தகவல் சேகரிப்பு – கற்றறிதல் – எதிர்வினைகள்

சிறு வயதில் இருந்தே என் தந்தையைப் பார்த்தும், எனக்குப் பள்ளி ஆசிரியர்களாக இருந்த சில இலக்கியவாதிகளின் செல்வாக்காலும் நான் வாசிக்கும் வழக்கத்தை வளர்த்துக்கொண்டேன். அக்காலத்தில் வாசிப்பு எனக்கு இனிப்பு சாப்பிடுவது போல் இருந்து வந்தது. எத்தகைய நூல்களை வாசிக்க வேண்டும், யாருடைய நூல்களை வாசிக்க வேண்டும் என்பதையெல்லாம் நானே கற்றுக்கொண்டேன். எதைத் தள்ளிவைக்கவேண்டும் என்பதையும் அறிந்துகொண்டேன். என் வாசிப்புப் பழக்கம் என் ஆர்வங்களுக்கும், சிந்தனைக்கும் ஏற்ப என்னோடு இணைந்து வளர்ந்தது. வாசிப்பிலும் இலக்கியத்திலும் ஆர்வம் காட்டிய இரண்டு நண்பர்கள் மட்டுமே அன்றெனக்கிருந்தனர். ஒருவர் இப்போது உயிரோடில்லை. இன்னொருவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அக்காலங்களில் நூலகங்கள் எல்லா ஊர்களிலும் இருக்கவில்லை. இருப்பவற்றில் அங்கத்தவராக இணைவதும் சுலபமாக இருக்கவில்லை. இருந்தும் என் வாசிப்புத் தாகம் எல்லாத் தடைகளையும் மீறி என்னை வாசிப்பில் ஈடுபட வைத்தது. அந்த வாசிப்பே எழுதவும் கற்றுத் தந்தது. இது பற்றியெல்லாம் “சட்டையை விற்றாவது நூல்களை வாங்கு” என்ற நூலில் விளக்கியிருக்கிறேன். வாசிக்க வேண்டியதன் அவசியத்தை “இன்றியமையாத வாசிப்பு” – நவம்பர் 2015, ஆக்கத்திலும் விளக்கியிருக்கிறேன்.

இன்று அத்தகைய வாசிப்பைக் கிறிஸ்தவரல்லாதோர் மத்தியில் அதிகம் காண்கிறேன். கிறிஸ்தவர்களோடு ஒப்பிடும்போது, அவர்கள் அதிகம் வாசிக்கிறார்கள்; சிந்திக்கிறார்கள், எழுதுகிறார்கள், பகிர்ந்துகொள்கிறார்கள். இது பெரும்பாலும் கிறிஸ்தவர்களிடம் இல்லை. ஏன், பெரும்பாலான போதகர்களிடமே இல்லை. அதாவது, நான் காணக்கூடியவிதத்தில், அறிந்துகொள்கிறவிதத்தில் இல்லை. குறிப்பிட்ட சிலர் மட்டுமே அத்தகைய தீவிர வாசிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை உணர்கிறேன். இதற்கான காரணங்கள் அநேகம் இருக்கலாம். எதுவிருந்தாலும் தற்கால கிறிஸ்தவ வளர்ச்சிக்கும், எதிர்கால கிறிஸ்தவ சமுதாய வளர்ச்சிக்கும் இது நிச்சயம் உதவாது என்பது எனக்குத் தெரிகிறது. நிச்சயமாக சீர்திருத்த கிறிஸ்தவ வளர்ச்சிக்கு இது பெருந்தடை. சமுதாயத்தில் கிறிஸ்தவரல்லாதவர்கள் இன்று புத்தகக் கண்காட்சிகளைப் பெருநகரெங்கும் நடத்தி, ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்து புத்தகங்களை வாங்கிச் செல்லுகிறார்கள். ஒரு கிறிஸ்தவ புத்தகக் கண்காட்சியாவது நம்மினத்தில் நடத்தப்பட்டிருக்கிறதா? ஏனில்லை? வாசிக்கிறவர்களும் இல்லை; எழுதுகிறவர்களும் இல்லை; நூல்களும் இல்லை. அதுதான் காரணம். வெறும் உணர்ச்சிகளுக்கு மட்டும் தூபமிட்டு, உப்புச்சப்பில்லாத, சிந்திக்க இடந்தராத பிரசங்கங்களை அளித்து வரும் சராசரிப் பிரசங்கிகள் மலிந்து காணப்படும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் ஆத்துமாக்களை வாசிக்கத் தூண்டுகிற ஒரு சபையாவது, பிரசங்கியாவது உண்டா?

வாசிக்கும் நூல்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க இயலாமல் இருப்பவர்களைப் பற்றி ஒரு ஆக்கத்தில் ஜெயமோகன் எழுதுகிறார், “ஏன் யாரும் பேசுவதில்லை? ஒன்று, பேசத் தெரியவில்லை. நன்றாக இருக்கிறது, அவ்வளவாகச் சரியாகவரவில்லை, என்பதற்குமேலாக எவருக்கும் எதுவும் சொல்லத் தெரியவில்லை. ஆகவே, சும்மா இருக்கிறார்கள். அது ஓரளவு உண்மை. அத்துடன் வேறு ஏதோ ஒன்றும் உள்ளது. அது ஆரோக்கியமான மனநிலையே அல்ல. அந்த மனநிலையில் உள்ள கீழ்மையைப் பற்றி நம்மை நாமே விசாரணை செய்துகொள்ள வேண்டும்.”

சிங்கப்பூரை உலகத்தில் ஒரு சிறப்பான நாடாக மாற்றியமைத்த அந்நாட்டின் முதல் பிரதமராக இருந்த லி வான் கியூ அறிவாளி; கற்றுத்தேர்ந்திருந்த மனிதர். தன் நாடு முன்னேற வேண்டுமானால் தன் மக்கள் வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்கான வழிகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியிருந்தார். இப்படியெல்லாம் சிந்திக்கின்ற நாட்டுத் தலைவர்கள் இன்று மிகக் குறைவு. கடவுளை நம்பி வாழ்ந்திராத லி வான் கியூ வுக்கே வாசிப்பின் அருமை தெரிந்திருந்தது. கிறிஸ்து மட்டுமே தேவன் என்று நம்பி வாழ்க்கை மாற்றமடைந்தவர்களுக்கு, அதுவும் வேதத்தில் அன்றாடம் முத்துக்குளிக்காமல் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழமுடியாது என்பது தெரிந்திருக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் வாசிப்பு குப்பையில் குண்டுமணி எடுப்பதுபோல் குறுகிக் காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதை எவராவது எனக்கு எழுதி விளக்குவீர்களா?

