சிக்கல் தீர்க்க வந்திருக்கும் ‘மனித சித்தம்’

Shebaமனித சித்தம்: கருத்துரை
ஷேபா மிக்கேள் ஜார்ஜ் (மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து)

“சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்” என்பது பழமொழி. அது போல, ஆர்மீனிய, பெலேஜியனிச, செமி- பெலேஜியனிச போதனைகளின் பிடியில் சிக்கி மெய்யான கிறிஸ்தவ வாழ்வு வாழமுடியாமல் தவிக்கும் தற்கால கிறிஸ்தவர்களுக்கும், சரியான முறையில் சித்தத்தைக் குறிவைத்து சுவிசேஷ பிரசங்கம் செய்யத் தடுமாறும் போதகர்களுக்கும் ‘சிக்கல் எது’ என்பதை விளக்கும் இறையியல் போதனைகளை உள்ளடக்கியது, போதகர் பாலா அவர்களின் “மனித சித்தம்” எனும் நூல்.

FW-3d2சமீபத்தில் ஒரு பிரபலமான கிறிஸ்தவ புத்தகக் கடையில் புத்தகம் வாங்கச் சென்றிருந்தேன். அங்கு காணப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் நூல்களில், செழிப்பு உபதேச நூல்களும், தனிநபர் சாட்சிக் கட்டுரைகளும், பல பிரபலமான தமிழ் பிரசங்கிகளின் அட்டைப்படங்களோடு தனிப்பட்ட அனுபவங்களைப் பிரதானமாகக் கொண்டு அமைந்த பிரசங்க நூல்களும், பல நீண்ட வரிசைகளில் விதவிதமாக அடுக்கப்பட்ட பாடல் புத்தகங்கள் மற்றும் இசைக் கருவிகள் வாசிக்கும் முறைகள் (musical notes) குறித்த புத்தகங்களே நிறைந்து காணப்பட்டன. தேடிப்பிடித்து எடுத்த சில ‘சீர்திருத்த சத்திய’ மொழிபெயர்ப்பு நூல்களும், தரமான மொழிபெயர்ப்பாக இருக்கவில்லை. இது இன்றைய தமிழ் கிறிஸ்தவர்களிடையே இறையியல் போதனைகள் எந்த அளவிற்கு அலட்சியப்படுத்தப்படுகின்றன என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது.

“கிறிஸ்தவத்தின் ஆணிவேரே வேத சத்தியங்கள்தான். வேத சத்தியங்களுக்கு மதிப்புக் கொடுக்காமலிருந்த காலங்கள் எல்லாம் சபை வரலாற்றில் ஆத்மீக விருத்தியற்ற காலங்களாகவே வர்ணிக்கப்பட்டிருக்கின்றன” என்ற நூலாசிரியரின் கருத்து, தற்கால கிறிஸ்தவத்தின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தவகையில் போதகர் பாலா அவர்களின் தமிழ் கிறிஸ்தவ இலக்கியப் பணி ‘ஞாலத்தின் மாணப் பெரிது.’

