ஓர் இலக்கியவாதியின் மொழியாக்க அனுபவங்கள்

இந்த ஆக்கத்தில் நான் குறிப்பிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை கிறிஸ்தவ விசுவாசி அல்ல. வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் கிறிஸ்தவர்களிடம் இருந்து மட்டும் கற்றுக்கொள்ள முடியாது. கிறிஸ்தவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் புலமை இருக்காது. நம் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் படிப்பிப்பவர்கள் கிறிஸ்தவர்களா என்ன? மொழியாக்கத் திறனுள்ள இந்த ஆளுமையிடம் இருந்து நாம் விசுவாசத்துக்குரியவற்றைக் கற்றுக்கொள்ளப் போவதில்லை; மொழியாக்கத்திற்கு அவசியமானவற்றைப் பற்றி மட்டுமே கற்றுக்கொள்ளப் போகிறோம். அதில் எந்தத் தவறும் இல்லை. மொழியாக்கத்திற்கான புலமையும், திறனுமுள்ள கிறிஸ்தவர்கள் நம்மினத்தில் அரிதாகக் காணப்படும் இக்காலத்தில் இந்த இலக்கிய ஆளுமையின் பகிர்வும், கருத்துக்களும் நமக்கு மிகவும் உதவுகின்றன. – ஆர்

மொழியாக்கக் கூறுகளைப் பற்றி சமீபத்தில் ஓர் ஆக்கத்தை வரைந்திருந்தேன். பயனுள்ளதாக இருந்ததாக சிலர் தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்திருந்தார்கள். தமிழிதலான ‘புத்தகம் பேசுது’ அக்டோபர் (2020) இதழில், மொழியாக்கத்தில் ஈடுபட்டு வரும் ஓர் இலக்கிய ஆளுமையின் நேர்காணலை கடந்த வாரம் வாசிக்க நேர்ந்தது. அடடா! மொழியாக்கம் பற்றிய என்னுடைய சிந்தனைகளை எழுதுகிற நேரத்தில் இது கண்ணில் படாமல் போய்விட்டதே என்று ஆதங்கமாக இருந்தது. இருந்தாலும், அந்த நேர்காணலை வாசித்த அனுபவத்தையும், அதில் நான் அவதானித்த அம்சங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்றிருக்கிறேன். இதுவே முதல் முறை இந்த ஆளுமையைப் பற்றி நான் கேள்விப்பட்டதும், வாசித்ததும். அவர் யார், எப்படிப்பட்டவர் என்பதைவிட அவருடைய படைப்புகள் எப்படிப்பட்டது என்பதே முக்கியமானது. உண்மையில் அந்த நேர்காணலை வாசித்த அனுபவம் சுகமானதாக இருந்தது.

அந்த இலக்கிய ஆளுமை எம். கே. சுசிலா. மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிந்திருக்கிறார். மூன்று தலைமுறை மாணவர்களைத் தன்னுடைய ஆசிரியப்பணிக்காலத்தில் கண்டிருக்கிறார். இளம் வயதிலேயே படைப்பிலக்கியத்தில் ஈடுபட்டு சிறுகதைகளை எழுதிப் பரிசுகளும் வாங்கியிருக்கிறார். செட்டிநாட்டுப் பகுதியில் வளர்ந்த அவருக்கு இலக்கியப் பரிச்சயம் வாழ்வின் ஆரம்ப கட்டத்திலேயே ஏற்பட்டிருக்கிறது. இப்போது கல்லூரிப் பணியில் இருந்து ரிட்டையராகி எழுத்துப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஒருமுறை மதுரையில் ஒரு பதிப்பகத்தார் அவரை இரஷ்ய நாவலாசிரியரின் நாவலொன்றைத் தமிழில் மொழியாக்கம் செய்யும்படிக் கேட்டுக்கொண்டதால் அந்த முயற்சியில் ஈடுபட்டார். அந்த நாவல் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அவருடைய மொழிபெயர்ப்பு பல இலக்கிய வட்டங்களின் கவனிப்பை அதன்மேல் செலுத்தவைத்து பலரின் பாராட்டுதல்களையும், விருதுகளையும் அவருக்குக் கொண்டுவந்திருக்கிறது. தொடர்ந்தும் அவர் இரஷ்ய மற்றும் வேறுமொழிப் படைப்புக்களையும் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்.

