்கிறவனும் நம்பக்கூடிய, விசுவாசிக்கக்கூடிய பிரசங்கியல்ல. வசனம் போதிக்கும் இறையியல் போதனையைத் தெள்ளத் தெளிவாக அறிந்துகொண்டு பிரசங்கம் தயாரிப்பதன் அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகவேண்டும். அதையெல்லாம் விளக்குவதல்ல இந்த ஆக்கத்தின் நோக்கம். பிரசங்கம் தயாரிப்பதற்கான ஆரம்ப நடவடிக்கையின் அவசியத்தை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்கம். அதைச்செய்யாமல்தான் இன்றைக்கு பிரசங்கம் என்ற பெயரில் மேடை மேடையாக அநேகர் உளறாட்டம் நடத்திவருகிறார்கள்.

வேத வசனங்களை முறையாக ஆராயாமல் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

(1) இந்தவிதமாக ஒரு வசனத்தை அல்லது வசனங்களை அதன் இலக்கண அடிப்படையில் பிரித்து ஆராய்ந்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவர் அதன் மூலம் என்ன சொல்லுகிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பரிசுத்த ஆவியானவர் சொல்லியிருப்பதை அறிந்துகொள்ளுவதைத் தவிர வேதத்தை வாசிக்கிறவனுக்கோ அல்லது பிரசங்கிக்கிறவனுக்கோ வேறு என்ன வேலை இருக்கிறது? ஆவியானவர் சொல்லுவதைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் ஒரு வசனத்தை மேலெழுந்தவாரியாக வாசித்துவிட்டு அது இதைத்தான் சொல்லுகிறது என்று நாம் ஏதோவொன்றை ஊகிப்பது பெரிய ஆபத்து மட்டுமல்ல அது வேதத்தை தந்திருக்கும் பரிசுத்த ஆவியானவரையே நிந்திக்கும் செயலாகும். இதனால்தான் 16ம் நூற்றாண்டில் சீர்திருத்தவாதிகள் இலக்கணபூர்வமாகவும், வரலாற்று அடிப்படையிலும் வேதவசனங்களை ஆராய்ந்து விளங்கிக்கொள்ள வேண்டும் (Grammatical – historical interpretation) என்ற அடிப்படைத் தத்துவத்தை வலியுறுத்தினார்கள். முக்கியமாக மார்டின் லூத்தர் இதை அறிமுகப்படுத்தி இதுவே சீர்திருத்தவாதத்தின் கத்தோலிக்க மதத்திற்கெதிரான பெரும் போராட்டங்களில் ஒன்றாகவும் பங்கு வகித்தது. அதற்கு முன்பு இந்த வகையில் வேதத்தை ஆராயாமல் கண்மூடித்தனமாக அதற்கு விளக்கங்கொடுத்து வரும் தவறானமுறையிருந்து வந்தது.

(2) இன்று அநேகர் யோவான் 3:3ல் இருந்து சுவிசேஷ செய்தி அளித்திருக்கிறார்கள். அதாவது, ஒருவன் மனந்திரும்பி ஏன் இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்று சுவிசேஷ அழைப்பு கொடுத்திருக்கிறார்கள். உண்மையில் யோவான் 3:1-21 வசனங்களில் சுவிசேஷ செய்தியளிக்கக்கூடிய அநேக வசனங்களும், பகுதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. 3:16 அதற்கு ஒரு நல்ல உதாரணம். இருந்தபோதும், 3:3ம் 3:7ம் சுவிசேஷ அழைப்பை நேரடியாகக் கொடுக்கும் வசனங்கள் அல்ல. இந்த வசனங்கள் மூலம் இயேசு நிக்கொதேமுவுக்கு இரட்சிப்பு பற்றிய மிகமுக்கியமானதொரு இறையியல் விளக்கத்தை அளிக்கிறார். அந்த விளக்கம் பழைய ஏற்பாட்டிலும் பல பகுதிகளிலும் காணப்பட்டபோதும், நிக்கொதேமு அதுபற்றிய விளக்கத்தை அறிந்திருக்கவில்லை; பழைய ஏற்பாட்டைப் போதிக்கிறவனாக இருந்திருந்தும் அதை உணரமுடியாதளவுக்கு அவன் இருந்திருக்கிறான். அந்த விளக்கம் நிக்கொதேமுவுக்கு அவசியமானதாக இருந்தது. ஆண்டவரின் கட்டளைகளை மட்டும் பின்பற்றி நல்வாழ்க்கை வாழ்ந்து இரட்சிப்பு அடைய முடியும் என்று நம்பிப் போதித்து வாழ்ந்துகொண்டிருந்த அவனுக்கு இயேசு அந்தவிதத்தில் இரட்சிப்பை அடைய முடியாது என்று சொல்லுகிறார். அதுமட்டுமல்லாமல் இரட்சிப்பை அடைவது என்பது மனிதனால் முடிகின்ற காரியமல்ல என்பதை அவனுக்கு உணர்த்துவதற்காகவே நீ மறுபடியும் பிறக்கவேண்டும் என்று இயேசு கூறினார். மறுபடியும் பிறப்பதென்பது ஆவியானவர் ஒருவனில் செய்கின்ற மறுபிறப்பாகிய ஆத்மீகக் கிரியை என்ற இறையியல் சத்தியத்தையே இந்த வசனம் விளக்குகிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் அநேகர் சுவிசேஷம் சொல்லுவதற்காக இந்த வசனத்தைப் பயன்படுத்தி, மனந்திரும்பவும், இயேசுவை விசுவாசிக்கவும் நீங்கள் தீர்மானம் எடுப்பீர்களானால் இரட்சிக்கப்படுவீர்கள் என்ற பொய்யைச் சொல்லிவருகிறார்கள். பாவியாகிய மனிதன் சுயத்தில் செய்யக்கூடியதொரு ஆத்மீகக் கிரியையை இந்த வசனம் விளக்காமல், ஆவியானவர் மட்டுமே செய்யக்கூடிய கிரியையை இது வலியுறுத்துகிறது. அப்படியிருக்கும்போது இந்த வசனத்தைப் பயன்படுத்தி சுவிசேஷ அழைப்புக் கொடுப்பது பெருந்தவறு.