இந்த நூலில் ஆசிரியர், மனித சித்தம் என்ற இறையியல் போதனையின் நான்கு நிலைகளை, வேதபூர்வமாக 1689 விசுவாச அறிக்கையின் அடிப்படையில் ஆராய்ந்து விளக்குகிறார். அத்தோடு, சபை வரலாற்றில் இந்த இறையியல் போதனை சந்தித்த எதிர்ப்புகள் குறித்தும், சத்தியத்தை நிலைநிறுத்த அந்தந்தக் காலங்களில் கர்த்தர் எழுப்பியிருந்த இறையியல் வல்லுனர்களைக் குறித்தும் அறிந்துக்கொள்ள முடிந்தது. முக்கியமாக நூலிலிருந்து, ‘மனித சித்தம்’ என்ற இறையியல் போதனைக்கும் வேதத்தின் ஏனைய போதனைகளான கர்த்தரின் இறையாண்மை, தெரிந்து கொள்ளுதல், மறுபிறப்பு மற்றும் சுவிசேஷ அழைப்பு ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகள் குறித்த தெளிவான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இந்த நூல் கையில் கிடைத்ததும், முதலில் என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம், அதன் பொருளடக்கம் மற்றும் பக்கங்களின் எண்ணிக்கை! ஏனெனில், ‘மனித சித்தம்’ நூல், சித்தத்தின் நான்கு நிலைகளையும் ஒரு நாற்பது பக்கங்களில் விளக்கும் ஒரு சிறு நூலாக இருக்கும் என்பதே எனது கணிப்பாக இருந்தது. எனவே அதிகமான அதன் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்ததும் ‘இதில் நிச்சயம் ஏதோ விஷயம் இருக்கிறது’ என்று புருவங்கள் முடிச்சிட, நூலை வாசிக்கும் ஆர்வம் மேலும் அதிகமாகியது.

நூல் அறிமுகப் பகுதியிலேயே அருமையாக ஒரு கோடு கிழித்ததுபோல, இன்று உலகில் இருக்கும் சுவிஷேச ஊழியங்களை மனித சித்தத்தின் இயல்பு குறித்த அதன் நம்பிக்கைகளின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, இவற்றில் எது வேத பூர்வமானது என்றும், ஆதிச்சபை விசுவாசித்த சத்தியம் எது என்றும் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.

முதல் வரும் இரு அத்தியாயங்களில், மனிதனின் சுயாதீன சித்தம் என்றால் என்ன? அவனுடைய நான்கு ஆவிக்குரிய நிலைகளில் அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது? என்று ஒரு சுருக்கமான அறிமுகத்தைத் தருகிறார். அதில், அதற்கு ஆதாரமாகப் பயன்படுத்தியிருக்கும் 1689 சீர்திருத்த விசுவாச அறிக்கையின் மெய்த்தன்மையை அதன் கிறிஸ்தவ வரலாறு மற்றும் இறையியல் பின்னணியுடன் தெளிவாக உறுதிப்படுத்துகிறார். இப்பகுதியிலிருந்து 1689 விசுவாச அறிக்கையின் பல சிறப்பம்சங்களை அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, மனித சித்தத்திற்கும் இரட்சிப்பு பற்றிய போதனைகளுக்கும் இடையிலான பிரிக்கமுடியாத தொடர்பு குறித்த இறையியல் உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

வரலாற்றில் 5-ம் நூற்றாண்டு துவங்கி இன்றுவரை ‘மனித சித்தம்’ என்ற இறையியல் போதனைக்கு எதிராக எழுந்துள்ள சில தர்க்கங்களை ஆசிரியர் இந்த அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ளார். அவற்றை எதிர்த்து கர்த்தருடைய மனிதர்கள் முழுமூச்சுடன் போராடியதற்கான முக்கிய காரணம்: அது கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கும், இரட்சிப்பு பற்றிய வேதத்தின் போதனைகளுக்கும் எதிராக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகவே, என்பதை உறுதியாக அவர் வலியுறுத்துகிறார். இது, கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களது சித்தத்தின் நிலைப்பாடு குறித்த இறையியல் போதனையை அறிந்திருக்க வேண்டியது எத்தனை அவசியமானது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

