சலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும்

logicalதர்க்கத்தைப் பற்றியும், தர்க்கரீதியான சம்பாஷனையைப் பற்றியும், தர்க்கரீதியில் பிரசங்கம் செய்வதைப்பற்றியும் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நம்மவர்களின் சம்பாஷனைகளிலும், பிரசங்கத்திலும் இன்று இவற்றைக் காணமுடியவில்லை. அதாவது, சிந்தனைபூர்வமான, அறிவார்ந்த சம்பாஷனைகளில் நம்மவர்கள் ஈடுபடுவதில்லை; அத்தகையோர் மிகக்குறைவு. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு சிலரையே நான் சந்தித்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். சலிப்பூட்டும் சம்பாஷனைகளுக்கும், பிதற்றல் பிரசங்கங்களுக்கும் மத்தியில் நம்மவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலைத்தேய நண்பர்களில் இத்தகைய தர்க்கரீதியிலான சம்பாஷனைச் சுவை இருப்பதை நான் அதிகம் கவனித்திருக்கிறேன். அவர்களுடைய கல்வியும், வளர்ப்புமுறையும், சூழலும் அவர்கள் அப்படி வளர உதவியிருக்கிறது. பொதுவாகவே அவர்கள் பொருளற்ற சம்பாஷனைகளில் ஈடுபடுவதில்லை; அதைத் தவிர்த்துக்கொள்வார்கள். அவர்கள் நம்மவர்களைப்போல அளவுக்குமீறிய சம்பாஷனைகளில் ஈடுபட்டு நேரத்தை வீணடிப்பதுமில்லை. நேரம் அவர்களுக்குப் பொன்னானது. அதை மீதப்படுத்திப் பயன்படுத்த அவர்கள் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

எந்தவொரு விஷயத்தை என் நண்பர்களோடு பேசினாலும், அவர்களுடைய அணுகுமுறை தர்க்கரீதியானதாக இருக்கும். அரைத்த மாவை அவர்கள் தொடர்ந்து அரைப்பதில்லை. ஒரேவிஷயத்தைப் பல கோணங்களில் விவாதிப்பதோடு, அதற்கு முடிவைக் காண ஒன்றில் இருந்து இன்னொன்றுக்குக் கடந்துபோகும் வகையிலும் அவர்களுடைய சம்பாஷனை சிந்தனைபூர்வமாகவும், அறிவார்ந்ததாகவும் அமைந்திருக்கும். அது முடிவடைகிறபோது பொருளுள்ள சம்பாஷனையில் ஈடுபட்டிருந்திருக்கிறோம் என்ற மனச்சமாதானத்தை அடைந்திருக்கிறோம்.

நம்மவர்களுக்கு அத்தகைய வளர்ப்போ, பயிற்சியோ இருந்ததில்லை. இது பெற்றோர்களிடம் இருந்து வராதது முதல்குறை. இரண்டாவது, நம்முடைய கல்விமுறை பரீட்சைக்குத் தயார் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்து வருகிறது; அறிவை வளர்த்துக்கொள்ள அது உதவுவதில்லை. அதனால் நம்மவர்களின் மனம் சிறுவயதில் இருந்தே சிந்திப்பதற்கான எந்தப் பயிற்சியும் இல்லாமல் வளர்ந்து அறிவுப் பசி என்பதையே அறியாததாக இருந்து வருகிறது. இதுதான் பரவலாக நம்மத்தியிலிருக்கும் ’வைரஸான’ வாசிப்பின்மைக்கும் காரணம்.

உண்மையில் இப்படியிருக்கும்படிக் கர்த்தர் மனிதனைப் படைக்கவில்லை. பாவத்தில் வீழ்ந்த மானுடம் ஆவிக்குரியநிலையில் இல்லாதபடி கறைபடிந்திருந்தாலும், அது சிந்திக்கவும், அறிவைவிருத்தி செய்துகொள்ளும் ஆற்றலையும் இழந்துபோகவில்லை. சிந்தித்து செயல்படும் சமுதாய மக்களே இதற்கு உதாரணம். கிறிஸ்துவில் மீட்பை அடைந்த மனிதன் சிந்திக்கும் ஆற்றலில்லாமலும், அறிவுப்பசியில்லாமலும் இருந்தால் அதற்கு சோம்பேரித்தனமே முழுக்காரணம். இதை அநேகர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. சிந்திக்க விஷயம் இல்லாமலும், சிந்திக்கும் உழைப்பில்லாமலும் இருந்து வந்திருக்கின்ற மனம் ஒரு சிறு நூலையும் வாசிப்பதற்குத் தடுமாறுவதற்கு இதுவே காரணம். வேறு விஷயங்களில் அவர்களிடம் சுறுசுறுப்பு காணப்படலாம். மூளைக்குத் தீனிபோட்டு அதை சிந்திக்க வைக்கும் விஷயத்தில் அவர்கள் பெரும் சோம்பேரிகளாக இருந்துவரலாம். அப்படி இருப்பது படைத்தவரை இழிவுபடுத்தும் செயல்; அதை அவர் விரும்புவதில்லை.