(3) ஒரு வசனத்தையோ அல்லது சில வசனங்களையோ வைத்து பிரசங்கிக்கும்போது, அந்த வசனங்களை மேலெழுந்தவாரியாக மட்டும் வாசித்துவிட்டு, அந்த வசனங்களில் நேரடியாகவோ உள்ளார்ந்தவிதத்திலோ காணப்படாத ஒரு சத்தியத்தைக்கூடப் பிரசங்கிக்கின்றபோது, அது வேதத்தின் மூலம் கர்த்தர் சொல்லுவதை மட்டும் பிரசங்கிப்பதாகாது. சிலவேளைகளில் அந்த வசனங்களை வைத்து ஏதாவதொரு சத்தியத்தை மட்டும் ஒருவர் பிரசங்கித்து விடலாம். அப்படி அநேகர் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் சத்தியத்தைத்தான் பிரசங்கித்தாலும், அவர்கள் விளக்கும் சத்தியம் வேதத்தின் வேறிடங்களில் விளக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பிரசங்கிக்க எடுத்துக்கொண்டிருக்கும் பகுதியில் நேரடியாக அது காணப்படாததால் அவர்கள் பெருந்தவறு செய்கிறார்கள். அவர்கள் பொய் சொல்லவில்லைதான், இருந்தாலும் அவர்கள் ஆண்டவர் சொல்லியிருப்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளாமல் சோம்பேறித்தனத்தினால் வார்த்தையில் சொல்லியிருப்பதைப் பிரசங்கிக்கவில்லை. இது தவறான பிரசங்க முறை. இது பிரசங்கியின் சோம்பேறித்தனத்தையோ அல்லது இயலாமையையோ அல்லது ஞானமற்ற நிலையையோதான் சுட்டுகிறது.

(4) வசனத்தை ஆராய்ந்து விளங்கிக்கொண்டு அதிலிருப்பதை மட்டும் பிரசங்கிக்காதவர்கள் சத்தியத்தைப் பிரசங்கிக்காமல் தங்கள் மனதில்பட்ட சொந்த எண்ணங்களையே பிரசங்கிக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதால் ஆத்துமாக்களைப் போய்ச்சேர வேண்டிய கர்த்தரின் வார்த்தை அவர்களைப் போயடையாமல் போய்விடுகிறது. பிரசங்கிகள் என்ற போர்வையில் சோம்பேறித்தனத்தோடு செயல்படுகிறவர்களும், அலட்சிய மனப்பான்மையோடு பிரசங்கத்தை செய்கிறவர்களும், பிரசங்கப் பணியில் நல்ல தேர்ச்சி பெறாமல் ஆர்வக்கோளாறோடு அதில் நுழைந்து பிரசங்கம் செய்யத்தெரியாமல் செய்கிறவர்களும் கர்த்தரின் வார்த்தை ஆத்துமாக்களைப் போயடைவதற்கு பெருந்தடையாக, இடையூராக இருந்து வருகிறார்கள். இதனால் பாதிக்கப்படுகிறவர்கள் பாவிகளும், ஆத்துமாக்களுமே. இத்தகைய நிலையில் திருச்சபை வேதபூர்வமாக செயல்படுவதற்கும், பிரசங்கம் வேதத்தை மட்டும் சார்ந்திருப்பதற்கும் வழியில்லை.

