சிந்தனை செய் மனமே – கடிதம்

தங்களின் “திருமறைத்தீபம்” சீர்திருத்த காலாண்டுப் பத்திரிகை மற்றும் வலைதளத்தின் வாயிலாக நான் கற்றுக்கொண்டு வருகிற வேதசத்தியமாகிய சீர்திருத்த இறையியல் சத்தியங்கள், போதனைகள் அனைத்தும் எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் நாங்கள் கூடிவருகிற “சீர்திருத்த கிறிஸ்தவ ஐக்கியத்துக்கும்” பேருதவியாகவும், ஆசீர்வாதமாகவும் இருந்து வருகிறது.

கர்த்தரின் சத்திய வேதம் ஒரு சுரங்கம் என்பதைச் சுட்டிக்காட்டி அதை ஊக்கமாக வாசிப்பதும் சிந்திப்பதுமே சிறந்த உழைப்பு என உணரவைத்து, அவ்வாறு உழைப்பதன் பலனாக ஒரு கிறிஸ்தவன் அடையும் அளவில்லாத ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அள்ளியெடுக்க உதவிவரும் அருஞ்சாதனமாக இருப்பது “திருமறைத்தீபம்.”

கிறிஸ்தவனின் ஆவிக்குரிய ஆனந்தம் அலாதியானது. இவ்வாறு ஆனந்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது, தங்களுடைய பிரசங்கங்களிலும், ஆக்கங்களிலும் அடிக்கடி வலியுறுத்திவரும் வார்த்தைகளான “வாசிப்பும் சிந்திப்பும்” என்ற பதங்கள் மீண்டும் மீண்டும் என் சிந்தனையில் வலம் வந்துகொண்டிருந்தன. வேதவாசிப்பும், வேதசிந்திப்புமாகிய இந்த அழகான இரட்டைச் சகோதரிகள் என் சிந்தனையைத் தூண்டி இக்கடிதத்தை எழுதக் காரணமானார்கள்; அதுமட்டுமல்லாமல் தற்போது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள “சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்” என்ற ஆக்கமும் சேர்ந்து தற்கால தமிழ் கிறிஸ்தவத்தைப் பற்றிச் சிந்திக்கவைத்து ஆத்துமாக்களைப்பற்றிய பாரத்தையும் என்னில் அதிகமாக்கியது. இங்கு இரட்டைச் சகோதரிகள் என்று நான் குறிப்பிட்டதற்குக் காரணம் வேதவாசிப்பும், வேதசிந்தனையும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் இணைபிரியாமல் இருக்கவேண்டியவை என்பதால்தான்.

கிறிஸ்தவ சீர்திருத்த சிந்தனைவாசிகளும், தூய்மைவாதிகளும் பெற்றெடுத்த பல அரிய ஆங்கில நூல்களைத் தாங்கள் தமிழ் கிறிஸ்தவத்திற்கும் இனங்காட்டியும், அவற்றைப்பற்றி எளிய தமிழ்நடையில் விளக்கி எழுதி உணர்த்திவருவது என்னைப்போன்ற வளர்ந்துவருகின்ற தமிழ் பேசும் விசுவாசிகளுக்கும், போதகர்களுக்கும் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கின்றது.

நீங்கள் பதிவிட்டுள்ள “சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்” என்ற ஆக்கம் பயனுள்ளதும், அவசியமானதுமாகும். அறிபூர்வமான சிந்தனைக்கு இடங்கொடாமல் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கூட்டத்தை இனங்கண்டுகொண்ட ஜோன் ஸ்டொட், அந்த ஆபத்தைத் தவிர்க்கவேண்டும் என்று வேத ஆதாரங்களோடு வலியுறுத்தி, எச்சரித்து எழுதி வெளியிட்ட நூலைப்பற்றியும், அதன் சாராம்சத்தைப் பற்றியும் விளக்கி, இந்நூல் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு எந்தளவுக்கு அவசியமானது என எழுதி உணர்த்தியிருக்கிறீர்கள்.

மனித வாழ்வின் முக்கிய குறிக்கோளை நிறேவேற்ற உதவும் வழிகாட்டியாகிய வேதத்திலும் கர்த்தர் தந்திருக்கும் அனைத்து ஆவிக்குரிய காரியங்களிலும் மனத்தைச் செலுத்தி சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி எச்சரிக்கிற இப்புத்தகம் தமிழ் கிறிஸ்தவத்திற்கு மிக அவசியமானதாக இருக்கிறது.