என் மேலைத்தேய நண்பரொருவரோடு நான் வாரம் இருதடவையாவது சம்பாஷனை செய்வதுண்டு. நண்பன் போதகனாக இல்லாவிட்டாலும் விஷயஞானமுள்ளவர். தனக்கென நூலகத்தையும் கொண்டிருக்கும், வாசிப்புப்பழக்கமுள்ளவர். ஒவ்வொரு முறையும் எங்கள் சம்பாஷனை இருவருக்குமே பெருமளவில் உதவியிருக்கிறது. சிந்தனைக்குத் தீனிபோட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை மேலும் ஆழமாக ஆராயவும்; அணுகவும் உதவியிருக்கிறது. புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி அவற்றை ஆராய உதவியிருக்கிறது.

நம்மவர்களிடம் அது முடியாது. அவர்களுடைய ஆவிக்குரிய விஷயஞானக் கிணற்றில் தண்ணீரிருக்காது; கோடைக்காலக் காவிரி போல் வற்றி அடித்தரை தெறியும். அதனால் ஒருவர் சொல்லுவதை அவர்களால் திருப்பித் திருப்பிச் சொல்ல முடியுமே தவிர, சம்பாஷனையை வளர்க்கவும் அதில் அடுத்தகட்டத்தை அடையவும் அவர்களால் துணைசெய்ய முடியாது. வாசிப்பின்மையாலும், சிந்தனைப் பயிற்சியின்மையாலும் சம்பாஷனையில் பொருளிருக்காது. நாமே, இதில் பிரயோஜனமில்லை என்று ஆசுவாசத்தோடு இன்னொரு சம்பாஷனைக்குத் தாவிவிடுவோம்; இல்லாவிட்டால் சம்பாஷனையை முடித்துக்கொள்ளுவோம். நான் விளக்குவது உங்களுக்குப் புரிகிறதா? இதை நான் குற்றமாக உங்கள் முன்வைக்கவில்லை. எது நிதர்சனமோ அதைத்தான் விளக்கிக்கொண்டிருக்கிறேன்.

சம்பாஷனை ஒரு கலை (conversation is an art). அது சிந்தித்து செய்யவேண்டிய உரையாடல். அதைக் கருத்தோடு செய்யும்விதமாக வளர்க்கவேண்டும்.  ஆவிக்குரியவிதத்தில் நாம் ஒருவருக்கொருவர் துணைபோக அது பெரிதளவுக்கு உதவும். அந்தக் கலையில் தேர்ச்சிபெறாவிட்டால் சம்பாஷனை பொருளற்றதாகிவிடும். ஆவிக்குரியவிதத்தில் ஒருவருக்கொருவர் துணைபோக வேண்டும் என்பதற்காகத்தான் ’ஒருவருக்கொருவர்’ (one anothering passages) வசனங்கள் புதிய ஏற்பாட்டில் தரப்பட்டிருக்கின்றன. அதில் ஆவிக்குரிய சம்பாஷனையை வலியுறுத்தும் பல வசனங்கள் இருக்கின்றன (எபே 4:15, 25; 5:19; கொலோ 3:13, 16-17; 1 தெச 5:11; எபி 3:13, 10:24; யாக் 5:16).  இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கும், நாம் ‘ஒருவருக்கொருவர்’ செய்யவேண்டியவைகளைப் பொருளுள்ள, ஆவிக்குரிய சம்பாஷனையில்லாமல் ஒரு நாளும் செய்யமுடியாது. இந்த வசனங்களை ஆராய்ந்து பார்ப்பீர்களானால் எந்தளவுக்கு கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் ஆவிக்குரிய சம்பாஷனை மூலம் சபையில் செய்யவேண்டியவற்றை செய்யாமலிருந்து வருகிறோம் என்பதை உணர்ந்து மலைத்துப் போய்விடுவீர்கள்.

