வணக்கம் வாசகர்களே! மறுபடியும் ஒரு புதிய இதழை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். முதலில், இதழாசிரியரான என்னோடு, இதழ் பணியில் இணைந்து உழைப்பவர்களுக்கு என் நன்றிகள். கர்த்தரின் கிருபையால் இந்த இதழையும் தரமான ஆக்கங்களுடன் தயாரித்து வழங்க முடிந்திருக்கிறது.
இதில் எல்லாமே வேதம் தொடர்பான ஆக்கங்களாக வந்திருக்கின்றன. முதலாம் ஆக்கம் பிரசங்கத்தில் காணப்படவேண்டிய தர்க்கரீதியான வாதத்தைப் பற்றியது. பிரசங்கிகளுக்கு அவசியமான ஆக்கம். அட்டைப்படத்தில் போதகர் அல்பர்ட் என். மார்டினின் படம் வந்திருப்பதற்கான காரணம் வேதபூர்வமான அதிரடிப்பிரசங்கம் செய்வதில் அவருக்கு ஆண்டவர் அற்புதக் கிருபையை அளித்திருப்பதாலேயே. இப்போது போதகர் மார்டின் தன் 87ம் வயதில் ஊழியத்தை நிறைவுசெய்து ஓய்வில் இருக்கிறார். போதக இறையியல் பற்றிய அவருடைய மூன்று தொகுதிகள் தற்கால இளம் போதகர்களுக்கும், அவ்வூழியத்தில் ஈடுபடும் எண்ணம் கொண்டிருப்பவர்களுக்கும் மிகவும் அவசியமானவை. என்னைப் பொறுத்தவரையில் முதலாவது தொகுதியை முழுமையாக வாசித்துக் கரைகாணாமல் எவரும் போதக ஊழியத்தை நினைத்தும் பார்க்கக்கூடாது. சமீபத்தில் என் நாட்டில் ஒரு போதகர் தன் சபையில் ஒருவர் போதகப்பணியில் ஈடுபட சிந்திக்கிறார் என்று என்னிடம் கூறியபோது இதைத்தான் நான் அவருக்கு கூறினேன்.
அத்தோடு இந்த இதழில் சீர்திருத்த பாப்திஸ்து போதகரான ஆர்தர் டபிள்யூ பிங்க் அவர்களின் வேதவிளக்க விதிமுறைகள் பற்றிய தொடர் ஆக்கத்தின் ஒருபகுதி மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. மேலும் வேத வெளிப்படுத்தல் வார்த்தைக்கு வார்த்தை ஆவியின் தெய்வீக வழிநடத்துதலால் மனிதர்கள் எழுதித் தந்திருக்கும் வௌ¤ப்படுத்தல் என்பது பற்றியும் விளக்கியிருக்கிறேன். இந்த உண்மையை மறந்துவிடக்கூடாது. வேதம் மனிதர்களால் எழுதித்தரப்பட்டதாக இருந்தபோதும் ஆவியானவர் அவர்களை அற்புதமாக வழிநடத்திக் கர்த்தரின் வார்த்தைகளை மட்டுமே எழுதும்படிச் செய்திருக்கிறார். அதனால் ஒவ்வொரு வேதவார்த்தைக்கும் நாம் மதிப்புக்கொடுத்து ஆராய்ந்து பார்த்து விளங்கிக் கொள்ளவேண்டும்; விளக்கவும் வேண்டும். இதன் காரணமாகவே நாம் தரமான வேதமொழிபெயர்ப்புகளை நாடிப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதுவரை வந்திருக்கும் இதழ்களைப்போலவே இதுவும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய கர்த்தர் உதவட்டும். – ஆசிரியர்