மனிதன் சிந்திப்பதாலும் நேரம்கொடுத்து உழைப்பதாலுந்தான் உலகின் பலதுறைகளில் சாதிக்கவும், சம்பாதிக்கவும் முடிகிறது. ஆனால், அவனுடைய ஆத்தும விடுதலைக்கு இதற்கு ஒருபடி மேல்போக வேண்டும். கர்த்தர் மனிதனைப் பகுத்தறிவோடுதான் படைத்தார். இவ்வாறு படைக்கப்பட்ட மனிதன் படிக்கவும், சிந்திக்கவும், சீர்திருந்தவும் வேதத்தை எழுத்தில் தந்திருக்கிறார் கர்த்தர். இது பாவத்தினால் மனிதன் இழந்த கர்த்தரின் உறவை கிறிஸ்துவின் மூலம் கிருபையால் பெற்றுக்கொள்ளும் வழியாகவும், பரலோகத்துணையாகவும் இருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக மெய் கிறிஸ்தவம் வலியுறுத்திப் போதித்து வரும் கிறிஸ்தவ சிந்தனை பற்றிய இந்த உண்மைகள் எத்தனை அவசியமானது என்பதை மெய் கிறிஸ்தவர்கள் உணர்ந்துகொள்வார்கள். ‘வாசிக்காத போதகன் ஊழியத்தில் இருக்கக்கூடாது’ என எழுதிய வோர்பீல்ட், ‘சிம்பில் விசுவாசம் விசுவாசம் அல்ல‘ என்றெழுதிய கிரேசஷம் மேச்சன் ஆகியோரின் வார்த்தைகள் சிந்திக்க வைப்பவை.

கிறிஸ்தவன் அடிப்படையில் சிந்தனாவாதி என்கிற உண்மையைக்கூறி சிந்திக்காமல் சுகம் காணும் போலிக் கிறிஸ்தவத்தை சுட்டிக்காட்டி எப்படிச் சிந்திக்கவேண்டும் என சீர்திருத்த வரலாற்று இறையியலாளர்கள் போதித்த உண்மைகளையும், வேத உதாரணங்களையும் கொடுத்து சிந்தனையால் மனத்தைப் புடம்போட்டு வைப்பது கிறிஸ்தவனின் கடமை என அடித்துரைத்திருப்பது பசுமரத்து ஆணிபோல இருதயத்தில் பதியக்கூடிய வார்த்தைகளாக இருக்கின்றன.

வாசிக்காத, சிந்திக்காத கிறிஸ்தவத்தின் ஆபத்தை தொடர்ந்து எழுதி உணர்த்தி எச்சரித்து வருகிறீர்கள். ‘சிந்தனை செய் மனமே, சிந்தனை செய்’ என்ற இந்த ஆக்கத்தை வாசிக்கிறவர்கள் சிந்திக்கட்டும், செயல்படட்டும். கர்த்தர் தாமே கிருபையாய் உதவுவாராக.

– கிங்ஸ்லி குமார்,
மத்தியகிழக்கு நாடொன்றிலிருந்து

2 thoughts on “சிந்தனை செய் மனமே – கடிதம்

  1. Sir,

    How to buy a Thirumarai deepam ? Can you explain if any stores are
    available ? in the Coimbatore area or are your sending by a courier?

    pl let me know if exact status,

    Regards
    Ramesh kumar J
    Contact > 9965528074

    On Wed, Mar 24, 2021 at 10:17 AM திருமறைத்தீபம் (Bible Lamp) wrote:

    > ஆர். பாலா posted: “தங்களின் “திருமறைத்தீபம்” சீர்திருத்த காலாண்டுப்
    > பத்திரிகை மற்றும் வலைதளத்தின் வாயிலாக நான் கற்றுக்கொண்டு வருகிற
    > வேதசத்தியமாகிய சீர்திருத்த இறையியல் சத்தியங்கள், போதனைகள் அனைத்தும்
    > எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் நாங்கள் கூடிவருகிற “சீர்திருத்த கிறிஸ்”
    >

    Like

Leave a reply to Ramesh Kumar J Cancel reply