ஒருவரைச் சந்திக்கும்போது சடங்குபோல் வெறும் ‘ஸ்தோத்திரம்’ சொல்லுவதும், சுகமாயிருக்கிறீர்களா, சாப்பாடு ஆயிற்றா, வீட்டில் எல்லோரும் நலமா, வேலை எப்படிப்போகிறது, பிள்ளைகளுக்கு என்ன வயது? மகளுக்கு திருமணம் எப்போது? என்று கேட்டும், பேசியும் நம்மவர்களுக்குப் பழகிப் புளித்துப்போய்விட்டது. உணவையும், சுகத்தையும், குடும்பத்தையும், வீட்டுப்பொருளாதாரத்தையும், திருமணத்தையும் சுற்றிச் சுற்றியே சம்பாஷனைகள் நாள்தோறும் தொடரும். இந்த விஷயத்தில் எத்தனைக் கேவலமான நிலையில் இருக்கிறோம் என்றுகூட நம்மவர்களுக்குத் தோணுவதில்லை.

பொருளுள்ள ஆவிக்குரிய சம்பாஷனைக்கு வேதம் அநேக உதாரணங்களைத் தருகிறது. எம்மாவுக்குப் போகும் வழியில் சீடர்களோடு இணைந்துகொண்ட இயேசு அவர்களோடு செய்த சம்பாஷனையை வாசித்துப் பாருங்கள். (லூக்கா 24:13-35). சுழ்நிலையைப் புரிந்துகொண்டு இயேசு நேரத்தை வீணாக்காமல் சீடர்களோடு விஷயத்துக்கு வந்தார். அவருடைய கேள்வி அதை உணர்த்துகிறது. சீடர்களின் உடனடிப் பதில் அன்று எத்தனைப் பெரிய நீண்ட ஆவிக்குரிய சம்பாஷனையை இயேசு மூலம் நமக்குத் தந்திருக்கிறது தெரியுமா? அந்த இரவு என்றும் இல்லாதவகையில் நீண்ட இரவாகவும் இருந்திருப்பதை அவர்கள் உணர்ந்திருந்திருப்பார்கள். நல்ல சம்பாஷனைக்கு அதில் ஈடுபட்டிருக்கும் இருதரப்பாரும் துணைபோகவேண்டும். அருமையான அந்த சம்பாஷனைக்கு எந்த சீடனும் இடையூராக இருக்கவில்லை. வயிறு பசிக்கிறதே, என்று ஒருவன் சொல்லியிருந்தாலும் அந்த சம்பாஷனை வீணைத் தந்திபோல் அறுந்திருக்கும். இதுதான் சலிப்பற்ற சம்பாஷனைக்கு உதாரணம். அத்தகைய பொருளுள்ள சம்பாஷனை கால நேரத்தைப் பொருட்படுத்தாது; இதயத்துக்கு இதமளிக்கும், சத்தியத்தில் வளர்க்கும், ஆவியில் நம்மை உயர்த்தும். அதுவே சீடர்களின் அன்றைய அனுபவம்.

தர்க்கவாதப் பிரசங்கம் (Logical preaching)

இதென்ன என்று கேட்கிறீர்களா? தர்க்கம் (Logic) என்பது ஒருபொருளைப் பற்றி விவாதிப்பது என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அதாவது, தர்க்கரீதியில் அலசிப் படிமுறையாக ஒரு விஷயத்தை விவாதிப்பதையே இதன் மூலம் வலியுறுத்துகிறேன். சம்பாஷனையைப் போலவே பிரசங்கமும் பொருளுள்ளதாக, தர்க்கரீதியில் வேத வசனங்களை விளக்கித் தகுந்த ஆதாரங்களோடு நிருபித்துப் பயன்பாடுகளை முன்னிருத்துவதாக இருக்கவேண்டும். நம்மினத்தின் இன்றைய பெரும்பான்மையான பிரசங்கங்கள் பிதற்றல்களாக இருக்கின்றன என்று கூறுவது மிகையாகாது. யூடியூபில் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பிரசங்கங்களே இதற்கு நல்ல உதாரணம். பிரசங்கம் கேட்பவர்களின் ஆவிக்குரிய தரம் குறைவானதாகவும், அடிப்படை வேத ஞானம் அடியோடு இல்லாததாலுமே பிரசங்கிகள் பிதற்றல் பிரசங்கங்களை அளித்து வருவது அதிகமாக இருக்கின்றது.  வேதப்பிரசங்கப் பணிக்கே பேரிழுக்கைத் தேடித்தந்துகொண்டிருக்கின்றன பிரசங்கம் என்ற பெயரில் இருந்துவரும் இப்பிதற்றல்கள்.