மூன்றாவது அதிகாரம், மனித சித்தத்தின் சுதந்திரம் எத்தகையது? சிருஷ்டிக்கப்பட்ட நிலையில் அது எப்படி இருந்தது? இதைக் குறித்து சீர்திருத்த விசுவாசம் என்ன சொல்லுகிறது? என்பதை விசுவாச அறிக்கையின் அடிப்படையில் வேதத்தின் பல வசனங்களை மேற்கோள் காட்டி நூலாசிரியர் விளக்குகிறார். இதிலிருந்து, கர்த்தர் ஆதாமை ஒரு ‘ரோபோ’ போன்று படைக்கவில்லை. அவரது சாயலில், அவரது சித்தத்தை அறிந்துகொள்ளக்கூடியவனாகப் படைத்தார். அதுமட்டுமின்றி அவனது சித்தத்தின் முழுச் சுதந்திரத்தோடு தேவ சித்தத்தை நிறைவேற்றும் பொறுப்பும், செயல்திறனும் கொண்டவனாகவே படைத்தார். எனவே மனிதன் தான் செய்கின்ற எந்தச் செயலுக்கும் வேறு எதையும், யாரையும் காரணம் காட்டித் தப்பிக்க முடியாது. நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் வேறு எவற்றின் வற்புறுத்தலுமின்றி பூரண சுதந்திரத்தோடும், முழு விருப்பத்தோடும் செய்கிறோம் என்று வேதம் கூறும் உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அத்தோடு மனித சித்தத்தின் சுதந்திரத்திற்கும், மனித சித்தத்தின் செயல்திறனுக்கும் உள்ள வேறுபாட்டையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இன்று கிருபையினால் பரிசுத்தமாகுதலை விடாமுயற்சியுடன் தொடரும் ஒவ்வொரு விசுவாசியும் ‘பிரசவ வேதனைப்பட்டு’ நிறைவேற்றத் துடிக்கும் அந்த தேவ சித்தத்தை, ஆதாம் எவ்வளவு இயல்பாகச் செய்யும் விருப்பமும், வல்லமையும் கொண்டிருந்தான் என்பதை, இந்த அதிகாரத்தின் நான்காவது பாரா பட்டியலிட்டு விளக்குகிறது. இது, நாம் இழந்துபோன அந்த மேன்மையான நிலை எது? எவ்வளவு ஆழமான பாதாளத்திற்குள் வீழ்ந்தோம்? எத்தனை அற்புதமாக மீட்கப்பட்டிருக்கிறோம்?  என்பதைக் குறித்த ஆழமான பார்வையைத் தருகிறது. இந்த அற்புதமான புரிதல் நம்மை மீட்ட இரட்சகர் மீதான அன்பின் ஆழத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

நான்கு முதல் எட்டு வரையிலான அத்தியாயங்களில், நூலின் முக்கியக் கருப்பொருளான மனித சித்தம், அவனுடைய நான்கு ஆவிக்குரிய நிலைகளில் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் திட்டமும் தெளிவுமாக ஆசிரியர் விளக்குகிறார். இந்த நான்கு அதிகாரங்களும் நூலை வாசிக்கும் நபர்களின் சித்தத்தோடு நேரடியாக இடைபட்டு, நாமிருக்கும் ஆவிக்குரிய நிலையை, ஒரு 5D திரைப்படம் போல மிக அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

படைப்பில், சுயாதீன சித்தத்தோடு நன்மையை மட்டுமே நாடிச் செய்ய பூரண வல்லமை கொண்டிருந்த நம் ஆதிப் பெற்றோரின் பாவமற்ற நிலையை நூலில் அருமையாக எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். முக்கியமாக இத்தனை மேன்மையான நிலையிலிருந்து நம் ஆதிப் பெற்றோர் விழுந்துவிட ஏதுவாக இருந்த அந்த ‘மாறும் இயல்பு’ என்பது என்ன? என்ற இரகசியத்தைத் தெரிவிக்கிறார்.  இதன் மூலமாக, கர்த்தரைப் பற்றிய அறிவில் நாளுக்கு நாள் பொறுப்போடு நாம் வளரவேண்டியது எத்தனை அவசியம் என்பதைத் திட்டமும் தெளிவுமாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

