1689 விசுவாச அறிக்கை

கடவுளின் ஆணை

அதிகாரம் 3: பாகம் 3

விளக்கம்: லமார் மார்டின்

பாரா 1: கடவுள் தனது பேரறிவும், பரிசுத்தமும் கொண்ட சுயசித்தத்தின் ஆலோசனையினால் இனி நிகழப்போகிற அனைத்துக் காரியங்களையும் சுதந்திரமாகவும், மாறாத்தன்மையுடனும் நித்தியத்திலிருந்து தாமே தமக்குள்ளாகத் தீர்மானித்திருக்கிறார். (அதாவது எவற்றாலுமே உந்தப்படாது அவர் தன் திட்டங்களை செயற்படுத்துவது மட்டுமின்றி அணுவளவும் மாற்றமின்றி அவரது நோக்கங்கள் அனைத்துமே நிறைவேற்றப்படுகின்றன). அதேவேளை, அவர் பாவத்தின் காரணகர்த்தரோ அல்லது அதைச் செய்வதில் எவருடனும் எந்தக்கூட்டும் உள்ளவரோ (அதற்குப் பொறுப்பானவரோ) அல்ல. அவரது ஆணையின் காரணமாக படைப்புயிர்களின் சித்தத்திற்கு ஊறேற்படாமலும், துணை பொருட்கள் அல்லது இடைக்காரணங்களின் சுதந்திரமான செயற்பாடுகள் நீக்கப்படாமலும் (துணைக்காரணங்கள் இடையூறாக வராமல்), அனைத்துமே அவரால் நிலைநிறுத்தப்படுகின்றன. இவை எல்லாவற்றிலும், அனைத்தின்மீதும் ஆணை செலுத்தி அமைவுறச்செய்யும் கடவுளுடைய ஞானமும், தனது ஆணையை நிறைவேற்றும் அவரது வல்லமையும், நேர்மையும் வெளிப்படுகின்றது. (கடவுளின் நேர்மை என்பது தன் பரிசுத்த குணாதிசயங்களுக்கும் வார்த்தைக்கும் ஏற்றபடி நடக்கும் அவரது நிலை தடுமாறாத்தன்மையைக் குறிக்கும்).

(ஏசாயா 46:10; எபேசியர் 1:11; எபிரேயர் 6:17; 1:3-5; ரோமர் 9:15, 18; யாக்கோபு 1:13-15; யோவான் 1:5; அப்போஸ்தலர். 4:27-28; யோவான் 19:11; எண்ணாகமம் 23:19).

பாரா 2: அனைத்து சந்தர்ப்பங்களிலும் நிகழக்கூடிய அனைத்தையும் கடவுள் அறிந்திருந்தபோதும், எதிர்காலத்தில் அவற்றை அவர் முன்னறிந்திருந்ததனாலோ அல்லது சில சூழ்நிலைகளின் கீழ் அவை எவ்வகையிலாவது நடைபெறும் என்பதாலோ அவர் எதையும் ஆணையிடவில்லை.

(அப்போஸ்தலர் 15:18:6; ரோமர் 9:11-18)

இவ்வருடத்தில் வெளிவந்த முதலிரண்டு இதழ்களில் கடவுளின் ஆணைபற்றிய இவ்வதிகாரத்தின் முதல் இரண்டு பாராக்களுக்கான விளக்கங்களைப் பார்த்தோம். இவ்விரண்டு பாராக்களும் கடவுளின் ஆணையைப் பற்றிய பொதுவான விளக்கத்தைத் தந்தன. அவ்விதழ்களை வாசகர்கள் மறுபடியும் வாசிப்பது நல்லது. இவ்விரு பாராக்களும் கடவுள் நிகழப்போகிற அனைத்தையும் உலகத்தோற்றத்திற்கு முன்பே ஆணையிட்டிருப்பதாகவும், அவ்வாணை ஒருபோதும் மாறாது என்றும் விளக்கின. அத்தோடு, கடவுள் ஆணையிட்டபோது தனது படைப்புயிர்கள் சித்தப்படி செய்யும் செயல்களை மீறாமல் இருந்ததோடு, பாவத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாதவராகவும் இருந்தார். பாரா இரண்டு, கடவுளுக்கு நடக்கப்போகிற அனைத்தும் ‍தெரிந்திருந்தபோதும் அவரது ஆணை எந்தவிதமான படைப்புயிர்களின் கிரியைகளின் அடிப்படையிலும் இடப்படவில்லை என்று விளக்கியது. இவையே முதலிரண்டு பாராக்கள் கடவுளின் ஆணை பற்றித் தரும் விளக்கங்கள்.