வேதப் பிரசங்கம் எப்படி இருக்கவேண்டும்? அது வேத வசனங்களை உள்ளது உள்ளபடி வரலாற்று, இலக்கணபூர்வமாக விளக்கும் வியாக்கியானமாகவும், முறையாகத் தயாரிக்கப்பட்ட வேதசத்தியங்களைத் தர்க்கரீதியில் படிமுறையாகத் தெளிவாக முன்னிருத்துபவையாகவும் இருக்கவேண்டும். இருதயத்தைத் தாக்கும் பயன்பாடுகள் அதிலிருந்து புறப்பட்டு எய்யப்படும் எரிநெய் ஈட்டிகளாக இருக்கவேண்டும். இதற்கு ஒரு நல்ல வழக்கறிஞரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்ளலாம். தன் கட்சிக்காரர் பக்கம் தவறில்லை என்பதை உண்மையோடு, நம்பத்தகுந்த ஆணித்தரமான ஆதாரங்களோடு, அவற்றைத் தர்க்கரீதியில் ஒன்றன் பின் ஒன்று வருவனவாக அசைக்கமுடியாதபடி நியாயாதிபதி முன் வழக்கறிஞர் முன்வைக்கவேண்டும். அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமானவையாகவும், ஆக்கபூர்வமானவையாகவும், தர்க்கரீதியில் அமைந்திருக்கவேண்டும். எந்தவிதக் குழப்பமும், சந்தேகமும் இல்லாமல் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இலகுவாக நிராகரித்துவிடக்கூடியதாக இல்லாமலும் இருக்கவேண்டும்.

இத்தகைய ஆதாரங்களைத் தர்க்கரீதியில் நியாயாதிபதி முன்வைக்க வழக்கறிஞர் அதிகம் உழைத்திருப்பார். ஆதாரங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை உறுதியாக நிருபிக்கும் விதத்தில் நியாயாதிபதி முன் வைப்பதற்கான தர்க்கங்களை இரவு, பகலாக உழைத்துத் தயாரித்திருப்பார். தன் மூளையையும், அறிவையும் அதிகளவு அதற்காகச் செலவழித்திருப்பதோடு, தர்க்கரீதியிலான பேச்சுத்திறனையும் ஆற்றலோடு அவர் பயன்படுத்தவேண்டியிருக்கும்.  இதெல்லாம் இல்லாமல் வழக்கறிஞர் வழக்கில் வெற்றியைக் காணமுடியாது.

நியாயஸ்தலத்தில் ஒரு வழக்கறிஞருக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் இத்தகுதிகள் ஒரு பிரசங்கிக்கும் அவசியமாகத் தேவைப்படுகின்றன. ஆவிக்குரியது பிரசங்கம் என்பதால் இதெல்லாம் அதற்குத் தேவையில்லை என்று எண்ணுவது அறிவற்ற செயல். அதனால்தான், 16ம், 17ம் நூற்றாண்டுகளில் பிரசங்க ஊழியத்துக்கு அழைக்கப்பட்டவர்கள் சட்டத்தையும் (Law), தர்க்கத்தையும் (Logic) பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அது பொதுவாகவே பிரசங்கிகளிடம் எதிர்பார்க்கப்பட்டது. அநேக பியூரிட்டன்கள் இவற்றைக் கற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.

