தேவ கோபம், (ஆசிரியர் R. பாலா) – வாசிப்பனுபவம்

arul nesanஅனைத்துக் கிறிஸ்தவர்களும் வாசிக்க வேண்டிய அவசியமான நூலிது. ஒருவேளை தற்போது உங்களிடம் இப்புத்தகம் இருக்குமானால் உடனே பக்கம் எண் 123 ஐ வாசியுங்கள். இந்தப் பக்கத்தில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அவர்களின் பிரசங்கத்தின் ஒருபகுதி தமிழில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இந்தச் சிறிய வாசிப்பு முழுப் புத்தகத்தையும் வாசிக்க உங்களை உந்தித் தள்ளும் என நம்புகிறேன்.

ஏன் இந்தப் புத்தகத்தை வாசிப்பது அவசியம்?

WG-3ஒரு கிறிஸ்தவனாக நான் முறையாக வாழ வேதத்தின் அனைத்து அடிப்படை சத்தியங்களையும் அறிந்துகொண்டு அதன்படி வாழவேண்டியது என்னுடைய கடமை. அதிலும், தேவன் கோபமுள்ளவர், அவரின் கோபம் எப்படிப்பட்டது, அந்தக் கோபம் என்னைச் சந்தித்தால் நான் என்ன ஆவேன் என்கிற உண்மையை நான் அறிந்து வைத்திருப்பது நான் பயபக்தியோடு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ, எப்போதும் தாழ்மையுடன் ஆவியானவரின் உதவியை நாடியிருக்க எனக்கு உதவி செய்வதாய் இருக்கிறது. இந்தப் புத்தகம் அதற்குத் துணை செய்கிறது.

இப்புத்தகத்தில் முதலில், ஆசிரியர் கிருபாதரபலியா? கோபநிவாரணபலியா? என்ற முக்கியமான ஒரு வாதத்தை முன்வைக்கிறார். ஏனெனில் தமிழ் வேதத்தில் கிருபாதரபலி என்ற வார்த்தையே பயன்படுத்தபட்டு இருக்கிறது. ஆனால் மூல மொழியை ஆராய்ந்து பார்க்கும்போது கோபநிவாரணபலி என்ற வார்த்தையே 100 சதவீதம் பொருள் தருகிறதாய் இருக்கிறது என்பதை அருமையாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

பின்பு பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஆண்டவரின் கோபம் எப்படி விளக்கப்பட்டிருக்கிறது என்பதையும், பாவமில்லாத மானுடத்தில் வந்த இயேசுவில் வெளிப்பட்ட கோபம் எப்படி இருந்தது என்பதையும் அழகாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.

அதனைத் தொடர்ந்து வேத சத்தியங்களை விளக்கும் 1689 விசுவாச அறிக்கையில் இருந்தும், வினா விடைப் போதனைகளில் இருந்தும் தேவகோபம் பற்றி அவை தரும் விளக்கங்களைத் தந்திருக்கிறார். பிறகு நரகத்தில் வெளிப்படும் ஆண்டவரின் நிரந்தர கோபத்தைப் பற்றி விளக்குகிறார்.

தேவனின் கோபம் என்பது அவருடைய குணாதிசயங்களில் ஒன்று என்பதையும்,  அந்தக் கோபம் எந்தவகையில் நீதியானது என்பதையும், தெரிந்துகொள்ளப்பட்ட விசுவாசியின் வாழ்க்கையில் அக்கோபம் எப்படிக் கிறிஸ்துவின் கோபநிவாரணபலியின் மூலமாக சமன் செய்யப்பட்டு, விசுவாசி எந்தவிதத்தில் நீதிமான் ஆகிறான் என்பதையும் நேர்த்தியாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். தேவகோபத்தின் அடையாளம் தேவ குமரனின் சிலுவைப் பலியே என்பதை ஆழமாக விளக்கியுள்ளார்.

பின் இணைப்பாகக் கொடுக்கபட்டுள்ள தேவகோபம் பற்றி இறையியல் அறிஞர்கள் சொன்னவையும், பேராசிரியர் ஜோன் மரே அவர்களின் ஆக்கமும் இந்த சத்தியங்களுக்கு மேலும் மதிப்பூட்டுகின்றன.

இன்று அநேக இடங்களில் தேவகோபம் என்கிற சத்தியம் போதிக்கப்படுவதில்லை. இதன் மத்தியில் கர்த்தரின் கிருபையால் நமக்குக் கிடைத்திருக்கும் இப்புத்தம்  நம்மை எச்சரிக்கை செய்கிறதாய் இருக்கிறது.

ஆசிரியர் மிகவும் உழைத்து இந்த புத்தகத்தை எழுதியிருப்பது தெரிகிறது. ஆசிரியரின் எழுத்து நடையும் வாசிப்புக்கு ஏற்றதாய் அமைந்திருக்கிறது. ஆசிரியருக்கு மிகுந்த நன்றி.

இப்புத்தம் அநேக விசுவாசிகளை சென்றடைய கர்த்தர் துணை செய்வார். கர்த்தருக்கு நன்றி.

– அருள்நேசன், கரூர், தமிழ்நாடு

தேவகோபத்தை ஆத்துமாக்கள் அறியும்படிப் பிரசங்கிக்கிறவர்கள் இன்று மிகக்குறைவுதான். அதற்குக் காரணம் வேதஇறையியல் தெரியாமல் இருப்பது. தெரிந்திருக்கும் சிலரும் அதைப் பிரசங்கிக்காமலிருப்பது ஆத்துமாக்களை அநாவசியமாகத் தொல்லைப்படுத்தக்கூடாது என்பதற்காக. உண்மையில் தேவகோபத்தைப்பற்றி அறிந்திராத, அதை நம்பாத எவரும் மெய்யான இயேசுவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க முடியாது. சிந்தித்துப் பார்த்தால் இது புரியும். வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி. – ஆர்.

மறுமொழி தருக