அமெரிக்காவில் தன் ஆட்சிக்காலம் முடிந்தவுடனேயே அந்நாட்டுப் பிரசிடன்ட் தன் பெயரில் ஒரு அதிகாரபூர்வமான நூலகத்தைப் பெரும் பணச்செலவில் உருவாக்குவார். பெரும்பாலான அந்நாட்டுத் தலைவர்கள் பெயரில் அத்தகைய நூலகங்கள் காணப்படுகின்றன. அதை அவர்கள் செய்வதற்குக் காரணமென்ன தெரியுமா? தற்காலச் சந்ததியும், பின்வரப்போகும் சந்ததியும் தன் ஆட்சிக்காலக் கொள்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் அனைத்தையும் பற்றிக் கற்றுக்கொள்ளவும், ஆய்வுகளைச் செய்யவும் துணையாக இருப்பதற்காக அதைச் செய்கிறார்கள். அந்தளவுக்கு அந்நாட்டை உருவாக்கியிருப்பவர்கள் சமுதாயத்தில் வாசிப்புக்கும், சிந்திப்பதற்கும் முக்கிய இடமளித்திருப்பதாலேயே இத்தகைய நூலகங்களை உருவாக்கும் வழக்கம் உருவாகியது.

“வாசலில்லாத வீடும், வாசிப்பில்லாத வாழ்நாளும் பயனற்றவை” என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில், வேலைக்காக மட்டுமே கல்வி என்ற நடைமுறைக் கொள்கை பொதுவாக எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்திருப்பதாலேயே வாசிப்புக்கு சமுதாயத்தில் சாவு மணி அடிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். எத்தனை கிறிஸ்தவப் பெற்றோர்கள் நல்ல கிறிஸ்தவ நூல்களை வாங்கித் தங்களுடைய பிள்ளைகளை வாசிக்கச் செய்கிறார்கள்? எத்தனை வீட்டுத்தலைவர்கள் நல்ல கிறிஸ்தவ நூல்களை வாங்கி வாசித்து, மனைவியையும் வாசிக்க வைத்து வாசிப்பனுபவத்தை ஒருவரோடொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள்? இதற்கான பதிலிலேயே ஒரு கிறிஸ்தவ சபையின் தரத்தை அறிந்துகொள்ளலாம். வாசிப்பும், வாசிப்புக்கேற்ற சிந்தனை வளர்ச்சியும் இல்லாத சமுதாயம் தனக்கு அழிவை மட்டுமே தேடிக்கொள்ளும்; அதுபோல்தான் கிறிஸ்தவ சமுதாயமும் தன்னை அழித்துக்கொள்ளும்.

தெரிந்துகொள்ளுதலும், கற்றறிதலும்

நம்முடைய கல்வி முறை எதையும் தெரிந்துகொள்ளுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. தெரிந்துகொள்ளுவதற்கும், கற்றுக்கொள்ளுவதற்கும் இடையில் பெரும் வேறுபாடுண்டு. ஒரு காரின் இயந்திரத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்க முடியும்; அதனால் ஒருவன் மெக்கானிக் ஆகிவிட முடியாது. இதில் என்ன வேறுபாடு? முதலாவது, கார் இயந்திரத்தைப் பற்றிய தகவல் சேகரிப்பு மட்டுமே. இதை எவரும் செய்துவிட முடியும். வெறும் தகவல் சேகரிப்பால் ஒருவர் மெக்கானிக் ஆகமுடியாது. இந்தத் தகவல் சேகரிப்பே இன்று கல்வி என்ற பெயரில் பரவலாக இருந்து வருகிறது. தகவல் சேகரிப்பவர்கள் அவற்றை ஒப்புவிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் அத்தகவல்களைப் பற்றிச் சுயமாக சிந்திக்க மாட்டார்கள். தகவல் சேகரிப்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் சிந்திப்பதில் இருப்பதில்லை. தவறான நம் கல்வி முறையால் சமுதாயத்தில் இது பழக்கமாக ஊறிவிட்டிருக்கிறது. சேகரித்த தகவல்களைத்தான் பரீட்சை பேப்பரில் கொட்டித் தீர்த்து அதிக மார்க்கு வாங்க மாணவர் பட்டாளம் இன்று அலைந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கல்வி முறையே கிறிஸ்தவர்களைக் கற்றறிந்தவர்களாகவும், சிந்திக்கிறவர்களாகவும் இல்லாமல் செய்திருக்கிறது என்பது என் கருத்து. கல்லூரிகள் பக்கம் கால் வைக்காதவர்கள்கூட சிந்தனாவாதிகளாக மாறியிருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்கள் தகவல் சேகரிப்பதில் நாட்டம் காட்டாமல் எதையும் கூர்ந்து அவதானித்துக் கேள்விகள் கேட்டுக் கற்றுக்கொள்ளுவதைப் பழக்கமாகக் கொண்டிருந்ததால்தான். ஆரம்பத்தில் நீச்சல் பழக ஆரம்பிக்கிறவர்களுக்கு தண்ணீரில் மிதப்பது மிகக் கஷ்டமாக இருக்கும். அதற்குப் பல நாட்களாகும். ஏன் தெரியுமா? மிதப்பதைப் பற்றிய தகவல் சேகரிப்பதில் மனம் ஈடுபட்டு வருவதால் மிதக்கும் முயற்சியில் அது ஈடுபடுவதில்லை. உடலை இலகுவாக்கி, மனத்தைக் கட்டுப்படுத்தி மிதக்க முயற்சிக்கிறபோது மிதப்பது இலகுவாகிவிடுகிறது. பயிற்சியும், அனுபவமும் அதைச் செய்ய உதவுகிறது. இதுதான் தகவல்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பதற்கும், கற்றுக்கொள்ளுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு. பள்ளிக்கூடம் போகாதவர்கள்கூட சிந்தனாவாதிகளாக மாற முடிந்திருப்பதற்கு இதுவே காரணம்.