logic-3d1சபை ஆராதனையில் பயன்படுத்த கிறிஸ்தவப் பாடல்களை எழுதிப் புகழடைந்த ஐசெக் வொட்ஸ் (Isaac Watts) தர்க்கத்தைப்பற்றி Logic or the Right use of Reason என்ற ஆங்கில நூலை எழுதியிருக்கிறார். இதை எழுதியதற்கான காரணத்தை விளக்கும் வொட்ஸ், “நம்முடைய சிந்திக்கும் ஆற்றலை அடிமைத்தனத்திலிருந்தும், இருட்டிலிருந்தும் விடுதலை செய்ய தர்க்கமாகிய விஞ்ஞானம் உதவுகிறது. தெய்வீக வெளிப்படுத்தலுக்குப் பேருதவி செய்கிறது” என்று எழுதியிருக்கிறார். “சத்தியத்தை நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும் தர்க்கம் மிகவும் அவசியமானது” என்கிறார் ஐசெக் வொட்ஸ். அவர் தொடர்ந்து, “சத்தியத்தை ஆராயவும், அதை மற்றவர்களுக்கு விளக்கவும் நம்முடைய சிந்தனையை ஆற்றலோடு பயன்படுத்துவதே தர்க்கம்” என்கிறார். இந்த இடத்தில் “சிந்தனை” என்ற வார்த்தையின் மூலம் வொட்ஸ் சிந்திப்பதை மட்டும் கருதாமல், அதோடுகூடிய மனிதனின் அறிவோடு தொடர்புடைய அத்தனை அம்சங்களையும் கருத்தில் கொண்டிருக்கிறார். நம்முடைய சிந்தனையை, நம்மில் அதோடு இணைந்து காணப்படும் அத்தனை அறிவுசார்ந்த அம்சங்களையும் சரியானவிதத்தில் பயன்படுத்துவதற்குத் துணைபோவதே ‘தர்க்கம்’ என்கிறார் ஐசெக் வொட்ஸ்.

மனிதர்களுக்கெல்லாம் படைத்தவர் அபாரமாகத் தந்திருக்கும் ஆற்றல் சிந்தனை. அதுவே மனிதரை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. எல்லோருமே ஆற்றலுள்ளவர்களாகச் சிந்தனையைச் சமமானவிதத்தில் பயன்படுத்துவதில்லை. இருந்தபோதும் அதை விருத்திசெய்து பயன்படுத்துகிறவர்கள் தனித்து நிற்கிறார்கள். அத்தகையவர்களே வெறும் ‘சராசரிகளாக‘ இல்லாமல் சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார்கள். கிறிஸ்தவன் அதை மேலானவிதத்தில் பயன்படுத்துவதற்கு ஆவியானவர் துணை செய்கிறபோதும், வெறும் சோம்பேரிக் கிறிஸ்தவனுக்குப் பக்கத்தில் அவர் ஒருபோதும் நிற்பதில்லை. மெய்க்கிறிஸ்தவன் ஆவிக்குரிய கடின உழைப்பினால் தன் சிந்தனையைப் புடம்போட்டு வைத்திருப்பான். அத்தகையவர்களே பவுலும், பேதுருவும், தீமோத்தேயுவும், ஜோன் பனியனும், ஜோன் ஓவனும்.

இன்றும் மேலைத்தேய நாடுகளில் சீர்திருத்த பிரசங்கப், போதக ஊழியத்துக்கு அவசியமான தகுதிகளைக் கொண்டிராதவர்களைச் சபைகள் போதக ஊழியத்துக்கு அனுமதிப்பதில்லை. சட்டக் கல்வியை வலியுறுத்தாவிட்டாலும், ஏனைய அவசியமான போதனைகளை அடைந்திருந்து, விவாதத் திறமையுள்ளவர்களாக பிரசங்கம் செய்யக்கூடியவர்களையே பிரசங்கம் செய்ய அனுமதிக்கிறார்கள். “ஊழிய அழைப்பு” என்பது நம்மினத்தில் அநியாயத்திற்கு வெறும் அமாநுஷ்ய அனுபவமாகவே கருதப்பட்டு வருகிறது. அதற்கும் ஆவிக்குரிய ஊழிய அழைப்புக்கும் தொடர்பில்லை என்பதை அறியாதவர்களாக அவர்கள் இருந்து வருகிறார்கள். ஆவிக்குரிய ஆற்றலையும், வேத அறிவையும், மெய்யான ஊழியத்தகுதிகளையும் கொண்டிராதவர்கள் பிரசங்க மேடைகளை அலங்கரித்து வருகிறார்கள். இந்தக் குப்பை மேட்டில் தர்க்கரீதியிலான, அறிவுபூர்வமான ஆவிக்குரிய பிரசங்கத்திற்கு எங்கே வழியிருக்கிறது?

preachers-3d1பிரசங்கத்தைப் பற்றி விளக்கியிருக்கும் டாக்டர் மார்டின் லொயிட் ஜோன்ஸ் (Martyn Lloyd-Jones) அதை, “நெருப்பாய் எரியும் தர்க்கம்” (Logic on fire) என்று விளக்கியிருக்கிறார் (Preaching and Preachers, pg 52-90). அதைப்பற்றி லொயிட் ஜோன் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்,