எம். கே. சுசிலா அவர்களோடு ப்ரதீபா ஜெயச்சந்திரன் நடத்திய நேர்காணலில் என்னைக் கவர்ந்த அம்சங்களைத்தான் இப்போது பகிரப்போகிறேன். எம். கே. சுசிலாவின் மொழிபெயர்ப்பு அனுபவங்கள் நான் ஏற்கனவே முந்தைய ஆக்கத்தில் எழுதியிருந்தவற்றை உறுதிப்படுத்துகிறதோடு ஓரிரு புதிய அம்சங்களையும் சுட்டுவதாக இருந்தது.

வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் வாசிப்புப் பயிற்சியில் ஈடுபடுவது எத்தனை அவசியம் என்பதற்கு எம். கே. சுசிலா உதாரணபுருஷராக இருக்கிறார். குழந்தைப் பருவத்தில் இருந்தே அவரைப் புத்தக வியாதி பற்றிக்கொண்டிருக்கிறது. புத்தகமில்லாமல் அவர் போகிற இடம் இல்லை. ஆரம்பத்தில் கல்கி, அகிலனில் ஆரம்பித்து வாசிப்பு அவரை கையில் கிடைப்பதையெல்லாம் வாசிக்க வைத்திருக்கிறது. வாசிப்பில் உருவான இலக்கிய ஆர்வம் அவரைத் தமிழ்ப் பேச்சாளர்களின் பேச்சுக்களை எங்கு கிடைத்தாலும் கேட்கவும் வைத்திருக்கிறது. சொற்பொழிவுகள் எதையும் அவர் தவறவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. அத்தோடு எழுதுகிற பழக்கமும் சிறுவயதிலேயே ஆரம்பித்து எதையாவது தாளில் கிறுக்கிக்கொண்டிருக்கும் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவரது கல்வி அவரைத் தமிழ் கற்க வைத்திருக்கிறது. தமிழிலக்கியத்தை முழுமையாகக் கற்கவேண்டும் என்ற உந்துதலை அவரில் உண்டாக்கி அதில் முன்னேற வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் வேதியியல் படிப்பை அவர் தெரிவுசெய்ய நேர்ந்திருந்தபோதும், இலக்கிய ஆர்வம் அவரை ஆங்கில இலக்கியத்தையும், தமிழிலக்கியத்தையும் அதிகம் கற்கத் தூண்டியிருக்கிறது. பட்டப்படிப்புவரை ஆங்கில மொழிவழியாகக் கல்வி கற்று, ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் இருந்துவந்திருந்தபோதும் தமிழிலக்கியத்தைத் தொடர அது தடையாக இருந்திருக்கவில்லை. இதெல்லாம் அவரை பாத்திமா கல்லூரியில் 36 ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியைப் பணியில் அமர்த்தியிருந்திருக்கிறது.

வாசிப்பு அனுபவம்

இளமையில் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுவதின் அவசியத்தை சுசிலா வலியுறுத்துகிறார். இளமையில் வாசிப்பை ஆரம்பித்து அதைத் தொடர்ந்திருக்காவிட்டால் இன்றிருக்கும் அளவுக்கு இலக்கியப்படைப்பிலும், மொழியாக்கத்திலும் ஈடுபட்டிருக்க முடியாதென்பது அவரது அசையா நம்பிக்கை. விடாமல் புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்கின்ற சுகமான அனுபவம் அவருக்கிருந்திருக்கிறது. அதில் அவருக்கு சோர்விருந்ததாகவே தெரியவில்லை. சோர்வுக்கு மாற்றாகத்தான் தனக்கு வாசிப்பு இருந்திருப்பதாகச் சொல்லுகிறார் சுசிலா. இளமையில் இருந்து மதுரை பாத்திமா கல்லூரி வரும்வரையும் அவருடைய வாசிப்பு பல்வேறு பகுதிகளில் பல நூலகங்களுக்கும் அவரை அழைத்துப் போயிருக்கிறது. பாத்திமா கல்லூரி நூலகத்தில் வாசிப்பதும், அது விரிவடைய உழைப்பதும் அவருடைய ஆசிரியப்பணிக்கு அடுத்த பணியாக இருந்திருக்கிறது.