கற்றறிதலுக்கு சோம்பேறித்தனம் உதவாது. தகவல்களைச் சேகரிக்கிறவர்கள் சோம்பேறிகளாகத்தான் இருப்பார்கள். அவர்கள் ஆற அமர்ந்து சிந்திப்பதை விரும்பமாட்டார்கள். அவர்களுக்குக் கற்றுக்கொள்ளுவதற்குப் பொறுமை இருக்காது. இணையத்தை நாடி அதிக தகவல்களைக் குறைந்த நேரத்தில் சேகரிப்பார்கள்; பெரும்பாலும், முகநூல், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், யூடியூப் குறுஞ்செய்திகளில் தகவல்களுக்கு தவமிருப்பவர்களாக இருப்பார்கள். அவ்வாறு தெரிந்துகொள்வதைக் கற்றதற்கு அடையாளமாகக் கருதுவார்கள். இவர்களுடைய குட்டு எங்கு உடையும் தெரியுமா? அவர்கள் தெரிந்துவைத்திருப்பவற்றில் இருந்து சில கேள்விகளைக் கேட்டுப் பாருங்கள். தெரிந்து வைத்திருப்பதை மட்டுமே அவர்கள் பதில்களாக ஒப்புவிப்பார்கள். ஏன்? அவர்கள் எதைப்பற்றியும் அமைதியாக எப்போதுமே சிந்தித்ததில்லை.

இணையமும், வாசிப்பும்

இணையம் வசதியானது; அநேக நன்மைகளைத் தருகிறது. இருந்தபோதும் இணையக் கல்வி ஆபத்தானது என்று எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். இணையம் கத்தி போன்றது. கத்தியைப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் அது நமக்கு ஆபத்தை விளைவிக்கும். கத்தியைக் கவனமாக ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு அதுதான் காரணம். இணையத்தைப் பயன்படுத்தும் பக்குவமில்லாதவர்கள் தங்களுக்குப் பங்கம் விளைவித்துக்கொள்ளும் ஆபத்திருக்கிறது. யூடியூபில் மட்டுமே எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுவேன், வாசிக்க மாட்டேன் என்று ஒருவர் அடாப்பிடியாக இருந்தார். அது தவறு என்று அவருக்கு அடிக்கடி அறிவுறுத்தியிருக்கிறேன். ஆனால், அவர் கேட்பதில்லை. மனத்தை ஒருமுகப்படுத்தி சில நூறு பக்கங்களுள்ள நூல்களை வாசிப்பதற்கு சோம்பேறித்தனம் காரணம். உழைக்காமலும் சிந்திக்காமலும் யூடியூபில் இலகுவாக எதையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுவதையே மனம் விரும்புகிறது. யூடியூபைப் பயன்படுத்தும் பக்குவமில்லாததால் கண்டதையும் கேட்டுத் தவறான முடிவுகளுக்கு அவர் வந்துவிடுகிறார். யூடியூபாகிய கத்தியை அவருக்குப் பயன்படுத்தத் தெரியவில்லை.

பத்து இருபது நிமிட யூடியூப் செய்தியால் எதையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள முடியாது. தெரிந்துகொள்ள மட்டுமே அது துணைபோகும். முழுமையான அறிவைப் பெற அது உதவாது. முழுமையான அறிவைத் தரும் நோக்கமில்லாமல், உணர்ச்சிகளை மட்டுமே பாதித்து நாம் ஒரு பொருளை வாங்க வைத்துவிட வேண்டுமென்பதற்காகத்தான் பொருள் விற்பனையாளர்கள் மூன்று நிமிடங்களுக்குக் குறைவான விளம்பரங்களைத் தொலைக்காட்சியில் கொடுக்கிறார்கள். அது அறிவைக் கொடுக்காது; நம் உணர்வுகளை மட்டுமே பாதிக்கும். முழுமையான அறிவு இல்லாமல் உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டு ஒரு பொருளை வாங்குவதால் ஆபத்து இருக்கிறது. அழகான அட்டைப்படம் இருக்கிறது என்பதால் ஒரு நூல் அருமையானதாகிவிடுமா? சோம்பேறித்தனம் நம்மை யூடியூப்வாதிகளாக மாற்றியிருக்கிறது. அரைகுறை அறிவு அடுப்பெரிக்க உதவாதென்பார்கள். அதுதான் வெறும் தகவல் சேகரிப்பால் நேருகிறது.

கற்றுக்கொள்வதற்கு நேரத்தை ஒதுக்கி, நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, மனதை ஒருநிலைப்படுத்தி வாசிக்க ஆரம்பிக்கவேண்டும். பத்துப் பக்கங்களை வாசித்தாலும் அது சிந்தனைபூர்வமான வாசிப்பாக இருக்கவேண்டும். என்ன வாசித்திருக்கிறோம் என்பதை மனதில் அலசிப்பார்த்து அது எதைக் கற்றுத்தந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். குறிப்பெடுத்தும் வைத்துக்கொள்ளலாம். இது நூலை வாசித்து முடியும்வரை தொடரவேண்டும். நூலை வாசித்து முடித்த பிறகு அதன் வாதத்தை, அது முன்வைக்கும் உண்மை சரியானதுதானா, ஆசிரியர் எக்கோணத்தில் அதை அணுகி ஆதாரங்களோடு நம்முன் வைக்கிறார் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்; மாடு தன் வாய்க்குள் சேகரித்து வைத்திருக்கும் வைக்கோலை அசைபோடுவதுபோல். ஆசிரியர் முன் வைக்கும் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றால் எதனால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது என்பதற்கான காரணங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றால், அதற்கான நம்பத்தகுந்த காரணங்களை நாம் முன்வைக்கக் கூடியதாக இருக்கவேண்டும். எந்த நூலையும் அலசி ஆராய்ந்து வாசித்துக் கற்கவேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அது முழுமையான வாசிப்பாகாது.