“தர்க்கரீதியில் சிந்திப்பது அருமையான செயல். அதற்கெதிராக நான் எதுவுமே சொல்லமாட்டேன். உண்மையில், தர்க்கரீதியில் உங்களுக்கு விளக்கமளிக்கவே நான் இப்போது பெருமுயற்சி செய்துகொண்டிருக்கிறேன். அதை நான் எப்போதுமே செய்யமுயற்சி செய்கிறேன். நான் பிரசங்கம் செய்கிறபோது, நான் என்னைப் பற்றியோ மற்றவர்களைப்பற்றியோ கதைகளைச் சொல்லுவதில்லை – பாடல்களைப் பாடி அவர்களை உற்சாகப்படுத்தும் செயல்களை நான் செய்வதில்லை – நான் தர்க்கரீதியில் அவர்களைச் சிந்திக்கச் செய்கிறேன். தர்க்கரீதியில் சிந்திப்பதற்கு எதிராக நான் எதையும் சொல்லாமலிருக்க கர்த்தர் எனக்கு உதவட்டும். கர்த்தர் மனிதனுக்கு அளித்திருக்கும் ஈவே அது என்பதை நான் நம்புகிறேன். அதுவே மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது.”

அது ஜோன் கல்வினிடம் (John Calvin) அதிகம் இருந்தது. சட்டக்கல்வி கற்றிருந்த கல்வின், வேதபோதனைகளை முறையாக, படிப்படியாக, ஒன்றை அடுத்து இன்னொன்று தர்க்கரீதியில் வரும்படியாகப் பிரசங்கித்துப் போதிப்பதில் கைதேர்ந்தவராக இருந்திருக்கிறார். அமெரிக்க சிந்தனையாளர்களில் முக்கியமானவராக இருந்த ஜொனத்தன் எட்வர்ட்ஸும் (Jonathan Edwards) அத்தகைய சிந்தனையாளராகவும், தர்க்கரீதியிலான பிரசங்கமளிப்பவராகவும் இருந்திருக்கிறார். வேதபோதனைகளை முறையாக அறியாமல் தர்க்கத்தில் மட்டும் தேர்ச்சியடைந்திருப்பதில் பயனில்லை; அதேநேரம் தெரிந்துவைத்திருக்கும் வேதபோதனைகளைத் தர்க்கரீதியில் விளக்கத் தெரியாமல் இருப்பதிலும் எந்தப் பிரயோஜனமுமில்லை.  அத்தோடு, வெறும் தர்க்கமாக மட்டும் இல்லாமல் சுவிசேஷ சத்தியம் ஆவியினால் நெருப்புப்போல் ஆத்துமாவின் இருதயத்தைத் தாக்கி அதில் பதியும்படி இருக்கவேண்டும். அதுவே “நெருப்பாய் எரியும் பிரசங்கம்.”

தர்க்கரீதியான பிரசங்கத்திற்கும், எழுத்திற்கும் அப்போஸ்தலன் பவுல் நல்ல உதாரணம்; அதற்குப் பேதுருவையும், யோவானையும்கூட உதாரணங்களாகக் காட்டலாம். இவர்களுக்கெல்லாம் மேலாக இயேசு இருந்திருக்கிறார்.  ரோமர், கலாத்தியர், கொலோசெயர், 1 கொரிந்தியர் 15 போன்ற பவுலின் நிருபங்களை வாசித்துப் பாருங்கள். யூதர்களுக்கு சுவிசேஷத்தையும், நீதிமானாக்குதலையும் விளக்கப் பவுல் ரோமரில் தன் வாதங்களைத் தர்க்கரீதியில் முன்வைத்திருக்கிறார். அதைக் கலாத்தியரிலும், கொலோசெயரிலும் காணலாம். இந்நிருபங்களின் அதிகாரப்பிரிவுகளை மறந்துவிட்டு வாசித்தால் பவுலின் தர்க்கரீதியான வாதங்களைக் கவனிக்கலாம். யாரோடு அவர் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்ற பின்னணி விபரத்தையும் நாம் அறிந்திருப்பது அவசியம். உயிர்த்தெழுதல் இல்லை என்று வாதிட்ட சிலருக்கெதிராக, உயிர்த்தெழுதல் எல்லோருக்கும் உண்டு என்பதைப் பவுல், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் அடிப்படையில் 1 கொரிந்தியர் 15ல் தர்க்கரீதியில் விளக்கியிருக்கும் முறை அருமை. கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்து மட்டும் போதும், அவரில் அனைத்தையும் நாம் அடைந்திருக்கிறோம் என்பதைக் கொலோசெயர் 1ம் அதிகாரத்தில் பவுல் ஆணித்தரமாக, தர்க்கரீதியில் கிறிஸ்தவர்கள் முன் வைத்திருக்கிறார். இவர்களுக்கெல்லாம் நான் சளைத்தவன் இல்லை என்பதுபோல் இயேசுவின் தம்பியான யாக்கோபு தன் நிருபத்தில் அத்தகைய அறிவுபூர்வமானதும், தர்க்கரீதியிலானதுமான ஆவிக்குரிய வாதங்களைத் தன் வாசகர்கள் முன் வைத்திருக்கிறார். அத்தகைய பிரசங்கத்தையே இயேசு மலைப்பிரசங்கத்தில் தந்திருப்பதைக் கவனிக்கலாம்.

