ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தில் கிறிஸ்தியானின் மனமாற்றம்

ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணம் ஒரு பியூரிட்டன் இலக்கியம். அநேகருக்கு அதுபற்றிய புரிதல் இல்லை. காரணம், வரலாற்றுக் கிறிஸ்தவத்தின் அடையாளமே இல்லாததொரு கிறிஸ்தவம் நம்மினத்தில் இருந்து வருவதுதான். 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருச்சபை சீர்திருத்தத்தில் ஈடுபட்ட கிறிஸ்தவப் பெருமகன்களே பியூரிட்டன்கள் என்று கிறிஸ்தவ வரலாற்றில் அழைக்கப்படுகிறார்கள். ஜோன் பனியன் ஒரு பியூரிட்டன் பாப்திஸ்து. தற்கால மொழிநடையில் அவர் ஒரு சீர்திருத்த பாப்திஸ்து. சீர்திருத்தப் போதனைகளில் ஊறித்திளைத்திருந்தவர் ஜோன் பனியன். பியூரிட்டனான ஜோன் ஓவனைப்போலக் கல்வியில் தேர்ந்தவராக இராதிருந்துவிட்டாலும் ஜோன் ஓவனுக்குப் பரிச்சயமானவர்; வேதத்தில் ஊறித்திளைத்தவர். ஜோன் ஓவன், பனியனில் பெருமதிப்பு வைத்திருந்தார். பனியனின் பிரசங்க வரம் தனக்குக் கிடைக்குமானால், தன்னுடைய கல்வியனைத்தையும் தாரைவார்த்துப் பனியனுக்குத் தந்துவிடத் தயாராக இருக்கிறேன் என்று ஓவன், இங்கிலாந்தின் பாராளுமன்றத் தலைவராக இருந்த ஒலிவர் குரோம்வெல்லிடம் கூறியிருக்கிறார். இது பனியனுடைய பிரசங்கத்தைக் கேட்டபின் ஓவன் சொன்னது. மோட்சப் பிரயாணம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தபோது பனியனைப் பற்றிய விபரங்களையோ, அவருடைய இறையியல் பின்னணியையோ அறியாதவர்கள் அவற்றை விளக்கமுயலவில்லை. மோட்சப் பிரயாணத்தை வாசித்திருக்கிறவர்களும் ஜோன் பனியனின் இறையியல் பின்னணியை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

பிரபல பாப்திஸ்து பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜன் வேதத்திற்கு அடுத்தபடியாக விரும்பிப் படித்த நூல் மோட்சப் பிரயாணம். அதைக் குறைந்தது நூறு தடவையாவது வாசித்திருப்பேன் என்று ஸ்பர்ஜன் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் மோட்சப் பிரயாணம் வேதத்தில் தோய்த்தெடுக்கப்பட்டிருந்ததுதான். அந்தளவுக்கு வேத வசனங்கள் நிறைந்து காணப்படுகின்றன மோட்சப் பயணத்தில். “ஜோன் பனியனுடைய நூலில் எதையும் நீங்கள் வாசியுங்கள். அவற்றை வாசிக்கும்போது வேதத்தை வாசிக்கின்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றும். அவர் ஒரு வாழும் வேதம்” என்று ஸ்பர்ஜன் பனியனைப் பற்றிக் கூறியிருக்கிறார். “அவருடைய சரீரத்தில் எங்கு குத்தினாலும் வேதம் பீறிடும்” என்றார் ஸ்பர்ஜன். ஸ்பர்ஜன் விரும்பி வாசித்த நூலாசிரியர் பனியன். ஸ்பர்ஜனும், பனியனும் வேதத்தில் ஆழ்ந்த ஞானத்தைக் கொண்டிருந்தனர். பனியனின் மோட்சப் பயணத்திற்கு ஸ்பர்ஜன் விளக்கவுரை எழுதியிருந்தார். “வேதத்திற்கு அடுத்தபடியாக நான் மதிக்கும் நூல் மோட்சப் பயணம்” என்று ஸ்பர்ஜன் அதன் முதல் அதிகாரத்திலேயே கூறியிருக்கிறார்.

சுவிசேஷ ஊழிய நூல்நிலையம் மொழிபெயர்ப்பு (ELS)

தமிழில் 19ம் நூற்றாண்டில் மோட்சப் பயணம் மொழிபெயர்க்கப்பட்டபோது சாமுவேல் ஐயர் மூலத்திலிருந்தவாறு ஒன்று தவறாமல் அனைத்து வேதக்குறிப்புகளையும், நாவலின் பாத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களையும் தன் மொழிபெயர்ப்பில் தந்திருந்தார். இன்று புழக்கத்தில் இருந்து வரும் ELS ன் புதிய மொழிபெயர்ப்பு (1993) அவையனைத்தையும் தங்கள் மொழிபெயர்ப்பில் தரவில்லை. ஒருசில வேதவசனங்களை மட்டுமே தந்திருக்கின்றனர். முக்கியமாக கதாபாத்திரங்களுக்கான எந்தவிளக்கத்தையும் அவர்கள் மொழிபெயர்ப்பில் அடிக்குறிப்புக்களாகத் தரத் தவறிவிட்டனர். இதனால் ஏற்படும் இரண்டு பாதிப்புகள் என்ன தெரியுமா?

  1. வேதத்தில் தோய்த்தெடுக்கப்பட்டிருக்கிறது மோட்சப் பயணம், என்ற ஸ்பர்ஜனின் வார்த்தைகளை இவர்கள் பொய்யாக்கிவிடுகிறார்கள். வாசகர்களுக்கு இந்த மொழிபெயர்ப்பில் வேதத்தின் ஆக்கிரமிப்பை அடையாளம் காணமுடியாமல் போய்விடுகிறது.
  2. தான் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்கு மூல ஆசிரியர் தந்திருந்த விளக்கங்கள் ஒன்றையும் மொழிபெயர்ப்பில் தராமல் போய்விட்டதால் அந்தக் கதாபாத்திரங்களை வாசகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு புரிந்துகொள்ள வேண்டிய ஆபத்து ஏற்படுகிறது.

நூலை எழுதியவனின் நோக்கத்திற்கு மாறாக எந்தக் கதாபாத்திரத்தையும் புரிந்துகொள்ள முயலக்கூடாது. ஆசிரியரோடு இணைந்து பயணிக்க வேண்டியதே வாசகனின் கடமை. இந்தப் பெரிய தவறுகள் புதிய பதிப்புகளில் திருத்தப்பட வேண்டும். மோட்சப் பயணத்தின் பலனை இந்தத் தவறுகள் முக்கால்வாசி வீதம் குறைத்துவிடுகின்றன; அதன் இறையியல் போதனைகளையும் அடியோடு மறைத்துவிடுகின்றன. மோட்சப் பயணம் சீர்திருத்த கிறிஸ்தவ இறையியல் புதினமாக இருப்பதால் அப்போதனைகளைப் புரிந்துகொள்ள இந்தத் தவறுகள் மேலும் இடையூறுகளை ஏற்படுத்திவிடுகின்றன. ஒருவனிடம் ஒரு நூலை வாசிக்கும்படிச் சொல்லிவிட்டு அவனுடைய கண்களைத் துணியால் கட்டிவிட்டால் எப்படியிருக்கும்? அதைப்போலத்தான் இருக்கிறது தமிழில் காணப்படும் மோட்சப் பிரயாணம் நூலும். வாசகன் அதில் வெறும் கதையை மட்டுந்தான் காணமுடியும். வர்த்தகரீதியில் கவனத்தோடியங்கும் பதிப்பகத்தார் இத்தகைய மொழிபெயர்ப்புத் தவறுகளுக்கு இடங்கொடுக்கமாட்டார்கள்.

உருவக இறையியல் நாவல்

சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் விசுவாசித்த சுவிசேஷத்திற்கும் இன்று நடைமுறையில் சபை சபையாகப் பிரசங்கிக்கப்பட்டுவரும் சுவிசேஷத்திற்கும் பெரும் வேறுபாடுண்டு. கிறிஸ்துவுக்காக கையைத் தூக்கு, உன்னை அர்ப்பணம் செய், அவரை ஏற்றுக்கொள் போன்ற வார்த்தைப்பிரயோகங்களுக்கு பியூரிட்டன் அகராதியில் இடமில்லை. “இயேசுவிடம் வா, உனக்கு நல்வாழ்வு கிடைக்கும். இந்த நிமிடமே அவர் உன்னைப் பரலோகத்தில் சேர்ப்பார், அது உன் கையில்தான் இருக்கிறது, நீ எடுக்கும் முடிவில்தான் இருக்கிறது. தூக்கு உன் கையை இயேசுவுக்காக” என்றெல்லாம் பியூரிட்டன்கள் ஆர்மீனிய இறையியலை ஒத்துப் பிரசங்கித்ததில்லை. அவர்களுடைய சுவிசேஷம் எழுத்துச் சுத்தமான வேத சுவிசேஷம். அதை எந்தவிதத்திலும் அவர்கள் கொச்சைப்படுத்தியதில்லை. தற்கால சுவிசேஷ வித்தைகள் உருவாக ஆர்மீனியன்களான சார்ள்ஸ் பினியும், பில்லி கிரெகமுந்தான் அடிப்படைக் காரணம். அதுவே பரவலாக இருபதாம் நூற்றாண்டில் நடைமுறையாகிவிட்டது. பியூரிட்டன்கள் மனித இரட்சிப்பு இறையாண்மையுள்ள கர்த்தரின் கையில் இருப்பதாக நம்பி விசுவாசித்தார்கள். அவர் மட்டுமே தெரிந்துகொள்ளப்பட்ட பாவிகளை இரட்சிக்கக்கூடியவர் என்றும், அவர்களுக்காகவே கிறிஸ்து சிலுவைப் பலியைச் சுமந்தார் என்றும் விளக்கியவர்கள். அந்த இரட்சிப்பை அடைவதற்கு மனிதன் என்ன செய்யவேண்டும்? என்ற கேள்விக்கான பியூரிட்டனின் பதில் என்ன தெரியுமா?

பியூரிட்டனான ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தை வாசியுங்கள். 19ம் நூற்றாண்டுத் தமிழில் சாமுவேல் ஐயர் ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்த்த மோட்சப் பிரயாணம் வேத வசனங்களையும், அதில் வரும் பாத்திரங்களுக்கான விளக்கத்தையும் கொண்டிருக்கிறது. மோட்சப் பயணம் ஒரு கிறிஸ்தவ இறையியல் நாவல் (Theological novel). அதுவும், அடையாளமொழி அல்லது உருவகத்தைப் (Allegory) பயன்படுத்தி எழுதப்பட்ட நாவல். இந்நாவல் கிறிஸ்தவ விசுவாச வாழ்க்கையை விளக்குகின்றது. அதனால் நாவலின் சம்பவங்கள், எந்தப் பகுதியில் எந்தக் கிறிஸ்தவ அனுபவத்தை விளக்குகிறது என்று கேட்காமல் இருக்கமுடியாது. இது வெறும் கற்பனைக் கதையல்ல. பனியன் தன் நாவலைக் கனவில் கண்டதுபோல் வர்ணிக்கிறார். இருந்தாலும், கிறிஸ்தவ விசுவாசத்தை அவரது நாவல் தெளிவாக வேதரீதியில் விளக்குகிறது. கிரேச்சம் மேச்சன், “மென்மையான, அதேநேரம் ஒவ்வொரு வார்த்தையிலும் துடிக்கும் ஜீவனைக் கொண்டிருக்கும், நூல்களனைத்திலும் அதிகமாக இறையியலைக் கொண்டிருக்கும் நூல்” என்று மோட்சப் பயணத்தைக் குறித்து விளக்கியிருக்கிறார். “வேதத்தை இன்னொரு விதத்தில் தந்திருக்கிறது” மோட்சப் பயணம் என்று ஸ்பர்ஜன் கூறியிருக்கிறார். அதனால் இந்நாவலை வெறும் கதையாக மட்டும் நினைத்து வாசிக்கிறவர்கள் அதனால் பயனடைய முடியாது; இதற்குப் பின்னால் காணப்படும், இது விளக்கும் இறையியல் போதனைகளை விளங்கிக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். வெளிப்படுத்தல் விசேஷத்தைப் போல அடையாளமொழி நடையில் கிறிஸ்தவ இறையியலை விளக்குகிறது பனியனின் நாவல்.