நல்ல நூல் வாசிப்பு ஒரு தடவையோடு நின்றுபோகாது. இரண்டாம் தடவை வாசிக்கும்போதே அதிக விளக்கம் நமக்குக் கிடைக்கும். முழுமையான வாசிப்புக்கான அடையாளம் நூலைப்பற்றிக் கருத்தோடு இன்னொருவரோடு பகிர்ந்துகொள்ளும்போதுதான் தெரிய வரும். ஒரே விஷயத்தைப் பற்றிய இரு நூல்களை வாசித்துவிட்டு ஒருவரோடு கடந்த சில நாட்களாக விவாதித்து வருகிறேன்; பல கோணங்களில் நூலின் பொருளை, ஆசிரியரின் நோக்கத்தை அலசி வருகிறோம். அது நூலை எந்தளவுக்குப் புரிந்துகொண்டிருக்கிறோம், சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள உதவுகிறது.

பெரும்பாலானோர் முதல் வாசிப்பை முடித்துவிட்டு சராசரியாக நூலிலிருப்பதை ஒப்புவிப்பவர்களாக இருப்பார்கள். அதிலிருந்து அவர்கள் சிந்தித்து வாசிக்கவில்லை என்பதை அறிந்துகொள்ளலாம். இவர்களால் ஆக்கபூர்வமான கருத்துத்தெரிவிக்க முடியாது. ஒரு நூலாசிரியரின் எழுத்தை நாம் பலகோணங்களில் ஆராயமுடியும். அதைத்தான் வாசகன் செய்யவேண்டும். அறிவுபூர்வமாக வாசிக்கிறவர்கள் எப்போதும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சிந்தித்து வாசிப்பார்கள். வாசிக்கும்போதே நூலாசிரியரோடு மனதில் தர்க்கத்தில் ஈடுபடுவார்கள். அறிவுபூர்வமான வாசகன் உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டு நூலைப்பற்றிய அரைகுறை முடிவுகளுக்கு வந்துவிட மாட்டான். நூலின் முடிவுகளோடு கருத்துவேறுபாடு இருந்தாலும், அது அறிவுபூர்வமானதாக இருப்பதில் நல்ல வாசகன் கவனம் செலுத்துவான்.

வாசகன் வாசிப்பின்போது நூலாசிரியனோடு பயணிக்க வேண்டும். நூலாசிரியனின் போக்கையும், அவன் விளக்கமுனையும் கருத்தையும் உய்த்துணர முயலவேண்டும். ஒருவருடைய வாசிப்பு நூலாசிரியனின் நோக்கத்தோடு இணையும்போதே அவன் நூலையும் நூலாசிரியனையும் புரிந்துகொள்கிறான். வாசகன் நூலோடு ஒன்றிணைந்து பின்னிப் பிணைந்து பயணிக்கும்போதே வாசிப்பில் இன்பம் காண்கிறான். நூலோடு ஒன்றிணையாத வாசகன் அர்த்தமற்ற வாசிப்பில் ஈடுபட்டவனாயிருப்பான். கடமைக்காக வாசிக்கிறவன் நல்ல வாசகன் அல்ல. தரமான வாசிப்பு கருத்தோடு வாசிப்பவனிடமே காணப்படும்.

சமீபத்தில் ஒரு சிறு நூலை வாசித்தேன். அதை எழுதிய ஜெப்ரி தோமஸின் ஏனைய சில நூல்களை வாசித்திருக்கிறேன். இருந்தபோதும் இந்த நூலின் எழுத்து நடை விசேஷமாக இருந்தது. அதில் எளிமை மட்டுமல்லாது அருவியோடும் அழகும் இருந்தது. நூலில் அந்த அம்சங்களை என்னால் கவனிக்காமல் இருக்கமுடியவில்லை. நிச்சயம் ஜெப்ரி தோமஸின் எழுத்து நடை இந்நூலில் இன்னொரு படி வளர்ந்திருந்தது. சொல்ல வந்த சத்தியமும் தெளிவாகவும், நெஞ்சைத் தொடுவதாகவும் இருந்தது. அதை வாசித்தபோது எழுத்தோடு நான் கலந்து விட்டதாக உணர்ந்தேன். ஆசிரியரின் உணர்வுகளோடு என்னால் உறவாட முடிந்தது. என்னைப் பாதித்த அந்த நூலை சிலருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். நல்ல நூல்கள் நல்ல நண்பர்களைப்போல. அதேபோல்தான் நமக்கு நன்கு அறிமுகமானவர்களின் எழுத்தும். அல்பர்ட் என். மார்டினின் போதக இறையியல் நூல்களை வாசிக்கும்போதும் இதே அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன். ஆசிரியரோடு என்னால் இணைந்து பயணிக்க முடிந்திருக்கிறது.

நூல்கள் தரமானதாகவும், அருமையானதாகவும் இருந்தும் வாசகனின் தரமற்ற வாசிப்பால் அவன் பயனடையாமல் போகலாம். அது நூலின் தவறல்ல; நூலாசிரியனின் தவறுமல்ல. எல்லாவகை நூல்களையும் வாசகனின் தரத்திற்கு எழுதிவிட முடியாது. அப்படிச் செய்வதும் நூலாசிரியனின் கடமையல்ல. இது கல்லூரிப்படிப்பை மூன்றாம் வகுப்பு மாணவனிடம் கொண்டு சேர்க்கும் அறிவற்ற, பயனற்ற செயல். முறைப்படுத்தப்பட்ட இறையியலை சாதாரண வாசகன் புரிந்துகொள்ளும்படி எழுதுவது அவ்வகை நூலுக்குப் பொருத்தமற்றது. நூலுக்கேற்ற ஆய்வும், எழுத்துநடையும், விளக்கமும் அதிலிருக்க வேண்டும். வாசிக்கும் வாசகன் அதனளவுக்கு உயர்ந்து தரமான வாசிப்பில் ஈடுபட வேண்டும். வாசகன் இருக்குமிடத்துக்கு எல்லா வகை நூல்களும் இறங்கி வரவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதற்கு நூல்களை எழுதாமல் இருந்துவிடுவதே மேலானது. இலக்கிய நூலை மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு எவரும் எழுதுவதில்லை. இலக்கிய ஞானசூனியங்களினால் ஒருபோதும் இலக்கியத்தை இரசிக்கவும் முடியாது. இலக்கியமிருக்கும் இடத்திற்கு வாசகன் படியேற வேண்டும்; வாசிப்பில் வளர வேண்டும்; முதிர்ச்சியடைய வேண்டும்.