சிறுவயதில் இருந்து வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளாதவர்களுக்கே வாசிப்பில் சோர்வு ஏற்படுவதாக சுசிலா சொல்லுகிறார். அத்தோடு ஒவ்வொருவருடைய ரசனைக்கேற்ற நூல்களைத்தெரிவு செய்துகொள்ளாமல் போவதும் அதற்கு ஒரு காரணம் என்கிறார் அவர். வாசிப்பை எப்போதும் சிறிய சிறிய நூல்களிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்கிறார். அதிலிருந்து பெரிய நூல்களுக்கு முன்னேறலாம் என்று கூறும் அவர் வாசிப்புப் பொறி மனதில் பற்றிக்கொண்டால் போதும், எத்தனை பக்கங்களானாலும், நூல்களானாலும் சோர்வு நமக்கிருக்காது என்கிறார் சுசிலா.

தொலைக்காட்சியும், சமூக ஊடகங்களும் இன்று வாசிப்புக்குத் தடையாக இருந்து, அதைத் தேவையற்றதாக்கி வாசிப்பு எனும் மூளைப்பயிற்சியை மழுங்கடித்து வருவதை ஒத்துக்கொள்ளும் சுசிலா, இளைய தலைமுறையில் வாசிக்கிறவர்கள் தொகை குறைவாக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். ரிட்டையரானபோதும் வாசிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் அவர், ஆர்வம் மட்டும் அடித்தளமாக இருந்துவிட்டால் சோர்வுக்கு எந்தத் துறையிலும் இடமிருக்காது என்கிறார்.

மொழிக்கல்வி

தமிழ் பேராசிரியையாக இருந்திருக்கும் இலக்கியப் படைப்பாளி சுசிலாவின் மொழிக்கல்வி பற்றிய கருத்துக்கள் அவசியமானவை. நம்மினத்தில் தமிழ்க்கல்வியே அடிமட்டமானதாகக் கருதப்படுகிறது. பணத்தைக்கொண்டுவரும் துறைகளை நாடியே எல்லோரும் போய்க்கொண்டிருக்கிறார்கள். மொழிக்கல்வி ஏனைய கல்வித்துறைகளில் இருந்து மாறுபட்டது எனும் சுசிலா, மொழியைக் கற்பவர்கள் ‘பிசிறில்லாத வடிவில் இலக்கணப்பிழைகள் இல்லாமல் தேர்ந்த சொற்களோடும், சரளத்தோடும் நல்ல நடையில் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்’ என்கிறார். ‘மொழிமீது ஆளுமை செலுத்தும் அளவுக்கு, மொழியைத் தன் வசமாக்கும் அளவுக்குத் தேர்ச்சி பெறுவது மொழிக்கல்வியின் நோக்கமாக இருக்கவேண்டும்’ என்கிறார் சுசிலா. உச்சரிப்பு, எழுத்துப்பிழை, சந்திப்பிழைகளைச் செம்மைப்படுத்திக்கொள்ளுவதோடு இலக்கணத்திற்கும் முக்கியத்துவமளித்து இலக்கணப்பிழையில்லாமல் எழுதக் கற்பதும் அவசியம் என்கிறார் அவர். இதெல்லாம் அவருக்கு ஆசிரியப்பணியில் சவாலாகவே இருந்து வந்திருக்கின்றன.