“எது நடந்திருக்கக் கூடாதோ அது அன்று ஏதேன் தோட்டத்தில் நடந்தது . . .  அது ஏன் ஏற்பட வேண்டும்? அருமையான நிலையில் இருந்த மனித வாழ்க்கையை அது கெடுத்துவிட்டதே!” என்ற வரிகளில் மனுக்குலம் ‘பூரண சுயாதீனத்தோடு’ பாவத்தில் வீழ்ந்ததின் அவலத்தை, மீட்டுக்கொள்ள இயலாத அதன் இழப்பை, ‘முழுமையான சீரழிவின்’ மெய்த்தன்மையை, நிதர்சனமாகப் புரிந்துக் கொண்ட இதயம் நிராசையோடு புலம்புவதை உணரமுடிகிறது. அதைத் தொடர்ந்து, மூலபாவம் குறித்த பெலேஜியஸின் பார்வை ஏன் தவறானது? மனித சித்தம் குறித்த வேத போதனையிலிருந்து எந்தவிதத்தில் அது முரண்படுகிறது எனபதை ஆசிரியர் விளக்குகிறார்.

ஒன்றைச் செய்யும்படிக் கட்டளையிட்டுவிட்டு அதைச்செய்ய இயலாத நிலையில் மனிதன் இருப்பானானால் அவன் அதைச் செய்யும்படிக் கடவுள் எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? என்ற பெலேஜியசின் கேள்வி வரலாற்றில் எப்போதுமே கேட்கப் பட்டு வருவதால், இதற்கான பதிலை நாமும் தெளிவாக அறிந்து வைத்திருப்பது அவசியம். அதற்கு பதிலாக, படைப்பில் மனிதனுக்கு இருந்த ‘மாறும் இயல்பு’, பூரணமான அந்த நிலையிலும் தொடர்ந்து நன்மை செய்வதற்கு உதவிய கர்த்தரின் கிருபை மற்றும் பாவத்தின் விளைவு ஆகியவற்றைக் குறித்த இறையியல் போதனைகளின் மூலம் பெலேஜியஸை வாயடைக்கச் செய்து சத்தியத்தை நிலை நிறுத்தினார் ஆகஸ்தீன். பாவத்தினால் மனிதனுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த பிலிப் ஷ்சாப்பின் கருத்து இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது.

அடுத்தபடியாக, நீயும் நானுமா? என்ற அட்டகாசமான தலைப்பின் கீழ், முழுமையாக ஆத்தும சீரழிவில் வீழ்ந்த மனித குலம் இரட்சிப்பில் செயல்படும் ‘கிரியை’ மொனர்ஜிசமா அல்லது சினர்ஜிசமா? எந்த வகையை சார்ந்தது என்று விளக்குகிறார் ஆசிரியர். இந்தப் பகுதியில், பெலேஜியஸ் முதற்கொண்டு சார்ள்ஸ் பினி வரையில் சத்தியத்திற்கு விரோதமாக (வீழ்ச்சி, மூல பாவம், சித்தத்தின் அடிமைத்தனம் மற்றும் இரட்சிப்புக் குறித்து) வரலாற்றில் எழும்பிய பல சினர்ஜிசப் போலிப் போதனைகளை இனம்கண்டு விளக்குகிறார். அத்தோடு இத்தகைய போலிப் போதனைகளை சரியான நேரத்தில் இனம் கண்டு அதன் முகத்திரையைக் கிழித்து, நெற்றிப் பொட்டிலடிப்பதுபோல, ‘இரட்சிப்பைக் குறித்த வேதத்தின் பார்வை’ மொனார்ஜிசம் மட்டுமே! என்று நிரூபித்த பல சீர்திருத்த இறையியல் அறிஞர்களின் ஆழமான இறையியல் அறிவு மற்றும் அவர்களின் பக்தி வைராக்கியம் குறித்து நூலைப்படித்து அறிந்துகொள்ள முடிகிறது. இது மனித சித்தம் குறித்த தவறான பார்வையைக் கொண்டிருப்பது எத்தனைப் போலிப் போதனைகளுக்கு வித்திடுகிறது என்று உறுதியாக எச்சரிக்கிறது.