நூல்கள் பலவகைப்பட்டவை; பல்வேறு தளங்களையும், கருத்தாழத்தையும் கொண்டவை. சாதாரணமாக எல்லோரும் வாசிக்கும் வகையில் எழுதப்பட்ட எளிமையான நடையுள்ள அம்புலிமாமா போன்ற நூல்கள் இருக்கின்றன. அதேவேளை, பொறுமையோடு வாசிக்கவேண்டிய இறையியல் ஆழமும், ஆய்வும், நுணுக்கமான பதங்களும், வார்த்தைப் பிரயோகங்களும் நிறைந்த நூல்களும் இருக்கின்றன. வாசகன் ஒரேவகை நூல்களை மட்டும் வாசிப்பதில் நின்றுவிடக்கூடாது. பல்வேறுவகை நூல்களையும் கற்றுத்தேறுமளவுக்கு அவன் வாசிப்பில் ஈடுபாட்டுடன் ஈடுபட வேண்டும். காலம் போகப்போக அவனுக்கே தன் வளர்ச்சி தெரியவரும். வாசிப்பில் தேர்ச்சியடைய வேண்டும். வாசிப்பு வளரும்போது வாசகனும் வளருகிறான். சோம்பேறிகளும், வாசிப்பு ஆர்வமில்லாதவர்களுமே ஆழமான போதனைகளைத் தராத, புரிந்துகொள்ள இலகுவான நூல்களை மட்டும் நாடுவார்கள். அவர்கள் தரமான வாசகர்கள் அல்ல. இவர்களே தியானச் செய்திகளை மட்டும் சுமந்து வரும் அன்றாட அப்பம் போன்றவற்றில் தஞ்சமடைந்திருப்பார்கள். இவர்களுக்குக் கற்றறிவதில் ஈடுபாடு இல்லை. அமாநுஷ்ய குறுஞ்செய்திகளை மட்டும் நாடி மூளைக்கு ஓய்வு கொடுத்து வாழ்கிறவர்கள் இவர்கள்.

எழுதப் படிக்கத் தெரியாமல், சாதாரண வார்த்தைகளை மட்டுமே பேச்சில் பயன்படுத்தக்கூடிய நிலைமையில், பெருங்கல்வி எதையும் பெற்றுக்கொள்ள வசதியில்லாமல் இருந்த பியூரிட்டனான ஜோன் பனியன் இரண்டே கிறிஸ்தவ நூல்களை மட்டுமே கிறிஸ்தவரான புதிதில் கஷ்டப்பட்டு வாசித்தார். கர்த்தரின் கிருபையால் அவர் எழுதித் தந்திருக்கும் நூல்களின் இலக்கிய நடையையும், வார்த்தைப் பிரயோகங்களையும் சிந்தித்துப் பாருங்கள். இது அவரால் எப்படி முடிந்தது? கடுமையான, தொடர்ச்சியான வாசிப்பு மட்டுமே அவர் அதை அடையச் செய்தது. வாசிப்பு ஒரு பயிற்சி; உடற்பயிற்சி போன்றது. உடற்பயிற்சி ஒரு நாளோடு முடிந்துவிடுவதில்லை. ஒரு வாரத்தில் பல தடவைகள் அதில் ஈடுபடுவார்கள். பல்வேறு வகைப் பயிற்சியில் ஈடுபடுவார்கள். புதியவைகளைக் கற்றுக்கொள்ளுவார்கள். அதில் உழைப்பு இருக்கிறது; வியர்வை சிந்தவேண்டியிருக்கிறது. எத்தனை வருடம் சென்றாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டியிருக்கிறது. இதில் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு அது தொல்லையாகத் தெரியாது. அதுவே இன்பமானதாகிவிடுகிறது. இதுபோன்றதே வாசிப்பும். உடற்பயிற்சி உடல் நலத்துக்கு அவசியமானது; வாசிப்பு சிந்திப்பதற்கும், மனவளர்ச்சிக்கும் இன்றியமையாதது.

தர்க்கரீதியிலான விமர்சனமும், எதிர்வினையும்

பொதுவாக அரைகுறை வாசிப்பில் ஈடுபடுபவர்களே ஒரு நூலைப்பற்றி அறிவற்ற கருத்துத்தெரிவிப்பார்கள். அவர்களால் சிந்தனைபூர்வமாக, அறிவார்ந்த வாதங்களை முன்வைக்க முடியாது. உணர்ச்சிகள் ததும்ப அரசியல்கட்சிக்காரர்கள் போல் அலறத்தான் முடியும். சில வருடங்களுக்கு முன் தமிழகத்தில் பெருமாள்முருகன் என்பவர் எழுதிய ஒரு நாவலை இந்தவிதத்தில்தான் குறைகண்டு அவரோடு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கொதித்தெழும் உணர்ச்சிகளுக்கு அவர்கள் அடிமைகளாகி சிந்தனையை ஓரங்கட்டிவிடுவதால் இவ்வாறு நடக்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்பு வெறியினால் வருகின்ற ஆபத்து. இந்த விஷயத்தில் இந்திய உயர்நீதிமன்றம் பெருமாள்முருகன் பக்கம் நின்று அவர் சார்பாகத் தீர்ப்புக்கூறியது. இதுதான் உணர்ச்சிப் பிழம்புக்கு அடிமையாகிவிடும் அரைகுறை வாசகனுக்கும், சிந்தித்து வாசிப்பவர்களுக்கும் இடையில் காணப்படும் வேறுபாடு.