இன்று கிறிஸ்தவர்களும், திருச்சபைப் போதகர்களும் உரையாடலுக்குத் துணைபோகுமளவில் மட்டுமே தமிழைப் பயன்படுத்தி, அந்தப் பேச்சுத் தமிழும் நல்ல தமிழாக இல்லாமல், வாசிப்பிலும், எழுத்திலும் பின்தங்கியவர்களாக இருந்துவரும் நிலை நம்மைப் பெரிதும் சிந்திக்க வைக்கவேண்டும். மொழி அழிவது ஓர் இனமே அழிவதில் போய் முடியும். இதை நான் நிதர்சனமாக மலேசிய நாட்டில் கவனித்திருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்களும், தமிழார்வமுள்ளவர்களும் அங்கிருக்கும் தமிழ் சமுதாயத்தில் குறைவாகவே இருக்கிறார்கள். அச்சமுதாயத்தில் பெரும்பான்மையானோர் நாட்டின் மலே பாஷையில் கல்வி பெற வலியுறுத்தப்படுவதால் தமிழ்க் கல்வியில் பின்தங்கிப்போனவர்களாக, நல்ல தமிழில் வாசிக்கவும், பேசவும், எழுதவும் முடியாதவர்களாக தொடர்ந்திருந்து வருகிறார்கள். தனியார் கல்வி மூலம் தமிழ்க்கல்வி கற்கும் அளவுக்கு வசதிபடைத்தவர்களாக பெரும்பான்மையோர் இல்லை. அந்தச் சமுதாயத்தில் தமிழ் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது; அந்த இனமும் குறுகிப்போவதில் அது கொண்டுவிடும்.

தமிழை உரையாடலுக்கு மட்டும் அவசியமானதாக இருத்திக்கொள்ளுவது நல்லதல்ல. தமிழில் வாசிக்கவும், எழுதவும் வேண்டும். தமிழில் இலக்கணப்பிழையில்லாமல், சுவையாக ஆர்வமூட்டும் விதத்தில் எழுதும் கிறிஸ்தவர்கள் மிதமாக இருப்பது தமிழ் கிறிஸ்தவத்தின் பின்தங்கிய நிலையைக் காட்டுகிறது. தொடர்ந்தும் தமிழ் வேதமொழிபெயர்ப்பு புரியாத மொழியில் இருந்துவருவதும் இந்தப் பின்தங்கிய நிலைக்கான ஓர் அடையாளமே. சுசிலா அவர்களின் நேர்காணலை வாசிக்கும்போது நம்மினத்துக் கிறிஸ்தவத்தின் குறைபாடுகளை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. கிறிஸ்தவம் நம்மினத்தில் ஆவிக்குரிய அனுபவத்தில் உயர்வதற்கு எத்தனையோ விஷயங்கள் தடையாக இருந்துவருகிறபோதும், அதில் முன்னிற்கும் தடையாக இருப்பது மொழியில் நாம் பின்தங்கிப்போயிருப்பது என்பதை உணராதவரை கிறிஸ்தவம் நம்மத்தியில் முன்னேற முடியாது.

மொழியில் பின்தங்கியிருந்து, உரைநடையும், பேச்சு நடையும், எழுத்தும் தேங்கிப்போன குட்டையாக இருந்திருந்தால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் சீர்திருத்தவாத, பியூரிட்டன் இலக்கியங்கள் இன்று உலகமே போற்றும் அளவுக்கு உயர்வானவிதத்தில் படைக்கப்பட்டிருந்திருக்குமா? என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். சமீபத்தில் பியூரிட்டன் தோமஸ் வொட்சனின் ‘மனந்திரும்புதல்’ என்ற சிறிய நூலை பலருக்கும் விளக்கிப்போதிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதில் அதிக சந்தோஷத்தை அனுபவித்தவன் நானே. ஏனெனில், அந்த ஆங்கில ஆக்கத்தின் கருப்பொருளை மட்டுமல்லாமல், அதை எழுதியவர் மொழியைப் பயன்படுத்தியிருக்கும் முறையையும், நூலின் இலக்கியச் சுவையையும் அனுபவித்து வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பத்திக்குப் பத்தி வொட்சன் கவித்துவம் மிக்க இலக்கிய நடையில் மனந்திரும்புதல் பற்றிய சத்தியத்தை இன்னொரு கட்டத்திற்குக் கொண்டு போயிருந்தது வாசிப்பதற்கு இனிமையாயிருந்தது. தன் சொந்த மொழியில் அதிக பரிச்சயத்தையும், இலக்கிய வளத்தையும் கொண்டிருந்ததாலேயே வொட்சனால் இலக்கியத் தரத்தோடு அந்த நூலைப் படைக்கமுடிந்திருக்கிறது.

