மறக்க முடியாத 2020

பெரிய எதிர்பார்ப்புகளோடு அதிர்வெடி போல் ஆரம்பமானது 2020. வழமைபோல பலருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்தேன். புதிய வருடம் ஆரம்பித்தாலே என்னுடைய வெளிநாட்டுப் பிரயாணங்களும் 10ம் தேதிக்குப் பின் ஆரம்பித்துவிடும். இந்த வருடம் பிரயாணங்கள் அதிகமாக இருக்கப்போகிறது என்று தெரிந்தது. சிங்கப்பூர், இந்தியா என்று ஜனவரியில் போய்வந்துவிட்டு அதற்கடுத்த மாதம் ஆஸ்திரேலியாவும் போய்வந்தேன். யாருக்குத் தெரிந்திருந்தது, நிலைமை இந்தளவுக்கு 2020ல் மாறப்போகிறதென்று. ஜனவரி மாதம் முடிவதற்குள்ளேயே சீனாவில் கோவிட்-19 பற்றிய செய்திகள் அடிபட ஆரம்பமாயின. மார்ச் மாதத்தில் உலக நாடுகள் தங்களுடைய எல்லைகளை மூட ஆரம்பித்தன. இப்போது 9 மாதங்கள் போனபோக்கே தெரியவில்லை. புதிய வருடத்தில் காலடி எடுத்துவைக்க இன்னும் ஓரிரு நாட்களே இருக்கின்றன. என்னவெல்லாம் செய்திருக்கிறது இந்த 2020. (இந்த ஆக்கம் டிசம்பர் 2020 எழுதப்பட்டது).

80 மில்லியன் மக்களைப் பாதித்து, ஏறக்குறைய 2 மில்லியன் தொகையினரின் உயிரையும் மாய்த்து, நாடுகளை அல்லோலகல்லோலப் படுத்திக்கொண்டிருக்கிறது கோவிட்-19. அது போதாதென்று வைரஸ் இப்போது புதிய ரூபமெடுத்து மறுபடியும் பல நாடுகளின் எல்லைகளை அடைத்து, மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. புதிய வைரஸ் அநேக நாடுகளில் நுழைந்துவிட்டது. அமெரிக்காவை கொரோனா வைரஸ் தொடர்ந்தும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில் அதைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல், அதோடு சேர்ந்து வாழப்பழகிக் கொள்ளுங்கள் என்று அரசு கூறியிருக்கிறது. ஏனைய நாடுகளிலும் இதேமுறையைப் பின்பற்றுகிறார்கள். இன்னும் எத்தனை காலத்துக்கு இது தொடரப்போகிறது? புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி மருந்து வைரஸ் தொற்றாமல் இருக்கப் பாதுகாப்பானதாக இருக்குமா? என்ற கேள்விகள் எல்லாம் தொடர்ந்து எழுந்தபடி இருக்கின்றன. இந்த வைரஸ் போனாலும் இன்னும் ஒன்று வரத்தான் போகிறது என்று ‘ஹூ’ (WHO) நிறுவனம் எச்சரித்திருக்கிறது. எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பது எவருக்கும் தெரிந்திராத புதிராகப் பெருரூபமெடுத்து நிற்கிறது. சில மாதங்களுக்கு முன் 2021ல் நிலைமை மாறும் என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்தது. நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போது அதிலும் மண் விழுந்திருக்கிறதுபோல்தான் தெரிகிறது.