கிருபையில்: கிருபையின் நிலையில் மனிதன் தன் பாவத்தினால் இழந்துபோன நிலையை மறுபடியும் மறுபிறப்பின் மூலமாகச் சந்திக்கிறான். எனவே சுயாதீனமாக தனது புதிய இருதயத்தின் தன்மைக்கு ஏற்ப நன்மையை நாடிச் செய்யும் வல்லமையைப் பெற்றுக்கொள்கிறான். ஆனாலும் அவன் இவ்வுலக வாழ்வில் பூரணமற்ற நிலையில் இருப்பதால் தீமையைச் செய்து விடும் வாய்ப்பு இருக்கிறது என்கிறார் ஆசிரியர். இதற்கு காரணமாக இரண்டு முக்கிய விஷயங்களைக் குறிப்பிடுகிறார் செக்கராயஸ் அர்சினஸ்:

  1. ஒரு விசுவாசி இவ்வுலகத்தில் வாழும் காலம் வரைக்கும் அவன் இருதயமும், சித்தமும் முழுப்பூரணத்தை அடையாமல் இருக்கிறது. எனவே முதிர்ச்சியடைந்த விசுவாசிகளின் நற்செயல்களிலும் கூட பாவம் கலந்திருந்து அதைப் பூரணமற்றதாக்கிவிடுகிறது.
  2. மறுபிறப்படைந்த விசுவாசியில் பரிசுத்த ஆவியானவர் தொடர்ந்து இடைவிடாமல் செயல்படுவதில்லை. தாழ்மையைக் கற்றுத் தருவதற்காகவோ அல்லது பரிசோதித்துப் பார்ப்பதற்காகவோ சில வேளைகளில் அவர் அவர்களைப் புறக்கணித்து விடுகிறார். எனவே கிருபையின் நிலையில் இருக்கும் விசுவாசியின் சித்தம் முழு சுயாதினத்தோடு நன்மையை நாடிச் செய்யும் திறன் கொண்டிருந்த போதும், இவ்வுலக வாழ்க்கையில் ஒருபோதும் பூரணத்துவத்தை அடையமுடியாது! என்பதைத் திட்டவட்டமாக விளக்குகிறார்.

மகிமையில்: இந்நிலையில் மனிதனுடைய சித்தம், நித்தியத்திற்கும் பரிசுத்தத்தோடு நன்மையை மட்டுமே நாடிச்செய்ய பூரண விடுதலையும், வல்லமையும் கொண்டதாக இருக்கும். இங்கு ஏதேனில் காணப்பட்ட ‘ மாறும் இயல்பு’ இல்லை! கிருபையின் நிலையில் காணப்படும் பாவத்தின் தொல்லை இல்லை! பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்தை இழக்கும் வாய்ப்பு இல்லவே இல்லை! முழுமையான விடுதலை!! பூரண பரிசுத்தம்!! நித்திய சந்தோஷம்!! என்று சொல்லிக்கொண்டே போகலாம். திரும்பத் திரும்ப வாசித்து மகிழத் தூண்டும் அற்புதமான அத்தியாயம் இது. மோட்சப் பிரயாணம் நூலில், மகிழ்ச்சி மலையின் மலைச் சிகரத்தில் தொலைநோக்கி மூலம் பிரயாணிகள் பார்த்து மகிழ்ந்த பரலோக வாசலின் சாயல் இதுவாகத்தான் இருக்கும் என்று என்னை எண்ணவைத்தது.