மொழியாக்கம்

சுசிலா அவர்கள் மொழியாக்க முயற்சியில் ஈடுபட்டது ஒரு தற்செயல். மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் கேட்டுக்கொண்டதற்காக அதில் ஈடுபடச் சம்மதித்திருக்கிறார். இருபெரும் இரஷ்ய நாவல்களான, குற்றமும் தண்டனையும், அசடன் ஆகிய இருநாவல்களும் ஆரம்பத்தில் அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டவை. மொழியாக்கத்தின் சிக்கல்களை நன்கு உணர்ந்திருந்ததாகக் கூறும் சுசிலா, ஒருவகை அச்சத்தோடுதான் அதில் நுழைந்ததாகக் கூறுகிறார். நல்ல தமிழ் எழுத்தாற்றலும், ஆங்கிலத்தில் பரிச்சயமும் இருந்திருந்தபோதும் அவருக்கு அந்தத் தயக்கம் இருந்திருப்பது தன்னடக்கத்தைச் சுட்டுகிறது. அவருடைய மொழியாக்க அனுபவத்திலிருந்து நான் கண்டறிந்த உண்மைகளைக் கவனியுங்கள்.

1. மொழியாக்கத்தில் ஈடுபடுமுன் இரஷ்ய நாவலை (ஆங்கிலத்தில்) அவர் வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். பக்கம் பக்கமாக வாசிக்க ஆரம்பித்தபோது மூல ஆசிரியரோடு ஒன்றிப்போக ஆரம்பித்தார். மூல ஆசிரியர் வெளிப்படுத்தியிருந்த ஆசாபாசங்கள், சபலங்கள், அன்பு, மனித நேயம் அனைத்தையும் உள்வாங்கி அந்த நூலோடு ஒன்றிப்போயிருக்கிறார். வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டும் தன்னைக் கருதி புறத்தில் இருந்து நூலைப்பார்க்காமல், அகவயமாக நூலோடு ஒன்றிப்போய் அதனை அனுபவித்து மனக்கண்ணில் கிளர்ச்சியும், பரவசமும் அடைந்து சிலிர்த்திருக்கிறார். மொழியாக்கத்தில் ஈடுபடுகிறவன் இதைச்செய்யாது போனால் மொழியாக்க நூல் வாசகனுக்கு அந்நியமாகத்தான் தென்படும்.

2. மொழியாக்கத்தில் ஈடுபட்டபோது, இந்த ஆரம்பப் பயிற்சியான வாசிப்பு அவருக்குத் துணைபோயிருக்கிறது. நூலை மொழியாக்கம் செய்யத் தானும் தன் எழுத்தும் மட்டுமே கருவிகள் என்ற உள்ளுணர்வோடு மொழியாக்கத்தில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நூலின் ஆரம்ப வாசிப்பு மொழியாக்கம் செய்கிறபோது இன்னுமொரு எல்லைக்கு அவரைக் கொண்டுபோயிருந்தது. நூலோடு ஒன்றிப்போய் அதனை இரசித்து, சிலிர்த்து, கண்களில் நீர் வரவேண்டிய நேரங்களில் கண்ணீர் விட்டிருக்கிறார். இத்தகைய நூலுடனான அணுக்கமான ஆழ்ந்த பயணத்தை அவர் மொழியாக்கம் செய்தபோது அனுபவித்திருக்கிறார்.

3. தன் மொழியாக்கத்திற்குத் துணை செய்தவை எவை என விளக்கும் சுசிலா ‘இலக்கு மொழியின் ஆளுமை (இந்த இடத்தில் அது தமிழ்) நம் வசப்பட்டுவிட்டால் வேறு வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதில்லை’ என்கிறார். தொடர்ந்து, ‘தொடர்ந்த இலக்கிய வாசிப்பும், தொடர்ந்து ஏதேனும் ஒன்றை எழுதிப் பார்த்தபடி ஏதோ ஒருவகையில் நம்மொழியைக் கூர்தீட்டிக்கொண்டு அது துருப்பிடித்துப் போகாதவகையில் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சிகளும் மட்டுமே நம் மொழி ஆளுமையை உயிர்ப்போடு வைப்பவை. படைப்பாக்கங்களுக்கு மட்டுமல்லாமல் மொழிபெயர்ப்புக்கும் துணை வருபவை அவை என்பதே என் மொழியாக்கப்பணிகள் எனக்களித்த தெளிவு’ என்கிறார் சுசிலா. எத்தனை உண்மையான அனுபவபூர்வமான வார்த்தைகள்.