இவ்வதிகாரத்தின் ஏனைய பாராக்களான 3-7 எதைப்போதிக்கின்றன என்று இனிப் பார்ப்போம். 3லிருந்து 6 வரையிலான பாராக்கள் கடவுளுடைய நித்திய ஜீவனுக்காகவும், நித்திய தண்டனைக்காகவும் முன் குறிக்கப்பட்டவர்களைப் பற்றி விளக்குகின்றன. இவற்றில் 3-5 வரையிலான பாராக்கள் கடவுள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்படியான நியதியை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை விளக்குகின்றன. பாரா 6 அத்தகைய முடிவைக் கொண்டுவரும் சாதனங்களையும் கடவுளே ஏற்படுத்தியிருக்கிறார் என்று கூறுகின்றது. இவ்வதிகாரத்தின் கடைசிப் பகுதியான பாரா 7 இப்பகுதிகள் போதிக்கும் சத்தியங்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்ற வினாவுக்கு விடையளிக்கின்றது.

முதலாவதாக பாரா 3ஐ ஆராய்வோம்.

பாரா 3: கடவுளின் ஆணையின் மூலமாக அவரது மகிமை வெளிப்படும்படியாகவும், அவரது மேன்மை பொருந்திய கிருபை வெளிப்பட்டு துதி பெறவும், சில மனிதர்களும் தேவதூதர்களும் இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை ‍அடையும்படி முன்குறிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையோர், அவரது மேன்மையான நீதி வெளிப்பட்டு துதிபெறும்படியாக, தங்கள் பாவத்தில் தொடர்ந்திருந்து நியாயமான கண்டனத்தைப் பெறும்படியாக விடப்பட்டுள்ளார்கள்.

1 தீமோத்தேயு 5:21; மத்தேயு 25:34; எபேசியர் 1:5-6.

இந்த 3வது பாரா கடவுள் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே சிலரை நித்திய ஜீவனுக்காகவும், சிலரை நித்திய தண்டனைக்காகவும் நியமித்திருக்கிறார் என்ற வேத போதனையை சுட்டிக்காட்டுகிறது. முதல் இரண்டு பாராக்களும் உலகத்தோற்றத்திற்கு முன் நிகழப்போகின்ற அனைத்தையும் கடவுள் ஆணையிட்டிருக்கின்றார் என்று விளக்கின. மனிதனதும், தேவதூதர்களின் முடிவும் அநாதி காலத்திலிருந்தே நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. கடவுளின் எல்லாவற்றையும் உள்ளடக்கிய இவ்வாணையின்படி சிலர் நித்திய ஜீவனுக்காக முன்குறிக்கப்பட்டும், சிலர் நித்திய தண்டனைக்காக முன்குறிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இறையியல் வல்லுனர்கள் இதை நித்திய ஜீவனுக்கான முன்குறித்தலும், நித்திய தண்டனைக்கான முன்குறித்தலும் என்று அழைக்கிறார்கள்.

இப்பாராவில் விசுவாச அறிக்கை வேதம் போதிக்கும் உண்மையைத்தான் விளக்குகிறது. மேலெழுந்த வாரியாக இதைப்பார்க்கும்போது கடவுள் கருணையற்றவர் அவர் எப்படி சிலரை நித்திய தண்டனைக்கு நியமிக்க முடியும் என்றெல்லாம் ஆவேசமாக கேள்வி கேட்க நமது கேடான இருதயம் தூண்டும். ஆனால், வேதம் போதிக்கும் இந்த உண்மையை பரிசுத்த ஆவியின் துணையோடு பொறுமையாகப் படித்துப் புரிந்து கொள்வது நல்லது. 2 தீமோத்தேயு 5:21ல் பவுல், “நீ இவைகளைக் காத்து நடக்கும்படி . . . தெரிந்து கொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக . . .” என்று தீமோத்தேயுவைப் பார்த்து சொல்வதாக வாசிக்கிறோம். இங்கே பவுல் குறிப்பிடுவது, கடவுளால் முன்குறிக்கப்பட்டு தெரிந்து கொள்ளப்பட்ட தூதர்களையே. யூதா 6ல் “தங்களுடைய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும்” என்று வாசிக்கிறோம். இது கடவுளுக்கு எதிராக நடந்து அவருடைய பிரசன்னத்தில் இருந்து நீக்கப்பட்ட தூதர்களைக் குறிக்கிறது. சில தூதர்கள் கடவுளுக்கு எதிராக நடந்தபோது, மற்றவர்கள் கடவுளுக்கு விசுவாசமாக பணி செய்ததற்குக் காரணமென்ன? கடவுளின் முன்குறித்தலே இதற்குக் காரணம் என்று பவுல் கூறுகிறார். மொத்தத் தூதர்களில் சிலர் கடவுளுக்கு எதிராக நடக்கும்படியும், மற்றவர்கள் அவருக்கு சேவை செய்யும்படியும் கடவுள் அநாதிகாலத்திற்கு முன்பே முன்குறித்திருக்கிறார்.