கிறிஸ்தவர்களும் முட்டாள்த்தனமாக மேலே விளக்கியவிதத்தில் நடந்துகொள்வதுதான் வெட்கத்துக்குரியது. இப்படி நடந்துகொண்டால் அறிவுபூர்வமான விமர்சனத்தோடு எதையும் எழுத முடியாது. கிறிஸ்தவ நூல்கள் சத்தியத்தை வெளிப்படையாக ஆதாரங்களோடு விளக்குவனவாக மட்டுமில்லாமல், அசத்தியத்தை ஆதாரங்களோடு தோலுரித்துக் காட்டுபவையாகவும் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களிடம் காண்கிறோம். இயேசு தன் பிரசங்க ஊழியம் முழுவதும் இதைச் செய்திருக்கிறார். யாரையும், எதையும் குறைகூறக்கூடாது என்ற மிகத்தவறான, ஆரோக்கியமற்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டிருக்கின்ற கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கிறிஸ்துவுக்கு மகிமையளிக்கும் வகையில் வாழமுடியாது. அன்னப் பறவையைப்போலப் பாலைத் தண்ணீரிலிருந்து பிரித்துப் பார்க்கும் பக்குவமில்லாத அவர்கள் சத்தியத்தையும், அசத்தியத்தையும் ஒன்றாக ஏற்று தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பங்கமேற்படுத்திக் கொள்ளுகிறார்கள். கிறிஸ்தவர்கள் சத்தியத்தை மட்டுமே விசுவாசித்து வாழும் வைராக்கியம் கொண்டவர்களாக இருந்தால், அசத்தியத்தையும், அதைப் பரப்புபவர்களையும் அடையாளம் கண்டு அவற்றிற்கு ஒதுங்கி நிற்கும் பக்குவத்தை அடைய வேண்டும்.

ஆங்கிலத்தில், கிறிஸ்தவக் கோட்பாடுகள் வரலாற்றில் வளர்ந்த விதத்தை விளக்கி லூயிஸ் பேர்கோவ் ஒரு நூலை எழுதியிருக்கிறார் (The History of Christian Doctrines). முதலாம் நூற்றாண்டில் இருந்து கிறிஸ்தவ வேத சத்தியங்களுக்கு எதிராகத் தோன்றிய அசத்தியப் போதனைகளை அக்குவேறாக விளக்கி அவற்றை திருச்சபை எவ்வாறு எதிர்கொண்டது என்பதை இந்நூல் முன்வைக்கிறது. சத்தியத்திற்கு எதிரான கருத்துக்களை விமர்சிக்கிறது இந்நூல். அதை எப்படித் தவறு என்று சொல்லமுடியும்? எதிர்மறையாக அசத்தியங்களுக்கு எதிர்வினையளித்து எழுதப்பட்டிருக்கும் இந்நூல் மேலைநாட்டு இறையியல் கல்லூரிகளில் பாடநூலாக வைக்கப்பட்டிருக்கிறது. சத்தியத்தை சத்தியமாகக் கற்றுத்தேர்வதற்கு இந்நூல் துணைபோகிறது. இறையியல் மாணவன் அசத்தியம் எது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதாலேயே இந்நூல் பாடநூலாக இருக்கிறது.

எதிர்வினை என்பதால் அது தவறானது, மோசமானது என்று கூச்சலிடக்கூடாது. அது ஆதாரபூர்வமானதாக, சிந்தனைபூர்வமானதாக, அறிவார்ந்ததாக இருக்கிறதா? என்றே ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்தவிதமாக இறையியல் எதிர்வினையளித்து எழுதப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கணக்கான ஆங்கில நூல்கள் இருக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் இதற்காக யாரும் கொதித்துக் கல்லைக் கையில் எடுப்பதில்லை. ஏன் தெரியுமா? அவர்கள் சிந்திக்கிறவர்களாக இருக்கிறார்கள்; எதையும் அலசி ஆராய்கிறார்கள். அரிசியில் கல்லிருக்கக்கூடாது என்பது அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டம்; அத்தத்துவத்தை நாம் அரிசிக்கு மட்டுமே ஒதுக்கியிருக்கிறோம். மேற்கத்திய நாடுகளில் நூல்களை எழுதுகிறவர்கள் விமர்சனங்களையும், கருத்துரைகளையும் எதிர்பார்க்கிறார்கள். தரமான இலக்கிய விமர்சனங்கள் இலக்கிய வளர்ச்சிக்கு அவசியமானவை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். விமர்சனம் எழுதுகிறவர்கள் முதிர்ச்சியுள்ளவர்களாகக் கவனத்தோடு அதை எழுதுவார்கள். நல்ல விமர்சகர்களுடைய விமர்சனம் பேருதவி செய்யும். சில வருடங்களுக்கு முன் பேனர் ஆவ் டுருத் பதிப்பகம் தேர்ந்தெடுத்த கற்றறிந்த சிலரைப் பயன்படுத்தி அவர்கள் வாழ்க்கையில் துணைபோன, அவர்களைப் பாதித்திருக்கும் நூலொன்றைப் பற்றி விமர்சித்து எழுதும்படிக் கேட்டு, அவற்றைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருந்தது. இந்த நூல் ஆக்கபூர்வமான விமர்சன நூல். தான் வாசித்த ஆயிரக்கணக்கான நூல்களுக்கான விமர்சனத்தைத் தொகுத்து சார்ள்ஸ் ஸ்பர்ஜன் ஒரு நூலை, “விளக்கவுரைகளுக்கான விளக்கம்” என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தார். விமர்சனங்களினதும், எதிர்வினைகளினதும் அவசியத்தை உணர்ந்திருப்பதாலேயே இவர்கள் இதைச் செய்தார்கள். இன்றும்கூட முடிந்தவரை ஒரு ஆங்கில நூல் பற்றிய தகுந்த விமர்சனத்தை (Review) வாசிக்காமல் அந்த நூலை நான் வாங்குவதில்லை.

சீர்திருத்த கிறிஸ்தவரான பிரான்ஸிஸ் சேபர் (Francis A. Schaeffer) காரணகாரியங்களோடு சிந்திப்பதன் அவசியத்தைச் சுட்டி ஒரு நூலை 1968ல் எழுதியிருந்தார். அது ஒரு சிறு நூல்தான். இருந்தபோதும் மிக அருமையானது. உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்டு சிந்திக்காமல் இருந்துவிடுகின்ற தன்மை 20ம் நூற்றாண்டுச் சமுதாயத்தில் தலைதூக்குவதை உணர்ந்தே அந்நூலை அவர் எழுதினார். அந்நூலுக்குப் பெயர், Escape from Reason. இன்றைய பின்நவீனத்துவ சமுதாயத்தில் இந்நூல் வாசிக்கப்பட வேண்டியது. காரணகாரியங்களோடு சிந்தித்து முடிவெடுப்பதை நிராகரிக்கிறது பின்நவீனத்துவம். இந்தப் பின்நவீனத்துவக் கூவத்தில் போராடி நீச்சலடித்து கிறிஸ்தவ சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க வேண்டியது நம் கடமையாக இருக்கிறது. சிந்திக்க மறுப்பவர்களால் அது முடியாது. அவர்களால் கிறிஸ்தவத்திற்கு எந்த நன்மையுமில்லை.