மொழிவளத்தை வாழ்க்கையில் அறியாமல் இருந்தால் படைப்பிலக்கியம் மட்டுமல்ல, மொழியாக்கங்களிலும் ஒருவரால் ஈடுபட முடியாதென்கிற அவருடைய அனுபவபூர்வமான வார்த்தைகளை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நம்மினத்தவர் மத்தியில் சோம்பல் அதிகமாக இருப்பது நாமறிந்த உண்மை. எதையும் அரைகுறை அறிவோடு, தீடீர் இட்டிலி போல் இரண்டு நிமிடத்தில் செய்துமுடித்து பாராட்டையும் பணத்தையும் அடைவதில் கருத்தோடிருக்கும் ஒரு சோம்பல்தனம் அது. அத்தகைய சோம்பேறித்தன முயற்சிகள் ஆக்கபூர்வமான எதையும் உருவாக்கப்போவதில்லை. நம் குறைபாடுகளைத்தான் அப்பட்டமாகப் பலரறிய வெளிச்சம் போட்டுக்காட்டும் அது.

பல்கலைக்கழகப் படிப்புக்கு நான் தயாராகுமுன் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்திருந்தேன். அக்காலத்தில் என்னுடைய இலக்கண அறிவு பெரிதாக இருக்கவில்லை. நண்பர்கள் இருவரோடு சேர்ந்து எப்படியோ ஒரு தமிழிலக்கணப் பண்டிதரைக் கண்டுபிடித்து ஒவ்வொரு வாரமும் அவரிடம் இலக்கணம் கற்றோம். தமிழிலக்கணம் இலகுவானதல்ல. இருந்தாலும் கஷ்டப்பட்டு இலக்கண விதிகளையும் மனனம் செய்து கற்று அந்தப் பாடத்தில் முதலிடத்தைப் பெற்றேன். அந்தக்கடின முயற்சி இன்றைக்கு கைகொடுக்காமல் போகவில்லை. தமிழ் வளமில்லாமல் நம்மத்தியில் இருப்பவர்கள் ஏன் தரமான ஓர் ஆசிரியரிடம் இருந்து தமிழ் கற்கக்கூடாது? கற்பதற்கு வயதும், வாழ்க்கையும் ஒருபோதும் தடையில்லையே. மொழிப்பயிற்சியும், எழுத்துவளமும் இல்லாமல் எதை உருவாக்கி என்ன பயன்.

4. மொழியாக்கத்திற்காக மட்டுமல்லாமல், மொழி வளத்தை அடைய ‘சமகாலப் புனைவுகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பதே இன்றைய மொழியின் நீரோட்டத்திற்கு நம்மை இட்டுச்செல்லக்கூடியது’ என்று ஜெயமோகனைப்போலவே சுசிலாவும் அறிவுறுத்துகிறார். ‘பொருள் புரியாத பண்டித நடையாக ஆகிவிடாமல் நம் மொழிநடையை இலகுவாக்குவதும், வழக்கிழந்ததாக ஆகிவிடாமல் இன்றைய போக்கை ஒட்டியதாக நம்மொழியைப் புதுப்பித்தபடி செழுமை சேர்க்கக்கூடியதும் அதுவே’ என்கிறார் சுசிலா. இன்றைய சமகால இளம் வாசகர்களோடு சுசிலாவால் இணைய முடிவதற்குக் காரணம், அவருடைய வார்த்தைகளில் சொல்லுவதானால், ‘சமகால இலக்கிய வாசிப்போடும் புனைவோடும் நான் தொடர்ந்து கொண்டிருக்கும் ஊடாட்டமே.’

5. மொழியாக்கப் படைப்பின் மீது மொழிபெயர்த்தவனுக்கு எல்லை கடந்த நேசமும் பற்றும் இருக்கவேண்டும் என்கிறார் சுசிலா. ‘அதுவும் நாமும் வேறில்லை என்று ஒன்றிக்கலக்கும் ஒரு அபேத நிலை, ஒரு நல்ல மொழிபெயர்ப்பில் கைகூடியாகவேண்டும்’ என்று ஆணித்தரமாக அவர் நம்புகிறார். ஒரு படைப்பால் நாம் கட்டப்பட்டு அது நம்மை பிரமிக்கவைத்து, நாம் நேசிக்கும்படிச் செய்யவைக்கும்போதே ‘அந்த எழுத்துக்குள் அணுக்கமாகப் போய், மூல நூலாசிரியர் வெளிப்படுத்த விரும்பிய செய்திகளை அவருடைய அலைவரிசைக்குள்ளாகப் போய் இனம் காணமுடியும்’ என்கிறார் சுசிலா.