(5) இன்னுமொரு முக்கிய தவறை நம்மினத்துப் பிரசங்கிகளிடம் காண்கிறேன். சமீபத்தில் ஆடியோவில் நான் கேட்ட ஒரு செய்தி அதை ஊர்ஜீதப்படுத்தியது. அதில் செய்தி கொடுத்த தமிழகத்து செய்தியாளர் நான் இதுவரை விளக்கிவந்திருக்கும் இலக்கண அடிப்படையிலும் இறையியல் அடிப்படையிலும் வேதத்தை ஆராய்ந்து படித்துத் தெளிவாகப் பிரசங்கிப்பதை ‘இன்டலெக்சுவல்’ போக்கு என்று நிராகரித்தார். அவரைப் பொறுத்தவரையில் (அவரே அதை விளக்கினார்) இப்படிச் செய்வதையெல்லாம் நிறுத்திவிட்டு வேத வசனங்களின் மூலம் கர்த்தர் இன்று நமக்கு என்ன சொல்லுகிறார், இன்றைய தேவை என்ன என்று கேட்க வேண்டும் என்கிறார். இது மிகவும் ஆபத்தான, மிஸ்டிஸிசப் போக்கு. அதாவது, வேதம் கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்ப சூழலை ஆராய்ந்து நிதானித்துப் படிக்காமல், அதன் மூலம் அமானுஷ்யப் போக்கில் அந்தந்தக் காலத்துக்கு கர்த்தர் தேவையான செய்தியைக் கொடுப்பதாக இந்த மனிதர் விளக்கினார். இதைத்தான் கெரிஸ்மெட்டிக் இயக்கம் செய்துவருகிறது. இந்தப் போக்கில் போனால் நாம் கற்பனையாக வேதத்தில் இல்லாத புதுப்புது விஷயங்களைத்தான் சொல்ல முற்படுவோம். நம்முடைய சூழ்நிலையில், நமது தேவைக்காக வேதம் என்ன சொல்லுகிறது என்பதை அதை இலக்கண வரலாற்றுபூர்வமாக ஆராய்ந்து படிக்காமல் எந்த ஒரு மனிதனும் அறிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியானவர் தான் அருளித்தந்திருக்கும் வேதத்தை, எக்காலத்துக்கும் பொருந்திப் போகின்ற அதன் போதனைகளை வரலாற்று இலக்கண சந்தர்ப்பத்தின் மத்தியிலேயே கொடுத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நான் விளக்கியிருப்பது ‘இன்டலெக்சுவல்’ போக்கல்ல; அதுவே வேதம் காட்டுகின்ற, அதைப் படிக்கவேண்டிய முறையான ஆத்மீகவழி.

இதுவரை நம்மினத்தில் இருக்கும் போலித்தனமானதும், தவறானதுமான பிரசங்க உழியம் மாறுவதற்கு பிரசங்கிகள் வேதவசனங்களைப் பொறுத்தவரையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை விளக்கியிருக்கிறேன். இதெல்லாம் நிகழ ஆண்டவரால் அழைக்கப்பட்டு, முறையாகப் பயிற்சிபெற்று, சபைகளால் ஆராயப்பட்டு, சுயநல நோக்கமின்றி இருதயசுத்தத்தோடு செயல்படுகின்ற, சபைகளால் அங்கீகரிக்கப்பட்ட நல்ல பிரசங்கிகள் தேவை. வாலிப வயதில் இருப்பவர்கள் இதுவரை நான் விளக்கியிருப்பவற்றை சிந்தித்து ஆராய்ந்து பார்த்து உணர்ச்சிவசப்பட்டு ஊழியத்தில் நுழைந்துவிடாமல் கவனத்தோடு தங்களை வேதபூர்வமாக வளர்த்துக்கொள்ளுவதில் ஈடுபடவேண்டும். ஆவிக்குரிய நல்ல பிரசங்கம் இன்று அவசியம் தேவைப்படுகிறது என்பதில் எவருக்குமே சந்தேகமிருக்க முடியாது. எங்கே, எப்போது, எப்படி அது நம்மினத்தில் உதயமாகப்போகிறது என்றுதான் மந்தைகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s