கோவிட்-19 பாதிப்புகள்

கோவிட்-19 உலகைப் பெரிதும் மாற்றிவிட்டிருக்கிறது. நாம் அனுபவித்து வரும் புதிய வழமை நம் காலத்து மக்கள் அறிந்திராத, அனுபவித்திராத ஒன்று. முகக்கவசமும், சுத்திகரிப்பு சாதனங்களும், கைபேசியில் தடமறியும் அப்பும், தொலைவில் தள்ளிநிற்பதும், வீட்டில் இருந்து வேலை செய்வதும், தனிமைப்படுத்தலும் நமது அன்றாட வாழ்க்கையின் அங்கங்களாக மாறிவிட்டன. நாட்டுப் பொருளாதாரமும், வணிகமுறைகளும்கூட கோவிட் காலத்துக்கேற்ற விதத்தில் பெருமாற்றத்துக்குள்ளாகி வருகின்றன. பணப்புழக்கத்தையும் பெருமளவுக்கு கைப்புழக்கத்தில் இல்லாத நிலைக்கு கோவிட்-19 தள்ளியிருக்கிறது. எந்த நாட்டில் எப்படியெல்லாம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரங்களைப் பெற்றுக்கொள்ளுவது சுலபமாக இல்லை. வேலையிழப்பு என்பது எல்லா நாடுகளிலும் தொடரத்தான் செய்கிறது. பொருளாதாரத்தைக் காப்பதற்காக முடிந்தவரை லொக்டவுனைத் தவிர்க்கவே நாடுகள் எத்தனிக்கின்றன. உலகளாவிய விதத்தில் பரவியிருக்கும் கோவிட் இன்னும் அதிகமாகப் பெருகுமானால், கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளால் அதைத் தவிர்க்க முடியாமல் போனால் ஸ்பெனிஷ் புளூ அளவுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை நிறுத்தமுடியாது. இப்போதைக்கு மக்கள் எப்படியோ கோவிட் நிலைமையை சமாளித்து வருகிறார்கள். மாடியில் இருந்து விழுகிறவனுக்கு பலத்த காயம் உண்டாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில் மாடி உயரத்தில் இருப்பவர்கள் எப்படியோ நிலைமையை சமாளித்து வருகிறார்கள். மண்ணிலேயே புரண்டு வாழ்ந்து வந்திருக்கிறவர்களுக்கு ‘காயம்’ என்னவென்று தெரியுமா? கோவிட் இல்லாதிருந்த காலத்திலும், இப்போதும் அவர்களுக்கு வாழ்க்கை காயமாகத்தான் இருந்துவருகிறது.

இந்த உலகத்தில் கோவிட்-19 இத்தனை மாற்றங்களையும் செய்துவருகின்ற நிலையில் கர்த்தரின் திருச்சபையை அது பாதிக்காமல் இருக்குமா? தொடர்ந்தும் திருச்சபைகள் பல நாடுகளில் முழுமையாகக் கூடி ஆராதனை செய்யமுடியாத நிலையிலும், சுவிசேஷ, மிஷனரிப்பணிகளைத் தொடரமுடியாத நிலையிலும் இருக்கின்றன. புதிய வழமையாக இணைய தளத்தில் ஆராதனையையும், கூட்டங்களையும் நடத்துவது தொடருகிறது. புதிய வழமைக்கேற்ப நாமும் நம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அவசியமான எத்தனையோ பணிகளைச் செய்யமுடியாத நிலையிலிருந்தபோதும், தொடர்ந்து செய்துவரக்கூடிய பணிகளுக்காக நிச்சயம் நாம் கர்த்தருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். திருச்சபை எதிர்காலத்தில் எப்படியிருக்கப்போகிறது என்பது யாருக்குத் தெரியும்?

இந்தக் கோவிட்-19 காலம் பலருக்கும் பலவிதமான துன்பங்களை உண்டாக்கியிருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாது. கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில் கோவிட்-19 முடிந்து நிலைமை எப்போதாவது வழமைக்குத் திரும்புகிறபோதுதான் எந்தளவுக்கு திருச்சபை பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை நிலவரம் தெரியவரும். சபை மக்கள் கோவிட்-19 காலத்தில் எந்தளவுக்கு விசுவாசமாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அப்போதுதான் வெளிப்படையாகத் தெரியவரும். இதை எழுதுகிறபோது எனக்கு 1 பேதுரு நூல் நினைவுக்கு வருகிறது. கடுந்துன்ப காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்குப் பேதுரு, அவற்றிற்கு மத்தியில் எப்படிக் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவேண்டும் என்பதைத்தான் அந்நிருபத்தில் எழுதியிருக்கிறார். அப்போதிருந்தளவுக்கு சரீரத்துன்பத்தை நாம் இன்று அனுபவிக்காவிட்டாலும், பலவிதமான துன்பங்களுக்குள்ளாக வாழ்ந்து வருகிறோம் என்பதை நாம் மறுக்கமுடியாது. கிறிஸ்தவ வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்துபோகும் காட்சிகள். கிறிஸ்தவ வரலாற்றில் சில காலப்பகுதிகளில் துன்பம் அதிகமாகலாம். அதற்கு கிறிஸ்தவ வரலாறும், வேதமும் தொடர்ந்து சாட்சி பகருகின்றன. இந்தத் துன்பங்கள் சிலருக்குத் தடையாகலாம்; அவர்களைத் தடுமாறச் செய்யலாம். அதைத் தவிர்க்கவே பேதுரு முதலாம் நிருபத்தை 1ம் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். நிச்சயம் நாம் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் அது அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நிருபம்.