எபேசியர் 1:4-6 வரையிலான வசனங்களைப் பார்ப்போம். இங்கே கிறிஸ்தவர்களை முதலாம் வசனத்தில் பவுல் “பரிசுத்தவான்கள்” என்று அழைக்கிறார். பரிசுத்தவான்கள் என்றால் “பிரித்து வைக்கப்பட்டவர்கள்” என்பது பொருள். 4ம் வசனத்தில், அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார் என்றிருப்பதை காண்கிறோம். இவர்களே முதலாம் வசனத்தின்படி பிரித்துவைக்கப்பட்ட பரிசுத்தவான்கள். 4ம் வசனத்தில் நாம் காண்கிற “தெரிந்துகொண்டார்” என்ற வார்த்தையே 1 தீமோத்தேயு 5:21லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அங்கே அது கடவுளின் தூதர்களைக்குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எபேசியர் 1ல் அது கிறிஸ்தவர்களைக் குறித்துப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தை கிரேக்க மொழியில் Eldego என்றிருக்கிறது. இதற்கு “ஒரு பெருங்கூட்டத்தில் இருந்து தெரிவு செய்தல்” என்று பொருள். யோவான் 13:18ல் கிறிஸ்து இதே வார்த்தையைப் பயன்படுத்தி, “உங்களெல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்து கொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேத வாக்கியங்கள் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன்குதிகாலைத் தூக்கினான்” என்றார். இவ்வசனத்தில் இயேசு, அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம் தெரிந்து கொள்ளப்படவில்லை என்றும், தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத்தான் அறிவேன் என்றும், அவர்களில் ஒருவனாக தன்னைக்காட்டிக் கொடுக்கப்போகும் யூதாஸ் இல்லை என்பதையும் தெளிவாகச் சொல்கிறார். இயேசு பயன்படுத்திய அதே வார்த்தையையே பவுல் எபேசியர் 1ல் பலமுறை விசுவாசிகளைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார். பவுல் இப்பரிசுத்தவான்களே, இத்‍தெரிந்து கொள்ளப்பட்டவர்களே விசுவாசிகள் என்று கூறுகிறார். அவர்கள் இப்போது கடவுளின் சுவிகாரப் புத்திரர்களாயிருக்கிறார்கள் என்றும், அதற்குக் காரணம் அவர்கள் உலகத்தோற்றத்திற்கு முன்பே கடவுளால் முன்குறிக்கப்பட்டு, தெரிந்து கொள்ளப்பட்டிருப்பதுதான் என்றும் பவுல் சொல்கிறார். இதையே கடவுளின் ஆணைபற்றிய இவ்வதிகாரத்தின் 3ம் பாரா விளக்குகிறது – “சில மனிதர்களும் தேவதூதர்களும் இயேசு கிறிஸ்துவுக்குள் நித்திய ஜீவனை அடையும்படி முன்குறிக்கப்பட்டுள்ளார்கள். ஏனையோர், . . . தங்கள் பாவத்தில் தொடர்ந்திருந்து நியாயமான கண்டனத்தைப் பெறும்படியாக விடப்பட்டுள்ளார்கள்.”

