பாவம் பொல்லாதது – வாசிப்பனுபவம்

ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்

“பாவம் பொல்லாதது” நூல் எனது கரத்தில் கிடைத்திருப்பதைக் கர்த்தருடைய பராமரிப்பின் ஆச்சரியங்களின் வரிசையில் எனக்கு கிடைத்த மற்றொரு புதையலாகப் பார்க்கிறேன். முழுப் புத்தகத்தையும் வாசித்த பின்பு அதன் தலைப்பை உச்சரிக்கும் போதெல்லாம் அதனோடு சேர்ந்து பழைய பாம்பின் ஒரு வஞ்சகச் சீறலும் நினைவில் தோன்றி பாவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டு விடாமல் அதைக் குறித்த சரியான பார்வையோடு தீவிரமாகச் செயல்பட்டு முற்றாக அழிக்க வேண்டும்! என்ற வைராக்கிய உணர்வை ஏற்படுத்துகிறது.

நூலின் அறிமுகப் பகுதி முதல் இறுதிப் பயன்பாடு வரை ஒவ்வொரு பக்கமும் பாவத்தைப் போலவே தீவிரமாக எண்ணிக் கவனமாக ஆராய்ந்து வாசிக்கப்பட வேண்டியவை. நூல் விபரிக்கும் எதிரியாகிய பாவத்தின் ஆக்ரோஷமான தாக்குதலை ஒவ்வொரு ஆத்துமாவும் தனிப்பட்ட விதத்தில் அனுபவித்திருப்பதால் சிந்தனையிலும், உணர்விலும் நூல் ஏற்படுத்தும் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கிறது. கண்களைக் கண்ணீரால் நிறைத்து வாசிப்புக்குத் தடை ஏற்படுத்திய வாக்கியங்கள் அதிகம்; பாவத்தின் மீது தீராத வெறுப்பை ஏற்படுத்திய பக்கங்கள் அதிகம். அத்தோடு அதிகமான மனத்துக்கத்தினால் எரிந்து அழிந்து போகாமல் புராணக் கதைகளில் வரும் “பீனிக்ஸ்” பறவையைப் போல வீறு கொண்டு பறந்து கிறிஸ்துவிடம் தஞ்சம் அடைய உந்தித் தள்ளும் பக்கங்களும் மிக அதிகமாக உள்ளன.

நூலின் அறிமுகப் பகுதியிலே பாவத்தின் கோரத் தாண்டவத்தை இன்றைய உலகின் தீமையான நிகழ்வுகளில் இருந்து கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர். அதனைத் தொடர்ந்து, ஆத்துமாவைக் கொடூரமாகப் பாதித்து நித்தியமான அழிவுக்கு இழுத்துச் செல்லும் இந்த உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக இன்றைய உலகில் காணப்படும் போலித் தயாரிப்புகளான, செழிப்பு உபதேச போதனைகள், தாராளவாத எண்ணப்போக்கு மற்றும் உளவியல் சார்ந்த சமூகத்தின் ஒட்டுமொத்தப் பார்வைக்கும் ஒரு முற்றுப் புள்ளி வைக்கிறார். அத்தோடு பாவத்தின் தன்மையைப் படைப்பு, வீழ்ச்சி, கிருபை மற்றும் மீட்பின் திட்டம் மூலமாக விபரித்துக் கூறி, அதற்கான ஒரே மருந்தாக இருக்கும் கிறிஸ்துவின் கோப நிவாரணப் பலியின் அவசியத்தை எடுத்துக் காட்டுகிறார். மேலும் மூல நூலின் ஆசிரியரான பியூரிட்டன் பெரியவர் ரால்ப் வென்னிங்கின் உறுதியான கிறிஸ்தவ விசுவாசம் மற்றும் ஆழமான வேத ஞானம் குறித்த சில குறிப்புகளையும் சேர்த்துத் தந்திருப்பது நூலை அரசல் புரசலாக மேலோட்டமாக வாசிக்காமல் ஆராய்ந்து வாசிக்கும் எண்ணத்தைத் தூண்டுகிறது.

