சலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும் – கருத்துரை – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்

வாசிக்கும் இதயங்களை அவற்றைக் குறித்து அசைபோடவைத்து, வெறுமனே நன்றி சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பேச வைக்கும் அருமையான கட்டுரை இது.

கட்டுரையின் தலைப்பை வாசித்தபோது இதயம் சிறிதாக துணுக்குற்றாலும், அதில் காணப்படும் நிஜம் உள்ளத்தை சுட்டது உண்மை.  திருமறை தீபம் இதழ் தொகுப்பு (volumes) நூல்களைத் தொடர்ந்து வாசித்துப் பார்த்தால் வாசிப்பு, உரையாடல், சிந்தனை தொடர்பாக 20-பதுக்கும் அதிகமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  எனவே இந்த வாசிப்பின்மை “வைரஸ்” குறித்து கர்த்தர் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தும், இன்னமும் இந்த விஷயத்தில் சரியான முயற்சிகள் செய்யாதவர்களாகவும், சோம்பேரிகளாகவுமே இருக்கிறோம் என்பதை மேடை போட்டுக் காட்டுகிறது இந்த கட்டுரை.

ஆவிக்குரிய அறிவுப் பசியோடு கூடிய ‘தர்க்க ரீதியான சம்பாக்ஷனை’ என்ற ரீதியில் வீட்டில் சில வேத சத்தியங்கள் குறித்து உரையாடியதுண்டு; அத்தி பூத்தது போல சில நண்பர்களுடன் பேசிய அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும் பல வேளைகளில் இத்தகைய உரையாடல்களில் தெளிவான முடிவு காண முடியாமல், பொறுமை இழந்து போய் அதுவே பெரிய தர்க்கத்திற்கு வழி உண்டாக்கி விடுகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நமது “ஆவிக்குரிய விஷய ஞானக் கிணறு” வறண்டு காணப்படுவதே என்று இந்தக் கட்டுரை மூலம் புரிந்து கொள்ளமுடிந்தது.  “மூளைக்குத் தீனிபோட்டு அதை சிந்திக்க வைக்கும் விஷயத்தில் பெரும் சோம்பேரிகளாக இருப்பது படைத்தவரை இழிவுபடுத்தும் செயல்; அதை அவர் விரும்புவதில்லை” என்று கடுமையாக எச்சரிக்கிறது இந்தக் கட்டுரை.  எனவே வளர்ப்பு முறையையும் சூழ்நிலைகளையும் குறைகூறுவதை நிறுத்திவிட்டு வைராக்கியத்தோடும் ஜெபத்தோடும் இதில் வளர முயற்சி செய்ய வேண்டும்.

அதுமட்டுமல்லாமல், அப்போஸ்தலர் நடபடிகளைத் தொடர்ச்சியாக படித்து வரும் எனக்கு, புதிய உடன்படிக்கையின் அனைத்து ஆசீர்வாதங்களையும் நிறைவாக அனுபவிக்கும் நம்மிடையே ‘சகோதர அன்பு’ அன்று போலில்லாமல் ஏன் மிகவும் தரம் தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது? என்பது குறித்த ஆராய்ச்சிக்கு ருசி சேர்க்கும் விதமாக இந்த ஆக்கம் இருந்தது. அடுத்தபடியாக ” தர்க்க வாத பிரசங்கத்தின்” அடிப்படை அம்சங்கள் மற்றும் அதன் பயன்பாடு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. இதை வாசித்துக் கொண்டிருக்கும்போது முதலாவது நினைவில் ஓடி வந்தது உங்களுடைய “சிக்கலான வேதப் பகுதி” போதனைகள்.  குறிப்பாக ‘வந்தது சாமுவேலே’ என்ற வேத பாடத்தில், வந்தது சாமுவேல் அல்ல என்று நான் உறுதியாக நம்பின ஐந்து குறிப்புகளை ‘ஒரே பந்தில் கிளீன் போல்ட்’ ஆக்குவதுபோல உங்கள் வாதம் அமைந்திருந்தது; அதாவது அங்கு வந்த நபரை பரிசுத்த ஆவியானவர் திரும்பத் திரும்ப சாமுவேல் என்றே வேதத்தில் குறிப்பிட்டுள்ளபடியால் வந்தது சாமுவேல்தான்! என்ற உங்களுடைய ஒரு வாதத்தில் எனது ஐந்து குறிப்புகளும் அடிபட்டு போனதை இன்றும் மறக்க முடியவில்லை.  இதே போன்ற தர்க்கவாத பிரசங்கங்களைப் போதகர் ஜேயின் பிரசங்கத்திலும் கவனித்திருக்கிறேன். குறிப்பாக அதன் மூலம் கர்த்தர் தரும் பயன்பாடுகள் “எரிநெய் ஈட்டிகளாக” இதயத்தை தாக்கி அடுத்த முறை அத்தகைய பாவ சூழ்நிலை வரும்போதே, மோட்சப் பிரயாண கிறிஸ்டியான் போலக் காதைப் பொத்திக்கொண்டு ” நித்திய ஜீவன்! நித்திய ஜீவன்!” என்று கதறி விலகி ஓட வைத்திருக்கிறது.  நம்மினத்து கிறிஸ்தவ போதனைகள் குப்பையைப்போல மாசுபடிந்து காணப்பட்டாலும் ‘குப்பைகளுக்குள் கிடைத்த மாணிக்கமாக’ கர்த்தர் தந்திருக்கும் இத்தகைய சில சீர்திருத்த போதகர்களை எண்ணி மனதார நன்றி சொல்ல வைத்தது.
தர்க்க ரீதியில் சிந்தித்து செயல்படும் ஆத்துமாக்களும், தர்க்கவாதப் பிரசங்கம் செய்யும் போதகர்களும் குறைவாக இருக்கும் வரையில் “பியூரிட்டன்கள் காலம் போன்ற ஒரு பொற்காலம்” என்ற நமது கனவு ஒரு ‘கானல் நீராகவே’ இருக்கும் என்று புரிந்தது.  வைரக்கியத்தோடு இந்த காரியத்தை செய்ய முயற்சி செய்கிறோம், அதற்காக ஜெபிக்கிறோம். நீங்களும் எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி தருக