முதல் காட்சியில் கிறிஸ்தியான்

ஜோன் பனியன் கிறிஸ்தியான் என்ற தன் கதாநாயகனோடு இக் கிறிஸ்தவ நாவலை ஆரம்பிக்கிறார். இதில் ஆரம்பக் காட்சியிலேயே கிறிஸ்தியான் கந்தையைக் கட்டிக்கொண்டு தன் முதுகில் ஒரு பெரும் பாரத்தையும், கையில் ஒரு நூலையும் (வேதம்) சுமந்து நிற்கிறான். இதற்கான விளக்கத்தை பனியனே தருகிறார். “சத்திய வேதத்தை வாசிக்கிற ஒருவன் தன் முதல்தரமான கிரியைகள் முதலாய்க் கந்தைக்குச் சமமாய் இருக்கிறதென்றும், பாவமானது ஒரு பாரச்சுமையைப் போல் தன்னை இருத்துகிறதென்றும் அறிந்து உணர்ந்திருக்கிறதைக் காட்டுகிறது” என்று சாமுவேல் ஐயர் மொழிபெயர்த்திருக்கிறார். கந்தை என்பதைத் தற்காலத் தமிழில் சாக்கு என்போம். முதுகில் இருந்தது பாவமல்ல; பாவத்தின் பாரத்தை உணர்ந்ததால் ஏற்பட்ட பாவ உணர்த்துதலுக்கு அது அடையாளம். இது எத்தனை அருமையான அறிமுகம் தெரியுமா? முதல் காட்சியிலேயே பனியனுடைய இரட்சிப்பிறையியல் (Salvation theology) தன்னை அப்பட்டமாக அறிமுகப்படுத்திக்கொள்ளுகிறது.

கிறிஸ்தியானில் பாவ உணர்த்தல்

பாவியாகிய எந்த மனிதனும் இயற்கையாக இந்தக் காட்சியில் கிறிஸ்தியான் நிற்பது போல் இருப்பதில்லை. மனிதனின் பாவம் அவனைக் கர்த்தருக்கு எதிரியாக்கி சத்தியத்தைவிட்டு விலகி நிற்க வைத்திருக்கிறது (ரோமர் 3:23). மனிதனில் இயற்கையாகவே நன்மை காணப்படுகிறது என்ற சாக்கிரடீஸ், பிளேட்டோ ஆகியோரின் தத்துவஞானமும், பாவமே இல்லை என்று பறைசாற்றும் பெலேஜியனியமும், மனிதன் முழுமையாகப் பாவத்தால் பாதிக்கப்படவில்லை என்று கச்சைகட்டி நிற்கும் தற்கால ஆர்மீனியனிய சிந்தனைகளும் இங்கே அடிவாங்குகின்றன. பாவத்தில் தொடரும் மனிதன் தன் நிலையை உணரான்; பரிசுத்த ஆவியின் கிரியையால் வேதவசனங்களை வாசித்து அதனால் பாதிக்கப்படுகிறபோதே அவன் தன் நிலையை உணர்கிறான். கிறிஸ்தியான் இந்த முதற்காட்சியில் முதுகில் பாரச்சுமையோடும், கந்தை உடுத்திக் கையில் வேதத்தோடும் நிற்பதற்கு இதுவே காரணம். அவனில் பாவ உணர்தல் ஆரம்பமாகிவிட்டது. சுவிசேஷத்தை வாசிக்கும் வாய்ப்புக்கிடைத்து அதனால் இருதயம் ஆவியினால் பாதிக்கப்பட்ட நிலையில் கிறிஸ்தியான் இக்காட்சியில் நிற்பதைக் காண்கிறோம்.

கிறிஸ்தியான் கையிலிருந்த நூலை வாசித்து, அதன் செய்தியை உணர்ந்து அலறுகிறான். அக்கினியால் அழியப்போகும் இந்த உலகத்தைப் பற்றி அவன் வேதத்தில் வாசித்ததே அவனுடைய அலறலுக்குக் காரணம். வேத சிந்தனைகளால் அவனுடைய முதுகில் இருந்த பாவச்சுமை வரவர அதிகரித்து அவனுக்குப் பெரும் மனக்கிலேசத்தை ஏற்படுத்துகிறது. மாலை மாலையாய்க் கண்ணீர் சொரிகிறான். உடம்பு சிலிர்த்தது. இரட்சிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று அவன் வாய்விட்டுக் கதறி அழுகிறான். பெந்தகொஸ்தே தினத்தில் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டு இருதயம் குத்தப்பட்டு இப்படித்தான் அலறியிருக்கிறார்கள் மக்கள் (அப்போஸ்தலர் 2). தற்காலத்தில் இத்தகைய பாவ உணர்தலாகிய அனுபவத்தைக் கடைசியாக எங்கு கண்டிருக்கிறீர்கள்? இயேசுவை விசுவாசிக்கிறேன் என்று சொல்வதற்கும், கல்தோசை நன்றாக இருக்கிறது என்று சொல்லுவதற்கும் வேறுபாடு தெரியாத ஒரு கூட்டம் கிறிஸ்தவ கூட்டம் என்று தன்னை அழைத்துக்கொண்டல்லவா திரிகிறது.

கிறிஸ்தியானுக்கு பாவச்சுமை பற்றிய உணர்த்தல் ஏற்பட்டதற்குப் பரிசுத்த ஆவியானவரே காரணம். வேதத்தை வாசிக்கின்றவர்களிலும், சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களிலும் அவரே பாவ உணர்வை ஏற்படுத்துகிறவராக இருக்கிறார் (யோவான் 16:8). இப்பாவவுணர்வினாலேயே கிறிஸ்தியான் மனங்கலங்கி வருந்தினான். இரட்சிப்பை நாடி நின்றான். கர்த்தருக்கு முன் எந்த நீதியும் இல்லாமல், தேவகோபத்தைச் சுமந்து நித்திய தண்டனை விதிக்கப்பட்டு அதிலிருந்து விடுபட முடியாமல் நிற்கிறேன் என்பதை உணர்வதுதான் பாவ உணர்தல். இந்தப் பாவ உணர்தலே அவனை இரவு முழுதும் தூங்கவிடாமல், தன்னுடைய குடும்பத்தாரையும் தன்னோடு இரட்சிப்பை நாடி வரும்படி மன்றாடுவதற்குக் காரணமாக இருந்தது. அவனுடைய வார்த்தைகளை, செவிட்டுக் காதில் விழுவதுபோல் எவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கிறிஸ்தியான் இரவு முழுதும் தன் குடும்பத்தாருக்காகவும், ஊராருக்காகவும் ஜெபித்தான். அவனுடைய நாட்கள் ஜெபிப்பதிலும், வேதம் வாசிப்பதிலும், மனங்கலங்கி நிற்பதிலுமே போய்க்கொண்டிருந்தது. இந்த இடத்தில் கிறிஸ்தியான் இன்னும் இரட்சிப்படைந்து தேவசமாதானத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை நினைவுகொள்ள வேண்டும். இருந்தபோதும் அவன் மற்றவர்கள் தன்னைப்போல இரட்சிப்பை நாடவேண்டும் என்று மன்றாடியதில் இருந்து அவனில் ஏற்பட்டுள்ள பாவ உணர்தலின் தாக்கத்தை எண்ணிப்பார்க்க வேண்டும்.

சுவிசேஷகனும், திட்டிவாசலும்

பாவச்சுமையின் பாரத்தோடு வயல்வெளிகளில் கிறிஸ்தியான் உலாவிக்கொண்டிருந்த ஒருநாள் அவன் சுவிசேஷகனைச் (நற்செய்தியாளன்) சந்திக்கிறான். இந்தச் சுவிசேஷகன் உண்மையுள்ள தேவஊழியன் என்று ஜோன் பனியன் விளக்கமளிக்கிறார். தன்னுடைய பாவ உணர்தலையும், வரப்போகும் நியாயத்தீர்ப்பில் தான் அழிந்துபோகாமல் இருக்க என்ன வழி என்பதையும் கிறிஸ்தியான் சுவிசேஷகனிடம் விளக்கினான். அதற்கு சுவிசேஷகன், தூரத்தில் தெரியும் பிரகாசிக்கிற வெளிச்சத்தைப் பின்பற்றித் திட்டிவாசலை நோக்கிப் போ, அங்கு போய் அந்த வாசலின் கதவைத் தட்டினால் நீ என்ன செய்யவேண்டுமென்பதற்கு அங்கு பதில் கிடைக்கும் என்றான்.

திட்டிவாசல் என்றால் என்ன தெரியுமா? பழங்காலக் கோட்டைகளில் அதற்குள் போவதற்கு பிரம்மாண்டமான பெருங் கதவுகள் இருக்கும். அந்தக் கதவுகள் மாலைவேளையில் மூடப்பட்டுவிடும். பெருங்கதவுகள் மூடப்பட்ட பின் கோட்டைக்குள் யானைகளோ, ஒட்டகங்களோ, பெரும் வாகனங்களோ போக முடியாது. ஆட்கள் போவதற்காக மட்டும் அந்தப் பெருங்கதவுகளுக்குப் பக்கத்திலேயே ஒரு நுழைவாயில் (சிறுகதவு) காணப்படும். அதையே திட்டிவாசல் என்று அழைப்பார்கள். திட்டிவாசல் என்பது பழைய தமிழ். ஆங்கிலத்தில் இதைப் பனியன் Wicket gate என்று அழைத்தார். இது பிரெஞ்சு, ஜெர்மானிய மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்குள் நுழைந்த வார்த்தை. இதைத் தமிழாக்கியவர்கள் சரியாகவே திட்டிவாசல் என்று பழைய மோட்சப் பிரயாண மொழிபெயர்ப்பில் தந்திருக்கிறார்கள். புதிய மொழிபெயர்ப்பு (ELS) இதைக் “குறுகிய வாசல்” என்று மொழிபெயர்த்திருக்கிறது. உண்மையில் இன்றைய தலைமுறைக்கு அதுவே சரியான மொழிபெயர்ப்பு. திட்டிவாசல் குறுகியதாகவே இருக்கும். ஒரு சிலர் நுழையும் அளவுக்குக் குறுகிக் காணப்படும்.

இந்தத் திட்டிவாசல் நெருக்கமாய் இருப்பதால் அதன் வழியில் ஒருவன் மூட்டை முடிச்சோடு நுழைய முடியாது. அதன் வழியில் போகிறவன் தன் பாவங்களை வெறுத்துப் பின்னால் தள்ளிப்போடவேண்டும் என்று பனியன் நூலில் விளக்கமளிக்கிறார். சுவிசேஷகன், கிறிஸ்தியானைப் பார்த்து, அந்தத் திட்டிவாசலை நீ அடைந்து வாசல் கதவைத் தட்டினால் அங்கிருப்பவர் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுவார் என்கிறான். தன் முதுகுச் சுமையைச் சுமந்து கிறிஸ்தியான் திட்டிவாசலை நோக்கிப் பயணிக்கிறான்.

இதென்னடா, இரட்சிப்பை அடைவதற்கு சுவிசேஷகன் சொன்ன விளக்கம் வித்தியாசமாக இருக்கிறதே. தற்கால சுவிசேஷகர்கள் இந்நேரத்துக்கு கிறிஸ்தியானை இயேசுவுக்காகக் கையை உயர்த்தச் சொல்லி ஞானஸ்நானத்தையும் கொடுத்து முடித்திருப்பார்களே. இந்தச் சுவிசேஷகன் நீட்டி முழக்கி கிறிஸ்தியானை அலைக்கழியச் செய்கிறான் போல் தெரிகிறதே என்று தற்காலத்தார் நினைக்க வாய்ப்புண்டு. ஏனென்றால், சுவிசேஷத்தில் ஆர்வம் காட்டுகிற எவரையும், அவர்கள் மனம் நோகாமல் இரட்சிப்படைய உதவி செய்யவேண்டும் என்ற போக்கில், தேவ ராஜ்ஜியத்துக்குள் நுழையும் வழியைத் தற்கால சுவிசேஷகர்கள் வாழைப் பழத்திற்குள் ஊசி நுழையும் அளவுக்குச் சுலபமானதாக்கியிருக்கிறார்கள். இதுவே இன்றைய சுவிசேஷ வழியாக இருக்கிறது. மாறாக பியூரிட்டனான பனியனின் நூலின் சுவிசேஷகன் திட்டிவாசலுக்குப் போ, அதன் கதவைத் தட்டு அங்கே பதில் கிடைக்கும் என்கிறான். இதுவே பியூரிட்டன்கள் காட்டிய வழி; காரணம் அதுவே வேதம் காட்டும் வழி. இந்தத் திட்டிவாசல் எதைக் குறிக்கிறது என்பதைப் பின்னால் கவனிப்போம்.

