30ம் வருடத்தை எட்டுகிறது திருமறைத்தீபம்

திருமறைத்தீபம் 1995ல் முதல் முறையாக வெளிவந்தபோது ஆசிரியரோ அவரைச் சார்ந்த சபையோ இதழ், முப்பதாவது வருடத்தை எட்டும் என்று எண்ணிப் பார்த்ததில்லை. கர்த்தரின் அளப்பரிய கிருபையால் 2024ல் இதழ் தன் 30ம் வருடத்தை ஆரம்பிக்கிறது. நினைத்துப் பார்க்கிறபோது இந்த இலக்கியப் பயணம் பெரும் மலைப்பை உண்டாக்குகிறது.

சிறு முயற்சியாக இதழ் எவ்வாறு ஆரம்பமானது என்பதை ஏற்கனவே இதழில் விளக்கி எழுதியிருக்கிறேன். அந்தப் பயணம் இம்மட்டும் கொண்டு சேர்க்கும் என்பது எங்களில் எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. இன்று ஏறக்குறைய 5000 பக்கங்களுக்கு மேல் சீர்திருத்த கிறிஸ்தவ இறையியலைத் தாங்கி ஏழு இதழ் தொகுதிகள் பவனி வருகின்றன. எட்டாவது தொகுதி வரவிருக்கும் ஜனவரி மாதத்தில் வெளிவரவிருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் மட்டுமே இதழை வெளியிடத் தீர்மானித்திருந்தோம். எந்தவித சத்தியப் பச்சோந்தித்தனத்திற்கும் இடமளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். சீர்திருத்தவாதியான மார்டின் லூத்தருக்கிருந்த வைராக்கியத்தில் கொஞ்சமாவது நமக்கிருக்க வேண்டாமா? கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவினரும் இதழை வாசிக்கவேண்டுமானால் சீர்திருத்த சத்தியத்தை மட்டும் வலியுறுத்தி எழுதாதீர்கள் என்ற ஆலோசனை ஒருதடவை என் காதில் விழுந்தது. எதற்குக் காதைக் கொடுக்க வேண்டும், கொடுக்கக்கூடாது என்பதில் சீர்திருத்தக் கிறிஸ்தவன் எப்போதும் நிதானமாகச் செயல்பட வேண்டும். அதன்படி அந்த ஆலோசனையை நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மாயமான்களைப் போன்ற பரவசக்குழுக்களும் (Charismatism and Pentecostalism), செழிப்புபதேசச் செந்தேள்களும் வரலாற்று வேதக்கிறிஸ்தவத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்று எழுதியது, கிருபையின் போதனையைப் பின்பற்றுபவர்களாகத் தங்களை இனங்காட்டி வந்த சில வேஷதாரிகளுக்குக் கசப்பூட்டியது. நம் இதழை இவர்கள் நிராகரித்தார்கள். பரவசக்குழுக்கள் 20ம் நூற்றாண்டில் உருவான வரலாற்றுக் கிறிஸ்தவம் அறிந்திராத, வேதம் சாராத ஒரு கூட்டம் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. காலம் அதை இனங்காட்டிவிட்டது. சீர்திருத்த கிறிஸ்தவத்திற்கும் பரவசக்குழுக்களுக்கும் ஒருக்காலும் தொடர்பிருந்ததில்லை; இருக்கப்போவதுமில்லை. அப்படி ஒரு தொடர்பை உண்டாக்க முயல்கிறவர்கள் சமயசமரசப் பச்சோந்திகள். அதையெல்லாம் சகித்துக் கொண்டு சத்தியத்திலிருந்து அணுவளவும் பிசகாமல் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தோம். இதழில் வரலாற்றுச் சீர்திருத்தப் போதனைகளின் அடிப்படையில் 16ம், 17ம் நூற்றாண்டு சீர்திருத்தவாத, பியூரிட்டன் போதனைகளைத் தற்காலத் தமிழ் வாசகர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ளக்கூடியவிதத்தில் படைத்து வந்திருக்கிறோம். 1689 விசுவாச அறிக்கையின் 32 அதிகாரங்களில் விளக்கப்பட்டிருக்கும் போதனைகளுக்கு மாறாக எதையும் இதழில் நாம் வெளியிட்டதில்லை; வெளியிடப்போவதுமில்லை.

நியாயப் பிரமாண நிராகரிப்புவாதம், சட்டவாதம், ஆர்மீனியனிசம், காலப்பாகுபாட்டுக் கோட்பாடு, செழிப்புபதேசம் போன்ற பழமையான போலிப்போதனைகளை மட்டுமல்லாது, இன்று புதிதாக வரலாற்றுக் கிறிஸ்தவப் போதனைகளுக்கும், விசுவாச அறிக்கைகளுக்கும் புதுவிளக்கமளிக்க முயலும், புதிய உடன்படிக்கை இறையியல், நியூ கல்வினிசம் ஆகிய நவீன இறையியல் போக்குகளையும், இவற்றின் தத்துப் பிள்ளைகளாக நம்மினத்தில் உலாவி வரும் போலிப் போதனைகளையும் நாம் தோலுரித்துக் காட்டுவதிலும் ஒருபோதுமே பின்நிற்கவில்லை. சமீபத்தில் வெளிவந்த “தோமா கிறிஸ்தவம்” நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் முளைத்திருக்கும் புதிய காளானை அடையாளம் கண்டு வாசகர்களை எச்சரிக்கிறது.