துன்பங்களில் பலவிதங்கள் உண்டு. ஒருசில சரீரத்தைப் பாதிக்கும்; வேறுசில மனத்தைப் பாதிக்கும். கோவிட்-19 அநேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையை முடித்திருக்கிறது. அவர்களுடைய குடும்பங்களுக்கும், சபைகளுக்கும் மனஉளைச்சலை உண்டாக்கியிருக்கிறது. இன்னும் பல வருடங்கள் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள் கோவிட்டினால் இறந்திருக்கிறார்கள்; பரலோகத்தை அடைந்திருக்கிறார்கள். இந்தக் காலம் பரலோகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய காலம் என்பதை எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. அதாவது, நாம் எங்கே போகப்போகிறோம் என்பதைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டிய காலம் இது.

மெய்க் கிறிஸ்தவர்களுக்கு மரணம் முடிவல்ல; அது இன்னொரு வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு கதவு மட்டுமே. மரணத்தின் கூரை ஆண்டவர் கிறிஸ்தவர்களுக்கு இல்லாமலாக்கியிருக்கிறார் (1 கொரிந்தியர் 15). பாவத்தில் இருந்து மனந்திரும்பாமல் இருக்கிறவர்களுக்கு மரணம் மிகுந்த ஆபத்தானதொன்று. அவர்கள் இறக்கின்றபோது அவர்களை வாட்டிவதைப்பதோடு, இறந்தபின் நித்திய நரகத்திற்கு அது அவர்களைக் கொண்டு சேர்க்கிறது. இரட்சிப்பை அடைந்திருந்து, இரட்சிப்புக்குரிய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும் முறையே வேறு. மரணம் சமீபிக்கிறபோது அவர்கள் அதை வரவேற்கிறார்கள். கிறிஸ்துவோடு நித்தமும், அவருடைய பிரசன்னத்தை அனுபவித்து வாழப்போகிறோம் என்ற ஆனந்தத்துடன் அதை அவர்கள் வரவேற்கிறார்கள்.

கோவிட் காலத்தில் மறைந்த நண்பர்கள்

இந்தக் கோவிட்-19 காலத்தில் எனக்குப் பரிச்சயமான சிலர் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். அவர்களில் நல்ல நண்பர்களும் அடங்குவார்கள். எனக்குத் தெரிந்து முதலாவதாக கோவிட்-19 ஸ்கொட்லாந்து சீர்திருத்த பிரஸ்பிடீரியன் போதகரான ஜோன் ஜே. மரேயைப் பரலோகமடையச் செய்தது. அவருடைய வயதும் வைரஸின் பாதிப்புகளைத் தாங்குமளவுக்கு ஒத்துழைக்கவில்லை. அதற்குப் பிறகு வயதான பிரபலமான இன்னுமொரு போதகரும் பிரசங்கியுமான அயர்லாந்தைச் சேர்ந்த அலன் கேர்ன்ஸ் கோவிட்டுக்குப் பலியானார். அமெரிக்காவில் பலகாலம் பணிபுரிந்திருந்த அவருடைய பிரசங்கங்களால் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனைபேர் என் கவனத்துக்கு வராமல் கோவிட்டினால் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