நித்திய ஜீவனுக்காக சிலர் தெரிந்து கொள்ளப்பட்டிருப்பது போலவே நித்திய கண்டனத்துக்காகவும் சிலர் தெரிந்து கொள்ளப்பட்டுள்ளார்கள் என்று வேதம் போதிக்கிறது. ரோமர் 9 வது அதிகாரத்தில் 22 வது வசனத்தில் இருந்து வாசித்துப் பாருங்கள். பவுல் இங்கே சில மனிதர்கள் நித்திய ஜீவனை அடையப் போவதாகவும், வேறு சிலர் கண்டனத்தை அடையப் போவதாகவும் சொல்கிறார். வசனம் 22, 23 – “தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின், ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?” என்றிருப்பதாக வாசிக்கிறோம். இவ்வசனத்தின் மூலம் இரண்டு விதமான பிரிவுகள் மனிதர்கள் மத்தியில் இருப்பதைப் பார்க்கிறோம். அதற்குக் காரணம் கடவுளின் ஆணையே. கடவுளின் ஆணையின் காரணமாக இவ்விருபிரிவுகளும் காணப்படுகின்றன – அவருடைய மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்களும், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்களுமே அவ்விரு பிரிவுகளும். வசனம் 21, இதைச் செய்வதற்கு கடவுளுக்கு அதிகாரம் இல்லையா? என்று கேட்கிறது, தெய்வீகக் குயவனாகிய தேவன் தனது கிருபையைச் சந்திக்கவும், கோபத்தைச் சந்திக்கவுமாக இருபிரிவுகளை ஆணையிட்டு நியமித்துள்ளார். இதையே யூதாவும் 4ம் வசனத்தில், “அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கின்றது” என்று விளக்குகிறார்.

ஏன் கடவுள் இதைச் செய்தார் என்று 3ம் பாரா விளக்குவதை இனிப்பார்ப்போம். இதற்கான காரணத்தை விளக்கும் இப்பகுதி, “தனது மகிமை வெளிப்படும்படியாகவும், தனது மேன்மை பொருந்திய கிருபை வெளிப்பட்டு துதி பெறவும்,” கடவுள் இதைச் செய்தார் என்கிறது. அதாவது, தனது மகிமையை வெளிப்படுத்தும்படியாக கடவுள் இதைச் செய்துள்ளார் என்கிறது விசுவாச அறிக்கை. தன்னுடைய கிருபையின் மகிமையை வெளிப்படுத்தும்படியாக சிலரை நித்திய ஜீவனுக்காக முன்குறித்தும், தனது மகிமையுள்ள நீதியை வெளிப்படுத்தும்படியாக சிலரை பாவத்தில் தொடர்ந்திருந்து நித்திய ஆக்கினையை அடையும்படி முன்குறித்தும் கர்த்தர் ஆணையிட்டுள்ளார். எந்தவித தகுதியும் இல்லாத மனிதரைக் கடவுள் தனது கிருபையால் தெரிந்துகொண்டு அவர்களுக்கு நித்திய ஜீவனை அளிக்கிறார். தேவகோபத்தை சந்திக்க வேண்டிய மனிதர்களை அவர் முன்குறித்திக்கிறார். இதன் மூலம் உலகம் அவருடைய கிருபையின் மகிமையை அறிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம், கடவுள் நீதியுள்ளவராயிருக்கிறார். தங்களுடைய பாவத்தில் தொடர்ந்திருக்கும் மனிதர்கள் மீது தன்னுடைய கடுங்கோபத்தை நீதியாக அவர் வெளிப்படுத்தும்போது உலகம் கடவுளுடைய மகிமையுள்ள நீதியை அறிந்துகொள்ள முடிகிறது. இவற்றின் மூலம் தேவனுடைய பாரபட்சமற்ற குணாதிசயங்களை நாம் அறிந்து கொள்கிறோம். அவர் நீதியுள்ளவராயிருப்பதால் அவரது செயல்களில் எந்தவித பாரபட்சத்திற்கும் இடமில்லை. ஆகவே, தேவனுடைய ஆணை நீதியானது. வேதத்தில் காணப்படும் பின்வரும் வசனங்களை வாசித்துப் பாருங்கள். சங்கீதம் 106:8; நீதிமொழிகள் 16:4. இவை வேதமும் விசுவாச அறிக்கையும் போதிக்கும் நாம் இதுவரை பார்த்த உண்மைகளை மேலும் வலியுறுத்துகின்றன.

கடவுள் அனைத்தையும் உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே ஆணையிட்டுள்ளார் என்றும், அனைத்தினதும் முடிவையும் முன்கூட்டியே நியமித்திருக்கிறார் என்றும், அவற்றை தனது மகிமையின் பொருட்டே அவர் செய்திருக்கிறார் என்றும் இதுவரை பார்த்தோம். இனி அவை எந்தவித மாற்றமுமில்லாமல் நிச்சயமாக நிகழும் என்ற உண்மையை போதிக்கும் 4ம் பாராவைக் கவனிப்போம்.