6. தன் மொழியாக்கத்தை விளக்கும் சுசிலா, ‘சொல்லுக்குச் சொல் வார்த்தைக்கு வார்த்தை என்று வரட்டுத்தனமாக இயந்திர கதியில் மொழிபெயர்த்துக்கொண்டு போகாமல் அவை இடம்பெறும் சூழலை உள்வாங்கிக்கொண்டு எழுத மிகுந்த சிரத்தையையும் உழைப்பையும் செலவிடுகிறேன்’ என்கிறார். அவர் தொடர்ந்து ‘நூலின் பண்பாட்டுக்கூறுகளைப் புரிந்துகொண்டு மொழிமாற்றம் செய்யும்போதே அது விசுவாசமான மொழிமாற்றமாக இயல்பாகவே அமைந்து விடுகிறது’ என்கிறார். ‘மொழியாக்கம் செய்யும் படைப்போடு ஒன்றிப்போய் அதன் ஜீவனை நம்மால் பிடித்துவிட முடிகிறபோது பண்பாட்டுக் காரணமான எந்த சிக்கலையும் இதுவரை என் எந்த மொழியாக்கமும் எதிர்கொண்டதில்லை’ என்கிறார் சுசிலா. அவர் இரஷ்ய நாவல்களை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்தபோதும் அதற்கு கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புக்குநோக்கி தெளிவு பெற்றபின்பே அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இலக்கியப் பணிக்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் ஆளுமை சுசிலாவின் மொழியாக்கம் பற்றிய விபரங்கள் மொழியாக்கப்பணி பற்றி நம்மைச் சிந்திக்கவைக்க வேண்டும். உண்மையில் மொழியின் அவசியத்தையும், வாசிப்பின் அவசியத்தையும் இவர் தன் வாழ்வனுபவங்கள் மூலமாக விளக்கியிருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. மொழியை விருத்திசெய்து கொள்ளாமல் அந்த மொழியில் எவரும் சிறக்கவோ, சாதிக்கவோ முடியாதென்பதற்கு சுசிலா உதாரணமாக இருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு இலட்சம் மாணவர்களை அவர் தன் ஆசிரியப்பணி நாட்களில் சந்தித்திருப்பது மட்டுமல்ல, அவரிடம் கற்ற பலர் இன்று எழுத்தாளர்களாகவும், பேராசிரியர்களாகவும், திறனாய்வாளர்களாகவும், கவிஞர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள், முன்னுக்கு வந்திருக்கிறார்கள். இந்த இலக்கியப் படைப்பாளியின் இலக்கியப்பணி கிறிஸ்தவர்களாகிய நம்மை அதிகம் சிந்திக்கத் தூண்டுகிறது. கிறிஸ்தவர்கள் என்ற ஒரே ஒரு தகுதியை வைத்துக்கொண்டு அதுபோதும் எதையும் செய்ய என்ற இறுமாப்பு நமக்கு இருக்கக்கூடாது. இலக்கியப் பணியில் நாம் எதையும் சாதிக்க கிறிஸ்தவ அனுபவத்தைக் கொண்டிருப்பதும், கிறிஸ்தவ வேதத்தை அறிந்திருப்பதும் மட்டும் போதாது. இந்த ஆளுமைக்கிருக்கும் மொழித்தகுதியையும், இலக்கிய ஆர்வத்தையும், வாசிப்பு மற்றும் எழுத்துப் பயிற்சியையும் தொடர்ந்து கொண்டிருக்காமல் இருந்தால் சராசரி மனிதர்களாக சராசரி படைப்புகளை மட்டுமே நாம் கொடுக்கமுடியும். அப்படி சராசரிக் கிறிஸ்தவனாக இருப்பது கிறிஸ்துவுக்கு மகிமை தராது.

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s