சமீபத்தில் என் சபையில் இருவர் அங்கத்துவத்திற்காக விண்ணப்பித்தார்கள். இருவரின் சாட்சியும் தெளிவானதாக இருக்கவில்லை. அதிலிருக்கவேண்டிய மனந்திரும்புதலுக்கான அடையாளங்களைக் காணமுடியவில்லை. சாட்சியை மறுபடியும் திருத்தி எழுதித் தரும்படிக் கேட்டேன். மெய்யான மனந்திரும்புதல் பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். இவர்களில் ஒருவரின் மனந்திரும்புதலில் எனக்குப் பெரிய சந்தேகம் ஏற்பட்டது. இப்போது இருவருமே அங்கத்துவத்தை உடனடியாக அடைய முடியாத நிலையிலிருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து சுவிசேஷப் பிரசங்கத்தின் கீழ் வரவேண்டிய நிலையிலிருக்கிறார்கள். நான் செய்திருக்கும் இந்தக் காரியத்தைத் தற்கால சுவிசேஷப் பிரசங்கி கனவிலும் நினைத்துப் பார்க்க மாட்டான். தேவராஜ்ஜியத்துக்குள் வந்துவிட்டவர்களை நான் தள்ளிவைப்பதாக நினைப்பான். உண்மையில் அவனே தவறு செய்கிறான். தேவராஜ்ஜியத்துக்குள் நுழையும் வாசல் நெருக்கமான திட்டிவாசல் என்பதை அவன் உணரவில்லை. அந்த வாசலைப் பெருங்கோட்டை வாசல்போல் அவன் அகலத் திறந்துவிட்டிருப்பதனாலேயே மெய்யாக மனந்திரும்பாதவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாக அறிவித்து வருகிறான்.

மோட்சப் பிரயாணத்தில் சுவிசேஷகன், ஏன் உடனடியாக இரட்சிப்புக்காகத் தானே முயற்சியெடுத்து எதையும் செய்யும்படிக் கிறிஸ்தியானிடம் சொல்லாமல், அவனைத் திட்டிவாசலை நோக்கிப் போகச் சொன்னான்? அதற்குக் காரணம் அந்தத் திட்டிவாசல் வழியே ஜீவனுக்குரிய வழி. அங்கேயே அவனுக்கு விடுதலை கிடைக்கும். கிறிஸ்தியானுக்கு பாவ உணர்தல் ஏற்பட்டிருந்தபோதும், அதன் காரணமாகத் தன்னைச் சீர்படுத்திக்கொண்டு பரலோகம் போய்விடும் ஆற்றல் அவனில் இருக்கவில்லை. இரட்சிப்புக்காக அவன் செய்யக்கூடியதெதுவும் அவனில் இருக்கவில்லை. சுவிசேஷகன் சுட்டிய அந்தக் குறுகிய, நெருக்கமான வாசலை நோக்கிக் கிறிஸ்தியான் பயணிக்கும்போது அவனுடைய குடும்பமும், நண்பர்களுக்கு அவனைப் போகாதே! போகாதே! என்கிறார்கள். உலக ஆசைக்குள் மூழ்கிக்கிடக்கும் அவர்களுக்கு இரட்சிப்பைப் பற்றிய கவலை இல்லை. கிறிஸ்தியானின் மனம் பாதிக்கப்பட்டதுபோல் அவர்களுடைய இருதயம் பாவச்சுமையால் பாதிக்கப்படவில்லை. கிறிஸ்தியான் இதையெல்லாம் மீறித் திட்டிவாசலை நோக்கி ஓடுகிறான்.

இந்த இடத்தில் கிறிஸ்தியானின் நிலையை ஒருமுறை திரும்பவும் கவனியுங்கள். அவன் தன் கையிலிருக்கும் நூலை (வேதத்தை) வாசித்து அவனுக்குப் பாவச்சுமையின் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதன் பாரத்தால் அவன் அவதிப்படுகிறான். இந்தப் பாவ உணர்த்தல் மட்டுமே இரட்சிப்படைந்ததற்கு அடையாளமாகிவிடாது. அந்தப் பாரச்சுமை எத்தனை ஆழமானதாகவும், பயங்கரமானதாக இருந்தாலும் அது இரட்சிப்பின் அறிகுறியாகிவிடாது. அது நல்ல ஆரம்பம்; மிக அவசியமான ஆரம்பம். அதுவே முடிவாகிவிடாது. இதை ஆங்கிலத்தில் Conviction of Sin என்று சொல்வார்கள். கிறிஸ்தியான் தன் ஆத்மீக அனுபவத்தில் பயணிக்க வேண்டிய தூரம் இருக்கிறது. தற்கால சுவிசேஷகர்கள் இந்தப் பாவச்சுமையால் ஒருவன் பாதிக்கப்படும் அனுபவத்தைப் பற்றிய இறையியலறிவற்றவர்களாக இருக்கின்றனர்; அதை அவர்கள் உதாசீனம் செய்துவிடுகிறார்கள். சீர்திருத்தவாதிகளும், பியூரிட்டன்களும் அதற்கு அதிமுக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதையே வேதமும் விளக்குகிறது.

குற்றவுணர்வும், பாவ உணர்தலும்

இந்தப் பாவச்சுமை உண்டாக்கும் பாவ உணர்த்தலை சுவிசேஷத்தைக் கேட்கும் எல்லோருமே ஏதோவொரு வகையில் அடையக்கூடும்; இருந்தும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் மட்டுமே அது இரட்சிப்பில் போய் முடியும். பாவ உணர்தலைப் பற்றி அதிகம் விளக்கியவர்கள் பியூரிட்டன்கள். சீர்திருத்தவாத சுவிசேஷம் இதற்கு மிக முக்கிய இடத்தை அளிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் வருகிறபோது மனிதர்களின் பாவத்தை உணர்த்துவது அவருடைய முக்கியமான பணிகளில் ஒன்று என்று இயேசு சொல்லியிருக்கிறார் (யோவான் 16). பாவ உணர்தல் உலகத்துப் பொருள்களால் வருவதில்லை. சாதாரணமாக ஒரு தவற்றைச் செய்துவிடும்போது மனிதனில் ஏற்படும் குற்றவுணர்வுக்கும், பாவ உணர்தலுக்கும் வேறுபாடு உண்டு. குற்ற உணர்வு, கர்த்தர் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் மனச்சாட்சியினால் உண்டாவது. அது இயற்கையாக ஏற்படுவது. தேவசாயலில் இருக்கும் மனிதன் சிலவேளைகளில் குற்றங்களை உணர்ந்து வருந்துவான். இந்தக் குற்றவுணர்வை மனிதர்களாகிய அனைவரும் வாழ்க்கையில் அனுபவிப்பார்கள். தெருவில் அருமையாகக் கார் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டு வாழ்ந்த ஒருவன் ஒருநாள் வேகத்தோடு ஓட்டியதற்காக போலிஸிடம் மாட்டிக்கொள்கிறான். இப்படி நடந்துவிட்டதே, நான் தவறுசெய்துவிட்டேனே, என்று அவன் மனம் பதறுகிறான். அவனுக்குச் சில நாட்களுக்கு மனத்தில் சமாதானமும் இல்லாமல் இருக்கும். இதுவே குற்றவுணர்வு. இது எல்லா மனிதர்களுக்கும் ஏற்படுவது. இதைப் பாவ உணர்த்தலோடு தொடர்புபடுத்தி நம்மைக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

பாவத்தை உணர்தல் வேதத்தை வாசிக்கும்போது அல்லது சுவிசேஷத்தைக் கேட்கும்போது நம் இருதயத்தில் ஏற்படுவது. அதற்குக் காரணம் பரிசுத்த ஆவியானவர் வேத வசனங்களைப் பயன்படுத்தி நம் இருதயத்தில் பாவத்தைப் பற்றியும், வரப்போகும் நியாயத்தீர்ப்பைப் பற்றியும் உணர்த்தி நம் இருதயத்தை அசைப்பதுதான். இந்த ஆவியானவரின் பாவ உணர்த்துதலாகிய செயல் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், தெரிந்துகொள்ளப்படாதவர்கள் ஆகிய இருபகுதியாரிலும் நிகழும். தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் நிகழும்போது அவர்கள் அதில் தொடர்ந்து நித்திய ஜீவனை அடைவார்கள். அந்தப் பாவ உணர்த்துதல் அவர்களில் ஜீவனில் போய் முடிகிறது. அதேவேளை, தெரிந்துகொள்ளப்படாதவர்களில் அது பரிசுத்த ஆவியானவரின் பொதுவான கிரியையாக மட்டுமே காணப்படுகிறது (Common operation of the Spirit of God). அதனால்தான் சுவிசேஷத்தைக் கேட்டுப் பாவ உணர்தலை மட்டும் அடைகின்ற பலர் நித்திய ஜீவனை அடைவதில்லை. ஏரோது ராஜாவுக்கு நித்திய ஜீவனில் ஆவலிருந்தது; அவன் தான் செய்த பாவத்தை யோவான் ஸ்நானனால் உணர்த்தப்பட்டு வருந்தவும் செய்தான். இருந்தபோதும் அந்தப் பாவ உணர்வு அவனில் தொடர்ந்து அடையவேண்டிய இடத்தை அடையவில்லை. இதுவே யூதாசிலும் நிகழ்ந்தது. இயேசுவுக்கெதிராகப் பாவம் செய்துவிட்டேன் என்று அவன் வருந்தினான்; ஆனால் தற்கொலை செய்துகொண்டான். இந்தப் பாவ உணர்தல் தெரிந்துகொள்ளப்படாத சிலரில் சில காலம் தொடரலாம்; ஏரோதுவிலும், யூதாசிலும் இருந்ததுபோல. அவர்கள் அதன் துன்பத்தையும் அனுபவிக்கலாம். இருந்தபோதும் அது ஜீவனை அடைவதில் போய் முடிவதில்லை (எபிரெயர் 6:4-6).

பனியனின் நூலின் சுவிசேஷகன் சரியான ஆலோசனையைத்தான் தந்திருக்கிறான். திட்டிவாசலை நோக்கி கிறிஸ்தியானை அவன் காரணத்தோடேயே போகச்சொன்னான். கிறிஸ்தியானின் பாவச்சுமையின் பாரம் எந்தளவுக்கு உண்மையானது என்பதை இனித்தான் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். இந்தப் போதனையைத் தான் 19ம் நூற்றாண்டில் சார்ள்ஸ் ஸ்பர்ஜனும், 20ம் நூற்றாண்டில் மார்டின் லோயிட் ஜோன்ஸும் தந்திருக்கிறார்கள். அவர்களுடைய பிரசங்க ஊழியத்தில் அநேகர் பாவச்சுமையால் அவதிப்பட்டிருப்பதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இருந்தும் அவர்களில் எல்லோருமே இரட்சிப்பை அடையவில்லை. இந்த விஷயத்தில் ஜோன் பனியனைப்போலவே ஸ்பர்ஜனும், மார்டின் லொயிட் ஜோன்ஸும் பியூரிட்டன்களின் பாணியிலேயே சுவிசேஷத்தை அணுகியிருக்கிறார்கள்.

திட்டிவாசலை நோக்கி: பிடிவாதனும், இணங்குநெஞ்சனும்

இப்போது மறுபடியும் கிறிஸ்தியானிடம் வருவோம். சுவிசேஷகனின் அறிவுரையைக் கேட்டு அவன் திட்டிவாசலை நோக்கிப் போகும் வழியில் ஓடாக்குறையாக நடக்கிறான். வழியில் அவன் பிடிவாதன், இணங்குநெஞ்சன் (விட்டுக்கொடுப்பவன்) ஆகிய இருவரையும் சந்திக்கிறான். பிடிவாதன் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்து கர்வத்தோடு வாழ்கிறவன். வேதவார்த்தையை அவன் காதில் போட்டுக்கொள்ளுவதில்லை. பவுல் ரோமர் 1:25ல் விளக்கும் சத்தியத்தை அடக்கி வைக்கிறவன் பிடிவாதன். இணங்குநெஞ்சன், மத்தேயு 13ல் காணப்படும் விதைக்கிறவனின் உவமையில் வரும் நாலு நிலங்களில் ஒன்றை நினைவுபடுத்துகிறான். இவன், பனியனின் அடையாளமொழியின்படி எதற்கும் இலகுவாக வளைந்து கொடுத்துவிடக்கூடியவன். அதுவே அவனுடைய பிரச்சனையும். இவன் சத்தியத்தைக் காதில் கேட்டு அதற்கு ஆர்வத்தோடு தலை சாய்க்கிறவன்; அந்த வழியில் கொஞ்சக்காலம் போகவும் செய்வான். இருந்தபோதும் தாங்காத் துன்பம் வருகிறபோது அடியோடு விட்டுவிட்டு விலகி ஓடிப்போவான். பிடிவாதனோடு ஆரம்பத்தில் இருந்த இணங்குநெஞ்சன், பிடிவாதனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சத்தியத்தின் வழியில் தொடர ஆர்வம் காட்டிப் பிடிவாதனைவிட்டு விலகிவிடுகிறான். ஸ்பர்ஜன் சொல்கிறார், “கர்த்தரின் கிருபையை அனுபவித்திராதபோதும், இந்த உலகத்தில் சிலர், கேடானவர்களோடு சேரக்கூடாது என்பதை உணர்ந்து குறிப்பிட்டகாலத்துக்கு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களோடு சேர்ந்து நிற்பார்கள்.” இதைத்தான் இணங்குநெஞ்சனும் சிலகாலம் தன் வாழ்வில் செய்திருக்கிறான்.