பாரா 4: இவ்வாறாக முன்குறிக்கப்பட்ட தேவ தூதர்களும், மனிதர்களும் தனித்துவத்தோடு மாறாநிலையிலும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அவர்களின் தொகை நிச்சயிக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்பட்டதாகவும் இருப்பதால் அவை எவ்விதத்திலும் அதிகரிக்கப்படவோ, குறைக்கப்படவோ மாட்டாது.

2 தீமோத்தேயு 2:19; யோவான் 13:18.

இது ஒருவிதத்தில் நாம் பாரா 1ல் ஏற்கனவே பார்த்த உண்மையை மறுபடியும் வலியுறுத்துகிறது. (வாசகர்கள் இவ்வருடத்தின் முதலாவது இதழில் இதபற்றி வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்). விசுவாச அறிக்கையை எழுதியவர்கள் கடவுளின் ஆணை பற்றிய பொதுவான விளக்கத்தை முதலாவது பாராவில் தந்தபோது கடவுளின் ஆணை மாறாத்தன்மையுடையது என்று விளக்கினர்.

எபிரேயர் 6:7 கடவுளின் திட்டங்கள் ஒருபோதும் மாறாதவை என்று போதிக்கின்றன. ஏனெனில், யாக்கோபு 1:17ன்படி கடவுள் மாறாத்தன்மையுடையவராய் இருக்கிறார். மாறாத்தன்மையுடைய கடவுளின் ஆ‍ணையும் மாறாத்தன்மையுடையது என்பதை இந்நான்காம் பாரா விளக்குகிறது. கடவுளுடைய ஆணையின் மூலம் முன்குறிக்கப்பட்டுள்ள தூதர்களுடைய எண்ணிக்கையும், மனிதர்களின் எண்ணிக்கையும் ஒருபோதும் கூடவோ, குறையவோ மாட்டாது என்று இப்பாரா விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு தூதரும், மனிதரும் தனித்துவமுடையவர்களாயும் கடவுளால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் இப்பகுதி கூறுகிறது. யோவான் 13:18ல் இயேசு சொன்னதை மீண்டும் பாருங்கள் – நான் தெரிந்து கொண்டவர்களை அறிவேன் என்றார் இயேசு. இயேசு அவர்களுடைய எண்ணிக்கையை மட்டுமல்லாது அவர்கள் ஒவ்வொருவரையும்கூட தனித்தனியாக அறிந்திருக்கிறார். யூதாஸ் தெரிந்து கொள்ளப்படவில்லை என்பதையும் அறிந்திருக்கிறார். ஆகவேதான் அவர் நான் தெரிந்து கொண்டவர்களை அறிவேன் என்று சொன்னார். இவ்வசனம் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அவர்களது தனித்தன்மையிலேயே கவனம் செலுத்துகிறது. யார், யார் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். இதையே இப்பகுதி விளக்குகிறது.

ரோமர் 8:29 வசனங்கள் தேவன் எவர்களை முன்குறித்தாரோ அவர்களை . . .முன்குறித்திருக்கிறார் என்கிறது. இதிலிருந்து ஆரம்பத்தில் கடவுள் எத்தூதரையும், மனிதரையும் முன்குறித்தாரோ அவர்கள் மட்டுமே இறுதியில் அதன் பலனை அடைவார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆரம்பத்தில் முன்குறிக்கப்பட்ட தொகையில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. அது அதிகரிக்கவோ, குறையவோ மாட்டாது. அதைத்தான் விசுவாச அறிக்கை, இவ்வாறாக முன்குறிக்கப்பட்ட . . . தொகை நிச்சயிக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்பட்டதாகவும் இருப்பதால் அவை எவ்விதத்திலும் அதிகரிக்கப்படவோ, குறைக்கப்படவோ மாட்டாது என்கிறது.

இனி, ஏன் கடவுள் சிலரை நித்திய ஜீவனுக்காக முன்குறித்துள்ளார்? என்பதற்கு விசுவாச அறிக்கை அளிக்கும் விளக்கத்தைப் பார்ப்போம். இதை கடவுளின் ஆணை பற்றிய இவ்வதிகாரத்தின் 5ம் பாரா விளக்குகிறது.

பாரா 5: மனித குலத்திலிருந்து முன்குறிக்கப்பட்டவர்கள், கடவுளின் நிலைபேறுடைய மாறாத செயல், நோக்கம், இரகசியத்திட்டம், திருவுளப்பிரியம் ஆகியவற்றோடு பொருந்தி உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். படைப்புயிர்களில் காணப்படும் எதுவுமே ஒரு காரணமாகவோ, கட்டுப்பாடாகவோ அமைந்து, அவற்றால் உந்தப்படாது, எக்காலத்திலுமுள்ள மகிமைக்காக, கடவுள் தனது சுதந்திரமான கிருபையினாலும், அன்பினாலும் அவர்களை இயேசு கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார்.