கடந்த செப்டெம்பரில் பரலோகமடைந்தார் என் அருமை நண்பர், முன்னால் போதகர் பிரேங்க் பார்க்கர். அவருக்கு சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அவருக்கும் எனக்கும் 25 வருட நட்பிருந்தது. அமெரிக்கப் பயணங்களின் போதெல்லாம் என்வீட்டைப்போல அவருடைய வீட்டைப் பயன்படுத்தியிருக்கிறேன். அவரும் அவருடைய துணைவியார் மேரியும் அருமையாக எப்போதும் விருந்துபசாரம் செய்திருக்கிறார்கள். என் பணிகளில் ஆழ்ந்த அக்கறைகாட்டி உறுதுணையாக இருபது வருடங்களுக்கு ஆலோசகராக இருந்து வந்தவர் பார்க்கர். கடந்த வருடம் அவரைக் கடைசித் தடவையாக சந்தித்துப் பேசினேன். அதிக காலம் அவர் இருக்கப்போவதில்லை என்பது தெரிந்தது. அவருடைய நினைவு ஆராதனையில் என் நினைவுகளைக் காணொளி மூலம் பகிர்ந்துகொள்ள முடிந்தது.

கோவிட்டோடு எந்தத் தொடர்பும் இல்லாமல், எனக்கு நன்கு அறிமுகமான, பரிச்சயமுள்ள, நண்பரான ஒரு போதகர் கென்சர் வியாதியால் வெகுவிரைவில் மரணத்தைத் தழுவினார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்து பணியாற்றியிருக்க வேண்டியவர் கெரி ஹென்ரிக்ஸ். ஐம்பது வருடங்களாக ஒரே சபையில் இருந்து அருமையாகப் பணியாற்றிய போதகர் ஹென்ரிக்ஸ். அருமையான பிரசங்கி அவர். அவர் போதகப் பணியில் இருந்து ஓய்வெடுத்து இரண்டு மாதங்களுக்குள்ளாக கான்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டே வாரங்களில் மரித்தது குடும்பத்தையும், சபையையும், நண்பர்களையும் நிலைகுலைய வைத்தது என்று சொன்னால் அவை வெறும் சாதாரணமான வார்த்தைகள் மட்டுமே. இப்போதும் அது உண்மையில் நிகழ்ந்ததா? என்றுதான் நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நல்ல நண்பர்கள், நெருங்கியவர்கள் நம்மைவிட்டுப் போகும்போது கொஞ்சம் தடுமாற்றம் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. போனவருடக் கடைசியில் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன்; இன்று அவர் நம்மோடில்லை. கெரி ஹென்ரிக்ஸை நான் பலகாலம் அறிந்திருந்தபோதும், 2005ம் ஆண்டில் ஒரு சபை கான்பரன்ஸில் சந்தித்தபோது, அவருடைய சபைக்கு அடுத்தவருடம் நான் நிச்சயம் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதிலிருந்து ஆரம்பமானது எங்கள் நட்பு. அன்றிலிருந்து இன்றுவரை ஒரு வருடம் மட்டுமே அந்தச் சபைக்குப் போகத் தவறியிருக்கிறேன். ஹென்ரிக்ஸுடனான அந்த நட்பு அவருடைய சபையில் பலருடைய நட்பையும் சம்பாதித்துத் தந்ததோடு, அந்தச் சபையின் அன்புக்குப் பாத்திரமானவனாகவே என்னை மாற்றியது. இன்று ஹென்ரிக்ஸ் நம்மோடில்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்தச் சபை மக்களை அது மிகவும் துன்பப்படுத்தியிருக்கும். இருந்தாலும் நண்பர் ஹென்ரிக்ஸ் இப்போது கிறிஸ்துவோடிருக்கிறார்.