விசுவாச வாதநிலைநாட்டல் (Apologetics)

இறையியலில் சத்தியத்திற்காகக் காரணகாரியங்களோடு வாதிடுதல் (Apologetics) என்ற ஒரு பாடம் இருக்கிறது. இதை Defending the faith (விசுவாசத்தைப் பாதுகாத்தல்) என்று எழுத்துபூர்வமாக விளக்கலாம். இதன் பணி சத்தியத்தைப் பிரித்துக்காட்டி அதை வாதத்தினால் நிலைநிறுத்துவதுதான். இதை “விசுவாச வாதநிலைநாட்டல்” என்று கூறலாம். விசுவாச அல்லது சத்திய வாதநிலைநாட்டியே அப்போலஜிஸ்ட். கோர்டன் கிளார்க், கோர்னேலியஸ் வென் டில் ஆகியோர் சிறந்த சீர்திருத்த அப்போலஜிஸ்ட்டுகள்; விசுவாச வாதநிலைநாட்டிகள். பவுல் அப்போஸ்தலன் இதையே அரசன் அகிரிப்பா முன் செய்தார் (அப்போஸ்தலர் 26). அது ஒரு அப்போலஜெட்டிக்கள் பிரசங்கம். பவுலின் நிருபங்களில் பல பகுதிகளில் அவருடைய சத்திய வாதநிலைநாட்டலைக் கவனிக்கலாம்.

பேதுரு பெந்தகொஸ்தே தினத்தில் செய்த பிரசங்கமும் அவ்வகையில்தான் அமைந்திருந்தது. இயேசுவின் மலைப்பிரசங்கம் அருமையான அப்போலஜெட்டிக்கள் பிரசங்கம். பரிசேய நீதியைவிட கிறிஸ்தவர்களின் நீதி மேலானதாக இருக்கவேண்டும் என்பதே இயேசுவின் மலைப்பிரசங்கப் போதனை.

ஜெப்ரி ஜொன்சன் என்பவர் எழுதிய The Absurdity of Unbelief எனும் நூல் என் கையில் இருக்கிறது. இந்நூலில் ஜொன்சன் அவிசுவாசம் எந்தெந்தக் கோணத்திலெல்லாம் இந்த உலகத்தில் பல்வேறு பெயர்களைச் சூட்டிக்கொண்டு சத்தியத்துக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை விளக்கி அவை ஒவ்வொன்றையும் சத்தியத்தின் அடிப்படையில் தகர்க்கிறார். இந்த நூலை என்ன செய்வது? அறிவற்றவர்களே இந்த நூலை எரிக்க முனைவார்கள்; நூலாசிரியரை வைய ஆரம்பிப்பார்கள். இத்தகைய தர்க்கமுறை சமுதாய வளர்ச்சிக்கு அவசியமென்பதை மேற்கத்திய சமுதாயம் அறிந்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனால்தான் கிறிஸ்தவமும் அத்தகைய அறிவுபூர்வமான தர்க்கத்தைப் பயன்படுத்தி அசத்தியத்தை எதிர்க்கிறது. சமுதாயத்தில் நிகழாத, சமுதாயம் ஏற்றுக்கொள்ளாததொன்றை ஜொன்சன் செய்யவில்லை. அறிவார்ந்த சமுதாயம் தர்க்கரீதியிலான, வரம்புமீறாத எதிர்வினையின் அவசியத்தை உணர்ந்திருக்கிறது.

கிறிஸ்தவத்தை எதிர்த்து “உடைகிறது இந்தியா” என்ற ஒரு நூலை ராஜீவ் மல்கோத்திராவும், அரவிந்தன் நீலகண்டனும் வெளியிட்டபோது அதை நான் திருமறைத்தீபத்தில் விமர்சனம் செய்தேன். விமர்சனம் எந்தவிதமான காழ்ப்புணர்வினாலும் எழுதப்பட்டதல்ல. அந்த நூலின் ஆதாரமற்ற, வரலாற்றுக்குப் புறம்பான, அறிவுபூர்வமானதாக இல்லாத அம்சங்களை விளக்கி கிறிஸ்தவத்திற்காகச் சாட்சியளிக்கும் ஆரோக்கியமான பணியையே என் எதிர்வினை செய்தது. அது அவசியமானது. எழுதியவர்கள் மேல் எனக்குத் தனிப்பட்டவிதத்தில் எந்தக் கருத்தோ, காழ்ப்புணர்வோ இல்லை. இதையே நான் ஜெயமோகனின் “சிலுவையின் பார்வையில்” என்ற நூலை விமர்சித்தபோதும் செய்திருந்தேன். அது, எது மெய்யான வேதகிறிஸ்தவம் என்பதை விளக்குவதற்காக எழுதப்பட்டது. இவை இரண்டுமே சத்தியப் பாதுகாவல் முறையிலான எதிர்வினைகள்; விசுவாச வாதநிலைநாட்டல் ஆக்கங்கள் (Apologetic writings). என் புதிய நூலான “தோமா கிறிஸ்தவம்” இந்தவகையிலேயே தர்க்கரீதியில் எழுதப்பட்டிருக்கிறது. இதுபோல் பல ஆக்கங்களுக்கு ஆரோக்கியமான விமர்சனத்தை இந்த இதழில் ஆரம்பத்திலிருந்தே தந்திருக்கிறேன். பெந்தகொஸ்தே பரவசக் குழுக்கள் பற்றியும், வில்லியம் பார்க்கிளே பற்றியும், சார்ள்ஸ் பினி பற்றியும், பில்லிகிரெகம் பற்றியும், ஜோர்ஜ் முல்லர் பற்றியும், ஏமி கார்மைக்கள் பற்றியும், ஜே.ஐ. பெக்கர் பற்றியும், ஏன் நான் மதிக்கின்ற மார்டின் லொயிட் ஜோன்ஸ் பற்றியும் ஆரோக்கியமான விமர்சனங்களை வெளியிட்டிருக்கிறேன். கத்தோலிக்க மதத்தை விமர்சனம் செய்து நான் எழுதியிருந்த ஆக்கத்தை ஒரு சிலர் வலைதளத்தில் வாசித்து இன்றும் ஆக்ரோஷமாக எழுதுவார்கள். அந்த ஆக்கத்தை வாசித்துப் பார்த்து அதில் அப்படி என்னதான் கீழ்த்தரமாக எதையாவது எழுதிவிட்டேன்? என்று சிந்தித்திருக்கிறேன். அந்தவிதத்தில் எதையும் நான் எழுதவில்லை. சீர்திருத்த கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் கத்தோலிக்க மதம் கிறிஸ்தவமல்ல என்பதைக் காரணகாரியங்களோடு விமர்சித்து விளக்கியிருக்கிறேன். அதை முதிர்ந்த இலக்கியத் தரத்தோடு விமர்சனம் செய்து அந்த ஆக்கத்தில் எழுப்பப்பட்டிருக்கும் உண்மைகள் தவறானவை என்று நிரூபிக்கும் ஆற்றல் இந்தச் சிலருக்கு இல்லை; அவர்களால் உணர்ச்சிவசப்பட மட்டுமே முடிகிறது. இது முதிர்ச்சிக்கு அடையாளமல்ல.