எபேசியர் 1:4, 9, 11; 2:5, 12; ரோமர் 8:20; 9:13-16; 2 தீமோத்தேயு 1:9; 2 தெசலோனிக்கேயர் 5:9.

இப்பாராவில் ஏன் கடவுள் சிலரை நித்திய ஜீவனுக்காக முன்குறித்தார் என்பதற்கான காரணத்தையும், அதற்கு எதிர்மறையான காரணத்தையும் விசுவாச அறிக்கை அளிப்பதைப் பார்க்கிறோம். முதலாவதாக கடவுள் சிலரை நித்திய ஜீவனுக்காக தெரிவு செய்ததற்கான காரணத்தைப் பார்ப்போம். இப்பாராவின் முதல் பகுதி இதற்கான பதிலை அளிக்கிறது. அதாவது, – மனித குலத்திலிருந்து முன்குறிக்கப்பட்டவர்கள், கடவுளின் நிலைபேறுடைய மாறாத செயல் நோக்கம், இரகசியத்திட்டம், திருவுளப்பி‍ரியம் ஆகியவற்றோடு பொருந்தி உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அவரால் ‍தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்பகுதி, தனது செயலுக்கான காரணத்தை கடவுள் மட்டுமே அறிந்திருப்ப‍தோடு அது தனக்கு மிகவும் பிரியமாயிருந்ததால் அதைக் கடவுள் செய்தார் என்று கூறுகிறது. அத்தோடு, தனது சுதந்திரமான கிருபையாலும், அன்பினாலும் அதைக் கடவுள் செய்தார் என்றும் இப்பகுதி விளக்குகிறது. ஆகவே, கடவுளுக்கு மட்டுமே தெரிந்த அக்காரணம் என்னவாக இருந்தபோதும், அவர் தனது பாரபட்சமில்லாத கிருபையினால் சிலரை நித்திய ஜீவனுக்காக முன்குறித்தார். இவ்விளக்கத்தை வேதத்தில் தெளிவாகக் காணலாம். எபேசியர் 1:4, தம்முடைய அன்பின் காரணமாகவே கடவுள் நம்மை உலகத்தோற்றத்திற்கு முன்பாகத் தெரிந்து கொண்டவர்களுக்கான நித்திய ஜீவனை கடவுள் அவர்களை நேசித்ததால் அளிக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம். எபேசியர் 1:10, தமது தயவுள்ள சித்தத்தின் காரணமாக கடவுள் தனது மக்களை முன்குறித்தார் என்று சொல்கிறது. 11, 12 ஆம் வசனங்களும் இதை‍ மேலும் வலியுறுத்துகின்றன.

5ம் பாரா கடவுள் சிலரை முன்குறித்து நித்திய ஜீவனை ஏன் அவர்களுக்கு அளித்தார் என்பதற்கான காரணத்தை மட்டும் கூறாமல், அதற்கு எதிர்மறையான உண்மையையும் விளக்குகிறது. அதாவது, படைப்புயிர்களில் காணப்படும் எதுவுமே ஒரு காரணமாகவோ, கட்டுப்பாடாகவோ அமைந்து, அவற்றால் உந்தப்படாது, . . . கடவுள் . . . அவர்களை இயேசு கிறிஸ்துவுக்குள் தெரிந்து கொண்டார் என்று இப்பாராவின் இறுதிப் பகுதியில் வாசிக்கிறோம். இரண்டாம் பாராவும் இதே உண்மையை வெளிப்படுத்தியது. அதாவது நம்மில் காணப்பட்ட எதன் அடிப்படையிலும் கடவுள் நம்மைத் தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அவ்வுண்மை. கடவுள் நம்மீது தனது கிருபையைக் காட்டுவதற்கு நம்மில் காணப்பட்ட எதுவுமே காரணமாக அமையவில்லை (ரோமர் 9:16). எபேசியர் 2:8, 9 கிருபையினால் நாம் விசுவாசத்தை அடைந்திருப்பதாகவும், விசுவாசம் நமது கிரியை அல்ல என்றும் சொல்கிறது. இதையே 2 தீமோத்தேயு 1:9லும் வாசிக்கிறோம். இவ்வசனம் கடவுளின் செயலுக்கான காரணத்தையும், எதிர்மறையான காரணத்தையும் ஒரே வசனத்தில் விளக்குகிறது. ஆகவே, கடவுள் நம்மில் காணப்பட்ட எதன் அடிப்படையிலும் நம்மைத் தெரிந்து கொள்ளாமல் தனது அன்பின் அடிப்படையிலும், கிருபையினாலும் நம்மைத் தெரிந்து கொண்டார்.