அடுத்ததாக வரும் இரண்டு பிரிவுகளிலும் பாவம் என்றால் என்ன? என்பதும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அதன் பொல்லாத தன்மைகளும் பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இந்தப் பகுதி “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என்பது போல பாவத்தின் மீது தீராத வெறுப்பையும், அதேசமயம் இரட்சகர் மீது உருக்கமான அன்பையும் ஏற்படுத்தி வாசிப்பவர்களின் மனதைக் கிறிஸ்துவுக்குள் வெற்றி கொள்கிறது. இதை வாசித்துக் கொண்டிருந்த போது எச்.ஐ.வி. வைரஸ் குறித்து பாடம் நடத்திய ஒரு மருத்துவரின் கூற்று நினைவில் வந்தது. அதாவது “எச்.ஐ.வி. வைரசின் கொடுமைகளில் எல்லாம் பெரிய கொடுமை என்னவென்றால், அது நமது உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பின் அனைத்து பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் தகர்த்து எறிந்து, சின்னச் சின்ன நோய்க்கிருமிகளும் சுலபமாக உள்ளே புகுந்து உடல் நலத்தைச் சின்னாபின்னமாகச் சீரழிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்து விடுவதுதான்!” என்று விளக்கம் கொடுத்தார். இந்த எச்.ஐ.வி. வைரஸை விட மில்லியன் மடங்கு மோசமானது பாவத்தின் பாவம்! என்பது நூலை வாசித்தால் புரியும்.

தேவ சாயலில் மேன்மையாகப் படைக்கப்பட்ட மனிதனை ஒரு மிருகத்தை விடவும் தரம் தாழ்த்தி, அவனது எண்ணம், அறிவு, உணர்ச்சி, ஒழுக்கம் அத்தனையையும் பாதித்து, சரீரத்திலும் ஆத்துமாவிலும் மீளமுடியாத துன்பத்தை உண்டாக்கி, படைத்த தேவனுக்கு அவனை நிரந்தர எதிரியாக்கியதோடு விட்டுவிடாமல், மரணத்தைத் தாண்டியும் தொடர்ந்து வந்து நித்திய நரகத்தைப் பரிசளிக்கும் பாவத்தின் பொல்லாத் தன்மையை மிகவும் துல்லியமாக விபரித்துக் காட்டுகிறார் நூலாசிரியர். அவிசுவாசிகளில் மட்டுமல்லாமல் கிறிஸ்துவை விசுவாசித்து தேவனிடம் சமாதானம் பெற்றிருக்கும் விசுவாசிகளிலும் எஞ்சியிருக்கும் பாவத்தின் ஆக்ரோஷம் எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கி விடுகிறது! அது விசுவாசிகளில் சமாதானக் குறைவுகளையும், நன்றியற்ற தன்மையையும், குறைகூறுதலையும் அதிகரிக்கச் செய்து அதன் காரணமாக கர்த்தரின் சிட்சையையும் அனுபவிக்க வைத்து விடுகிறது என்ற உண்மையை நூல் ஞாபகப்படுத்துகிறது. “நரகத்தின் நித்திய அழிவு என்பது பகற்கனவல்ல” என்ற பகுதியில் நரகத்தின் மெய்த்தன்மையை நிரூபிக்கும் ஆணித்தரமான சான்றுகளை வேதத்தில் இருந்து தருவதோடு, கிறிஸ்தவச் சூழலில் வளர்ந்து வந்தும் கிறிஸ்துவை நிராகரிப்பவர்களுக்கும், மாய்மால மனிதர்களுக்கும், விசுவாசத் துரோகிகளுக்கும் நரகம் எத்தனை மோசமானதாக இருக்கப் போகிறது என்ற பயங்கரமான எச்சரிப்பையும் தருகிறது இந்நூல்.

மூன்றாவதாக, பாவத்தின் நிதர்சனமான கோரத்தன்மையை நாம் உறுதியாக நம்பி எச்சரிப்பு அடையும் விதத்தில் அதன் தீமைகளை விபரமாக எழுதுகிறார் ஆசிரியர். அதற்கான சாட்சியங்களைத் தர்க்கரீதியில் எடுத்துக் காட்டும் முகமாக கடவுள், கிறிஸ்து, தேவதூதர்கள், விசுவாசிகள் அவிசுவாசிகள் . . . என்ற நீண்ட பட்டியலை நம் முன் வைத்து இறுதியில் பாவமே பாவத்தின் கேடான தன்மையை எப்படி உறுதிப்படுத்துகிறது என்று சுட்டிக் காட்டி இந்த பகுதியை முடிவுக்குக் கொண்டு வருகிறார் ஆசிரியர். பாவத்தின் தீமைகள் குறித்த உண்மைகளை எந்த விதத்திலும் நிராகரிக்க முடியாதபடி நம் சிந்தனைகளைச் சிறைப்பிடித்து சத்தியத்தின் முன் நம்மை மண்டியிடச் செய்யும் நூலின் அதீத பலம் இந்த மூன்றாவது பிரிவுக்குள்ளேதான் காணப்படுகிறது என்பது என் அபிப்பிராயம்.