அத்தோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவ வரலாறு, சான்றோர்களின் வரலாறு, கிருபையின் போதனைகள், சீர்திருத்த விசுவாசம், விசுவாச அறிக்கைப் போதனை, வினாவிடைப் போதனை, போதக ஊழியம், பரிசுத்த நடைமுறைக் கிறிஸ்தவ வாழ்க்கை, திருச்சபைக் கோட்பாடுகள், பிரசங்க ஊழியம், சுவிசேஷப் பணி, இறுதிக் காலப் போதனைகள் போன்ற அத்தனை போதனைகளையும் வேத அடிப்படையில் விளக்கி வருகிறோம். இறையியல் தொடர்பான எதையும் இதழ் விட்டுவைக்கவில்லை. தமிழ் மட்டுமே தெரிந்த ஒரு ஊழியக்காரனுக்கு வாசிக்கத் தெரிந்தால் ஊழியப்பணிக்கு எதெல்லாம் தேவையோ அவற்றையெல்லாம் அவன் திருமறைத்தீபத் தொகுதிகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்; அவன் வாசிக்கிறவனாக முதலில் இருப்பது அவசியம்.

இதில் சகோதரன் ஜேம்ஸின் உழைப்பு அதிகம். எழுதுவதும், மொழிபெயர்ப்பதும் என் பணி. அச்சுக்குக் கொண்டுபோகும்வரையுள்ள தொழில்நுட்பப் பணிகளனைத்தையும் அவரே செய்கிறார். இப்போது மொழிபெயர்ப்புப் பணியிலும் ஈடுபட ஆரம்பித்திருக்கிறார். என்னோடும் அவரோடும் இணைந்து மேலும் இருவர் எழுத்துப் பிழை சரிபார்க்கும் பணியில் உதவுகிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சி. ஒலி நாடாக்களில் இருப்பவற்றைக் கேட்டுத் தட்டச்சில் பதிவுசெய்து துணைபுரியப் புதிதாக ஒருவர் எங்கள் அணியில் இந்த வருடம் இணைந்திருக்கிறார். அதுவும் கர்த்தரின் கிருபையான செயல். சென்னை கிருபை சீர்திருத்த சபை இதழை எல்லோருக்கும் விநியோகம் செய்யும் பணியைத் தலைமேல் சுமந்து ஆர்வத்தோடு செய்து வருகிறது.

இதழ் அநேகரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறது; அநேருக்கு சத்தியக் கண்ணாடியாக இருந்து வருகிறது. முறியமுடியாத உறவுகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. என்னோடிணைந்து பணி செய்யும் சபைகளுக்கு சத்தியப் பாதுகாவலானாக இருந்து வருகிறது. பலரை வாசிக்கத் தூண்டியிருக்கிறது இதழ்; ஒரு சிலரை எழுதவும் வைத்திருக்கிறது. ஐம்போதனைகள் மட்டுமே (கிருபையின் போதனைகள்) சீர்திருத்தவாதத்தின் முதலும் முடிவும் என்ற தவறான எண்ணம் கொண்டிருந்த அநேகர் தங்களுடைய தவற்றைத் திருத்திக்கொள்ளச் செய்திருக்கிறது. பரவசக்குழுவைத் தழுவி வாழ்ந்திருந்த போதகர்கள் பலரை அதைவிட்டு விலக வைத்திருக்கிறது. வெள்ளையடிக்கப்பட்ட பாரம்பரியச் சபைக்கல்லறைகளில் மூச்சடைபட்டு இருந்தவர்கள் சத்தியக் காற்றைச் சுவாசிக்க வைத்து அவர்களை உயிர்ப்பித்திருக்கிறது. திருமறைத்தீபம் செய்து வந்திருக்கும், செய்து கொண்டிருக்கும் செயல்களையெல்லாம் எழுத ஆரம்பித்தால் இந்த இதழ் மட்டுமே அதற்குப் போதாது.

வரப்போகும் புதிய வருடத்தில் திருமைறைத் தீபம் வலைதளத்தைப் புதுப்பித்து, வாசகர்கள் பயன்படுத்தும் பல்வேறு கணினித் தளங்களிலும் அவர்கள் தளத்தை இலகுவாகப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதற்கான முயற்சிகளை இப்போது ஆரம்பித்திருக்கிறோம். அது நிறைவேறக் கர்த்தரின் துணையை நாடி நிற்கிறோம். இது நிறைவேறும்போது நிச்சயம் அநேகருக்கு ஆசீர்வாதமாக அமையும்.

திருமறைத்தீபத்தின் 8வது தொகுதி ஜனவரி மாதம் அறுநூறு பக்கங்களோடு வெளிவரவிருக்கிறது. இதுவரை இருபத்தியொன்பது வருடங்களை இதழ் பூர்த்தி செய்திருக்கிறது. இந்த இதழ் உங்கள் கையில் கிடைக்கும்போது புதிய தொகுதி ஏற்கனவே வெளிவந்திருக்கும். “சத்தியத்தைக் கபடமில்லாமல் எடுத்துக் கூறாமலும், கொள்கைப் பஞ்சத்தோடும் இருக்கும் பத்திரிகையை இலக்கியத் தொல்லை என்றுதான் கூறவேண்டும்” என்று பாப்திஸ்துப் பெரியவர் ஸ்பர்ஜன் சொல்லியிருப்பதைத் தலைமேல் சுமந்து முதல் இதழ் வெளிவந்தது. ஓர் “இலக்கியத் தொல்லை” (Literary nuisance) என்ற பெயரை வாங்கிவிடாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

மறுமொழி தருக