இணங்குநெஞ்சர்களை நாம் சமுதாயத்தில் எங்கும் காணலாம். அவர்கள் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்திருந்தால் கிறிஸ்தவர்களைப் போல வாழ முயற்சிப்பார்கள். மரியாதையோடு வாழ்பவர்களாக இருப்பார்கள். மற்றவர்களால் மதிக்கப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். கெட்டவர்கள் மத்தியில் அவர்கள் இருக்க நேர்ந்தால் இலகுவாக கெட்டவழிக்கு இணங்கிவிடுகிறவர்களாக இருப்பார்கள். அவர்களில் உறுதி இருக்காது. கடலில் தண்ணீர்போகும் போக்கெல்லாம் வளைந்துகொடுத்துச் செல்லும் ஜெல்லிமீன் போன்றவர்கள் இவர்கள். ஜெல்லிமீனுக்கு இழுது மீன், சொறிமீன் என்றெல்லாம் தமிழில் பெயரிருக்கிறது. இந்த வளைந்துகொடுத்துப் போகும் போக்கே இணங்குநெஞ்சனில் காணப்படும் ஆபத்தான குணம். கிறிஸ்தியானுக்கும், இணங்குநெஞ்சனுக்கும் இடையில் பெரிய வேறுபாடொன்றைக் காண்கிறோம். கிறிஸ்தியானின் முதுகில் இருந்த பாரமாகிய பாவ உணர்த்தல் இணங்குநெஞ்சனின் முதுகில் இல்லை! இதிலிருந்து என்ன தெரிகிறது? இணங்குநெஞ்சன் சுவிசேஷ வாழ்க்கையில் காட்டிய ஆர்வம் அவனுடைய இருதய மாற்றத்தில் இருந்து உருவாகவில்லை என்பதுதான். ELS புதிய மொழிபெயர்ப்பு இவனை “விட்டுக்கொடுப்பவன்” என்று அழைக்கிறது. வளைந்துகொடுப்பவன் என்பது எழுத்துபூர்வமான மொழியாக்கம். புறத்தில் இருந்து வரும் செல்வாக்கிற்கு தன்னை ஒப்படைக்கிறவன் இவன். சாமுவேல் ஐயரின் மொழிபெயர்ப்பான இணங்குநெஞ்சன், என்பது எதற்கும் இணங்கிப்போகிறவன் என்ற அர்த்தத்தில் சரியாகவே இருக்கிறது.

திட்டிவாசலை நோக்கிப் போகும் வழியில் பிடிவாதனும், இணங்குநெஞ்சனும் கிறிஸ்தியானோடு சம்பாஷனையில் ஈடுபடுகிறார்கள். ஜோன் பனியன் இங்கே என்ன செய்கிறார்? இந்தக் கதாப்பாத்திரங்கள் மூலம் சுவிசேஷம் விளக்கும் இரட்சிப்பின் அருமையையும், அதை அடைவதற்கான வழிமுறையையும், இடையில் நிகழப்போகும் இடையூறுகளையும் நாம் நினைத்துப் பார்க்கச் செய்கிறார். நாவல் மூலம் சீர்திருத்த சுவிசேஷ இறையியல் நம்மோடு உறவாடுகிறது. இந்தப் பாத்திரங்களை வெளிப்புறமாக மட்டும் கவனிக்காமல் இவை இனங்காட்டும் சத்தியங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

பிடிவாதன் கிறிஸ்தியானின் இரட்சிப்பின் விளக்கத்தைக் கேட்க மறுத்ததோடு இணங்குநெஞ்சனின் மனத்தையும் குழப்ப முயற்சிக்கிறான். அதையே சுவிசேஷத்தை எதிர்ப்பவர்கள் இயற்கையாகச் செய்வார்கள். தானும் உண்ணாது, அடுத்தவனையும் உண்ணவிடாமல் செய்யும் சுயநலம் பிடித்த நாயைப் போன்றவர்கள் அவர்கள். இருந்தும் இணங்குநெஞ்சன் அவன் பேச்சுக்குத் தலை சாய்க்காமல் உறுதியோடு கிறிஸ்தியானோடு பயணிக்கிறான். “அடடா, இவன் பரவாயில்லை போலிருக்கிறதே, சத்தியத்தில் ஆர்வம் காட்டுகிறானே” என்று உணர்ச்சிவசப்பட ஆரம்பிக்கிறீர்களா? கொஞ்சம் பொறுத்திருங்கள். பிடிவாதன், கிறிஸ்தியானையும் இணங்குநெஞ்சனையும் புத்திகெட்டவர்கள் என்று கூறிவிட்டுப் பாதிவழியில் திரும்பி விடுகிறான். கிறிஸ்தியானும், இணங்குநெஞ்சனும் அந்தப் பெரும் வனத்தில் பயணித்துத் திட்டிவாசலை நோக்கிப் போகிறார்கள். அவர்கள் வழியில் சம்பாஷனையில் ஈடுபடுகிறார்கள். கிறிஸ்தியான் இணங்குநெஞ்சனுக்குப் பரலோக வாழ்வின் அற்புதத்தைப் போகும் வழியில் விளக்குகிறான். வேதத்தில் அவை பற்றி விளக்கியிருக்கும் பகுதிகளை வாசித்துக் காட்டுகிறான். இரட்சிப்பை இன்னும் அடைந்திராவிட்டாலும் கிறிஸ்தியான் தான் அடைந்திருக்கும் அனுபவத்தை மற்றவர்களும் அடையவேண்டும் என்ற ஆவல் உள்ளவனாக இருக்கிறான்.

கிறிஸ்தவர்களான நாம் கிறிஸ்தியானிடம் பாடம் கற்கவேண்டும். இதற்கு ஸ்பர்ஜன் மோட்சப் பயணத்திற்கான தன் விளக்கவுரையில் அருமையான விளக்கமளிக்கிறார். எவரையும் நாம் குறைத்து மதிப்பிட்டு அவர்கள் கிறிஸ்துவிடம் வரமாட்டார்கள் என்று தீர்மானித்து பேசாமல் இருந்துவிடுவதை விட, அவர்களை ஊக்குவித்து கிறிஸ்துவிடம் போகுமாறு வலியுறுத்த வேண்டுமென்கிறார் ஸ்பர்ஜன். பரிசுத்த ஆவியினால் பாவ உணர்த்தலை மட்டுமே இதுவரை அடைந்திருந்த கிறிஸ்தியான் இங்கே நமக்கு சுவிசேஷம் சொல்லுவதில் வழிகாட்டியாக இருக்கிறான். “சுவிசேஷ வலையை நிரப்ப வேண்டியது பரிசுத்த ஆவியின் கிரியை. வலையை வீசியெறிந்து, ஆழத்தில் இருந்து அதைக் கரைவரை இழுத்து வரவேண்டியது நம் வேலை. நல்ல மீனைப்பிடித்திருக்கிறோமா அல்லது மோசமானதைப் பிடித்திருக்கிறோமா என்பது நம் ஆண்டவரின் கையில்தான் இருக்கிறது” என்கிறார் ஸ்பர்ஜன். இந்த விஷயத்தில் கிறிஸ்தியான் மற்றவர்கள் மேல் வைத்திருந்த அன்பு பாராட்டவேண்டியது. கிறிஸ்துவை விசுவாசித்து சமாதானத்தைப் பெற்று சந்தோஷத்துடன் வாழும் நாம், “இணங்குநெஞ்சர்களே வாருங்கள்” என்று மற்றவர்களைக் கிறிஸ்துவிடம் வருமாறு அழைக்கிறோமா?

சம்பாஷனைக்கு மத்தியில் கிறிஸ்தியானும் இணங்குநெஞ்சனும் திட்டிவாசலை நோக்கி வேகமாக அந்தப் பெருவனத்தில் நடந்து போனார்கள். இணங்குநெஞ்சனுக்கு கிறிஸ்தியான் பரலோக வாழ்வைப் பற்றி விளக்கிய நல்ல விஷயங்கள் பெரும் ஆனந்தத்தைக் கொடுக்கின்றன. அடடா! எத்தனை பெரிய வாழ்க்கை, அருமையான வாழ்க்கை என்று ஆனந்தத்தோடு சொல்லிக்கொண்டு இணங்குநெஞ்சன் வனத்தில் நடக்கிறான். கிறிஸ்தியானும் பாவ உணர்த்தலாகிய பாரத்தை சுமந்தபடி முடிந்தவரை அவனோடு வேகமாக நடக்க முயற்சிக்கிறான்.

நம்பிக்கையிழவு

இவ்வேளையில் பனியன் தன் கனவில் அவர்கள் இருவரும் கவனக்குறைவினால் ஒரு உளையில் விழுவதைக் காண்கிறார். இந்த உளைக்கு நம்பிக்கையிழவு (நம்பிக்கையிழப்பு) என்று பெயர். இது எதைக் குறிக்கிறது? பனியன் விளக்குகிறார், “புதிதாய் மனந்திரும்புகிறவர்களுக்கு உண்டாகும் பலவித பயங்கரங்களை இது குறிக்கிறது.” பனியன் இது பாவஉணர்த்தலை அடைந்தவர்கள் சந்திக்கும் அனுபவமாக விளக்குகிறார். “பாவ உணர்த்துதலோடு தொடர்ந்து ஒருவனில் பாவத்தின் நாசத்தையும், அழுக்குகளையும் உணரும்படியாக இது நிகழ்ந்து அவனில் தொடருகிறது. இதற்குப் பெயர்தான் நம்பிக்கையிழவு” என்கிறார் பனியன். தொடர்ந்து பனியன், “பாவி தன் நிர்ப்பந்த நிலைமையை அறிந்து உணர்கிறபோது அவன் ஆத்துமாவில் மகா பயங்கரங்களும், சந்தேகங்களும் தளர்ச்சிகளும் உண்டாகி அவனை அதைரியப்படுத்துகின்றன” என்கிறார். இந்த உளையின் சேற்றில் இருவரும் தத்தளித்தார்கள். அதிலிருந்து மீண்டுவருதற்கு அவர்கள் பெருமுயற்சி எடுத்தார்கள். கிறிஸ்தியானின் முதுகில் ஏற்கனவே பாவச்சுமை இருந்து அழுத்தியதால் அவன் சேற்றில் அதிகமாக மூழ்கிவிட்டான். அவனால் நகரவும் முடியவில்லை. உளையிலிருந்து எப்படி வெளிவருவது என்று கிறிஸ்தியான் தவித்துக் கொண்டிருந்தான்.

இவ்வேளையில் அவனோடு உளையில் விழுந்திருந்த இணங்குநெஞ்சன் கிறிஸ்தியானிடம், ஐயா நீர் எங்கேயிருக்கிறீர்? என்று கேட்கிறான். அதற்குக் கிறிஸ்தியான் அது தனக்குத் தெரியவில்லை என்று பதிலளிக்க இணங்குநெஞ்சனுக்கு அதிக கோபம் வந்துவிடுகிறது. உன் பேச்சைக்கேட்டுத்தானே இந்தப் பயணத்தில் வந்தேன். இத்தனை துன்பங்களை நான் சந்திக்கவேண்டி வரும் என்று ஏற்கனவே நீ சொல்லியிருந்தால் நான் உன்னோடு வந்திருக்கவே மாட்டேன் என்று கத்திவிட்டு, முழுப்பலத்தோடு எப்படியோ தட்டுத்தடுமாறி சேற்றில் இருந்து வெளிவந்து தன் வீடு இருந்த நகரத்தை நோக்கி வேகமாக ஓடத்தொடங்கினான். அதற்குப் பிறகு அவன் கிறிஸ்தியானுடைய பார்வையில் பட்டதேயில்லை. இணங்குநெஞ்சன் துன்பங்களில்லாத வாழ்க்கையை எதிர்பார்த்தான். அவனால் துன்பங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விதைக்கிறவனின் உவமையில் (மத்தேயு 13) வருகிற சிலரை இவன் நினைவுறுத்துகிறான். குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் சுவிசேஷத்திலும், வேதத்திலும், சபையிலும் ஆர்வம் காட்டியிருந்தாலும் அவற்றின் காரணமாக ஏற்படும் துன்பங்களை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நல்ல நிலமாக இல்லாதிருந்ததால்தான் இணங்குநெஞ்சனால் திட்டிவாசலை நோக்கிப் போகும் பயணத்தில் தொடரமுடியவில்லை. மெய்யான பாவஉணர்த்தல் அவனில் இருக்கவில்லை. அவன் கதை அதோடு முடிவடைந்துவிடுகிறது. பழைய வாழ்க்கைக்கே அவன் திரும்பிவிடுகிறான்.