இதைத் தொடர்ந்து வரும் அதிகாரத்தில், மனித சித்தம் குறித்த வேதத்தின் போதனையை விகற்பமில்லாமல் புரிந்துகொள்வதற்கு அவசியமான இரு முக்கியமான இறையியல் போதனைகளை விளக்குகிறார் ஆசிரியர். முதலாவது, அறிவியலாலும், விஞ்ஞானத்தாலும் ஆராய்ந்து நிதானிக்க முடியாத சர்வ வல்லமையுள்ள தேவனின் இறையாண்மை குறித்தது. இரண்டாவது, படைத்தவரின் சித்தத்தை நிறைவேற்றுவதில் மனிதனுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு குறித்தது. பார்வைக்கு முரண்படுவது போலத் தோன்றும் இவ்விரண்டு சத்தியங்களும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாத தனித்தன்மை கொண்ட இணைக்கோடுகள் போன்றவை. எனவே இவற்றை இணைத்துப் பார்க்க நினைப்பது அவற்றின் மெய்தன்மைக்கு ஊருவிளைவித்து, தவறான இறையியல் போதனைக்கு வழி ஏற்படுத்திவிடும் என்ற உறுதியான எச்சரிப்பைத் தருவது மட்டுமல்லாமல், முன்னறிவு  மற்றும் முன்னோக்கிப் பார்த்தல், ஆத்மீக ஆற்றல் மற்றும் இயற்கை ஆற்றல் , இவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு குறித்தும் விவரமாக அறிந்துகொள்ள முடிகிறது. ஆக நமது பார்வைக்கு முரண்பாடாகத் தோன்றும் சத்தியங்களைக் குறித்து தர்க்கம் செய்வதை விட்டுவிட்டு வேதத்தின் சத்தியங்களுக்கு கீழ்ப்படிய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை, இதில் எந்தவித சாக்குப் போக்கும் சொல்லாமல், கட்டாயமாக கர்த்தருக்குக் கணக்கொப்புவிக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரிகிறது.

தொடர்ந்து மனித சித்தம் குறித்த வேதத்தின் போதனைக்கும், இரட்சிப்பில் கர்த்தரின் தெரிந்துகொள்ளுதல், மறுபிறப்பு ஆகிய சத்தியங்களுக்கிடையே உள்ள பிரிக்க முடியாத தொடர்பு குறித்தும் வேதத்திலிருந்து விளக்குகிறார் ஆசிரியர். முக்கியமாக, சித்தத்தின் சுயாததீனத்திற்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில் மனித சித்தத்தைச் சந்தித்து, அற்புதமாக மறுபிறப்பை அளிக்கும் கர்த்தரின் சித்தம் குறித்த ஞானம் என்னை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

நூலின் கடைசிப் பகுதியில், சுவிசேஷ பணி என்பது எது? அதன் நோக்கம் என்ன? மனித சித்தத்தின் இயற்கை ஆற்றலைக் குறிவைத்து சுவிசேஷ பிரசங்கம் அளிப்பது எப்படி? ஒரு சீர்திருத்த பிரசங்கியின் ஆத்தும பாரம் எப்படி இருக்கவேண்டும்? இயேசு கிறிஸ்துவை எப்படி மனிதர் முன்பு வைப்பது? என்பது போன்ற பிரங்கிகளுக்கான ஆலோசனைகளை வேதத்திலிருந்தும், ஸ்பர்ஜன், ஜோன் மரே, ஆல்பர்ட் என் மார்டின் போன்ற சீர்திருத்த இறையியல் அறிஞர்களின் நூல்களிலிருந்தும் மிக அருமையாக எடுத்துக் காட்டுகிறார் நூலாசிரியர்.

