வாசகர்களே!

வணக்கம் வாசகர்களே! இவ்விதழை நேரத்தோடு பூர்த்தி செய்து உங்கள் முன் படைக்க கர்த்தர் உதவியிருக்கிறார். அதற்கு நண்பர் சிவா முக்கிய காரணம். நான் பிரசங்கம் செய்திருந்த “விதைநிலங்களின் உவமையின்” இறுதிப் பகுதிகளை எழுத்தில் பதிவுசெய்து அவர் எனக்கு உதவியதால் அவற்றை இந்த இதழில் இணைத்து உங்கள் முன் வைக்க முடிந்திருக்கிறது. இதழைத் தயாரிப்பதில் துணைபுரிந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்த இதழில் விதை நிலங்கள் பற்றிய உவமையின் இறுதி மூன்று நிலங்களை விளக்கியிருக்கிறேன். ஆர். சீ. ஸ்பிரவுல், இந்த “உவமையே உவமைகளிலெல்லாம் கடினமானது” என்று கூறியிருக்கிறார். அது நமக்கு ஆச்சரியமாயிருக்கலாம். இந்த உவமையே புரிந்துகொள்ள எளிதானது என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஸ்பிரவுல் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.

உவமைகளை விளங்கிக்கொள்ளப் பயன்படுத்த வேண்டிய அவசியமான விதிகளைப் பயன்படுத்தாவிட்டால் அவற்றைத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஆபத்து இருக்கிறது. நம்மினத்துப் பிரசங்கிகள் அவற்றிற்கு மனம்போன போக்கில் விளக்கம் கொடுத்து ஆத்துமாக்களை இருட்டில் வைத்திருக்கிறார்கள். விதைநிலங்களின் உவமையை எப்படி விளங்கிக்கொள்ளுவது என்பதை விளக்கி, அதோடு நிறுத்திவிடாமல் அதிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய பயன்பாடுகளையும் விளக்கியிருக்கிறேன். முக்கியமாக நல்ல நிலைத்தைப் பற்றிய அவசியமான இறையியல் போதனைகளை உங்கள் முன் வைத்திருக்கிறேன். இந்த உவமை போதிக்கும் உண்மையை மட்டும் அறிந்து கொள்ளுவதோடு நிறுத்திவிடாமல் உங்கள் இருதயம் எந்த நிலத்தை ஒத்ததாக இருக்கிறது என்பதை ஜெபத்தோடு ஆராய்ந்து பார்க்கத் தவறிவிடாதீர்கள். நாம் வேதபோதனைகளை அறிவைப் பெற்றுக்கொள்ளுவதற்காக மட்டும் கற்றுக்கொள்ளுவதில்லை; நம் ஆத்துமாவை அவை அசைத்துப் பிசைந்து நம்முடைய மெய்யான ஆவிக்குரிய நிலையை நம் கண் முன் நிறுத்தி, நமது தவறுகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டி இயேசு முன் மனந்திரும்ப வைப்பதற்கே அவற்றை நாம் கேட்கவும், படிக்கவும், உள்வாங்கிச் சிந்திக்கவும் செய்கிறோம். அதை மனதில் வைத்து இவ்விதழை வாசித்துப் பயனடையுங்கள். – ஆர்.

மறுமொழி தருக