அடுத்ததாக பாரா 6ல், தனது ஆணையின் நிறைவேற்றுதலுக்கான காரணிகளையும் கடவுளே நியமித்திருக்கிறார் என்ற உண்மையைப் பார்ப்போம்.

பாரா 6: கடவுள் தெரிந்தெடுக்கப்பட்டவர்களை தனது மகிமைக்காக நியமித்ததோடு மட்டுமல்லாது, நித்தியமும், பூரணசுதந்திரமுடைய தனது சித்தத்தினால் அதற்கான எல்லா வழிவகைகளையும் முன்குறித்துள்ளார். அதேவேளை தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஆதாமில் வீழ்ச்சியுற்றதனால், கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியினுடைய ‍நேர்பயனுடைய அழைப்பினால் விசுவாசத்திற்காக கிறிஸ்துவுக்குள் அழைக்கப்பட்டும், நீதிமான்களாக்கப்பட்டும், தத்தெடுக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும், விசுவாசத்தினால் இரட்சிப்பிற்காக அவரது வல்லமையினால் காக்கப்படுகிறார்கள். தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே கிறிஸ்துவினால் மீட்கப்பட்டும். நேர்பயனுடைய அழைப்பினால் அழைக்கப்பட்டும், நீதிமான்களாக்கப்பட்டும், தத்தெடுக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும், இரட்சிக்கப்படுகிறார்கள்.

1 பேதுரு 1:2, 5; 2 தெசலோனிக்கேயர் 2:13; 1 தெசலோனிக்கேயர் 5:9-10; ரோமர் 8:30; யோவான் 10:26; 17:9; 6:64.

இப்பாராவில் அநேக சத்தியங்களை நாம் காணலாம். ஆனால், அதன் முக்கியமான போதனையை இப்போது பார்ப்போம். இப்பகுதி கடவுள் நித்திய ஜீவனுக்கு உரித்தானவர்களை மட்டும் தெரிந்து கொண்டிராமல் அவர்கள் நித்தியஜீவனை அடையும் வழிகளையும் நியமித்துள்ளார் என்ற உண்மையைப் போதிக்கின்றது. அதாவது, யார் நித்தியஜீவனை அடையப்போகிறார்கள் என்பதை மட்டும் இப்பகுதி விளக்காமல் அவர்கள் எவ்வாறு அதை அடையப்போகிறார்கள் என்பதையும் தெரிவிக்கிறது. இதையே – தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் . . . கிறிஸ்துவினால் மீட்கப்பட்டு, பரிசுத்த ஆவியினுடைய நேர்பயனுடைய அழைப்பினால் விசுவாசத்திற்காக கிறிஸ்துவுக்குள் அழைக்கப்பட்டும், நீதிமான்களாக்கப்பட்டும், தத்தெடுக்கப்பட்டும், பரிசுத்தமாக்கப்பட்டும், விசுவாசத்தினால் இரட்சிப்பிற்காக அவரது வல்லமையினால் காக்கப்படுகிறார்கள் என்ற வாக்கியங்கள் விளக்குகின்றன. உலகத்தோற்றத்திற்கு முன்பாக கடவுள் நம்மைத் தெரிந்து கொண்டுள்ளார் என்பதை நாம் எப்படி நம்புவது? மேலே கூறப்பட்டுள்ள நித்திய ஜீவனை அடையும் வழிமுறைகளை நாம் கிறிஸ்துவுக்குள் அனுபவித்திருப்போமானால் நிச்சயமாக நம்மைக் கடவுள் தெரிந்து கொண்டுள்ளார் என்பதை நம்பலாம். இயேசு, யோவானில் (10:27) என்னுடைய ஆடுகள் என் சத்தத்தைக் கேட்கும், அவைகளை நான் அறிந்திருக்கிறேன், அவைகள் என்னைப் பின்பற்றும் என்றார். நாம் அவருடைய ஆடுகளா என்று எப்படி அறிந்து கொள்வது? அவரை நாம் விசுவாசித்துப் பின்பற்றுபவர்களாயிருந்தால் நிச்சயம் நாம் அவருடைய ஆடுகளே.