எதிர்வினை இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் ஜனநாயக நாடுகளில் எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் இருக்கின்றன. அவர்களுடைய பணி ஆதாரபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் வாதிட்டு அரசைக் கணக்குக்கொடுத்து பொறுப்போடு நிர்வாகம் செய்யுமாறு பார்த்துக்கொள்ளுவது மட்டுமே. பிரச்சனை என்னவென்றால் சுயநலத்தோடு எதிர்க்கட்சிகள் தங்கள் பொறுப்பை அறிவற்றவிதத்தில் செய்வதுதான். எதிர்க்கட்சி என்றாலே எல்லாவற்றையும் எதிர்ப்பது மட்டுமே எங்கள் கடமை என்று அவர்கள் நடந்துகொள்கிறார்கள். இந்தச் சிந்தனையே நம் சமுதாயத்தில் பரவி பெரும்பாலானோரை உணர்ச்சிவசப்பட்டு எதையும் எதிர்க்கிறவர்களாக மட்டும் மாற்றியிருக்கிறது. சிங்கப்பூரின் தற்போதைய பிரதமர் லீ சின் லுங் (Lee Hsien Loong) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பணி பற்றி ஒருமுறை அருமையாக விளக்கினார். “நாங்கள் செய்வதை மட்டுமே எதிர்த்துக்கொண்டிருக்காதீர்கள். நாங்கள் செய்வதற்கு மேலாக நல்ல திட்டம் உங்களிடம் இருந்தால் உடனடியாகக் காட்டுங்கள். அதை வரவேற்று அதன்படி செய்வோம். அதுவே உங்கள் பணியாக இருக்கவேண்டும்” என்றார் லீ. ஒரு கிறிஸ்தவன் சிந்திக்காமல் எதையும் எதிர்ப்பவனாக இருக்கக்கூடாது. அறிவுக்குப் புறம்பான விதத்தில் வாதிடுவதும், உணர்ச்சிவேகத்தோடு எதிர்ப்பதும் குண்டர்கள் செய்யும் செயல். அதாவது, சிந்தனையை அடகுவைத்துவிட்டுச் செயல்படுகிறவர்களின் செயல். கிறிஸ்தவத்தில் குண்டர்களுக்கு இடமில்லை.

நம்மவர்களில் பெரும்பாலானோருக்கு வாசிப்பிலும், எதிர்வினைகளை சந்திப்பதிலும் வளர்ச்சியோ, முதிர்ச்சியோ இல்லை. நம் சமுதாயமே அந்நிலைமையில்தான் தொடருகிறது. அதற்குக் கல்வி மட்டும் காரணமல்ல; சமுதாய சூழ்நிலையும், வளர்ப்பு முறையும் காரணங்களாக இருக்கின்றன. எதற்கு எதிர்க்கிறோம் என்ற உணர்வேயில்லாது எந்த விமர்சனத்தையும் சந்திக்கிறவர்களே நம்மத்தியில் அநேகம். கிராமங்களில் சாவு வீட்டில் வயதான பெண்கள் கூடி ஒப்பாரி வைப்பார்கள். அவர்கள் செத்தவருக்கு சொந்தக்காரர்கள் அல்ல; பணத்திற்காக ஒப்பாரி வைப்பவர்கள். பிணத்தைக் கண்டாலே அவர்களுக்கு அழுகை பொத்துக்கொண்டு வரும். அதுபோல்தான் நம்மவர்களில் சிலர் விமர்சனங்களைச் சந்திக்கிறார்கள். விமர்சனம் என்றாலே அதற்கெதிராக ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

எதிர்வினைகளை எதிர்ப்பது கிறிஸ்தவத்திற்கு அழகல்ல; முதிர்ச்சியான நடைமுறையுமல்ல. விமர்சனங்களைக் காதுகொடுத்து கேட்கவேண்டும்; வாசிக்கவேண்டும், சிந்திக்கவேண்டும், ஆராயவேண்டும். தர்க்கரீதியில் அவற்றை அணுகவேண்டும். பதிலளிப்பதானால் சிந்தனைபூர்வமாக, அறிவுபூர்வமாக, நாகரீகத்துடன் அதைச் செய்யவேண்டும். அறிவற்ற விமர்சனமும், அசிங்கத்தனமான எதிர்வினையும் முதிர்ச்சியற்றவர்களிடம் மட்டுமே தஞ்சமாகியிருக்கும். வாசகர்களே! நிதானத்தோடு எதையும் வாசியுங்கள்; நிதானமிழக்காமல் சிந்தித்து எதிர்வினையளியுங்கள். தரமான எதிர்வினை விமர்சன நூல்களும், தரமான எதிர்வினைகளும் கிறிஸ்தவ இலக்கியத்தையும், சமுதாயத்தையும் மேம்படுத்தும்.

மறுமொழி தருக