எனக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு நல்ல நண்பரான அல்பர்ட் மார்டின் அவர்களின் மனைவி, கோவிட்டினால் அல்லாமல் டிசம்பர் மாத ஆரம்பத்தில் மரணத்தைத் தழுவினார். ஒருவர் மரணத்தைச் சந்திக்கின்றபோது, அவர் வெளிதேசத்தில் இருந்தாலும் சாதாரணமான காலத்தில் செய்கின்ற பலகாரியங்களை இந்தக் கோவிட் காலம் நாம் செய்யமுடியாதபடி செய்திருக்கிறது. இந்தச் சகோதரியின் மரணச் சடங்கும் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. போதகர் மார்டின் அவர்களின் இழப்பின் பாரத்தை என்னால் உணரமுடிகின்றது. நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் துன்பத்தை அனுபவிக்கும்போது அது எப்படி நம்மைத் தொடாமல் போகும்? நண்பர் மார்டினை ஆண்டவர் தொடர்ந்து பெலப்படுத்துவார் என்பது எனக்குத் தெரியும். இது அசாதாரண காலம் என்பது மட்டும் எனக்குப் புரிகிறது.

இதெல்லாம் நடந்து முடிந்து மன ஆறுதல் அடைவதற்கு முன்பாகவே கடந்த 20ம் தேதி (டிசம்பர்) ஞாயிறு காலை அமைதியாக மரணத்தைத் தழுவியிருக்கிறார் பொப் பிரென்ட்டிஸ் எனும் போதகர். இவர் போதகர் கெரி ஹென்ரிக்ஸோடு இணைந்து அதே சபையில் வட கரலைனாவில் பணியாற்றியவர். என்னைவிட நான்கு வயது இளையவரான பொப் பிரென்டிஸ் கோவிட் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். இரண்டு மாத கால இடைவெளிக்குள் இரண்டு போதகர்களை இழந்து தவிக்கிறது இந்தச் சபை. பொப், அவருடைய மனைவி மற்றும் இரண்டு நண்பர்களோடு கடந்த அக்டோபரில் இரவுணவில் கலந்துகொண்டிருந்தேன். என்னுடைய பணிகளில் எப்போதும் விசேஷ அக்கறை காட்டியவர் இந்த அருமை நண்பர். இன்று அவர் நம்மோடில்லை. அவருடைய மனைவி, இரண்டு மகன்கள், பேரப்பிள்ளைகள் அவரை இழந்து நிற்கிறார்கள். இது எதிர்பார்த்திராத ஒரு நிகழ்வு. பொப் இப்போது கிறிஸ்துவோடு ஐக்கியமாகிவிட்டார்.

அமெரிக்காவில் பல சபைகளில் ஆத்துமாக்கள் கோவிட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சக போதகரான நண்பர் ஒருவர் தொலைபேசியில் பேசியபோது சொன்னார். இன்னொரு நல்ல நண்பனான போதகர் டேவிட்டுக்கு அது இரண்டாம் தடவை வந்திருக்கிறது; இருந்தாலும் பெரிய பாதிப்பில்லை. நாட்கள் போகப்போக என்னென்ன நிகழ்வுகளைப் பற்றிக் கேள்விப்படப் போகிறோமோ என்ற தவிப்பு உள்ளுக்குள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் மரணம் நமக்கு ஆபத்தானதல்லவே. இந்த உலகத்தில் நாம் எத்தனை காலம் வாழவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறவர் ஆண்டவர் மட்டுமே. எத்தனை காலம் வாழப்போகிறோம் என்பதைவிட, வாழ்ந்திருந்து எதைச் செய்திருக்கிறோம் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் நல்லது என்று தோன்றுகிறது.

கோவிட்-19 உங்களை சிந்திக்க வைத்திருக்கிறதா?