கடவுள் தன்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் நித்திய ஜீவனை அடைவதற்கான காரணிகளையும் நியமித்துள்ளார் என்பதற்கு ஆதாரமான வசனமாக ரோமர் 8:30 உள்ளது – எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். ஆகவே, நித்திய ஜீவனுக்காக தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதனை அடையும் வழிகளையும் கடவுளே நியமித்திருக்கிறார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

பாரா 7: இதுவரை நாம் பார்த்த சத்தியங்கள் குறித்து நாம் என்ன ‍செய்ய வேண்டும் என்று விளக்குகின்றது.

பாரா 7: இந்த மறை பொருளுடைய முன்குறித்தல் கோட்பாடானது, கடவுளுடைய வார்த்தையிலே வெளிப்படுத்தப்பட்டுள்ள அவரது சித்தத்தில் அக்கறை கொண்டு அவற்றிற்கு கீழ்ப்படியும் மனிதர்கள், நிச்சயமான நேர்பயனுள்ள ‍அழைப்பின் மூலம் தமது நித்திய தெரிந்து கொள்ளுதலில் உறுதிபெறும்படியாக, விசேடமான ‍விவேகத்தோடும் கவனத்தோடும் கையாளப்பட வேண்டும். ஆகவே, இந்தக்கோட்பாடு, உண்மையோடு நற்‍செய்திக்கு அடிபணியும் அனைவரும் கடவுளைப்போற்றவும் மதிக்கவும் வியந்து பாராட்டவும் காரணமாகவும், தாழ்மையுணர்வு. ஊக்கம், அளவற்ற ஆற்றல் என்பவற்றை அளிப்பதற்குக் காரணமாகவும் இருக்க வேண்டும்.

1 தெசலோனிக்கேயர் 1:4-5; 2 பேதுரு 1:10; ‍எபேசியர் 1:6; ரோமர் 11:5-6, 20, 33; லூக்கா 10:20.

முதலாவதாக, நமது விசுவாசத்தில் நாம் நிச்சயத்தையும், உறுதியையும் அடைய இச்சத்தியங்களைப்படித்து அவற்றை நாம் ஆழமாகத் தியானிக்க வேண்டும். நம்மை நாம் சுயபரிசோதனை செய்து கொண்டு, தேவ கட்டளைப்படி வாழ்ந்து வருவோமானால் நிச்சயமாக நாம் நித்தியத்திலிருந்து முன்குறிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உறுதியாக நம்பலாம். இரண்டாவதாக, நாம் இச்சத்தியங்களுக்காக கர்த்தரை ஆராதித்து அவருக்கு நன்றி கூறவேண்டும். இதையே பவுல் எபேசியருக்கு எழுதிய நிருபத்தின் முதலாவது அதிகாரத்தில் (1-11 வசனங்கள்) தனது ஜெபத்தின் மூலம் நமக்குப் போதிக்கிறார். மூன்றாவதாக, இச்சத்தியத்தைத் தியானித்து நாம் அதிக தாழ்மையுணர்வையும், ஆறுதலையும், ஊக்கத்தையும் அடைய வேண்டும்.

இவ்வுலகில் என்ன நடந்தபோதும் கடவுள் எல்லாவற்றையும் முன்குறித்து ஆணையிட்டு தனது சித்தத்தின்படி கொண்டு நடத்தி வருகிறார் என்ற உண்மை எத்தனை பெரிய ஆறுதலை நமக்கு அளிக்கின்றது. கர்த்தருக்கே எல்லா மகிமையும்! (இவ்விசுவாச அறிக்கையை வேதபாடமாக சபைகளில் போதிப்பவர்கள் இவற்றில் தரப்பட்டுள்ள வேதவசனங்களோடு பொருந்தி வரக்கூடிய மேலதிக வசனங்களையும் இணைத்து மேலும் விரிவாக இவ்வேதசத்தியங்களைப் போதிக்க வேண்டும். கடவுளின் ஆணைபற்றி விளக்கும் நூல்களான ஆர்தர் பிங்க் எழுதி தமிழிலுள்ள சர்வவல்லவரின் ஏகாதிபத்தியம், ஆளுகிறவர் யார்? ஆபிரகாம் பூத்தின் கிருபையின் மாட்சி போன்ற நூல்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்நூல்கள் சென்னையிலுள்ள தமிழ் பாப்திஸ்து வெளியீடுகளால் வெளியிடப்பட்டவை.)

மறுமொழி தருக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s