வேதம் சுட்டிக்காட்டும், கிறிஸ்தவ வரலாறு சந்தித்திருக்கும் இத்தகைய வேதபூர்வமான ஆவிக்குரிய, ஆக்கபூர்வமான, அறிவார்ந்த, தர்க்கரீதியிலான பிரசங்கங்கள் நம்மினத்தில் இன்று ஏன் இல்லை? சமீபத்தில் சக கிறிஸ்தவர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது நம்மினத்துக் கிறிஸ்தவத்தை என்னால் சென்னையின் ‘கூவம்’ ஆற்றோடு தொடர்புபடுத்திப் பேசாமல் இருக்கமுடியவில்லை. அந்த ஆற்றைப்போலக் கழிவுகள் நிறைந்துபோயிருக்கிறது நம்மினத்துக் கிறிஸ்தவம். அந்த ஆற்றில் நல்ல நீருக்கு எங்கே இடமிருக்கிறது? அதுபோல்தான் நம்மினத்தில் நல்ல பிரசங்கிகளையும், தரமான பிரசங்கங்களையும் தேடி அலையவேண்டியிருக்கின்றது.  குப்பையில் குண்டுமணி தேடுவதுபோல்தான் நம்மினத்தில் அறிவார்ந்த, தர்க்கரீதியிலான பிரசங்கங்களும்.

‘ஆவிக்குரிய பிரசங்கம்‘ என்ற பெயரில் ஆத்துமாக்களின் உணர்ச்சிகளுக்குத் தூபம்போடும் அதிகப்பிரசங்கிகளின் வார்த்தை ஜாலத்தையே கேட்டு ஏமாந்துகொண்டிருக்கின்றன ஆத்துமாக்கள். இந்நிலைமை மாற மெய்யான ஆவிக்குரிய ஆத்மீக எழுப்புதல் நம்மினத்தில் ஏற்பட நாம் ஜெபிக்க வேண்டும். சுயநலமற்ற, தாழ்மையுள்ளம் கொண்ட சத்திய வாஞ்சையுள்ளவர்களை ஆண்டவர் நம்மினத்தில் விதைக்க நாம் ஜெபிக்கவேண்டும். ஆத்மீக அறிவுத்தாகத்தையும், ஆக்கபூர்வமான சிந்தனையையும், வாசிப்பை வழக்கமாகவும் கொண்டிருக்கும் ஆவிக்குரிய ஆத்துமாக்கள் நம் சபைகளில் உருவாக நாம் ஜெபிக்கவேண்டும்.  அத்தகையவர்களாக இருப்பதற்கு நாமும் ஜெபத்தோடும் கருத்தோடும் உழைக்கவேண்டும்.

போதகர் ஆர். பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில், சவரின் கிறேஸ் சபையில் (ஆங்கிலம்) கடந்த 34 வருடங்களாகப் போதகராகப் பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றி வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்; கருத்தாழமிக்க ஆக்கபூர்வமான ஆவிக்குரிய ஆக்கங்களையும் அடிக்கடி இத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.  இவருடைய தமிழ் பிரசங்கங்கள் தொடர்ந்து காணொளி மற்றும் ஒலிநாடாக்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.

மறுமொழி தருக