கோவிட்-19 நம்மைச் சிந்திக்கவைக்க வேண்டும். முக்கியமாக ஆண்டவரோடு நமக்கிருக்கும் உறவைப்பற்றிச் சிந்திக்கவைக்க வேண்டும். மரணம் இன்று நம்மைச் சந்திக்குமானால் அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? ஆண்டவரோடு நம் உறவு எப்படியிருக்கிறது? அவர் மகிமையடையும்படி நம் வாழ்க்கை இருந்து வந்திருக்கிறதா? சத்தியத்தில் வளர்ந்து, கிருபையில் உயர்ந்து குடும்பத்தோடு சுயநலமில்லாமல் அவருக்குப் பணிசெய்து வந்திருக்கிறோமா? பரிசுத்தத்தில் எந்தளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம்? மாம்சத்து இச்சைகளை அன்றாடம் அடக்கி, மனதையும், வாயையும், கைகளையும், கால்களையும் சரியான பாதையில் போகவைப்பதற்கான முயற்சிகளில் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறோமா? இன்றே மரணம் சம்பவிக்குமானால் பரலோகக் கதவு உங்களுக்குத் திறக்கும் என்ற அசையா நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? கிறிஸ்து மட்டுமே வாழ்க்கை என்ற தீவிரத்தோடு அவரை அறியாதவர்களுக்கு அவரைப்பற்றி சொல்லி வருகிறீர்களா? இதெல்லாம் இல்லாத கிறிஸ்தவம் வெறும் பரிசேயத்தனம் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

புதிய வருடம் வருகிறபோது எல்லோருக்கும் சுலபமாக வாழ்த்துத் தெரிவித்து விடுகிறோம். என்னால் இப்போது அதைச் செய்யமுடியவில்லை. என்ன சொல்லி வாழ்த்துவது என்று சிந்திக்கிறேன். பெயருக்காக என்னால் வாழ்த்து சொல்ல முடியவில்லை. நாளை என்ன நடக்கும் என்பது தெரியாதிருக்கிற நிலையில் யாருக்கு எதைச்சொல்லி வாழ்த்துவது? இந்தக் கோவிட் காலம் உங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறதா? கிறிஸ்துவை அறியாதவர்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். என் சபையில் ஒரு பெண் சில வருடங்களாகவே மிகுந்த ஈடுபாட்டோடு கிறிஸ்துவை விசுவாசிக்கத் துடித்துக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன், புதிய வருடத்தில் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன். கிறிஸ்துவை விசுவாசித்து வாழ்வதே முதல் இலக்கு என்றாள். இப்படிப்பட்டவர்களை எத்தனையோ போலிப்பிரசங்கிகள் உடனடியாக விசுவாசிக்க வைத்து ஞானஸ்நானத்தையும் கொடுத்திருப்பார்கள். அந்தக் கூட்டத்துக்குத்தான் நம்மினத்தில் குறைவே இல்லையே. அவளுடைய விசுவாசத்திற்கு என்னால் ஜெபிக்க மட்டுமே முடிகிறது. விசுவாசத்தைக் கொடுக்கிறவர் கிறிஸ்து மட்டுமே; நாமல்ல. கிறிஸ்துவை சிறுவயதில் இருந்து அதிகம் தெரிந்திருந்து, கிறிஸ்தவ ஆசீர்வாதங்களை அள்ளியள்ளி அருந்திவிட்டு, அவர்மேல் இப்போது எந்த அக்கறையுமில்லாமல் இந்த உலகத்து வாழ்க்கையை நேசித்து வாழ்கிற வாலிபனொருவனை நினைத்துப் பார்க்கிறேன். கிறிஸ்தவ ஆசீர்வாதங்களை அதிகம் பெற்றிருந்து அவரில் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறவர்களுக்கு வரப்போகிற தண்டனை மற்றவர்களைவிட மிக அதிகமாக இருக்கும் என்கிற பியூரிட்டன் ரால்ப் வென்னிங்ஸின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த கவலையை உண்டாக்குகின்றன. அடுத்த தடவை பிரசங்கிக்கிறபோது ‘இப்போதே மனந்திரும்பு’ என்று, ரிச்சட் பெக்ஸ்டர் சொன்னதுபோல, இறக்கப்போகிறவனுக்கு இறக்கும் நிலையில் இருந்து பிரசங்கிப்பதுபோல் பிரசங்கிக்க வேண்டும் என்ற துடிப்பு இப்போதே ஏற்படுகிறது. கோவிட்-19 உங்களைத் தீவிரமாக சிந்திக்க வைத்திருக்கிறதா?

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s