பாவத்தைக் கண்டிக்க உலகிற்கு வந்த கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளின் கோரத்தின் அளவை மேலும் பல கன அடிகள் ஆழமாக சென்று அறிந்து கொள்ள இப்பகுதி உதவி செய்தது; என் பாவம் தானே என் நேச இரட்சகருக்கு இத்தனைக் துன்பத்தைக் கொடுத்தது என்ற நினைவு தந்த வேதனை மிகவும் அதிகமாக இருந்தது. பாவம் செய்யத் தூண்டும் பிசாசினுடைய வஞ்சகத்தின் பல்வேறு அவதாரங்களை இனம் கண்டு கொள்ள முடிந்தது. பரிசுத்தமாக்குதலில் முக்கிய பங்கு வகிக்கும் பாவத்துடனான மல்யுத்தத்தில், ஒரு விசுவாசியின் மனநிலை, ஏக்கம், ஆத்மீக மற்றும் சரீர முயற்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள நூல் உதவி செய்கின்றது. “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்ற பவுலின் அங்கலாய்ப்பில் இருக்கும் உண்மையான ஆதங்கம் நூலை வாசித்த பின்புதான் சரியாகப் புரிந்தது.

பாவத்துக்கு விரோதமாகப் படைப்பும், நியாயப்பிரமாணமும், சுவிசேஷ செய்தியும் தரும் சாட்சிகள் நிராகரிக்க முடியாதவையாக இருக்கின்றன. முழு உலகையும் ஆக்ரமித்து மொத்த மனுக்குலமும் அதன் பாதிப்பை அனுபவிக்கும் விதத்தில் தனது தீமையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறது பாவம். அத்தோடு அது பயமுறுத்துகிற விதத்தில் மனிதனின் அனுபவம், அறிவு, நாகரீக விஞ்ஞான வளர்ச்சியின் ஊடாகத் தொடர்ந்து வளர்வது மிகவும் அதிர்ச்சியூட்டுகிறது. பாவத்தின் தீமையை விவரிக்கும் நூலாசிரியர் “பாவம் வெறுமனே அவலட்சணமானதல்ல; அதுவே அவலட்சணம். அது அருவருப்பானது மட்டுமல்ல; அருவருப்பின் சாராம்சமே அதுதான். அது ஒழுக்கக்கேடானது மட்டுமல்ல; சகல ஒழுக்கக்கேடுகளினதும் ஊற்றாக இருக்கிறது.” என்கிறார், உண்மைதான், பாவதின் தீங்கை விமர்சிப்பதற்கு தமிழில் இதை விடவும் மோசமான வார்த்தைகள் இருக்க வாய்ப்பில்லை அத்தனை தூரம் பாவம் பொல்லாதது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.

அடுத்ததாக, இதுவரை வாசித்த பகுதியிலிருந்து அறிந்துக் கொண்ட பாவத்தின் தீமைகள் குறித்த எச்சரிப்புகளால் மனதில் பயம் ஏற்பட்டு, சோர்ந்து போய் “மோட்சப் பிரயாணம் நூலில்” அலங்கார மாளிகையின் வாசலின் அருகே சிங்கங்களைப் பார்த்ததும் பயந்து போய்த் திரும்பி ஓடிய கோழைகளைப் போல ஓடவிடாமல், கண்களைக் கிறிஸ்து மீது வைத்தவனாக சிங்கங்களின் நடுவே சீறிப்பாய்ந்து அலங்கார மாளிகைக்குள் தஞ்சமடைந்த கிறிஸ்தியான் போல நம்மைத் தைரியப்படுத்தி கிறிஸ்துவிடம் இழுத்துச் செல்லுகிறது கடைசியாக வரும் இரு அதிகாரங்களும்.

இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் பாவம் எந்த விதங்களில் உலகத்தின் துன்பம், மரணம், பிசாசு மற்றும் நரகத்தை விடவும் மோசமானதாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அதைத் தொடர்ந்து கர்த்தருடைய நீடிய பொறுமை, கிருபையின் உடன்படிக்கை, வாக்குத்தத்தம், மீட்பு, மன்னிப்பு, மனந்திரும்புதல் ஆகிய ஊக்கப்படுத்தும் சத்தியங்களைத் தந்து வாசிக்கும் ஆத்துமாக்கள் விசுவாசத்தோடு தேவனிடம் மனந்திரும்புவதற்கு ஏதுவாக வழிநடத்துகிறார். இறுதியாக இவ்வுலகில் பாவத்தைத் தொடர்ச்சியாக அழித்து, பக்தி விருத்தியுள்ள கிறிஸ்தவ வாழ்வு வாழ அவசியமான சில நடைமுறைப் பயன்பாடுகளுடன் நூலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

முதல் முறையாக கடவுளின் நீடிய பொறுமையைக் குறித்த சத்தியங்களை விரிவாகப் படித்து அறிந்துகொள்ள நூல் உதவி செய்தது. எனது இருதயத்தின் தீய தன்மையை உணர்ந்து அகஸ்டின் போல “தீய மனிதனிலிருந்து என்னை விடுவியும்; அந்தத் தீயமனிதனே நான்தான்” என்று அதிகாலை ஜெபங்களில் மன்றாட வைக்கிறது. “கடவுளுக்காக வாழ்வதற்குப் பயன்படுத்தப்படாத நேரங்கள் தவறாகச் செலவழிக்கப்பட்டவை; அவை வெறுமனே வீணடிக்கப்பட்ட நேரங்களை விடவும் மோசமானவை.” என்ற சொற்றொடர்கள் அதிகமாக யோசிக்க வைத்தன. எண்ணம், சொல், செயல்களைப் பரிசுத்தமாகக் காத்துக் கொள்வதற்காக நூல் வழங்கும் ஆலோசனைக் குறிப்புகளை நகல் எடுத்து வீட்டில் அதிகமாக பயன்படுத்தும் பகுதியில் ஒட்டி வைத்து அடிக்கடி வாசித்து வருவது மிகவும் உபயோகமாக உள்ளது; கிறிஸ்தவ கடமைகளைத் தொடர்ச்சியாக நிறைவேற்றுவதில் அதிகப்படியான ஜாக்கிரதை உணர்வை அது ஏற்படுத்தியுள்ளது; நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாகச் செய்யாமல் விடும் கடமைகள் அதிக மன வருத்தத்தைத் தந்து அத்தகைய தவறுகளைத் தொடர்ந்து செய்யாமல் இருக்கப் பயிற்சியளிக்கின்றது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால், என்னிலும் மற்றவர்களிலும் பாவத்தைப் பாவமாகவே பார்க்கும் எனது பார்வை ஒரு புதிய பரிமாணத்தை எட்டும் வண்ணம் ஆழ்ந்த பாதிப்பை நூல் ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க இயலாத உண்மை.

“எதிரியைக் குறைத்து மதிப்பிடல் அசட்டுத் துணிவெனக் கருதப்படல் வேண்டும்” என்பது உலகத்தின் யுத்த நியதிகளுள் ஒன்று. பரிசுத்தத்தைப் பறித்து, நிம்மதியைக் கெடுத்து, ஆசையாகப் படைத்த தேவனையே மறந்து நித்திய நரகத்தை நாடிப்போகச் செய்யும் இந்த “அம்னீஷியா” நிலைக்கு நம்மைத் தாழ்த்திய நமது பரம்பரை விரோதியான பாவத்தைக் குறைத்து மதிப்பிடுவது அசட்டுத் துணிவு மட்டுமல்லாமல் அது அபாயத் துணிவும் கூட. “பாவம் பொல்லாதது” நூலைக் கருத்தோடு வாசிக்கும் ஒருவருக்குக் கூட அத்தகைய துணிவு வராது என்று உறுதியாக நம்புகிறேன். அவிசுவாசி, விசுவாசி, மூப்பர், போதகர் என எந்தத் தகுதி வரம்புகளுமின்றி, வாசிக்கும் அனைவருக்கும் அவரவர் ஆத்மீக நிலைக்கு ஏற்பப் பிணிதீர்க்கும் “சமய சஞ்சீவி” இது. நூலை அதிகமானோர் வாசித்து அதனாலுண்டாகும் நிவாரணத்தை முழுமையாக எல்லாரும் அனுபவிக்க வேண்டும் என்பதே எனது ஆசையும் ஜெபமும்.

இத்தகைய அருமையான ஒரு நூல் தமிழில் வெளிவருவதற்கு, அதனை மொழியாக்கம் செய்வது முதல் அச்சுக்குச் சென்று வெளிவரும் வரைக்கும் உழைத்த அனைவருக்கும், பதிப்பாசிரியருக்கும் என் இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறுமொழி தருக