உளையில் இருந்து பாவச்சுமையின் பாரத்தால் வெளியே வர முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த கிறிஸ்தியான் சகாயர் என்ற இன்னுமொரு பாத்திரத்தைச் சந்திக்கிறான். சகாயர் என்றால் உதவிசெய்கிறவர் என்று அர்த்தம்.

இவர் ஆத்தும ஆபத்தால் வருந்துகிறவர்களுக்கு ஆறுதலளிப்பதற்காக இயேசு கிறிஸ்து பயன்படுத்தும் பல ஏதுக்களைக் குறிக்கிறவராக இருக்கிறார். சகாயர், கிறிஸ்தியான் அந்த உளையில் இருந்து வெளிவர உதவுகிறார். அதற்கு முன், உளையில் இருக்கும் படிகளை நீ கவனிக்கவில்லையா? என்று அவர் கிறிஸ்தியானைப் பார்த்துக் கேட்கிறார். பயத்தினால் அவற்றைக் கவனிக்காமல் போய்விட்டேன் என்றான் கிறிஸ்தியான். சகாயர், “அந்தப் படிகள் உளையின் களிம்புகளால் சிலவேளைகளில் மறைந்து காணப்படும். தெரிந்தாலும் இந்த வழியில் வருகிற சிலர் மயக்கத்தால் படிகளைக் கூர்ந்து கவனிக்காமல் போய்விடுகிறார்கள்; சேற்றில் மேலும் விழுந்து அழுக்கடைவார்கள். படியை மிதித்துவிட்டால் அப்புறம் நல்ல பாதைதான்” என்கிறார்.

லோகஞானி

சகாயரின் துணையோடு நம்பிக்கையிழவில் இருந்து வெளிவந்த கிறிஸ்தியான் தனியே அந்த வனத்தில் நடக்கிறான். அவன் அடுத்துச் சந்திப்பது லோகஞானி. இவன் மாமிசநேசபுரி எனும் பட்டணத்தில் வாழ்கிறவன். லோகஞானி பாத்திரம் இந்த உலகத்தில் தேவனுக்கும், உலகத்துக்கும் ஊழியம் செய்யப் பிரயாசைப்படுகிறவர்களைக் குறிக்கிறது. இவனைப்போன்றவர்கள் முடிந்தவரையில் மதவாழ்க்கை வாழ்ந்து தேவபக்தியை அடையாளங்காட்டும் சில நல்ல செயல்களை மட்டும் செய்துவருவார்கள். ஆனால், இந்த உலக வாழ்வை இவர்கள் விடாமல் பற்றிக்கொண்டிருப்பார்கள். அதிலிருந்து விடுபட உதவும் ஆத்தும விஷயங்களுக்கு தங்கள் வாழ்வில் இடங்கொடுக்க மாட்டார்கள். இந்த லோகஞானி கிறிஸ்தியானிடம் சுவிசேஷகனைப் பற்றி இழிவாய்ப் பேசி, உன்னை அந்த மனிதன் தவறான வழிக்கு அடையாளம் காட்டியிருக்கிறான் என்றும், நன்மார்க்கத்திற்கு வழி தனக்குத் தெரியும் என்று அவன் மனத்தை மாற்ற முயல்கிறான். கிறிஸ்தியானும் அவனுடைய பேச்சில் விழுந்துபோய்விடுகிறான். லோகஞானி ஒரு போலிச் சுவிசேஷகன். லோகஞானி காட்டிய பாதை நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதன் மூலமாக சீயோனை அடைய முயற்சி செய்யும் பாதை. லோகஞானி நல்லறம் என்ற பட்டணத்தில் வாழும் நியாயப்பிரமாணிக்கனைப் பற்றிச் சொல்லுகிறான். இவன் நற்கிரியைகளினால் இரட்சிப்பை அடையலாம் என்று போதிக்கிறவர்களுக்கு அடையாளமாக இருக்கிறான். இவனுடைய மகன் மரியாதை. இவன் நல்வாழ்க்கை வாழ்ந்து பரலோகம் அடைய முயற்சிக்கிறவர்களைக் குறிக்கிறான். இந்தவிதமாகக் கிரியையினால் பரலோகத்தை அடைய உதவும் நல்லறப் பட்டணத்திற்கு கிறிஸ்தியான் குடும்பத்தோடு போய் வாழ்ந்தால் அவனுக்கு வாழ்வுண்டு என்று லோகஞானி மோசமான வழியைக்காட்டினான்.

லோகஞானியின் பேச்சைக்கேட்டுத் தான் போய்க்கொண்டிருந்த பாதை மாறி கிறிஸ்தியான் நல்லறப் பட்டணத்தை நோக்கிப் போனான். இது இயேசு கிறிஸ்துவின் மூலமாக ஆத்தும இரட்சிப்பை நாடாமல் சொந்தக் கிரியைகளின் மூலம் அதை அடைய முயற்சி செய்வதற்கு அடையாளம். கிறிஸ்தியான், லோகஞானி விளக்கிய மலை அடிவாரத்தை அடைந்தபோது அதன் சிகரம் தன் மேல் விழுவதுபோலிருந்ததைப் பார்த்துப் புலம்பினான். தான் ஏற்கனவே சுமந்த பாரத்தைவிட மேலும் அதிகமான பாரத்தை போன பாதையில் உணர்ந்த கிறிஸ்தியான் கலங்கிப்போனான். அவனுடைய தேகம் குலுங்கியது; சரீரமெல்லாம் வியர்வை வழிந்தது. லோகஞானி மோசம் செய்துவிட்டான், அவன் பேச்சைக் கேட்டு நான் பாதை மாறியது எத்தனை முட்டாள்த்தனம் என்று கிறிஸ்தியான் உணர்ந்தான். இயேசு கிறிஸ்து மூலமாய் இரட்சிப்பை அடைவதை விடுத்து தன் சொந்தக் கிரியைகளின் மூலமாக அதைப் பெற்றுக்கொள்ள முயன்றதே கிறிஸ்தியான் விட்ட பெருந்தவறு. நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றி இரட்சிப்பைத் தேட முயன்று அதன் தேவகோபத்தின் பாரம் முன்பிருந்த பாவச்சுமையையும்விட அதிகமாகத் தொல்லை தந்ததை கிறிஸ்தியான் உணர்ந்தான். தேவகோபம் அதிகமாகத் தன்மேல் இருப்பதை உணர்ந்து கலங்கினான்.

திட்டிவாசல் கோட்டைக்குள் நுழைதல்

நம்பிக்கையிழவைவிட்டு வெளியே வந்து குற்றவுணர்வோடும், தடுமாற்றத்தோடும் கிறிஸ்தியான் நின்றுகொண்டிருந்தபோது அவனைச் சந்திக்க, இரண்டாம் தடவையாக சுவிசேஷகன் வந்தான். (மோட்சப் பயணத்தில் வழிதெரியாமல் தடுமாறிக்கொண்டிருப்பவர்களுக்கு சரியான வழியைக் காட்டி உதவி செய்கிறவர்களுக்கு அடையாளமே சுவிசேஷகன்). கிறிஸ்தியானைப் பார்த்ததும் சுவிசேஷகனுக்கு கோபம் வந்தது. கிறிஸ்தியான் நடுங்கினான். சுவிசேஷகன் கிறிஸ்தியானோடு ஒரு நீண்ட சம்பாஷனையில் ஈடுபடுகிறான். நடந்த அனைத்தையும், தன் தவற்றையும் கிறிஸ்தியான் விளக்கிச் சொன்னான். சுவிசேஷகன் அவனுக்கு நித்திய ஜீவனுக்குரிய வழியைப்பற்றி விளக்கமாக எச்சரிப்போடு சொல்கிறான். அதையெல்லாம் கேட்டு கிறிஸ்தியான் தன் தவறுகளுக்காக மிகவும் மனம் வருந்தி, எனக்கு விமோசனமே இல்லையா? என்று கேட்டு அழுகிறான். லோகஞானியின் பேச்சைக் கேட்டு நடந்த தன் மூடத்தனத்திற்காக மிகவும் வருந்துகிறான். சுவிசேஷகன் அவனைப் பெரிதும் கண்டித்து, எச்சரித்து சரியான பாதையில் போவதற்கு இனி மிகவும் கவனமாக இரு என்று கூறி, அவனுக்கு ஆறுதல் கூறித் தழுவி வழியனுப்புகிறான்.

அதற்குப் பிறகு கிறிஸ்தியான் தன் கவனத்தைப் போகவேண்டிய பாதையில் மட்டுமே செலுத்தி, எவரோடும் வழியில் பேசாமல், பேசுகிறவர்களுக்கு காதையும் கொடுக்காமல், சுடுமணலில் நடக்கிறவனைப்போல நடந்து திட்டிவாசல் வழியில் போய் திட்டிவாசலின் படியில் ஏறினான். வாசலின் கதவை மூன்று தடவைத் தட்டினான். அங்கிருந்தவர் அவன் யார் என்று விசாரித்தபிறகு கதவைத் திறந்தார். கிறிஸ்தியான் உடனே மெதுவாகக் காலெடுத்து உள்ளே போகப் போனான். ஆனால் கோட்டைக்குள் இருந்த பட்சதாபன் அவன் கையைப் பிடித்து சட்டென்று உள்ளே இழுத்துக்கொண்டார். பட்சதாபனுக்கும் கிறிஸ்தியானுக்கும் இடையில் சிறு சம்பாஷனை நிகழ்கிறது. பட்சதாபனும், கிறிஸ்தியானும் நடந்துசெல்ல கிறிஸ்தியானுக்கு இனிப்போக வேண்டிய வழியைப் பட்சதாபன் விளக்குகிறான். முன்னால் தெரியும் இடுக்கமான வழியில் தான் நீ இனி நடக்கவேண்டும் என்றும், அது நூலைப்போல நேரான வழி என்றும் பட்சதாபன் விளக்குகிறான். ஆனால், கோணலும் விசாலமுமான தவறான வழிகள் காணப்படும், அதில் போய்விடாதே என்றும் அவன் விளக்குகிறான். கிறிஸ்தியானுக்குத் தன் முதுகில் இருக்கும் பாரச்சுமையைப் பற்றிய கவலை தொடர்ந்திருந்தது. அதை இறக்கக்கூடிய வல்லமை அவனிடம் இருக்கவில்லை. நீ, நேராக நடந்து போ, விரைவில் ஓரிடத்தை அடையும்போது அது தானாகவே விழுந்துவிடும். அந்த இடத்துக்குப் போகும்வரை பொறுமையோடு நீ அதைச் சுமந்து திரிய வேண்டும், என்று பட்சதாபன் விளக்குகிறான்.

கிறிஸ்தியான் தொடர்ந்து இடுக்கமானதும், நேரானதுமான வழியில் நடந்து, போகும் வழியில் வியாக்கியானியைச் சந்திக்கிறான் (சத்தியவேதத்தின் மூலம் அனைத்தையும் கிறிஸ்தவர்களுக்கு விளக்கும் பரிசுத்த ஆவியானவரே வியாக்கியானி). வியாக்கியானியிடம் மேலும் தெளிவான வேதவிளக்கங்களைப் பெற்றுக்கொண்ட பின் கிறிஸ்தியான் நேரான பாதையில் நடந்துபோக ஆரம்பித்தான். அவன் முதுகில் இருந்த பாரச்சுமையால் அதிக துன்பத்தை அடைந்தான். இருந்தும் ஓட்டமும் நடையுமாக அவன் இறுதியில் ஒரு மேட்டின் அடிவாரத்தை அடைந்தான். அதன் உச்சியில் ஒரு சிலுவையும், அதன் அருகே ஒரு சமாதியும் இருந்தன. கிறிஸ்தியான் மெதுவாக அந்த மேட்டில் ஏறி சிலுவை அருகே வந்தான். அப்போது அவனுடைய முதுகில் இருந்த பாரச் சுமையின் கயிறுகள் அறுந்து, பாரச்சுமை சமாதிவரை உருண்டோடி அதனுள் விழுந்து காணாமல் போயிற்று. அதுமுதல் கிறிஸ்தியான் மலர்ந்த முகத்துடன் பேரானந்தமடைந்தான். அன்றோடு அவனுடைய பாவ உணர்த்துதலின் பாரச்சுமை நீங்கியது. அவன் ஆனந்தப் பரவசம் அடைந்து பாடினான்.