“மிகவும் ஆணித்தரமான இருதயத்தைத் தொடக்கூடிய பிரசங்கங்களை கர்த்தரோடு நல்லுறவில்லாத ஒருவனால் அளித்துவிடமுடியும்; ஆனால் அதன் பலன் மிகக்குறைவாகவே இருக்கும். இயேசுவோடு நெருங்கியிருக்கும் ஒருவனின் குரலின் தொனி விசேஷமானது; அது பூரணமாக அமைந்த ஒரு பிரசங்கத்தைவிட ஆத்துமாவின் இருதயத்தை வல்லமையோடு தொடுவதாயிருக்கும்” என்ற வார்த்தைகள் ஒரு பிரசங்கி கர்த்தரோடு கொண்டிருக்க வேண்டிய இடையறாத ஐக்கியத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

இதனைத் தொடர்ந்து, கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த சத்தியம் குறித்து ஆத்துமாக்கள் கொண்டிருக்கும் குழப்பமான எண்ணங்களுக்கான காரணத்தையும் அதற்கான தீர்வையும் தெரிவிக்கிறார் ஆசிரியர். அத்தோடு இந்த சத்தியம் தொடர்பாக பரவலாகக் கேட்கப்படும் சில கேள்விகளையும் அவற்றிற்கான வேத பூர்வமான பதில்களையும் அளித்துள்ளார்.

எளிய நடையில், இலக்கியச் சுவையோடு, தெளிவான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு,வேத சத்தியங்கள் முறையாக ஒன்றன் பின் ஒன்றாக வரும்படி மிகக் கவனமாகத் தொகுக்கப்பட்ட அருமையான நூலிது. இந்நூல் விளக்கும் சத்தியம், நேரடியாக நமது சித்தத்திற்கு சவாலிடுவதாலும், ஆய்வு ரீதியில் பல விவாதங்களையும், கருதுகோள்களையும், ஆழமான இறையியல் சத்தியங்களையும் கொண்டிருப்பதாலும், வேக வாசிப்பாக வாசித்துப் புரிந்துகொள்வது கடினம். எனவே கருத்தோடு நிதானமாக இரண்டு அல்லது மூன்று முறை வாசிக்கும்போது அதன் சாரத்தை முழுமையாக அனுபவித்துப் பயன்படுத்த முடியும். நான் நூலை இரண்டு தடவைகள் முழுமையாகவும், இதை எழுதும்போது ஒரு தடவையும் வாசித்து முடித்தேன்.

இந்நூலை வாசித்ததன் மூலம் தனிப்பட்ட விதத்தில் நான் அநேக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. குறிப்பாக, நானிருக்கும் ஆவிக்குரிய நிலையை நிதானித்து, ஒரு வெற்றியுள்ள விசுவாச வாழ்க்கை வாழ்வதற்கான பல யுக்திகளைக் கற்றுத் தந்தது நூல். அதுமட்டுமின்றி சக மனிதர்களையும் ஆவிக்குரியவிதத்தில் நிதானித்து அவர்களோடு சுமூகமான நட்புறவு கொள்வதற்கும், சரியான விதத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும் நூல் என்னில் ஆழமான அஸ்திவாரமிட்டது.

ஆலமர விழுதுகள்போல, நமது கிறிஸ்தவ விசுவாசத்தைத் தாங்கி நிலைத்து நிற்கச் செய்யும் அநேக இறையியல் போதனைகளை உள்ளடக்கிய அருமையான நூலிது. ஒவ்வொரு விசுவாசியும் தன் சித்தத்தின் நிலையைக் குறித்த வேதபூர்வமான பார்வையைக் கொண்டிருப்பது மிக மிக அவசியம். எனவே கால தாமதம் செய்யாமல் இன்றே நூலை வாங்குங்கள்! கவனத்தோடு வாசியுங்கள்! விசுவாசத்தில் வளருங்கள்!

வளர்ந்து வரும் இளம் விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் நல்ல கனிகளைக் கொடுக்கும் விதத்தில், சத்திய நீரோடையாய்ப் பாய்ந்து ஆத்துமாவின் தாகம் தீர்க்கும் போதகர் பாலா அவர்களின் இலக்கியப் பணி மேலும் வளர்ந்து விரிவடையத் தொடர்ந்து ஜெபிக்கிறேன்.

மறுமொழி தருக