கிறிஸ்தியான் இனி சீயோனுக்குப் போகவேண்டிய பாதை நீண்டதாக இருந்தது. இனியே அவன் இதுவரை சுமந்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த பாவ உணர்த்துதலின் பாரமின்றி நம்பிக்கையோடும், விசுவாசத்தோடும் சீயோனை நோக்கி நடைபோட முடியும். இதுவே மோட்சப் பயணம் விளக்கும் கிறிஸ்தியானின் மனமாற்றமாகிய அனுபவம்.

மோட்சப் பயணத்தில் கிறிஸ்தியானில் நிகழ்ந்த மனமாற்றத்தை சுருக்கமாகப் பின்வருமாறு விளக்கலாம்:

  1. பாவத்தை உணர்ந்து வருந்துதல்
  2. கிறிஸ்துவிடம் வழி காட்டப்படுதல்
  3. பாவ உலக வாழ்க்கையை விட்டு விலகியோடுதல்
  4. நம்பிக்கையையும், தைரியத்தையும் இழத்தல் (நம்பிக்கையிழவு)
  5. கிரியைகளால் இரட்சிப்பை அடையும் முயற்சியில் இருந்து மனந்திரும்புதல்.
  6. கிறிஸ்துவை நாடிப், பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்டு இரட்சிப்பை அடைதல் (திட்டிவாசல்).
  7. ஆவியினால் போதிக்கப்படுதல்.
  8. சிலுவையின் கீழ் இரட்சிப்பின் நிச்சயத்தை கிறிஸ்துவிடமிருந்து அடைதல்.

மேலே காணப்படும் பட்டியலில் 1-6 வரையுள்ள ஆத்மீக அனுபவங்கள் கிறிஸ்தியான் மனமாற்றத்தை அடையும்வரை நிகழ்ந்தவை. 7-8 வரையுள்ளவை மனமாற்றத்தை அடைந்தபிறகு நிகழ்ந்தவை.

இனி மோட்சப் பயணம் விளக்கும் அதிமுக்கியமான வேத சத்தியங்களைக் கவனிப்போம்.

1. மோட்சப் பயணம் பனியனின் சொந்த மனமாற்றத்தை விளக்கும் நூல். ஹியூ மார்டின், “மோட்சப் பயணம் பனியன் எழுதிய Grace Abounding to the chief of sinners என்ற நூலின் நாடக உருவம்” என்கிறார். Grace Abounding நூல் பனியன் மனமாற்றம் அடைந்த அனுபவத்தை விளக்குகிறது. அதை பனியன் அந்நூலுக்கான உப தலைப்பிலேயே தெளிவாக விளக்கியிருக்கிறார். பனியன் இதை மோட்சப் பயணத்தில் குறிப்பிடவில்லை; குறிப்பிட்டிருந்தால் தமிழ் வாசகர்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கும். இரண்டு நூல்களையும் வாசிக்கிறவர்கள் இதைப் புரிந்துகொள்ளத் தவறமாட்டார்கள். நான் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் பனியன் மோட்சப் பயணத்தில் விளக்கும் அவருடைய மனமாற்றம் வேதபூர்வமானதாக இருந்தபோதிலும், கிறிஸ்துவை விசுவாசிக்கும் எல்லோரிலும் அதே அளவில் ஆழமாக நிகழ்வதை எதிர்பார்க்கக்கூடாது என்பதை உணர்த்துவதற்காகத்தான். பனியனின் நூல் 1678ல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோதே சிலர் நூலைப்பற்றிய கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். அதற்குக் காரணம் பனியனில் மனமாற்றம் நிகழ்ந்தவாறு மனமாற்றத்தை அவர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்திருந்திராததுதான். அதனால் கிறிஸ்தியானின் மனமாற்றத்தை எல்லோருடைய மனமாற்றத்திற்கான முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்தவகையில் சிந்தித்து அநேகர் மோட்சப் பயணத்தில் கிறிஸ்தியான் எப்போது மெய்யான மனமாற்றத்தை அடைந்தான் என்பதைப் புரிந்துகொள்ளத் தடுமாறியிருக்கிறார்கள். பனியனும் கிறிஸ்தியானுடைய கிறிஸ்தவ அனுபவத்தைப்போலவே எல்லோருடைய அனுபவமும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தக் காரணத்தால்தான் மோட்சப் பயணத்திற்கு தமிழில் ஒரு நல்ல இறையியல் விளக்கவுரை அவசியம் என்று நான் இந்த இதழில் மோட்சப் பயணத்தை அறிமுகப்படுத்தி எழுதியிருந்த ஒரு ஆக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். மோட்சப் பயணம் நாவலாக இருப்பதால் இதையெல்லாம் பனியன் அதில் விளக்கியிருக்கமுடியாது.

2. பனியன் தன் மனமாற்றத்தில் அனுபவித்த “நம்பிக்கையிழவு” அனுபவம் பற்றிய விளக்கம். கிறிஸ்தியான், சுவிசேஷத்தை வாசித்து பாவ உணர்த்துதலை அனுபவிக்க ஆரம்பித்துத் திட்டிவாசல் கோட்டையை நோக்கி நடந்தபோது வழியில் நம்பிக்கையிழவு எனும் உளையில் விழுந்துவிடுகிறான். பிடிவாதனும் அவனோடு அதில் விழுந்துவிடுகிறான். இது நாவலில் கிறிஸ்தியானின் மனமாற்றத்தின் ஆரம்பக் கட்டத்தில் நிகழ்கிறது. அத்தோடு, ஒரு குறிப்பிட்ட வேளையில், குறிப்பிட்ட கால அளவுக்கு அது மிகவும் ஆழமாக அவனில் நிகழ்ந்திருக்கிறது. இவ்வனுபவத்தில் கிறிஸ்தியான் கடும் ஆத்மீகத் துன்பத்தை அனுபவித்து தனக்கு எந்த விமோசனமும் இல்லை என்ற முடிவுக்கு வருகிறான்; சகல நம்பிக்கையையும் இழக்கிறான். பாவ உணர்த்துதலை அடைந்து கிறிஸ்துவை நோக்கிப் போகிறவர்களின் வாழ்க்கையில் இத்தனை ஆழமாகக் குறிப்பிட்ட கால அளவுக்குக் கடுமையான ஆத்மீகத் துன்பத்தை அவர்கள் அனுபவிப்பது மனமாற்றத்தின் ஒரு அங்கமா? அதை எல்லோரும் அனுபவிக்க வேண்டுமா? அதை அனுபவிக்காமல் விசுவாசத்தை அடைய முடியாதா? இது விசுவாசத்தை அடைவதற்கான ஒரு நிபந்தனையா? போன்ற கேள்விகள் எழுகின்றன. இத்தகைய அனுபவத்தைப் பற்றி பியூரிட்டன்கள் அதிகம் எழுதியிருப்பதால் அவர்கள் முன்னேற்பாட்டியம் (Preparationism) மற்றும் சட்டவாதப் போதனையைத் (Legalism) தருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் அவர்கள் மேல் எழுந்திருந்தது. இதைத்தான் பனியன் தன் நாவலில் செய்திருக்கிறாரா?

ஆரம்பத்திலேயே நான் விளக்கியதுபோல் இந்த அனுபவம் ஜோன் பனியனின் வாழ்க்கையில், அவர் மனமாற்றத்தை அடைவதற்கு முன் மிக ஆழமாக நிகழ்ந்திருக்கிறது. அதையே அவர் உருவகப்படுத்தி கிறிஸ்தியானின் அனுபவமாக விளக்கியிருக்கிறார். பனியன், இந்த அனுபவம் குறித்த காலப்பகுதியில், குறிப்பிட்ட கால அளவுக்கு விரிவாகக் கிறிஸ்தியானில் நிகழ்ந்திருக்கிறது என்று விளக்கியிருக்கிறார். அதனால், பாவ உணர்த்துதலை அடைந்திருப்பவர்கள் மனமாற்றத்திற்கு முன் ஒரு குறித்த காலகட்டத்தில், குறிப்பிட்ட காலத்துக்கு இத்தகைய ஆழமானதும், விரிவானதுமான கடும் ஆத்மீகத் துன்பத்தை அனுபவிப்பது இரட்சிப்பை அடைவதற்கு அவசியமானது என்ற தவறான எண்ணத்தை இது உருவாக்கிவிடுகிறது. அதனால் மனமாற்றமடைந்தவர்களில் இத்தகைய அனுபவத்தை அவர்கள் அடைந்திருக்கிறார்களா? என்று ஆராய்ந்து, அடையாதவர்கள் இரட்சிப்பை அடையவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடும் ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது. முதலில் இரட்சிப்பை அடைவதற்கு எந்தப் படிமுறையையும் எவரும் பின்பற்ற வேண்டும் என்று வேதம் விளக்கவில்லை; அப்படிச் செய்வது சட்டவாதப் போதனையாகிவிடும். நிச்சயம் பனியன் அதைச் செய்யவில்லை. பனியனுடைய ஆழமான சொந்த அனுபவமாகிய நம்பிக்கையிழவு தவறானதா? இல்லவேயில்லை! அது அவரது தனிப்பட்ட அனுபவம்; கிறிஸ்துவை அடையுமுன் அவர் அனுபவித்தது, அதில் தவறில்லை. அத்தகைய அனுபவத்தை எல்லோரும் அடையவேண்டுமென்று பனியன் சொல்கிறாரா? இல்லை! ஆனால், அவருடைய கதாபாத்திரத்தின் அனுபவம் அத்தகைய தவறான புரிதலை வாசகர் அடையுமாறு செய்துவிடுகிறது. இதை எப்படித் தவிர்த்துக்கொள்ளுவது? கிறிஸ்தியானின் அனுபவத்தைப் பனியனுடைய தனிப்பட்ட சொந்த அனுபவமாக மட்டும் பார்ப்பதன் மூலம் அதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

பியூரிட்டன்கள் சட்டவாத முன்னேற்பாட்டியத்தை சுவிசேஷத்தின் மூலம் முன்வைத்தார்களா? அதாவது, ஒருவன் கிறிஸ்தவனாவதற்கு முன் மிகக் கடுமையான பாவ உணர்த்துதலைத் தன் வாழ்வில் குறிப்பிட்ட காலத்துக்கு அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர்கள் விதித்திருந்தார்களா? இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது அவசியம். உண்மையில் பியூரிட்டன்கள் இந்த விஷயத்தில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தகைய நிபந்தனையை விதித்ததில்லை; முன்னேற்பாட்டியத்தை வலியுறுத்தியதுமில்லை. அவர்கள் விளக்கியதெல்லாம், பாவத்தை அடியோடு வெறுக்கின்ற ஒருவன் மட்டுமே முழு இருதயத்தோடும் கிறிஸ்துவை விசுவாசிக்க முடியும் என்பதுதான். பாவத்திற்காக மனம் வருந்துதலை வலியுறுத்துகிற வேதம், ஆழமான மனம் வருந்துதலை சுவிசேஷ செய்தியில் நிபந்தனையாக விதிக்கவில்லை; சுவிசேஷம் ஒருவன் நேரடியாக கிறிஸ்துவிடம் வரும்படி மட்டுமே அழைக்கிறது. வீழ்ச்சியினால் பாவத்தில் வீழ்ந்திருக்கும் மனித இருதயமே அந்தப் பாவத்திற்காக ஒருவன் ஆழமாக மனம் வருந்தவேண்டும் என்பதை அவசியமாக்குகிறது. பாவ உணர்த்துதல் மனமாற்றத்தின் ஒரு அங்கம்; அதுவே மனமாற்றத்திற்கு அடையாளமாக இருக்கிறது. பாவ உணர்த்துதலை அடையாமல் ஒருவரும் மனமாற்றத்தை அடைவதில்லை.

நம்பிக்கையிழவு போன்ற அதிரடி மனந்திரும்புதலை ஒருவர் தன் வாழ்வில் எக்காலத்திலாவது அனுபவித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சட்டவாதப் போதனையை நோக்கி அழைத்துச் செல்வதாகிவிடும். இத்தகைய அனுபவத்தை நாம் கட்டாயப்படுத்த முடியாது. வேதம் இதை எவரிலும் எதிர்பார்க்கவில்லை. மோட்சப் பயணத்தில் இது நேரடியாக விளக்கப்படாததால், வாசகர்கள் இந்த நம்பிக்கையிழவு அனுபவத்தைத் தாங்கள் அடையவில்லையே என்று ஆதங்கப்படலாம்; அத்தகைய ஆதங்கம் அவசியமற்றது. ஒவ்வொருவருடைய மனமாற்ற அனுபவமும் வித்தியாசமானதாகக் காணப்படும். ஒருவருடைய அனுபவத்தை மட்டும் அனைவருக்குமான அளவுகோலாக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. ஆத்மீக எழுப்புதல் நிகழும் காலங்களில் பலருடைய பாவ உணர்த்துதல் மிக ஆழமாகக் காணப்பட்டிருப்பதை கிறிஸ்தவ வரலாறு விளக்குகிறது. 20ம் நூற்றாண்டில் தன் ஆரம்பகால ஊழியத்தில் மார்டின் லொயிட் ஜோன்ஸ் இதை அனுபவபூர்வமாக சிலரில் கண்டிருக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில் கிறிஸ்துவை சந்தித்தபோது இத்தகைய ஆழமான அனுபவத்தை சில நாட்களுக்குத் தன் வாழ்வில் அனுபவித்திருக்கிறார். பனியன் மட்டுமல்லாமல் ஜோன் நியூட்டனும் இத்தகைய ஆழமான பாவ உணர்த்துதலைத் தன் வாழ்வில் அனுபவித்ததாக எழுதியிருக்கிறார். மோட்சப் பயணத்திற்கான விளக்கவுரையை எழுதிய ஸ்பர்ஜன், நம்பிக்கையிழவாகிய ஆழமான ஆத்மீகத் துன்பத்தை கிறிஸ்துவை விசுவாசித்த பின்னே ஒருவன் அனுபவிக்கலாம் என்றும், பனியன் இதை விசுவாசிப்பதற்கு முன் ஒருவன் அடையும் அனுபவமாகக் காட்டியிருப்பது சரியல்ல என்றும் எழுதியிருக்கிறார். தன் விசுவாச வாழ்வில் சிலவருடங்களுக்கு அத்தகைய அனுபவத்தைத் தான் அடைந்திருந்ததாக ஸ்பர்ஜன் கூறியிருக்கிறார். இத்தகைய காரணங்களினால் ஜோன் பனியன் தன்னுடைய சொந்த ஆத்மீக அனுபவத்தையே மோட்சப் பிரயாணத்தில் விளக்கியிருக்கிறார் என்பதை உணர்ந்து நாவலை வாசிப்பது வாசகனுக்கு உதவும். தன்னுடைய ஆத்மீக அனுபவத்தின் பல அம்சங்கள் அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தபோதும், தன்னுடையதையே அளவுகோலாகப் பயன்படுத்தவேண்டும் என்று பனியன் ஒருபோதும் கருதவில்லை.

3. கிறிஸ்தியான் திட்டிவாசல் கோட்டையை அடைந்தபோதே விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவை அடைந்தான்.

இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருந்ததை நான் கவனித்திருக்கிறேன். (1) ஏனெனில் பனியன் திட்டிவாசல் கோட்டையை அடையும்போதுதான் ஒருவன் விசுவாசத்தை அடைகிறான் என்பதை நாவலில் தெளிவாக விளக்கவில்லை. இது நாவல் என்பதால் அதை நாமே புரிந்துகொள்ளும்படி அவர் எதிர்பார்க்கிறார். (2) திட்டிவாசல் கோட்டைக்குள் நுழைந்த பிறகும் அவனுடைய பாரச்சுமையாகிய பாவ உணர்த்துதல் அவனில் தொடர்ந்தது பலரையும் குழம்பச் செய்திருக்கிறது. இந்தப் பாரச்சுமை கிறிஸ்தியான் சிலுவை காணப்பட்ட மேட்டை அடைந்தபோதே அவனை விட்டுவிலகி சமாதிவரைப் போய் காணாமல் போனது. அதனால் கிறிஸ்தியான் திட்டிவாசல் கோட்டையை அடைந்தபோதா? அல்லது மேட்டுப் பகுதியில் இருந்த சிலுவையை அடைந்தபோதா? கிறிஸ்தவ விசுவாசத்தை அடைந்தான் என்ற கேள்வி எழுகிறது.

திட்டிவாசல் கோட்டையை கிறிஸ்தியான் அடைந்தவுடன் அவன் வாசலின் கதவைத் தட்டினான். கதவு திறந்தபோது அவன் உள்ளே நுழையவில்லை. மாறாக அதற்குள்ளிருந்த பட்சதாபன் கிறிஸ்தியான் கையைப் பிடித்து சட்டென்று உள்ளே இழுத்துக்கொண்டான். இதிலிருந்து கிறிஸ்துவில் விசுவாசத்தை அடைய கிறிஸ்தியான் சுயமாக எதையும் செய்யவில்லை, செய்யமுடியவில்லை என்பதைத் தெரிந்துகொள்கிறோம். அவன் கோட்டைக்குள் நுழைய இன்னொருவரால் இழுக்கப்பட வேண்டியிருந்தது. கர்த்தரே நம்மை விசுவாசத்தின் மூலம் தன்னிடம் இணைத்துக்கொள்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். அத்தோடு சீயோன் என்று நாவலில் குறிப்பிடப்பட்டிருப்பது பரலோகம். பரலோகத்தை அடைய கிறிஸ்தியானுக்கு விசுவாசம் தேவை. அதையே அவன் திட்டிவாசல் கோட்டையில் கிறிஸ்துவிடமிருந்து அடைந்து தன் கிறிஸ்தவ வாழ்க்கையில் சீயோனுக்கான பயணத்தைத் தொடர்கிறான். வாசல் திறக்கப்படுகிறது என்பதற்கு பனியன் அடிக்குறிப்பில், “சரியான வழியில் இயேசுவிடம் வருகிற ஒவ்வொருவனும் ஏற்றுக்கொள்ளப்படுவான் என்பதைக் குறிக்கிறது” என்று விளக்கமளிக்கிறார். கிறிஸ்தியானுடைய பாடலான “ஐயையா, நான் பாவி திட்டிவாசல் திறவும் ஐயா!” என்பதும், திட்டிவாசல் கோட்டையை அடைந்ததுமே அவன் மனமாற்றத்தை அடைந்தான் என்பதை உணர்த்துகிறது. அந்தப் பாடலில், “பாரஞ்சுமந்து வந்தேன் ஐயா, நேசமாய் வாசல் திறந்திடுவீரானால் பாரம் இறக்கிக்கொள்வேன்” என்கிறான் கிறிஸ்தியான். நாவலின் இரண்டாம் பாகத்தில் கிறிஸ்தீனாள் விசுவாசத்தை அடைந்தது திட்டிவாசல் கோட்டையை அடைந்தபோது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவளும் அவளுடைய பிள்ளைகளும் திட்டிவாசல் கோட்டைக்குள் நுழைந்து இரட்சிப்படைந்தார்கள். ஸ்பர்ஜனும், மோட்சப் பயணத்துக்கு விளக்கமளித்து எழுதியிருக்கும் பலரும் இந்தக் கருத்தையே முன்வைத்திருக்கிறார்கள்.

பெரும் பிரசங்கியும், இறையியல் அறிஞருமான ஸ்பர்ஜன் மோட்சப் பிரயாணத்தில் இரண்டு அம்சங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. முதலாவது, கிறிஸ்தியானை சுவிசேஷகன் பிரகாசமான ஒளிவீசும் இடத்தை நோக்கிப் பயணிக்கும்படி அறிவுறுத்தியது. இரண்டாவது, சிலுவையைத் திட்டிவாசல் கோட்டையில் வைக்காமல், தூரத்தில் தள்ளி வைத்தது. ஒருவன் கிறிஸ்துவை அடைவதற்கு சில கிரியைகளைச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை இவை ஏற்படுத்திவிடுவதாக ஸ்பர்ஜன் எண்ணினார். இதை 1 கொரிந்தியர் 2:2 என்ற வசனத்தின் அடிப்படையில் அவரளித்த பிரசங்கத்தில் ஸ்பர்ஜன் குறிப்பிட்டிருக்கிறார் (John Bunyan’s Pilgrims Progress: Themes and Issues, Barry Horner, pg 131-132). ஸ்பர்ஜனைப் பொறுத்தவரையில், “எந்தப் பிரசங்கியும் திட்டிவாசலை நோக்கி ஓடு என்று சொல்லாமல் சிலுவையை நோக்கி ஓடு என்றே சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவேண்டும். சிலுவை திட்டிவாசலுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.” கிறிஸ்துவிடமிருந்து வரும் இரட்சிப்பை அடைய ஒருவன் கிறிஸ்துவை நோக்கித்தான் ஓடவேண்டும் என்றும், ஞானஸ்நானமோ, சபையோ, வேறெதுவுமே இடையில் வரக்கூடாது என்கிறார் ஸ்பர்ஜன். “பனியன் விளக்கியிருப்பது சாதாரணமாக வாழ்க்கையில் நிகழ்வது என்பதாக இருந்தால் அவர் விளக்கியிருப்பது சரியே; எது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று பனியன் சொல்வதாக இருந்தால் அது முழுத்தவறு” என்று ஸ்பர்ஜன் குறிப்பிட்டிருக்கிறார். சுவிசேஷப் பிரசங்கத்தைப் பற்றி ஸ்பர்ஜன் சொல்லியிருப்பது நூறு வீதம் சரியே. இருந்தபோதும் ஜோன் பனியன் திட்டிவாசல் கோட்டைக்கு சிறிது தொலைவில் சிலுவையை நாவலில் நிறுத்தியிருப்பதற்குக் காரணம் இருக்கிறது. அதை அடுத்த தலைப்பில் விளக்கப் போகிறேன். இருந்தபோதும், பனியன் திட்டிவாசல் கோட்டையை அடைந்தே ஒருவன் விசுவாசத்தை அடைகிறான் என்றும், திட்டிவாசல் கோட்டையே கிறிஸ்துவை அடைவதற்கு அடையாளமாக இருக்கிறது என்பதையும் தன் நாவலில் குறிப்பிடாமலில்லை. தற்போதிருக்கும் தமிழ் மொழிபெயர்ப்பில் பனியனின் விளக்கங்கள் காணப்படாதிருப்பதால் நாவலின் இறையியல் போதனைகளை வாசகர்கள் விளங்கிக்கொள்ளுவது கடினமே.

4. கிறிஸ்தியான் சிலுவையை அடைந்தபோது பாரச்சுமை நீங்கி விடுதலை அடைந்தது அவன் இரட்சிப்பின் நிச்சயமாகிய (Assurance of salvation) அனுபவத்தைப் பெற்றதற்கு அடையாளமாக இருக்கிறது. மோட்சப் பயணம் நாவலில் அநேகரைக் குழப்பும் சம்பவம் இது. பெரும்பாலானோர் இந்த அனுபவத்தை கிறிஸ்தியான் திட்டிவாசல் கோட்டையில் இரட்சிப்பை அடைந்தபோதே அடைந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பார்கள். அதற்குக் காரணம் விசுவாசத்திற்கும், இரட்சிப்பின் நிச்சயத்திற்கும் இடையில் இருக்கும் வேறுபாடு தெரியாதிருப்பதால்தான். ஆர்மீனியனியப் போதனைகள் மலிந்து காணப்படும் நம்மினத்தில் இரட்சிப்பை அடைந்தும் அதைப் பாவம் செய்து இழந்துபோகலாம் என்றும், இழந்ததை மீண்டும் அடைந்துவிடலாம் போன்ற நம்பிக்கைகள் மலிந்து காணப்படுவதால் இரட்சிப்பின் நிச்சயமாகிய வேத போதனை அந்நம்பிக்கைகளில் அடியோடு இல்லாமல் இருக்கின்றது.

ஜோன் பனியன் தன்னுடைய சொந்த அனுபவத்தில் இரட்சிப்பை அடைந்து சில காலத்திற்குப் பின்பே இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவித்திருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயத்தை அடைந்தபோதே பனியன் நீதிமானாக்குதலின் முழுத் தாற்பரியத்தையும், கிறிஸ்துவின் பரிகாரப்பலியின் ஆழமான பலன்களையும், பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும் அடைந்திருக்கிறார் என்பதை மேட்டிலிருந்த சிலுவையை அவர் அடைந்தபோது நிகழ்ந்த காரியங்களை மோட்சப் பயணத்தை வாசித்து அறிந்துகொள்கிறோம்.

ஜோன் பனியன் மனமாற்றத்தை, மறுபிறப்பைப் போல ஒரே நேரத்தில் நிகழ்ந்துவிடாமல் ஒருவனில் வளர்ந்து தொடருகின்ற அனுபவமாக நாவலில் வர்ணித்திருக்கிறார். அதனால்தான் கிறிஸ்தியான், திட்டிவாசல் கோட்டையை அடைந்தவுடன் இரட்சிப்பை அடைந்தபோதும் அதன் நிச்சயத்தை உடனடியாக அடையாமல் சில காலத்திற்குப் பின்பு அடைந்ததாக விளக்கியிருக்கிறார். பனியனுடைய வாழ்க்கையிலும் அவ்வாறே நிகழ்ந்திருக்கிறது. இந்த இடத்தில் பியூரிட்டன்கள் இரட்சிப்பின் நிச்சயத்தைப் பற்றி விளக்கியிருக்கும் இறையியல் உண்மையைச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. பியூரிட்டன்களின் விளக்கத்தை 1689 விசுவாச அறிக்கை பின்வருமாறு தருகிறது.

“. . . இரட்சிப்பின் நிச்சயமானது இரட்சிப்பின் இன்றியமையாத பகுதியல்ல. மாறாக மெய்யான விசுவாசி அதை அடைவதற்கு அநேக காலம் காத்திருந்து பலவிதமான துன்பங்களுக்கூடாகவும் செல்ல நேரிடும் . . .” (1689, 18:3).

தற்காலத்து பிரெஸ்பிடீரியன் இறையியல் அறிஞரான ஜொயல் பீக்கி இதைக்குறித்து விளக்கும்போது, “இரட்சிப்பின் நிச்சயம் ஒருவருடைய ஆழமான தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்லாது, ஆழமான இறையியல் போதனையுமாகும்” என்கிறார். அதாவது, இரட்சிப்பின் அனுபவம் சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டிய ஆழமான இறையியல் போதனை. அத்தோடு, அது ஒருவரின் தனிப்பட்ட ஆழமான ஆத்மீக அனுபவத்தைப் பற்றியது. இதை மேலும் விளக்கும் பீக்கி, “இயற்கையாகவே ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிள் பழங்கள் உருவாவதுபோல், விசுவாசத்தின் சாரத்தில் இருந்து எழுவது இரட்சிப்பின் நிச்சயம். விசுவாசத்தின் சிறப்பான பகுதி இரட்சிப்பின் நிச்சயம்” . . . “இரட்சிப்பின் நிச்சயம் தானாக வருவதில்லை. ஒரு கிறிஸ்தவன் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிராது பல குழப்பங்களை அனுபவிக்கலாம். இரட்சிக்கும் விசுவாசத்தின் கனியே இரட்சிப்பின் நிச்சயம். பனிக்காலத்தில், பனியால் ஒரு மரம் கனிகொடுக்க முடியாதிருப்பதுபோல், விசுவாசத்தைக் கொண்டிருக்கும் ஒருவரில் இரட்சிப்பின் நிச்சயம் காணப்படாமல் போகலாம்; சிலகாலத்துக்கு இல்லாமலுங்கூடப் போகலாம்” என்கிறார் (https://www.ligonier.org/learn/articles/faith-and-assurance).

இந்தப் பியூரிட்டன் இறையியல் போதனையை விளக்கும் 19ம் நூற்றாண்டு அறிஞரான ஜே.சி. ரைல் எழுதுகிறார், “ஒரு மனிதன் கிறிஸ்துவில் இரட்சிக்கும் விசுவாசத்தைக் கொண்டிருந்தும், தன் வாழ்நாளில் ஒருபோதும் அதைப்பற்றிய நிச்சயத்தினால் உண்டாகும் நம்பிக்கையைப் பவுல் அனுபவித்ததைப்போல அனுபவிக்காமல் இருந்துவிடலாம். விசுவாசத்தை நம்மில் கொண்டிருந்து அதனால் உண்டாகும், கடவுள் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்ற மெல்லிய நம்பிக்கை ஒருரகம்; விசுவாசத்தில் ஆனந்தத்தையும் சமாதானத்தையும் கொண்டிருந்து, நம்பிக்கையில் மேலதிகமாக உயர்வது என்பது இன்னொரு ரகம். கடவுளின் பிள்ளைகள் அனைவருமே விசுவாசத்தைக் கொண்டிருப்பார்கள்; ஆனால் எல்லோரும் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருப்பதில்லை. இதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது.”

கிறிஸ்தவ விசுவாசத்தை நீரூற்றுக்கு ஒப்பிடலாம். ஊற்றில் இருந்து வருவதே தண்ணீர். அந்தத் தண்ணீரை இரட்சிப்பின் நிச்சயத்துக்கு ஒப்பிடலாம். சிலவேளைகளில் ஊற்றில் இருந்து தண்ணீர் பீறிட்டுப் பொங்கிப் பாய்ந்து வெளிவரும். சிலவேளைகளில் தண்ணீர் மிகக் குறைவாகக் காணப்படும். சிலவேளைகளில் ஊற்றில் தண்ணீரையே காணமுடியாது. அதுபோலத்தான் இரட்சிப்பின் நிச்சயமும். ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்து என்னுடையவர் என்பதையும், அவரளிக்கும் ஆனந்தத்தையும் அனுபவரீதியாகத் தன்னில் உணர்ந்தனுபவிப்பதே இரட்சிப்பின் நிச்சயம். ரைல் சொல்கிறார், “விசுவாசமே வேர்; இரட்சிப்பின் நிச்சயம் மலர். சந்தேகமில்லாமல் வேரின்றி ஒருபோதும் மலர் இருக்கமுடியாது; அதேவேளை வேரிருந்தும் மலரில்லாமல் இருந்துவிடலாம் என்பதும் உண்மை.”

பாவத்தைச் செய்து மனந்திரும்பாத நிலையில் இருக்கும்போதோ, ஆத்மீகப் பிரச்சனைகளோடு இருக்கும்போதோ, குழப்பத்துக்குள்ளாகிய நிலையில் இருக்கும்போதோ இரட்சிப்பின் நிச்சயம் கிறிஸ்தவனில் மிகத் தளர்ந்த நிலையிலேயே காணப்படும்; சிலவேளைகளில் அதை அவன் உணராமலேயே இருந்துவிடலாம். ஜோன் பனியன் இத்தகைய பலவீனமான குழப்ப நிலையில் இருந்தபோதே அவர் விசுவாசியாக இருந்தபோதும், இரட்சிப்பின் நிச்சயத்தை உணர்ந்திராத நிலையில் இருந்திருக்கிறார். அவர் கிறிஸ்துவோடு நெருங்கி, அவரில் தங்கியிருந்தபோது இரட்சிப்பின் முழு நிச்சயத்தையும் அவர் உணர்ந்தார் என்பதையே மோட்சப் பயணம் கிறிஸ்தியானின் அனுபவத்தின் மூலம் நமக்கு விளக்குகிறது.

கிறிஸ்தவனின் விசுவாசம் ஒருபோதும் அவனை விட்டு அகலாது; ஆனால், இரட்சிப்பின் நிச்சயம் குறைவடையலாம், இல்லாமலேயே போகலாம். அதை மீண்டும் அடைந்து அனுபவிக்க அவன் கிறிஸ்துவை நோக்கி முன்னேறிக், கீழ்ப்படிவோடு, கிருபையின் நியமங்களை முறையாக விசுவாசத்தோடு பயன்படுத்துகிறபோது இரட்சிப்பின் நிச்சயத்தை அவன் மீண்டும் அடைய முடியும். கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்து மனந்திரும்பும்போதே இரட்சிப்பின் நிச்சயத்தை ஒருவர் அதிகமாக உணரமுடியும். கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்ப்பது தொடர்ச்சியான மனந்திரும்புதலையும், கீழ்ப்படிதலையுந்தான். இரட்சிப்பின் நிச்சயத்தை நாடியோடுவது கிறிஸ்தவனின் கடமை. அதில் வளரும்போது அவன் சுற்றியிருப்பவர்களுக்கும் பயனுள்ளவனாகிறான். இரட்சிப்பின் நிச்சயம் அனைத்துக் கிறிஸ்தவர்களிலும் ஒரேநிலையில் காணப்படுவதில்லை. இரட்சிப்பின் நிச்சயத்தை அதிகமாக, அதன் உயர்நிலையில் அனுபவிப்பவர்கள் கிறிஸ்துவை மிகவும் நெருங்கியவர்களாக, அவரோடுள்ள ஐக்கியத்தில் மேலான நிலையில் உள்ளவர்களாகவே இருப்பார்கள். அனைத்துக் கிறிஸ்தவர்களும் இரட்சிப்பின் நிச்சயத்தை அனுபவிக்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டிருந்தபோதும், அதை முழுமையாக அனுபவிக்காமலேயே ஒருவன் பரலோகத்தை அடைந்துவிடலாம்.

நவீன காலத்தில் ஆத்துமாவின் தோலைக்கூடத் தொட்டுரச முடியாத, பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு பிரசங்கிக்கப்படும் பிணிதீர்க்கும், தரங்குறைந்த சுவிசேஷ செய்திகளைக் கேட்டு, மனமாற்றம் அடைந்ததாகக் கற்பனையுலகில் வாழ்ந்து வரும் ஆயிரக்கணக்கானோர் அடையாத இரட்சிப்பை அடைந்ததாக எண்ணிப் பெரும் மனக்குழப்பத்தில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையோர் பெருகிக் காணப்படும் நம்மினத்தில் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய தெளிவான வேதபோதனைகளைக் கேட்கமுடியாமலிருப்பதும், கேட்டாலும் புரிந்துகொள்ள முடியாமல் அநேகர் இருப்பதிலும் ஆச்சரியமில்லை. அதனால் ஜோன் பனியனின் மோட்சப் பயணத்தில் அவர் விளக்கும் போதனை பலருக்குப் புதிதாகக்கூடத் தெரியலாம். பனியன் தன் சொந்த அனுபவத்தைக் கிறிஸ்தியான் பாத்திரத்தின் மூலம் விளக்கியிருந்தாலும், அது வேதம் போதிக்கின்ற மெய்யான சத்தியமே.

ஜோன் பனியனின் அனுபவத்தில் இருந்து இரட்சிப்பின் நிச்சயமாகிய அனுபவத்தை அறிந்துகொள்ளுகிறபோதும், அவருடைய அனுபவத்தை நாம் எல்லோருக்குமான அனுபவமாக, அளவுகோலாகப் பயன்படுத்தக்கூடாது. அப்படிச் செய்யுமாறு பனியன் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. இன்னுமொரு எச்சரிப்பையும் தரவிரும்புகிறேன். புதிதாக இயேசுவை நாடி வந்து இரட்சிப்படைகிறவர்களில் நாம் இரட்சிப்பின் நிச்சயத்தைவிட, அவர்கள் இரட்சிப்படைந்திருக்கிறார்களா என்பதை மட்டுமே ஆராயவேண்டும். அப்படிச் செய்யும்வேளையில் அவர்களுடைய பரிசுத்தமாகுதலின் அளவை எடைபோட்டு, நம் மனத்தில் காணப்படும் அளவுக்கு அவர்களில் அது காணப்படவில்லை என்று தீர்மானித்து, ஞானஸ்நானமளிப்பதைக் காலந்தாழ்த்திவிடலாம். இயேசு கிறிஸ்து ஒருவனை பாவத்தில் இருந்து மனந்திரும்பித் தன்னைத் தேவனாக விசுவாசிக்கும்படி மட்டுமே வலியுறுத்தினார். அதுவே ஒருவனிடம் இரட்சிக்கப்பட்டதன் அடையாளமாகத் தெளிவாகக் காணப்படவேண்டும். அதற்குமேலாக எதையும் ஒருவனில் நிபந்தனையாக எதிர்பார்க்கக்கூடாது. இந்த இடத்தில் நாம் சட்டவாதத்தைப் பின்பற்றுகிற ஆபத்தில் இருந்தும், ஆர்மீனியனியத்தைப் பின்பற்றும் ஆபத்திலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவை விசுவாசித்தவன் தன் மனமாற்ற வாழ்க்கையின் ஒருபகுதியாகக் கீழ்ப்படிதலிலும், பரிசுத்தமாகுதலிலும் படிப்படியாகவே வளர்ந்து வருவான். அதோடு தொடர்புடையதே இரட்சிப்பின் நிச்சயமாகிய இறையியல் அனுபவம்.

மறுமொழி தருக